மனிதவர்க்கத்துக்கு கடவுளைப் பற்றிய அறிவு தேவை
“கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.”—நீதிமொழிகள் 2:5.
1. மனித இதயம் தெய்வீக பொறியமைப்பின் தலைசிறந்த படைப்பாக உள்ளது என்று ஏன் சொல்லலாம்?
இப்போது பூமியின் மீது சுமார் 560,00,00,000 மனித இதயங்கள் துடித்துக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் உங்களுடைய சொந்த இதயம் 1,00,000 தடவைகள் துடிக்கிறது, உங்களுடைய உடலின் 1,00,000 கிலோமீட்டர் இதய-இரத்தநாள மண்டலத்தின் வழியாய் 7,600 லிட்டருக்கு சமமான அளவுள்ள இரத்தத்தை உந்தித் தள்ளுகிறது. தெய்வீக பொறியமைப்பின் இந்தத் தலைசிறந்த படைப்பைப்போல் வேறு எந்த தசையும் அவ்வளவு கடினமாக இயங்குவதில்லை.
2. அடையாள அர்த்தமுள்ள இதயத்தை நீங்கள் எவ்வாறு விவரிப்பீர்கள்?
2 பூமியின் மீது 560,00,00,000 அடையாள அர்த்தமுள்ள இதயங்களும்கூட இயங்கிக்கொண்டிருக்கின்றன. அடையாள அர்த்தமுள்ள இதயத்திலே நம்முடைய உணர்ச்சிகள், நம்முடைய உள்நோக்கங்கள், நம்முடைய விருப்பங்கள் ஆகியவை வாசம் செய்கின்றன. அது நம்முடைய சிந்தனை, நம்முடைய புரிந்துகொள்ளுதல், நம்முடைய மனோசக்தி ஆகியவற்றுக்கு இருப்பிடமாய் உள்ளது. அடையாள அர்த்தமுள்ள இதயம் மேட்டிமையாகவோ அல்லது தாழ்மையாகவோ, துக்கமுற்றோ அல்லது சந்தோஷத்துடனோ, இருளடைந்ததாகவோ பிரகாசமுள்ளதாகவோ இருக்கலாம்.—நெகேமியா 2:2; நீதிமொழிகள் 16:5; மத்தேயு 11:29; அப்போஸ்தலர் 14:17; 2 கொரிந்தியர் 4:6; எபேசியர் 1:16-19.
3, 4. இதயங்கள் எவ்வாறு நற்செய்தியால் எட்டப்பட்டிருக்கின்றன?
3 யெகோவா தேவன் மனித இதயத்தில் உள்ளதை வாசிக்க முடியும். நீதிமொழிகள் 17:3 சொல்கிறது: “வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; இருதயங்களைச் சோதிக்கிறவரோ கர்த்தர்.” ஒவ்வொரு இதயத்தையும் வெறுமனே வாசித்து நியாயத்தீர்ப்பு வழங்குவதற்கு பதிலாக, யெகோவா தம்முடைய சாட்சிகளை உபயோகித்து நற்செய்தி மனித இதயங்களை சென்றெட்டும்படி செய்கிறார். இது அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகளுக்கு இசைவாக உள்ளது: “கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்? அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே.”—ரோமர் 10:13-15.
4 ‘நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிப்பதற்காக’ பூமியின் கடைக்கோடிகளுக்கு தம்முடைய சாட்சிகளை அனுப்பி, நற்செய்தியை ஏற்றுக்கொள்ளும் இதயமுள்ளோரை கண்டுபிடிப்பது யெகோவாவைப் பிரியப்படுத்தியிருக்கிறது. இப்போது நாம் 50,00,000-க்கும் மேல் இருக்கிறோம்—இது பூமியின் மீதுள்ள சுமார் 1,200 மக்களுக்கு 1 சாட்சி வீதமாகும். பூமியிலுள்ள கோடிக்கணக்கானோருக்கு நற்செய்தியை எடுத்துச்செல்வது சுலபமான காரியமல்ல. ஆனால் இயேசு கிறிஸ்துவின் மூலம் கடவுள் இந்த வேலையை வழிநடத்திக்கொண்டு வருகிறார், நேர்மை இதயமுள்ளோரை தம்மிடமாக இழுத்துக்கொள்கிறார். இவ்வாறு ஏசாயா 60:22-ல் பதிவுசெய்யப்பட்டிருக்கும் தீர்க்கதரிசனம் உண்மையென நிரூபிக்கப்பட்டு வருகிறது: “சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய நான் ஏற்றகாலத்திலே இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்.”
5. அறிவு என்றால் என்ன, உலக ஞானத்தைப் பற்றி என்ன சொல்லலாம்?
5 அந்தக் காலம் இதுவே, மேலும் ஒரு காரியம் தெளிவாயிருக்கிறது—பூமியிலுள்ள கோடிக்கணக்கானோருக்கு அறிவு தேவைப்படுகிறது. அடிப்படையில், அறிவு என்பது, அனுபவம், கூர்ந்து கவனித்தல், அல்லது படிப்பு ஆகியவற்றால் பெறப்பட்ட உண்மைகளை நன்கு அறிந்திருப்பதாகும். இந்த உலகம் மிகுதியான அறிவை சேகரித்து வைத்திருக்கிறது. போக்குவரத்து, உடல்நல கவனிப்பு, செய்தித்தொடர்பு போன்ற துறைகளில் முன்னேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் மனிதவர்க்கத்துக்கு உண்மையிலேயே தேவைப்படுவது உலகப்பிரகாரமான அறிவா? இல்லவே இல்லை! போர், ஒடுக்குதல், நோய், மரணம் ஆகியவை தொடர்ந்து மனிதவர்க்கத்துக்கு தொல்லை கொடுத்துக்கொண்டே இருக்கின்றன. இவ்வுலகத்தின் ஞானம் பெரும்பாலும் பாலைவன புயலில் இடம் விட்டு இடம் பெயர்கிற மணல்களைப் போன்று நிரூபித்திருக்கிறது.
6. இரத்தத்தைக் குறித்ததில் கடவுளுடைய அறிவு எவ்வாறு உலக ஞானத்தோடு ஒப்பிடப்படுகிறது?
6 உதாரணமாக: இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு, நிவாரணியாக கருதப்பட்ட இரத்தவடிப்பு மருத்துவமுறையை பயன்படுத்துவது பழக்கமாயிருந்தது. ஐக்கிய மாகாணங்களின் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டனுடைய வாழ்க்கையின் முடிவு சமயத்தில், பல தடவை இரத்தம் வடிக்கப்பட்டது. ஒரு தருணத்தில் அவர் சொன்னார்: “நான் அமைதியாக சாக அனுமதியுங்கள்; என்னால் இனிமேலும் வாழமுடியாது.” அவர் சொன்னது சரி, ஏனென்றால் அவர் அந்த நாளிலே மரித்துப் போனார்—டிசம்பர் 14, 1799. இரத்தவடிப்புக்குப் பதிலாக, மனித உடலுக்கு உள்ளே இரத்தமேற்றப்படுவதன் பேரில் இன்று அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இரண்டு முறைகளுமே சாவுக்கேதுவான பிரச்சினைகளுக்கு வழிவகுத்திருக்கின்றன. இருப்பினும், இந்த காலத்தின்போதெல்லாம் கடவுளுடைய வார்த்தை இவ்வாறு சொல்லியிருக்கிறது: ‘இரத்தத்திற்கு விலகியிருங்கள்.’ (அப்போஸ்தலர் 15:28) கடவுளுடைய அறிவு எப்போதும் சரியானதாயும் நம்பத்தக்கதாயும் காலத்துக்கு ஒத்ததாயும் உள்ளது.
7. பிள்ளை வளர்ப்பைப் பற்றிய விஷயத்தில் திருத்தமான வேதாகம அறிவு எவ்வாறு உலக ஞானத்தோடு ஒப்பிடப்படுகிறது?
7 நம்பமுடியாத உலக ஞானத்தின் மற்றொரு உதாரணத்தை சிந்தித்துப் பாருங்கள். பல வருடங்களாக உளவியல் நிபுணர்கள் கண்டிப்பில்லா பிள்ளை வளர்ப்பை ஆதரித்து வந்திருக்கின்றனர், ஆனால் அது தவறு என்று அதை ஆதரித்தவர்களில் ஒருவர் பின்னர் ஒப்புக்கொண்டார். “இளம் நபர்களோடு இப்போது நாம் கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு” கண்டிப்பில்லாமை மறைமுகமான காரணமாயாவது உள்ளது என்று ஜெர்மன் மொழியியல் கழகம் ஒரு சமயம் கூறியது. உலக ஞானம் இப்படியும் அப்படியுமாக காற்றினால் அலைக்கழிக்கப்படுவதைப் போல் ஊசலாடலாம், ஆனால் திருத்தமான வேதாகம அறிவு அசைக்கமுடியாததாய் இருந்திருக்கிறது. பிள்ளை பயிற்றுவிப்பைப் பற்றி பைபிள் சமநிலையான புத்திமதியைக் கொடுக்கிறது. “உன் மகனைச் சிட்சைசெய், அவன் உனக்கு ஆறுதல்செய்வான், உன் ஆத்துமாவுக்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்,” என்று நீதிமொழிகள் 29:17 சொல்கிறது. அப்படிப்பட்ட சிட்சை அன்போடு கொடுக்கப்பட வேண்டும், ஏனென்றால் பவுல் எழுதினார்: “பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.”—எபேசியர் 6:4.
‘தேவனை அறியும் அறிவு’
8, 9. மனிதவர்க்கத்துக்கு உண்மையிலேயே தேவைப்படும் அறிவைக் குறித்து நீதிமொழிகள் 2:1-6 சொல்வதை நீங்கள் எவ்வாறு விளக்குவீர்கள்?
8 பவுல் கல்வி கற்றிருந்த மனிதனாய் இருந்தபோதிலும், இவ்வாறு சொன்னார்: “இவ்வுலகத்திலே உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று எண்ணினால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகக்கடவன். இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது.” (1 கொரிந்தியர் 3:18, 19) மனிதவர்க்கத்துக்கு உண்மையிலேயே தேவைப்படும் அறிவை கடவுள் மட்டுமே அளிக்கமுடியும். இதைக் குறித்து நீதிமொழிகள் 2:1-6 சொல்கிறது: “என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு, நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி, ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து, அதை வெள்ளியைப் போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில், அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய். கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.”
9 நல்ல இதயங்களால் தூண்டப்பட்ட நபர்கள், கடவுள் கொடுத்திருக்கும் அறிவை சரியாக உபயோகிப்பதன் மூலம் ஞானத்திற்குச் செவிசாய்க்கின்றனர். அவர்கள் கற்றுக்கொள்கிற உண்மைகளை கவனமாக சீர்தூக்கிப் பார்த்து, தங்கள் இதயங்களை பகுத்துணர்விடமாக சாய்க்கின்றனர். உண்மையில், அவர்கள் புரிந்துகொள்ளுதலை அல்லது ஒரு பொருளின் அம்சங்கள் எவ்வாறு ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டிருக்கின்றன என்பதைக் காணும் திறமையை வா என்று கூப்பிடுகின்றனர். நல்லிதயமுள்ளோர் வெள்ளிக்காக தோண்டிக்கொண்டிருப்பது போலும் புதையல்களுக்காக தேடிக்கொண்டிருக்கிறது போலும் வேலை செய்கின்றனர். ஆனால் ஏற்றுக்கொள்ளும் இதயமுடையோர் என்ன மிகப்பெரிய புதையலை கண்டுபிடித்திருக்கின்றனர்? “தேவனை அறியும் அறிவை” கண்டடைந்திருக்கின்றனர். அது என்ன? எளிதாக சொன்னால், அது கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் காணப்படும் அறிவு.
10. நல்ல ஆவிக்குரிய ஆரோக்கியத்தை அனுபவிப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
10 கடவுளுடைய அறிவு குறையற்றதாகவும், நிலையானதாகவும், உயிரளிப்பதாகவும் உள்ளது. அது ஆவிக்குரிய ஆரோக்கியத்தை முன்னேற்றுவிக்கிறது. பவுல் தீமோத்தேயுவை ஊக்குவித்தார்: ‘நீ கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தோடும் அன்போடும் என்னிடத்தில் கேட்டிருக்கிற ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தைக் [“ஆரோக்கியமான வார்த்தைகளின் மாதிரியை,” NW] கைக்கொண்டிரு.’ (2 தீமோத்தேயு 1:13) ஒரு மொழிக்கு வார்த்தைகளின் மாதிரி ஒன்று இருக்கிறது. அதே போல், வேதாகம சத்தியத்தின் “சுத்தமான பாஷைக்கு” “ஆரோக்கியமான வார்த்தைகளின் மாதிரி” ஒன்று உள்ளது. இது, ராஜ்யத்தின் மூலம் யெகோவாவின் உன்னத அரசதிகாரம் நியாயநிரூபணம் செய்யப்படும் என்ற பைபிள் பொருளின் பேரில் முக்கியமாய் சார்ந்துள்ளது. (செப்பனியா 3:9) நாம் இந்த ஆரோக்கியமான வார்த்தைகளின் மாதிரியை மனதிலும் இதயத்திலும் வைத்திருக்க வேண்டும். அடையாள அர்த்தமுள்ள இதய கோளாறை தவிர்த்து, ஆவிக்குரிய ஆரோக்கியமுள்ளவர்களாய் நிலைத்திருக்க வேண்டுமென்றால், நாம் பைபிளை அன்றாட வாழ்க்கையில் பொருத்தி, ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையின்’ மூலம் கடவுள் ஏற்பாடு செய்யும் ஆவிக்குரிய ஏற்பாடுகளை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். (மத்தேயு 24:45-47; தீத்து 2:2) நல்ல ஆவிக்குரிய ஆரோக்கியத்துக்கு கடவுளைப் பற்றிய அறிவு நமக்குத் தேவை என்பதை நாம் எப்போதும் நினைவில் வைப்போமாக.
11. மனிதவர்க்கத்துக்கு கடவுளைப் பற்றிய அறிவு ஏன் தேவை என்பதற்கான சில காரணங்கள் யாவை?
11 கடவுளைப் பற்றிய அறிவு பூமியிலிருக்கும் கோடிக்கணக்கானோருக்கு ஏன் தேவை என்பதற்கு மற்ற காரணங்களை சிந்தித்துப் பாருங்கள். பூமியும் மனிதர்களும் எவ்வாறு தோன்றினர் என்பதைப் பற்றி அவர்கள் எல்லாருக்கும் தெரியுமா? இல்லை, அவர்களுக்குத் தெரியாது. மெய்க்கடவுளையும் அவருடைய குமாரனையும் முழு மனிதவர்க்கமும் அறிந்துள்ளதா? தெய்வீக அரசதிகாரத்தைக் குறித்தும் மனித உத்தமத்தன்மையைக் குறித்தும் சாத்தான் எழுப்பியிருக்கும் பிரச்சினைகளை எல்லாரும் அறிந்திருக்கிறார்களா? மறுபடியுமாக வரும் பதில் இல்லை என்பதே. நாம் ஏன் வயோதிபராகி இறக்கிறோம் என்பதைக் குறித்து பொதுவாக ஜனங்கள் அறிந்திருக்கிறார்களா? மீண்டும் நாம் இல்லை என்றே சொல்ல வேண்டும். கடவுளுடைய ராஜ்யம் இப்போது ஆட்சி செய்து கொண்டிருக்கிறது என்பதையும் நாம் கடைசி நாட்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதையும் பூமியிலிருக்கும் எல்லா குடிமக்களும் உணர்ந்திருக்கின்றனரா? பொல்லாத ஆவிகளின் சேனைகளைப் பற்றி அவர்கள் அறிந்திருக்கிறார்களா? ஒரு மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை எவ்வாறு கொண்டிருப்பது என்பதைப் பற்றி எல்லா மானிடர்களும் நம்பத்தக்க அறிவை பெற்றிருக்கிறார்களா? கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்துக்கு பரதீஸில் மகிழ்ச்சிகரமான வாழ்க்கை என்பது நம்முடைய படைப்பாளரின் நோக்கம் என்று பெரும்பான்மையான மக்கள் அறிந்திருக்கிறார்களா? இந்தக் கேள்விகளுக்கும்கூட பதில் இல்லை என்பதே. அப்படியென்றால், மனிதவர்க்கத்துக்கு கடவுளைப் பற்றிய அறிவு தேவை என்பது தெளிவாயிருக்கிறது.
12. நாம் எவ்வாறு கடவுளை “ஆவியோடும் உண்மையோடும்” வணங்கலாம்?
12 இயேசு தம்முடைய பூமிக்குரிய வாழ்க்கையின் கடைசி இரவின்போது ஜெபத்தில் கூறியதன் காரணத்தாலும்கூட, மனிதவர்க்கத்துக்கு கடவுளைப் பற்றிய அறிவு தேவைப்படுகிறது. அவர் பின்வருமாறு சொல்லியதைக் கேட்டபோது, அவருடைய அப்போஸ்தலர்களை அது அதிக ஆழமாக பாதித்திருக்க வேண்டும்: “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.” (யோவான் 17:3) அப்படிப்பட்ட அறிவை பொருத்துவதே, ஏற்கத்தகுந்தவிதத்தில் கடவுளை வணங்குவதற்கு ஒரே வழியாகும். “தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்,” என்று இயேசு சொன்னார். (யோவான் 4:24) விசுவாசம், அன்பு ஆகியவற்றால் நிரப்பப்பட்ட இதயங்களால் உந்துவிக்கப்படும்போது நாம் கடவுளை “ஆவியோடு” வணங்குகிறோம். நாம் அவரை எவ்வாறு “உண்மையோடு” வணங்குகிறோம்? அவருடைய வார்த்தையை படிப்பதன் மூலமும் அவர் வெளிப்படுத்தியிருக்கும் சத்தியத்துக்கு—“தேவனை அறியும் அறிவு”க்கு—ஏற்றபடி அவரை வணங்குவதன் மூலமுமே.
13. அப்போஸ்தலர் 16:25-34-ல் என்ன சம்பவம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது, அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
13 ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கானோர் யெகோவாவை வணங்க ஆரம்பிக்கின்றனர். என்றபோதிலும், அக்கறை காண்பிக்கும் ஆட்களோடு பைபிள் படிப்புகளை நீண்டகாலமாக நடத்த வேண்டுமா, அல்லது நேர்மை இதயமுள்ளோர் முழுக்காட்டுதல் நிலைக்கு அதிவிரைவாக வருவது கூடியகாரியமா? அப்போஸ்தலர் 16:25-34 வரை குறிப்பிடப்பட்டிருக்கும் சிறைச்சாலைக்காரன் மற்றும் அவனுடைய வீட்டார் விஷயத்தில் என்ன நடந்தது என்பதை சிந்தித்துப் பாருங்கள். பவுலும் சீலாவும் பிலிப்பியில் சிறையிலடைக்கப்பட்டிருந்தனர், ஆனால் நடுராத்திரியில் ஒரு பெரிய பூமியதிர்ச்சி சிறைச்சாலைக் கதவுகளைத் திறந்தது. எல்லா சிறைவாசிகளும் தப்பித்துக்கொண்டு விட்டார்கள் என்றும் தனக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்படும் என்றும் சிறைச்சாலைக்காரன் நினைத்து தற்கொலை செய்துகொள்ள தீர்மானித்த நேரத்தில், எல்லாரும் அங்கிருப்பதாக பவுல் அவனிடம் சொன்னார். பவுலும் சீலாவும் “அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த யாவருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள்.” அந்த சிறைச்சாலைக்காரனும் அவனுடைய குடும்பத்தாரும் புறஜாதிகளாய் இருந்தனர், பரிசுத்த வேதாகமத்தைப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. இருப்பினும், அந்த ஒரே இரவிலே அவர்கள் விசுவாசிகளாக ஆனார்கள். அதற்கும் மேலாக, “அவனும் அவனுடையவர்கள் அனைவரும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள்.” அவை அசாதாரணமான சூழ்நிலைகளாக இருந்தன, ஆனால் புதியவர்களுக்கு அடிப்படை சத்தியங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டன, பின்பு மற்ற காரியங்களை அவர்கள் சபை கூட்டங்களில் கற்றுக்கொண்டனர். அதற்கு ஒப்பான ஒன்று இன்று சாத்தியமாயிருக்க வேண்டும்.
அறுப்பு மிகுதி!
14. பலன்தரும் பைபிள் படிப்புகளை பெரும் எண்ணிக்கையில் குறைவான காலப்பகுதிக்குள் நடத்துவதற்கு ஏன் தேவை உள்ளது?
14 யெகோவாவின் சாட்சிகள் பலன்தரும் பைபிள் படிப்புகளை பெரும் எண்ணிக்கையில் குறைவான காலப்பகுதிக்குள் நடத்தினால் நன்றாக இருக்கும். இதற்கு மெய்யான தேவை உள்ளது. உதாரணமாக, கிழக்கத்திய ஐரோப்பிய தேசங்களில் ஆட்கள் பைபிள் படிப்புகளுக்காக காத்திருப்போர் பட்டியலில் இருக்க வேண்டியிருக்கிறது. பிற இடங்களிலும்கூட நிலைமை அவ்வாறுதான் உள்ளது. டொமினிக்கன் குடியரசில் உள்ள ஒரு பட்டணத்தில் ஐந்து சாட்சிகளுக்கு அநேக படிப்புகள் கிடைத்ததால் அவர்கள் அவையனைத்தையும் நடத்தமுடியவில்லை. அவர்கள் என்ன செய்தனர்? ராஜ்ய மன்றத்தில் நடைபெறும் கூட்டங்களுக்கு ஆஜராகி, பைபிள் படிப்புகளுக்காக காத்திருப்போர் பட்டியலில் இருக்கும்படி அக்கறை காண்பிப்பவர்களை உற்சாகப்படுத்தினர். அதே நிலைமைதான் பூமிமுழுவதிலும் அநேக இடங்களில் உள்ளது.
15, 16. கடவுளைப் பற்றிய அறிவை அதிவிரைவாக பரப்புவதற்கு என்ன அளிக்கப்பட்டிருக்கிறது, அதைப் பற்றிய சில உண்மைகள் யாவை?
15 மிகப்பெரிய பிராந்தியங்கள்—அறுவடை செய்வதற்கு பெரும் பிராந்தியங்கள்—கடவுளுடைய ஜனங்களுக்கு திறக்கப்பட்டுக்கொண்டு வருகின்றன. ‘அறுப்புக்கு எஜமானாகிய’ யெகோவா கூடுதலான வேலையாட்களை அனுப்பிக் கொண்டிருக்கிறபோதிலும், செய்வதற்கு இன்னும் அதிகம் உள்ளது. (மத்தேயு 9:37, 38) ஆகையால், கடவுளைப் பற்றிய அறிவை அதிவேகமாக பரப்புவதற்கும் பைபிள் மாணாக்கர்கள் ஒவ்வொரு பாடத்தோடும் ஆவிக்குரிய முன்னேற்றத்தை செய்வதற்கும் ‘உண்மையுள்ள அடிமை’ திட்டவட்டமான தகவலை சுருக்கமாக அளிப்பதற்கு ஒரு ஏற்பாடு செய்திருக்கிறது. அது ஒரு புதிய புத்தகம்—அதை நாம் வீட்டு பைபிள் படிப்புகளில் விரைவாக, ஒருவேளை ஒருசில மாதங்களில் முடித்துவிடலாம். அதை நாம் நம்முடைய பிரீஃப்கேஸ்களில், நம்முடைய பர்ஸ்களில் அல்லது நம்முடைய பாக்கெட்டுகளிலும்கூட சுலபமாக எடுத்துச் செல்லலாம்! “சந்தோஷமாய் துதிப்போர்” யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாடுகளில் கூடியிருந்த லட்சக்கணக்கானோர், நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற தலைப்பையுடைய 192-பக்கம் அடங்கிய இந்தப் புதிய புத்தகத்தை பெற்றுக்கொள்ள சந்தோஷப்பட்டனர்.
16 பல்வேறு தேசங்களில் உள்ள எழுத்தாளர்கள் தகவலை தயாரித்துக் கொடுத்தனர், அத்தகவல் கடைசியில் அறிவு புத்தகத்திற்கென்று முடிவு செய்யப்பட்டது. ஆகையால் அது எல்லா தேசத்தில் உள்ளவர்களுக்கும் கவர்ச்சியூட்டுவதாய் இருக்க வேண்டும். ஆனால் பூமிமுழுவதிலுமுள்ள மக்கள் பேசும் மொழிகளில் இந்தப் பிரசுரம் கிடைக்கும்படி செய்வதற்கு அதிக காலம் எடுக்குமா? இல்லை, ஏனென்றால் பெரிய புத்தகங்களைவிட 192-பக்க புத்தகத்தை அதிவிரைவாக மொழிபெயர்த்துவிட முடியும். ஆளும் குழுவின் எழுத்து ஆலோசனைக் குழு அக்டோபர் 1995-க்குள்ளாக இப்புத்தகத்தை ஆங்கிலத்திலிருந்து 130-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கும்படி அனுமதி அளித்துள்ளது.
17. அறிவு புத்தகத்தை உபயோகிப்பதற்கு என்ன காரணக்கூறுகள் அதை சுலபமாக்க வேண்டும்?
17 அறிவு புத்தகத்தில் ஒவ்வொரு அதிகாரத்திலும் உள்ள திட்டவட்டமான குறிப்புகள், மாணாக்கர்கள் நல்ல முறையில் விரைவாக ஆவிக்குரிய முன்னேற்றம் செய்வதற்கு அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். இப்புத்தகம் வேதப்பூர்வமான சத்தியங்களை கட்டியெழுப்பும் விதத்தில் அளிக்கிறது. இது பொய்க் கோட்பாடுகளை விரிவாக எடுத்துரைப்பதில்லை. மொழியின் தெளிவும் தர்க்கரீதியான விளக்கமும் பைபிள் படிப்புகள் நடத்துவதை சுலபமாக்க வேண்டும், ஜனங்கள் கடவுளைப் பற்றிய அறிவை கிரகித்துக்கொள்ள உதவிசெய்ய வேண்டும். கலந்தாலோசிப்புக்காக மாணாக்கர்கள் தயாரிக்கும்போது வாசிக்க மேற்கோளாக கொடுக்கப்பட்டிருக்கும் பைபிள் வசனங்கள் மட்டுமல்லாமல் இடக்குறிப்பு கொடுக்கப்பட்டுள்ள வசனங்களும் உள்ளன. நேரம் அனுமதிக்குமேயானால் இந்த வசனங்களை படிப்பின்போது வாசிக்கலாம், முக்கிய குறிப்புகளை மறைத்துவிடக்கூடிய கூடுதலான தகவலை கொண்டுவருவது ஞானமற்றதாக இருக்கும். மாறாக, பைபிள் படிப்பு நடத்துபவர்கள் அந்தப் புத்தகம் ஒவ்வொரு அதிகாரத்திலும் நிரூபித்துக் காண்பிப்பதை கண்டுணர்ந்து அதை மாணாக்கருக்கு தெரிவிக்க முயற்சிசெய்ய வேண்டும். கற்பிப்பவர் ஊக்கமாகப் படிக்க வேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்துகிறது, அப்போது முக்கிய குறிப்புகள் அவருடைய மனதில் மிகவும் தெளிவாக இருக்கும்.
18. அறிவு புத்தகத்தை உபயோகிப்பதன் பேரில் என்ன ஆலோசனைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன?
18 நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகம் எவ்வாறு சீஷராக்கும் வேலையை துரிதப்படுத்த முடியும்? இந்த 192-பக்க புத்தகத்தை குறுகிய காலப்பகுதிக்குள் படித்து முடித்துவிடலாம், “நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள்” அதைப் படிப்பதன் மூலம் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெறுமளவுக்கு போதுமானதைக் கற்றுக்கொள்ள வேண்டும். (அப்போஸ்தலர் 13:48) ஆகையால் அறிவு புத்தகத்தை நாம் ஊழியத்தில் நல்லமுறையில் பயன்படுத்துவோமாக. ஒரு பைபிள் மாணாக்கர் வேறொரு புத்தகத்தில் பெரும்பாலான பகுதிகளை ஏற்கெனவே படித்து முடித்துவிட்டிருந்தார் என்றால், அதை படித்து முடித்துவிடுவது நடைமுறையானதாக இருக்கக்கூடும். அப்படியில்லை என்றால், பைபிள் படிப்புகளை அறிவு புத்தகத்துக்கு மாற்றிவிடும்படி ஆலோசனை கொடுக்கப்படுகிறது. இப்புதிய பிரசுரத்தை படித்து முடித்தவுடன், அதே மாணாக்கரோடு இரண்டாவது புத்தகத்தை படிக்கும்படி ஆலோசனை கொடுக்கப்படுகிறதில்லை. சத்தியத்தை தழுவிக்கொள்பவர்கள், யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கு ஆஜராவதன் மூலமும் பைபிளையும் பல்வேறு கிறிஸ்தவ பிரசுரங்களையும் தாங்களாகவே படித்துக்கொள்வதன் மூலமும் தங்கள் அறிவை நிறைவாக்கிக் கொள்ளலாம்.—2 யோவான் 1, 2.
19. அறிவு புத்தகத்தில் பைபிள் படிப்புகளை நடத்துவதற்கு முன்பு, நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்காக அமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கங்கள் 175-லிருந்து 218 வரை மறுபார்வை செய்வது ஏன் உதவியாய் இருக்கும்?
19 யெகோவாவின் சாட்சிகளாக முழுக்காட்டுதல் பெற விரும்பும் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளோடு மூப்பர்கள் மறுபார்வை செய்யும் எல்லா கேள்விகளுக்கும் ஒரு நபர் பதிலளிப்பதற்கு உதவிசெய்யும் நோக்கத்தோடு அறிவு புத்தகம் எழுதப்பட்டது. எனவே, நீங்கள் தற்போது நடத்திக்கொண்டிருக்கும் பைபிள் படிப்புகளை இந்தப் புதிய பிரசுரத்துக்கு மாற்றுவதற்கு முன்பு, நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்காக அமைக்கப்பட்டிருத்தல் புத்தகம், பக்கங்கள் 175-லிருந்து 218 வரை உள்ள கேள்விகளை மறுபார்வை செய்வதற்காக நீங்கள் ஒருசில மணிநேரங்களை செலவிடும்படி சிபாரிசு செய்யப்படுகிறது.a அறிவு புத்தகத்தில் பைபிள் படிப்புகளை நடத்தும்போது அப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில்களை அழுத்திக் காண்பிப்பதற்கு இது உங்களுக்கு உதவிசெய்யும்.
20. நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தைக் கொண்டு, என்ன செய்ய நீங்கள் திட்டமிடுகிறீர்கள்?
20 எல்லா இடங்களிலுமுள்ள ஜனங்கள் நற்செய்தியை கேட்க வேண்டும். ஆம், மனிதவர்க்கத்துக்கு கடவுளைப் பற்றிய அறிவு தேவை, அதை அறிவிப்பதற்கு யெகோவா தம்முடைய சாட்சிகளைக் கொண்டிருக்கிறார். நம்முடைய அன்பான பரலோக தகப்பன் உண்மையும் விவேகமுமுள்ள அடிமையின் மூலம் நமக்கு ஒரு புதிய புத்தகத்தை இப்போது அளித்திருக்கிறார். சத்தியத்தைக் கற்பிப்பதற்கும் யெகோவாவின் பரிசுத்த நாமத்துக்கு கனத்தைக் கொண்டுவருவதற்கும் நீங்கள் அதை உபயோகிப்பீர்களா? நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவை அநேகருக்குக் கிடைக்கச் செய்வதற்கு நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளுக்காகவும் யெகோவா உங்களை நிச்சயமாக ஆசீர்வதிப்பார்.
[அடிக்குறிப்பு]
a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியா பிரசுரித்தது.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ அடையாள அர்த்தமுள்ள இதயத்தை நீங்கள் எவ்வாறு விவரிப்பீர்கள்?
◻ கடவுளைப் பற்றிய அறிவு என்றால் என்ன?
◻ மனிதவர்க்கத்துக்கு கடவுளைப் பற்றிய அறிவு ஏன் தேவை?
◻ என்ன புதிய புத்தகம் கிடைக்கக்கூடியதாய் உள்ளது, நீங்கள் அதை உபயோகிக்க எவ்வாறு திட்டமிடுகிறீர்கள்?
[பக்கம் 10-ன் படம்]
பூமியிலுள்ள கோடிக்கணக்கானோருக்கு கடவுளைப் பற்றிய அறிவு ஏன் தேவை என்பதற்கு பல காரணங்கள் உள்ளன