தகவலறிந்து சம்மதிப்பதற்கான உரிமை மறுபடியும் உறுதிசெய்யப்பட்டது
இத்தாலியில், மெஸ்ஸினா நீதிமன்றம் முன்னதாகவே செய்திருந்த விசாரணைகளுக்கு, சமீபத்தில் நீதிபதி அளித்தத் தீர்ப்பு, வயதுவந்தவரின் மருத்துவ விருப்பங்களை மதிப்பது மருத்துவர்மீது கட்டுப்பாடாக அமைந்திருக்கிறதென்பதை திரும்ப உறுதிசெய்தது. யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் உட்பட்ட ஒரு வழக்கில் இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
இரத்த ஒழுக்கு நோயாளியான, 64 வயதாகிய சாட்சி, அன்டோனினோ ஸ்டெல்லாரியோ லென்டினி, ஜனவரி 1994-ல் மெஸ்ஸினாவில், டேயர்மினாவிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு அவசரமாய்க் கொண்டுசெல்லப்பட்டார். அன்டோனினோவின் மனைவி, கப்பேனா, தாங்கள் யெகோவாவின் சாட்சிகளாக இருப்பதால், இரத்தமேற்றும் சிகிச்சையைத் தானும் தன் கணவரும் சம்மதிப்பதில்லை என்று மருத்துவமனை பணியாளரிடம் குறிப்பிட்டு சொன்னார்கள். (அப்போஸ்தலர் 15:20, 28, 29) அவர்களுடைய விருப்பங்களுக்கு மதிப்பு தரப்பட்டது.
எனினும், மற்றொரு உடல்நலக் கவனிப்பு நிலையத்துக்கு அவரைக் கொண்டுசெல்கையில், அன்டோனினோ மூச்சுத்திணறலுக்குள்ளாகி, ஆபத்தான நிலைமையில் கொண்டுபோய்ச் சேர்க்கப்பட்டார். அதன்பின் சீக்கிரத்திலேயே அவர் இறந்துவிட்டார். கப்பேனா மனமுடைந்து போனார்கள், எனினும், உயிர்த்தெழுதலைப்பற்றிய பைபிளின் வாக்கில் மிகுந்த ஆறுதலைக் கண்டடைந்தார்கள். (அப்போஸ்தலர் 24:15) பின்பு, தனக்கு மிகுந்த அதிர்ச்சியுண்டாக, மாஜிஸ்ட்ரேட்டுகள்,—ஒருவேளை செய்தித்தாள்கள் தவறாகப் பரப்பிய செய்தியால் தூண்டப்பட்டு—மருத்துவர்கள் அவருக்கு மிக அவசியமென்று கருதின அறுவை சிகிச்சையை அந்த அம்மாள் மறுத்ததன் காரணமாக தன் கணவருக்கு மரணம் நேரிட செய்தார்களென அவர்களைக் குற்றஞ்சாட்டினார்கள்.
ஓராண்டுக்கு மேல் கடந்த பின்பு, ஜூலை 11, 1995-ல், கப்பேனா, குற்றம் எதுவும் செய்திராததனால், குற்றமற்றவர்களென தீர்க்கப்பட்டார்கள். உண்மையில், அந்த நோயாளியின் நிலைமையைக் கருதுகையில், எவ்வாறாயினும் அறுவை சிகிச்சையும் பயனற்றதாக இருந்திருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் அளித்த சாட்சியங்கள் குறிப்பிட்டுக் காட்டின.
ஆனால் அந்த நீதிபதியின் கூற்றுகள் முக்கிய விவாதமாயிற்று. நோயாளியால் அல்லது அவரைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஆட்களால் ஒரு சிகிச்சை மறுக்கப்படுகையில் மருத்துவர் தலையிட்டு சிகிச்சை செய்யவேண்டுமென்ற எண்ணத்தை ஏற்பது கடினம் என்று அவர் குறிப்பிட்டார். இத்தாலியின் மருத்துவ தார்மீக சட்டம் (deontological code), “எந்தத் தலையிடுதலுக்கும் முன்பாக அக்கறையுள்ள ஆளின் தகவலறிந்த சம்மதத்தைப் பெறுவதன் அவசியத்தை முன்காண்கிறது,” என்று அவர் மேலும் கூறினார். இவ்வாறு, கப்பேனா “தன் கணவர் அத்தகைய ஒரு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவதை நியாயப்படியே தடுத்தார்கள்,” என்றார்.
வயதுவந்த ஓர் ஆணின் அல்லது பெண்ணின் விருப்பங்களுக்கு முரண்படுகிற மருத்துவ சிகிச்சையை அவள் அல்லது அவன் மறுப்பதற்கு உரிமை இருப்பதை இந்தத் தீர்ப்பு திரும்ப உறுதிசெய்கிறது.