ஜலப்பிரளய புராணக் கதை பைபிள் பதிவை ஆதரிக்கிறது
ஒரு சரித்திரப்பூர்வமான உண்மை, நோவாவின் நாளில் ஏற்பட்ட பூகோள ஜலப்பிரளயம். உலகமுழுவதிலுமுள்ள அநேக வித்தியாசமான நாகரிகங்களில் பேசப்பட்டு வரும் உண்மை சரித்திரத்தில் அப்பதிவின் பல்வேறு விவரிப்புகள் காணப்படுகின்றன. சாத் என்ற ஆப்பிரிக்க தேசத்தில் மௌசே பழங்குடியினர் ஜலப்பிரளயத்தை இப்படியாக விளக்குகின்றனர்:
‘முன்பு ஒரு காலத்தில் தொலைதூரத்திலிருந்த ஒரு இடத்தில் ஒரு குடும்பம் வசித்து வந்தது. ஒரு நாள், இந்த குடும்பத்தின் தாய், தன் அன்பான குடும்ப அங்கத்தினருக்கு மிகவும் சிறப்பான விருந்து சாப்பாடு தயார்செய்ய விரும்பினார்கள். ஆகையால் அவர்கள் தானியத்தை மாவாக இடிப்பதற்கு தன் உரலையும் உலக்கையையும் எடுத்துக்கொண்டார்கள். அந்தச் சமயத்தில் வானம் இப்போது இருப்பதைவிட மிகவும் அருகாமையில் இருந்தது. உண்மையில், உங்கள் கையை நீட்டினால் நீங்கள் அதை தொட்டுவிடலாம். அவர்கள் தன் பலத்தையெல்லாம் வைத்து தானியத்தை இடித்தார்கள், அவர்கள் இடித்த தினை சீக்கிரத்தில் மாவாக மாறிவிட்டது. ஆனால் இடித்துக்கொண்டே இருக்கையில், அந்தப் பெண் உலக்கையை அஜாக்கிரதையாக உயரே தூக்கினார்கள், அப்போது வானத்தில் ஒரு துளை போட்டுவிட்டார்கள்! உடனடியாக, ஏராளமான தண்ணீர் பூமியின் மீது விழ ஆரம்பித்தது. இது சாதாரண மழையாக இருக்கவில்லை. முழு பூமியும் தண்ணீரால் மூடும்வரை ஏழு நாட்களும் ஏழு இரவுகளும் மழை பெய்தது. மழை விழுந்தபோது, வானம் இப்போது எங்கே இருக்கிறதோ அதுவரை அது மேலே எழ ஆரம்பித்தது—எட்டமுடியாத அளவு உயரே சென்றது. மனித சமுதாயத்துக்கு என்னே ஒரு அழிவு! அதுமுதற்கொண்டு வானத்தை நம் கைகளால் தொடும் சிலாக்கியத்தை நாம் இழந்திருக்கிறோம்.’
பூகோள ஜலப்பிரளயத்தைப் பற்றிக் கூறும் பண்டையகால பதிவுகள் உலகமுழுவதிலும் காணப்படுகின்றன என்பது ஆர்வத்துக்குரியது. அமெரிக்காக்களின் பூர்வீக நாகரிகங்களும் ஆஸ்திரேலியாவின் பழங்குடி மக்களும் அதைப் பற்றிய கதைகளை கொண்டிருக்கின்றனர். விவரங்கள் ஒருவேளை வித்தியாசப்படலாம், ஆனால் பூமி தண்ணீரால் மூடப்பட்டது என்றும் மனிதன் உண்டாக்கியிருந்த பெரிய படகில் வெகு சில ஜனங்களே தப்பிப்பிழைத்தனர் என்றும் கூறும் கருத்தை பெரும்பாலான பதிவுகள் காண்பிக்கின்றன. பைபிளில் விவரித்திருக்கிறபடி, ஒரு உலகளாவிய ஜலப்பிரளயம் ஏற்பட்டது என்ற உண்மைக்கு இந்தச் சம்பவத்தைப் பற்றிய விஷயங்கள் பரவலாக இருத்தல் கூடுதலான ஆதரவை அளிக்கிறது.—ஆதியாகமம் 7:11-20.