பணி ஓய்வு—தேவராஜ்ய வேலைகள் செய்வதற்கு திறக்கப்படும் ஒரு கதவா?
பணியிலிருந்து ஓய்வு—அநேகருக்கு அது மன அழுத்தமும் எரிச்சலும் நிறைந்த நீண்ட காலப்பகுதி ஒன்றை முடிவுக்குக் கொண்டுவருகிறது. சலிப்புண்டாக்கி சோர்வுறச்செய்து அல்லது மிகவும் மும்முரமாக அன்றாடம் செய்யும் வேலைகளால் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு, பல வருடங்கள் நிம்மதியாக ஓய்வையும் தனிப்பட்ட சுயாதீனத்தையும் அனுபவிக்கலாம் என்று பணியிலிருந்து ஓய்வுபெறும் அந்த வாய்ப்புக்காக அநேகர் எதிர்நோக்கியிருக்கின்றனர். ஆனால் அந்த எதிர்பார்ப்பு பெரும்பாலும் சலிப்புக்கும் மந்தமான நிலைக்கும் வழிநடத்துகிறது. ஓய்வுநேர பொழுதுபோக்கும் விரும்பி செய்யும் வேலைகளும், பணி அளிக்கும் சுயமதிப்பு உணர்வைத் தருவதில்லை.
ஆனால் யெகோவாவின் சாட்சிகளுக்கோ, பணியிலிருந்து ஓய்வுபெறுவது, “பெரிதும் அநுகூலமுமான கதவு” ஒன்றைத் திறக்கக்கூடும். (1 கொரிந்தியர் 16:9) வயதாகிக்கொண்டே செல்லுதல் அதற்குரிய பிரச்சினைகளையும் குறைபாடுகளையும் கொண்டுவந்தாலும், சில வயதானவர்கள் யெகோவாவின் உதவியோடு தங்கள் சேவையை அவருக்கு அதிகரிக்கலாம் என்பதை கண்டுபிடித்திருக்கின்றனர். நெதர்லாந்திலுள்ள சில வயதான கிறிஸ்தவர்களின் அனுபவங்களை சிந்தித்துப் பாருங்கள். 1995-ஆம் ஊழிய ஆண்டின்போது, 1,223-க்கும் மேற்பட்ட பயனியர்களில் (முழுநேர ராஜ்ய அறிவிப்பாளர்கள்) 269 பேர் 50 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுள்ளவர்களாய் இருந்தனர். இந்த 269 பயனியர்களில், 81 பேர் 65 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுள்ளவர்களாய் இருந்தனர்.
உலகப்பிரகாரமான பணியில் இருந்தபோது அவர்கள் நிலைநாட்டியிருந்த சுறுசுறுப்பான வேகத்தைத் தொடருவதன் மூலம் சிலரால் பயனியர் ஊழியம் செய்ய முடிகிறது. (ஒப்பிடுக: பிலிப்பியர் 3:16.) பணியிலிருந்து ஓய்வுபெற்றிருக்கும் கேரல் என்ற பெயருள்ள ஒரு கிறிஸ்தவர் நினைவுபடுத்தி சொல்கிறார்: “நான் உலகப்பிரகாரமான வேலை செய்தபோது, காலை 7:30 மணிக்கு என் வேலையை ஆரம்பித்துவிடுவேன். நான் ஓய்வூதியத்தை பெற ஆரம்பித்தவுடன், அதே வழக்கமுறையைப் பின்பற்ற தீர்மானித்தேன். நான் ஒவ்வொரு நாள் காலையும் ஏழு மணிக்கு ரயில் நிலையத்துக்கு எதிரே தெருவில் பத்திரிகை ஊழியம் செய்வதன் மூலம் அந்நாளை ஆரம்பிப்பேன்.”
கவனமாக திட்டமிடுதலும்கூட வெற்றிக்கு திறவுகோலாக உள்ளது. (நீதிமொழிகள் 21:5) உதாரணமாக, சிலர் ஊழியம் செய்கையில் தங்களை ஆதரித்துக்கொள்வதற்கென போதுமான அளவு பணத்தை சேமித்து வைக்கின்றனர். வேறு சிலர், தனிப்பட்ட செலவுகளைக் குறைத்துக்கொண்டு பகுதி-நேர வேலை பெற்றுக்கொள்ள தீர்மானித்திருக்கின்றனர். டோடர் மற்றும் ஆன் என்பவர்களை சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் தங்கள் மணவாழ்க்கையை பயனியர்களாக ஆரம்பித்தனர், குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக பயனியர் ஊழியம் செய்வதை நிறுத்திவிட்டனர். ஆனால் அவர்களுடைய பயனியர் ஆவி எப்போதும் உயிர்ப்புள்ளதாய் இருந்துகொண்டே இருந்தது! அவர்களுடைய மகள்கள் வளர்ந்த பிறகு, பயனியர் ஊழியம் செய்யும்படி எப்போதும் உற்சாகப்படுத்திக்கொண்டே இருந்தனர். அதிமுக்கியமாக, டோடரும் ஆனும் அடிக்கடி துணைப்பயனியர் ஊழியம் செய்வதன் மூலம் நல்ல முன்மாதிரியை வைத்தனர். மகள்கள் பெரியவர்களாக வளர்ந்த பிறகு, டோடரும் ஆனும் வெளி ஊழியத்தில் கூடுதலான நேரம் செலவிடுவதற்காக உலகப்பிரகாரமான வேலை செய்வதை நிறுத்திவிட்டனர்.
தங்களுடைய மகள்கள் முழுநேர ஊழியம் செய்ய ஆரம்பித்து வீட்டை விட்டு சென்றபின்பு, ஆன் பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தார், அவள் ஒரு நாள் டோடர் தன் வேலையை விட்டுவிடும்படி உற்சாகப்படுத்தினாள். “நாம் இருவரும் பயனியர் ஊழியம் செய்யலாம்,” என்று அவள் ஆலோசனை கூறினாள். டோடர் தன் முதலாளியிடம் தன்னுடைய எண்ணங்களை தெரிவித்தார். அவர் ஆச்சரியப்படும்விதத்தில், முதலாளி அவருக்கு பகுதி-நேர வேலை அளிப்பதன் மூலம் உதவி செய்வதாக கூறினார்: “மேலே [பரலோகத்தில்] இருக்கும் உங்கள் முதலாளிக்கு முழுநேரமாக வேலை செய்ய விரும்புகிறீர்கள் என்று நான் நினைக்கிறேன்.” டோடரும் ஆனும் இப்போது ஒன்றாக சேர்ந்து பயனியர் ஊழியத்தை அனுபவிக்கின்றனர்.
தங்கள் வாழ்க்கையில் உருவான சூழ்நிலைகளுக்குப் பிரதிபலித்து சிலர் பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தனர். பெரும் வருத்தம்தரும் விதத்தில் தங்கள் மகளும் பேரப்பிள்ளையும் இறந்தபோது, ஒரு வயதான தம்பதியினர் எஞ்சியிருந்த தங்கள் வாழ்நாளை உபயோகித்துக்கொண்டிருந்த விதத்தைக் குறித்து கருத்தார்ந்த விதத்தில் மிகவும் ஆழமாக சிந்தித்துப் பார்க்கும்படி செய்விக்கப்பட்டனர். (பிரசங்கி 7:2) துக்கத்தால் மூழ்கிவிடாமல் அவர்கள் முழுநேர ஊழியத்தை ஏற்றுக்கொண்டனர், அவர்கள் அதை இப்போது எட்டு வருடங்களுக்கும் மேலாக அனுபவித்து வருகின்றனர்!
முழுநேர ஊழியத்தில் நிலைத்திருப்பதற்கு மனமார்ந்த உறுதி தேவை என்பது ஒப்புக்கொள்ளத்தக்கதே. உதாரணமாக, எர்னஸ்ட்டும் அவருடைய மனைவி ரெக்கும் அவர்களுடைய பிள்ளைகள் வீட்டை விட்டுச் சென்றவுடனேயே பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தனர். அதற்குப் பிறகு விரைவில் ஒரு முன்னாள் தொழில் கூட்டாளி எர்னஸ்ட்டுக்கு மிகுந்த வருவாயுள்ள வேலை ஒன்றை அளித்தார். எர்னஸ்ட் பதிலளித்தார்: “எங்களுக்கு மிகச் சிறந்த முதலாளி இருக்கிறார், ஆகையால் நாங்கள் யெகோவாவுக்கு சேவை செய்வதை நிறுத்திவிட விரும்பவில்லை!” எர்னஸ்ட்டும் அவருடைய மனைவியும் யெகோவாவின் “பணியில்” நிலைத்திருந்ததன் காரணமாக, அவர்களுக்கு கூடுதலான ஊழிய சிலாக்கியங்கள் கிடைத்தன. அவர்கள் வட்டார வேலையில் 20 வருடங்களுக்கும் மேலாக சேவை செய்தனர், இந்நாள் வரையாக தொடர்ந்து பயனியர்களாக சேவித்து வருகிறார்கள். அவர்கள் தங்கள் சுயதியாகமுள்ள வாழ்க்கைப்போக்கை குறித்து வருந்துகின்றனரா? சில காலத்துக்கு முன்பு அத்தம்பதியினர் இவ்வாறு எழுதினர்: “யெகோவாவுக்குச் சித்தமானால், மூன்று மாதங்களுக்குள் எங்கள் 50 ஆண்டுகள் அடங்கிய மணவாழ்க்கையை நாங்கள் கொண்டாட எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம், அது திருமணப் பொன்விழா என்று பெரும்பாலும் அழைக்கப்படுகிறது. ஆனால் நாங்கள் பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தபோதுதானே உண்மையில் எங்கள் பொன்னான ஆண்டுகள் ஆரம்பமாயின என்று நாங்கள் முழு உறுதியோடு சொல்கிறோம்.”
அதிகரிக்கப்பட்ட வேலைக்கு வழிநடத்தும் கதவு அதிகரிக்கப்பட்ட சந்தோஷத்துக்கும்கூட வழிநடத்துகிறது என்பதை அநேகர் கண்டுபிடித்திருக்கின்றனர்! 65 வயதை அடைந்த பிறகு இரண்டு வாரங்கள் கழித்து பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்த ஒரு சகோதரர் சொல்கிறார்: “கடந்த பத்து வருடங்கள் பயனியர் ஊழியம் செய்த காலப்பகுதியின்போதுதானே என் வாழ்க்கை அவ்வளவு செழுமையான ஆசீர்வாதங்களால் நிறைந்திருந்ததே தவிர வேறு எந்தச் சமயத்திலும் அல்ல.” ஏழு வருடங்களுக்கும் மேலாக பயனியர் ஊழியம் செய்திருக்கும் ஒரு மணமான தம்பதி இவ்வாறு சொல்கிறார்கள்: “எங்கள் வயதுள்ள மற்றும் எங்கள் சூழ்நிலைகளில் உள்ள தம்பதியினர் வேறு என்ன செய்துகொண்டிருக்க வேண்டும்? எங்களைப் போன்ற சூழ்நிலையில் உள்ள ஜனங்களை நாங்கள் பிராந்தியத்தில் அடிக்கடி காண்கிறோம்—வீட்டில் சுகமாக வாழ்ந்து, வெறுமனே பருமனாகிக்கொண்டும் தொய்வாகிக்கொண்டும் இருக்கின்றனர். ஊழியம் எங்களை உடல் சம்பந்தமாகவும் மன சம்பந்தமாகவும் ஆரோக்கியத்துடன் வைக்கிறது. நாங்கள் எப்போதும் ஒன்றுசேர்ந்து இருக்கிறோம். நாங்கள் அதிகமாக சிரித்து வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.”
எல்லா வயதானவர்களுமே பயனியர் ஊழியம் செய்வதற்கு அவர்களுடைய சூழ்நிலைகள் அனுமதிப்பதில்லை. யெகோவா தம்முடைய சேவையில் அவர்களால் செய்ய முடிந்தவற்றை போற்றுகிறார் என்று இந்தக் கிறிஸ்தவர்கள் உறுதியோடிருக்கலாம். (ஒப்பிடுக: மாற்கு 12:41-44.) உதாரணமாக, சக்தியற்று பலவீனமாயிருக்கும் ஒரு சகோதரி ஒரு நர்ஸிங் ஹோமில் தங்கியிருக்கிறார்கள். அவ்வாறு இருந்தபோதிலும், வேலைகள் செய்வதற்கான கதவு அவர்களுக்கு இன்னும் திறக்கப்பட்டிருக்கிறது! அவர்கள் எவ்வாறு தங்கள் நேரத்தை செலவிடமுடிகிறது என்று ஒரு மருத்துவர் அவர்களைக் கேட்டார். அவர் சொல்கிறார்: “எனக்கு போதுமான நேரம் இருப்பதில்லை. அவரால் அதை விளங்கிக்கொள்ள முடியவில்லை. இது ஏனென்றால் என் நாட்கள் திருப்திகரமான வேலைகளால் நிறைந்திருக்கின்றன என்று நான் அவரிடம் சொன்னேன். நான் தனிமையாக உணருவதில்லை, தனிமையாய் இருக்கும் மற்றவர்களை தேடிப்பிடித்து, கடவுள் மனிதவர்க்கத்துக்காக எதிர்காலத்தில் என்ன வைத்திருக்கிறார் என்பதை அவர்களிடம் சொல்ல முயற்சி செய்கிறேன்.” அவர்கள் இவ்வாறு விஷயங்களை சுருக்கி சொல்கிறார்கள்: “சுமார் 80 வயதாயிருக்கும் ஒருவரிடமிருந்து நீங்கள் அதிகத்தை எதிர்பார்க்க முடியாது. நான் தொடர்ந்து அநேகரை யெகோவாவிடம் வழிநடத்துவதற்கு எனக்காக ஜெபியுங்கள்.”
நீங்கள் பணியிலிருந்து ஓய்வுபெறும் வயதை அடைந்திருக்கிறீர்களா? குறைவாக வேலைகள் செய்வதற்கான தூண்டுதல் மிகவும் கவர்ச்சியூட்டுவதாய் இருக்கலாம், ஆனால் அது ஆவிக்குரிய ஆசீர்வாதத்துக்கு வழிநடத்தும் கதவு அல்ல. ஜெபசிந்தையோடு உங்கள் சூழ்நிலைகளை ஆராய்ந்து பாருங்கள். யெகோவாவின் சேவையில் அதிகமான வேலைக்கு வழிநடத்தும் கதவின் வழியாக நீங்கள் செல்லக்கூடியவர்களாக இருக்கலாம்.
[பக்கம் 25-ன் படங்கள்]
பணியிலிருந்து ஓய்வுபெறுதல், ஊழியத்தில் அதிகரிக்கப்பட்ட வேலைக்கு வழிநடத்தக்கூடும்