‘யெகோவாவின் நாளில்’ தப்பிப்பிழைப்பவர் யார்?
“யெகோவாவின் நாளின் வந்திருத்தலை மனதில் இடைவிடாமல் வைத்து காத்திருப்பவர்களாய், பரிசுத்த நடத்தைக்குரிய செயல்களிலும், தேவபக்திக்குரிய செயல்களிலும் நீங்கள் எத்தகைய ஆட்களாய் இருக்க வேண்டும்!”—2 பேதுரு 3:11, 12, NW.
1. எலியாவைப் போல் வைராக்கியத்துடனும் பலத்துடனும் யார் வேலை செய்திருக்கிறார்கள்?
பரலோக ராஜ்யத்தில் தம் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடு உடன்சுதந்தரவாளிகளாக இருக்கப்போகிற நபர்களை மனிதவர்க்கத்திலிருந்து யெகோவா தேவன் தெரிந்தெடுத்திருக்கிறார். (ரோமர் 8:16, 17) பூமியில் அவர்கள் இன்னும் இருக்கையில், அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் எலியாவைப் போல் வைராக்கியத்துடனும் பலத்துடனும் வேலை செய்திருக்கிறார்கள். (லூக்கா 1:17) அவர்களுடைய நடவடிக்கைகளுக்கும் தீர்க்கதரிசியாகிய எலியாவினுடைய நடவடிக்கைகளுக்கும் உள்ள சில இசைவுப்பொருத்தங்களை முந்தின கட்டுரையில் நாம் கவனித்தோம். ஆனால் எலியாவைப் பின்தொடர்ந்து பொறுப்பேற்ற தீர்க்கதரிசியாகிய எலிசாவின் வேலையைப் பற்றியதென்ன?—1 இராஜாக்கள் 19:15, 16.
2. (அ) எலியா நடப்பித்த கடைசி அற்புதம் என்ன, எலிசாவின் முதல் அற்புதம் எது? (ஆ) எலியா பரலோகத்திற்குச் செல்லவில்லை என்பதற்கு என்ன நிரூபணம் உள்ளது?
2 எலியா, தன் அதிகார பொறுப்புக்குரிய சால்வையைக்கொண்டு யோர்தான் நதியின் தண்ணீர்களை அடித்து அவற்றைப் பிரியச் செய்ததே அவர் நடப்பித்த கடைசி அற்புதமாக இருந்தது. இது, எலியாவும் எலிசாவும் வறண்ட தரையில் அதைக் கடந்து செல்வதற்கு வழிதிறந்தது. அந்த நதியின் கிழக்கு புறத்தில் அவர்கள் நடந்து செல்கையில், ஒரு சுழல்காற்று எலியாவை பூமியிலுள்ள மற்றொரு இடத்திற்கு கொண்டுசென்றுவிட்டது. (“எந்தப் பரலோகங்களுக்கு எலியா ஏறிப்போனார்?” என்ற தலைப்பையுடைய, 15-ம் பக்கத்திலுள்ள பெட்டியைக் காண்க.) எலியா தன் அதிகார பொறுப்புக்குரிய சால்வையை விட்டுச்சென்றார். யோர்தான் நதியை அடிப்பதற்கு எலிசா அதைப் பயன்படுத்தினபோது, அதன் தண்ணீர்கள் மறுபடியுமாகப் பிரிந்து, வறண்ட தரையில் திரும்பிவர அவருக்கு வழிதிறந்தது. இஸ்ரவேலில் உண்மை வணக்கத்தை முன்னேற்றுவிப்பதில், எலியாவுக்குப் பின் அவரது பொறுப்பை எலிசா ஏற்றார் என்பதை இந்த அற்புதம் தெளிவாக்கிற்று.—2 இராஜாக்கள் 2:6-15.
தேவபக்தியுள்ள பண்புகள் இன்றியமையாதவை
3. இயேசுவின் வந்திருத்தலையும் யெகோவாவின் நாளையும் பற்றி பவுலும் பேதுருவும் என்ன சொன்னார்கள்?
3 எலியாவும் எலிசாவும் இருந்த நாட்களுக்குப் பல நூற்றாண்டுகள் சென்ற பிறகு, அப்போஸ்தலர் பவுலும் பேதுருவும், வரவிருக்கும் ஒரு ‘யெகோவாவின் நாளை’ இயேசு கிறிஸ்துவின் வந்திருத்தலுடனும் அதற்குப்பின் எதிர்காலத்திலுள்ள ‘புதிய வானங்களுடனும் புதிய பூமியுடனும்” தொடர்புபடுத்தினார்கள். (2 தெசலோனிக்கேயர் 2:1, 2, NW; 2 பேதுரு 3:10-13) யெகோவாவின் மகா நாளில்—கடவுள் தம்முடைய சத்துருக்களை அழித்து தம்முடைய ஜனங்களைக் காப்பாற்றுகிறபோது—தப்பிப்பிழைத்திருப்பதற்கு, நாம் யெகோவாவைத் தேட வேண்டும், மனத்தாழ்மையையும் நீதியையும் காட்ட வேண்டும். (செப்பனியா 2:1-3) தீர்க்கதரிசியாகிய எலிசா உட்பட்ட சம்பவங்களை நாம் கவனிக்கையில், கூடுதலான சில பண்புகள் தெளிவாகின்றன.
4. யெகோவாவின் சேவையில் வைராக்கியம் என்ன பாகத்தை வகிக்கிறது?
4 ‘யெகோவாவின் நாளில்’ நாம் தப்பிப்பிழைக்க வேண்டுமானால் கடவுளுடைய சேவை செய்வதற்கான வைராக்கியம் முக்கியமானது. எலியாவும் எலிசாவும் யெகோவாவின் சேவையில் வைராக்கியமுள்ளவர்களாக இருந்தார்கள். இன்று, அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களாகிய மீதிபேர், அதைப்போல் வைராக்கியத்துடன், யெகோவாவுக்குப் பரிசுத்த சேவை செய்து, முன்நின்று நற்செய்தியைப் பிரசங்கிக்கிறார்கள்.a 1930-களின் மத்திபத்திலிருந்து, ராஜ்ய செய்தியை ஏற்று, பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கையுடைய எல்லாரையும், தங்களை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்கவும் முழுக்காட்டப்படவும் அவர்கள் ஊக்குவித்து வந்திருக்கிறார்கள். (மாற்கு 8:34; 1 பேதுரு 3:21) இந்த ஊக்கமூட்டுதலுக்கு லட்சக்கணக்கானோர் சாதகமாகப் பிரதிபலிக்கின்றனர். ஒரு காலத்தில் அவர்கள் ஆவிக்குரிய இருளிலும் பாவத்தில் செத்தவர்களாகவும் இருந்தார்கள், ஆனால் இப்போது அவர்கள், கடவுளுடைய சத்தியத்தைக் கற்றறிந்து, பூமிக்குரிய பரதீஸில் நித்திய ஜீவனின் நம்பிக்கையை ஏற்று, யெகோவாவின் சேவையில் வைராக்கியத்துடன் இருக்கின்றனர். (சங்கீதம் 37:29; வெளிப்படுத்துதல் 21:3-5) இன்னும் பூமியில் இருந்துகொண்டிருக்கிற கிறிஸ்துவின் ஆவிக்குரிய சகோதரர்களுக்கு, தங்கள் வைராக்கியத்தாலும் ஒத்துழைப்பாலும் உபசரணையாலும் இன்னும் மற்ற நற்கிரியைகளாலும் மிகுந்த இளைப்பாறுதலை அவர்கள் கொண்டுவருகிறார்கள்.—மத்தேயு 25:31-46.
5. இயேசுவின் ‘சகோதரர்களுக்கு’ நல்ல காரியங்களைச் செய்வது ஏன் அவ்வளவு முக்கியமாக உள்ளது, எலிசாவின் நாளில் காட்டப்பட்ட என்ன முன்மாதிரி நமக்கு உள்ளது?
5 இயேசுவின் ‘சகோதரரான’ இந்த அபிஷேகஞ்செய்யப்பட்டவர்கள் அவரைப் பின்பற்றுவோராக இருப்பதால், அவர்களுக்கு நல்ல காரியங்களைச் செய்கிறவர்கள், ‘யெகோவாவின் நாளை’ தப்பிப் பிழைத்திருக்கும் நம்பிக்கையுடையோராக இருக்கிறார்கள். சூனேம் கிராமத்தில் இருந்த மணமாகிய தம்பதி, எலிசாவுக்கும் அவருடைய வேலைக்காரனுக்கும் தயவும் உபசரணையும் காட்டினதற்காக மிகுதியாய் ஆசீர்வதிக்கப்பட்டனர். இந்தத் தம்பதிக்குப் பிள்ளை இருக்கவில்லை, கணவரும் வயதுமுதிர்ந்தவராக இருந்தார். ஆனால், அந்த சூனேமிய பெண் ஒரு குமாரனைப் பெறுவாள் என்று எலிசா அவளுக்கு வாக்கு கொடுத்தார், அவ்வாறே நடந்தது. சில ஆண்டுகளுக்குப் பின் இந்த ஒரே குமாரன் இறந்துவிட்டபோது, எலிசா சூனேமுக்குச் சென்று அவனை உயிர்த்தெழுப்பினார். (2 இராஜாக்கள் 4:8-17, 32-37) எலிசாவுக்கு உபசரணை காண்பித்ததற்காக எத்தகைய மேம்பட்ட பலன்கள்!
6, 7. நாகமான் என்ன முன்மாதிரியை வைத்தார், ‘யெகோவாவின் நாளில்’ தப்பிப்பிழைத்திருப்பதற்கு என்ன தேவைப்படுவதாக இது காட்டுகிறது?
6 யெகோவாவின் நாளில் தப்பிப்பிழைக்கும் நம்பிக்கையுடன், கிறிஸ்துவின் “சகோதரரிடமிருந்துவரும்” பைபிள் ஆதாரங்கொண்ட வழிநடத்துதலை ஏற்பதற்கு மனத்தாழ்மை தேவைப்படுகிறது. சீரியரின் படைத்தலைவரான, குஷ்டரோகியாக இருந்த நாகமான், சிறைபிடிக்கப்பட்ட ஒரு இஸ்ரவேல சிறுமியின் ஆலோசனையைப் பின்பற்றி, சுகப்படுத்துதலை நாடி, எலிசாவைத் தேடி இஸ்ரவேலுக்கு செல்லும் அளவுக்கு மனத்தாழ்மை காட்ட வேண்டியிருந்தது. நாகமானைச் சந்திக்க தன் வீட்டிலிருந்து வெளியே வருவதற்குப் பதிலாக, எலியா இந்தச் செய்தியை அவருக்கு அனுப்பினார்: “நீ போய், யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம்பண்ணு; அப்பொழுது உன் மாம்சம் மாறி, நீ சுத்தமாவாய்.” (2 இராஜாக்கள் 5:10) தன் சுய கெளரவத்திற்கு இழுக்கு நேர்ந்ததாக எண்ணிய நாகமான் கோபமடைந்தார். எனினும், பின்பு மனத்தாழ்மையுடன் சென்று யோர்தான் நதிக்குள் ஏழுதரம் முழுகின பின்பு, ‘அவரது மாம்சம் ஒரு சிறுபிள்ளையின் மாம்சத்தைப்போல மாறி, அவர் சுத்தமானார்.” (2 இராஜாக்கள் 5:14) வீட்டுக்குத் திரும்புவதற்கு முன்பாக, யெகோவாவின் தீர்க்கதரிசிக்கு நன்றி தெரிவிப்பதற்காக, நாகமான் சமாரியா வரை பயணப்பட்டு திரும்பிவந்தார். கடவுள் அளித்த வல்லமைகளைக் கொண்டு பொருளாதார லாபத்தைப் பெறக்கூடாது என தீர்மானித்தவராய், நாகமானைச் சந்திக்க எலிசா வெளியில் வந்தார், ஆனால் எந்தப் பரிசையும் ஏற்க மறுத்துவிட்டார். நாகமான் மனத்தாழ்மையுடன் எலிசாவிடம்: “அடியேன் இனி யெகோவாவுக்கேயன்றி அந்நிய தெய்வங்களுக்குத் தகனத்தையும் பலியையும் செலுத்துவதில்லை” என்று சொன்னார்.—2 இராஜாக்கள் 5:17, தி.மொ.
7 அபிஷேகஞ்செய்யப்பட்டவர்களின் வேதப்பூர்வ அறிவுரையை மனத்தாழ்மையுடன் பின்பற்றுவதன்மூலம், இன்று லட்சக்கணக்கானோர் மிகுதியாய் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் இயேசுவின் மீட்பின் கிரய பலியில் விசுவாசம் காட்டுவதன்மூலம் நேர்மை இருதயமுள்ள இவர்கள், ஆவிக்குரிய பிரகாரம் சுத்தமாக்கப்பட்டுள்ளனர். யெகோவா தேவனுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் நண்பர்களாக இருப்பதன் சிலாக்கியத்தை அவர்கள் இப்போது அனுபவித்து மகிழ்கிறார்கள். (சங்கீதம் 15:1, 2; லூக்கா 16:9) மேலும், கடவுளுடைய சேவையில் தங்களை தொடர்ந்து ஊக்கமாக ஈடுபடுத்துவதன் மூலம், வேகமாக நெருங்கி வந்துகொண்டிருக்கும் “யெகோவாவின் நாளில்,” அகந்தையுடன் மனந்திரும்பாமல் இருக்கும் பாவிகளுக்கு நேரிடவிருக்கிற நித்திய அழிவிலிருந்து பாதுகாக்கப்படுவதன் மூலம் கடவுளுக்கான அவர்களுடைய பக்திக்கும் சேவைக்கும் பலனளிக்கப்படும்.—லூக்கா 13:24; 1 யோவான் 1:7.
“என் பட்சத்தில் இருக்கிறது யார்? யார்?”
8. (அ) ‘யெகோவாவின் நாளில்’ தப்பிப்பிழைக்கப் போகிறவர்கள், கடவுளுடைய சித்தத்தைச் செய்வதைத் குறித்ததில் என்ன மனப்பான்மையை உடையோராக இருக்கிறார்கள்? (ஆ) யெகூவுக்கு என்ன பொறுப்பு அளிக்கப்பட்டது? (இ) யேசபேலுக்கு என்ன நடக்கவிருந்தது?
8 ‘யெகோவாவின் நாளில்’ தப்பிப்பிழைக்கும் நம்பிக்கையுடையவர்கள், கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் திடத் தீர்மானமுடையவர்களாயும் இருக்க வேண்டும். அரசனாகிய ஆகாபின் கொலைபாதக, பாகால் வணக்கக் குடும்பத்தினருக்கு வரவிருந்த அழிவை எலியா தைரியமாக முன்னறிவித்தார். (1 இராஜாக்கள் 21:17-26) எனினும், இந்த மரண ஆக்கினை நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக, எலியாவுக்குப் பின் வந்த எலிசா, இன்னும் செய்து முடிக்கப்பட்டிராத ஒரு வேலையைச் செய்துமுடிக்க வேண்டியிருந்தது. (1 இராஜாக்கள் 19:15-17) யெகோவாவின் குறிக்கப்பட்ட காலம் வந்தபோது, போய் படைத் தலைவராகிய யெகூவை இஸ்ரவேலின் புதிய அரசனாக அபிஷேகஞ்செய்யும்படி எலிசா ஒரு ஊழியக்காரனுக்கு கட்டளையிட்டார். யெகூவின் தலையில் எண்ணெய் ஊற்றின பின்பு, அந்தச் செய்தி அறிவிப்பவன் அவரிடம் இவ்வாறு கூறினான்: “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்லுகிறதைக் கேள், உன்னை யெகோவாவின் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினேன். நான் என் ஊழியராகிய தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழியையும் யெகோவாவின் சகல ஊழியரின் இரத்தப்பழியையும் யேசபேலின் கையிலே வாங்கும்படி நீ உன் ஆண்டவனாகிய ஆகாபின் குடும்பத்தை அழித்துவிடவேண்டும். ஆகாபின் குடும்பமெல்லாம் அழியும்படி . . . சங்கரிப்பேன்.” பொல்லாத அரசியாகிய யேசபேல் நாய்களுக்கு எறியப்படுவாள், மதிப்பான அடக்கம் செய்யப்படமாட்டாள்.—2 இராஜாக்கள் 9:1-10, தி.மொ.
9, 10. யேசபேலின் காரியத்தில் எலியாவின் வார்த்தை எவ்வாறு நிறைவேறியது?
9 யெகூ அபிஷேகஞ்செய்யப்பட்டதன் மதிப்பை அவருடைய ஆட்கள் உணர்ந்து, அவரை இஸ்ரவேலின் புதிய அரசனென அறிவித்து ஆர்ப்பரித்தார்கள். திடத்தீர்மானத்துடன் செயல்படுகிறவராய், யெகூ, விசுவாசத்துரோகக் கலகக்காரராகிய பாகால் வணக்கத் தலைவர்களைக் கொல்லும் தன் வேலையைத் தொடங்குவதற்கு யெஸ்ரயேலை நோக்கி தீவிரமாய்ச் சென்றார். யெகூவின் கொல்லும் அம்பிற்கு முதலாவதாக பலியானவர் ஆகாபின் குமாரனாகிய அரசன் யோராமே. யெகூ சமாதான காரியத்தின்பேரில் வந்திருந்தாரா என்று கேட்கும்படி அவன் நகரத்துக்கு வெளியே அவரை எதிர்கொண்டு சவாரிசெய்து வந்தான். “உன் தாயாகிய யேசபேலின் வேசித்தனங்களும் அவளுடைய பில்லிசூனியங்களும், இத்தனை ஏராளமாயிருக்கையில் சமாதானம் ஏது”? என்று யெகூ பதிலளித்தார். அதோடு, யெகூவின் அம்பு யோராமின் இருதயத்தை ஊடுருவிப் பாய்ந்தது.—2 இராஜாக்கள் 9:22-24.
10 தேவபக்தியுள்ள பெண்கள் யேசபேலைப்போல் அல்லது அவள் வகையினரான எவரையும்போல் இருப்பதைத் தவிர்ப்பர். (வெளிப்படுத்துதல் 2:18-23) யெகூ யெஸ்ரயேலுக்குப் போய்ச் சேருவதற்குள், அவள் தன்னைக் கவர்ச்சிகரமாக தோற்றமளிக்க முயன்றாள். ஒரு ஜன்னல் வழியாய்க் கீழே எட்டிப் பார்த்து, மறைமுகமாய் பயமுறுத்தும் விதத்தில் அவரை வாழ்த்தினாள். யெகூ அவளுடைய வேலைக்காரரை நோக்கி: “என் பட்சத்தில் இருக்கிறது யார்? யார்?” என்று கேட்டார். உடனடியாக, இரண்டு அல்லது மூன்று பிரதானிகள் கீழே எட்டிப் பார்த்தார்கள். அவர்கள் யெகூவின் சார்பில் இருந்தார்களா? “அவளைக் கீழே தள்ளுங்கள்” என்று அவர் துரிதப்படுத்தினார். அதன்பேரில், அவர்கள் தீர்மானமாய்ச் செயல்பட்டு, பொல்லாத யேசபேலை ஜன்னலுக்கு வெளியே தூக்கி எறிந்தார்கள். அவள் மிதிக்கப்பட்டாள், குதிரைகளின் குளம்புகளின்கீழ் மிதிக்கப்பட்டிருக்கலாம். அவளை அடக்கம் செய்வதற்கு ஆட்கள் வந்தபோது, “அவளுடைய தலையோட்டையும் கால்களையும் உள்ளங்கைகளையுமே அல்லாமல் வேறொன்றையும் காணவில்லை.” “நாய்கள் யேசபேலின் மாம்சத்தைத் தின்னும்” என்ற எலியாவின் வார்த்தையினுடைய எத்தகைய தத்ரூபமான ஒரு நிறைவேற்றம்!—2 இராஜாக்கள் 9:30-37.
உண்மை வணக்கத்திற்கு இருதயப்பூர்வமான ஆதரவு
11. யோனதாப் யார்? உண்மையான வணக்கத்தின் சார்பாக தன் ஆதரவை அவர் எவ்வாறு காட்டினார்?
11 ‘யெகோவாவின் நாளில்’ அழியாமல் பிழைத்திருந்து, பூமியில் என்றென்றுமாக வாழும் நம்பிக்கையைக் கொண்டிருப்போர், உண்மை வணக்கத்தை முழு இருதயத்துடன் ஆதரிக்க வேண்டும். இஸ்ரவேலன் அல்லாதவராக, யெகோவாவை வணங்கினவரான யோனதாபைப்போல் அவர்கள் இருக்க வேண்டும். யெகூ, தனக்கு அளிக்கப்பட்ட வேலையை வைராக்கியத்துடன் தொடர்ந்து நிறைவேற்றி வந்தபோது, யோனதாப் தன்னுடைய சம்மதத்தையும் ஆதரவையும் காட்ட விரும்பினார். ஆகையால், ஆகாபின் குடும்பத்தாரில் மீந்திருப்போரின்பேரில் மரண ஆக்கினையை நிறைவேற்றும்படி இஸ்ரவேலின் புதிய அரசன் சமாரியாவுக்குப் போய்க்கொண்டிருந்தபோது, யோனதாப் அவரைச் சந்திக்கச் சென்றார். யோனதாபைக் கண்டபோது யெகூ இவ்வாறு கேட்டார்: “என் இருதயம் உன் இருதயத்தோடே செம்மையாய் இருக்கிறதுபோல உன் இருதயமும் செம்மையாயிருக்கிறதா”? யோனதாபின் உடன்பாடான பதில், யெகூ தன் கையை நீட்டி, போர் இரதத்திற்குள் ஏறிக்கொள்ளும்படி அவரை அழைத்து: “நீ என்னோடே கூடவந்து கர்த்தருக்காக [“யெகோவாவுக்காக,” NW] எனக்கு இருக்கிற பக்திவைராக்கியத்தைப் பார்” என்று அழைக்கும்படி செய்வித்தது. தண்டனையை நிறைவேற்றும்படி யெகோவா நியமித்தவருக்குத் தன் ஆதரவைக் காட்டும் இந்தச் சிலாக்கியத்தை யோனதாப் தாமதமில்லாமல் ஏற்றார்.—2 இராஜாக்கள் 10:15-17.
12. யெகோவா ஏன் நியாயமாகவே தனிப்பட்ட பக்தியைக் கேட்கிறார்?
12 உண்மையான வணக்கத்திற்கு இருதயப்பூர்வமான ஆதரவு நிச்சயமாகவே பொருத்தமானது. ஏனெனில் யெகோவா, சிருஷ்டிகரும் சர்வலோகப் பேரரசருமாக, நம்முடைய தனிப்பட்ட பக்தியை நியாயமாகவே வற்புறுத்துகிறார், அதற்குத் தகுந்தவராகவும் இருக்கிறார். இஸ்ரவேலருக்கு அவர் இவ்வாறு கட்டளையிட்டார்: “மேலே வானத்திலும் கீழே பூமியிலும் பூமியின் கீழ் தண்ணீரிலும் உள்ளவைகளுக்கு ஒப்பான எந்தச் சொரூபத்தையும் செய்துகொள்ள வேண்டாம். நீ அவைகளை வணங்கவும் சேவிக்கவும் வேண்டாம். உன் கடவுளாகிய யெகோவா என்கிற நான் எரிச்சலுள்ள [“தனிப்பட்ட பக்தியை வற்புறுத்துகிற,” NW] கடவுள்.” (யாத்திராகமம் 20:4, 5, தி.மொ.) ‘யெகோவாவின் நாளை’ தப்பிப் பிழைத்திருக்கும்படியான நம்பிக்கை உடையவர்கள், அவரை மாத்திரமே வணங்க வேண்டும், “ஆவியோடும் உண்மையோடும்” அவ்வாறு செய்ய வேண்டும். (யோவான் 4:23, 24) எலியாவையும், எலிசாவையும் யோனதாபையும் போல் உண்மையான வணக்கத்தின் சார்பாக அவர்கள் திடமாய் நிலைநிற்க வேண்டும்.
13. யோனதாபின் இருதயம் யெகூவின் இருதயத்தோடு இசைந்திருந்ததுபோல, மேசியானிய அரசரை யார் ஏற்கிறார்கள், இதை அவர்கள் எவ்வாறு காண்பிக்கிறார்கள்?
13 ஆகாபின் குடும்பத்தின்மீது மரண ஆக்கினையை நிறைவேற்றின பின்பு, பாகால் வணக்கத்தாரை அடையாளங்கண்டு இந்தப் பொய்மதத்தை இஸ்ரவேலிலிருந்து அடியோடு ஒழித்துப்போடுவதற்கு, அரசன் யெகூ மற்ற படிகளை மேற்கொண்டார். (2 இராஜாக்கள் 10:18-28) இன்று, யெகோவாவின் சத்துருக்களின்மீது மரணதண்டனையை நிறைவேற்றி, அவருடைய அரசதிகாரத்தை நியாயநிரூபணம் செய்வதற்கு, பரலோக அரசராகிய இயேசு கிறிஸ்து நியமிக்கப்பட்டிருக்கிறார். யோனதாபின் இருதயம் யெகூவின் இருதயத்தோடு இசைந்திருந்ததுபோல், இயேசுவின் ‘மற்ற செம்மறியாடுகளான’ இந்தத் ‘திரள் கூட்டத்தார்,’ இன்று கிறிஸ்துவை மேசியானிய அரசராக முழு இருதயத்தோடு ஏற்று, பூமியிலுள்ள அவருடைய ஆவிக்குரிய சகோதரருடன் ஒத்திசைந்து உழைக்கின்றனர். (வெளிப்படுத்துதல் 7:9, 10; யோவான் 10:16, NW) உண்மையான மதத்தை நடைமுறையில் கடைப்பிடித்து, கிறிஸ்தவ ஊழியத்தில் வைராக்கியத்தோடு பங்குகொண்டு, வேகமாக நெருங்கிவரும் ‘யெகோவாவின் நாளைக்’ குறித்து கடவுளுடைய சத்துருக்களை எச்சரித்துவருவதன் மூலம் அவர்கள் இதற்கு அத்தாட்சி அளிக்கின்றனர்.—மத்தேயு 10:32, 33; ரோமர் 10:9, 10.
சமீப எதிர்காலத்தில்தானே சிலிர்ப்பூட்டும் சம்பவங்கள் நடைபெறும்!
14. எதிர்காலத்தில் பொய் மதத்திற்கு என்ன நடக்கவிருக்கிறது?
14 இஸ்ரவேலில் பாகால் வணக்கத்தை ஒழிப்பதற்கு யெகூ நடவடிக்கை எடுத்தார். நம்முடைய நாளில், பெரிய யெகூவாகிய கிறிஸ்து இயேசுவின்மூலமாய், கடவுள், இந்தப் பொய்மத உலகப் பேரரசாகிய மகா பாபிலோனுக்கு அழிவைக் கொண்டுவருவார். அப்போஸ்தலனாகிய யோவானுக்கு தூதன் பின்வருமாறு சொன்ன வார்த்தைகளின் நிறைவேற்றத்தை நாம் சீக்கிரத்தில் காண்போம்: “நீ மிருகத்தின்மேல் கண்ட பத்துக் கொம்புகளானவர்கள் [“பத்துக் கொம்புகளும், அந்த மூர்க்க மிருகமும்,” NW] அந்த வேசியைப் [மகா பாபிலோனை] பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடுவார்கள். தேவன் தம்முடைய வார்த்தைகள் நிறைவேறுமளவும், அவர்கள் தமது யோசனையை நிறைவேற்றுகிறதற்கும், ஒரே யோசனையுள்ளவர்களாயிருந்து, தங்கள் ராஜ்யத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கும் அவர்களுடைய இருதயங்களை ஏவினார்.” (வெளிப்படுத்துதல் 17:16, 17; 18:2-5) அந்தப் ‘பத்துக் கொம்புகள்’, பூமியில் ஆளுகை செய்யும் போர் படைகளைக் கொண்ட அரசியல் வல்லரசுகளை அடையாளமாகக் குறிக்கின்றன. அவை இப்போது, மகா பாபிலோனுடன் ஆவிக்குரிய வேசித்தன உறவுகொண்டு இருக்கிறபோதிலும், அவளுடைய காலம் குறுகிவிட்டது. இந்த உலகத்தின் அரசியல் பொய்மதத்தை அழிக்கும், அவளை அழிப்பதில் ‘மூர்க்க மிருகம்’—ஐக்கிய நாட்டு அமைப்பு—அந்தப் ‘பத்துக் கொம்புகளுடன்’ முதன்மையான பாகத்தை வகிக்கும்.b யெகோவாவைத் துதிப்பதற்கு எத்தகைய ஒரு சிறந்த தறுவாய்!—வெளிப்படுத்துதல் 19:1-6, NW.
15. கடவுளுடைய பூமிக்குரிய அமைப்பை அழிப்பதற்கு முயற்சி செய்கையில் என்ன நடக்கும்?
15 பாகால் வணக்கத்திற்கு எதிராக அரசன் யெகூவின் கடுந்தாக்கலுக்குப் பின்பு, அவருடைய அரசக் குடும்பம், இஸ்ரவேலின் அரசியல் பகைவர்களின்பேரில் கவனத்தைத் திருப்பினது. அரசராகிய இயேசு கிறிஸ்து அதைப் போன்ற நடவடிக்கை எடுப்பார். பாகால் வணக்கத்தைப் போன்ற பொய்மதத்தின் அழிவுக்குப் பின், அரசியல் வல்லரசுகள் மீந்திருக்கும். யெகோவாவின் அரசாட்சிக்குப் பகைவரான இவர்கள், கடவுளுடைய பூமிக்குரிய அமைப்பை அழிப்பதற்கு முயன்று, பிசாசான சாத்தானுடைய செல்வாக்கின்கீழ் முழு தீவிரத் தாக்கல் செய்வார்கள். (எசேக்கியேல் 38:14-16) ஆனால், ‘சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளாகிய’ அர்மகெதோனில், அரசராகிய இயேசு கிறிஸ்து அவர்களை அழித்து ஒழித்து, யெகோவாவினுடைய அரசதிகாரத்தின் நியாயநிரூபணத்தை பூர்த்தி செய்யும்படி யெகோவா செய்வார்.—வெளிப்படுத்துதல் 16:14, 16; 19:11-21; எசேக்கியேல் 38:18-23.
எலிசாவைப் போல் வைராக்கியத்துடன் சேவித்தல்
16, 17. (அ) எலிசா தன் வாழ்க்கையின் முடிவு வரையில் வைராக்கியமுள்ளவராக இருந்தார் என்று நாம் எப்படி அறிகிறோம்? (ஆ) சத்தியத்தின் அம்புகளைக் கொண்டு நாம் என்ன செய்ய வேண்டும்?
16 சாத்தானின் பொல்லாதக் காரிய ஒழுங்குமுறை முழுவதையும் “யெகோவாவின் நாள்” முடிவுக்குக் கொண்டுவரும் வரையில், கடவுளுடைய ஊழியர்கள், எலிசாவைப்போல் தைரியத்துடனும் வைராக்கியத்துடனும் இருப்பார்கள். எலியாவின் ஊழியக்காரனாக அவர் வேலை செய்தது மட்டுமல்லாமல், தனியாகவும்கூட யெகோவாவின் தீர்க்கதரிசியாக 50-க்கு மேற்பட்ட ஆண்டுகள் சேவித்தார்! தன்னுடைய நெடுங்கால வாழ்க்கையின் முடிவு வரையில் எலிசா வைராக்கியமுள்ளவராக இருந்தார். அவருடைய மரணத்திற்குச் சற்று முன்பு, யெகூவின் பேரனான அரசன் யோவாஸ் அவரைப் பார்க்க வந்தார். ஜன்னலுக்கு வெளியே ஓர் அம்பு எய்யும்படி எலிசா அவரிடம் சொன்னார். அந்த அம்பு அதன் குறிக்கு விரைந்து பாய்ந்தது, எலிசா இவ்வாறு சொன்னார்: “இது யெகோவாவின் வெற்றியம்பும் சீரியரை மேற்கொள்ளும் வெற்றியம்புமாம். நீர் சீரியரை அபேக்கிலே தீர முறியடிப்பீர்.” எலிசா கேட்டுக்கொண்டதன்பேரில், அடுத்தப்படியாக யோவாஸ் தன் அம்புகளைக் கொண்டு தரையை அடித்தார். ஆனால் இதை அவர் வைராக்கியமில்லாமல் செய்து, மூன்று தடவைகள் மாத்திரமே அடித்தார். அதன் விளைவாக, சீரியாவின்மீது மூன்று வெற்றிகள் மாத்திரமே யோவாஸுக்கு அளிக்கப்படும் என்று எலிசா அப்போது சொன்னார். அதுவே நடந்தது. (2 இராஜாக்கள் 13:14-19, 25, தி.மொ.) அரசன் யோவாஸ், சீரியரை முழுமையாக, ‘தீர முறியடிக்கவில்லை.’
17 எனினும், அபிஷேகஞ்செய்யப்பட்ட மீதிபேர், பொய் வணக்கத்திற்கு எதிரான தங்கள் போராட்டத்தை, எலிசாவைப் போல் வைராக்கியத்துடன் விடாது தொடருகின்றனர். பூமிக்குரிய நம்பிக்கையுடைய அவர்களுடைய தோழர்களும் அவ்வாறே செய்கின்றனர். மேலும், ‘யெகோவாவின் நாளில்’ தப்பிப்பிழைத்திருக்கும்படியான நம்பிக்கையுடையவர்கள் யாவரும், தரையை அடிக்கும்படி சொன்ன வைராக்கியமுள்ள எலிசாவின் வார்த்தைகளை மனதில் வைத்திருப்பது நல்லது. சத்தியத்தின் அம்புகளை நாம் எடுத்து, வைராக்கியத்துடன் —மறுபடியும் மறுபடியுமாக—எய்வோமாக—ஆம், அவர்களிடம் செய்யவேண்டிய நம் வேலை முடிந்தது என்று யெகோவா சொல்லும் வரையிலும் அவ்வாறு செய்துகொண்டிருப்போமாக.
18. 2 பேதுரு 3:11, 12-ன் வார்த்தைகளுக்கு நாம் எவ்வாறு செயல்பட வேண்டும்?
18 தற்போதைய பொல்லாத காரிய ஒழுங்குமுறையை “யெகோவாவின் நாள்” சீக்கிரத்தில் ஒரு முடிவுக்குக் கொண்டுவரும். ஆகையால், இருதயத்தை ஊக்கி எழுப்பும் அப்போஸ்தலன் பேதுருவின் வார்த்தைகள் தூண்டி எழுப்ப நம்மை அனுமதிப்போமாக. பேதுரு இவ்வாறு உணர்ச்சியோடு கூறினார்: “இந்தக் காரியங்களெல்லாம் இவ்வாறு அழிந்துபோகிறவையாக இருப்பதால், யெகோவாவின் நாளின் வருகையை மனதில் இடைவிடாமல் வைத்து காத்திருந்து, பரிசுத்த நடத்தைக்குரிய செயல்களிலும் தேவபக்திக்குரிய செயல்களிலும் நீங்கள் எத்தகைய ஆட்களாய் இருக்க வேண்டும்!” (2 பேதுரு 3:11, 12, NW) இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வெளிப்படுத்தப்படும் கடவுளுடைய கோபாக்கினையின் அக்கினியினால் இந்த ஒழுங்குமுறையின் ஒவ்வொரு பாகமும் அழிந்துபோகையில், நேர்மையான நடத்தையும் கடவுள் பக்தியுமுள்ள ஒரு பதிவை உடையவர்கள் மாத்திரமே தப்புவார்கள். ஒழுக்க மற்றும் ஆவிக்குரிய தூய்மை இன்றியமையாதவை. அவ்வாறே உடன் மனிதர்களின் தேவைகளுக்கு உதவுவதால், முக்கியமாய், நம்முடைய கிறிஸ்தவ ஊழியத்தின் மூலம் ஆவிக்குரிய முறையில் உதவி செய்வதால் அவர்களுக்குக் காட்டப்படும் அன்பு இன்றியமையாதது.
19. ‘யெகோவாவின் நாளில்’ தப்பிப்பிழைக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
19 கடவுளின் உண்மையும் வைராக்கியமுமுள்ள ஊழியர் என்று உங்கள் வார்த்தைகளும் செயல்களும் உங்களை அடையாளம் காட்டுகின்றனவா? அப்படியானால், ‘யெகோவாவின் நாளில்’ தப்பிப்பிழைத்து, வாக்குப்பண்ணப்பட்ட புதிய உலகத்திற்குள் செல்லும் நம்பிக்கையை உடையவராக நீங்கள் இருக்கலாம். ஆம், சூனேமிய தம்பதி எலிசாவுக்கு உபசரணை செய்ததுபோல், கிறிஸ்துவின் ஆவிக்குரிய சகோதரர்கள், அவரைப் பின்பற்றுவோராக இருப்பதால் அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்தால், தப்பிப்பிழைத்திருப்பது உங்கள் அனுபவமாக இருக்கலாம். தப்பிப்பிழைத்திருப்பதற்கு நாகமானைப்போலவும் நீங்கள் இருக்க வேண்டும்; அவர், கடவுளுடைய போதனையை மனத்தாழ்மையுடன் ஏற்று, யெகோவாவை வணங்கும் ஒருவரானார். பூமிக்குரிய ஒரு பரதீஸில் என்றென்றும் வாழ்வதற்கு நீங்கள் ஆழ்ந்த விருப்பமுடையவர்களாக இருந்தால், யோனதாப் செய்ததைப்போல், உண்மையான வணக்கத்திற்கு இருதயப்பூர்வ ஆதரவை நீங்கள் செயலில் காட்ட வேண்டும். அப்போது, இயேசுவினுடைய இவ்வார்த்தைகளின் நிறைவேற்றத்தைச் சீக்கிரத்தில் அனுபவிக்கவிருக்கிற, யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்களுக்குள் நீங்களும் இருக்கலாம்: “வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.”—மத்தேயு 25:34.
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டி பிரசுரித்த “உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” (ஆங்கிலம்) புத்தகம், அதிகாரங்கள் 18-ஐயும் 19-ஐயும் காண்க.
b உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டி ஆஃப் இண்டியா பிரசுரித்த, வெளிப்படுத்துதல் அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! புத்தகம், பக்கங்கள் 254-6-ஐக் காண்க.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ யெகோவாவின் நாளில் தப்பிப்பிழைக்க தேவைப்படும் சில பண்புகள் யாவை?
◻ எலிசாவின் நாளில் சூனேமிய தம்பதியால் என்ன முன்மாதிரி வைக்கப்பட்டது?
◻ நாகமானிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?
◻ எவ்வாறு நாம் யோனதாபின் முன்மாதிரியை பின்பற்றலாம்?
◻ 2 பேதுரு 3:11, 12 நம்மை எவ்வாறு பாதிக்க வேண்டும்?