கடவுள் இந்த உலகை அழிப்பாரா?
இரண்டாம் போப் ஜான் பால் சொன்ன பிரகாரம் மனிதர்கள் எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்பார்க்கலாம். சரித்திரம் முழுவதிலும், “மனிதர்கள் தொடர்ந்து பாவம் செய்து வந்திருக்கின்றனர், ஒருவேளை ஜலப்பிரளயத்துக்கு முன்பு இருந்ததாக சொல்லப்படும் பாவங்களைக் காட்டிலும் மிகப்பெரிய பாவங்களையும்கூட செய்திருக்கின்றனர்” என்று அவர் குறிப்பிட்டார். போப் இவ்வாறும் விளக்கினார்: இருந்தாலும்கூட, “கடவுள் நோவாவுடன் செய்த உடன்படிக்கையின் வார்த்தைகளிலிருந்து கடவுள் தாம் சிருஷ்டித்த இவ்வுலகை தாமே அழித்துவிடுமளவுக்கான பாவம் இப்போது இல்லையென்று நாம் புரிந்துகொள்கிறோம்.”
கடவுள் ஒருபோதும் உலகை அழிக்கமாட்டார் என்பது உண்மைதானா? ஜலப்பிரளயத்துக்கு பிறகு, கடவுள் நோவாவிடம் இவ்வாறு சொன்னதாக பைபிள் குறிப்பிடுகிறது: “இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லை, பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லை.” (ஆதியாகமம் 9:11) இந்த வார்த்தைகளைச் சொல்வதன் மூலம், கடவுள், “[பூமி] அழியாமல் பாதுகாப்பதற்கான பொறுப்பை தாமே ஏற்றுக்கொண்டார்” என்பதாக போப் சொல்கிறார்.
படைப்பாளர் நாம் வாழும் இந்தக் கிரகம் அழிந்துவிட அனுமதிக்கமாட்டார் என்பதை பைபிள் தெளிவாக குறிப்பிடுகிறது. “பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது” என்று பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 1:4) ஆனால், ஜலப்பிரளயத்திலிருந்து அதிகத்தைக் கற்றுக்கொள்ளலாம்; போப் குறிப்பிடாத ஏதோவொன்றையும்கூட கற்றுக்கொள்ளலாம்.
இயேசு, தம்முடைய எதிர்கால பிரசன்னத்தின்போது பூமியிலுள்ள நிலைமைகள் “நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே” இருக்கும் என்றார்; அப்போது மக்கள் “ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்” என்றும் சொன்னார். (மத்தேயு 24:37-39) அதேவிதமாய், அப்போஸ்தலனாகிய பேதுருவும்கூட, ‘அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததைப்’ போலவே ‘தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்’ தற்போதைய உலகை அச்சுறுத்துகிறதென்று எழுதினார்.—2 பேதுரு 3:5-7.
கடவுள் நோவாவுடன் செய்திருந்த உடன்படிக்கையை இயேசுவும் பேதுருவும் மறந்துவிட்டனரா? ஒருகாலும் இல்லை! கடவுள் நோவாவுடன் செய்திருந்த உடன்படிக்கையில் தெரிவித்ததைப் போலவே, அவர் ஜலப்பிரளயத்தின் மூலமாக இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையை முடிவுக்கு கொண்டுவரமாட்டார். மாறாக, “ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா”வாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையை பயன்படுத்துவார். (வெளிப்படுத்துதல் [அபோகலிப்ஸ்] 19:11-21) எனவே, பைபிள் தெரிவிப்பதன்படி, பூமி அழிந்துபோகாது; ஆனால், பொல்லாத மனிதர்கள் நிறைந்த ‘உலகமே’ நிச்சயமாக முடிவுக்கு வரும். (நீதிமொழிகள் 2:21, 22; வெளிப்படுத்துதல் 11:18) அதற்கு பின்பு, “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:29.
உங்களைச் சந்திக்க விரும்புகிறீர்களா?
கஷ்டம் நிறைந்த இவ்வுலகிலும்கூட கடவுளையும் அவருடைய ராஜ்யத்தையும் மனிதகுலத்துக்கான அவருடைய மகத்தான நோக்கத்தையும் பற்றிய திருத்தமான பைபிள் அறிவிலிருந்து, நீங்கள் மகிழ்ச்சியைப் பெறமுடியும். கூடுதல் தகவலைப் பெறுவதற்கு அல்லது இலவச வீட்டு பைபிள் படிப்பை நடத்துவதற்கு யாராவது உங்களைச் சந்திக்க நீங்கள் விரும்பினால், தயவுசெய்து Watch Tower, H-58 Old Khandala Road, Lonavla 410 401, Mah., India அல்லது பக்கம் 2-ல் உள்ள பொருத்தமான விலாசத்துக்கு எழுதுங்கள்.