டஹிடியில்—பரதீஸைப் பற்றிய நற்செய்தி
டஹிடி! இந்தப் பெயர் சுண்டி இழுக்கும் வகையில் கவர்ச்சியூட்டுவதாய் தோன்றுகிறது. பால் காகுய்ன், ராபர்ட் லூயிஸ் ஸ்டீவென்சன், ஹெர்மன் மெல்வில் போன்ற ஓவியர்களாலும் எழுத்தாளர்களாலும் இது புகழ்பெற்றதானது. தென் கடல் தீவுகளின் வெப்பமண்டல அழகையும் இதமான தன்மையையும் பற்றிய இவர்களுடைய ஓவியமும் காவியமும் பலருடைய மனதை கொள்ளைகொண்டன.
தென் பசிபிக்கில் அமைந்துள்ள பிரெஞ்சு பாலினீஷியாவிலுள்ள 120-க்கும் மேற்பட்ட தீவுகளில் மிகப் பெரியது டஹிடி. பெரும்பாலோருடைய மனதில் இந்தத் தென் கடல் தீவு ஏறக்குறைய பரதீஸுக்கு ஒப்பாக இருக்கிறபோதிலும், சீக்கிரத்தில் வரவிருக்கிற மற்றொரு பரதீஸைப் பற்றிய செய்தியை டஹிடியிலுள்ள மக்கள் இன்னும் கேட்கவேண்டியுள்ளது. (லூக்கா 23:43) இன்று டஹிடியிலுள்ள 1,918 யெகோவாவின் சாட்சிகள், டஹிடியில் மட்டுமல்ல, ஆனால் பூமி முழுவதிலும் உண்மையான பரதீஸிய நிலைமைகளை கடவுளுடைய ராஜ்யம் கொண்டுவருமென்ற நற்செய்தியைப் பற்றி 2,20,000-த்திற்கும் மேற்பட்ட மக்களுக்குச் சொல்லிவருவதில் சுறுசுறுப்பாய் ஈடுபட்டிருக்கிறார்கள்.—மத்தேயு 24:14; வெளிப்படுத்துதல் 21:3, 4.
டஹிடியில் செய்யப்பட்ட பிரசங்க ஊழியம், ஏறக்குறைய 3,500 கிலோமீட்டர் அப்பால் இருந்த பிஜியிலுள்ள உவாட்ச் டவர் சொஸைட்டியின் கிளை அலுவலகத்தால் பல ஆண்டுகளாக கண்காணிக்கப்பட்டு வந்தது. இவ்வளவு தொலைதூரத்திலிருந்தது இது காரியங்களைக் கடினமாக்கினது, முன்னேற்றம் வேகமாக இல்லை. ஆகவே, ஏப்ரல் 1, 1975-ல், டஹிடியில் ஒரு கிளை அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டது. அது, இந்தப் பிராந்தியத்தில் இருந்த உண்மையான கிறிஸ்தவர்களின் நடவடிக்கையில் ஒரு திருப்புகட்டமாக அமைந்தது. எது இந்த முன்னேற்றத்திற்கு வழிநடத்தியது, மேலும் டஹிடியில் பிரசங்க ஊழியம் எவ்வாறு தொடங்கப்பட்டது?
ஒரு சிறிய தொடக்கம்
டஹிடி, 1930-ன் பத்தாண்டுகளிலேயே ராஜ்ய நற்செய்தி முதலாவதாக கேள்விப்பட்டது. பைபிள்மீது பெரும் மதிப்பு வைத்திருந்த அந்தத் தீவார் பலர், மிகுந்த அக்கறையுடன் செவிக்கொடுத்து கேட்டனர். எனினும், அரசாங்க தடையுத்தரவு, மற்ற வரம்புகள் ஆகியவற்றின் விளைவாக, 1950-ன் பிற்பகுதி வரையாகவும்கூட அந்தத் தீவில் சாட்சிகள் எவரும் இருக்கவில்லை. அந்தச் சமயத்தில், ஐக்கிய மாகாணங்களில் வாழ்ந்துகொண்டிருந்த டஹிடி தீவாரான ஆக்னஸ் ஷென்க் என்பவர் தன் கணவருடனும் மகனுடனும் டஹிடிக்குத் திரும்பிவரும்படி தீர்மானித்தார். இதெல்லாம் எவ்வாறு நடந்ததென்று அவர் விளக்கிச் சொல்கிறார்.
“லாஸ் ஏஞ்சலிஸில் 1957-ல் நடந்த மாவட்ட மாநாட்டில், சகோதரர் நார் [உவாட்ச் டவர் சொஸைட்டியின் அப்போதைய தலைவர்], டஹிடியில் ராஜ்ய பிரஸ்தாபிகளுக்கான பெரும் தேவை இருப்பதாக விளக்கிக் கூறினார். அப்போது நான் முழுக்காட்டப்பட்டு ஓர் ஆண்டே ஆகியிருந்தது, ‘நாம் டஹிடிக்குப் போகலாமே!’ என்று நான் சொன்னேன். எங்களுடைய நல்ல நண்பர்களாக இருந்த இரண்டு குடும்பத்தினர், நீல் குடும்பத்தாரும் காரேனோ குடும்பத்தாரும், நான் சொன்னதைக் கேட்டார்கள். எங்களோடு வர விருப்பமென அவர்கள் சொன்னார்கள். ஆனால் எங்களிடம் அதிக பணம் இல்லை. என் கணவர் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்தார், என் மகனும் ரொம்ப சிறியவனாக இருந்தான். ஆகவே அந்த இடத்தை விட்டுச்செல்வது எங்களுக்கு கஷ்டமாக இருந்தது. அக்கம்பக்கத்து சபைகளிலிருந்த சாட்சிகளான நண்பர்கள் எங்கள் நோக்கத்தைப் பற்றி கேள்விப்பட்டு, எங்களுக்குப் பணத்தையும் வீட்டுக்குத் தேவைப்படும் பொருட்களையும் அனுப்பினார்கள். பின்பு மே 1958-ல், டஹிடிக்குக் கடற்பயணம் செய்தோம். மற்ற பொருட்களோடுகூட 36 துப்பட்டிகளையும் கொண்டு சென்றோம்!
“டஹிடியில் நாங்கள் வந்து சேர்ந்தபோது, நான் அந்தத் தீவை விட்டு சென்று 20 ஆண்டுகள் ஆகியிருந்ததால், முற்றிலும் அந்நிய ஆளைப்போல் உணர்ந்தேன். நாங்கள் பிரசங்கிக்கத் தொடங்கினோம், ஆனால், எங்கள் கிறிஸ்தவ ஊழியத்திற்கு தடையுத்தரவு போடப்பட்டிருந்ததால், நாங்கள் கவனமாக இருக்க வேண்டியிருந்தது. பத்திரிகைகளை நாங்கள் மறைத்து வைத்துக்கொள்ள வேண்டியதாக இருந்தது, பைபிளை மாத்திரமே பயன்படுத்தினோம். முதலில், காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளுக்கு ஏற்கெனவே சந்தாக்கள் செய்திருந்த ஆட்களிடம் மாத்திரமே நாங்கள் சாட்சிபகர்ந்தோம்.
“நியூ யார்க் நகரத்தில் 1958-ல் நடந்த சர்வதேச மாநாட்டுக்குப் பின், க்ளைட் நீலும் டேவிட் காரேனோவும், தங்கள் குடும்பத்தாருடன் வந்து எங்களோடு சேர்ந்துகொண்டார்கள். நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து பிரசங்கித்து வந்தோம்; செவிகொடுத்துக் கேட்டவர்களை சகோதரரின் வீடுகளில் கொடுக்கப்பட்ட பேச்சுகளைக் கேட்க வரும்படி அழைத்தோம். சிறிது சிறிதாக காரியங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டன; 15 ஆட்களுடன் ஒரு பைபிள் படிப்பு தொகுதியைத் தொடங்கினோம். மூன்று மாதங்களுக்குப் பின்பு நீல் குடும்பத்தாரும் காரேனோ குடும்பத்தாரும், தங்கள் சுற்றுப் பயணிகளுக்கான விசாவில் குறிக்கப்பட்ட காலம் முடிந்துவிட்டதால், திரும்பிச் செல்ல வேண்டியதாயிற்று. ஆகையால் அவர்கள் போய்விடுவதற்கு முன்பாக, முழுக்காட்டப்பட தகுதிபெற்ற எல்லாரையும் முழுக்காட்டும்படி சகோதரர்கள் தீர்மானித்தார்கள். அந்த முதல் முழுக்காட்டுதல் பேச்சை மொழிபெயர்க்கும் சிலாக்கியம் எனக்குக் கிடைத்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் உள்ளூர்வாசிகளான அந்தத் தீவாரில் எட்டு பேர், முழுக்காட்டப்படுவதால் யெகோவாவுக்குத் தங்கள் ஒப்புக்கொடுத்தலை அடையாளப்படுத்தினார்கள். பின்பு நீல் குடும்பத்தாரும் காரேனோ குடும்பத்தாரும் ஐக்கிய மாகாணங்களுக்குத் திரும்பிச் சென்றுவிட்டார்கள்.
“பிரசங்க ஊழியம் தொடர்ந்து செய்யப்பட்டது. சிறிய தொகுதிகளாக நாங்கள் எங்களை ஒழுங்குபடுத்தி அமைத்துக்கொண்டு, சாயங்கால வேளைகளில் ஜனங்களுக்குச் சாட்சிபகர்ந்து வந்தோம். அக்கறை காட்டினவர்களிடம் எங்கள் உரையாடல்கள் நள்ளிரவு வரையிலுங்கூட அடிக்கடி தொடர்ந்தன. சில சமயங்களில் புராட்டஸ்டண்ட் குருமாரும்கூட இந்த உரையாடல்களில் கலந்துகொண்டனர். 1959-க்குள் முதல் சபை அமைக்கப்பட்டது. பின்பு, 1960-ல் யெகோவாவின் சாட்சிகளுடைய சங்கத்திற்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை அரசாங்கம் அளித்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கியது. அந்தத் தொடக்க ஆண்டுகள் மகிழ்ச்சியாலும் ஆவிக்குரிய உயர்நிலைகளாலும் நிரம்பியிருந்தன. தேவை அதிகமுள்ள இடத்திற்கு மாறிச் செல்லும்படி நாங்கள் தீர்மானித்ததை யெகோவா மெய்யாகவே ஆசீர்வதித்தார்.” சகோதரி ஷென்க் இப்போது 87 வயதானவர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் இன்னும் தன் சபையில் யெகோவாவை உண்மையுடன் சேவித்து வருகிறார்கள்.
ஊழியம் முன்னேறியது
1969-ம் ஆண்டில், ஜாக் மற்றும் பாலட் இனோடி என்ற இரு சாட்சிகள் விசேஷித்த பயனியர்களாக ஊழியம் செய்ய பிரான்ஸிலிருந்து டஹிடிக்கு அனுப்பப்பட்டனர். ஜாக் இவ்வாறு நினைவுபடுத்தி சொல்கிறார்: “டஹிடிக்கு நாங்கள் வந்து சேர்ந்தபோது, 124 பிரஸ்தாபிகள் மாத்திரமே அங்கிருந்தனர். பபீடியில் ஒரேவொரு சபை இருந்தது, தீபகற்பத்தில் இருந்த வேய்ரோவில் இரண்டு விசேஷித்த பயனியர்கள் இருந்தனர்.” இந்தத் தீபகற்பம், டஹிடியுடன் ஒரு பூசந்தியால் இணைக்கப்பட்டிருக்கிறது. “பூமியில் சமாதானம்” என்ற சர்வதேச மாநாடு சீக்கிரத்தில் அங்கு நடத்தப்பட இருந்தது. “ஒரு மாநாட்டுக்கான ஏற்பாடுகள் செய்தது அதுவே என் முதல் அனுபவம்” என்று ஜாக் தொடர்ந்து சொல்கிறார். “சர்வதேச வருகையாளர்களுக்காக ஆங்கில நிகழ்ச்சிநிரல் கூட்டத்தொடரை நாங்கள் திட்டமிட வேண்டியதாக இருந்தது. ராஜ்ய பாட்டுகளுக்காக ஓர் இசைக் குழுவை ஏற்படுத்தவும், இரண்டு நாடகங்களை ஒத்திகை பார்க்கவும் வேண்டியதாக இருந்தது. 126 பிரஸ்தாபிகளைக் கொண்டே இந்த எல்லா வேலைகளும் செய்துமுடிக்கப்பட்டன. இதன் மிகப் பெரும் பாகத்தை யெகோவாதாமே செய்தார் என்று நான் நிச்சயமாக இருக்கிறேன்.” 488 பேர் ஆஜராகியது அந்தத் தீவாருக்குக் கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது. அவர்களில் பலருக்கு, மற்ற நாடுகளிலிருந்து வரும் சாட்சிகளைச் சந்திப்பது இதுவே முதல் தடவையாக இருந்தது.
இதற்குப்பின் சீக்கிரத்திலேயே ஜாக் இனோடி, பயணக் கண்காணியாக நியமிக்கப்பட்டார். அவர் பல்வேறு தீவுகளைச் சந்திக்க செல்கையில், அவற்றில் அக்கறை மிகுதியாக இருந்ததையும் ஆனால் அதை விருத்தி செய்வதற்கு ராஜ்ய பிரஸ்தாபிகள் சொற்பமானவர்களே இருப்பதையும் கண்டார். “இதன் காரணமாகவே, தேவை அதிகமிருந்த இடத்தில் சேவிக்க, இந்தத் தீவுகளுக்கு இடம் மாறி செல்லும்படி பல குடும்பங்களை நான் ஊக்கப்படுத்தினேன்” என்று ஜாக் விளக்கம் அளிக்கிறார். “ஆகவே, சிறிது சிறிதாய் நற்செய்தி அந்தக் கூட்டமான தீவுகளுக்கெல்லாம் பரவும்படி செய்யப்பட்டது” என்கிறார். சகோதரர் இனோடி, 1969-லிருந்து 1974 வரையில் பயணக் கண்காணியாகச் சேவித்தார். இன்று அவர் டஹிடியிலுள்ள சபைகள் ஒன்றில் ஒரு மூப்பராக இருக்கிறார்.
சகோதரர் இனோடியின் ஊக்கமூட்டுதலுக்குச் சாதகமாக செயல்பட்டவர்களில் ஆகஸ்ட் டிமெனஹாவும் ஒருவர். 1958-ல் முழுக்காட்டப்பட்ட எட்டு ஆட்களில் இவரும் ஒருவர். என்ன நடந்தது என்பதை இவர் விவரமாகச் சொல்கிறார். “1972-ல், வட்டாரக் கண்காணி ஜாக் இனோடி, பசிபிக் தீவுகளின் தொகுதியிலிருந்த சொசைடி தீவுகளில் ஒன்றாகிய வாஹீனில் சேவை செய்வதற்கு இடம் மாறி செல்வதைப் பற்றி சிந்திக்கும்படி எங்களை ஊக்குவித்தார். நான் தயங்கினேன், ஏனெனில், சபைக்கூட்டங்களில் பைபிள் வாசிப்புகள் மட்டுமே செய்திருந்தேன், அத்தகைய பெரும் பொறுப்பை ஏற்பதற்கு தகுதிபெற்றவனாக உணரவில்லை. இருந்தபோதிலும், ‘கவலைப்படாதே, உன்னால் செய்ய முடியும்!’ என்று சகோதரன் இனோடி விடாமல் என்னிடம் சொல்லிக்கொண்டே இருந்தார். சிறிது காலத்திற்குப்பின், அவ்வாறு செல்லும்படி எங்கள் மனதைத் திடப்படுத்தினோம். ஆகவே, 1973-ல் நாங்கள் எல்லாவற்றையும் விற்றுவிட்டு, எங்கள் மூன்று இளம் பிள்ளைகளுடன் வாஹீனுக்கு இடம் மாறிச் சென்றோம்.
“நாங்கள் வந்து சேர்ந்தபோது, நான் எல்லாவற்றையும்—காவற்கோபுர படிப்பு, தேவராஜ்ய ஊழியப்பள்ளி, போன்றவற்றை—தொடங்க வேண்டியிருந்ததைக் கண்டேன். இது எளிதாக இல்லை, ஆனால் யெகோவாவின் பாதுகாப்பையும் உதவியையும் நாங்கள் அனுபவித்தோம். வாழ்வதற்கு ஓர் இடத்தைக் கண்டுபிடிக்க பல சந்தர்ப்பங்களில் அவர் எங்களுக்கு உதவி செய்தார். பின்பு, எதிரிகளின் ஒரு குழுவினர், சாட்சிகளை அந்தத் தீவிலிருந்து வெளியேற்ற முயற்சி செய்தபோது, எங்கள் சார்பாகப் பேசும்படி அவ்விடத்து அரசியல் வல்லுநர் ஒருவர் எழும்பினார். மெய்யாகவே, அந்தக் காலத்திலெல்லாம் யெகோவா எங்கள்மீது கண்ணோக்கமாக இருந்து காத்து வந்தார்.” இப்போது வாஹீனில் இரண்டு சபைகள்—23 பிரஸ்தாபிகளை உடைய பிரெஞ்சுமொழி சபை ஒன்றும் 55 பிரஸ்தாபிகளை உடைய டஹிடி மொழி சபை ஒன்றும்—இருக்கின்றன.
1969-ல் ஏலன் மாப்பு என்பவர் அந்தத் தீபகற்பத்தில் ஊழியம் செய்வதற்கு விசேஷித்த பயனியராக நியமிக்கப்பட்டார்கள். “அக்கறை காட்டுவோர் நிறைய பேர் அந்தத் தீபகற்பத்தில் இருந்தனர். சிறிது காலத்திற்குள் பல பைபிள் படிப்புகளை நான் தொடங்கினேன்” என்று ஏலன் சொல்கிறார்கள். சீக்கிரத்தில் வேய்ரோவில் ஒரு சபை அமைக்கப்பட்டது, ஆனால் மூப்பர்களுக்கான ஒரு தேவை இருந்தது. காலப்போக்கில், 35 கிலோமீட்டர் தூரத்திலுள்ள பாப்பாராவில் அப்பொழுது வாழ்ந்துகொண்டிருந்த கோல்சன் டீன் என்பவர் உதவிசெய்ய முடிந்தது. “வேய்ரோவில் சேவை செய்வதற்கு நாங்கள் நன்றாய் ஒழுங்கமைக்கப்பட வேண்டியிருந்தது” என்று சகோதரர் டீன் நினைவுபடுத்திக் கூறுகிறார். தீவின் மறுபுறத்தில் வேய்ரோவிலிருந்து 70 கிலோமீட்டர் தூரத்திலிருந்த ஃபா நகரத்தில் நான் வேலை செய்துகொண்டிருந்தேன். வேலை முடிந்த பின்பு, என் குடும்பத்தை அழைத்துக்கொண்டு வேய்ரோவுக்கு நான் அவசரமாய்ச் செல்ல வேண்டியிருந்தது. பின்னால் என் வேலையின் நிமித்தமாக ஃபாக்கு நாங்கள் இடம் மாறி செல்ல வேண்டியதாகிவிட்டது. வேய்ரோ சபையை நாங்கள் இனியும் ஆதரிக்க முடியுமா? அங்கிருந்த சகோதரருக்கு உதவி செய்ய நாங்கள் உண்மையில் விரும்பினோம், ஆகையால் நாங்கள் தொடர்ந்து அங்கு செல்லும்படி தீர்மானித்தோம். கூட்டங்கள் நடத்தப்படும் இரவுகளில், நள்ளிரவுக்கு முன்னால் நாங்கள் வீட்டுக்கு வந்து சேர்வது அரிதாக இருந்தது. ஏனெனில், கார் இல்லாதவர்களை அவரவர் வீடுகளுக்குக் கொண்டுசென்று விடுவதற்கு பல தடவை அங்குமிங்கும் போய்வர வேண்டியிருந்தது. ஐந்து ஆண்டுகள் இவ்வாறு செய்தோம். இப்போது இந்தத் தீவின் இப்பகுதியில் நான்கு சபைகளைக் காண்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது, அந்நாட்களைப் பற்றிய இனிய நினைவுகள் எங்கள் மனதில் இன்னமும் இருக்கிறது.”
டஹிடி ஒரு கிளைப் பிரிவாகிறது
1974-க்குள் டஹிடியில் ராஜ்ய பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 199-க்கு உயர்ந்துவிட்டது. இதற்கு அடுத்த ஆண்டில், அப்போது உவாட்ச் டவர் சொஸைட்டியின் தலைவரான என். ஹெச். நாரும் துணைத்தலைவரான எஃப். டபிள்யு. ஃபிரான்ஸும் பிரெஞ்சு பாலினீஷியாவுக்கு விஜயம் செய்தபோது, பிரெஞ்சு பாலினீஷியாவில் செய்யப்பட்ட வேலை, 3,500 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் பிஜியில் அல்லாமல், டஹிடியின் மேற்பார்வையிலிருந்தால் அதிகப்படியாய்ச் செயல்முறைக்கு ஏற்றதாயிருக்கும் என்று கண்டார்கள். ஆகையால், ஏப்ரல் 1, 1975-ல், டஹிடி கிளைப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டது. வட்டாரக் கண்காணியாகிய அலே ஸாமா, கிளைக் கண்காணியாக நியமிக்கப்பட்டார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, சகோதரர் ஸாமா, யெகோவாவிடமிருந்து பெற்ற அதிசயமான ஆசீர்வாதங்களைத் திரும்ப நினைவுபடுத்திக் கூறமுடிந்தது. “எங்கள் பிராந்தியத்திலுள்ள எல்லா தீவுகளுக்கும் தீவுக்கூட்டங்களுக்கும் நற்செய்தியைக் கொண்டுசெல்வதற்கு, 1975-லிருந்து பெரும் முயற்சி எடுக்கப்பட்டு வந்திருக்கிறது. இது வட ஐரோப்பாவைப் போன்ற அவ்வளவு பெரிய பகுதியாகப் பரந்திருக்கிறது. இதன் பலன்கள் மகிழ்ச்சியைத் தருபவையாக இருந்திருக்கின்றன. 1983-க்குள் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 538-க்குப் பெருகிவிட்டது. அந்த ஆண்டில், பேயியாவில், கிளை அலுவலகத்திற்கும் பெத்தேல் வீட்டுக்கும் ஒரு கட்டடம் கட்டப்பட்டது. இப்போது, 1,900 பிரஸ்தாபிகள், சொசைடி தீவுகளிலுள்ள 30 சபைகளுக்குள்ளும், ஆஸ்ட்ரல் தீவுகளில் ஒரு சபையிலும் ஒரு ஒதுக்கமான தொகுதியிலும், மார்கியூசஸில் ஒரு சபையிலும் இரண்டு ஒதுக்கமான தனித் தொகுதிகளிலும், டுமாடோ மற்றும் கேம்புயர் தீவுகளில் ஒதுக்கமான பல தனித் தொகுதிகளிலும் சிதறியவர்களாக இருக்கின்றனர். கூட்டங்களுக்கு வரும் புதியவர்களின் எண்ணிக்கையில் பெருகிக்கொண்டே வருவதால், அதை கவனிப்பதற்காக பல புதிய ராஜ்ய மன்றங்கள்—மார்கியூசஸில் மூன்றும், டஹிடியில் ஏழும்—கட்டப்பட்டு வருகின்றன. சென்ற 20 ஆண்டுகளில், டஹிடி நிலத்தில் விதைத்துப் பயிர்செய்வதற்கான எங்கள் முயற்சிகளை யெகோவா மெய்யாகவே ஆசீர்வதித்திருக்கிறார்.”
செய்வதற்கு இன்னும் அதிகம் இருக்கிறது
பிரெஞ்சு பாலினீஷியாவில் வளர்ச்சிக்கான மிகச் சிறந்த வாய்ப்புகள் இருக்கின்றன. மார்ச் 23, 1997-ல், இயேசு கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்புக்கு, பிரெஞ்சு பாலினீஷியா முழுவதிலுமிருந்த யெகோவாவின் சாட்சிகளோடு ஏறக்குறைய 5,376 ஆட்கள் கூடிவந்திருந்தனர். அக்கறை காட்டும் இந்த ஆட்களின் ஆவிக்குரிய தேவைகளைத் திருப்தி செய்வதற்கு, நம்முடைய பைபிள் பிரசுரங்கள் அவ்விடத்தின் பல மொழிகளில் கிடைக்கும்படி செய்யப்பட்டிருக்கின்றன. டஹிடி மொழியில் மட்டுமல்லாமல், கூடுதலாக, பௌமோட்டூ மொழியிலும் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த மொழி அர்ச்சிபிலேகோவிலும் மார்கியூசிய வடக்கிலும் தெற்கிலும் பேசப்படுகிறது.
யெகோவாவின் அன்பையும் பொறுமையையும் மேலும் முழுமையாக மதித்துணரும்படி, இந்த நிலையான வளர்ச்சியும் சிறந்த அனுபவங்களும், டஹிடியிலுள்ள ராஜ்ய பிரஸ்தாபிகளுக்கு உதவி செய்திருக்கின்றன. தென் கடலின் தொலைதூர தீவுகளிலும்கூட, “எல்லா மனுஷரும் இரட்சிப்பைப் பெறவும் சத்தியத்தை அறிகிற முற்றறிவை அடையவும் வேண்டுமென்பது அவருடைய சித்தம்.” (1 தீமோத்தேயு 2:4, தி.மொ.) டஹிடியிலும் பிரெஞ்சு பாலினீஷியாவின் மற்ற தீவுகளிலும் இருக்கும் யெகோவாவின் சாட்சிகள் யெகோவாவின் இந்த வாக்குறுதியில் முழு விசுவாசம் உடையோராக இருக்கிறார்கள்: “தீவுகள் எனக்குக் காத்திருந்து, என் புயத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கும்.”—ஏசாயா 51:5.
[பக்கம் 25-ன் படம்]
இடதுபுறத்திலிருந்து வலதுபுறமாக: அலே ஸாமா, மேரி ஆன் ஸாமா, ஆக்னஸ் ஷென்க், பாலட் இனோடியும் ஜாக் இனோடியும்
[பக்கம் 26-ன் படம்]
டஹிடி கிளை அலுவலகம் ஃபிரெஞ்சு பாலினீஷியாவின் தேவைகளைக் கவனித்துக்கொள்கிறது
ஆஸ்திரேலியா
[பக்கம் 27-ன் படம்]
டஹிடி கிளை அலுவலகம்