உலக ஒற்றுமை—அது என்றாவது நிஜமாகுமா?
“தனித்தனி தேசங்களாலாகிய நாம் வாழும் இவ்வுலகை அடுத்த சில தலைமுறைக்குள் ஒரு வகை உண்மையான சர்வதேச சமுதாயமாக மாற்றுவதில் வெற்றிபெறுவோமாகில், . . . போர் என்ற பூர்வீக ஸ்தாபனத்தையும்கூட திறம்பட்ட முறையில் ஒழித்துக்கட்டியிருப்போம் . . . ஆனால் நாம் தோல்வியடைவோமாகில், ஒருவேளை . . . நாகரிகமே இருக்காது.” போர் (ஆங்கிலம்) என தலைப்பிடப்பட்ட தன் புத்தகத்தில் இப்படி சொல்கிறார் இராணுவ சரித்திராசிரியர் குவின் டையர்.
கருத்துவேற்றுமைகளைத் தீர்ப்பதற்கு போரே பரிகாரமென நாடிய தேசங்களையும் வலிமைமிக்க வேறுசில தொகுதியினரையும் பற்றிய விவரப்பதிவுகளால் சரித்திரத்தின் பக்கங்கள் நிரப்பப்பட்டுள்ளன என்று டையர் சொல்கிறார். அவர்களுடைய ஒற்றுமையின்மை கோடிக்கணக்கானோரின் வாழ்க்கையை சீரழித்துவிட்டது. தன்னுடைய நாளில் வாழ்ந்த மக்களை இது எவ்வாறு பாதித்தது என்பதைப் பற்றிய சாலொமோன் ராஜாவின் விவரிப்பு இன்றைக்கும் துல்லியமாய் பொருந்துகிறது. அவர் எழுதினார்: “நான் சூரியனுக்குக் கீழே செய்யப்படும் கொடுமைகளையெல்லாம் சிந்தித்துப்பார்த்தேன்; இதோ, ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைக் கண்டேன், அவர்களைத் தேற்றுவாரில்லை; ஒடுக்குகிறவர்கள் பட்சத்தில் பெலம் இருந்தது.” “அதன் காரணமாக அவர்கள் தேற்றுவாரில்லாமல் போனார்கள்.” (NW)—பிரசங்கி 4:1.
இன்றைய நாட்களில், மேற்குறிப்பிடப்பட்ட சரித்திராசிரியர் சுட்டிக்காட்டுகிறபடி, ‘ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைப்’ பார்த்து இரக்கப்படுவதோடுகூட, தனித்தனி தேசங்களாலாகிய இவ்வுலகை ஒரு வகை உண்மையான சர்வதேச சமுதாயமாக மாற்ற ஏதாவது வழியைக் கண்டுபிடிப்பதற்கு கூடுதலான காரணமிருக்கிறது: நாகரிகம் தப்பிப்பிழைப்பதே ஆபத்தில் இருக்கிறது! நவீன போர், அதில் ஈடுபடும் எல்லா தேசத்தையும் அழித்துவிடுமென்ற எதிர்பார்ப்பை அளிக்கிறது; அதில் வெற்றியாளர்களே இருக்கமுடியாது.
உலக ஒற்றுமை தென்படுகிறதா?
உலக ஒற்றுமைக்கான எதிர்பார்ப்புகள் என்னென்ன? பூமி தப்பிப்பிழைப்பதை அச்சுறுத்தும் பிரிவினை சக்திகளை மனித சமுதாயம் வெல்ல முடியுமா? முடியுமென சிலர் நினைக்கிறார்கள். பிரிட்டனின் டெய்லி டெலிகிராஃப் செய்தித்தாளின் இராணுவ பதிப்பாசிரியர் ஜான் கீஜன் இவ்வாறு எழுதுகிறார்: “குழப்பமும் நிச்சயமில்லாமையும் இருக்கிறபோதிலும், போரில்லா உலகம் படிப்படியாய் உதயமாகும் சாத்தியம் தெரிகிறது.”
நம்பிக்கையான இம்மனநிலையை எது அவருக்கு தருகிறது? போரில் மனிதவர்க்கத்தின் நெடுநாளைய ஈடுபாடு மற்றும் தன்னையே வெற்றிகரமாய் ஆளுவதற்கான மனிதனுடைய திறமையின்மையின் மத்தியிலும், ஏன் அநேகர் நம்பிக்கையோடு இருப்பது போல தெரிகிறது? (எரேமியா 10:23) ‘மனிதவர்க்கம் முன்னோக்கிச் செல்கிறது. சரித்திரம் தொடர்ச்சியான முன்னேற்றத்தின் மாதிரியை காண்பிக்கிறது’ என ஒருகாலத்தில் சிலர் வாதாடினார்கள். இன்றும்கூட, மனிதனின் இயல்பான நற்குணம் எப்படியாவது தீமையை வெல்லும் என அநேகர் நம்புகிறார்கள். அது நடைமுறைக்கு ஏற்ற நம்பிக்கையா? அல்லது பெருத்த ஏமாற்றத்திற்கு வழிநடத்தும் வெறும் மாயத்தோற்றமா? உலகத்தின் சுருக்கமான சரித்திரம் (ஆங்கிலம்) என்ற தன் புத்தகத்தில், சரித்திராசிரியர் ஜே. எம். ராபர்ட் யதார்த்தமாய் எழுதினார்: “இந்த உலகின் எதிர்காலம் ஒளிமயமாய் தெரிவதாக சொல்ல முடியாது. மனிதன் படும் துன்பத்திற்கு எந்தவொரு முடிவும் இப்பொழுது தென்படவில்லை, அல்லது விடிவுகாலம் வருமென நம்புவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.”
மக்களும் தேசங்களும் உண்மையிலேயே தங்களுடைய பரஸ்பர அவநம்பிக்கையையும் பிரிவினைக்குரிய கருத்துவேற்றுமைகளையும் வெல்வார்கள் என்று நம்புவதற்கு உண்மையான காரணங்கள் உண்டா? அல்லது மனித முயற்சிகளைக் காட்டிலும் ஏதாவது அதிகம் தேவைப்படுகிறதா? அடுத்த கட்டுரை இந்தக் கேள்விகளை ஆராயும்.
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
Background globe on the cover: Mountain High Maps® Copyright © 1995 Digital Wisdom, Inc.