நீங்கள் எலியாவைப்போல் உண்மையுள்ளவர்களாக இருப்பீர்களா?
“யெகோவாவின் பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.”—மலாகி 4:5, திருத்திய மொழிபெயர்ப்பு.
1. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் ஏறக்குறைய 500 ஆண்டுகள் இஸ்ரவேலர் இருந்த பின்பு என்ன நெருக்கடி உண்டாகிறது?
‘பாலும் தேனும் ஓடுகிற தேசம்.’ (யாத்திராகமம் 3:7, 8) பொ.ச.மு. 16-வது நூற்றாண்டில், எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலரை விடுதலைசெய்த பின்பு, அதையே யெகோவா அவர்களுக்குக் கொடுத்தார். ஆனால், கவனியுங்கள்! ஐந்து நூற்றாண்டுகள் கடந்து சென்றுவிட்டன, இப்போது இஸ்ரவேலின் பத்துக் கோத்திர ராஜ்யம் கொடிய பஞ்சத்தின் பிடியிலுள்ளது. ஏதாவது பசும் புல்லைக் காண்பதுங்கூட அரிதாக உள்ளது. மிருகங்கள் சாகின்றன, மூன்றரை ஆண்டுகளாக மழை பெய்யவில்லை. (1 இராஜாக்கள் 18:5; லூக்கா 4:25) இப்பெரும் துன்பத்திற்குக் காரணம் என்ன?
2. இஸ்ரவேல் ஜனத்துக்கு உண்டான இந்த நெருக்கடிக்குக் காரணம் என்ன?
2 விசுவாசத்துரோகமே இந்த நெருக்கடியை உண்டாக்கியது. கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை மீறி, அரசனாகிய ஆகாப், கானானிய இளவரசி யேசபேலை மணம் செய்து, இஸ்ரவேலில் பாகால் வணக்கத்தை அறிமுகம் செய்வதற்கு அவளை அனுமதித்திருக்கிறான். இன்னும் கொடுமை என்னவென்றால், தலைநகராகிய சமாரியாவில், இந்தப் பொய் தெய்வத்திற்கு ஒரு கோயிலையும் அவன் கட்டியிருக்கிறான். பாகால் வணக்கம் மிகுதியான விளைச்சலைத் தங்களுக்குக் கொண்டுவரும் என்று நம்பும்படியும் இஸ்ரவேலரை அவன் வசீகரித்திருக்கிறான்! எனினும், யெகோவா எச்சரித்திருக்கிறபடி, அவர்கள், தங்கள் ‘நல்ல தேசத்திலிருந்து அழிந்துபோகும்’ ஆபத்தில் இப்போது இருக்கிறார்கள்.—உபாகமம் 7:3, 4; 11:16, 17; 1 இராஜாக்கள் 16:30-33.
கடவுள் யார் என்பதை தத்ரூபமாய் நிரூபிக்கும் போட்டி
3. எவ்வாறு தீர்க்கதரிசியாகிய எலியா, இஸ்ரவேலின் மெய்யான பிரச்சினையின்பேரில் கவனத்தை ஊன்றச் செய்கிறார்?
3 பஞ்சம் தொடங்கினபோது, கடவுளுடைய உண்மையுள்ள தீர்க்கதரிசியாகிய எலியா, அரசனான ஆகாபினிடம் இவ்வாறு சொன்னார்: “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவின் சந்நிதியில் நிற்கிற நான் . . . சொல்லுகிறதைக் கேள்; நான் சொன்னாலன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும்”! (1 இராஜாக்கள் 17:1, தி.மொ.) இந்த அறிவிப்பின் பயங்கர நிறைவேற்றத்தை உண்மையில் அனுபவித்தப் பின்பு, எலியாதான் இஸ்ரவேலின்மீது அபாயத்தைக் கொண்டுவந்தான் என்பதாக அந்த அரசன் அவரை குற்றஞ்சாட்டுகிறான். ஆனால், ஆகாபும் அவனுடைய குடும்பமும் பாகாலை வணங்குவோராகி விசுவாசத்துரோகிகளாய் ஆனதன் காரணமாக அவர்களே பொறுப்புள்ளவர்கள் என்று எலியா பதிலளிக்கிறார். இந்த விவாதத்தைத் தீர்ப்பதற்கு, பாகாலின் 450 தீர்க்கதரிசிகளையும், மரச்சிலை விக்கிரகத்தின் 400 தீர்க்கதரிசிகளையும், அவர்களோடுகூட இஸ்ரவேலர் அனைவரையும் கர்மேல் மலையின்மேல் கூடிவரும்படி, யெகோவாவின் தீர்க்கதரிசி அரசனாகிய ஆகாபை வலியுறுத்துகிறார். ஆகாபும் அவனுடைய குடிமக்களும் அங்கே கூடுகிறார்கள்; மழையற்ற வறட்சி நிலையை அந்தச் சந்தர்ப்பம் ஒருவேளை முடிவுக்குக் கொண்டுவரலாம் என்று அவர்கள் நம்பியிருக்கலாம். ஆனால் எலியா, அதைவிட முக்கியமான காரியத்தின்பேரில் கவனத்தை ஊன்றச் செய்கிறார். அவர் இவ்வாறு கேட்கிறார்: “நீங்கள் எந்த மட்டும் இருபுறமும் சாய்ந்து கிந்திக்கிந்தி நடப்பீர்கள்; யெகோவா தெய்வமானால் அவரைப் பற்றிக்கொள்ளுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பற்றிக்கொள்ளுங்கள்.” என்ன சொல்வதென்றே இஸ்ரவேலருக்குத் தெரியவில்லை.—1 இராஜாக்கள் 18:18-21, தி.மொ.
4. கடவுள் யார் என்பதைப்பற்றிய விவாதத்தைத் தீர்ப்பதற்கு, எலியா என்ன திட்டத்தை முன்வைக்கிறார்?
4 யெகோவாவின் வணக்கத்தைப் பாகாலின் வணக்கத்தோடு கலப்படம் செய்ய பல ஆண்டுகளாக இஸ்ரவேலர் முயற்சி செய்திருக்கின்றனர். கடவுள் யார் என்ற விவாதத்தைத் தீர்ப்பதற்கு, எலியா இப்போது ஒரு போட்டியை முன்வைக்கிறார். பலிசெலுத்துவதற்காக ஓர் இளம் காளையை அவர் ஆயத்தம் செய்வார், மற்றொன்று பாகால் தீர்க்கதரிசிகளால் ஆயத்தம் செய்யப்படும். பின்பு எலியா சொல்கிறார்: “நீங்கள் உங்கள் தெய்வத்தின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுங்கள்; நான் யெகோவாவின் திருநாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவேன்; கூப்பிடுகையில் அக்கினியினால் உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம்.” (1 இராஜாக்கள் 18:23, 24, தி.மொ.) ஒரு ஜெபத்திற்குப் பதிலளிப்பதாய் வானத்திலிருந்து அக்கினி வெளிவருவதைக் கற்பனைசெய்து பாருங்கள்!
5. பாகால் வணக்கத்தின் பயனற்றத் தன்மை எவ்வாறு வெளிப்படுத்தப்பட்டது?
5 தொடங்கும்படி பாகால் தீர்க்கதரிசிகளிடம் எலியா சொல்கிறார். பலிக்காக ஒரு காளையை அவர்கள் ஆயத்தம் செய்து, அதை பலிபீடத்தின்மீது வைக்கிறார்கள். பின்பு, அந்தப் பலிபீடத்தைச் சுற்றி குதித்துக்கொண்டு, “பாகாலே, எங்களுக்கு உத்தரவு அருளும்” என்று வேண்டுகிறார்கள்! “காலைதொடங்கி மத்தியானமட்டும்” இது தொடருகிறது. “உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்” என்று எலியா பரிகாசம் செய்கிறார். அவசரமான ஒரு வேலையில் பாகால் ஈடுபட்டுக்கொண்டிருக்கலாம், அல்லது “தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்பவேண்டியதாக்கும்” என்கிறார். சீக்கிரமாய் பாகாலின் தீர்க்கதரிசிகள் வெறிகொண்டவர்களாக ஆகிறார்கள். பாருங்கள்! கத்திகளால் தங்களைக் கீறிக்கொள்கிறார்கள், அவர்கள் காயங்களிலிருந்து இரத்தம் வழிந்தோடுகிறது. அந்த எல்லா 450 பேரும் தங்கள் உரத்தக் குரலில் கத்துகையில் எப்பேர்ப்பட்ட சத்தம் எழும்புகிறது! ஆனால் பதில் எதுவும் இல்லை.—1 இராஜாக்கள் 18:26-29.
6. கடவுள் யார் என்ற போட்டிக்கு எலியா என்ன ஆயத்தம் செய்கிறார்?
6 இப்போது எலியாவின் முறை வருகிறது. யெகோவாவின் பலிபீடத்தை மறுபடியும் கட்டி, அதைச் சுற்றி ஒரு பெரிய வாய்க்கால் வெட்டப்படும்படி எலியா செய்கிறார். அதன் பின்பு பலியை ஒழுங்குபடுத்தி தயாராக வைக்கிறார். பின் அந்த விறகுகளின்மீதும் பலியின்மீதும் தண்ணீர் ஊற்றும்படி செய்கிறார். அந்த வாய்க்காலுங்கூட நிரம்பும்வரையில் பன்னிரண்டு பெரிய குடங்கள் நிறைந்த தண்ணீர் அந்தப் பலிபீடத்தின்மீது ஊற்றப்படுகிறது. எலியா இவ்வாறு ஜெபிக்கையில் எதிர்பார்ப்பை கற்பனை செய்து பாருங்கள்; “ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கடவுளே, யெகோவாவே, இஸ்ரவேலிலே நீரே கடவுள் என்றும் நான் உமது ஊழியன் என்றும் நான் இந்தக் காரியங்களையெல்லாம் உமது கட்டளைப்படியே செய்தேன் என்றும் இன்றையதினம் விளங்கப்பண்ணும்; யெகோவாவே, எனக்கு உத்தரவளியும், யெகோவாவாகிய நீரே கடவுள் என்றும் தங்கள் இருதயத்தை உம்மிடம் திரும்பச் செய்தவர் நீரே என்றும் இந்த ஜனங்கள் அறியும்படி எனக்கு உத்தரவளியும்.”—1 இராஜாக்கள் 18:30-37, தி.மொ.
7, 8. (அ) எலியாவின் ஜெபத்திற்கு யெகோவா எவ்வாறு பதிலளிக்கிறார்? (ஆ) கர்மேல் மலையின்மீது நடந்த சம்பவங்களால் என்ன நிறைவேற்றப்படுகிறது?
7 எலியாவின் ஜெபத்திற்கு விடையாக, ‘யெகோவாவினிடமிருந்து அக்கினி இறங்கி அந்தத் தகனபலியையும் விறகுகளையும் கற்களையும் மண்ணையும் பட்சித்து வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப்போடுகிறது.’ ஜனங்கள் முகங்குப்புற விழுந்து: “யெகோவாவே கடவுள், யெகோவாவே கடவுள்” என்று சொல்கிறார்கள். (1 இராஜாக்கள் 18:38, 39, தி.மொ.) எலியா இப்போது உறுதியான நடவடிக்கை எடுக்கிறார். அவர் கட்டளையிடுகிறார்: “நீங்கள் பாகாலின் தீர்க்கதரிசிகளில் ஒருவனும் தப்பிப்போகாதபடிக்கு அவர்களைப் பிடியுங்கள்.” கீசோன் ஆற்றங்கரையில் அவர்களை வெட்டிப்போட்ட பின்பு, இருண்ட மேகங்கள் வானத்தை மூடுகின்றன. கடைசியாக, பெருமழை அந்த வறட்சியை முடிவுக்குக் கொண்டுவருகிறது!—1 இராஜாக்கள் 18:40-45; ஒப்பிடுக: உபாகமம் 13:1-5.
8 எத்தகைய மகத்தான ஒரு நாள்! கடவுள் யார் என்பதைப் பற்றிய இந்தத் தனிச்சிறப்புவாய்ந்த போட்டியில் யெகோவாவே வெற்றிப் புகழ் பெறுகிறார். மேலும், இந்தச் சம்பவங்கள், இஸ்ரவேலர் பலரின் இருதயங்களை திரும்பவும் கடவுளிடம் திருப்புகின்றன. இதிலும் மற்ற வழிகளிலும், உண்மையுள்ள ஒரு தீர்க்கதரிசியாக எலியா நிரூபிக்கிறார். மேலும் அவர்தாமே ஒரு தீர்க்கதரிசன பாகத்தை வகிக்கிறார்.
‘எலியா தீர்க்கதரிசி’ இனிமேலும் வருவாரா?
9. மல்கியா 4:5, 6-ல் என்ன தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது?
9 பின்னால், மல்கியாவின் மூலமாக, கடவுள் இவ்வாறு முன்னறிவித்தார்: “இதோ, கர்த்தருடைய [யெகோவாவின், தி.மொ.] பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும் பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்.” (மல்கியா 4:5, 6) அந்த வார்த்தைகள் சொல்லப்பட்டதற்கு ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கு முன்பாக எலியா வாழ்ந்தார். இது ஒரு தீர்க்கதரிசனமாக இருந்ததனால், அதை நிறைவேற்றுவதற்கு எலியாவின் வருகையை, பொ.ச. முதல் நூற்றாண்டின் யூதர்கள் எதிர்பார்த்தனர்.—மத்தேயு 17:10.
10. முன்னறிவிக்கப்பட்ட இந்த எலியா யார், நாம் இதை எப்படி அறிந்துகொள்கிறோம்?
10 அவ்வாறெனில், வரவிருந்த இந்த எலியா யார்? இயேசு கிறிஸ்து பின்வருமாறு சொன்னபோது யார் அவர் என்பது வெளிப்படுத்தப்பட்டது: “யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது; பலவந்தம்பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள். நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் யாவரும் யோவான்வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்ததுண்டு. நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான்.” ஆம், முழுக்காட்டுபவனான யோவானே முன்னறிவிக்கப்பட்ட எலியாவுக்கு இணையானவர். (மத்தேயு 11:12-14; மாற்கு 9:11-13) யோவான், “எலியாவின் ஆவியும் பலமும்” உடையவராக இருந்து, “உத்தமமான ஜனத்தை கர்த்தருக்கு [“யெகோவாவுக்கு,” NW] ஆயத்தப்படுத்து”வார் என்று ஒரு தூதன், யோவானின் தகப்பனாகிய சகரியாவுக்குச் சொல்லியிருந்தார். (லூக்கா 1:17) யோவான் நடப்பித்த முழுக்காட்டுதல், யூதர்களைக் கிறிஸ்துவினிடம் வழிநடத்த வேண்டிய நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாகச் செய்த பாவங்களின்பேரில் ஒருவர் மனம் வருந்தி திரும்பினதன் வெளிப்படையான அடையாளமாக இருந்தது. (லூக்கா 3:3-6; கலாத்தியர் 3:24) இவ்வாறு யோவானின் ஊழியம், ‘உத்தமமான ஜனத்தை கர்த்தருக்கு [“யெகோவாவுக்கு,” NW] ஆயத்தப்படுத்தினது.’
11. பெந்தெகொஸ்தே அன்று, ‘யெகோவாவின் நாளைப்’ பற்றி பேதுரு என்ன சொன்னார், அது எப்போது நடந்தது?
11 ‘எலியாவாக’ முழுக்காட்டுபவனாகிய யோவானின் ஊழியம், “யெகோவாவின் நாள்” சமீபித்திருந்ததென்று காட்டினது. கடவுள் தம்முடைய சத்துருக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டு, தம்முடைய ஜனங்களைப் பாதுகாத்து வைக்கப்போகும் அந்த நாள் சமீபமாக இருப்பதைப் பற்றி அப்போஸ்தலன் பேதுருவும் குறிப்பிட்டார். பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே நாளில் நடைபெற்ற அற்புத சம்பவங்கள், கடவுளுடைய ஆவி ஊற்றப்படுவதைப் பற்றிய யோவேலின் தீர்க்கதரிசனத்தினுடைய நிறைவேற்றமாக இருந்ததென அவர் குறிப்பிட்டார். இது, ‘பெரிதும் மகிமைவிளங்குவதுமான கர்த்தருடைய [“யெகோவாவின்,” NW] நாளுக்கு’ முன்பாக நேரிடும் என்று பேதுரு காட்டினார். (அப்போஸ்தலர் 2:16-21, தி.மொ.; யோவேல் 2:28-32) பொ.ச. 70-ல், யெகோவா, தம்முடைய குமாரனை ஏற்காது தள்ளிவிட்ட ஜனத்தின்மீது தேவ கோபாக்கினைத் தீர்ப்பை நிறைவேற்றும்படி ரோம சேனைகளை அனுமதித்ததன் மூலம் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றினார்.—தானியேல் 9:24-27; யோவான் 19:15.
12. (அ) வரவிருக்கிற ஒரு ‘யெகோவாவின் நாளைப்’ பற்றி பவுலும் பேதுருவும் என்ன சொன்னார்கள்? (ஆ) எலியாவின் வேலையால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டபடி, ஏன் ஏதோவொன்று நடப்பது நிச்சயமாயிருந்தது?
12 இருப்பினும், பொ.ச. 70-க்குப் பின்பு இன்னும் அதிகம் நிறைவேற இருந்தது. அப்போஸ்தலன் பவுல், வரவிருக்கும் ஒரு ‘யெகோவாவின் நாளை’ இயேசு கிறிஸ்துவின் வந்திருத்தலோடு சம்பந்தப்படுத்தினார். மேலும், அப்போஸ்தலன் பேதுரு அந்த நாளை, இன்னும் எதிர்காலத்திலுள்ள “புதிய வானங்களும் புதிய பூமியும்” சம்பந்தமாகக் குறிப்பிட்டுப் பேசினார். (2 தெசலோனிக்கேயர் 2:1, 2; 2 பேதுரு 3:10-13) பொ.ச. 70-ல், ‘யெகோவாவின் நாள்’ வருவதற்கு முன்பு முழுக்காட்டுபவனாகிய யோவான், எலியாவைப் போன்ற சேவையை செய்தான் என்பதை மனதில் கொள்ளுங்கள். மரணத்திற்குப் பின், இயேசுவின் மறுரூப காட்சியின்போது எலியாவும் மோசேயும் ஒரு தரிசனத் தோற்றத்தில் காணப்பட்டார்கள். (மாற்கு 9:1-8) எலியா செய்திருந்த வேலையால் பிரிதிநிதித்துவம் செய்யப்படும் மேலுமான ஏதோவொன்று நடந்தேறும் என்பதை இவையனைத்தும் சுட்டிக்காட்டின. அது என்ன?
அவர்கள் எலியாவின் வைராக்கியத்தை உடையோர்
13, 14. (அ) எலியாவின் நடவடிக்கைகளுக்கும் தற்கால அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் நடவடிக்கைகளுக்கும் என்ன இசைவுப்பொருத்தம் உள்ளது? (ஆ) கிறிஸ்தவமண்டல விசுவாசத்துரோகிகள் என்ன செய்திருக்கிறார்கள்?
13 எலியாவின் ஊழியம், முழுக்காட்டுபவரான யோவானின் நடவடிக்கைகளில் ஓர் இசைவுப்பொருத்தம் இருந்ததுமட்டுமல்லாமல், வரவிருக்கும் ‘யெகோவாவின் நாளுக்கு’ வழிநடத்துகிற இந்தக் கொடிய காலப் பகுதியில் இருக்கும் அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களிலும் ஓர் இசைவுப்பொருத்தத்தைக் கொண்டுள்ளது. (2 தீமோத்தேயு 3:1-5) எலியாவின் வைராக்கியத்துடனும் பலத்துடனும், அவர்கள் உண்மையான வணக்கத்தின் பற்றுறுதியுள்ள ஆதரவாளர்கள். இது எவ்வளவு அவசியமாக இருந்திருக்கிறது! எலியாவின் நாளில், இஸ்ரவேலில் பாகாலின் வணக்கம் பெருகியிருந்ததுபோல், கிறிஸ்துவின் அப்போஸ்தலருடைய மரணத்திற்குப் பின், உண்மை கிறிஸ்தவத்தை விட்டு வழுவின விசுவாசத்துரோகம் உண்டாயிற்று. (2 பேதுரு 2:1) கிறிஸ்தவர்களாக உரிமைபாராட்டினவர்கள், பொய்மத கொள்கைகளோடும் பழக்கவழக்கங்களோடும் கிறிஸ்தவத்தைக் கலப்படம் செய்ய தொடங்கினார்கள். உதாரணமாக, மனிதனுக்கு அழியாத ஆத்துமா இருக்கிறது போன்ற புறமத மற்றும் வேதப்பூர்வமற்ற போதகத்தை அவர்கள் ஏற்றனர். (பிரசங்கி 9:5, 10; எசேக்கியேல் 18:4) மெய்யானக் கடவுளின் யெகோவா என்ற பெயரை பயன்படுத்துவதை கிறிஸ்தவமண்டல விசுவாசத்துரோகிகள் நிறுத்திவிட்டனர். அதற்குப் பதிலாக, திரித்துவத்தை அவர்கள் வணங்குகிறார்கள். இயேசுவையும் அவருடைய தாய் மரியாளையும் சித்தரிக்கும் உருவச்சிலைகளுக்குத் தலைவணங்கும் பாகால் வணக்கத்தைப்போன்ற பழக்கத்தை ஏற்றிருக்கிறார்கள். (ரோமர் 1:23; 1 யோவான் 5:21) ஆனால் இவை மாத்திரமே எல்லாம் அல்ல.
14 பத்தொன்பதாம் நூற்றாண்டு முதற்கொண்டு கிறிஸ்தவமண்டல சர்ச் தலைவர்கள், பைபிளின் பல பாகங்களைக் குறித்து சந்தேகத்தை வெளிப்படுத்த தொடங்கினர். உதாரணமாக, ஆதியாகமத்திலுள்ள சிருஷ்டிப்பின் விவரத்தை ஏற்கத்தகாததென அவர்கள் தள்ளிவிட்டு, பரிணாமக் கொள்கையைப் புகழ்ந்து ஏற்று, அதை “அறிவியல் சார்ந்தது” என்று குறிப்பிட்டனர். இது, இயேசு கிறிஸ்துவும் அவருடைய அப்போஸ்தலர்களும் போதித்த போதகங்களுக்கு நேர்மாறாக இருந்தது. (மத்தேயு 19:4, 5; 1 கொரிந்தியர் 15:47) எனினும், இயேசுவும் ஆரம்பகால சீஷர்களும் செய்தது போல், ஆவியால் அபிஷேகஞ்செய்யப்பட்ட இன்றைய கிறிஸ்தவர்கள், சிருஷ்டிப்பைப் பற்றிய பைபிள் விவரத்தை உறுதியாகக் கடைப்பிடிக்கின்றனர்.—ஆதியாகமம் 1:27.
15, 16. கிறிஸ்தவமண்டலத்திற்கு நேர்மாறாக, யார், தொடர்ந்து அருளப்படும் ஆவிக்குரிய உணவை அனுபவித்து வந்திருக்கின்றனர்? என்ன வழிவகைகளில்?
15 ‘முடிவுகாலத்திற்குள்’ இந்த உலகம் பிரவேசிக்கையில், ஆவிக்குரிய ஒரு பஞ்சம் கிறிஸ்தவமண்டலத்தை வாட்டியெடுத்தது. (தானியேல் 12:4; ஆமோஸ் 8:11, 12) ஆனால் எலியாவின் நாளில் உண்டான பஞ்சத்தின்போது அவருக்கு உணவு கிடைக்கும்படி யெகோவா பார்த்துக்கொண்டது போலவே, அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் இந்தச் சிறிய தொகுதியினர் “ஏற்றவேளையிலே” கடவுளால் தொடர்ந்து அருளப்பட்டுவந்த ஆவிக்குரிய உணவுகளை அனுபவித்து மகிழ்ந்தனர். (மத்தேயு 24:45; 1 இராஜாக்கள் 17:6, 13-16) சர்வதேச பைபிள் மாணாக்கர்கள் என்று ஒருகாலத்தில் அறியப்பட்டிருந்த கடவுளுடைய இந்த உண்மையுள்ள ஊழியர்கள், பிற்பாடு யெகோவாவின் சாட்சிகள் என்ற வேதப்பூர்வ பெயரை ஏற்றார்கள்.—ஏசாயா 43:10. தி.மொ.
16 “யெகோவாவே என் கடவுள்” என்று அர்த்தங்கொண்ட தன் பெயருக்கு ஏற்றவாறு எலியா வாழ்ந்தார். யெகோவாவின் பூமிக்குரிய ஊழியருடைய அதிகாரப்பூர்வ பத்திரிகையாக தி உவாட்ச்டவர் கடவுளுடைய பெயரை நிலையாக பயன்படுத்தி வந்திருக்கிறது. உண்மையில், இந்தப் பத்திரிகைக்கு யெகோவாதாமே பின்னாலிருந்து ஆதரவு தருகிறார் என்ற நம்பிக்கையை இதன் இரண்டாவது இதழ் (ஆகஸ்ட் 1879) வெளிப்படுத்தினது. இந்தப் பத்திரிகையும், உவாட்ச் டவர் சொஸையிட்டியின் மற்ற பிரசுரங்களும், கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளின் உண்மைத்தன்மையை உறுதியாகக் கடைப்பிடிக்கின்றன. அதேசமயத்தில், பொய்மத உலகப் பேரரசாகிய மகா பாபிலோனின் மீதிப் பாகமாகிய கிறிஸ்தவமண்டலத்தின் வேதப்பூர்வமற்ற போதனைகளையும் பகிரங்கப்படுத்துகின்றன.—2 தீமோத்தேயு 3:16, 17; வெளிப்படுத்துதல் 18:1-5.
சோதனையின்கீழ் உண்மையுடன் நிலைத்திருத்தல்
17, 18. பாகாலின் தீர்க்கதரிசிகள் கொல்லப்பட்டதற்கு யேசபேல் எவ்வாறு பிரதிபலித்தாள், ஆனால் எலியா எவ்வாறு உதவிசெய்யப்பட்டார்?
17 பாகாலின் தீர்க்கதரிசிகளை எலியா கொன்றுவிட்டார் என்று யேசபேலுக்குத் தெரியவந்தபோது அவள் பிரதிபலித்தது போலவே, தங்கள் போதனைகள் வெட்டவெளிச்சம் ஆனபோது மதகுருக்களின் பிரதிபலிப்பும் இருந்தது. யெகோவாவின் உண்மை தீர்க்கதரிசியை கொல்லப்போவதாக அவள் சபதம் செய்து, அவருக்கு ஒரு செய்தி அனுப்பினாள். இது வெறும் ஒரு பயமுறுத்தல் அல்ல, ஏனெனில் கடவுளுடைய தீர்க்கதரிசிகள் பலரை ஏற்கெனவே யேசபேல் கொன்றிருந்தாள். பயத்தின் காரணமாக, எலியா தெற்கே பெயெர்செபாவுக்கு ஓடிப்போனார். அங்கு தன் வேலைக்காரனை விட்டுவிட்டு, அவர் இன்னும் தூரமாக, வனாந்தரத்திற்குள் சென்று, தான் சாகும்படி கேட்டு ஜெபித்தார். ஆனால், யெகோவா தம் தீர்க்கதரிசியைக் கைவிடவில்லை. ஓரேப் மலைக்குச் செல்லும் அந்த நீண்ட பயணத்திற்கு அவரை ஆயத்தப்படுத்த ஒரு தூதன் எலியாவுக்குத் தோன்றினார். இவ்வாறு, 300 கிலோமீட்டருக்கும் மேற்பட்ட தூரமான, 40 நாட்கள் பயணத்திற்குரிய ஊட்டச்சத்தை அவர் பெற்றார். ஓரேபில், பெருங்காற்றிலும், ஒரு பூமியதிர்ச்சியிலும், ஒரு அக்கினியிலும் திகைக்கவைக்கும் வல்லமையை கடவுள் வெளிப்படுத்திக் காட்டினபின்பு, அவரிடம் பேசினார். இந்த வெளிக்காட்டுகளில் யெகோவா இருக்கவில்லை. அவை அவருடைய பரிசுத்த ஆவியின், அல்லது செயல்நடப்பிக்கும் சக்தியின் வெளிப்பாடுகளாக இருந்தன. பின்பு யெகோவா தம்முடைய தீர்க்கதரிசியிடம் பேசினார். இந்த அனுபவம் எலியாவை எவ்வளவாய் பலப்படுத்தியிருக்கும் என்பதைக் கற்பனைசெய்து பாருங்கள். (1 இராஜாக்கள் 19:1-12) எலியாவைப் போல், உண்மையான வணக்கத்தின் பகைவரால் பயமுறுத்தப்படுகையில் நாம் ஒருவாறு பயம் அடைந்தவர்களாக ஆகிவிட்டால் என்ன செய்வது? யெகோவா தம்முடைய ஜனங்களை கைவிடுகிறதில்லை என்பதை உணரும்படி அவருடைய அனுபவம் நமக்கு உதவி செய்ய வேண்டும்.—1 சாமுவேல் 12:22.
18 தீர்க்கதரிசி என்ற பொறுப்பில், செய்வதற்கு இன்னும் வேலை எலியாவுக்கு இருந்தது என்று யெகோவா தெளிவாக்கினார். மேலும், இஸ்ரவேலில் அவர் மாத்திரமே உண்மையான கடவுளை வணங்கினவராக இருந்தார் என்று எலியா நினைத்தபோதிலும், பாகாலுக்குத் தலைவணங்காத 7,000 பேர் இருந்தார்கள் என்று யெகோவா அவருக்குக் காட்டினார். பின்பு, எலியா தனக்கு நியமிக்கப்பட்ட வேலையைச் செய்யும்படி கடவுள் அவரைத் திரும்பவும் அனுப்பினார். (1 இராஜாக்கள் 19:13-18) எலியாவைப்போல் நாமும், உண்மை வணக்கத்தின் பகைவரால் இன்னல்களுக்கு ஆளாகலாம். இயேசு முன்னறிவித்தபடி கடுமையான துன்புறுத்துதலுக்கு நாம் இலக்காகக் கூடும். (யோவான் 15:17-20) சில சமயங்களில், நாம் ஒருவேளை பயந்துவிடலாம். எனினும், கடவுளுடைய உறுதியளிக்கும் வார்த்தைகளைப் பெற்று, பின்பு யெகோவாவின் சேவையில் உண்மையுடன் விடாமுயற்சியாக நிலைத்திருந்த எலியாவைப்போல் நாம் இருக்கலாம்.
19. முதல் உலகப் போர் நடந்த காலத்தில் அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு என்ன நடந்தது?
19 முதல் உலகப் போரின்போது கடுமையான துன்புறுத்துதலின் காரணமாக, அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களில் சிலர் பயத்துக்கு உட்பட்டு பிரசங்கிப்பதை நிறுத்திவிட்டனர். பூமியில் தங்கள் வேலை முடிந்துவிட்டது என்று அவர்கள் நினைத்தது தவறாக இருந்தது. ஆனால் கடவுள் அவர்களைத் தள்ளிவிடவில்லை. மாறாக, எலியாவுக்கு அவர் உணவளித்ததுபோலவே, இரக்கத்துடன் தொடர்ந்து அவர்களை போஷித்து நடத்திவந்தார். எலியாவைப்போல், உண்மையுள்ளவர்களாயிருந்த அபிஷேகஞ்செய்யப்பட்டவர்கள் கடவுள் அளித்த திருத்தத்தை ஏற்று, செயலற்ற நிலையிலிருந்து மீண்டனர். ராஜ்ய செய்தியைப் பிரசங்கிப்பதன் மகத்தான சிலாக்கியத்திற்கு அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டன.
20. இன்று, எலியாவைப்போல் உண்மையுள்ளவர்களுக்கு என்ன சிலாக்கியம் அருளப்பட்டிருக்கிறது?
20 தம்முடைய வந்திருத்தலைப் பற்றிய தம் தீர்க்கதரிசனத்தில், இந்தப் பொல்லாத காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்கு முன்பாகச் செய்து முடிக்கப்படவிருக்கும், உலகளாவிய இந்த வேலையை இயேசு குறிப்பிட்டார். (மத்தேயு 24:14) இன்று, அபிஷேகஞ்செய்யப்பட்டவர்களாலும், பரதீஸிய பூமியில் வாழ்வதற்கு ஆவலோடு எதிர்பார்க்கிற அவர்களுடைய லட்சக்கணக்கான தோழர்களாலும் இந்த வேலை செய்யப்பட்டு வருகிறது. ராஜ்ய பிரசங்க வேலை முடியும் வரையில் அதைச் செய்துவருவது, எலியாவைப் போன்ற உண்மையுள்ளவர்களுக்கு மாத்திரமே அருளப்படும் ஒரு சிலாக்கியமாக இருக்கிறது.
எலியாவைப்போல் உண்மையுள்ளவர்களாக இருங்கள்
21, 22. (அ) அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் இன்று என்ன வேலையை முன்நின்று நடத்திவருகிறார்கள்? (ஆ) என்ன உதவியோடு இந்தப் பிரசங்க வேலை நிறைவேற்றப்பட்டு வருகிறது? அது ஏன் அவசியமாயிருக்கிறது?
21 அபிஷேகஞ்செய்யப்பட்ட மெய் கிறிஸ்தவர்களின் மீதிபேரான இந்தச் சிறிய தொகுதியினர், சிங்காசனத்தில் ஏற்றப்பட்ட அரசராகிய இயேசு கிறிஸ்துவின் பூமிக்குரிய அக்கறைகளைக் கவனிக்கும் தங்கள் பொறுப்பை, எலியாவினுடையதைப் போன்ற ஆர்வத்துடன் நிறைவேற்றியிருக்கின்றனர். (மத்தேயு 24:47) பரதீஸான ஒரு பூமியில் நித்திய ஜீவனுடன் இருக்கும் அதிசயமான நம்பிக்கையைத் தாம் அளித்திருக்கிற ஜனங்களை சீஷராக்கும் இந்த வேலையை முன்நின்று நடத்துவதற்கு, அபிஷேகம் செய்யப்பட்டவர்களான இவர்களை இப்போது 60-க்கு மேற்பட்ட ஆண்டுகளாக கடவுள் பயன்படுத்திவந்திருக்கிறார். (மத்தேயு 28:19, 20) மீந்திருக்கிற சிறிய தொகையான இந்த அபிஷேகஞ்செய்யப்பட்டவர்கள் தங்கள் பொறுப்புகளை ஆர்வத்துடனும் உண்மையுடனும் நிறைவேற்றி வருவதற்காக இந்த லட்சக்கணக்கானோர் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கலாம்!
22 ஜெபத்துடன் யெகோவாவின்மீது நம்பிக்கைவைத்திருப்போருக்கு அவர் அருளுகிற பலத்தில் மாத்திரமே, இந்த ராஜ்ய பிரசங்கிப்பு வேலை, அபூரண மனிதரால் நிறைவேற்றப்பட்டு வந்திருக்கிறது. நீதிமானுடைய ஜெபத்தின் வல்லமையை சீஷனாகிய யாக்கோபு குறிப்பிட்டுக் காட்டுவதற்கு இந்தத் தீர்க்கதரிசி ஜெபித்ததை மாதிரியாக எடுத்துக் குறிப்பிட்டபோது, “எலியா நம்மைப்போன்ற தன்மையுள்ள மனுஷனே” என்று சொன்னார். (யாக்கோபு 5:16-18, தி.மொ.) எலியா எப்போதும் தீர்க்கதரிசனம் உரைத்துக்கொண்டோ அல்லது அற்புதங்களை நடப்பித்துக்கொண்டோ இருக்கவில்லை. நமக்கு இருக்கிற அதே மனித உணர்ச்சிகளும் பலவீனங்களும் அவருக்கும் இருந்தன, எனினும் கடவுளை உண்மையுடன் சேவித்தார். நமக்கும் கடவுளுடைய உதவி இருப்பதாலும், நம்மையும் அவர் பலப்படுத்துவதாலும், நாமும் எலியாவைப்போல் உண்மையுள்ளவர்களாக இருக்க முடியும்.
23. உண்மையுடனும் நம்பிக்கை தளராமலும் இருப்பதற்கு ஏன் நல்ல காரணம் நமக்கு இருக்கிறது?
23 உண்மையுடனும் நம்பிக்கை தளராமலும் இருப்பதற்கு நல்ல காரணம் நமக்கு இருக்கிறது. பொ.ச. 70-ல் ‘யெகோவாவின் நாள்’ தாக்குவதற்கு முன்பாக, முழுக்காட்டுபவனாகிய யோவான், எலியா செய்ததைப் போன்ற ஒரு வேலையைச் செய்தார் என்பதை நினைவில் வையுங்கள். கடவுள் கொடுத்திருக்கிற அதைப்போன்ற ஒரு வேலையை அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், எலியாவின் வைராக்கியத்திலும் வல்லமையிலும் பூமியெங்கும் நடப்பித்திருக்கின்றனர். ‘யெகோவாவின் மகா நாள்’ சமீபித்திருக்கிறது என்று இது தெளிவாக நிரூபிக்கிறது.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்
◻ யெகோவாவே கடவுள் என்பது கர்மேல் மலையில் எவ்வாறு நிரூபிக்கப்பட்டது?
◻ ‘வரவிருந்த எலியா’ யார், அவர் என்ன செய்தார்?
◻ தற்காலத்திலுள்ள அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், தங்களுக்கு எலியாவின் வைராக்கியம் இருக்கிறதென்று எவ்வாறு காட்டியிருக்கிறார்கள்?
◻ எலியாவைப்போல் உண்மையுள்ளவர்களாக இருப்பது நமக்கு ஏன் சாத்தியம்?