யெகோவாவின் நாளுக்கு நீங்கள் தயாரா?
“கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] பெரியநாள் சமீபித்திருக்கிறது; அது கிட்டிச்சேர்ந்து மிகவும் தீவிரித்துவருகிறது.”—செப்பனியா 1:14.
1. வேதாகமம் யெகோவாவின் நாளை எவ்வாறு விவரிக்கிறது?
யெகோவாவின் “பெரிதும் பயங்கரமுமான நாள்” வெகு சீக்கிரத்தில் இந்தப் பொல்லாத ஒழுங்கின்மீது வந்துசேரும். வேதாகமம் யெகோவாவின் நாளை யுத்தத்தின், அந்தகாரத்தின், உக்கிரத்தின், இக்கட்டின், வேதனையின், எச்சரிப்பின், மற்றும் பாழ்க்கடிப்பின் நாளாக விவரிக்கிறது. இருந்தபோதிலும் இதில் தப்பிப்பிழைப்பவர்கள் இருப்பார்கள், ஏனென்றால், “கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்.” (யோவேல் 2:30-32; ஆமோஸ் 5:18-20) ஆம், கடவுள் அப்பொழுது தம்முடைய சத்துருக்களை அழித்து தம்முடைய ஜனத்தைக் காப்பாற்றுவார்.
2. யெகோவாவின் நாளைக் குறித்து நாம் ஏன் ஒரு அவசர உணர்வைக் கொண்டிருக்கவேண்டும்?
2 கடவுளுடைய தீர்க்கதரிசிகள் யெகோவாவின் நாளுக்கு ஒரு அவசர உணர்வு இருப்பதாக கருதினர். உதாரணமாக செப்பனியா இவ்வாறு எழுதினார்: “கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] பெரியநாள் சமீபித்திருக்கிறது; அது கிட்டிச்சேர்ந்து மிகவும் தீவிரித்துவருகிறது.” (செப்பனியா 1:14) நிலைமை இன்று இன்னுமதிக அவசரமானதாக உள்ளது, ஏனென்றால் முக்கியமாக கடவுளுடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுபவரான அரசர் இயேசு கிறிஸ்து ‘பட்டயத்தை அரையிலே கட்டிக்கொண்டு சத்தியத்தினிமித்தமும், நீதியுடன்கூடிய சாந்தத்தினிமித்தமும் ஜெயமாக ஏறிவர’ ஆயத்தமாயிருக்கிறார். (சங்கீதம் 45:3, 4) அந்த நாளுக்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?
அவர்கள் ஏராளமான எதிர்பார்ப்புகளை உடையவர்களாயிருந்தனர்
3. ஒருசில தெசலோனிக்கேய கிறிஸ்தவர்கள் என்ன எதிர்பார்ப்பை உடையவர்களாக இருந்தனர், என்ன இரண்டு காரணங்களுக்காக அவர்கள் தவறாக புரிந்துகொண்டது தெரிகிறது?
3 யெகோவாவின் நாளைப்பற்றி அநேகர் நிறைவேறாத எதிர்பார்ப்புகளை உடையவர்களாய் இருந்திருக்கின்றனர். தெசலோனிக்கேயாவிலிருந்த பூர்வ கிறிஸ்தவர்களில் சிலர், ‘யெகோவாவின் நாள் இதோ இங்கே,’ என்பதாகச் சொன்னார்கள். (2 தெசலோனிக்கேயர் 2:2, NW) ஆனால் அது ஏன் சமீபமாயில்லை என்பதற்கு அடிப்படையில் இரண்டு காரணங்கள் இருந்தன. இவற்றில் ஒன்றைக் குறிப்பிட்டு அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு சொல்லியிருந்தார்: “சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, . . . அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்.” (1 தெசலோனிக்கேயர் 5:1-6) இந்த ‘முடிவு காலத்தில்’ நாம்தானே அந்த வார்த்தைகளின் நிறைவேற்றத்துக்காக காத்துக்கொண்டிருக்கிறோம். (தானியேல் 12:4) தெசலோனிக்கேயர்களுக்கு யெகோவாவின் நாள் வந்துவிட்டது என்பதற்குரிய மற்றொரு அத்தாட்சியும் இல்லாமல் இருந்தது, ஏனென்றால் பவுல் அவர்களிடம் சொன்னார்: ‘விசுவாசதுரோகம் முந்திநேரிட்டாலொழிய அந்த நாள் வராது.’ (2 தெசலோனிக்கேயர் 2:3) பவுல் அந்த வார்த்தைகளை எழுதியபோது (சுமார் பொ.ச. 51), உண்மைக் கிறிஸ்தவத்திலிருந்து “விசுவாசதுரோகம்” முழுமையாக வளர்ந்திருக்கவில்லை. இன்று கிறிஸ்தவமண்டலத்தில் அது முழுமையாக மலர்ந்திருப்பதை நாம் பார்க்கிறோம். ஆனால் அவர்களுடைய நிறைவேறாத எதிர்பார்ப்புகளின் மத்தியிலும், மரணம் வரையாக உண்மையாய் கடவுளைத் தொடர்ந்து சேவித்துவந்த தெசலோனிக்கேயாவிலிருந்த அந்த உண்மையுள்ள அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் கடைசியில் ஒரு பரலோக வெகுமதியைப் பெற்றுக்கொண்டனர். (வெளிப்படுத்துதல் 2:10) யெகோவாவின் நாளுக்காக நாம் காத்திருக்கையில் நாம் உண்மையுள்ளவர்களாக நிலைத்திருந்தால் நாமும்கூட பலனளிக்கப்படுவோம்.
4. (அ) யெகோவாவின் நாள் 2 தெசலோனிக்கேயர் 2:1, 2-ல் எதோடு இணைத்துப்பேசப்படுகிறது? (ஆ) கிறிஸ்துவின் வருகையைக் குறித்தும் அதோடு சம்பந்தப்பட்ட காரியங்களைக் குறித்தும் சர்ச் தந்தைமார் என்றழைக்கப்பட்டவர்கள் என்ன கருத்துக்களை உடையவர்களாக இருந்தனர்?
4 பைபிள் ‘யெகோவாவின் மகா நாளை,’ “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகை”யோடு இணைத்துப்பேசுகிறது. (2 தெசலோனிக்கேயர் 2:1, 2, NW) சர்ச் தந்தைமார் என்றழைக்கப்பட்டவர்கள் கிறிஸ்துவின் வருகை, அவருடைய வந்திருத்தல் மற்றும் அவருடைய ஆயிர வருட ஆட்சியைப் பற்றி வித்தியாசமான பல கருத்துக்களைக் கொண்டிருந்தனர். (வெளிப்படுத்துதல் 20:4) பொ.ச. இரண்டாவது நூற்றாண்டில், எராப்போலியரான பேப்பியஸ் கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியின்போது பூமியில் அமோகமான விளைச்சலின் எதிர்பார்ப்புகளை மனதில் கொண்டிருந்தார். ஜஸ்டின் மார்டியர் அடிக்கடி இயேசுவின் வந்திருத்தலைப் பற்றி பேசினார்; திரும்ப நிலைநாட்டப்படும் எருசலேமிலிருந்தே அவருடைய ராஜ்யம் அதிகாரம் செலுத்தும் என்பதாக எதிர்பார்த்தார். லையான்சின் இரேனியஸ், ரோம பேரரசு அழிக்கப்பட்ட பின்பு, இயேசு கண்ணுக்குப் புலப்படும் வகையில் தோன்றி சாத்தானைக் கட்டிப்போட்டு பூமிக்குரிய எருசலேமில் ஆட்சிசெய்வார் என்பதாக கற்பித்தார்.
5. கிறிஸ்துவின் “இரண்டாம் வருகை”யைப் பற்றியும் அவருடைய ஆயிர வருட ஆட்சியைப் பற்றியும் ஒருசில கல்விமான்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள்?
5 “பொதுவான உயிர்த்தெழுதல் மற்றும் நியாயத்தீர்ப்புக்கு முன்பாக ஆயிரமாண்டுகள் உயிர்த்தெழுப்பப்பட்ட புனிதர்களோடுகூட பூமியின்மீது மகிமையில் கிறிஸ்துவின் காணக்கூடிய ஆட்சியில் நம்பிக்கையே” பொ.ச. 325-ல் நைசீயா குழுவின் காலத்துக்கு முன்பாக இருந்த “அதிக குறிப்பிடத்தக்க நம்பிக்கையாக” இருந்தது என்பதாக வரலாற்றாசிரியர் பிலிப் ஷேஃப் குறிப்பிட்டார். ஜேம்ஸ் ஹேஸ்டிங்ஸ் பதிப்பித்த எ டிக்ஷ்னரி ஆஃப் தி பைபிள் இவ்வாறு குறிப்பிடுகிறது: “டெட்ரூலியன், இரேனியஸ், ஹிப்பலிட்டஸ் ஆகியோர் இன்னும் [இயேசு கிறிஸ்துவின்] உடனடியாக நிகழக்கூடிய வருகைக்காக எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்; ஆனால் அலெக்ஸாண்டரின் தந்தைமார் வந்தபிறகு நாம் புதிய ஒரு கருத்துக்குள் பிரவேசித்திருக்கிறோம். . . . பூமியிலுள்ள சர்ச்சின் (church militant) காலப்பகுதியை ஆயிரமாண்டு ஆட்சிக் காலப்பகுதிக்கு சமமாக இருப்பதாக அகஸ்டீன் போதித்தபோது, இரண்டாம் வருகை தூரத்திலிருந்த எதிர்காலத்துக்கு தள்ளிப்போடப்பட்டது.”
யெகோவாவின் நாளும் இயேசுவின் வந்திருத்தலும்
6. யெகோவாவின் நாள் இன்னும் வெகு தூரத்தில் இருக்கிறது என்பதாக நாம் ஏன் முடிவுசெய்துவிடக்கூடாது?
6 தவறான கருத்துக்கள் ஏமாற்றங்களுக்கு வழிநடத்தியிருக்கின்றன; ஆனால் யெகோவாவின் நாள் இன்னும் வெகு தூரத்தில் இருக்கிறது என்று நினைக்காதிருப்போமாக. வேதாகமத்தில் இயேசுவின் காணக்கூடாத வந்திருத்தலோடு இது சம்பந்தப்படுத்திப் பேசப்பட்டிருக்கிறது; இயேசுவின் காணக்கூடாத வந்திருத்தல் ஏற்கெனவே ஆரம்பமாகிவிட்டது. யெகோவாவின் சாட்சிகளுடைய காவற்கோபுர பத்திரிகையும் அதோடு சம்பந்தப்பட்ட மற்ற பிரசுரங்களும் கிறிஸ்துவின் வந்திருத்தல் 1914-ம் ஆண்டில் ஆரம்பமானது என்பதற்கான வேதப்பூர்வமான அத்தாட்சியை அடிக்கடி அளித்துவந்துள்ளன.a அப்படியென்றால் இயேசு தம்முடைய வந்திருத்தலைப்பற்றி என்ன சொன்னார்?
7. (அ) இயேசுவின் வந்திருத்தலுக்கும் காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்குமுரிய அடையாளத்தின் ஒருசில அம்சங்கள் யாவை? (ஆ) நாம் எவ்வாறு இரட்சிக்கப்படக்கூடும்?
7 இயேசுவின் மரணத்துக்குச் சற்று முன்பு அவருடைய வந்திருத்தல் பற்றிய விஷயம் எங்கும் பேசப்படும் பொருளாக ஆனது. எருசலேம் ஆலயத்தின் அழிவைப் பற்றி இயேசு முன்னறிவித்ததைக் கேட்டபிறகு, அவருடைய அப்போஸ்தலர்கள் பேதுரு, யாக்கோபு, யோவான் மற்றும் அந்திரேயா இவ்வாறு கேட்டனர்: “இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வந்திருத்தலுக்கும் காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்கும் அடையாளம் என்னவாயிருக்கும்?” (மத்தேயு 24:1-3 NW; மாற்கு 13:3, 4) இயேசு இதற்கு பதிலளிப்பவராய், யுத்தங்களையும், பஞ்சங்களையும், பூமியதிர்ச்சிகளையும் அவருடைய வந்திருத்தலுக்கும் காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்குமுரிய ‘அடையாளங்களின்’ மற்ற அம்சங்களையும் முன்னுரைத்தார். அவர் மேலுமாகச் சொன்னார்: “முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.” (மத்தேயு 24:13) நம்முடைய தற்போதைய வாழ்நாளின் முடிவுவரையாக அல்லது இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையின் முடிவு வரையாக நாம் உண்மையுடன் நிலைத்திருந்தோமானால் நாம் இரட்சிக்கப்படுவோம்.
8. யூத ஒழுங்குமுறையின் முடிவுக்கு முன்பாக, என்ன செய்து முடிக்கப்பட வேண்டியதாக இருந்தது, அது சம்பந்தமாக இன்று என்ன செய்யப்பட்டு வருகிறது?
8 முடிவுக்கு முன்பாக, இயேசுவின் வந்திருத்தலுக்குரிய விசேஷமாக குறிப்பிடத்தக்க ஒரு அம்சம் நிறைவேற்றமடையும். அதைக் குறித்து அவர் சொன்னதாவது: “ராஜ்யத்தினுடைய இந்த நற்செய்தி குடியிருக்கப்பட்ட பூமி முழுவதிலும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.” (மத்தேயு 24:14, NW) ரோமர்கள் எருசலேமை அழித்து பொ.ச. 70-ல் யூத காரிய ஒழுங்குமுறை முடிவுக்கு வருவதற்கும் முன்பாக நற்செய்தி “வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது,” என்பதாக பவுலால் சொல்ல முடிந்தது. (கொலோசெயர் 1:23) இருப்பினும், இன்று, “குடியிருக்கப்பட்ட பூமி முழுவதிலும்” யெகோவாவின் சாட்சிகளால் இன்னும் மிகப் பரந்த அளவில் பிரசங்க வேலை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளின்போது, கிழக்கு ஐரோப்பாவில் மிகப் பெரியளவில் சாட்சி கொடுக்கப்படுவதற்கான வழியை கடவுள் திறந்துவைத்திருக்கிறார். உலகம் முழுவதிலுமுள்ள அச்சாலைகள் மற்றும் மற்ற வசதிகளின் காரணமாக, யெகோவாவின் அமைப்பு ‘வேலை செய்யப்படாத பிராந்தியத்திலும்’கூட கூடுதலான ஊழியத்தைச் செய்வதற்கு ஆயத்த நிலையில் உள்ளது. (ரோமர் 15:22, 23, NW) முடிவு வருவதற்கு முன்பாக சாட்சிகொடுப்பதில் உங்களால் முடிந்தவற்றையெல்லாம் செய்யும்படியாக உங்கள் இருதயம் உங்களைத் தூண்டுகிறதா? அப்படியானால், முன்னாலிருக்கும் வேலையில் பலனுள்ள ஒரு பங்கைக்கொண்டிருப்பதற்கு கடவுள் உங்களைப் பலப்படுத்தமுடியும்.—பிலிப்பியர் 4:13; 2 தீமோத்தேயு 4:17.
9. மத்தேயு 24:36-ல் பதிவுசெய்யப்பட்டுள்ளபடி, என்ன குறிப்பை இயேசு சொன்னார்?
9 முன்னுரைக்கப்பட்ட ராஜ்ய பிரசங்கிப்பு வேலையும் இயேசுவின் வந்திருத்தலுக்குரிய அடையாளத்தின் மற்ற அம்சங்களும் இப்போது நிறைவேற்றமடைந்து வருகின்றன. ஆகவே, இந்தப் பொல்லாத ஒழுங்குமுறைக்கு முடிவு சமீபத்திலிருக்கிறது. உண்மைதான் இயேசு சொன்னார்: “அந்த நாளையும் நாழிகையையும் என் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.” (மத்தேயு 24:4-14, 36) ஆனால் ‘அந்த நாளுக்கும் நாழிகைக்கும்’ தயாராக இருக்கும்படியாக இயேசுவின் தீர்க்கதரிசனம் நமக்கு உதவிசெய்யலாம்.
அவர்கள் தயாராயிருந்தார்கள்
10. ஆவிக்குரிய விதமாக விழித்திருப்பது சாத்தியமே என்பது நமக்கு எப்படி தெரியும்?
10 யெகோவாவின் பெரிய நாளைத் தப்பிப்பிழைப்பதற்கு, நாம் ஆவிக்குரிய விதமாக விழித்திருந்து உண்மை வணக்கத்தில் உறுதியாக நிலைத்திருக்கவேண்டும். (1 கொரிந்தியர் 16:13) இப்படி சகித்திருக்க நம்மால் முடியும் என்பது நமக்குத் தெரியும், ஏனென்றால் தேவபக்தியுள்ள ஒரு குடும்பம் அவ்விதமாகச் செய்து பொ.ச.மு. 2370-ல் பொல்லாத மனிதர்களை அழித்த அந்த ஜலப்பிரயத்திலிருந்து தப்பிப்பிழைத்தது. அந்தச் சகாப்தத்தை தம்முடைய வந்திருத்தலோடு ஒப்பிட்டு இயேசு இவ்வாறு சொன்னார்: “நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன்வரும் காலத்திலும் நடக்கும். எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.”—மத்தேயு 24:37-39.
11. நோவா தன்னுடைய நாளில் நிலவியிருந்த வன்முறையின் மத்தியிலும் என்ன போக்கை நாடினார்?
11 நம்மைப்போலவே, நோவாவும் அவருடைய குடும்பத்தினரும் வன்முறை நிறைந்த ஒரு உலகத்தில் வாழ்ந்துவந்தார்கள். கீழ்ப்படிதலில்லாத “தேவகுமாரர்” மாம்ச உடலெடுத்துவந்து மனைவிகளை தங்களுக்கு எடுத்துக்கொண்டு கொடிய நெபிலிம்களுக்கு—நிலைமையை இன்னும் அதிக வன்முறையானதாக்கின கொடுமைக்காரர்களுக்கு—தந்தைமாராயினர். (ஆதியாகமம் 6:1, 2, 4; 1 பேதுரு 3:19, 20) என்றபோதிலும், விசுவாசத்தோடு ‘நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தார்.’ அவர் ‘தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே’—தன் காலத்தில் இருந்த பொல்லாத சந்ததிக்குள்ளே—‘நீதிமானும் உத்தமனுமாயிருந்தார்.’ (ஆதியாகமம் 6:9-11) யெகோவாவின் நாளுக்காக நாம் காத்திருக்கையில், கடவுள்மீது ஜெபசிந்தையோடு சார்ந்திருந்து இந்த வன்முறையான மற்றும் பொல்லாத உலகில் நாமும் அதையே செய்யலாம்.
12. (அ) ஒரு பேழையைக் கட்டுவதைத் தவிர, என்ன வேலையை நோவா செய்தார்? (ஆ) நோவாவின் பிரசங்கத்தைக் கேட்டு மக்கள் எவ்வாறு செயல்பட்டனர், அவர்களுக்கு என்ன விளைவுகள் ஏற்பட்டன?
12 ஜலப்பிரளயத்திலிருந்து உயிர்கள் பாதுகாக்கப்படுவதற்கென பேழையை கட்டினதற்காக நோவா நன்கு அறியப்பட்டவராயிருக்கிறார். அவர் “நீதியைப் பிரசங்கி”த்தவராகவும் இருந்தார், ஆனால் அவர் காலத்தில் இருந்தவர்கள் கடவுள் கொடுத்த செய்தியை “உணராதிருந்தார்கள்.” ஜலப்பிரளயம் அவர்கள் அனைவரையும் வாரிக்கொண்டு போகும்வரையாக அவர்கள் புசித்தார்கள், குடித்தார்கள், திருமணம் செய்துகொண்டார்கள், குடும்பங்களைப் பராமரித்தார்கள், மற்றும் வாழ்க்கையின் இயல்பான காரியங்களைச் செய்துகொண்டிருந்தார்கள். (2 பேதுரு 2:5; ஆதியாகமம் 6:14) இன்றைய பொல்லாத சந்ததியாரும்கூட யெகோவாவின் சாட்சிகள் ‘தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக்குறித்தும்’ கிறிஸ்துவை விசுவாசிப்பதைக் குறித்தும், நீதியைக் குறித்தும், இனிவரும் நியாயத்தீர்ப்பைக் குறித்தும் பேசுகையில் தங்கள் காதுகளை மூடிக்கொள்வது போலவே அவர்களும் நேர்மையான பேச்சையும் நடத்தையையும் குறித்து கேட்க விரும்பவில்லை. (அப்போஸ்தலர் 20:20, 21; 24:24, 25) கடவுளுடைய செய்தியை நோவா அறிவித்துக்கொண்டிருக்கையில் பூமியில் எத்தனை பேர் வாழ்ந்துவந்தனர் என்பதைப்பற்றிய எந்தப் பதிவும் இல்லை. ஆனால் ஒரு காரியம் நிச்சயம், பூமியின் மக்கள்தொகை பொ.ச.மு. 2370-ல் மிகவும் தீவிரமாக குறைக்கப்பட்டது! கடவுளுடைய செயலுக்கு தயாராயிருந்த நோவாவையும் அவருடைய குடும்பத்தைச்சேர்ந்த மற்ற ஏழு பேரையும் மட்டுமே விட்டுவிட்டு ஜலப்பிரளயம் பொல்லாதவர்களை துடைத்தழித்துப்போட்டது.—ஆதியாகமம் 7:19-23; 2 பேதுரு 3:5, 6.
13. எந்த நீதிமுறை தீர்ப்பாணையில் நோவா முழு நம்பிக்கை வைத்தார், இதற்கு இசைவாக அவர் எவ்வாறு செயல்பட்டார்?
13 ஜலப்பிரளயம் ஏற்படப்போகிற சரியான நாளையும் நாழிகையையும் பற்றி நோவாவுக்கு கடவுள் பல வருடங்களுக்கு முன்பாகவே அறிவித்துவிடவில்லை. எனினும், நோவா 480 வயதானவராக இருந்தபோது, யெகோவா இவ்வாறு தீர்ப்புகூறினார்: “என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப்போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம்.” (ஆதியாகமம் 6:3) கடவுளுடைய இந்த நீதிமுறை தீர்ப்பாணைமீது நோவா முழு நம்பிக்கை வைத்தார். 500 வயதை எட்டியபிறகு, அவன் “சேம் காம் யாப்பேத் என்பவர்களைப் பெற்றான்.” அந்த நாட்களில் இருந்த பழக்கத்தின்படி அவருடைய குமாரர்கள் திருமணம் செய்வதற்கு முன் 50 முதல் 60 வருடங்கள் கடந்துசென்றிருக்கவேண்டும். ஜலப்பிரளயத்திலிருந்து பாதுகாக்கப்படுவதற்கென பேழையைக் கட்டும்படியாக நோவாவுக்குச் சொல்லப்பட்டபோது, அந்தக் குமாரர்களும் அவர்களுடைய மனைவிமார்களும் அந்த வேலையில் அவருக்கு உதவிசெய்திருக்க வேண்டும். ‘நீதியின் பிரசங்கி’யாக நோவாவின் ஊழியக்காலம் பேழையைக் கட்டும் காலத்தோடு சரியாக ஒத்திருந்தது; ஜலப்பிரளயத்துக்கு முந்தின அந்தக் கடைசி 40 முதல் 50 வருடங்களில் அவரை இது சுறுசுறுப்பாக வைத்திருந்தது. (ஆதியாகமம் 5:32; 6:13-22) அந்த எல்லா ஆண்டுகளின்போதும், அவரும் அவருடைய குடும்பத்தாரும் விசுவாசத்தோடு செயல்பட்டனர். நாமும்கூட நற்செய்தியைப் பிரசங்கித்துக்கொண்டு யெகோவாவின் நாளுக்காக காத்திருக்கையில் விசுவாசத்தை வெளிக்காட்டுவோமாக.—எபிரெயர் 11:7.
14. கடைசியாக யெகோவா நோவாவிடம் என்ன சொன்னார், ஏன்?
14 பேழை கட்டி முடிக்கப்பட்ட சமயத்தில், ஜலப்பிரளயம் எப்போது வரும் என்பதை நுட்பமாக அறிந்திராத போதிலும் அது உடனடியாக வரப்போகிறது என்பதாக நோவா ஒருவேளை யோசித்திருக்கலாம். கடைசியாக யெகோவா அவனிடமாக இவ்வாறு சொல்லவே செய்தார்: “இன்னும் ஏழுநாள் சென்றபின்பு, நாற்பதுநாள் இரவும், பகலும் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்”ணுவேன். (ஆதியாகமம் 7:4) பேழைக்குள் எல்லா வகையான மிருகங்களையும் கொண்டு செல்வதற்கும் ஜலப்பிரளயம் ஆரம்பிப்பதற்கு முன்பாக அவர்கள்தாமே அதில் பிரவேசிப்பதற்கும் அவர்களுக்கு சரியாக போதுமான நேரத்தை மட்டுமே அது கொடுத்தது. இந்த ஒழுங்குமுறையின் அழிவின் ஆரம்பத்தைப் பற்றிய நாளையோ நாழிகையையோ நாம் அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை; மிருகங்களைப் பாதுகாக்க வேண்டிய வேலை நம்மிடம் ஒப்படைக்கப்பட்டில்லை; தப்பிப்பிழைக்கக்கூடிய மனிதர்கள் ஏற்கெனவே அடையாளப்பூர்வமான பேழையாக இருக்கும் கடவுளுடைய ஜனங்களின் ஆவிக்குரிய பரதீஸுக்குள் பிரவேசித்துக்கொண்டிருக்கிறார்கள்.
“விழித்திருங்கள்”
15. (அ) உங்களுடைய சொந்த வார்த்தைகளில், மத்தேயு 24:40-44-ல் காணப்படும் இயேசுவின் வார்த்தைகளை எவ்வாறு நீங்கள் விளக்குவீர்கள்? (ஆ) கடவுளுடைய பழிவாங்குதலை நிறைவேற்றுவதற்கு இயேசு வருகிற சரியான நேரத்தை அறியாதிருப்பது என்ன விளைவைக் கொண்டிருக்கிறது?
15 தம்முடைய வந்திருத்தலைக் குறித்து இயேசு விளக்கினார்: “அப்பொழுது, இரண்டுபேர் வயலில் [வேலைசெய்துகொண்டு] இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான். இரண்டு ஸ்திரீகள் [தானியத்தை மாவாக்க] ஏந்திரம் அரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள். உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள். திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள். நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.” (மத்தேயு 24:40-44; லூக்கா 17:34, 35) கடவுளுடைய பழிவாங்குதலை நிறைவேற்றுவதற்கு இயேசு வருகிற அந்த சரியான நேரத்தை அறியாதிருப்பது நாம் ஜாக்கிரதையாய் இருக்கவும் நாம் யெகோவாவை தன்னலமற்ற நோக்கங்களுக்காக சேவிப்பதை நிரூபிக்க தினமும் நமக்கு வாய்ப்பளிப்பதாகவும் இருக்கிறது.
16. “கைவிடப்படும்” தனிநபர்களுக்கும் ‘ஏற்றுக்கொள்ளப்படுகிறவர்’களுக்கும் என்ன சம்பவிக்கும்?
16 பொல்லாதவர்களோடுகூட அழிக்கப்படுவதற்காக “கைவிடப்படும்” தனிநபர்களில், ஒரு சமயம் அறிவொளிப்பெற்றிருந்துவிட்டு பின்னர் தன்னலமான ஒரு வாழ்க்கை முறையினுள் அமிழ்ந்துவிடும் ஆட்களும் அடங்குவர். யெகோவாவுக்கு முழுமையாக அர்ப்பணித்தவர்களாகவும் ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையின்’ மூலமாக அளிக்கப்பட்டுவரும் அவருடைய ஆவிக்குரிய ஏற்பாடுகளுக்காகவும் உண்மையில் நன்றியுள்ளவர்களாய் ‘ஏற்றுக்கொள்ளப்படுகிறவர்கள்’ மத்தியில் நாம் இருப்போமாக. (மத்தேயு 24:45-47, NW) கடைசி வரையாக, “சுத்தமான இருதயத்திலும் நல்மனசாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும்” தோன்றும் அன்போடு கடவுளைச் சேவிப்போமாக.—1 தீமோத்தேயு 1:5.
பரிசுத்த நடத்தை இன்றியமையாதது
17. (அ) 2 பேதுரு 3:10-ல் என்ன முன்னறிவிக்கப்பட்டது? (ஆ) 2 பேதுரு 3:11 ஊக்குவிக்கும் நடத்தை மற்றும் செயல்களில் சில யாவை?
17 அப்போஸ்தலன் பேதுரு எழுதினார்: “கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம்.” (2 பேதுரு 3:10) அடையாள அர்த்தமுள்ள வானங்களும் பூமியும் கடவுளுடைய எரிகிற கோபத்தைத் தப்பிப்பிழைக்காது. ஆகவே பேதுரு இவ்வாறு மேலுமாகச் சொல்கிறார்: “இப்படி இவைகளெல்லாம் அழிந்துபோகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்க வேண்டும்!” (2 பேதுரு 3:11) கிறிஸ்தவ கூட்டங்களில் தவறாமல் ஆஜராயிருத்தல், மற்றவர்களுக்கு நன்மைசெய்தல், நற்செய்தியை அறிவிப்பதில் பயனுள்ள ஒரு பங்கைக் கொண்டிருத்தல் ஆகியவை இந்த நடத்தையிலும் செயல்களிலும் அடங்கும்.—மத்தேயு 24:14; எபிரெயர் 10:24, 25; 13:16.
18. உலகத்தினிடமாக நாம் ஒரு பற்றுதலை வளர்த்துக்கொண்டிருந்தால், நாம் என்ன செய்யவேண்டும்?
18 “பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும்,” ‘உலகத்தால் கறைபடாதபடிக்கு நம்மைக் காத்துக்கொள்வதைத்’ தேவைப்படுகின்றன. (யாக்கோபு 1:27) ஆனால் இந்த உலகத்தினிடமாக ஒரு பற்றுதலை நாம் வளர்த்துக்கொண்டிருந்தால் அப்போது என்ன? அசுத்தமான பொழுதுபோக்கை நாடுவதன் மூலமாக அல்லது இந்த உலகின் தேவபக்தியற்ற மனநிலையை ஊக்குவிக்கும் இசையையும் பாடல்களையும் கேட்பதன் மூலமாக நாம் கடவுளுக்கு முன்பாக ஆபத்தான ஒரு நிலைக்குள் வசீகரிக்கப்பட்டுவருகிறோம். (2 கொரிந்தியர் 6:14-18) அது அப்படியிருக்குமானால், உலகத்தோடு ஒழிந்துபோகாமல் மனுஷகுமாரனுக்கு முன்பாக நாம் அங்கீகரிக்கப்பட்டவராக நிற்பதற்காக ஜெபத்தில் நாம் கடவுளுடைய உதவியை நாடுவோமாக. (லூக்கா 21:34-36; 1 யோவான் 2:15-17) கடவுளுக்கு நாம் நம்மை ஒப்புக்கொடுத்திருந்தால், நிச்சயமாகவே அவரோடு கனிவான ஒரு உறவை வளர்த்துக்கொண்டு அதைக் காத்துக்கொள்ள நம்மால் ஆன மிகச் சிறந்ததைச் செய்ய விருப்பமுள்ளவர்களாய் இருந்து இவ்விதமாக யெகோவாவின் பெரிதும் பயங்கரமுமுமான நாளுக்காக தயாராக இருப்போம்.
19. இந்தப் பொல்லாத காரிய ஒழுங்குமுறையின் முடிவைக் கடந்து வாழ ராஜ்ய அறிவிப்பாளர்களின் ஒரு கூட்டம் ஏன் எதிர்பார்த்திருக்கலாம்?
19 பூர்வ உலகத்தை அழித்த ஜலப்பிரளயத்திலிருந்து தேவபக்தியுள்ள நோவாவும் அவருடைய குடும்பமும் காக்கப்பட்டார்கள். உத்தமமான தனிநபர்கள் பொ.ச. 70-ல் யூத ஒழுங்குமுறையின் முடிவை தப்பிப்பிழைத்தனர். உதாரணமாக, சுமார் பொ.ச. 96-98-ல் அப்போஸ்தலன் யோவான் வெளிப்படுத்துதல் புத்தகத்தையும், அவருடைய சுவிசேஷ பதிவையும் ஆவியால் ஏவப்பட்ட மூன்று நிருபங்களையும் எழுதியபோது கடவுளுடைய ஊழியத்தில் இன்னும் சுறுசுறுப்பாயிருந்தார். பொ.ச. 33 பெந்தெகொஸ்தே அன்று உண்மையான விசுவாசத்தைத் தழுவிக்கொண்ட ஆயிரக்கணக்கானோரில் அநேகர், யூத ஒழுங்குமுறையின் முடிவை கடந்துவந்தவர்களுக்குள் இருக்கவேண்டும். (அப்போஸ்தலர் 1:15; 2:41, 47; 4:4) இன்று ராஜ்ய அறிவிப்பாளர்களின் ஒரு கூட்டம் தற்போதைய பொல்லாத காரிய ஒழுங்குமுறையின் முடிவைக் கடந்து வாழ்வதற்கு எதிர்பார்த்திருக்கலாம்.
20. நாம் ஏன் வைராக்கியமுள்ள ‘நீதியின் பிரசங்கிகளாக’ இருக்கவேண்டும்?
20 புதிய உலகிற்குள் பாதுகாக்கப்படுதல் நமக்கு முன்னாலிருக்க, வைராக்கியமுள்ள ‘நீதியின் பிரசங்கிகளாக’ நாம் இருப்போமாக. இந்தக் கடைசி நாட்களில் கடவுளைச் சேவிப்பது என்னே ஒரு சிலாக்கியம்! கடவுளுடைய ஜனங்கள் அனுபவித்து மகிழும் ஆவிக்குரிய பரதீஸான தற்கால “பேழைக்குள்” ஜனங்களை வழிநடத்துவது என்னே ஒரு சந்தோஷம்! இப்போது அதிலிருக்கும் லட்சக்கணக்கானோர் உண்மையுள்ளவர்களாக, ஆவிக்குரிய விதத்தில் விழித்திருப்பவர்களாக, யெகோவாவின் பெரிய நாளுக்கு தயாராயிருப்பவர்களாக நிலைத்திருப்பார்களாக. ஆனால் விழித்திருப்பதற்கு நம்மெல்லாருக்கும் எது உதவிசெய்யும்?
[அடிக்குறிப்பு]
a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியா பிரசுரித்துள்ள நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் அறிவு புத்தகத்தில் அதிகாரங்கள் 10 மற்றும் 11-ஐக் காண்க.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ யெகோவாவின் நாளைக் குறித்தும் கிறிஸ்துவின் வந்திருத்தலைக் குறித்தும் சிலர் என்ன எதிர்பார்ப்புகளை கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள்?
◻ நோவாவும் அவருடைய குடும்பமும் ஜலப்பிரளயத்துக்கு தயாராக இருந்தார்கள் என்பதாக நாம் ஏன் சொல்லமுடியும்?
◻ ‘விழித்திருக்கிறவர்’களுக்கும் அவ்வாறு செய்யாதவர்களுக்கும் என்ன சம்பவிக்கும்?
◻ விசேஷமாக யெகோவாவின் பெரிய நாளுக்கு அருகில் நாம் வந்துகொண்டிருக்கையில் பரிசுத்தமான செயல்கள் ஏன் இன்றியமையாதவையாக உள்ளன?