லீதியாள்—உபசரிக்கும் பண்புள்ள கடவுளுடைய வணக்கத்தாள்
பண்டைய காலங்களிலிருந்து, மெய்க் கடவுளுடைய ஊழியர்கள் உபசரிக்கும் பண்பை காண்பிப்பதில் சிறப்புக்குரியவர்களாய் தங்களை அடையாளம் காண்பித்திருக்கின்றனர். (ஆதியாகமம் 18:1-8; 19:1-3) “அந்நியரை நேசித்தல், அந்நியர் பேரில் மிகவும் பிரியமாயிருத்தல் அல்லது அந்நியருக்கு தயவு காண்பித்தல்” என்று விளக்கப்பட்டிருக்கும் உபசரிக்கும் பண்பு உண்மை மனதுள்ள இதயத்திலிருந்து தோன்றப்பெறும்போது இன்றும்கூட மெய்க் கிறிஸ்தவத்தின் ஒரு அடையாளமாய் இருக்கிறது. உண்மையில், கடவுளை ஏற்கத்தகுந்த விதத்தில் வணங்கும் அனைவருக்கும் இது ஒரு தேவையாய் இருக்கிறது.—எபிரெயர் 13:2; 1 பேதுரு 4:9.
பின்பற்றத்தக்க விதத்தில் உபசரிக்கும் பண்பை வெளிப்படுத்திக் காண்பித்த ஒரு நபர் லீதியாள் என்பவள். பிலிப்பியை விஜயம் செய்துகொண்டிருந்த கிறிஸ்தவ மிஷனரிகள் தன் வீட்டில் தங்கும்படி அவள் “வருந்திக் கேட்டுக்கொண்டாள்.” (அப்போஸ்தலர் 16:15) லீதியாளைப் பற்றி வேதாகமத்தில் மிகவும் சுருக்கமாக மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவளைக் குறித்து சிறிதளவாக சொல்லப்பட்டிருப்பவை நமக்கு உற்சாகமூட்டுவதாய் இருக்கக்கூடும். எந்த விதத்தில்? லீதியாள் என்பவள் யார்? அவளைப் பற்றி நமக்கு என்ன தெரியும்?
‘இரத்தாம்பரம் விற்கிறவள்’
மக்கெதோனியாவில் இருந்த முக்கிய பட்டணமாகிய பிலிப்பியில் லீதியாள் வாழ்ந்து வந்தாள். இருப்பினும், அவள் தியத்தீரா ஊரைச் சேர்ந்தவள், அது மேற்கத்திய ஆசியாவில் இருந்த லீதியாள் என்ற பகுதியிலிருந்த ஒரு பட்டணம். இதன் காரணமாக, “லீதியாள்” என்ற பெயர் ஒரு செல்லப்பெயராக பிலிப்பியில் அவளுக்கு கொடுக்கப்பட்டது என்று சிலர் கூறுகின்றனர். வேறு வார்த்தைகளில் சொன்னால், இயேசு கிறிஸ்து சாட்சிகொடுத்த பெண்ணை, “சமாரிய ஸ்திரீ” என்று அழைக்கமுடிவது போல அவள் “லீதியாளாக” இருந்தாள். (யோவான் 4:9) லீதியாள் “இரத்தாம்பரம்” அல்லது இந்த வண்ணச்சாயத்தால் பூசப்பட்ட பொருட்களை விற்பனை செய்தாள். (அப்போஸ்தலர் 16:12, 14) தியத்தீராவிலும் பிலிப்பியிலும் சாயத்தொழிலாளிகள் இருந்தனர் என்பது புதைப்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டியெடுத்தவற்றில் பொறித்து வைக்கப்பட்டிருந்த எழுத்துக்களின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. லீதியாள் தன் வேலையின் காரணமாக, ஒருவேளை சொந்தமாக தன் வியாபாரத்தை நடத்துவதற்காகவோ அல்லது தியத்தீரா சாயத்தொழிலாளிகள் கம்பெனியின் பிரதிநிதியாக இருப்பதற்காகவோ அவ்விடத்தை விட்டுச் சென்றிருக்கலாம்.
இரத்தாம்பர சாயத்தை பல்வேறு மூலங்களிலிருந்து பெற்றுக்கொள்ளக்கூடும். சில வகையான கடல்வாழ் நத்தை-சிப்பிகளிலிருந்து மிகவும் விலையுயர்ந்த இரத்தாம்பரம் பிரித்தெடுக்கப்பட்டது. முதல் நூற்றாண்டு ரோம கவிஞன் மார்ஷியலின்படி, தீரு பட்டணத்து (இந்தப் பொருள் உற்பத்தி செய்யப்பட்ட மற்றொரு மையம்) மிகச்சிறந்த இரத்தாம்பர மேலங்கியின் விலை 10,000 வெள்ளி நாணயங்கள் வரை இருக்கும், அல்லது 2,500 நாட்களுக்கு ஒரு தொழிலாளி பெறக்கூடிய வருமானத்துக்கு சமமாயிருக்கும் 2,500 வெள்ளி நாணயங்கள் வரை அதன் விலை இருக்கும். தெளிவாகவே, அப்படிப்பட்ட ஆடைகள் விலையுயர்ந்த ஆடம்பரப் பொருட்களாக வெகு சிலரே பெற்றுக்கொள்ளக்கூடியவையாய் இருந்தன. ஆகையால் லீதியாள் பொருள்சம்பந்தமான விஷயங்களில் செல்வமிக்கவளாய் இருந்திருக்கலாம். எதுவாயிருப்பினும், அவள் அப்போஸ்தலனாகிய பவுலுக்கும் அவருடைய தோழர்களுக்கும்—லூக்கா, சீலா, தீமோத்தேயு, ஒருவேளை மற்றவர்களுக்கும்—உபசரிக்கும் பண்பை காண்பித்தாள்.
பிலிப்பியில் பவுலின் பிரசங்க வேலை
சுமார் பொ.ச. 50-ஆம் ஆண்டில் பவுல் ஐரோப்பாவுக்கு முதல் பயணத்தை செய்து, பிலிப்பியில்a பிரசங்கிக்க ஆரம்பித்தார். பவுல் ஒரு புதிய பட்டணத்தைச் சென்றடைந்தவுடன், ஜெப ஆலயத்துக்குச் சென்று அங்கு ஒன்றுகூடியிருந்த யூதர்களுக்கும் யூத மதத்துக்கு மாறியவர்களுக்கும் முதலில் பிரசங்கிப்பது அவருடைய வழக்கமாயிருந்தது. (ஒப்பிடுக: அப்போஸ்தலர் 13:4, 5, 13, 14; 14:1.) இருப்பினும், சில தகவலின்படி, பிலிப்பியின் “பரிசுத்த எல்லைக்குள்” யூதர்கள் தங்கள் மதத்தை கடைப்பிடிப்பதிலிருந்து ரோமருடைய சட்டம் அவர்களைத் தடைசெய்தது. ஆகையால், அங்கே “சிலநாள்” தங்கியிருந்த பிறகு, ஓய்வுநாளில் மிஷனரிகள் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே ‘வழக்கமாய் ஜெபம்பண்ணுகிற இடத்தில்’ உட்கார்ந்தார்கள். (அப்போஸ்தலர் 16:12, 13) இது கேஞ்சிட்டிஸ் நதி என்பது தெளிவாக இருக்கிறது. அங்கே மிஷனரிகள் பெண்களை மட்டும் பார்த்தனர், அவர்களில் ஒருவர் லீதியாள்.
‘தேவனை வணங்குகிறவள்’
லீதியாள் ‘தேவனை வணங்குகிறவளாய்’ இருந்தாள், ஆனால் அவள் மத சத்தியத்தைத் தேடி யூத மதத்துக்கு மாறிய நபராய் ஒருவேளை இருந்திருக்கலாம். அவளுக்கு நல்ல வருவாயுள்ள வேலை இருந்தபோதிலும், லீதியாள் பொருளாசை உடையவளாய் இருக்கவில்லை. அதற்கு மாறாக, அவள் ஆவிக்குரிய விஷயங்களுக்காக நேரத்தை ஒதுக்கி வைத்தாள். “பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்,” லீதியாள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டாள். உண்மையில், ‘அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றார்கள்.’—அப்போஸ்தலர் 16:14, 15.
லீதியாளின் குடும்பத்திலிருந்த மற்ற அங்கத்தினர்கள் யாவர் என்பதை பைபிள் திட்டவட்டமாக குறிப்பிடுவதில்லை. கணவரைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படாததால், அவள் ஒருவேளை மணமாகாதவளாகவோ அல்லது கணவனை இழந்தவளாகவோ இருந்திருக்கலாம். ஒருவேளை ‘அவளுடைய வீட்டார்’ என்பது உறவினர்கள் அடங்கியதாக இருந்திருக்கலாம், ஆனால் அந்தப் பதம் அடிமைகள் அல்லது வேலைக்காரர்களையும்கூட அர்த்தப்படுத்தக்கூடும். எதுவாயிருப்பினும், லீதியாள் தான் கற்றுக்கொண்ட காரியங்களைத் தன்னோடு வசித்து வந்தவர்களிடம் வைராக்கியத்தோடு பகிர்ந்துகொண்டாள். அவர்கள் மெய் விசுவாசத்தின் பேரில் நம்பிக்கை வைத்து, அதைத் தழுவிக்கொண்டபோது அவள் எப்படி சந்தோஷப்பட்டிருக்க வேண்டும்!
‘நாங்கள் வரும்படி எங்களை வருந்திக் கேட்டுக்கொண்டாள்’
லீதியாளைச் சந்திப்பதற்கு முன்பு, மிஷனரிகள் ஒருவேளை தங்கள் சொந்த செலவில் தங்குவதற்கான இடங்களை பெறுவதில் திருப்தியோடு இருந்திருக்க வேண்டும். ஆனால் அவள் அதற்குப் பதிலாக வேறு தங்கும் இடங்களை அளிக்க சந்தோஷப்பட்டாள். ஆனால் அவள் வருந்திக் கேட்டுக்கொண்டாள் என்ற உண்மையானது, பவுலும் அவருடைய தோழர்களும் அதை ஏற்க மறுத்திருக்க வேண்டும் என்பதை அர்த்தப்படுத்துகிறது. ஏன்? பவுல் எவருக்கும் பாரமாக இல்லாமல், ‘சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கையில் அதைப்பற்றி உண்டாயிருக்கிற அதிகாரத்தை முற்றிலும் செலுத்தாமல், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைச் செலவில்லாமல் ஸ்தாபிப்பதே’ அவருடைய விருப்பமாய் இருந்தது. (1 கொரிந்தியர் 9:18; 2 கொரிந்தியர் 12:14) ஆனால் லூக்கா கூடுதலாக சொல்கிறார்: “அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றபின்பு, அவள் எங்களை நோக்கி: நீங்கள் என்னைக் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று எண்ணினால், என் வீட்டிலே வந்து தங்கியிருங்கள் என்று எங்களை வருந்திக் கேட்டுக்கொண்டாள்.” (அப்போஸ்தலர் 16:15) யெகோவாவுக்கு உண்மையுள்ளவளாய் இருப்பதைக் குறித்து லீதியாள் மிகவும் அக்கறையுள்ளவளாய் இருந்தாள், உபசரிக்கும் பண்பைக் காண்பிப்பது அவளுடைய விசுவாசத்திற்கு வெளிப்படையான அத்தாட்சியாக இருந்தது. (ஒப்பிடுக: 1 பேதுரு 4:9.) என்னே ஒரு தலைசிறந்த முன்மாதிரி! நற்செய்தியைப் பற்றிய அக்கறைகளை முன்னேற்றுவிப்பதற்கு நாமும்கூட நம்முடைய உடைமைகளைப் பயன்படுத்துகிறோமா?
பிலிப்பியிலிருந்த சகோதரர்கள்
பிசாசு பிடித்திருந்த அடிமைப்பெண் உட்பட்டிருந்த சம்பவத்துக்குப் பின் பவுலும் சீலாவும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டபோது அவர்கள் லீதியாளின் வீட்டுக்குத் திரும்பி வந்தனர், அங்கே அவர்கள் சில சகோதரர்களைக் கண்டனர். (அப்போஸ்தலர் 16:40) புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட பிலிப்பி சபையில் இருந்த விசுவாசிகள் ஒழுங்காக ஒன்றுகூடி வருவதற்கு லீதியாளின் வீட்டை பயன்படுத்தியிருக்கலாம். அந்தப் பட்டணத்தில் அவளுடைய வீடு தேவராஜ்ய வேலைகள் செய்வதற்கு ஒரு மையமாக தொடர்ந்து இருந்ததை சிந்தித்துப் பார்ப்பது பொருத்தமானதாய் இருக்கும்.
லீதியாள் ஆரம்பத்தில் காண்பித்த அன்பான உபசரிக்கும் பண்பு முழு சபையின் தனிச்சிறப்புப் பண்பாக நிரூபித்தது. பிலிப்பியர் வறுமையில் இருந்தபோதிலும், அநேக சமயங்களில் அவர்கள் பவுலுக்குத் தேவையானதை அனுப்பி வைத்தனர், அதற்காக அந்த அப்போஸ்தலர் நன்றியுள்ளவராய் இருந்தார்.—2 கொரிந்தியர் 8:1, 2; 11:9; பிலிப்பியர் 4:10, 15, 16.
சுமார் பொ.ச. 60-61-ல் பிலிப்பியருக்கு பவுல் அனுப்பிய கடிதத்தில் லீதியாளின் பெயர் குறிப்பிடப்பட்டில்லை. அப்போஸ்தலர் 16-ஆம் அதிகாரத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ள சம்பவங்களுக்குப் பின் அவளுக்கு என்ன நடந்தது என்பதைக் குறித்து வேதாகமம் வெளிப்படுத்திக் காண்பிப்பதில்லை. இருப்பினும், ஊக்கமிகுந்த இந்தப் பெண்ணைப் பற்றி சுருக்கமாக குறிப்பிடப்பட்டிருப்பது, “அந்நியரை உபசரிக்க நாடுங்கள்” என்ற புத்திமதியை பின்பற்ற விரும்பும்படி நம்மை செய்விக்கிறது. (ரோமர் 12:13) லீதியாளைப் போன்ற கிறிஸ்தவர்களை நம் மத்தியில் கொண்டிருப்பதற்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்! யெகோவா தேவனுக்கு மகிமையை கொண்டுவரும்விதத்தில், அப்படிப்பட்ட நபர்களுடைய மனப்பான்மை சபைகளை அன்பாகவும் சிநேகப்பான்மையாகவும் ஆக்குவதற்கு அதிகத்தைச் செய்கிறது.
[அடிக்குறிப்பு]
a மக்கெதோனியாவில் இருந்த முக்கிய பட்டணங்களில் ஒன்று பிலிப்பி, அது ஓரளவு செழிப்பான இராணுவ குடியிருப்பாக இருந்தது, அது யஸ் ஐட்டாலிக்கம் (இத்தாலிய சட்டம்) என்பதால் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இந்தச் சட்டங்கள் ரோம குடிமக்கள் அனுபவித்து வந்தவற்றுக்கு ஒத்ததாக இருந்த உரிமைகளை பிலிப்பியருக்கு உத்தரவாதமளித்தன.—அப்போஸ்தலர் 16:9, 12, 21.
[பக்கம் 28-ன் பெட்டி]
பிலிப்பியில் யூதருடைய வாழ்க்கை
யூதர்களுக்கும் யூத மதத்துக்கு மாறியவர்களுக்கும் பிலிப்பியில் வாழ்க்கை சுலபமானதாய் இருந்திருக்காது. யூதருக்கு விரோதமாக உணர்ச்சியை எழுப்பும் சில கருத்துக்கள் அங்கு இருந்திருக்கலாம், ஏனென்றால் பவுலின் விஜயத்துக்கு சிறிது காலத்துக்கு முன்பு, பேரரசர் கிலவுதியுராயன் யூதர்களை ரோமிலிருந்து துரத்தியிருந்தார்.—ஒப்பிடுக: அப்போஸ்தலர் 18:2.
குறிப்பிடத்தக்கவிதத்தில், குறிசொல்ல ஏவுகிற ஆவியைக்கொண்டிருந்த அடிமைப் பெண்ணை குணப்படுத்திய பிறகு, பவுலும் சீலாவும் அதிகாரிகளிடத்திற்கு இழுத்துச்செல்லப்பட்டனர். அவளுடைய எஜமான்களுக்கு இப்போது மிகுந்த வருவாயுடைய ஆதாயம் இல்லாமல் போனதால், இவ்வாறு வலியுறுத்திக்கூறுவதன் மூலம் அவர்கள் தங்கள் உடன் குடிமக்களின் தப்பெண்ணங்களை தன்னலத்துக்காகப் பயன்படுத்தினர்: ‘யூதர்களாகிய இந்த மனுஷர் நம்முடைய பட்டணத்தில் கலகம்பண்ணி, ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவும் அநுசரிக்கவும் தகாத முறைமைகளைப் போதிக்கிறார்கள்.’ அதன் காரணமாக, பவுலையும் சீலாவையும் பிரம்பினால் அடித்து சிறையிலே போட்டார்கள். (அப்போஸ்தலர் 16:16-24) அப்படிப்பட்ட சூழ்நிலையில், யூதர்களின் கடவுளாகிய யெகோவாவை வெளிப்படையாக வணங்குவது தைரியத்தை தேவைப்படுத்தியது. ஆனால் தெளிவாகத் தெரிகிறபடி, தான் வித்தியாசமானவளாய் இருந்ததைக் குறித்து லீதியாள் பொருட்படுத்தவில்லை.
[பக்கம் 27-ன் படங்கள்]
பிலிப்பியில் இடிபாடுகள்