வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
செய்தி அறிக்கைகளின்படி, ஒரு குழந்தைப் பிறந்தப்பின்பு, ஒருசில மருத்துவமனைகள் ப்லஸென்டா என்ற பிரசவத்துக்குப்பிறகு வெளியாகும் உறுப்பையும் கொப்பூழ்க்கொடியையும் பாதுகாத்துவைத்து அவற்றிலுள்ள இரத்தத்திலிருந்து பொருட்களைப் பிரித்தெடுக்கின்றன. ஒரு கிறிஸ்தவன் இதைக் குறித்து கவலைப்படவேண்டுமா?
பெரும்பாலான இடங்களில், மேற்கூறப்பட்டதைப் போல எதுவும் நடப்பதில்லை; ஆகவே கிறிஸ்தவர்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் கிடையாது. ஒரு கிறிஸ்தவர் பிரசவத்துக்காகச் செல்லும் மருத்துவமனையில் இப்படிப்பட்ட ஒரு பழக்கம் பின்பற்றப்படுகிறது என்று நம்புவதற்கு மிக நல்ல காரணம் இருக்குமேயானால், ப்லஸென்டாவையும் கொப்பூழ்க்கொடியையும் எறிந்துவிட வேண்டும்; அவை எவ்விதத்திலும் பயன்படுத்தப்படக்கூடாது என்பதாக வெறுமனே மருத்துவரிடம் தெரிவிப்பது சரியாக இருக்கும்.
உயிர் மூலங்களிலிருந்து, விலங்கு அல்லது மனிதனிலிருந்து பல்வேறு மருத்துவப் பொருட்கள் பெறப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, கர்ப்பமாயிருக்கும் குதிரைகளின் சிறுநீரிலிருந்து ஒருசில ஹார்மோன்கள் பிரித்தெடுக்கப்பட்டிருக்கின்றன. குதிரை இரத்தத்திலிருந்து டெட்டனஸ் சீரம் பெறப்பட்டிருக்கிறது; நோயை எதிர்த்துப் போராடுவதற்கு காமா க்ளாப்யூலின், நீண்ட காலமாக மனித ப்லஸென்டாவின் இரத்தத்திலிருந்து (பிரசவத்துக்குப்பின்) பெற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. எதிர்ப்பொருட்கள் மிகுதியாக இருக்கும் இரத்தம், காமா க்ளாப்யூலினைப் பிரித்தெடுப்பதற்காக பக்குவப்படுத்தப்படும்படி ப்லஸென்டாக்களை சில மருத்துவமனைகள் பாதுகாத்து, உறையச்செய்து வைத்திருக்கின்றன; பின்னர் மருந்து தயாரிப்பு ஆய்வுக்கூடங்கள் இவற்றை எடுத்துச்சென்றிருக்கின்றன.
பிரசவத்திற்குப்பின் வரும் இரத்தத்தைப் பயன்படுத்தி ஒரு வகையான வெண்குஷ்டத்துக்கு சிகிச்சையளிப்பதில் வெற்றிபெற்றிருப்பதாக ஆய்வாளர்கள் அண்மையில் உரிமைபாராட்டியிருக்கின்றனர். இந்த இரத்தம் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்க அல்லது மாற்று எலும்பு மஜ்ஜை பொருத்தப்படுவதற்கு பதிலாக பயன்படுத்தப்படலாம் என்பதாக கருதப்படுகிறது. ஆகவே எதிர்காலத்தில் தங்கள் பிள்ளைக்கு சிகிச்சை அளிப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும் பட்சத்தில் அவ்விதமாகச் செய்வதற்காக பிரசவத்துக்குப்பின் வரும் இரத்தத்தை உறைய செய்து அது சேமித்து வைக்கப்படுகிறது என்பதாக ஓரளவான விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது.
இப்படி ப்லஸென்டாவின் இரத்தத்தை வியாபாரமாக்கும் காரியம், கடவுளுடைய பரிபூரண பிரமாணத்திற்கிணங்க தங்கள் சிந்தனையை வழிநடத்தும் உண்மைக் கிறிஸ்தவர்களுக்குப் பிரியமானதாக இருப்பதில்லை. இரத்தத்தைப் பரிசுத்தமானதாக, கடவுள் கொடுத்த உயிரைப் பிரதிநிதித்துவம் செய்வதாக நம்முடைய படைப்பாளர் கருதுகிறார். இரத்தத்தைப் பலிகளின் சம்பந்தமாக பலிபீடத்தின்மீது பயன்படுத்துவதற்கு மாத்திரமே அவர் அதிகாரமளித்திருக்கிறார். (லேவியராகமம் 17:10-12; ஒப்பிடுக: ரோமர் 3:25; 5:8; எபேசியர் 1:7) மற்றபடி ஒரு உயிரிலிருந்து நீக்கப்பட்ட இரத்தம் நிலத்தின்மீது ஊற்றப்பட்டு நீக்கப்பட வேண்டியிருந்தது.—லேவியராகமம் 17:13; உபாகமம் 12:15, 16.
கிறிஸ்தவர்கள் ஒரு விலங்கை வேட்டையாடுகையில் அல்லது வீட்டில் வளரும் கோழி அல்லது ஆட்டை வெட்டுகையில், இரத்தத்தை வடித்தெடுத்துவிடுகின்றனர். அதை சொல்லர்த்தமாக தரையில் ஊற்ற வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் அதை எதற்காகவும் பயன்படுத்துவதற்குப் பதிலாக அதை கீழே ஊற்றிவிடுகின்றனர் என்பதே குறிப்பாக உள்ளது.
மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெறும் கிறிஸ்தவர்கள் தங்கள் உடலிலிருந்து அகற்றப்படும் உயிர்ப்பொருட்கள்—உடலின் கழிவுப் பொருட்களாக, நோயுற்ற திசுவாக அல்லது இரத்தமாக இருந்தாலும் சரி—தூக்கியெறியப்படுகின்றன என்பதை புரிந்துகொள்கின்றனர். சிறுநீர் பரிசோதனை, கட்டியாக வளரக்கூடிய திசுவின் ஆய்வு அல்லது இரத்தப் பரிசோதனை போன்றவை முதலில் செய்யப்பட வேண்டும் என்று ஒரு மருத்துவர் விரும்புவதாக வைத்துக்கொள்வோம். ஆனால் அதற்குப் பின்பு அந்தப் பொருட்கள் உள்ளூர் சட்டத்துக்கு இசைவாக தூக்கியெறியப்பட வேண்டும். மருத்துவமனையிலுள்ள நோயாளி பொதுவாக இந்த விஷயத்தைக் குறித்து விசேஷமாக கேட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதில்லை. ஏனென்றால், இப்படிப்பட்ட உயிர்ப் பொருட்களை எறிந்துவிடுவதே நியாயமானதாகவும் மருத்துவ ரீதியில் விவேகமானதாகவும் இருக்கிறது. இப்படிப்பட்ட இயல்பான ஒரு பழக்கம் பின்பற்றப்படுவதைப் பற்றியதில் சந்தேகிப்பதற்கு ஒரு நோயாளிக்கு நியாயமான காரணமிருக்குமென்றால், அவனோ அல்லது அவளோ சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் இதைக் குறிப்பிடலாம்; மத சம்பந்தமான காரணங்களுக்காக இப்படிப்பட்ட எல்லாப் பொருட்களும் தூக்கியெறியப்பட வேண்டும் என்று தான் விரும்புவதாக சொல்ல வேண்டும்.
என்றபோதிலும் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டபடி இது சராசரி நோயாளிக்கு அரிதாகவே கவலைக்குரிய விஷயமாக உள்ளது, ஏனென்றால் அநேக இடங்களில் ப்லஸென்டாவை அல்லது மற்ற உயிர்ப்பொருட்களை அழிந்துபோகாமல் பாதுகாப்பதையும் மீண்டும் உபயோகிப்பதையும் யாரும் சிந்தித்துப் பார்ப்பதோ அல்லது வழக்கமாக இது செய்யப்படுவதோ கிடையாது.
“தீமையை வெறுப்போமாக” என்ற ஜனவரி 1, 1997 காவற்கோபுரத்தில் தோன்றிய கட்டுரை, சிறு பிள்ளையைப் பாலுறவு தாக்கல் செய்யும் விஷயத்தின்பேரில் கவனத்தை ஊன்ற வைப்பதாகத் தோன்றுகிறது. இந்தப் பழக்கத்தைத் தொகுத்துரைப்பது எவ்வாறு?
“பீடோஃபிலியா” என்பது, “பாலுறவுக்குரிய பொருளாக பிள்ளைகளைத் தெரிந்துகொள்ளும் தகாப் பாலுறவு தாக்கல்” என்று உவெப்ஸ்டர்ஸ் நைன்த் நியூ காலெஜியேட் அகராதி விளக்கம் கூறுகிறது. இந்தப் பழக்கத்தின் அம்சங்கள் உபாகமம் 23:17, 18-ல் கண்டனம் செய்யப்படுகின்றன. ஆலய வேசியாவதற்கு (“அல்லது, ‘ஒரு கட்டமைட்,’ இயற்கைக்கு மாறுபட்ட புணர்ச்சிக்காக வைக்கப்பட்ட சிறுவன்,” NW அடிக்குறிப்பு) எதிராக கடவுள் அங்கு பேசினார். “நாயின்” (“பையன் வேட்கையராகப் பெரும்பாலும் இருக்கலாம்; எருவாய்க்குரிய புணர்ச்சி பழக்கத்தில், முக்கியமாய்ப் ஒரு பையனோடு ஈடுபடுகிற ஒருவன்,” NW அடிக்குறிப்பு) கிரயத்தை ‘யெகோவாவின் ஆலயத்திற்குள்’ எவரும் கொண்டுவரக்கூடாது என்றும் இந்த வசனங்கள் தடை கட்டளையிடுகின்றன. தகாத முறையில் தொட்டு தடவுவது உட்பட, தகாப் பாலுறவு புணர்ச்சிக்காக பிள்ளை பயன்படுத்தப்படுவதைப் பற்றி காவற்கோபுரம் குறிப்பிட்டு உரைத்ததென்பதை இந்த வேதப்பூர்வ மற்றும் உலகப்பிரகார தகவல் குறிப்புகள் உறுதிப்படுத்துகின்றன.