உலக ஒற்றுமை—அது எவ்வாறு ஏற்படும்?
அக்கறையற்ற குடியிருப்பாளர்களால் படுநாசம் செய்யப்பட்ட ஒரு பாழடைந்த கட்டடத்தைப்போல, தற்போதைய உலக ஒழுங்குமுறை ஒரேவொரு காரியத்திற்கே—அதாவது, இடித்து நொறுக்கப்படுவதற்கும் மாற்றீடு செய்யப்படுவதற்குமே—லாயக்கானது. இது வெறுமனே அழிவைப்பற்றி முன்னுரைப்பவர்களுடைய நோக்குநிலையல்ல. பைபிள் சொல்கிறபடி, இது யதார்த்தமான நோக்குநிலையே. ஏன்?
தற்போதைய உலக ஒழுங்குமுறையின் அடித்தளங்கள் பாதுகாப்பற்றவையாய் உள்ளன. இந்த முழு அமைப்புமே கறையான்களால் அரிக்கப்பட்டும் உளுத்துப்போயும் இருக்கிறது. இரும்பு சட்டம் துருப்பிடித்து வருகிறது. ஆதாரச் சுவர்கள் ஆட்டங்கண்டுவிட்டன. கூரை சரிந்துவருகிறது. தண்ணீர் குழாய்கள் ஒழுகுகின்றன. மின் அமைப்புமுறை தவறாகவும் ஆபத்தாகவும் உள்ளது. குடியிருப்பாளர்கள் ஓயாது சண்டைபோட்டுக் கொண்டும் தீய எண்ணத்தோடு கட்டடம் முழுவதையும் சேதப்படுத்திக் கொண்டும் இருக்கிறார்கள். முழு கட்டடமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் பூச்சிபுழுக்களால் நிறைந்துள்ளன. அது காவுகொள்ளலாம் அல்லது கைகாலை வாங்கலாம்.
“மரணத்தின் விளிம்பில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது”
ஓயாத அரசியல் சண்டைகள், பேராசை, ஆக்கிரமிப்பு, வேரூன்றிய குல மற்றும் இனப் பகைமைகள் ஆகியவற்றின் காரணமாக, “இந்த முழு மனிதகுலமும் மரணத்தின் விளிம்பில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது” என்று சொல்கிறார் குவின் டையர். உலகமுழுவதிலும், உறுதிபூண்டிருக்கும் சிறுபான்மையோர்—அதாவது செல்வாக்கு செலுத்தும் தொகுதியினர், சுதந்திர போராட்ட வீரர்கள், குற்றவாளி கும்பல்கள், சர்வதேச பயங்கரவாதிகள், இன்னும் வேறுசிலர்—தங்களுடைய சுயநல திட்டங்களையே நாடுகின்றனர்; கிட்டத்தட்ட தங்களுடைய விருப்பப்படி, இந்த உலகில் சமாதானத்திற்கான எந்த சாத்தியக்கூறுகளையும் கெடுத்துவிடக்கூடியவர்களைப் போல தெரிகிறார்கள். சீர்குலைக்கும் குடியிருப்பாளர்களைப் போலவே, அவர்கள் மற்றெல்லாருக்கும் வாழ்க்கையை துயர்மிகுந்ததாக்கக்கூடும்.
என்றபோதிலும், அநேக கருத்துரையாளர்கள் சொல்கிறபடி, உலக ஒற்றுமையைத் தடைசெய்வது கருத்துவேற்றுமையுடைய கூட்டத்தினரோ அடாவடி ஆட்களோ மட்டுமே அல்ல. மிகப் பெரிய தடையாய் இருப்பது தேசமே. போரைப் பற்றி எழுதும் ஜூனியர் எஸ். பி. பேனே என்ற எழுத்தாளர், தனித்தனி தேசங்கள் “சர்வதேச அராஜக நிலை”யில் உள்ளன என்று சொல்கிறார். மற்றவர்கள்மீது சிறிதளவே அல்லது எந்த அக்கறையுமே இல்லாமல், அவை தங்களுடைய தேசிய அக்கறைகளுக்கு மிக நல்லதாக படுகிற எந்தக் காரியத்தையும் செய்கின்றன. அதன் விளைவாக, சரித்திரம் முழுவதிலுமே, “மனிதன் தனக்கே கேடுண்டாக மனிதனை ஆண்டுவந்திருக்கிறான்.”—பிரசங்கி 8:9, NW.
சில தேசிய அரசாங்கங்கள் தங்களுடைய பிராந்திய எல்லைகளுக்குள்ளும் ஓரளவு சர்வதேச அளவிலும் அநீதிக்கும் ஒடுக்குதலுக்கும் எதிரான போராட்டத்தில் கொஞ்சம் வெற்றியடைந்திருக்கின்றன, அவ்வப்பொழுது ஓரளவு சர்வதேச ஒற்றுமையை அவை ஸ்தாபித்திருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால், ஆக்கிரமிப்பு தேசத்திற்கு எதிராக செயல்படுவதில் சில தேசங்கள் ஒற்றுமையாய் இருந்திருக்கிறபோதிலும்கூட, உள்ளான பொதுநலன் கருதி செய்வதற்குப் பதிலாக சுயநலத்தின் காரணமாகவே செயல்பட்டன என்ற சந்தேகம் அடிக்கடி நிலவுகிறது. மனித அரசுகளிடம் உலக ஒற்றுமையின்மைக்கு விரிவான, நிரந்தர பரிகாரம் எதுவுமில்லை என்பதே நிஜம். குவின் டையர் இவ்வாறு சுட்டிக்காட்டுகிறார்: “ஏதாவது சுயேச்சையான நாட்டினால் செய்யப்படும் ஆக்கிரமிப்பை தடுப்பதற்கு அல்லது தண்டிப்பதற்கு உலக தேசங்கள் அனைத்தும் குழுவாக ஒன்றுசேரும் என்ற கருத்து, நியமத்தின் அடிப்படையில் நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் ஆக்கிரமிப்பு [தேசத்தை] யார் தீர்மானிப்பார், அதை தடைசெய்வதற்கு பணம் மற்றும் உயிரின் வடிவில் செலவை யார் செலுத்துவார்?”
நிச்சயமாகவே, ஒரு தேசம் மற்றொரு தேசத்திற்கு எதிராக ஆக்கிரமிப்பு செய்வதை அத்தேசத்திலுள்ள பெரும்பான்மையான குடிமக்கள் எதிர்க்காதிருக்கும் பட்சத்தில் மட்டுமே அது சாத்தியமாய் உள்ளது. தங்களுடைய தலைவர்கள் செய்வது சரியா தவறா என்று பார்க்காமல் அவர்களை ஆதரித்திருக்கிற குடிமக்கள் ஏதாவதொரு “சுயேச்சை தேசத்தில்” மாத்திரமே இல்லை என்பதை சரித்திரம் திரும்பத் திரும்ப எடுத்துக்காட்டுகிறது. உண்மையில் சொல்லப்போனால், பூமியிலுள்ள பெரும்பான்மையான குடியிருப்பாளர்கள் இதைச் செய்திருக்கிறார்கள். டைம் பத்திரிகை சொல்கிறபடி, பெருந்திரளான அரசியல் மற்றும் மதத் தலைவர்களிடமிருந்து வந்த “பொய், கிளர்ச்சியைத் தூண்டும் கொள்கை, பிரச்சாரம்” ஆகியவற்றை அவர்கள் கண்மூடித்தனமாய் பின்பற்றியிருக்கிறார்கள்.
மற்றபடி, நியாயமானவர்களாகவும் பரிவிரக்கமுள்ளவர்களாகவும் இருக்கும் மக்களின் உணர்ச்சிகளை தேசியவாதம் கிளர்ந்தெழச் செய்திருக்கிறது. மேலும், பிற தேசத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் ஆகியோருக்கு எதிராக கொடுமையான குற்றங்களை நடப்பிக்கும்படி செய்திருக்கிறது. உதாரணமாக, முதல் உலகப் போரைப் பற்றி சரித்திராசிரியர் ஜே. எம். ராபர்ட் இவ்வாறு கருத்துரைக்கிறார்: “1914-ஐப் பற்றிய புரியாப் புதிர்களில் ஒன்று, ஒவ்வொரு தேசத்திலும் இருந்த பேரளவான மக்களும் எல்லா கட்சியினரும் பல்வேறு மதக் கொள்கையினரும் வம்சத்தினரும், ஆச்சரியப்படத்தக்க விதத்தில், மனப்பூர்வமாயும் சந்தோஷமாயும் போருக்குச் சென்றதாக தெரிகிறது.” அப்போது முதற்கொண்டு மக்கள் தங்களுடைய பாடத்தைக் கற்றுக்கொண்டுவிட்டார்களா? இல்லை! “குருட்டுத்தனமான தேசியவாதம்” என்று இதழாசிரியர் ராட் அஷர் அழைத்த மிருகம், உலக ஒற்றுமைக்கான எந்த வாய்ப்பையும் தொடர்ந்து சீர்குலைத்துவிடுகிறது.
வெளிப்புற சக்திகள் முழுமூச்சுடன் செயல்படுகின்றன
என்றபோதிலும், உலக ஒற்றுமைக்கு மிகப் பெரிய ஒரு தடை உள்ளது. வெளிப்புற சக்திகள் முழுமூச்சுடன் செயல்படுகின்றன என பைபிள் வெளிப்படுத்துகிறது. இவர்கள் பிசாசாகிய சாத்தானும் அவனுடைய வலதுகையாக இருக்கும் பேய்களுமே என அடையாளம் காட்டப்படுகின்றனர். பைபிள் சொல்கிறபடி, சாத்தானே ‘இப்பிரபஞ்சத்தின் தேவன்;’ ‘கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளைக்’ கவராதபடிக்கு, ‘அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.’—2 கொரிந்தியர் 4:4; வெளிப்படுத்துதல் 12:9.
இது, நிச்சயமாகவே, தனிநபர்களை தங்களுடைய சொந்த செயல்களுக்கான பொறுப்பிலிருந்து விடுவிப்பதில்லை. ஆனால், உண்மையிலேயே ஒன்றுபட்ட உலகை ஏன் மனித அரசாங்கங்களால் ஸ்தாபிக்க முடியாது என்பதை இது விளக்குகிறது. பிசாசாகிய சாத்தான் தொடர்ந்து இருக்கும்வரை, ‘பகைகள், சண்டைகள், விரோதங்கள், பிரிவினைகள்’ ஆகியவை உள்ளிட்ட “மாம்சத்தின் கிரியைகள்” என்று பைபிள் அழைக்கிற பண்புகளை வளர்ப்பதற்கு ஆண்கள்மீதும் பெண்கள்மீதும் அவன் செல்வாக்கு செலுத்துவான்.—கலாத்தியர் 5:19-21.
உலக அரசாங்கம்
அப்படியானால், என்னதான் பரிகாரம்? சுமார் எழுநூறு ஆண்டுகளுக்குமுன், பிரபல இத்தாலிய கவிஞரும் தத்துவஞானியுமான டேன்டே இதற்கான பதிலை சுட்டிக்காட்டினார். உலக அரசாங்கம் மட்டுமே மனிதவர்க்கத்தின் சமாதானத்திற்கும் ஒற்றுமைக்கும் உத்தரவாதமளிக்க முடியுமென விவாதித்தார். பெரும்பாலான மக்களுக்கு, எந்தவித உலக அரசாங்கத்தின்மீது வைக்கும் நம்பிக்கையும் வெறுமனே ஏமாற்றமாகவே இருக்கிறது; உண்மையான நம்பிக்கை வைப்பதற்கான ஒன்றாய் இல்லை. முன்பு குறிப்பிடப்பட்ட ஆசிரியர் பேனே பின்வரும் முடிவுக்கு வருகிறார்: “சரித்திரத்தில் இந்தக் கட்டத்தில் உலக அரசாங்கத்தைப் பற்றிய பேச்சுக்கே இடமில்லை.” ஏன்? ஏனென்றால், வெற்றிகரமான எந்த உலக அரசாங்கமும் இரண்டு காரியங்களுக்கு, அதாவது, “உலக அரசாங்கம் போருக்கு ஒரு முடிவுகட்டும் என்பதற்கும் உலக அரசாங்கம் பூகோள கொடுங்கோலாட்சியாக இருக்காது என்பதற்கும்” உத்தரவாதமளிக்க வேண்டும். இது முற்றிலும் மனித சக்திக்கு அப்பாற்பட்டதாய் தோன்றுகிறது.
எந்த மனித அரசாங்கமும் இதைப் பூர்த்திசெய்ய முடியாது என்பது நிச்சயம். இருப்பினும், இயேசு கிறிஸ்துவால் ஆளப்படும் கடவுளுடைய ராஜ்யம் போரை ஒழிக்க முடியும், ஒழிக்கவும் போகிறது. (சங்கீதம் 46:9, 10; மத்தேயு 6:10) நிச்சயமாகவே, போரைத் தூண்டுகிற அனைவரையும் அது நீக்கிவிடும். பூமியிலுள்ள மனித ஆட்சிக்கு கடவுளால் நியமிக்கப்பட்ட காலம் முடிவடைகையில், ‘களிமண்ணோடே இரும்பு கலந்திருப்பது’ போல மனித ஆட்சி ‘பிரிக்கப்படும்’ என தானியேல் தீர்க்கதரிசி குறிப்பிடுகிறார். (தானியேல் 2:41-43) இது, அரசியல் கட்சி பிளவுறுவதிலும் தவிர்க்க முடியாத சண்டையிலும் விளைவடையும். என்றபோதிலும், ‘இந்த [தேசிய மற்றும் பிளவுபட்ட] ராஜ்யங்களையெல்லாம்’ அல்லது அரசாங்கங்களையெல்லாம் கடவுளுடைய ராஜ்யம் ‘நொறுக்கி, நிர்மூலமாக்கும்;’ அதன் பின்பு, நீண்டகாலமாய் எதிர்பார்த்திருக்கும் ராஜ்யமாகிய இயேசு கிறிஸ்துவால் ஆளப்படும் ராஜ்யம் அவற்றின் இடத்தை ஏற்கும் என தானியேல் சொல்கிறார்.—தானியேல் 2:44.
மற்றவர்களுக்கு வாழ்க்கையை சதா துயரமாக்கிய சுரண்டிப் பிழைக்கும் பேர்வழிகள் இந்தப் பூமியில் தொடர்ந்து குடியிருந்தால், மக்களுக்காக ரம்மியமான சூழ்நிலையை உருவாக்குவதில் அர்த்தமேயில்லை. என்றபோதிலும், “பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள்.” (சங்கீதம் 37:1, 2, 9, 38; நீதிமொழிகள் 2:22) எனவே, கடவுளுடைய தராதரங்களை வேண்டுமென்றே புறக்கணிக்கிற அல்லது ஒற்றுமையை குலைக்கும் உலகப்பிரகாரமான அதிகாரிகளுக்கு ஆதரவு தருகிற அனைவரையும் கிறிஸ்து ஒழித்துக்கட்டுவார். இந்தக் கிரகத்தை பாழ்ப்படுத்துகிற அனைவரையும் அவர் அழித்துவிடுவார். “பூமியைக் கெடுத்தவர்களை கெடு”க்கப்போவதாக கடவுள் வாக்குறுதி அளிக்கிறார்.—வெளிப்படுத்துதல் 11:18.
இது ஒருவகை பூகோள கொடுங்கோலாட்சியாக இருக்காது. கெட்ட மனிதர்களிலிருந்து நல்ல மனிதர்களை இயேசு கிறிஸ்து பிரிக்கையில், “சத்தியத்தினிமித்தமும், நீதியுடன்கூடிய சாந்தத்தினிமித்தமும்” செயல்படுவார். (சங்கீதம் 45:3, 4; மத்தேயு 25:31-33) இது வெறுமனே தீங்குண்டாக்கக்கூடியதும் அழிக்கக்கூடியதுமான அதிகார துஷ்பிரயோகமாகவும் இருக்காது. இல்லை! அழகிய, சரித்திரப் புகழ்பெற்ற கட்டடத்தை பேராசைமிக்க சில ரியல் எஸ்டேட்காரர்கள் அழிப்பதைப் போன்ற செயலாகவும் இருக்காது. ஆனால் இது, இன்பம் பொங்கும் தூய சூழ்நிலைக்கு வழிவகுப்பதற்காக சிதைந்துபோன கட்டடத்தை அழிப்பது போன்ற செயலாகத்தான் இருக்கும்.
ஆனால், கடந்த காலத்தில் இப்படிப்பட்ட ஒற்றுமையின்மைக்கு காரணமாயிருந்த வெளிப்புற சக்திகளைப் பற்றியென்ன? புதிய ஒழுங்குமுறையின் குடிமக்கள் தங்கள் சகவாசிகளுடன் சண்டைசெய்து எல்லாருடைய வாழ்க்கையையும் துயர்மிகுந்ததாக்குகிற அழிவுக்கேதுவான முறைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக, அந்த வெளிப்புற சக்திகள் புதிய ஒழுங்குமுறையில் ஊடுருவ அனுமதிக்கப்படுவார்களா? நிச்சயமாகவே அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்தக் காலிசெய்தலும் புதுப்பித்தலும், இறுதியானது மற்றும் முழுமையானது. “இடுக்கன் இரண்டாவது தடவை உண்டாகாது.”—நாகூம் 1:9, NW.
சாத்தானுக்கு ஏற்படும் முடிவான அழிவை குப்பைகளை சாம்பலாக எரிப்பதோடு பைபிள் ஒப்பிடுகிறது. “[பூமியின் குடிமக்களை] மோசம்போக்கின பிசாசானவன், . . . அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான்” என்று அது சொல்லுகிறது. (வெளிப்படுத்துதல் 20:10) என்னே ஓர் வலிமைமிக்க அடையாளம்! குறைவான கொள்ளளவையுடைய ஏதோ சிறிய எரிதொட்டியுடன் அழிவு ஒப்பிடப்படாமல், கெட்டது, மாசுபடுத்தப்பட்டது ஆகிய அனைத்தையும் வாரி விழுங்கி அழித்துவிடுகிற அக்கினிக் கடலுக்கு ஒப்பிடப்படுவதை கற்பனை செய்துபாருங்கள். சர்வலோக ஒழுங்கை அச்சுறுத்துவதற்கோ, எது சரி எது தவறு என்பதைப் பற்றிய கடவுளுடைய தராதரங்களை மீறுவதற்கோ, தங்களுடைய உடன் மானிடருக்கு வேதனையுண்டாக்குகிற காரியங்களை தொடர்ந்து செய்வதற்கோ எவருமே, மனிதனோ பேயோகூட அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒற்றுமையைக் குலைக்கும் அனைவரும் அழிக்கப்பட்டிருப்பர்!—சங்கீதம் 21:9-11; செப்பனியா 1:18; 3:8.
எல்லா தேசங்களிலிருந்தும் வரும் ஒற்றுமையான மக்கள்
இந்த மகா சுத்திகரிப்பில் தப்பிப்பிழைப்போர், ‘சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வரும் திரளான கூட்டமாகிய ஜனங்கள்’ ஆவர். (வெளிப்படுத்துதல் 7:9) தேசிய மற்றும் இனவேற்றுமைகள் அவர்களைப் பிரிக்காது. சமாதானத்துடன் ஒத்துவாழ்வதற்கு அவர்கள் கற்றிருப்பார்கள். (ஏசாயா 2:2-4) இதைக்காட்டிலும் அதிக ஆச்சரியப்படத்தக்க காரியம் என்னவென்றால், இந்தக் கிரகத்தின் கடந்தகால குடியிருப்பாளர்கள் அற்புதமான ஏற்பாடாகிய உயிர்த்தெழுதலின் மூலம், சுத்திகரிக்கப்பட்ட பூமியில் குடியிருப்பதற்கு மறுபடியும் இவர்களுடன் சேர்க்கப்படுவார்கள்.—யோவான் 5:28, 29.
இப்படிப்பட்ட ஓர் உலகில் நீங்கள் வாழ விரும்புகிறீர்களா? கடவுள் தேவைப்படுத்துகிற காரியங்களைப் பின்பற்றுகிறவர்கள் மட்டுமே வாழ்வர், அவர் தேவைப்படுத்துகிற காரியங்கள் பைபிளில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. (யோவான் 17:3; அப்போஸ்தலர் 2:38-42) உண்மையிலேயே ஒன்றுபட்ட ஓர் உலகில் நீங்கள் வாழ்க்கையை என்றென்றும் அனுபவிப்பதற்கு எதிர்நோக்கியிருக்கும்படி, கடவுள் தேவைப்படுத்துகிற காரியங்களைக் கற்றுக்கொள்ள உங்களுக்கு உதவ யெகோவாவின் சாட்சிகள் மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருப்பார்கள்.
[பக்கம் 7-ன் படம்]
இயேசு கிறிஸ்துவால் ஆளப்படும் அரசாங்கம் ஒன்றுபட்ட உலகிற்கு உத்தரவாதமளிக்கிறது