‘இயல்பாகவே ஞானமுள்ள’ உயிரினங்கள் நமக்கு என்ன கற்றுக்கொடுக்கக்கூடும்
ஏர்கண்டிஷனிங், உவர்நீரிலிருந்து உப்பு நீக்குதல், நீருக்குக் கீழுள்ள பொருள்களை எதிரொலி முறையில் கண்டறியும் கருவி (சோனார்) போன்றவை 20-ம் நூற்றாண்டில் மனிதவர்க்கம் பரவலாக அறிந்திருக்கும் கண்டுபிடிப்புகளாக இருக்கின்றன. இருப்பினும், அவை மிருகங்களின் உலகில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இருந்தன. ஆம், அப்படிப்பட்ட ‘இயல்பாகவே ஞானமுள்ள’ உயிரினங்களை கவனித்தறிவதன் மூலம் மனிதவர்க்கம் பயனடைகிறது. (நீதிமொழிகள் 30:24-28; யோபு 12:7-9) சில மிருகங்கள் பேசாமலேயே மனிதவர்க்கத்துக்கு பாடம் கற்பிப்பவையாக ஆகியிருப்பதாய் தோன்றுகிறது, அவற்றை ஆராய்ந்து பார்ப்பது நமக்கு அதிக ஆர்வமூட்டுவதாக இருக்கலாம்.
சில மிருகங்களின் பண்புகளை சிந்தித்துப் பார்ப்பதன் மூலம் நாம் பயனடையலாமா? இயேசு கிறிஸ்து தம்மைப் பின்பற்றுகிறவர்களை செம்மறியாடுகள், சர்ப்பங்கள், புறாக்கள், வெட்டுக்கிளிகளுக்கும்கூட ஒப்பிட்டார். தம்மைப் பின்பற்றுகிறவர்களை இப்படிப்பட்ட உயிரினங்களுக்கு ஒப்பிட்டபோது அவர் எதை மனதில் வைத்திருந்தார்? நாம் அதைப் பார்ப்போம்.
“என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது”
பைபிளில் செம்மறியாடு 200 தடவைக்கும் மேலாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஸ்மித்ஸ் பைபிள் டிக்ஷ்னரி விளக்குகிறபடி, “சாந்தம், பொறுமை, கீழ்ப்படிதல் ஆகியவற்றுக்கு செம்மறியாடு அடையாளமாக இருக்கிறது.” ஏசாயா 53-ஆம் அதிகாரத்தில், இயேசுதாமே ஒரு செம்மறியாட்டுக்கு தீர்க்கதரிசனத்தில் ஒப்பிடப்பட்டிருந்தார். தம்மைப் பின்பற்றுகிறவர்களை அதே மிருகத்துக்கு அவர் ஒப்பிடுவது எவ்வளவு பொருத்தமாய் இருக்க வேண்டும்! ஆனால் செம்மறியாட்டின் எந்தத் தனிச்சிறப்பான பண்புகளை இயேசு மனதில் வைத்திருந்தார்?
“என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது,” என்று இயேசு சொன்னார். (யோவான் 10:27) இவ்வாறு அவர் தம் சீஷர்களின் சாந்தகுணத்தையும் அவரைப் பின்பற்றுவதற்கு அவர்களுக்கு இருந்த மிகுதியான ஆர்வத்தையும் சிறப்பித்துக் காண்பித்தார். சொல்லர்த்தமான செம்மறியாடுகள் மேய்ப்பருக்கு செவிகொடுத்து அவரை மனமுவந்து பின்பற்றிச் செல்கின்றன. மேய்ப்பனும்கூட மந்தையிடம் மிகவும் நெருக்கமான பற்றுதலை வைத்திருக்கிறார்.
பசும்புல்வெளியில் மேய்ந்துகொண்டிருக்கையில் மந்தை அங்குமிங்குமாக சிதறி கிடக்கலாம், ஆனால் ஒவ்வொரு செம்மறியாடும் அதன் தொகுதியோடு தொடர்பு வைத்திருக்கும். இவ்வாறு, மிருகங்கள் பாதுகாப்பற்று உணர்ந்தாலோ அல்லது பயப்பட்டாலோ, “அவை விரைவாக ஒன்றுசேர்ந்து கொள்ளலாம்,” என்று அலஸ் ஃபர் டாஸ் ஷாஃப் (செம்மறியாடுகளுக்காக எல்லாம்) என்ற புத்தகம் குறிப்பிடுகிறது. அபாயத்திலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக செம்மறியாடுகள் ஓடினால், அவை ஒரு மந்தையாக ஓடும், சூழ்நிலையை மறுபடியும் மதிப்பிட்டுப் பார்ப்பதற்காக அவ்வப்போது நிற்கும். “படிப்படியாக ஓடுவது ஆட்டுக்குட்டிகளையும் பலவீனமான மிருகங்களையும் தொடர்ந்து இருக்கும்படி செய்விக்கும். மந்தை அவற்றிற்கு விசேஷ பாதுகாப்பும்கூட அளிக்கிறது.” இந்த நடத்தையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
மெய்க் கிறிஸ்தவர்கள் இன்று கிறிஸ்தவமண்டலத்தின் பல்வேறு தொகுதிகளிலும் உட்பிரிவுகளிலும் சிதறிக் கிடப்பதில்லை. அதற்கு மாறாக, அவர்கள் ஒரே மந்தைக்குள் கூட்டிச் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இந்தக் கடவுளுடைய மந்தைக்கு ஒவ்வொரு கிறிஸ்தவனும் தனிப்பட்ட பற்றுதலை காண்பிக்கிறார், இது யெகோவாவின் சாட்சிகளுடைய அமைப்பின் ஒற்றுமைக்கு உதவியளிக்கிறது. எப்போதெல்லாம் இக்கட்டான நிலை ஏற்படுகிறதோ—கடும் நோய், போர், அல்லது இயற்கை சேதம் எதுவாயிருப்பினும்—அப்போதெல்லாம் ஒவ்வொரு வணக்கத்தாரும் வழிநடத்துதலையும் பாதுகாப்பையும் எங்கே நாடுகிறார்? யெகோவாவின் அமைப்பில் நாடுகிறார், அது ஆவிக்குரிய பாதுகாப்பை அளிக்கிறது.
பைபிளின் புத்திமதி எவ்வாறு கிடைக்கிறது? காவற்கோபுரம் மற்றும் அதன் துணை இதழான விழித்தெழு! பிரசுரங்களின் மூலம். ஒரு மந்தையில் ஆட்டுக்குட்டிகளும் பலவீனமான ஆடுகளும் இருப்பது போல, கூடுதலான கவனிப்பு தேவைப்படுவோருக்கு இந்தப் பத்திரிகைகளும் கிறிஸ்தவ கூட்டங்களும்கூட விசேஷ உதவியை அளிக்கின்றன. உதாரணமாக, ஒற்றைப்பெற்றோருக்கும் மனச்சோர்வினால் துன்புறுவோருக்கும் கவனிப்பு கொடுக்கப்படுகிறது. ஆகையால், ஒவ்வொரு பத்திரிகையை வாசிப்பதும், சபையின் ஒவ்வொரு கூட்டத்துக்கு ஆஜராவதும், நாம் கற்றுக்கொள்பவற்றை பொருத்துவதும் எவ்வளவு ஞானமான காரியம்! இவ்வாறு செய்வதன் மூலம் நாம் சாந்தகுணத்தையும் கடவுளுடைய மந்தையினிடமாக பலமான பற்றுதலையும் வெளிப்படுத்திக் காண்பிக்கிறோம்.—1 பேதுரு 5:2.
“சர்ப்பங்களைப் போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப் போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்”
ஸ்மித்ஸ் பைபிள் டிக்ஷ்னரி இவ்வாறு குறிப்பிடுகிறது: “சர்ப்பம், கிழக்கத்திய பகுதி முழுவதும் தீய நியமத்துக்கு, கீழ்ப்படியாமையின் ஆவிக்கு ஓர் அடையாளமாக பயன்படுத்தப்பட்டது.” மறுபட்சத்தில், “என் புறாவே” என்ற பதம் அன்புக்குரிய ஒன்றாக இருந்தது. (உன்னதப்பாட்டு 5:2) “சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்” என்று தம்மைப் பின்பற்றுகிறவர்களை உற்சாகப்படுத்தியபோது இயேசு எதை மனதில் வைத்திருந்தார்?—மத்தேயு 10:16.
பிரசங்கிப்பதற்கும் போதிப்பதற்கும் தேவைப்பட்ட போதனைகளை இயேசு கொடுத்துக் கொண்டிருந்தார். பிரசங்க வேலையில் அவருடைய சீஷர்கள் சாதகமான மற்றும் சாதகமற்ற பிரதிபலிப்புகளை எதிர்பார்க்கக்கூடும். சிலர் மட்டுமே அக்கறை காண்பிப்பர், ஆனால் மற்றவர்களோ நற்செய்தியை நிராகரித்து விடுவர். இப்படிப்பட்ட கடவுளுடைய உண்மையான ஊழியர்களை சிலர் துன்புறுத்தவும்கூட செய்வர். (மத்தேயு 10:17-23) சீஷர்கள் எவ்வாறு துன்புறுத்தலுக்கு பிரதிபலிக்க வேண்டும்?
டாஸ் இவான்ஜெலியம் டெஸ் மட்டௌஸ்-ல் (மத்தேயுவின் சுவிசேஷம்) ஃபிரிட்ஸ் ரீநெக்கர் மத்தேயு 10:16-ஐக் குறித்து இவ்வாறு சொல்கிறார்: “புத்திசாலித்தனம் . . . உத்தமத்தன்மை, நேர்மை, ஒளிவுமறைவின்மை போன்றவற்றோடு இணைந்திருக்க வேண்டும், நியாயமான காரணத்தினிமித்தம் விரோதிகள் குறைகூறுவதற்கு எதுவும் நிகழாமலிருப்பதற்கு அவ்வாறு இருக்க வேண்டும். இயேசுவின் ஸ்தானாதிபதிகள் இரக்கமற்ற கொடிய எதிரிகள் மத்தியில் இருக்கின்றனர்; அவர்கள் அப்போஸ்தலருக்கு எந்தவிதமான கரிசனையும் காண்பிப்பதில்லை, அவர்களை இரக்கமின்றி தாக்கி, வேண்டுமென்றே அசட்டை செய்தும் வருகின்றனர். எனவே, ஒரு சர்ப்பத்தைப் போல எதிரிகள் மேல் கவனமாய் கண்களை வைத்து, சூழ்நிலையை விழிப்போடு ஆராய்வது அவசியம்; சூழ்ச்சி அல்லது போலித்தனம் எதுவுமின்றி சூழ்நிலையை கட்டுப்படுத்த வேண்டும், வார்த்தையிலும் செயலிலும் தூய்மையாகவும் உண்மையாகவும் இருந்து தங்களைப் புறாக்களைப் போல் நிரூபிக்க வேண்டும்.”
மத்தேயு 10:16-ல் காணப்படும் இயேசுவின் வார்த்தைகளிலிருந்து கடவுளின் நவீனநாளைய ஊழியர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? முதல் நூற்றாண்டில் இருந்ததுபோலவே இன்றும் ஜனங்கள் நற்செய்திக்கு அதே விதத்தில் பிரதிபலிக்கின்றனர். துன்புறுத்தலை எதிர்ப்படுகையில், மெய்க் கிறிஸ்தவர்கள் சர்ப்பத்தின் புத்திசாலித்தனத்தையும் புறாவின் தூய்மையையும் ஒன்றுசேர்க்க வேண்டும். கிறிஸ்தவர்கள் வஞ்சகம் அல்லது நேர்மையற்றத்தன்மை போன்றவற்றை பயன்படுத்துவதில்லை, ஆனால் அதற்கு மாறாக, மற்றவர்களுக்கு ராஜ்ய செய்தியை அறிவிப்பதில் களங்கமில்லாமலும், உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்கின்றனர்.
அதை விளக்குவதற்கு: வேலை செய்யுமிடத்தில் உடன்கூட்டாளிகளோ, பள்ளியில் இளைஞர்களோ அல்லது உங்கள் சொந்த குடும்பத்திலுள்ள அங்கத்தினர்களோகூட ஒரு யெகோவாவின் சாட்சியாக நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைகளைக் குறித்து உள்ளத்தைப் புண்படுத்தும் குறிப்புகளை சொல்லலாம். உடனடியாக அவர்களுடைய விசுவாசத்தைக் குறித்து அதேவிதமாக புண்படுத்தும் விதத்தில் பிரதிபலிக்கலாம். ஆனால் அது கபடமற்றத்தன்மையா? நிச்சயமாகவே இல்லை. குற்றம் கண்டுபிடிப்பவர்கள் உங்களைப் பற்றி சொல்லும் குறிப்புகள், உங்கள் இனிமையான நடத்தையின் மீது எந்தப் பாதிப்பையும் கொண்டில்லையென்றால், அவர்கள் புண்படுத்தும் குறிப்புகள் சொல்வதை நிறுத்திவிடுவார்கள். அப்போது நீங்கள் புத்திசாலிகளாகவும் குற்றமற்றவர்களாகவும் ‘சர்ப்பங்களைப் போல வினாவுள்ளவர்களும், புறாவைப் போல கபடற்றவர்களுமாய்’ இருப்பீர்கள்.
“வெட்டுக்கிளிகளின் உருவம் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட குதிரைகளுக்கு ஒப்பாயிருந்தது”
“பதிவுசெய்யப்பட்டிருக்கும் சரித்திரத்திலேயே [வெட்டுக்கிளிகளின்] மிகப்பெரிய கூட்டம் ஒன்று” 1784-ல் தென் ஆப்பிரிக்காவை நாசமாக்கினது என்று ஜியோ பத்திரிகை அறிக்கையிடுகிறது. அக்கூட்டம் 5,200 சதுர கிலோமீட்டர் பரப்பளவை மூடிக்கொண்டது, அது ஹாங்காங்கின் அளவுக்கு ஏறக்குறைய ஐந்து மடங்காக இருக்கிறது. “அவை விஜயம் செய்யும் தேசங்களிலுள்ள தாவரங்களை மிகவும் மோசமாக நாசம் செய்கின்றன” என்று ஸ்மித்ஸ் பைபிள் டிக்ஷ்னரி வெட்டுக்கிளிகளைப் பற்றி சொல்கிறது.
இயேசு, “கர்த்தருடைய நாளில்” சம்பவிக்கப்போகிறவற்றைக் குறித்து கடவுள் கொடுத்த காரியங்களை வெளிப்படுத்துகையில், வெட்டுக்கிளிகளின் கூட்டத்தைப் பற்றிய ஒரு காட்சியை பயன்படுத்தினார். அவற்றைக் குறித்து இவ்வாறு சொல்லப்பட்டது: “அந்த வெட்டுக்கிளிகளின் உருவம் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட குதிரைகளுக்கு ஒப்பாயிருந்தது.” (வெளிப்படுத்துதல் 1:1, 10; 9:3-7) இவ்வாறு அடையாள அர்த்தத்தில் குறிப்பிடுவதன் முக்கியத்துவம் என்னவாயிருந்தது?
வெளிப்படுத்துதல் 9-ஆம் அதிகாரத்திலுள்ள வெட்டுக்கிளிகள், இந்த நூற்றாண்டில் பூமியின் மீதுள்ள அபிஷேகம்செய்யப்பட்ட கடவுளுடைய ஊழியர்களை வருணிக்கின்றன என்று யெகோவாவின் சாட்சிகள் வெகு காலமாக விளங்கிக்கொண்டிருக்கின்றனர்.a இந்தக் கிறிஸ்தவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வேலை —ராஜ்ய செய்தியை உலகமுழுவதும் பிரசங்கித்து சீஷர்களை உண்டுபண்ணும் வேலை—நியமிக்கப்பட்டிருக்கிறது. (மத்தேயு 24:14; 28:19, 20) இடையூறுகளை மேற்கொண்டு தங்கள் வேலையில் விடாமுயற்சியுடன் இருப்பதை இது தேவைப்படுத்துகிறது. வெல்லமுடியாத வெட்டுக்கிளியைக் காட்டிலும் வேறு எது இதை நல்ல முறையில் விளக்கிக் காண்பிக்க முடியும்?
வெட்டுக்கிளி ஐந்து சென்டிமீட்டருக்கும் சற்று கூடுதலான நீளம் மட்டுமேயிருந்தாலும், பொதுவாக அது ஒரு நாளுக்கு 100 முதல் 200 கிலோமீட்டர் வரை பிரயாணம் செய்கிறது. இடம் விட்டு இடம் பெயர்ந்துசென்று பாழாக்கும் வெட்டுக்கிளி, 1,000 கிலோமீட்டர் வரையிலும்கூட பிரயாணம் செய்யும். “அதன் சிறகுகள் ஒரு வினாடிக்கு 18 தடவையும் ஒரு நாளுக்கு 17 மணிநேரங்கள் வரையாகவும் துடிக்கின்றன—இது வேறு எந்தப் பூச்சியும் செய்யமுடியாத ஒரு காரியமாயிருக்கிறது,” என்று ஜியோ பத்திரிகை விளக்குகிறது. அப்படிப்பட்ட ஒரு சின்னஞ்சிறிய உயிரினத்துக்கு என்னே ஒரு மிகப் பெரிய வேலை!
ஒரு தொகுதியாக, யெகோவாவின் சாட்சிகள் ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் உறுதியாய் இருக்கின்றனர். அவர்கள் இப்போது 230-க்கும் மேற்பட்ட தேசங்களில் பிரசங்கித்து வருகின்றனர். இப்படிப்பட்ட கடவுளுடைய ஊழியர்கள் இவ்வேலையை செய்துமுடிப்பதில் ஒரு பங்கைக் கொண்டிருப்பதற்கு அநேக கஷ்டங்களை மேற்கொள்கின்றனர். அவர்கள் என்ன வகையான பிரச்சினைகளை எதிர்ப்படுகின்றனர்? தப்பெண்ணம், சட்டப்படியான தடைகள், நோய், உற்சாகமிழத்தல், உறவினர்களிடமிருந்து எதிர்ப்பு ஆகியவை அவற்றில் சில. ஆனால் முன்னேற்றம் செய்வதிலிருந்து அவர்களை எதுவும் தடைசெய்வதில்லை. கடவுள் கொடுத்திருக்கும் வேலையை அவர்கள் தொடர்ந்து விடாமுயற்சியுடன் செய்கின்றனர்.
கிறிஸ்தவ பண்புகளை தொடர்ந்து வெளிக்காட்டுங்கள்
ஆம், இயேசு தம்மைப் பின்பற்றுகிறவர்களை செம்மறியாடுகள், சர்ப்பங்கள், புறாக்கள், வெட்டுக்கிளிகள் ஆகியவற்றுக்கு ஒப்பிட்டார். இது உண்மையில் நம் நாளுக்கு பொருத்தமாய் இருக்கிறது. ஏன்? ஏனென்றால் இந்த ஒழுங்குமுறையின் முடிவு மிகவும் அருகாமையில் இருப்பதாலும், பிரச்சினைகள் எப்போதும் இருப்பதைக் காட்டிலும் மிகவும் நெருக்கித்தள்ளுவதாய் இருப்பதாலும் அவ்வாறு இருக்கிறது.
இயேசு எடுத்துக்காட்டாகப் பயன்படுத்திய வார்த்தைகளை மனதில் வைத்தவர்களாய், மெய்க் கிறிஸ்தவர்கள் கடவுளுடைய மந்தையோடு மிகவும் நெருக்கமாய் இருந்து, யெகோவாவின் அமைப்பிலிருந்து வரும் புத்திமதியை தாழ்மையோடு ஏற்றுக்கொள்கின்றனர். அவர்கள் கவனமுள்ளவர்களாயும் தங்கள் கிறிஸ்தவ நடவடிக்கைகளை தடுத்து இடையூறுக்குள்ளாக்கும் சூழ்நிலைகளுக்கு விழிப்புள்ளவர்களாயும் இருந்து, எல்லா காரியங்களிலும் குற்றமற்றவர்களாய் நிலைத்திருக்கின்றனர். மேலும், இடையூறுகளின் மத்தியிலும் கடவுளுடைய சித்தத்தை செய்வதில் விடாமுயற்சியுடன் இருக்கின்றனர். அவர்கள் ‘இயல்பாகவே ஞானமுள்ள’ உயிரினங்கள் சிலவற்றிடமிருந்து தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கின்றனர்.
[அடிக்குறிப்பு]
a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியா பிரசுரித்திருக்கும் வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! புத்தகத்தில் அதிகாரம் 22-ஐ பாருங்கள்.