என் நீண்டகால நம்பிக்கை —ஒருபோதும் மரிக்காமலிருப்பதே
ஹெக்டர் ஆர். ப்ரீஸ்ட் கூறியபடி
“இந்தப் புற்றுநோயை குணப்படுத்த முடியாது, இனி எங்களால் உங்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது,” என்று மருத்துவர் கூறினார். அந்த வியாதி நிர்ணயிக்கப்பட்டது, பத்து ஆண்டுகளுக்கும் முன்னால். ஆயினும், பூமியில் ஒருபோதும் மரிக்காமல், என்றும் வாழலாம் என்ற பைபிளின் அடிப்படையில் உள்ள நம்பிக்கையை நான் இன்றும் மனதில் வைத்திருக்கிறேன்.—யோவான் 11.26.
உண்மையான மெத்தடிஸ்ட்டுகளாயிருந்த என் பெற்றோர், எங்கள் குடும்பப் பண்ணைக்கு பக்கத்திலிருந்த ஒரு சிறிய பட்டணத்திலுள்ள சர்ச்சிற்கு ஒழுங்காகச் செல்பவர்களாயிருந்தார்கள். நியூ ஜீலாந்தில், வெலிங்டனுக்கு வடகிழக்கில், சுமார் 130 கிலோமீட்டர் தூரத்திலுள்ள வைராராப்பா என்ற அழகியப் பண்ணைப் பள்ளத்தாக்கிலே நான் பிறந்தேன். அங்கே பனிமூடிய மலைகள், தெளிவான மலையாறுகள், அலை அலையான மேடுபள்ளங்களையுடைய குன்றுகள் மற்றும் செழிப்பான சமவெளிகள் போன்ற காட்சிகளைக் கண்டுகளித்தோம்.
மெத்தடிஸ்ட் சர்ச்சில், எல்லா நல்லவர்களும் பரலோகத்திற்கும், கெட்டவர்கள் ஒரு வதைக்கும் இடமான நரகத்திற்கும் போவார்கள் என்றும் கற்பிக்கப்பட்டோம். பரலோகத்தில் மனிதர்கள் வாழ வேண்டும் என்று கடவுள் விரும்பியிருந்தால், ஏன் முதலில் அவர்களை அங்கேயே படைக்கவில்லை என்று எனக்குப் புரியவில்லை. மரணத்திற்கு நான் எப்போதும் பயந்திருந்து, நாம் ஏன் சாகவேண்டும் என்று அடிக்கடி வியந்திருக்கிறேன். 1927-ல், நான் 16 வயதாயிருக்கும்போது, எங்கள் குடும்பம் ஒரு விசனகரமான நிகழ்ச்சியினால் பாதிக்கப்பட்டது. இதுதான் என்னுடைய கேள்விகளுக்கான பதில்களைத் தேடிச்செல்ல என்னை வழிநடத்தியது.
ரெஜ் ஏன் இறந்தான்?
என்னுடைய சகோதரன் ரெஜ் 11 வயதாயிருக்கும்போது, ஆபத்தானவிதத்தில் நோயுற்றான். அவனுக்கு என்னவாயிற்று என்று மருத்துவரினால் தீர்மானிக்கவும், உதவி செய்யவும் முடியவில்லை. மெத்தடிஸ்ட் மத குருவை என் தாயார் அழைத்தார். அவர் ரெஜ்ஜிக்காக ஜெபித்தாலும், அம்மாவிற்கு இது ஆறுதலளிக்கத் தவறியது. உண்மையைச் சொன்னால், அந்த குருவின் ஜெபங்கள் பலனளிக்கவில்லை என்று அவரிடமே அம்மா கூறிவிட்டார்.
ரெஜ் இறந்தபோது, தன்னுடைய இளம் மகன் எதற்காக சாகவேண்டும் என்பதைக் குறித்த உண்மையுள்ள பதிலுக்கான தன்னுடைய தாகத்தை தீர்த்துக்கொள்ளும் முயற்சியுடன், அம்மா எல்லாரிடமும் பேசுவார். பட்டணத்திலுள்ள ஒரு வியாபாரியுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, இறந்தவர்களின் நிலைமையைக் குறித்து ஏதாவது தெரியுமா என்று அவரிடம் கேட்டார். அவருக்கு அதைக் குறித்து எந்த கருத்தும் இருக்கவில்லை. ஆனால், “இங்கே யாரோ ஒருவர் ஒரு புத்தகத்தை விட்டுச்சென்றுள்ளார். அதை நீங்கள் தாராளமாக வைத்துக்கொள்ளலாம்,” என்றார்.
அம்மா அந்தப் புத்தகத்தை வீட்டுக்கு எடுத்துப்போய் படிக்க ஆரம்பித்தார். அவரால் அதைக் கீழே வைக்க முடியவில்லை. படிப்படியாக, அவருடைய முழு மனநிலையும் மாறியது. “இதேதான்; இதுதான் சத்தியம்,” என்று குடும்பத்தினரிடம் கூறினார். அது, வேதவசனங்களிலிருந்து பாடங்களின் முதல் தொகுதியான, காலங்களின் தெய்வீகத் திட்டம் என்ற ஆங்கில புத்தகமாயிருந்தது. நான் முதலில் அதை நம்பத் தயாராயில்லை. சிருஷ்டிகரின் நோக்கத்தைக் குறித்து அப்புத்தகம் காட்டியிருந்ததை எதிர்த்து, விவாதிக்க முயற்சித்தேன். கடைசியிலே, என் விவாதங்கள் நின்றுபோயின.
பைபிள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளுதல்
‘ஒருபோதும் மரிக்காமல், என்றும் வாழ்வதைப்பற்றி கற்பனைசெய்!’ என்று நான் யோசித்தேன். ஒரு அன்பான கடவுளிடமிருந்து அப்படிப்பட்டதைத்தான் ஒருவர் எதிர்பார்ப்பார். ஒரு பரதீஸான பூமி! ஆம், இது எனக்குத்தான்.
இப்படிப்பட்ட அற்புதமான சத்தியங்களைக் கற்றபின், அம்மாவும், வெலிங்டனிலுள்ள மூன்று கிறிஸ்தவ சகோதரிகளான தாம்ஸன், பார்டன், மற்றும் ஜோன்ஸ் ஆகியோரும் நாட்டுப்புறங்களில் ராஜ்யத்தின் விதைகளை எல்லா திசைகளிலும் பரப்ப, பலநாட்கள் ஒன்றுசேர்ந்தாற்போல் வெளியே இருப்பார்கள். அம்மாவின் மிஷனரி ஆர்வத்தைப்போல அப்பாவிற்கு இல்லையென்றாலும், அம்மாவின் செயலை ஆதரித்தார்.
சத்தியத்தை குறித்து நான் திருப்தியடைந்திருந்தாலும், என்னுடைய நம்பிக்கைகளைப் பற்றி சில காலமாக ஒன்றுமே செய்யாமலிருந்தேன். 1935-ல் நான் ரோயீனா கார்லெட்டை மணந்தேன். காலப்போக்கிலே ஈனெட் என்ற மகளையும், பாரி என்ற மகனையும் அருளப்பெற்றோம். சுற்றிலுமுள்ள விவசாயிகளிடமிருந்து, ஆயிரக்கணக்கான கால்நடைகளை வாங்குபவனாக நான் வேலைசெய்தேன். இந்த விவசாயிகள் அரசியலைக் குறித்து விவாதிக்கும்போது, “இதைப்போன்ற மனிதர்களின் முயற்சி எதுவும் வெற்றிபெறாது. கடவுளுடைய ராஜ்யம் மாத்திரமே வெற்றிபெறும் ஒரே அரசாங்கமாக இருக்கும்,” என்று நான் அவர்களிடம் கூறினபோது சந்தோஷமாக உணருவேன்.
விசனகரமாக, நான் புகையிலைக்கு அடிமையானேன்; என் வாயில் எப்போதும் ஒரு சுருட்டு இருந்தது. காலப்போக்கில், என் உடல்நலம் மோசமடைந்து, வேதனையான வயிற்றுப்பிரச்சினைகளோடு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டேன். என்னுடைய புகைப்பழக்கத்தால், எனக்கு கடுமையான இரைப்பை-குடல் சார்ந்த வியாதி உள்ளது என்று கூறப்பட்டது. அந்தப் பழக்கத்தை நான் விட்டுவிட்டாலும், என்றுமாக நீடித்திருக்கக்கூடிய ஒரு சிகரெட்டையோ அல்லது சுருட்டையோ புகைபிடித்துக் கொண்டிருக்கிறதுபோல கனவு காண்பது என் வழக்கமாயிருந்தது. புகையிலைக்கு அடிமையாகுதல் என்னே பயங்கரமானதாயிருக்கும்!
புகைபழக்கத்தை நிறுத்தியவுடன், மற்ற முக்கியமான ஒழுங்குப்படுத்துதல்களைச் செய்தேன். 1939-ல், நான் 28 வயதாயிருக்கும்போது, நாட்டுப்புறத்திலுள்ள எங்கள் வீட்டிற்கு அருகாமையிலுள்ள மாங்டைய் நதியிலே முழுக்காட்டப்பட்டேன். நியூ ஜீலாந்திலுள்ள பிரசங்க வேலையின் கண்காணிப்பை பின்னர் கொண்டிருந்த ராபெர்ட் லேஸன்பி, எங்கள் வீட்டிலே பேச்சுக் கொடுக்கவும் என்னை முழுக்காட்டவும் வெலிங்டனிலிருந்து பயணப்பட்டு வந்தார். அந்த சமயத்திலிருந்து, யெகோவாவிற்கு ஒரு தைரியமான சாட்சியானேன்.
பிரசங்க வேலையை ஒழுங்கமைத்தல்
என்னுடைய முழுக்காட்டுதலைத் தொடர்ந்து, எகட்டாஹுன சபையின் கண்காணியாக நியமிக்கப்பட்டேன். என் மனைவி ரோயீனா, பைபிள் சத்தியத்தை இன்னும் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. ஆயினும், வீட்டுக்கு வீடு எப்படி ஒழுங்காக சாட்சி கொடுப்பதென்பதைக் காட்ட பாஹீயாட்டூவ என்ற இடத்திலிருந்து ஆல்ஃப் ப்ரயன்ட் என்பவரை அழைக்கப்போகிறேன் என அவளுக்குத் தெரியப்படுத்தினேன். பிரசங்க வேலையை ஒழுங்கமைத்து, எங்கள் பிராந்தியத்தை முறையாக செய்துமுடிக்க விரும்பினேன்.
“ஹெக்டர், நீங்கள் வீட்டுக்கு வீடு சாட்சிகொடுக்கச் சென்றால், நீங்கள் திரும்பி வரும்போது நான் இங்கே இருக்கமாட்டேன். உங்களைவிட்டுப் போகிறேன். இங்கே—வீட்டிலே உங்கள் குடும்பத்துடன்தான் உங்கள் பொறுப்பு இருக்கிறது,” என்று ரோயீனா கூறினாள்.
எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. தயங்கினபடியே ஆடையணிந்தேன். ‘நான் இதை செய்தேயாக வேண்டும். என் உயிரும், என் குடும்பத்தின் உயிரும் இதன்மேல் சார்ந்திருக்கிறது,’ என்று எனக்கு நானே சிந்தித்துக்கொண்டிருந்தேன். ஆகையால், அவளை எந்த விதத்திலும் நான் புண்படுத்த விரும்பவில்லையென்று ரோயீனாவிடம் உறுதியளித்தேன். அவளை அன்பாய் நேசித்தாலும், யெகோவாவின் பெயரும், உன்னத அரசதிகாரமும், நம் சொந்த உயிரும் இதிலே உட்பட்டிருக்கிறபடியால், இந்த வழியில்தான் நான் பிரசங்கிக்க வேண்டும் என்றும் அவளிடம் கூறினேன்.
ஆல்ஃபும், நானும் முதல் வீட்டுக்குச் சென்றோம். அவர் முதலில் பேச ஆரம்பித்தார். ஆனால், அந்த உரையாடலை நானே எடுத்துக்கொண்டு, நம் நாளில் நடப்பது நோவாவின் நாளில் நடந்ததற்கு ஒத்திருக்கிறதினால், நம் இரட்சிப்பை ஊர்ஜிதமாக்க நாம் ஏதேனும் ஒன்று செய்தாகவேண்டும் என்று கூறினேன். (மத்தேயு 24:37-39) அங்கே, சில சிறு புத்தகங்களை விட்டு வந்தேன்.
நாங்கள் அங்கிருந்து புறப்படும்போது, ஆல்ஃப் கூறினார்: “அவ்வளவு அறிவும் உனக்கு எங்கேயிருந்து கிடைத்தது? உனக்கு இனி, நான் தேவையில்லை. நீ தனியாகச் சென்றால், பிராந்தியத்தை நாம் இரண்டு தரம் முடிக்கலாம்.” ஆகவே, நாங்கள் அப்படியேதான் செய்தோம்.
நாங்கள் வீட்டுக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தபோது அங்கே எங்களுக்காக என்ன காத்திருக்கும் என்று எனக்கு தெரிந்திருக்கவில்லை. ஆச்சரியத்தையும் சந்தோஷத்தையும் அளிக்கும் விதமாக ஒரு கோப்பை தேனீரை எங்களுக்காக ரோயீனா தயாராக வைத்திருந்தாள். இரண்டு வாரத்திற்குப் பின்னர் என் மனைவி வெளி ஊழியத்தில் என்னுடன் சேர்ந்துகொண்டு, கிறிஸ்தவ வைராக்கியத்திற்கு ஒரு நல்ல முன்மாதிரியானாள்.
எங்கள் விவசாயப் பள்ளத்தாக்கிலே மாட் மன்சர், அவளுடைய மகன் வில்லியம், அவளுடைய மகள் ரூபி ஆகியோர் முதன்முதலாக யெகோவாவின் சாட்சிகளானவர்களில் ஒருவராயிருந்தார்கள். மாட் என்பவரின் கணவர் ஒரு மென்மையற்ற ஆளாக, முரட்டுத்தோற்றத்துடன் இருப்பார். ஒரு நாள் மாட் என்பவரை ஊழியத்திற்கு அழைத்துச்செல்ல, அவர்களுடைய பண்ணைக்கு நானும் ரோயீனாவும் வந்து சேர்ந்தோம். இளம் வில்லியம் தன் காரை நாங்கள் பயன்படுத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தான். ஆனால், அவனுடைய அப்பாவிற்கு வேறு எண்ணங்கள் இருந்தன.
சூழ்நிலைமை சங்கடமாயிருந்தது. குழந்தையான எங்கள் மகள் ஈனெடை வைத்துக்கொள்ள ரோயீனாவிடம் சொல்லிவிட்டு, வில்லியமின் காருக்குள் ஏறி, ஷெட்-லிருந்து வண்டியை வேகமாக வெளியே ஓட்டினேன். அப்பொழுது, நாங்கள் வெளியே போகிறதற்கு முன்னால், திரு. மான்சர் அவசரமாக ஷெட்-ன் கதவை மூட முயற்சித்தார். ஆனால், தோல்வியடைந்தார். வண்டிப்பாதையில் சிறிது தூரம் சென்றப்பின்னர், நாங்கள் நிறுத்தினோம். சினத்துடனிருந்த திரு. மான்சரைச் சந்திக்க காரை விட்டு வெளியே இறங்கினேன். “நாங்கள் வெளி ஊழியத்திற்குப் போகிறோம், திருமதி மான்சரும் எங்களுடன் வருகிறார்,” என்று அவரிடம் கூறினேன். நான் அவரிடம் வேண்டிக்கொண்டபடியால், அவருடைய கோபம் சற்றே குறைந்தது. நினைத்துப் பார்க்கும்போது, அந்தச் சூழ்நிலைமையை நான் வேறுவிதமாக கையாண்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால், அவர் ஒரு சாட்சியாக மாறவில்லையென்றாலும், பின்னர் அவர் யெகோவாவின் சாட்சிகளிடம் அதிக நல்லாதரவுடனிருந்தார்.
அவ்வருடங்களிலே, யெகோவாவின் ஜனங்கள் மிகக்குறைவாகவே இருந்தனர். எங்கள் பண்ணையிலே எங்களுடன் தங்கியிருந்த முழுநேர ஊழியர்களின் வருகையினால், நாங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியும், பயனும் அடைந்தோம். இப்படி வந்திருந்தவர்களில் ஆட்ரியன் தாம்சனும், அவருடைய சகோதரி மாலீயும் அடங்குவர். இருவரும் உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியின் மிஷினரிகளுக்கான தொடக்க வகுப்புகளுக்குச் சென்று, பாகிஸ்தானிலும் ஜப்பானிலும் வெளிநாட்டு நியமிப்புகளில் சேவைசெய்தவர்கள்.
யுத்தகால அனுபவங்கள்
செப்டம்பர் 1939-ல், இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியது. அக்டோபர் 1940-ல், நியூ ஜீலாந்து அரசாங்கம் யெகோவாவின் சாட்சிகளுடைய நடவடிக்கைகளை தடை செய்தது. நாட்டின் நீதிமன்றங்களுக்கு முன்னால் நம் கிறிஸ்தவ சகோதரர்கள் நிறையப்பேர் கட்டாயமாக நிறுத்தப்பட்டார்கள். சிலர் சிறை முகாம்களிலே போடப்பட்டு, தங்கள் மனைவிகள் மற்றும் பிள்ளைகளிடமிருந்து பிரிக்கப்பட்டார்கள். எங்களுக்கு ஒரு பால் பண்ணையிருந்தாலும், யுத்தம் தீவிரமாய் நடைபெற்றுக் கொண்டிருந்தபடியால், இராணுவ சேவைக்கு என்னை கூப்பிடுவார்களோ என்று யோசித்தேன். பின்னர் இராணுவ சேவைக்கு இனி எந்த விவசாயிகளும் எடுத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என அறிக்கையிடப்பட்டது.
நானும் ரோயீனாவும், எங்களுடைய கிறிஸ்தவ ஊழியத்திலே தொடர்ந்திருந்தோம். தனித்தனியாக இருவரும், மாதத்திற்கு 60 மணிநேரங்கள் பிரசங்க வேலையிலே ஈடுபட்டோம். இந்த சமயத்தில், கிறிஸ்தவ நடுநிலைமையை காத்துவந்த இளம் சாட்சிகளுக்கு உதவிசெய்யக்கூடிய சிலாக்கியத்தை நான் கொண்டிருந்தேன். வெலிங்டன், வடக்கு பாமெர்ஸ்டன், பாஹீயாட்டூவ, மஸ்டெர்டன் ஆகிய இடங்களிலுள்ள நீதிமன்றங்களில் அவர்கள் சார்பாக நான் ஆஜரானேன். பொதுவாக, அந்தத் தேர்ந்தெடுக்கும் குழுவிலே குருமார் வகுப்பின் ஒரு உறுப்பினர் இருப்பார். யுத்த முயற்சியிலே அவர்களுடைய கிறிஸ்தவமற்ற ஆதரவை அம்பலப்படுத்துவது சந்தோஷமாக இருக்கும்.—1 யோவான் 3:10-12.
ஓர் இரவு காவற்கோபுரம் பத்திரிகையை நானும் ரோயீனாவும் படித்துக்கொண்டிருக்கும்போது, துப்பறிபவர்களால் எங்கள் வீடு சோதனையிடப்பட்டது. பைபிள் பிரசுரங்கள் அங்கேயிருப்பதை சோதனை வெளிக்காட்டியது. “இதனால் நீங்கள் சிறைச்சாலைக்குப் போகலாம்,” என்று நாங்கள் தெரிவிக்கப்பட்டோம். துப்பறிபவர்கள் புறப்படுவதற்கு காரில் ஏறி உட்கார்ந்தவுடன், ப்ரேக்குகள் பூட்டிக்கொண்டபடியால், கார் நகரமுடியவில்லையென்று கண்டுபிடித்தார்கள். வில்லியம் மான்சர் காரை பழுதுபார்க்க உதவினார். அதற்குப்பிறகு அந்த ஆட்கள் திரும்ப வரவே இல்லை.
தடையுத்தரவின்போது, எங்கள் பண்ணையின் ஒரு மூலையிலே பைபிள் பிரசுரங்களை ஒளித்துவைப்போம். நடுராத்திரியிலே, நியூ ஜீலாந்து கிளை அலுவலகத்துக்கு நான் போய், பிரசுரங்களை என் காரில் ஏற்றிக்கொள்வேன். பிறகு, அதை என் வீட்டிற்கு எடுத்துப்போய், எங்கள் ஒதுக்குப்புறமான இடத்திலே சேர்த்துவைப்போம். ஓர் இரவு இரகசியமான ஓர் சரக்கை எடுத்துவர கிளைக்கு நான் வந்துசேர்ந்தபோது, முழு இடமும் திடீரென்று பிரகாசமாயிற்று! “உன்னைப் பிடித்துவிட்டோம்!” என்று போலீஸார் கத்தினார்கள். அதிசயமாக, அதிகமான ஆரவாரமில்லாமல் என்னை விட்டுவிட்டார்கள்.
1949-ல், நானும் ரோயீனாவும், பண்ணையை விற்றுவிட்டு எங்கள் பணம் தீர்ந்துபோகிறவரைக்கும் பயனியர் ஊழியத்தைச் செய்ய தீர்மானித்தோம். மாஸ்டெர்டன் என்ற இடத்திலேயுள்ள ஒரு வீட்டுக்கு நாங்கள் இடம் மாறினோம். மாஸ்டெர்டன் சபையாருடன் பயனியர் ஊழியம் செய்தோம். இரண்டு வருடங்களுக்குள் ஃபெதர்ஸ்டன் சபை, 24 சுறுசுறுப்பான பிரஸ்தாபிகளுடன் ஸ்தாபிக்கப்பட்டது. அங்கே ஒரு நடத்தும் கண்காணியாக சேவை செய்தேன். பிறகு, 1953-ல், நியூ யார்க் நகரத்திலுள்ள யாங்கீ ஸ்டேடியத்தில் நடைபெற்ற யெகோவாவின் சாட்சிகளுடைய எட்டு நாள் மாநாட்டிற்காக ஐக்கிய மாகாணங்களுக்குப் பயணம்செய்யும் சிலாக்கியத்தை நான் அனுபவித்தேன். மூளைவாதத்தினால் பாதிக்கப்பட்ட எங்கள் மகள் ஈனெடை கவனிக்கவேண்டியிருந்ததால், ரோயீனா என்னுடன் வர இயலவில்லை.
நியூ ஜீலாந்திற்கு வந்த பிறகு, உலகப்பிரகாரமான வேலையை நான் செய்ய வேண்டியிருந்தது. நடத்தும் கண்காணியாக நான் நியமிக்கப்பட்ட மாஸ்டெர்டன் சபைக்கே நாங்கள் திரும்பிச் சென்றோம். இந்த சமயத்தில் வில்லியம் மான்சர், மாஸ்டெர்டனிலுள்ள லிட்டில் தியேட்டரை வாங்கினார். இதுதான் வைராராப்பாவின் முதல் ராஜ்ய மன்றமானது. 1950-களில், எங்கள் சபை ஆவிக்குரிய மற்றும் எண்ணிக்கைப் பிரகாரமாக நல்ல வளர்ச்சியை அனுபவித்தது. அதனால், வட்டாரக் கண்காணி விஜயம் செய்யும்போது, நாட்டிலுள்ள மற்ற பாகங்களுக்கு பிரசங்க வேலையிலே உதவி செய்ய, அனுபவமுள்ளவர்களை அங்கே செல்லும்படி அவர் அடிக்கடி உற்சாகப்படுத்துவார். நிறையப்பேர் அப்படியே செய்தார்கள்.
மாஸ்டெர்டனிலேயே எங்கள் குடும்பம் தொடர்ந்து இருந்தது. அடுத்துவந்த வருடங்களில், சபையில் அநேக சிலாக்கியங்களைப் பெற்றதோடு மாத்திரமில்லாமல், தேசிய மற்றும் சர்வதேச மாநாடுகளில் கொடுக்கப்பட்ட நியமிப்புகளையும் மகிழ்ச்சியோடு செய்தேன். ரோயீனா வெளி ஊழியத்திலே வைராக்கியத்துடன் கலந்துகொண்டு, மற்றவர்களும் தொடர்ந்து அதையே செய்வதற்கு உதவினாள்.
விசுவாசத்தின் சோதனைகளை தாங்கியிருத்தல்
தொடக்கத்தில் குறிப்பிட்டமாதிரி, 1985-ல் எனக்கு குணப்படுத்தமுடியாத புற்றுநோய் உள்ளதாக நிர்ணயிக்கப்பட்டது. இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிற, என்றுமே மரிக்காமல் இருக்கப்போகும் இலட்சக்கணக்கானவர்களின் நடுவில் இருப்பதற்கு, நானும், என் உண்மையுள்ள மனைவி ரோயீனாவும், எங்களுடைய பிள்ளைகளுடன், எவ்வளவு ஆசைப்பட்டோம்! ஆனால், என்னை மருத்துவர்கள், இறப்பதற்கு வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். இருப்பினும், முதலில், மருத்துவ நிர்ணயிப்பை நான் எப்படி கருதினேன் என்று கேட்டார்கள்.
“ஒரு அமைதியான இருதயத்தை பேணிக்காத்து, நம்பிக்கையுடன் இருப்பேன்,” என்று கூறினேன். “சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்,” என்ற பைபிள் நீதிமொழிதான் என்னை மெய்யாகவே திடப்படுத்தியது.—நீதிமொழிகள் 14:30.
அந்த பைபிள் அறிவுரையை புற்றுநோய் வல்லுனர்கள் போற்றினார்கள். “புற்றுநோயாளிகளுக்கு, அப்படிப்பட்ட மனோபாவம்தான் 90 சதவீதம் குணமளிக்கக்கூடியதாய் இருக்கிறது,” என்று அவர்கள் கூறினார்கள். ஏழு வாரகால ஒளிக்கதிர் சிகிச்சையை சிபாரிசு செய்தார்கள். புற்றுநோயை எதிர்த்த போராட்டத்தில், முடிவிலே, நான் சந்தோஷமாக வெற்றி பெற்றேன்.
இந்த மிகக் கடினமான சமயத்தில், ஒரு பயங்கர அதிர்ச்சியினால் தாக்கப்பட்டேன். என் அழகிய, பற்றுமாறாத மனைவி, மூளை இரத்தப்போக்கினால் இறந்துபோனாள். வேதாகமத்தில் பதிவாகியுள்ள, விசுவாசமுள்ளவர்களின் முன்மாதிரியிலிருந்தும், தங்கள் உத்தமத்தைக் காத்துக்கொண்டபோது யெகோவா எப்படி அவர்களை பிரச்சினைகளிலிருந்து மீட்டார் என்ற உதாரணங்களிலிருந்தும் நான் ஆறுதலடைந்தேன். இவ்வாறாக, புதிய உலகத்தின் மேலிருந்த என் நம்பிக்கை பிரகாசமாக தொடர்ந்து இருந்தது.—ரோமர் 15:4.
என்றபோதிலும், நான் மனச்சோர்வடைந்து, மூப்பராக சேவை செய்வதை நிறுத்த விரும்பினேன். மறுபடியும் தொடர்ந்திருக்க சக்தி வரும்வரை, சபையிலுள்ள சகோதரர்கள் என்னை உற்சாகப்படுத்தினார்கள். அதன் காரணமாக, ஒரு கிறிஸ்தவ மூப்பராகவும், கண்காணியாகவும் கடந்த 57 வருடங்களாக தொடர்ந்து சேவை செய்துகொண்டிருக்க முடிகிறது.
எதிர்காலத்தை நம்பிக்கையுடன் சந்திப்பது
யெகோவாவுக்கு இத்தனை ஆண்டுகளாக சேவை செய்வது, ஒரு மதிப்பிடமுடியாத சிலாக்கியமாக இருந்திருக்கிறது. எவ்வளவு ஆசீர்வாதங்கள் எனக்கு இருந்திருக்கின்றன! ஒரு 16 வயது பையனாக, “இதேதான்; இதுதான் சத்தியம்!” என்று என் தாயார் வியந்ததை, இப்போதுதான் கேட்டமாதிரியுள்ளது. 100 வயதிற்கும் அதிகமாயிருந்த என் தாயார், 1979-ல் இறக்கும்வரை, ஒரு விசுவாசமுள்ள வைராக்கியமான சாட்சியாக நிலைத்திருந்தார். அவருடைய மகளும் ஆறு மகன்களும் பற்றுமாறாத சாட்சிகளானார்கள்.
எல்லா நிந்தையிலிருந்தும் யெகோவாவின் நாமம் விடுபடுவதை, உயிருடனிருந்து காண்பதே என்னுடைய தீவிரமான ஆசையாயிருக்கிறது. ஒருபோதும் மரிக்காமல் இருக்கக்கூடிய என் நீண்டநாளைய நம்பிக்கை நிறைவேறுமா? அதை இனிமேல்தான் பார்க்க வேண்டும். ஆயினும், பலர், ஆம், கோடிக்கணக்கானவர்கள் முடிவிலே அந்த ஆசீர்வாதத்தைப் பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன். எனவே, என்றுமே மரிக்காமலிருக்கப் போகிறவர்களின் ஒரு பாகமாக நான் இருக்கப்போகும் எதிர்பார்ப்பை, உயிரோடிருக்கும் நாளெல்லாம் உயர்வாக மதிப்பேன்.—யோவான் 11:26.
[பக்கம் 28-ன் படம்]
என் தாயார்
[பக்கம் 28-ன் படம்]
என் மனைவி மற்றும் பிள்ளைகளுடன்