பயனியர் ஊழியத்தின் ஆசீர்வாதங்கள்
“யெகோவாவின் ஆசீர்வாதம்—அதுவே ஐசுவரியத்தைத் தருகிறது, அதோடு அவர் வேதனையைக் கூட்டுகிறதில்லை.”—நீதிமொழிகள் 10:22, NW.
1, 2. (அ) முழுநேர ஊழியத்தைப் பற்றிய தன் உணர்ச்சிகளை ஒரு பயனியர் எவ்வாறு வெளிப்படுத்திக் கூறினார்? (ஆ) ஏன் பயனியர்கள், சீஷராவதால்பெறும் மகிழ்ச்சியை அதிக முழுமையாய் அனுபவிக்கும் நிலையில் இருக்கிறார்கள்?
“நீங்கள் பைபிள் படிப்பு நடத்திவருகிற ஒருவர், யெகோவாவைத் துதிப்பவராகிச் செயல்படுவதைக் காணும் மகிழ்ச்சியைப் பார்க்கிலும் மேம்பட்ட மகிழ்ச்சி ஏதாவது இருக்கக்கூடுமா? யெகோவாவைப் பிரியப்படுத்துவதற்காக, தங்கள் வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்யும்படி ஆட்களைத் தூண்டியியக்குவதில் கடவுளுடைய வசனம் எவ்வளவு வல்லமை வாய்ந்ததாக இருக்கிறது என்பதைக் காண்பது கிளர்ச்சியூட்டுவதாயும் விசுவாசத்தைப் பலப்படுத்துவதாயும் இருக்கிறது.” 32 ஆண்டுகளுக்கு மேலாக முழுநேர ஊழியராக இருந்துவந்திருக்கிற ஒரு பயனியர், கனடாவிலிருந்து இவ்வாறு எழுதினார். தன்னுடைய பயனியர் ஊழியத்தைக் குறித்து அவர் சொல்கிறார்: “வேறு எதையும் செய்வதை நான் கற்பனை செய்யவே முடிகிறதில்லை. இதைப் போன்ற மகிழ்ச்சியைத்தரும் எதையும் நிச்சயமாகவே நான் கற்பனை செய்ய முடியாது.”
2 ஜீவ பாதையில் செல்லும்படி எவருக்காவது உதவிசெய்வதில் பங்குகொள்வது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறதென்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? நிச்சயமாகவே, அத்தகைய மகிழ்ச்சியை அனுபவிப்பவர்கள் பயனியர்கள் மாத்திரமேயல்ல. யெகோவாவின் ஊழியர்கள் எல்லாருமே, ‘ஜனங்களை சீஷராக்குங்கள்’ என்ற கட்டளையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கிறார்கள், அதைச் செய்வதற்கு கடினமாய் முயற்சியும் செய்கிறார்கள். (மத்தேயு 28:19, NW) எனினும், வெளி ஊழியத்தில் பயனியர்கள் பல மணிநேரங்கள் செலவிட முடிகிறதினால், சீஷராக்குவதில் கிடைக்கும் மகிழ்ச்சியை அடிக்கடி அதிக முழுமையாக அனுபவிக்கும் நிலையில் இருக்கிறார்கள். ஆனால் பயனியர் ஊழியம் செய்வதில் வேறு பலன்களும் இருக்கின்றன. பயனியர்களோடு உரையாடுங்கள். ‘பயனியர் ஊழியம் செய்வது, ஐசுவரியத்தைத் தரும் யெகோவாவின் ஆசீர்வாதங்களை’ அனுபவிப்பதற்கு அற்புதமான ஒரு வழியாக இருக்கிறதென்று அவர்கள் உங்களுக்குச் சொல்வார்கள்.—நீதிமொழிகள் 10:22, NW.
3. நாம் யெகோவாவைத் தொடர்ந்து சேவிக்கையில், நம்மை எது தூண்டுவிக்கக்கூடும்?
3 சமீபத்தில், உலகத்தின் பல்வேறு பாகங்களிலிருக்கும் பயனியர்கள், முழுநேர ஊழியத்தில் அவர்கள் அனுபவித்திருக்கும் ஆசீர்வாதங்களை விவரித்துச் சொல்லும்படி கேட்கப்பட்டார்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நாம் கவனிக்கலாம். எனினும், உடல்நலக் குறைவு, முதிர்வயது அல்லது மற்ற சூழ்நிலைமைகளின் காரணமாக உங்கள் சேவை மட்டுப்படுத்தப்படுகிறது என்றால் மனச்சோர்வு அடையாதீர்கள். இயலும் எந்த அளவிலாவது, முழு ஆத்துமாவோடு யெகோவாவைச் சேவிப்பதே முக்கியமான காரியம் என்பதை நினைவில் வையுங்கள். என்றபோதிலும், சில பயனியர்கள் சொல்லும் குறிப்புகளைக் கேட்பது, இந்தப் பலன்தரும் நடவடிக்கையை, கூடுமானால் நீங்கள் ஏற்பதற்கு உங்கள் அக்கறையை அதிகரிக்கலாம்.
திருப்தியும் மகிழ்ச்சியும் தரும் உள்ளார்ந்த உணர்ச்சிகள்
4, 5. (அ) நற்செய்தியை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வது ஏன் அத்தகைய பலன்தரும் அனுபவமாக இருக்கிறது? (ஆ) ஊழியத்தில் முழுநேரமாகப் பங்கெடுப்பதைப்பற்றி பயனியர்கள் எவ்வாறு உணருகிறார்கள்?
4 “பெற்றுக்கொள்வதைப் பார்க்கிலும் கொடுப்பதிலேயே அதிக மகிழ்ச்சி உள்ளது” என்று இயேசு சொன்னார். (அப்போஸ்தலர் 20:35, NW) ஆம், தன்னலமற்று கொடுப்பது தன்னில்தானே பலன்மிக்கதாய் இருக்கிறது. (நீதிமொழிகள் 11:25) மற்றவர்களுடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளும் காரியத்தில் இது முக்கியமாய் உண்மையாக இருக்கிறது. மெய்யாகவே, நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற, கடவுளைப்பற்றிய அறிவைப் பெறும்படி உடன் மனிதனுக்கு உதவிசெய்வதைப் பார்க்கிலும், நாம் கொடுக்கக்கூடிய பெரிய பரிசு வேறு என்ன இருக்கிறது?—யோவான் 17:3.
5 ஊழியத்தில் முழுநேரமாகப் பங்குகொள்ளுகிறவர்கள், தங்கள் ஊழியத்திலிருந்து தாங்கள் அடையும் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் பற்றி அடிக்கடி குறிப்பிடுவது ஆச்சரியமல்ல. “மற்றவர்களுடன் சத்தியத்தைப் பகிர்ந்துகொண்டதிலிருந்து கிடைத்திருக்கிற மனதிருப்தியை வேறு எந்த வேலையும் எனக்குக் கொடுத்திருக்க முடியாது” என்று பிரிட்டனைச் சேர்ந்த 64 வயதான பயனியர் சொல்லுகிறார். பயனியர் செய்வது தனக்கு எதைக் குறித்ததென்பதை, ஜயரிலுள்ள ஒரு விதவை இவ்வாறு விளக்கினார்: “என் அன்பான கணவரை நான் இழந்த பின்பு, பயனியர் சேவையே எனக்கு உண்மையான ஆறுதலாக இருந்தது. மற்றவர்களுக்கு உதவிசெய்ய நான் எவ்வளவு அதிகமாக ஊழியத்திற்காக வெளியே செல்கிறேனோ, அவ்வளவு அதிகமாக இந்தத் துயர்மிகுந்த இழப்பை என்னால் மறக்கமுடிகிறது. யெகோவாவின் வாக்குறுதிகளில் நான் விசுவாசத்தை வைத்து, நான் படிப்பு நடத்தி வருகிற ஆட்களுக்கு, அவர்களுடைய வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்வதற்கு எவ்வாறு உதவிசெய்யலாம் என்பதையே அதிகமாய்ச் சிந்திக்கிறேன். ஒவ்வொரு இரவும் என்னால் நிம்மதியாக தூங்க முடிகிறது, என் மனது மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கிறது.”
6. எந்த விசேஷ மகிழ்ச்சியைப் பயனியர்கள் சிலர் அனுபவித்திருக்கிறார்கள்?
6 பல பத்தாண்டுகளாக பயனியர் ஊழியம் செய்து வந்திருக்கிற சிலர், தொலைவில் ஒதுக்கமாயுள்ள இடங்களில் சேவை செய்து, சபைகளை ஸ்தாபிப்பதில் தனிப்பட்ட மகிழ்ச்சியடைந்தவர்களாக இருந்திருக்கின்றனர். இவை முடிவில் வட்டாரங்களாகவும் ஆகியிருக்கின்றன. உதாரணமாக, அபாஷிரியிலுள்ள ஹொக்கைடோவில் (ஜப்பானின் வடகோடி தீவு), 33 ஆண்டுகளாக பயனியர் ஊழியம் செய்துகொண்டிருக்கிற ஒரு சகோதரி இருக்கிறார். ஹொக்கைடோ முழுவதற்காகவும் நடத்தப்பட்ட, தான் சென்ற முதல் வட்டார மாநாட்டில் ஆஜராகியிருந்தவர்கள் 70 பேர் மாத்திரமே என்று அவர் நினைவுகூருகிறார். ஆனால் இப்போது? அந்தத் தீவில் 12 வட்டாரங்கள் இருக்கின்றன, மொத்தம் 12,000-த்திற்கும் மேற்பட்ட பிரஸ்தாபிகள் இருக்கின்றனர். அதே தீவில், உடன் ராஜ்ய அறிவிப்பாளரின் பெரும் கூட்டத்தாருடன் மாநாடுகளில் அந்தச் சகோதரி ஆஜராகியிருக்கையில் அவருடைய இருதயம் எந்தளவு மகிழ்ச்சியால் பொங்கி வழியும் என்பதைக் கற்பனை செய்துபாருங்கள்!
7, 8. நீண்ட காலப் பயனியர்களில் பெரும்பான்மையர் என்ன மகிழ்ச்சியை அனுபவித்திருக்கிறார்கள்?
7 நீண்ட காலம் பயனியர்களாக இருக்கும் மற்றவர்கள், தாங்கள் பைபிள் படிப்பு நடத்தினவர்கள் முழுக்காட்டப்பட்டதையும், பின்பு மேலுமதிக ஊழிய சிலாக்கியங்களைப் பெற்றதையும் கண்டதில் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர். ஜப்பானில், 1957-லிருந்து, ஒன்பது வெவ்வேறு பயனியர் நியமிப்பு இடங்களில் சேவித்திருக்கிற ஒரு சகோதரி, ஒரு வங்கியில் வேலை செய்துகொண்டிருந்த இளம் பெண்ணிடம் ஒரு விழித்தெழு! பத்திரிகை அளித்ததை நினைவுகூருகிறார். ஒன்பது மாதங்களுக்குள் இந்த இளம் பெண் முழுக்காட்டப்பட்டாள். பின்னால், அவள் மணம் செய்துகொண்டு, அவளும் அவளுடைய கணவரும் விசேஷ பயனியர்கள் ஆனார்கள். அந்தப் பயனியர் சகோதரி, தன் மூன்றாவது பயனியர் நியமிப்பு இடத்தில் இருக்கையில், தான் இருந்த சபையை அதன் புதிய வட்டாரக் கண்காணியும் அவருடைய மனைவியும்—தான் முன்னாள் பைபிள் படிப்பு நடத்தின பெண்—சந்திப்பு செய்தபோது, அந்த சகோதரி எத்தகைய மகிழ்ச்சியடைந்தார்கள்!
8 இருபத்திரண்டு ஆண்டுகள் பயனியர் ஊழியம் செய்த ஒருவர், அந்த ஊழியத்தை “மதித்துக் காக்கவேண்டிய விலையேறப்பெற்ற ஒரு சிலாக்கியமாகக்” கருதுவதாக கூறினார்; அவ்வாறே, பயனியர் ஊழியத்தைத் தங்கள் வாழ்க்கைப் போக்காக ஆக்கியிருப்போர் கருதுவதும் ஆச்சரியமல்லவே!
யெகோவா பராமரிப்பதன் அத்தாட்சி
9. மகா பராமரிப்பாளராக யெகோவா, தம்முடைய ஊழியருக்கு என்ன வாக்குறுதி அளிக்கிறார், இது நமக்கு எதைக் குறிக்கிறது?
9 மகா பராமரிப்பாளரான யெகோவா, தம்முடைய ஊழியர்களை ஆவிக்குரிய பிரகாரமாகவும் பொருள்சம்பந்தமாயும் பராமரித்துக் காப்பாரென வாக்குறுதியளிக்கிறார். பூர்வகால அரசன் தாவீது இவ்வாறு நன்றாய் சொல்ல முடிந்தது: “நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை.” (சங்கீதம் 37:25) நிச்சயமாகவே, கடவுளின் இந்த வாக்குறுதி, நம்முடைய குடும்பங்களுக்குப் பொருளாதார உதவி அளிக்கும் கடமையிலிருந்து நம்மை விடுவிப்பதுமில்லை, நம்முடைய கிறிஸ்தவ சகோதரரின் தாராள மனப்பான்மையை மட்டுக்குமீறி ஆதாயப்படுத்திக்கொள்ளும்படி நமக்குச் சலுகை அளிப்பதுமில்லை. (1 தெசலோனிக்கேயர் 4:11, 12; 1 தீமோத்தேயு 5:8) எனினும், யெகோவாவை மேலும் முழுமையாகச் சேவிக்கும்படி, நம்முடைய வாழ்க்கையில் மனப்பூர்வமாகத் தியாகங்கள் செய்கையில், அவர் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார்.—மத்தேயு 6:33.
10, 11. யெகோவாவின் பராமரிக்கும் ஆற்றலைப் பற்றி, தங்கள் அனுபவத்திலிருந்து பயனியர்கள் பலர் என்ன அறிந்திருக்கிறார்கள்?
10 யெகோவாவின் பராமரிக்கும் கைகளில் தங்களை விட்டுவிடுகிறவர்களுக்கு யெகோவா பராமரிப்பு அளிக்கிறார் என்பதை, உலகமெங்குமுள்ள பயனியர்கள், தங்கள் அனுபவத்திலிருந்து அறிந்திருக்கிறார்கள். ராஜ்ய பிரஸ்தாபிகள் அதிகமாகத் தேவைப்பட்ட ஒரு சிறிய பட்டணத்திற்கு இடம் மாறிச் சென்ற ஒரு பயனியர் தம்பதியினரின் காரியத்தைக் கவனியுங்கள். சில மாதங்களுக்குப்பின், உலகப்பிரகாரமான வேலை கிடைப்பது அரிதாயிற்று, அவர்களுடைய சேமிப்புகளும் செலவாகிவிட்டன. அப்போது 81 டாலர் பணம் செலுத்தவேண்டிய கார் காப்புறுதிக் கட்டணச் சீட்டு ஒன்றைப் பெற்றார்கள். “அதைச் செலுத்த எங்களுக்கு வழி இல்லாமற்போயிற்று, அன்றிரவு நாங்கள் கெஞ்சி, மன்றாடி ஜெபித்தோம்” என்று அந்த சகோதரன் விளக்குகிறார். அடுத்த நாள், பணசம்பந்தமாய் தாங்கள்தாமே கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த ஒரு குடும்பத்தினரிடமிருந்து ஒரு கடிதத்தைப் பெற்றார்கள். அந்தக் குடும்பத்தினர் அதிகமாய்ச் செலுத்திவிட்ட வரிப்பணம் அவர்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாகவும், அது தாங்கள் எதிர்பார்த்த தொகையைப் பார்க்கிலும் அதிகமாக இருந்ததனால், அதில் கொஞ்சத்தை அந்தப் பயனியர் தம்பதியுடன் பகிர்ந்துகொள்ள அவர்கள் விரும்புவதாகவும், அதில் விளக்கி எழுதப்பட்டிருந்தது. 81 டாலருக்கு ஒரு காசோலை அதோடு வைக்கப்பட்டிருந்தது! “அந்நாளை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்—நான் மெய்சிலிர்த்து போனேன்! இந்தக் குடும்பத்தினரின் தயாள பண்புக்காக மிகவும் நன்றிமதித்துணர்ந்தோம்” என்று அந்தப் பயனியர் சகோதரர் சொல்கிறார். இத்தகைய தயவை யெகோவாவுங்கூட போற்றுகிறார். இது, தம்முடைய ஊழியரில் காட்டும்படி யெகோவா ஊக்கப்படுத்துகிற தயாள மனப்பான்மைக்கு ஒத்திருக்கிறது.—நீதிமொழிகள் 19:17; எபிரெயர் 13:16.
11 இதைப் போன்ற அனுபவங்களை பல பயனியர்கள் சொல்ல முடியும். அவர்களைக் கேளுங்கள்; தாங்கள் ஒருபோதும் ‘கைவிடப்படவில்லை’ என்று அவர்கள் சொல்வார்கள். 55 ஆண்டுகளுக்கு மேலாக முழுநேர சேவையில் ஈடுபட்டுவந்திருக்கிற, 72 வயதான ஒரு பயனியர், கடந்த காலத்தை ஞாபகப்படுத்தி சொல்கிறவராய்: “யெகோவா என்னை ஒருபோதும் கைவிடவில்லை” என்றார்.—எபிரெயர் 13:5, 6.
“யெகோவாவிடம் நெருங்கியவர்களாவதற்கு மிகச் சிறந்த ஒரு வழி”
12. நற்செய்தியை யாவரறிய அறிவித்துவரும் இந்த வேலை ஏன் அத்தகைய குறிப்பிடத்தக்க சிலாக்கியமாக இருக்கிறது?
12 தம்முடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை யாவரறிய அறிவிக்கும்படி யெகோவா நம்மைக் கேட்பதுதானேயும் நமக்கு ஒரு சிலாக்கியத்தை அளிக்கிறது. அபூரண மனிதராக நாம் இருக்கிறபோதிலும், ஜீவனைக் காக்கும் இந்த வேலையில் தம்முடைய ‘உடன்வேலையாட்களாக’ அவர் நம்மைக் கருதுகிறார். (1 கொரிந்தியர் 3:9; 1 தீமோத்தேயு 4:16) கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றி நாம் மற்றவர்களுக்குப் பிரசங்கித்து வருகையிலும், அக்கிரமத்துக்கு ஒரு முடிவு வருவதை யாவரறிய நாம் அறிவித்து வருகையிலும், மீட்பின் கிரயத்தை ஏற்பாடு செய்ததில் அவருடைய பேரன்பை ஆட்களுக்கு நாம் விளக்கிக் கூறுகையிலும், அவருடைய ஜீவ வார்த்தையை நாம் திறந்து அதன் மதிப்புமிகுந்த பொருளடக்கத்தை நேர்மை இருதயமுள்ள ஆட்களுக்குப் போதித்து வருகையிலும், நம்முடைய சிருஷ்டிகராகிய யெகோவாவிடம் நெருங்கிவரும்படி நாம் இயல்பாக இழுக்கப்படுகிறோம்.—சங்கீதம் 145:11; யோவான் 3:16; எபிரெயர் 4:12.
13. தங்கள் பயனியர் ஊழியம் யெகோவாவுடன் உள்ள உறவை எவ்வாறு பாதிப்பதாக சிலர் சொல்கிறார்கள்?
13 யெகோவாவைப்பற்றி கற்றறிவதிலும் போதிப்பதிலும், மிகுதியான நேரத்தை ஒவ்வொரு மாதமும் செலவிடக்கூடியவர்களாக பயனியர்கள் இருக்கிறார்கள். கடவுளிடமாகத் தங்கள் உறவை இது எவ்வாறு பாதிப்பதாக அவர்கள் உணருகிறார்கள்? “பயனியராக ஊழியம் செய்வது, யெகோவாவிடம் நெருங்கி வருவதற்கு மிகச் சிறந்த ஒரு வழி” என்று, பத்து ஆண்டுகளுக்குமேல் பயனியராக ஊழியம் செய்துவரும் பிரான்ஸிலுள்ள ஒரு மூப்பர் பதிலளிக்கிறார். முழுநேர ஊழியத்தில் 18 ஆண்டுகள் செலவிட்டிருக்கிற அந்த நாட்டிலுள்ள மற்றொரு பயனியர் இவ்வாறு சொல்கிறார்: “பயனியர் சேவை, நம்முடைய சிருஷ்டிகரிடமாக உறுதிப்பட்டுக்கொண்டே வரும் ஓர் உறவை நாளுக்குநாள் வளர்த்து, ‘யெகோவா நல்லவர் என்று ருசித்தறியும்படி’ நம்மை அனுமதிக்கிறது.” (சங்கீதம் 34:8, தி.மொ.) பிரிட்டனில், 30 ஆண்டுகளாக பயனியர் சேவை செய்து வந்திருக்கிற ஒரு சகோதரி அதைப்போன்றே உணருகிறார்கள். அந்த சகோதரி சொல்கிறார்கள்: “என் ஊழியத்தில் வழிநடத்துதலுக்காக யெகோவாவிடம் ஆவியின் உதவியைக் கேட்டுப் பெறுவது என்னை அவரிடமாக நெருங்கிவரச் செய்கிறது. ஒரு குறிப்பிட்ட வீட்டுக்கு, சரியான சமயத்தில், யெகோவாவின் ஆவி என்னை வழிநடத்தினதை பல சந்தர்ப்பங்களில் நான் உண்மையில் உணர்ந்திருக்கிறேன்.”—அப்போஸ்தலர் 16:6-10-ஐ ஒப்பிடுக.
14. மற்றவர்களுக்குப் போதிப்பதற்கு பைபிளையும் பைபிளில் ஆதாரங்கொண்ட பிரசுரங்களையும் நாள்தோறும் பயன்படுத்தி வருவதிலிருந்து பயனியர்கள் எவ்வாறு பயனடைகிறார்கள்?
14 வேதப்பூர்வ சத்தியங்களை விளக்கிக் கற்பிப்பதற்கு பைபிளையும் பைபிளில் ஆதாரங்கொண்ட பிரசுரங்களையும் நாள்தோறும் பயன்படுத்தி வருவது, கடவுளுடைய வார்த்தையைப் பற்றிய அறிவில் வளர தங்களுக்கு உதவிசெய்கிறதென்று பயனியர்கள் பலர் காண்கின்றனர். பயனியராக 31 ஆண்டுகள் இருக்கிற, ஸ்பெய்னிலுள்ள 85 வயதான ஒரு சகோதரர் இவ்வாறு விளக்கிக் கூறுகிறார்: “பைபிளின் ஆழமான அறிவைப் பெறும்படி பயனியர் ஊழியம் எனக்கு உதவிசெய்திருக்கிறது. யெகோவாவையும் அவருடைய நோக்கங்களையும் அறிந்துகொள்ளும்படி பல ஆட்களுக்கு உதவ நான் இதைப் பயன்படுத்தியிருக்கிறேன்.” 23 ஆண்டுகள் பயனியர் ஊழியம் செய்திருக்கிற, பிரிட்டனிலுள்ள ஒரு சகோதரி இவ்வாறு சொல்கிறார்கள்: “ஆவிக்குரிய உணவுக்கு உள்ளார்ந்த ஆவலை வளர்க்கும்படி முழுநேர ஊழியம் எனக்கு உதவிசெய்திருக்கிறது.” “உங்களிலுள்ள நம்பிக்கைக்கான காரணத்தை” மற்றவர்களுக்கு விளக்கிச் சொல்வது, நீங்கள் அருமையாகக் கடைப்பிடிக்கிற நம்பிக்கைகளைக் குறித்த உங்கள் சொந்த உறுதியைப் பலப்படுத்தக்கூடும். (1 பேதுரு 3:15) ஆஸ்திரேலியாவிலுள்ள ஒரு பயனியர் சொல்கிறார்: “பயனியர் ஊழியம் செய்யும்போது நான் மற்றவர்களிடம் வெளிப்படையாக பேசுவது என் விசுவாசத்தைப் பெருகச்செய்கிறது.”
15. பயனியர் ஊழியத்தை ஏற்று அதில் நிலைத்திருப்பதற்கு என்ன செய்ய மனமுடையோராக பலர் இருந்திருக்கின்றனர், ஏன்?
15 தெளிவாகவே, யெகோவாவிடமிருந்து எண்ணற்ற ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிற வகையான ஒரு சேவையைத் தாங்கள் தெரிந்துகொண்டதாக இந்தப் பயனியர் ஊழியர்கள் உறுதியாய் நம்புகிறார்கள். பயனியர் ஊழியத்தை ஏற்று அதில் நிலைத்திருக்கும்படி, தங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களைச் செய்யவும், உலகப்பிரகாரமான ஒரு வேலையையும் பொருள் சம்பந்த செல்வங்களையும் விட்டுவிடவும்கூட, மனமுடையோராக பலர் இருந்திருப்பது அதிசயமாயில்லை!—நீதிமொழிகள் 28:20.
மேலும் அதிகம் செய்யும்படி உங்கள் இருதயம் ஆவல்கொள்ளுகிறதா?
16, 17. (அ) பயனியர் செய்வது உங்களுக்குச் முடியுமாவென நீங்கள் சிந்தித்துக்கொண்டிருந்தால், என்ன செய்யலாம்? (ஆ) பயனியர் செய்ய முடியாதிருக்கையில் சிலர் எவ்வாறு உணருகிறார்கள்?
16 பயனியர் ஊழியத்தின் ஆசீர்வாதங்களைப் பற்றி பயனியர்கள் சொல்பவற்றைக் கவனித்த பின்பு, பயனியர் செய்வது நடைமுறையில் உங்களுக்குச் சாத்தியமாக இருக்குமாவென நீங்கள் ஒருவேளை சிந்திக்கலாம். அப்படியானால், முழுநேர ஊழியத்தில் வெற்றிகண்டிருக்கும் ஒரு பயனியரிடம் பேசிப் பாருங்களேன்? மேலும், உங்களை நன்றாய் அறிந்திருக்கிற—உங்கள் உடல்நிலை, உங்கள் வரம்புகள், உங்கள் குடும்பப் பொறுப்புகள் ஆகியவற்றை நன்றாகத் தெரிந்திருக்கிற—சபையிலுள்ள மூப்பர்களில் ஒருவரிடம் பேசுவதும் உதவியாயிருப்பதாக நீங்கள் காணலாம். (நீதிமொழிகள் 15:22) மற்றவர்கள் சொல்லும் உண்மையான குறிப்புகள், பயனியர் செய்வது உங்களுக்குச் சாத்தியமா என்பதைக் கவனமாக மதிப்பிட உதவிசெய்யலாம். (லூக்கா 14:30-ஐ ஒப்பிடுக.) உங்களால் பயனியர் செய்ய முடிந்தால், நிச்சயமாகவே உங்களுக்கு மிகுதியான ஆசீர்வாதங்கள் உண்டாயிருக்கும்.—மல்கியா 3:10.
17 எனினும், ஊழியத்தில் அதிகம் செய்வதற்கு ஆவலாயிருக்கிறபோதிலும், பயனியர் செய்யும் நிலையில் இராத உண்மையுள்ள ராஜ்ய பிரஸ்தாபிகள் பலரைப் பற்றியதென்ன? உதாரணமாக, தனிமையில் தன் நான்கு பிள்ளைகளை வளர்ப்பதற்கு போராடிக்கொண்டிருக்கிற ஒரு கிறிஸ்தவ சகோதரியின் உணர்ச்சிகளைக் கவனியுங்கள். அவர்கள் சொல்லுகிறார்கள்: “எனக்கு வருத்தமாக இருக்கிறது, ஏனெனில், நான் ஒழுங்கான பயனியராக இருந்துவந்தேன். ஆனால் இப்போது, என் சூழ்நிலைமைகளின் காரணமாக, முன்பு செய்த அளவுக்கு வெளி ஊழியத்தில் செய்ய என்னால் முடிகிறதில்லை.” இந்தச் சகோதரி தன் பிள்ளைகளை அன்பாக நேசிக்கிறார்கள், அவர்களுக்குத் தேவைப்படுவதை அளிக்க விரும்புகிறார்கள். அதே சமயத்தில், பிரசங்க ஊழியத்தில் இன்னும் அதிகம் செய்ய ஆவலுள்ளவர்களாய் இருக்கிறார்கள். “ஊழியம் எனக்கு மிகவும் பிரியம்” என்று அவர்கள் விளக்குகிறார்கள். தேவபக்தியுள்ள மற்ற கிறிஸ்தவர்களும் இதைப்போன்ற உணர்ச்சிகளை உடையோராக இருக்கிறார்கள். கடவுள்மீது இவர்களுக்கு இருக்கும் அன்பு, ‘தங்கள் முழு இருதயத்தோடும்’ யெகோவாவைச் சேவிக்க விரும்பும்படி அவர்களைத் தூண்டியியக்குகிறது.—சங்கீதம் 86:12.
18. (அ) யெகோவா நம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்? (ஆ) நாம் செய்ய முடிகிறதை சூழ்நிலைமைகள் மட்டுப்படுத்துகிறபோது நாம் ஏன் மனச்சோர்வடையக் கூடாது?
18 யெகோவா நம்மிடம் எதிர்பார்ப்பது முழு ஆத்துமாவோடு செய்யும் சேவை என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். இதன் அளவு ஆத்துமாவுக்கு ஆத்துமா மிகவும் வேறுபடலாம். ஒழுங்கான பயனியர்களாக சேவிப்பதற்கு தங்கள் விவகாரங்களைத் தக்கவாறு அமைத்துக்கொள்ள சிலரால் முடிகிறது. மற்ற பலர் துணைப் பயனியர்களாக பெயர் பதிவுசெய்து, ஊழியத்தில் மாதந்தோறும் 60 மணிநேரம் செலவிடுபவர்களாய், அவ்வப்போது அல்லது தொடர்ச்சியாகவும்கூட சேவிக்கிறார்கள். எனினும், யெகோவாவின் ஜனங்களில் மிகப் பெரும்பான்மையர், சபை பிரஸ்தாபிகளாக பிரசங்க மற்றும் போதக ஊழியத்தில் முழு ஆத்துமாவோடு தங்களை உட்படுத்துகிறார்கள். ஆகையால், உடல்நலக் குறைவால், முதிர்வயதால், குடும்பப் பொறுப்புகளால், அல்லது மற்ற சூழ்நிலைமைகளால் மெய்யாகவே மட்டுப்படுத்தப்பட்டு இருந்தால் சோர்வடைந்துவிடாதீர்கள். உங்களது மிகச் சிறந்ததை நீங்கள் கொடுத்துவருகிற வரையில், முழுநேர ஊழியத்தில் இருக்கிறவர்களின் சேவை கடவுளுடைய பார்வையில் மதிப்புள்ளதாக இருக்கிறதுபோல் உங்கள் சேவையும் அவருடைய பார்வையில் மதிப்புள்ளதாக இருக்கிறது!
எல்லாரும் பயனியர் மனப்பான்மையைக் காட்டலாம்
19. பயனியர் மனப்பான்மை என்பது என்ன?
19 பயனியராக நீங்கள் பெயர் பதிவுசெய்ய முடியாமல் இருந்தாலும்கூட, பயனியர் மனப்பான்மையை நீங்கள் காட்டலாம். பயனியர் மனப்பான்மை என்பது என்ன? நம் ராஜ்ய ஊழியம், ஜூலை 1988-ன் (ஆங்கிலம்) இதழில் இவ்வாறு சொல்லப்பட்டது: “பிரசங்கிக்கும்படியும் சீஷராக்கும்படியுமான இந்தக் கட்டளையினிடமாக உடன்பாடான மனப்பான்மை உடையோராக இருப்பது, ஜனங்கள்பேரில் அன்பும் அக்கறையும் காட்டுவதற்கு முழுமையாக ஒப்படைத்திருப்பது, தன்னலத் தியாகம் செய்பவராய் எஜமானரை நெருங்க பின்பற்றுவதில் மகிழ்ச்சி கண்டடைவது, மற்றும், பொருள் சம்பந்தமானவற்றில் அல்ல, ஆவிக்குரிய காரியங்களில் மகிழ்வது, என்றவாறு அதற்கு விளக்கம் கூறலாம்.” இந்த பயனியர் மனப்பான்மையை நீங்கள் எவ்வாறு காட்டலாம்?
20. பெற்றோர்கள் எவ்வாறு பயனியர் மனப்பான்மையைக் காட்டலாம்?
20 இளம் பிள்ளைகளை உடைய பெற்றோராக நீங்கள் இருந்தால், பயனியர்களாக ஆகும்படி நீங்கள் முழு இருதயத்துடனும் அவர்களை ஊக்கப்படுத்தலாம். ஊழியத்தினிடமாக உங்கள் உடன்பாடான மனப்பான்மை, யெகோவாவின் சேவையை தங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான காரியமாக வைப்பதற்கான அவசியத்தை அவர்கள் மனதில் ஊன்ற செய்யலாம். முழுநேர ஊழியத்தில் மகிழ்ச்சியைக் கண்டடைந்திருக்கிறவர்களின் முன்மாதிரிகளிலிருந்து உங்கள் பிள்ளைகள் பயனடையும்படி, பயனியர்களையும், பயணக் கண்காணிகளையும் அவர்களுடைய மனைவிமாரையும் உங்கள் வீட்டுக்கு அழைக்கலாம். (எபிரெயர் 13:7-ஐ ஒப்பிடுக.) மதசம்பந்தமாய் பிரிவுற்றிருக்கும் வீடுகளிலும்கூட, தங்கள் பிள்ளைகள் முழுநேர ஊழியத்தை வாழ்க்கையின் ஓர் இலக்காக ஆக்கும்படி, விசுவாசிகளாயிருக்கும் பெற்றோர், சொல்லிலும் செயலிலும் முன்மாதிரியாக இருப்பதன்மூலம் அவர்களுக்கு உதவிசெய்யலாம்.—2 தீமோத்தேயு 1:5; 3:15.
21. (அ) பயனியர் செய்வோருக்கு நாம் எல்லாரும் எவ்வாறு ஆதரவு அளிக்கலாம்? (ஆ) பயனியர்களை ஊக்குவிப்பதற்கு மூப்பர்கள் என்ன செய்யலாம்?
21 சபையில், பயனியர் செய்ய முடிகிறவர்களாக இருப்போருக்கு நாம் எல்லாரும், முழு இருதயத்தோடுகூடிய ஆதரவு அளிக்கலாம். உதாரணமாக, ஊழியத்தில் ஒரு பயனியரோடு வேலை செய்வதற்காக நீங்கள் தனிப்பட்ட முயற்சி எடுக்க முடியுமா? முக்கியமாய், ஒரு பயனியர் தனியாக ஊழியம் செய்ய நேரிடுகிற சமயங்களில் அவ்வாறு செய்வீர்களா? அப்போது ஓர் ‘உற்சாக பரிமாற்றம்’ இருப்பதை நீங்கள் காண்பீர்கள். (ரோமர் 1:11, 12, NW) ஒரு மூப்பராக நீங்கள் இருந்தால், பயனியர்களை ஊக்குவிப்பதற்கு நீங்கள் இன்னும் அதிகம் செய்யலாம். மூப்பர் குழு ஒன்றுகூடுகையில், பயனியர்களின் தேவைகளைப் பற்றி அவர்கள் தவறாமல் கலந்தாலோசிக்கவேண்டும். ஒரு பயனியர் சோர்வடைகையில் அல்லது ஏதோ இக்கட்டுகளை அனுபவிக்கையில், அவர் அல்லது அவள் பயனியர் செய்வதை நிறுத்திவிடும்படி ஆலோசனை கூறுவதற்கு அவசரப்படாதீர்கள். சில சந்தர்ப்பங்களில் அத்தகைய ஆலோசனை கூறுவது அவசியமாக இருக்கலாம் என்றாலும், முழுநேர ஊழியர் உள்ளார்ந்து போற்றும் ஓர் அருமையான சிலாக்கியமாக பயனியர் ஊழியம் இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். சிறிது ஊக்கமூட்டுதலும், ஒருசில நடைமுறையான ஆலோசனைகளும் அல்லது உதவியும் மாத்திரமே தேவையாக இருக்கலாம். ஸ்பெய்னிலுள்ள, சங்கத்தின் கிளை அலுவலகத்தினர் இவ்வாறு எழுதுகின்றனர்: “பயனியர் செய்யும்படி மூப்பர்கள் ஊக்கப்படுத்தி, வெளி ஊழியத்தில் பயனியர்களை ஆதரித்து, தவறாமல் அவர்களுக்கு மேய்ப்பு உதவி கொடுக்கப்படுகையில், பயனியர்களுக்கு மேலுமதிக மகிழ்ச்சி உண்டாகி, பயனுள்ளவர்களாக உணர்ந்து, எழும்பக்கூடிய இடையூறுகளின் மத்தியிலும் விடாமல் தொடர விரும்புகின்றனர்.”
22. மனித சரித்திரத்தின் இந்த நெருக்கடியான காலப் பகுதியில், நாம் என்ன செய்ய திடத்தீர்மானத்துடன் இருக்க வேண்டும்?
22 மனித சரித்திரத்தின் நெருக்கடியான காலப் பகுதியில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஜீவனைக் காக்கும் ஒரு வேலையை நிறைவேற்றும்படி, யெகோவா நமக்கு அதைக் கொடுத்திருக்கிறார். (ரோமர் 10:13, 14) இந்த வேலையில், பயனியர்களாக முழுநேரம் நாம் பங்குகொள்ள முடிந்தாலும் முடியாவிடினும், பயனியர் மனப்பான்மையை நாம் காட்டுவோமாக. அவசர உணர்வையும் சுயதியாக மனப்பான்மையையும் உடையோராக இருப்போமாக. யெகோவா நம்மிடம் கேட்பதை—முழு ஆத்துமாவோடு செய்யும் சேவையை—அவருக்கு கொடுக்கும்படி திடத்தீர்மானத்துடன் இருப்போமாக. நம்மால் முடிகிற எல்லாவற்றையும் நாம் கொடுக்கையில், அது, அந்த விதவையின் சிறிய காசுகளுக்கோ அல்லது மரியாளின் விலையேறப்பெற்ற தைலத்திற்கோ, எதற்கு ஒப்பாயிருந்தாலும், நம்முடைய சேவை முழு ஆத்துமாவோடு செய்யப்பட்டதாக இருக்கிறது மேலும் இப்படிப்பட்ட நம் சேவையை யெகோவா போற்றுகிறார் என்பதை நாம் நினைவில் வைப்போமாக!
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ முழுநேர ஊழியம் ஏன் மனதிருப்தியும் மகிழ்ச்சியும் உள்ள உணர்ச்சிகளை ஏற்படுத்துகிறது?
◻ தம்முடைய ஊழியரைப் பராமரிப்பதற்கான யெகோவாவின் ஆற்றலைப் பற்றி, தங்கள் அனுபவத்திலிருந்து பயனியர்கள் பலர் என்ன அறிந்திருக்கிறார்கள்?
◻ யெகோவாவுடன் உள்ள தங்கள் உறவின்பேரில், தங்கள் ஊழியம் என்ன பாதிப்பை உடையதாயிருப்பதாக பயனியர்கள் உணருகிறார்கள்?
◻ பயனியர் மனப்பான்மையை நீங்கள் எவ்வாறு காட்டலாம்?
[பக்கம் 23-ன் படங்கள்]
சீஷராக்கும் ஊழியத்தில் பயனியர்கள் மிகுந்த மகிழ்ச்சியைக் கண்டடைகிறார்கள்
[பக்கம் 23-ன் படங்கள்]
முழுநேர ராஜ்ய அறிவிப்பாளர்களுடனான கூட்டுறவிலிருந்து உங்கள் பிள்ளைகள் பயனடையலாம்
[பக்கம் 23-ன் படங்கள்]
வெளி ஊழியத்தில் பயனியர்களை மூப்பர்கள் ஊக்கப்படுத்தலாம்