உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w97 2/15 பக். 30-31
  • அன்பின் உன்னத வழி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அன்பின் உன்னத வழி
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • துணை தலைப்புகள்
  • தேவபக்திக்குரிய அன்பு செயலாற்றும் முறை
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
w97 2/15 பக். 30-31

அன்பின் உன்னத வழி

(This article has been taken from Insight book - Love)

கடவுளைப் போலவே, அன்பும் அவ்வளவு அற்புதமான ஒன்று, வரையறுப்பதும் கஷ்டம். அது எவ்வாறு செயலாற்றுகிறது என்பதை எளிதில் சொல்லிவிடலாம். அப்போஸ்தலனாகிய பவுல் அன்பைப் பற்றி எழுதுகையில், ஒரு கிறிஸ்தவ விசுவாசிக்கு அது எவ்வளவு முக்கியம் என்பதை முதலில் வலியுறுத்திய பிறகு, அது எவ்வாறு தன்னலமற்றவிதத்தில் செயலாற்றுகிறது என்பதை விவரிக்கிறார்: “அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது. அன்புக்குப் பொறாமையில்லை, பெருமை பேசாது, இறுமாப்பு அடையாது, மரியாதையற்றவிதத்தில் நடந்துகொள்ளாது, தன்னலத்தைத் தேடாது, சினமடையாது, வன்மம் வைக்காது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.”—1 கொரிந்தியர் 13:4-7, NW.

தேவபக்திக்குரிய அன்பு செயலாற்றும் முறை

“அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது.” சாதகமற்ற சூழ்நிலைமைகளையும், பிறரது தவறான நடவடிக்கைகளையும் அன்பு பொறுத்துக்கொள்கிறது. தவறு செய்வோரின் அல்லது அத்தகைய சூழ்நிலைமைகளில் உட்பட்டிருப்போரின் இரட்சிப்பிற்கு படிப்படியாக வழிவகுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அவ்வாறு செய்கிறது. மேலும் கடவுளின் பெயருக்கு கனத்தை கொண்டு வரவேண்டும், மேலும் அந்தப் பெயரை நியாயநிரூபணம் செய்யவேண்டும் என்கிற கடைசி நோக்கமும் அன்புக்கு இருக்கிறது. (2 பேதுரு 3:15) எரிச்சலூட்டிய காரியம் எதுவாயினும் அன்பு தயவாக இருக்கும். கிறிஸ்தவர் ஒருவர் மற்றவர்களிடம் முரட்டுத்தனமாக அல்லது கடுமையாக நடந்துகொள்வதனால், ஒரு பிரயோஜனமும் இல்லை. எப்படியிருந்தாலும், அன்பு உறுதியோடு இருக்கும். நீதியின் நிமித்தம் நியாயத்தோடு செயலாற்றும். தவறுசெய்வோரை அதிகாரமுள்ளவர்கள் சிட்சிக்கலாம், ஆனால் அவ்வாறு செய்யும்போதும்கூட தயவோடு அவர்கள் செய்யவேண்டும். தயவற்றத்தன்மை, தயவற்ற ஆலோசகருக்கும் நன்மையைக் கொண்டுவரப்போவதில்லை, அநீதியான செயலை செய்தவருக்கும் நன்மை கொண்டுவரப்போவதில்லை, அதற்குமாறாக தவறுசெய்பவரை மனம்திரும்புவதிலிருந்தும் சரியான செயல்களிலிருந்தும் இன்னும் தூரமாக விலகிப்போகச்செய்யும்.—ரோமர் 2:4.

“அன்புக்குப் பொறாமையில்லை.” மற்றவர்களுக்கு நன்மையான காரியங்கள் வரும்போது அன்பு பொறாமைப்படுவதில்லை. தன்னுடைய உடன்விசுவாசி அதிக பொறுப்புள்ள ஒரு ஸ்தானத்தை பெறுவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சிகொள்கிறது. தன் எதிரிகள் நன்மையான காரியங்களைப் பெறும்போதுகூட அது வெறுப்படைவதில்லை.

அன்பு “பெருமை பேசாது, இறுமாப்பு அடையாது.” அது மனிதரிடமிருந்து புகழ்ச்சியையும், பாராட்டுதலையும் நாடுவதில்லை. (யூதா 16) அன்புள்ள ஒருவர் தன்னை உயர்த்திக் காட்டிக்கொள்வதற்காக அடுத்தவனை கீழே தள்ளிவிட்டு வரமாட்டார். அதற்குமாறாக, அவர் கடவுளை உயர்த்தி புகழுவார், மற்றவர்களுக்கு உள்ளப்பூர்வமாக உற்சாகம் தந்து, கட்டியெழுப்புவார். (கொலோசெயர் 1:3-5) ஒரு கிறிஸ்தவர் முன்னேற்றம் செய்வதைக் கண்டு அவர் மகிழ்ச்சியடைவார். அவர் தான் என்ன செய்யப்போகிறார் என்பதைப்பற்றி பெருமையடித்துக் கொள்ளமாட்டார். (நீதிமொழிகள் 27:1) தான் செய்வதெல்லாம் யெகோவாவிடமிருந்து வரும் பலத்தின் உதவியால்தான் என்பதை அவர் உணர்ந்துகொள்வார்.—சங்கீதம் 34:2.

அன்பு “மரியாதையற்றவிதத்தில் நடந்துகொள்ளாது.” அன்பு பண்பற்ற முறையில் நடந்துகொள்ளாது. பாலின பலாத்காரங்கள் அல்லது அதிர்ச்சிதரும் நடத்தை போன்ற மரியாதையற்ற நடத்தையில் அது ஈடுபடுவதில்லை. அது முரட்டுத்தனமாக, ஆபாசமாக, நற்பண்பற்று, கர்வமாக, தரக்குறைவாக, அவமரியாதையாக எவரிடத்திலும் நடந்துகொள்வதில்லை. அன்புள்ள ஒருவர், தன்னுடைய கிறிஸ்தவ சகோதரரை வெளித்தோற்றத்திலோ செயலிலோ அமைதியிழக்கச் செய்யும் காரியங்களைத் தவிர்த்துவிடுவார். கிறிஸ்தவ விசுவாசிகளாக இல்லாத மற்றவர்களையும் கருத்தில்கொண்டு, மரியாதையோடு நடந்துகொள்ளவும்கூட ஒருவரை முன்னேற்றுவிக்கும் அன்பு.—ரோமர் 13:13.

அன்பு “தன்னலத்தைத் தேடாது.” அது பின்வரும் நியமத்தைப் பின்பற்றுகிறது: “ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன்.” (1 கொரிந்தியர் 10:24) இங்குதான் மற்றவர்களின் நித்திய நலனில் கொண்டுள்ள அக்கறை வெளிப்படுகிறது. மற்றவர்மீதுள்ள இந்த உண்மையான அக்கறைதான் அன்பு என்னும் பண்பில் இருக்கும் வலிமையான உந்துவிக்கும் சக்திகளில் ஒன்று; மேலும் அது விளைவிக்கும் நன்மைகளில் மிகவும் சக்திவாய்ந்த, உபயோகமான ஒன்றாகவும் இருக்கிறது. அன்பை உடைமையாக கொண்டவர், எல்லாவற்றையும் தன் வழியில் செய்யவேண்டும் என்று வற்புறுத்தமாட்டார். அன்பு தன் “உரிமைகளை” நிலைநாட்ட துடிப்பதில்லை; அது மற்றவரின் ஆவிக்குரிய நலனிலேயே அதிக அக்கறையுடையது.—ரோமர் 14:13, 15.

அன்பு “சினமடையாது.” சினமடைவதற்கான ஒரு சந்தர்ப்பத்தையோ சாக்குப்போக்கையோ எதிர்பார்ப்பதில்லை. அது கோபத்தைக் கொட்ட தூண்டப்படுவதில்லை, அவ்வாறு செய்வது மாம்சத்தின் கிரியையாக இருக்கிறது. (கலாத்தியர் 5:19, 20) அன்பு இருக்கும் ஒருவர், மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் அல்லது செய்கிறார்கள் என்பதைக்குறித்து எளிதில் புண்படமாட்டார்.

அன்பு “வன்மம் வைக்காது.” ஏதோ தீங்கு இழைக்கப்பட்டுவிட்டதாகவும், அந்தத் தீங்குக்காக “ஒரு கணக்கு ஏட்டில்” எழுதப்படுவதுபோல தீர்க்கப்படவேண்டிய கணக்கு, அல்லது தீர்த்துவிட்ட கணக்கு, ஏற்றவேளையில் தீர்க்கவேண்டிய கணக்கு என்று பதிவுகளை வைப்பதில்லை; இதற்கிடையில் தீங்கு இழைக்கப்பட்டவருக்கும் தீங்கு இழைத்தவருக்கும் இடையே நல்லுறவை தடைசெய்ய வகைதேடுவதில்லை; அப்படி தடைசெய்ய நினைப்பது வன்மம் வைக்கும் மனோபாவம் ஆகும்; அதனை பைபிள் கண்டனம் செய்கிறது. (ரோமர் 12:19) அன்பு மற்றவரின் இருதயத்தில் தீய எண்ணங்களை போடாது. ஆனால் மற்றவர்களை சந்தேக கண்ணோடு பார்க்காமல், அவர்களின் கருத்தை வரவேற்கும் மனப்பான்மையை அது கொண்டிருக்கும்.—ரோமர் 14:1, 5.

அன்பு “அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.” முன்பு வைத்திருந்த நம்பிக்கைகள் அல்லது கூற்றுகள் தலைகீழாக மாறிவிட்டாலும்கூட அன்பு சத்தியத்தில் சந்தோஷப்படுகிறது. அது கடவுளின் வார்த்தையாகிய சத்தியத்தில் அட்டையைப்போல் ஒட்டிக்கொள்கிறது. எது சரியோ அதன் பக்கமே எப்போதும் நிலைநிற்கை எடுக்கிறது; பொய்யிலும், அல்லது எவ்வகை அநியாயத்திலும் அன்பு ஆனந்தம் அடைவதில்லை; அதற்கு யார் இரையானாலும், ஒருவேளை தனது எதிரியாக இருந்தாலும்கூட அவர் மகிழமாட்டார். இருப்பினும், ஒரு காரியம் தவறு என்றால், அல்லது தவறாக வழிநடத்தும் என்றால், சத்தியத்தின் நலனுக்காகவும் மற்றவர்களின் நலனுக்காகவும் பயமின்றி எடுத்துரைக்கும் அன்பு. (கலாத்தியர் 2:11-14) மேலுமாக, நிலைமையைச் சீர்படுத்தும் முயற்சியில் இன்னொரு தவறை செய்வதற்கு மாறாக, துன்பத்தை ஏற்றுக்கொள்ளவே அது விரும்பும்.—ரோமர் 12:17, 20.

அன்பு “சகலத்தையும் தாங்கும்.” நீதியின் நிமித்தம் அது துன்பப்படவும், தாங்கிக்கொள்ளவும் மனப்பூர்வமாக இருக்கும். அன்புள்ள ஒருவர், தனக்கு தவறு இழைக்கும் ஆளை மற்றவர்களுக்கு அம்பலப்படுத்துவதில் தாமதமாக செயல்படுவார். ஒருவேளை இழைக்கப்பட்ட தீங்கு வினைமையானதாக இல்லாதிருக்கும்பட்சத்தில், அவர் அதனை கண்டுகொள்ளவும் மாட்டார். அப்படியில்லையென்றால், மத்தேயு 18:15-17-ல் இயேசு பரிந்துரைசெய்த நடவடிக்கை பொருத்தமாக இருக்கும் சமயத்தில், அவர் அதனைப் பின்பற்றுவார்.

அன்பு “சகலத்தையும் விசுவாசிக்கும்.” கடவுள் தம்முடைய வார்த்தையாகிய சத்தியத்தில் சொன்ன எல்லாவற்றிலும் அன்புக்கு விசுவாசம் இருக்கிறது. அது, மேலோட்டமாகத் தெரியும் காரியங்கள் முரண்படுபவையாக இருந்தாலும், விசுவாசமற்ற உலகம் அவற்றைப் பற்றி ஏளனம் செய்தாலும் தொடர்ந்து விசுவாசிக்கிறது. இந்த அன்பு, விசேஷமாக கடவுளிடம் கொண்டுள்ள அன்பு, அவரது உண்மைத்தன்மையை ஒப்புக்கொள்ளும் அன்பாகும். அது கடவுள் நிரூபித்திருக்கும் உண்மைப்பற்றுறுதியையும், நம்பகத்தன்மையையும் ஆதாரமாக கொண்டிருக்கிறது. நமக்குத் தெரிந்த, நாம் நேசிக்கும் உண்மையான, விசுவாசமுள்ள நண்பர் ஒருவர் ஏதேனும் சொல்லும்போது, அதற்கான அத்தாட்சி நம்மிடம் இல்லையென்றாலும்கூட அவர் சொல்வதை எப்படி நாம் சந்தேகிக்க மாட்டோமோ அதேபோல் கடவுள் சொல்வதையும் ஒத்துக்கொள்வோம். (யோசுவா 23:14) விசுவாசமுள்ள கிறிஸ்தவ சகோதரரில் நம்பிக்கையை வளரச்செய்வது இந்த அன்பு; அவர்கள் தவறு செய்தார்கள் என்பதற்கு முழுமையான ஆதாரம் இருந்தால் ஒழிய, ஒரு கிறிஸ்தவர் அவர்கள்மீது சந்தேகிக்க மாட்டார் அல்லது அவநம்பிக்கைகொள்ளவும் மாட்டார்.—கலாத்தியர் 5:10; பிலேமோன் 21.

அன்பு “சகலத்தையும் நம்பும்.” யெகோவா வாக்களித்திருக்கும் அனைத்திலும் அது நம்பிக்கை வைத்திருக்கிறது. (ரோமர் 12:12) அது தொடர்ந்து சேவை செய்கிறது; யெகோவா பலனைத்தரவும், விஷயங்கள் சிறிதுசிறிதாக கைகூடிவரச் செய்யவும் பொறுமையோடு அவரை நோக்கி காத்திருக்கிறது. (1 கொரிந்தியர் 3:7) அன்புள்ள ஒருவர் தன் கிறிஸ்தவ சகோதரர்கள் எத்தகைய சூழ்நிலைமைகளில் இருந்தாலும், ஒருவேளை அவர்கள் விசுவாசத்தில் பலவீனமாக இருந்தாலும்கூட அவர்களுக்காக நன்மையானவற்றையே நினைப்பார். அத்தகைய பலவீனரிடத்தில் யெகோவாவே பொறுமையோடு இருக்கும்போது, தானும்கூட அதேபோன்ற ஒரு மனநிலையைக் கொண்டிருக்கவேண்டும் என்பதை அவர் உணர்ந்துகொள்வார்.—2 பேதுரு 3:15.

அன்பு “சகலத்தையும் சகிக்கும்.” யெகோவா தேவனிடத்தில் தன்னுடைய உண்மைமாறாத்தன்மையைக் காத்துக்கொள்ள ஒரு கிறிஸ்தவருக்கு அன்பு தேவை. கடவுளிடம் வைத்திருக்கும் பக்தியின், உண்மைத்தன்மையின் உறுதிப்பாட்டை சோதிப்பதற்காக பிசாசு என்ன செய்தாலும், அந்தக் கிறிஸ்தவர் கடவுளிடத்தில் உண்மையோடு இருக்கும்படி அன்பு சகித்திருக்கும்.—ரோமர் 5:3-5.

“அன்பு ஒருபோதும் தோல்வியடையாது.” அன்புக்கு ஒருபோதும் முடிவில்லை அல்லது அது ஒழிந்துபோகாது. ஒருமுறை விசுவாசித்த காரியங்கள், ஒருவேளை புதியதாக பெற்ற அறிவாலும் புரிந்துகொள்ளுதலாலும் திருத்தப்படலாம்; நம்பிய காரியங்கள் கைகூடியவுடன் நம்பிக்கையும் மாறிவிடலாம்; புதிய காரியங்களில் நம்பிக்கை வைக்கப்படலாம்; ஆனால் அன்போ, அதன் முழுமையோடு என்றும் நிலைத்திருக்கிறது; தொடர்ந்து மேலும் மேலும் உறுதியாக வளர்கிறது. உண்மையில், இவை அனைத்தும் தெய்வீக அன்பை, ஒரு உன்னத பண்பை, நமது வாழ்க்கையில் வளர்க்க கடும் முயற்சி செய்யும்படி பரிந்துரை செய்கின்றன.—1 கொரிந்தியர் 13:8-13, NW.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்