உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w98 2/15 பக். 30-31
  • தயாளகுணத்தால் வரும் ஆசீர்வாதங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தயாளகுணத்தால் வரும் ஆசீர்வாதங்கள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • துணை தலைப்புகள்
  • கிறிஸ்தவ சபையில் தயாளகுணம்
  • எல்லாரிடமும் தயாளகுணம் காட்டுவதா?
  • தயாளகுணம் கொண்டுவரும் ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
w98 2/15 பக். 30-31

தயாளகுணத்தால் வரும் ஆசீர்வாதங்கள்

தயாளகுணம் என்பது கஞ்சத்தனமின்றி தாராளமாய் வாரிவழங்குவதன் மூலம் மற்றவர்களை வாழ்த்த பெருந்தன்மையோடும் தயவோடும் உடனடியாக முன்வருவதாகும். ஆனால் தயாளகுணம் கொடுப்பவருக்கும்கூட அநேக ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிறது, பெற்றுக்கொள்கிறவரிடமிருந்தும் யெகோவாவிடமிருந்தும்.

நாதிவ் என்ற எபிரெய வார்த்தை, “தயாளகுணமுள்ள” என ஏசாயா 32:8-ல் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது; அந்த வார்த்தை, “மனப்பூர்வமான” ‘பெருந்தன்மையுடைய’ எனவும் மொழிபெயர்க்கப்படுகிறது. (சங்கீதம் 51:12; எண்ணாகமம் 21:18, அடிக்குறிப்பு; NW) ஹாப்லோடெஸ் என்ற கிரேக்க பெயர்ச்சொல், ‘தயாளகுணம்’ என 2 கொரிந்தியர் 8:2 (NW) மற்றும் 9:11-ல் (NW) மொழிபெயர்க்கப்படுகிறது; ரோமர் 12:8-ல் (NW) “தாராள மனப்பான்மை” எனவும் எபேசியர் 6:5-ல் (NW) ‘உள்ளப்பூர்வமாய்’ எனவும் மொழிபெயர்க்கப்படுகிறது. யெகோவா தயாளகுணமே உருவானவர், கீழ்ப்படிதலுள்ள தம் ஜீவராசிகளின் எல்லா தேவைகளையும் “அவருடைய சித்தத்தின்படி” குறைவின்றி அருளுகிறவர். (1 யோவான் 5:14; பிலிப்பியர் 4:19) ஞானம் போன்ற காண முடியாத ஈவுகள் உட்பட, நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் அவரிடமிருந்தே வருகிறது.—யாக்கோபு 1:5, 17.

அடமானத்தின் பேரில் கடன் கொடுக்கும்போதுகூட, தயாளம் என்ற இந்தத் தெய்வீக குணத்தை வளர்த்துக்கொள்ளும்படி உடன் இஸ்ரவேலரை மோசே உந்துவித்தார். “எளியவனாகிய உன் சகோதரனுக்கு உன் இருதயத்தை நீ கடினமாக்காமலும், உன் கையை மூடாமலும், அவனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறந்து . . . அவனுக்குத் தாராளமாய்க் கொடுப்பாயாக; அவனுக்குக் கொடுக்கும்போது உன் இருதயம் விசனப்படாதிருப்பதாக; . . . ஆகையால் உன் தேசத்திலே சிறுமைப்பட்டவனும் எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறக்கவேண்டும் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.” (உபாகமம் 15:7-11) கடவுளுடைய இந்த அறிவுரையைப் பின்பற்றுவது, கஷ்டகாலத்திலிருந்த இஸ்ரவேலருக்கு ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும்.

ஆனால், பிறரிடம் தயாளகுணத்தைக் காண்பிப்போருக்கு என்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்? நீதிமொழிகள் 11:25-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “உதாரகுணமுள்ள ஆத்துமா [சொல்லர்த்தமாக, ஆசீர்வதிக்கும் வரமுடைய ஆத்துமா] செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.” இயேசு கிறிஸ்து அதை இவ்வாறு தெரிவித்தார்: “வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்.” (அப்போஸ்தலர் 20:35) மறுபடியும் அவர் சொன்னார்: “கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்.” (லூக்கா 6:38) ஆகவே, தயாளகுணம் இருவழியில் பலனுடையது; அதாவது கொடுப்பவருக்கும் ஆசீர்வாதம், பெற்றுக்கொள்கிறவருக்கும் ஆசீர்வாதம்.

கிறிஸ்தவ சபையில் தயாளகுணம்

தயாளகுணத்தைப் பற்றி முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களிடம் சொல்வதற்கு அப்போஸ்தலன் பவுலிடம் நிறைய விஷயங்கள் இருந்தன. அவர் குறிப்பிடுகிறார்: “சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்.” இதன் காரணமாக, அந்த அப்போஸ்தலன் இவ்வாறு நியாயங்காட்டுகிறார்: “அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.” தயாளகுணத்தைக் காட்டுவதில் யெகோவாவின் சிறந்த முன்மாதிரியை குறிப்பிடுவதன் மூலம் அவர் தொடர்ந்து சொல்கிறார், விதைக்கிறவனுக்கு விதையையும் புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் அபரிமிதமாக கொடுப்பது மட்டுமல்லாமல், கொரிந்திய சகோதரர்கள் பிறரிடம் தயாளகுணமுடையோராய் இருக்கும்பொருட்டு ‘சகலவித தயாளகுணத்தில்’ (NW) அவர்களைப் பெருகவும் செய்கிறார். இப்படிப்பட்ட தயாளகுணமுடைய செய்கைகள், ‘தேவனை ஸ்தோத்திரிப்பதில்’ விளைவடைந்ததென பவுல் சொன்னார். (2 கொரிந்தியர் 9:6-13) இதன் மற்றொரு விளைவு, தயாளகுணமுடைய கிறிஸ்தவர்கள் யெகோவாவிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெறுவர்.

கடவுளுடைய இதே தயாளகுணத்தைக் காண்பிக்கும்படி ரோமிலுள்ள கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தி பவுல் எழுதியதாவது: “பகிர்ந்தளிக்கிறவன் தாராள மனப்பான்மையோடு கொடுக்கக்கடவன்.” (ரோமர் 12:8, NW) எபிரெய கிறிஸ்தவர்களுக்கு எழுதியதாவது: “அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம்பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்.” (எபிரெயர் 13:16) தயாளகுணமுடன் கொடுப்பதில் மக்கெதோனியா சபைகள் சிறந்த முன்மாதிரியாக இருந்தன. சந்தோஷத்தோடு “தங்கள் சக்திக்கும் மிஞ்சி,” தங்களுடைய வறுமையிலிருந்து கொடுத்தது ‘அவர்களுடைய தயாளகுணம் மிகுந்து பெருகும்படி’ செய்தது.—2 கொரிந்தியர் 8:1-4, NW.

எல்லாரிடமும் தயாளகுணம் காட்டுவதா?

என்றபோதிலும், தயாளகுணம் காண்பிப்பதற்கும் தாராளமாய் கொடுப்பதற்கும் லாயக்கற்ற ஆட்கள் சிலர் இருக்கின்றனர். நன்றிகெட்ட, மந்தமான, சோம்பேறி ஆட்களை பைபிள் கண்டனம் செய்கிறது. உதாரணமாக, குளிர்காலத்தில் உழவுசெய்யாத சோம்பேறி, அறுப்புகாலத்தில் பிச்சையெடுக்கும்போது ஒன்றையும் பெற தகுதியில்லாதவர்; வேலைசெய்ய மறுக்கிறவர் மற்றவர்களுடைய தயாளகுணத்தைப் பெற தகுதியற்றவர். (நீதிமொழிகள் 20:4; 2 தெசலோனிக்கேயர் 3:10) விதவைகள் தகுதியுடையவர்களாய் இருந்தால் தவிர, நிவாரணம் பெறுவதற்கான பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. (1 தீமோத்தேயு 5:9, 10) கலாத்தியா, மக்கெதோனியா, மற்றும் அகாயா முழுவதிலும் இருந்த சபைகளால் கொடுக்கப்பட்ட நன்கொடைகள், புறமத வணக்கத்தார் மத்தியில் வறுமையிலிருந்தோருக்கு அல்ல, ஆனால் தேவையிலிருந்த ‘பரிசுத்தவான்களுக்கே’ ஆகும்.—1 கொரிந்தியர் 16:1; 2 கொரிந்தியர் 9:1, 2.

தயாளகுணம் கொண்டுவரும் ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்

கிறிஸ்தவர்கள் இன்று யெகோவாவின் சிறந்த முன்மாதிரியாகிய தயாளகுணத்தை, தாராளமாய் வழங்கும் பண்பை கடைப்பிடிக்கின்றனர். தேவையிலிருக்கும் தகுதியுடைய ஆட்களுக்கு கருமித்தனமின்றி தங்களுடைய உடைமைகளைத் தருகின்றனர். யெகோவாவுடைய ராஜ்யத்தின் அக்கறைகளை முன்னேற்றுவிக்கும் அனைத்து திட்டங்களிலும் தாராளமாய் பங்குகொள்கின்றனர். ‘எல்லா மனுஷருடனும்’ ஆவிக்குரிய சத்தியங்களை முழு இருதயத்தோடு பகிர்ந்துகொள்கின்றனர்.—1 தீமோத்தேயு 2:4.

இவ்விதமாக, தேவையிலிருப்போருக்கு ஆசீர்வாதங்களைக் கொண்டுவருவதில் ஒரு பாகத்தை வகிக்கும்போது, தங்களுக்குத்தாமே ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளும் சிறந்த வெகுமதியை அறுவடை செய்கிறார்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்