ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
‘உங்கள் வெளிச்சம் மனிதர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது’
இயேசு தம் மலைப்பிரசங்கத்தில் தம்முடைய சீஷர்களிடம் பின்வருமாறு கூறினார்: “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்.” மேலும் அவர்களை இவ்வாறு தொடர்ந்து துரிதப்படுத்தினார்: “மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.”—மத்தேயு 5:14-16.
இத்தாலியில், யெகோவாவின் சாட்சிகளுடைய நற்கிரியைகள் மற்றவர் கண்களிலிருந்து தப்பவில்லை. உதாரணத்திற்கு, தங்களுடைய வருடாந்தர மாநாடுகளுக்குச் செல்லும்போது, அவர்கள் காட்டும் நல்நடத்தை கடவுளுக்கு துதியைக் கொண்டுவருகிறது. இது உண்மை என பின்வரும் அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன:
▪ இத்தாலியிலுள்ள டர்னில் ஒரு பெண் தன்னுடைய மகள் நடத்திவரும் சிற்றுண்டிச்சாலையில் அவளுக்கு உதவிசெய்து வந்தார்; அந்நகரத்திலிருந்த ஸ்டேடியத்திற்கு அருகில் அது அமைந்திருந்தது. அவர் விவரிக்கிறார்: “கால்பந்தாட்டத்தை காணவரும் கூட்டத்தினருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாடுகளுக்கு வருவோருக்கும் இடையே பெரும் வித்தியாசம் இருப்பதை நான் கவனித்தேன். சாட்சிகள் அடக்கமாக உடையணிந்திருந்தார்கள், அவர்கள் நேர்மையானவர்களாகவும், மரியாதை காண்பிப்பவர்களாகவும் இருந்தார்கள். வெவ்வேறு இன மக்களோடு எப்படித்தான் இவ்வளவு நன்றாக ஒத்துப்போகமுடிகிறதோ என்று நான் அடிக்கடி வியப்படைவேன்.
“ஒருநாள் ஒரு சாட்சி என்னை தெருவில் சந்திக்கையில், எனக்கு கடவுளுடைய பெயர் தெரியுமா என்று கேட்டார். எனக்குத் தெரியவில்லை, யெகோவாவின் சாட்சிகள் நல்லவர்கள் என்று எனக்குத் தெரியும்; எனவே என் வீட்டில் வந்துசந்திக்க அவருக்கு அனுமதிகொடுத்தேன். இறந்தவர்களின் நிலைமையைப் பற்றி கேள்விகள் எனக்கு இருந்தன, அவற்றிற்கு பதில்களை பைபிளிலிருந்து அவர் கொடுத்தார். எந்தவித தயக்கமுமின்றி நான் பைபிள் படிப்பை ஏற்றுக்கொண்டேன், இரண்டுவாரங்கள் கழித்து கூட்டங்களுக்கு போக ஆரம்பித்தேன்.
“முதலில் என் மகள் எதிர்ப்பு தெரிவித்தாள், ஆனால் என்னுடைய நடத்தையையும், திடதீர்மானத்தையும் பார்த்த பிறகு, அவளுடைய எண்ணத்தை மாற்றிக்கொண்டாள். ஒன்பது மாதங்களுக்கு முன்புதான் நான் படிக்க ஆரம்பித்தேன். இன்று என் மகளும் மருமகனும் தங்களுடைய சிற்றுண்டிச்சாலைக்கு வாடிக்கையாளர்களாக வரும் சாட்சிகளைப் பற்றி நல்லவிதமாக சொல்கிறார்கள். நான், இந்த ஸ்டேடியத்தில் நடந்த மாநாட்டில் முழுக்காட்டப்பட்டேன்.”
▪ ரோசாட்டோ டெல்யி ஆப்ரூட்ஸி என்னும் இடத்தில் மாநாடு நடந்து முடிந்தப்பின், முகாமிடும் இடத்தின் மேனேஜர் இவ்வாறு குறிப்பிட்டார்: “யெகோவாவின் சாட்சிகள், அவர்கள் செய்யும் எல்லாவற்றிலும் நேர்மையுள்ளவர்களாக இருப்பதை கவனித்தேன். கடந்த வாரம், எனது மேற்பார்வையில் இருக்கும் முகாமிடும் இடத்தில், நாற்பது பேர் தங்கினார்கள், அவர்கள் ஒரு தொல்லையும் தரவில்லை. இன்னும் பார்க்கப்போனால், அவர்களுடைய ஊர்திமனையிலோ (trailer) கூடாரத்திலோ யாராவது எக்ஸ்டராவாக தங்கினால் உங்களிடம் தாங்களாகவே வந்து சொல்பவர்கள் அவர்கள் மாத்திரமே. என்னை பொருத்தமட்டில், நீங்கள் விரும்பும் சிறந்த வாடிக்கையாளர்கள் அவர்களே.”
▪ அதே மாநாடு முடிந்தப்பின், ஒரு ஹோட்டல் மேனேஜர் இவ்வாறு குறிப்பிட்டார்: “யெகோவாவின் சாட்சிகள் அமைதியானவர்கள். அவர்கள் ரவுடிகள் அல்ல, சீக்கிரமே படுக்கைக்குப் போய்விடுவார்கள். அவர்கள் உண்மையில் தயவானவர்கள், நேர்மையுள்ளவர்கள், ஒழுங்காக நடந்துகொள்பவர்கள். எல்லாரும் அவர்களைப்போல் இருந்தால் அற்புதமாக இருக்கும். மற்றவர்கள் எல்லாவற்றையும் திருடுகிறார்கள்; அதாவது மலர் ஜாடிகள், சாம்பல் கிண்ணங்கள் (ashtrays), டாய்லெட் பேப்பரையும் சர்க்கரையையும்கூட திருடுகிறார்கள்! உங்களை பொருத்தமட்டில் அப்படி எதுவும் நடக்கவில்லை. உங்களுடைய பிள்ளைகள் மாலைநேரங்களில் ரெஃப்ரிஜிரேட்டரிலிருந்து ஐஸ்கீரிம்களை எடுத்து சாப்பிடும்போது, அவர்கள் என்ன சாப்பிட்டிருப்பார்களோ, போய் பார்க்கவேண்டுமே என்ற கவலைக்கூட எனக்கு வருவது கிடையாது. அவர்கள் எவ்வளவு கொடுக்கவேண்டும் என்பதை கணக்குப்பார்த்து, உடனே வந்து கொடுத்துவிடுவார்கள். அவர்களிடத்தில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. மற்றவர்களும் அவர்களைப்போலவே இருந்தால் எவ்வளவு அற்புதமாக இருக்கும்! ஆ, என்னுடைய விருந்தினர் எல்லாரும் யெகோவாவின் சாட்சிகளாக இருக்கக்கூடாதா!”
உலகின் மற்ற பகுதிகளில் உள்ளதுபோலவே, இத்தாலியிலும் யெகோவாவின் சாட்சிகள் நற்புகழுக்கு பேர்போனவர்கள். அவர்கள் ‘[மற்றதேசத்தாருக்குள்ளே] நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்கிறார்கள்,’ இவ்வாறாக, உண்மைக் கடவுளின் பெயரை தாங்கி இருக்கும் அவர்கள் அவருக்கு நற்கீர்த்தியைக் கொண்டுவருகிறார்கள்.—1 பேதுரு 2:12.