நரகத்தைப் பற்றிய உண்மை
சர்ச் ஆஃப் இங்கிலண்ட் கோட்பாட்டு குழுவின் அறிக்கை ஒன்று, எதிர்பார்ப்புக்கு மாறாக நரகம் என்பது அக்கினி சூளையல்ல; ஆனால் அது தெளிவாக புரிந்துகொள்ளப்பட முடியாத ஒரு வெறுமையான இடமாகும் என்பதாகக் குறிப்பிடுகிறது. “இந்த மாற்றத்துக்கு பல காரணங்கள் உண்டு,” என்பதாக அந்த அறிக்கை விளக்குகிறது. “அவற்றில் ஒன்று திகிலை உண்டுபண்ணும் ஒரு மதத்துக்கு கிறிஸ்தவ விசுவாசத்திலுள்ளவர்களிடமிருந்தும் வெளி ஆட்களிடமிருந்தும் வரும் தார்மீக எதிர்ப்பும், கோடிக்கணக்கானோரை நித்திய வாதனைக்கு உட்படுத்தும் கடவுளைப் பற்றிய வளர்ந்துவரும் ஒரு கருத்து கிறிஸ்துவில் வெளிப்படுத்தப்பட்ட கடவுளின் அன்புக்கு முரணாக இருப்பதும் காரணங்களாகும்.”
நரகத்தைப்பற்றிய பாரம்பரிய கருத்திலிருக்கும் இந்த அசெளகரியம் சர்ச் ஆஃப் இங்கிலண்ட்க்கு மட்டுமே பிரத்தியேகமானதாக இல்லை. பல்வேறு பிரிவுகளில் இருக்கும் மக்கள் பாவிகளை எரிக்கும் பழிவாங்கும் ஒரு கடவுளை வணங்குவதை கடினமாக காண்கின்றனர். “கருணையும் பாசமுமுள்ள ஒரு கடவுளையே மக்கள் விரும்புகிறார்கள்,” என்பதாக டியூக் பல்கலைகழக டிவின்னிட்டி ஸ்கூலின் சமய மற்றும் சமுதாய பேராசிரியர் ஜேக்ஸன் கேரல் சொல்கிறார். “பாவத்தையும் குற்ற உணர்வையும் பற்றி பேசுவது இன்றைய கலாச்சாரத்துக்கு எதிர்மாறாக உள்ளது.”
பைபிள் கற்பிக்கிறவிதமாகவே, நரகம் என்பது அக்கினியால் வதைக்கப்படுவதற்குரிய ஒரு இடம் அல்ல, ஆனால் அது வெறுமனே மரித்த மனிதவர்க்கத்தின் பொதுவான பிரேதக்குழியாகவே இருக்கிறது என்பதாக வெகு காலமாக யெகோவாவின் சாட்சிகள் நம்பிவந்திருக்கின்றனர். இது பிரபலமாக இருக்கிறது என்பதால் இந்தக் கருத்தை அவர்கள் நம்புவதில்லை, ஆனால் பைபிள் பின்வருமாறு சொல்வதால் அப்படி கருதுகிறார்கள்: “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள் . . . பாதாளத்திலே [கத்தோலிக்க டுயே வர்ஷனில் “நரகம்”] செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.”—பிரசங்கி 9:5, 10.
மரித்தோரின் நிலையைப் பற்றிய இந்தத் தெளிவான புரிந்துகொள்ளுதலோடு, உவாட்ச் டவர் சொஸைட்டியின் முதல் தலைவர் சார்ல்ஸ் டேஸ் ரஸல் 1896-ல் இவ்வாறு எழுதினார்: “விசுவாசப் பிரமாணங்களிலும் கீர்த்தனை புத்தகங்களிலும் பிரசங்க மேடைகளிலும் இருந்து தவறாக போதிக்கப்படும் நித்திய வாதனைக்குரிய ஒரு இடத்தை நாம் [பைபிளில்] காண்பதில்லை. இருந்தபோதிலும் ஆதாமின் பாவத்தின் காரணமாக நம்முடைய எல்லா இனமும் கண்டனம் செய்யப்பட்டு அனுப்பிவைக்கப்படும் ஒரு ‘நரகத்தை’, ஷியோலை, ஹேடீஸை, [பைபிளில்] நாம் காண்கிறோம். நம்முடைய கர்த்தருடைய மரணத்தினால் அனைவரும் இதிலிருந்து மீட்கப்படுகிறோம்; அந்த ‘நரகம்’ கல்லறையேயாகும், அதாவது மரித்த நிலையாகும்.”
இவ்வாறாக நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, யெகோவாவின் சாட்சிகள் நரகத்தைப்பற்றிய உண்மையை போதித்து வந்திருக்கிறார்கள்.
[பக்கம் 32-ன் படம்]
சார்ல்ஸ் டி. ரஸல்