இரீனாவுக்குப் பிடித்தமான பாட்டுப் புத்தகம்
பல்கேரியாவிலுள்ள சோஃபியாவை சேர்ந்த ஒன்பது வயது சிறுமி இரீனா, யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக முழுக்காட்டப்பட்டு இன்னும் அதிக நாட்கள் ஆகவில்லை. அவளுக்குப் பாடுவதில் அதிகப் பிரியம், குறிப்பாக யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள் என்ற புத்தகத்திலுள்ள பாடல்களை மகிழ்ந்து அனுபவிக்கிறாள். ஆகவே, ஒவ்வொரு மாதமும் சில பாடல்களை மனப்பாடம் செய்யவேண்டும் என்ற ஓர் இலக்கை வைத்தாள்.
பள்ளிக்கூடத்தில், இரீனாவுக்குப் பிடித்தமான பாடங்களில் ஒன்று இசை. எனவேதான், பள்ளிக்கூட பாடகர் குழுவில் பாடுவதற்கான அழைப்பை இரீனா மறுத்தபோது, அவளுடைய பாடல் ஆசிரியை குழப்பமடைந்தார். ஏன் இரீனா மறுத்துவிட்டாள்? அவள் பாடவேண்டிய அநேக பாடல்கள், தேசத் தலைவர்களையும் புறமதத்தை தழுவிய புனித நாட்களையும் போற்றி புகழுகின்றன என்று அவள் உணர்ந்தாள். சில பாடல்கள், தேசிய இலட்சியங்களை முன்னேற்றுவிக்க, கலகத்தையும் வன்முறையையுங்கூட ஆதரிக்கின்றன. இந்த விஷயத்தில், இரீனாவின் நோக்குநிலையை அந்த ஆசிரியையால் புரிந்துகொள்ள முடியவில்லை. இரீனா, தன்னுடைய திடமான மத நம்பிக்கைகளை, கடிதத்தில் தன் ஆசிரியைக்கு எழுதுவதன் மூலம் உதவியை நாடினாள்—ஆனால் பலன் கிடைக்கவில்லை.
இரீனாவின் அப்பாவுக்கு ஓர் எண்ணம் உதித்தது. இரீனா விரும்பி பாடும் பாடல்கள் அடங்கிய, யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள் என்ற புத்தகத்தின் ஒரு பிரதியை ஆசிரியைக்கு அவர் கொடுத்தார். சில தினங்களுக்குப்பின், ஆசிரியை இரீனாவை இசை அறைக்குள் கூப்பிட்டார். இரீனாவுக்குப் பிடித்தமான பாடல்களை அந்தப் புத்தகத்திலிருந்து—அவளுடைய வகுப்பு சகாக்கள் முன்—பாட சொல்லி, அதற்கேற்றவாறு ஆசிரியை தாமே, பியானோவை இசைத்தார். இந்த நிகழ்ச்சி ஒருமணி நேரத்திற்கு மேலாக நீடித்தது! இரீனாவுக்குப் பிடித்தமான பாட்டுப் புத்தகத்தில் சில இனிய கீதங்கள் இருந்தன என்பதை ஆசிரியை ஒத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.