சந்தோஷமாய் துதிப்போராக அவர்கள் கூடிவந்தார்கள்
வணக்கத்திற்காக யெகோவா தேவனுடைய பூர்வகால மக்கள் கூடிவந்தபோது, அவர்கள் “சந்தோஷமாகவே ஆகும்படி” கட்டளையிடப்பட்டனர். (உபாகமம் 16:15, NW) 1995/96-ல் நடந்த “சந்தோஷமாய் துதிப்போர்” மாவட்ட மாநாடுகள், யெகோவாவின் சாட்சிகள் சந்தோஷமாய் இருப்பதற்கான நல்ல காரணங்களை நிச்சயமாகவே கொடுத்திருக்கின்றன.
இந்தத் தொடர்ச்சியான மாநாடுகள் ஆரம்பமானதிலிருந்து, அவர்கள் தங்களுடைய விசுவாசத்தைக் கட்டியெழுப்பி உள்ளனர். இந்தச் சந்தோஷமற்ற உலகில், சந்தோஷத்தை எவ்வாறு கண்டடைவது என்பதையும் அவர்கள் காண்பித்துள்ளனர். மாநாட்டின் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொன்றாக நாம் கலந்தாராயலாம்.
‘மக்களே, யெகோவாவைத் துதியுங்கள் . . . சந்தோஷமாய் இருங்கள்!’
மேற்கூறப்பட்ட மாநாட்டின் முதல் நாளிற்கான பொருள் சங்கீதம் 149:1, 2-ஐ அடிப்படையாகக் கொண்டிருந்தது. “மகிழ்ச்சியாய் ஆர்ப்பரிப்பதற்கு நமக்கு காரணம் இருக்கிறது” என்ற பேச்சு, ஏசாயா 35-ம் அதிகாரத்திலுள்ள தீர்க்கதரிசன பொருத்தத்தை ஆராய்ந்தது. பண்டைய இஸ்ரவேலரிடத்தில் அது நிறைவேற்றத்தை கொண்டிருந்தது. விசேஷமாக நம்முடைய நாளில், யெகோவாவின் வணக்கத்தார் ஆவிக்குரிய பரதீஸில் செழிப்பான நிலையிலும் ஆரோக்கிய நிலையிலும் திரும்ப நிலைநாட்டப்படுகையில் நிறைவேற்றத்தை கொண்டிருந்தது. இவ்வாறாக, ஆவிக்குரிய பரதீஸிலும், மிக அருகில் வந்துகொண்டிருக்கும் சொல்லர்த்தமான பரதீஸிலும் யெகோவா தம்முடைய ஜனங்களுக்கு எதை செய்ய நோக்கம் கொண்டுள்ளார் என்பதன்பேரில், மாநாட்டிற்கு வந்தோர் மகிழ்ச்சியாய் ஆர்ப்பரிப்பதற்கான காரணத்தை கொண்டிருந்தார்கள்.
“உலகம் முழுவதும் சந்தோஷமாய் துதிப்போராகப் பிரித்து வைக்கப்பட்டிருத்தல்” என்னும் முக்கிய பேச்சு, இந்த உலகிலிருந்து நம்மை பிரித்து வைப்பது எது? என்னும் கேள்விக்கு விடையளித்தது. நாம் யெகோவாவை ஒன்றுசேர்ந்து வணங்குவதே ஆகும். யெகோவாவின் சாட்சிகள், இந்தப் பூமியில் எங்கு வாழ்ந்தாலும் சரி, அவர்கள் ஒருமனப்பட்டு பேசுகிறார்கள், போதிக்கிறார்கள். யெகோவா தம்முடைய புனிதமான நாமத்தை பரிசுத்தப்படுத்தவும் அவருடைய ராஜ்யத்தின் மூலம் தம்முடைய உன்னத அரசதிகாரத்தை நியாய நிரூபணம் செய்யவும் கொண்டிருக்கும் மகத்தான நோக்கத்தினாலும் அவர்கள் களிகூருகிறார்கள். ஆயினும், அவருடைய நோக்கத்தில் ஓரிடத்தைக் கொண்டிருக்க, யெகோவா நமக்கு எவ்வாறு உதவுகிறார்? அவர் தம்முடைய பரிசுத்த வார்த்தையின் சத்தியத்தை நமக்கு ஒப்புவித்திருக்கிறார். கடவுள் நமக்கு, தம்முடைய பரிசுத்த ஆவியைக் கொடுத்திருக்கிறார். உலகளாவிய சகோதரத்துவத்தினாலும் உண்மை வணக்கத்திற்கான ஏற்பாட்டினாலும் அவர் நம்மை ஆசீர்வதித்துள்ளார். யெகோவாவை மிகுந்த இருதயப்பூர்வமான சந்தோஷத்தோடு சேவிக்க நம்முடைய சர்வதேச குடும்பம் நமக்கு உதவுகிறது.
“உலகிலிருந்து பிரிந்திருந்து, அதனால் கறைபடாதபடி வைத்துக்கொள்ளுங்கள்” என்ற பேச்சு, பாரபட்சம், வகுப்புவாதம் என்னும் கறைகளை தவிர்ப்பதற்கான தேவையை வலியுறுத்தியது. (யாக்கோபு 2:5-9) சிலர், ஒத்த பின்னணியோ நிதி அந்தஸ்தோ உள்ளவர்களிடத்தில் மாத்திரம் தோழமை உறவாடி, ஏழையாகவோ வசதியற்றோ இருக்கும் உடன் கிறிஸ்தவர்களை ஒருவேளை புறக்கணிக்கக்கூடும். சபையில் பொறுப்புள்ள ஸ்தானங்களில் உள்ளவர்களுக்கு சாதகமாயிருக்கும் மனப்பாங்கை சிலர் கொண்டிருக்கலாம். யெகோவாவின் ஒரு சாட்சியாக இருப்பது, எவரும் அடையும் மிகப் பெரிய சிலாக்கியம் என்பதை அவர்கள் மறந்துவிடுகின்றனர். ஆகவே உலக சுபாவங்கள் நம்மை கறைபடுத்தி சபையின் சமாதானத்தைக் குலைத்துப்போட அனுமதிக்கக்கூடாது.—2 பேதுரு 3:14.
“திருமணம் செய்ய நான் தயாராயிருக்கிறேனா?” என்ற பேச்சு, பலர் அவசரப்பட்டு திருமணம் செய்வதைப்பற்றி சுட்டிக்காண்பித்தது. வீட்டில் இருக்கும் கஷ்டமான நிலைமையிலிருந்து விடுபடுவதற்காக அல்லது தங்கள் சகாக்கள் மணஞ்செய்கிறார்கள் என்பதற்காகச் சிலர் திருமணம் செய்கிறார்கள். என்றபோதிலும் மணஞ்செய்ய தகுதியான காரணங்களில், தேவராஜ்ய இலக்குகளை நாடித்தொடருவதற்கான பரஸ்பர ஆசை, மெய்யான அன்பு, தோழமை கொள்வதற்கும் பாதுகாப்பிற்குமான தேவை, பிள்ளைகள் வளர்க்க வேண்டும் என்ற விருப்பம் போன்றவை அடங்கியுள்ளன. திருமணத்திற்கான தயாரிப்பில் ஆவிக்குரிய பயிற்சி அத்தியாவசியமானது. மற்ற காரியங்களோடேகூட, புதிய ஆளுமையைத் தரித்துக்கொள்வதன் மூலம் விரும்பத்தக்க பண்புகளை வளர்ப்பதற்கான தேவை இருக்கிறது. சாத்தியமான துணைவர் யெகோவாவுடன் உண்மையான உறவை வைத்திருப்பதாகவும் மற்றவர்களிடத்தில் மரியாதை காட்டுபவராகவும் காணப்படுகிறாரா என்று ஊர்ஜிதம் செய்வதும்கூட ஞானமான காரியமாகும். முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களிடமிருந்து ஆலோசனையை நாடுவதும் ஞானமானது.—நீதிமொழிகள் 11:14.
அறிவொளியூட்டிய இந்தப் பேச்சையடுத்து, “தங்கள் பிள்ளைகளில் மகிழ்ச்சி காணும் பெற்றோர்” என்ற தலைப்புகொண்ட பேச்சு பின்தொடர்ந்தது. பொதுவாகவே, ஒரு குழந்தையின் பிறப்பு மிகவும் ஆனந்தமாயிருப்பதற்கான காலமாக இருக்கிறது. என்றபோதிலும், பிள்ளைகளை பெறுவது பெரும் பொறுப்பையுங்கூட கொண்டு வருகிறது. (சங்கீதம் 127:3) எனவே, யெகோவாவில் அன்புகூர பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பது முக்கியம். பெற்றோர்கள் இதை, யெகோவாவைப் பற்றி பிள்ளைகளிடத்தில் ஒழுங்காகப் பேசுவதன் மூலமும், அவருடைய வார்த்தையின் நியமங்களை குடும்பத்தில் பொருத்தி பிரயோகிப்பதன் மூலமும் செய்யலாம்.
யெகோவாவின் சாட்சிகளும் கல்வியும் (ஆங்கிலம்) என்ற புதிய சிற்றேடு வெளியிடப்பட்ட ஆச்சரியத்துடன், முதல் நாள் மாநாடு முடிந்தது. சாட்சிகள் “தங்கள் இளம் பிள்ளைகள் கடினமாக உழைத்து, பள்ளியில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை கருத்தார்ந்த விதத்தில் செய்வதற்கு உற்சாகப்படுத்துகின்றனர்” என்று அது தெளிவாக விளக்குகிறது. நைஜீரியா, மெக்ஸிகோ, மற்றும் பிற நாடுகளில் பல ஆண்டுகளாக யெகோவாவின் சாட்சிகள் நடத்திவந்த படிப்பறிவு வகுப்புகளின் குறிப்பிடத்தக்க விளைவுகளையும்கூட இந்தப் பிரசுரம் விளக்குகிறது. நாம் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை ஆசிரியர்கள் காண்பதற்கும் இந்தச் சிற்றேடு உதவ வேண்டும்.
“துதியை பலியாக எப்போதும் கடவுளுக்கு செலுத்துங்கள்”
மேற்கூறப்பட்ட இரண்டாம் நாளிற்கான பொருள் எபிரெயர் 13:15-ஐ (NW) அடிப்படையாகக் கொண்டிருந்தது. “யெகோவாவைத் துதிப்பதற்கான அழைப்பிற்கு பதிலளித்தல்” என்ற தொடர்பேச்சை, காலை நிகழ்ச்சிநிரல் அளித்தது. இந்த அழைப்பிற்கு பதிலளிக்க வயது வரம்பு கிடையாது. சங்கீதம் 148:12, 13 வாலிபரையும் கன்னிகைகளையும் முதிர்வயதுள்ளவர்களையும் பிள்ளைகளையும் யெகோவாவைத் துதிக்கும்படி அழைக்கிறது. யெகோவாவின் சந்தோஷமுள்ள ஊழியர்கள் பலரால், தங்களுடைய துதியை அதிகரிக்க முடிந்திருக்கிறது. உலகெங்கும் 6,00,000-ற்கும் மேற்பட்ட ஆட்கள் முழுநேர பிரசங்க வேலையில் அல்லது பயனியர் சேவையில் பங்குகொள்கின்றனர். 15,000-ற்கும் மேற்பட்டோர் விசேஷ பயனியர் வேலையிலும் 15,000-ற்கும் மேற்பட்டோர் பெத்தேல் சேவையிலும் ஈடுபட்டுள்ளனர்.
“யெகோவாவின் அமைப்போடு உண்மைப்பற்றுறுதியுடன் சேவிப்பது” என்ற பேச்சு, கடவுளுடைய ஊழியர்களுக்கு உண்மைப்பற்றுறுதி முக்கியம் என்பதை காட்டியது. யெகோவாவுக்கு உண்மைப்பற்றுறுதியுடன் இருப்பது நன்கு ஒட்டிக்கொள்ளும் பசையைப்போல செயல்படும் மிகவும் பலமான பக்தியோடு அவரிடத்தில் ஒட்டிக்கொள்வதை அர்த்தப்படுத்துகிறது. பிறர் நம்மை பார்க்கிறார்களோ இல்லையோ வேண்டுமென்றே பைபிள் கட்டளைகளை மீறுவதைத் தவிர்ப்பதை உண்மைப்பற்றுறுதி அவசியப்படுத்துகிறது. காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளில் காணப்படும் பைபிள் போதனைகளையும் உவாட்ச் டவர் சொஸைட்டியிடமிருந்து வரும் மற்ற எல்லா ஆவிக்குரிய ஆகாரத்தையும் உண்மைப்பற்றுறுதியுடன் கடைப்பிடிப்பதையும் இது அவசியப்படுத்துகிறது. இந்தப் பேச்சையடுத்து முழுக்காட்டுதல் பேச்சு பின்தொடர்ந்தது. யெகோவாவுக்கு தங்களை ஒப்புக்கொடுத்ததன் அத்தாட்சியை முழுக்காட்டப்படவிருந்தவர்கள் காண்பித்தது என்னே ஒரு சந்தோஷம்!
ஓசியா 4:1-3-ல் உள்ள வார்த்தைகள் பிற்பகல் கொடுக்கப்பட்ட “நற்பண்பா துர்பண்பா—எதை நாடித்தொடருகிறீர்கள்?” என்ற பேச்சுக்கு ஒரு படிவத்தை அமைத்து கொடுத்தன. நற்பண்பின்பேரிலுள்ள உலகத்தின் நோக்குநிலை சீரழிந்துகொண்டே போனாலும், ஒழுக்க நற்பண்பை நாடித் தொடர்வதற்காக கிறிஸ்தவர்கள் “ஊக்கமுள்ள முயற்சியை” எடுக்கவேண்டும். (2 பேதுரு 1:5, NW) ஒரு நபர் எவ்வாறு சிந்திக்கிறார் என்பதில் இது ஆரம்பிக்கிறது. அவருடைய எண்ணங்கள் நற்பண்புள்ளவையாக இருந்தால், அவர் சுத்தமான, ஆரோக்கியமான, கட்டியெழுப்பும் வார்த்தைகளைப் பேசுவார். பிறருடன் தொடர்புகொள்கையில் நேர்மையாக இருக்க முயற்சி செய்வார். மனச்சோர்வினாலோ கடுந்துன்பத்தினாலோ அவதிப்படும் ஓர் உடன் கிறிஸ்தவரிடத்தில் புரிந்துகொள்ளும் தன்மையுடனும் பரிவிரக்கத்துடனும் இருக்க பிரயாசப்படுவதையும்கூட நற்பண்பை நாடித்தொடருவது உட்படுத்துகிறது.—1 தெசலோனிக்கேயர் 5:14.
“பிசாசின் கண்ணிகளுக்கு எதிராக காத்துக்கொள்ளுங்கள்,” என்ற மற்றொரு பேச்சு, கிறிஸ்தவர்கள் பேய்த்தன செல்வாக்கிற்கு உட்படுவதற்கு எதிராக எச்சரித்தது. நோய்களுக்கான சிகிச்சையளிக்கும் துறையில், மாயமந்திர சாயலையுடைய மனவசியம் போன்ற சிகிச்சை முறைகளைக்குறித்து கிறிஸ்தவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். மற்றபடி, தனி நபர்கள் தங்கள் சரீரப்பிரகாரமான சுகநலத்தை கவனித்துக்கொள்வதற்கு என்ன செய்கிறார்கள் என்பது அவரவருடைய தனிப்பட்ட காரியமாகும்.
இரண்டாம் நாள், சந்தோஷமான ஆச்சரியத்துடன்—பாக்கெட் அளவான புதிய பிரசுரத்தை வெளியிடுவதன் மூலம் முடிவடைந்தது, இது நேர்மை இருதயம் உள்ள ஆட்கள் ஒப்புகொடுத்தலுக்கும் முழுக்காட்டுதலுக்கும் விரைவாக முன்னேறுவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய 192-பக்க புத்தகம், நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற தலைப்பைக் கொண்டுள்ளது. இந்த அறிவு புத்தகம் சத்தியத்தை நம்பிக்கையான முறையில் அளிக்கிறது. அது பொய் கோட்பாடுகளை பொய்யென்று நிரூபிப்பதன்பேரில் விரிவாக பேசிக்கொண்டில்லை. தெளிவான வார்த்தைகளிலும் தர்க்கரீதியான நடையிலும் அது எழுதப்பட்டிருப்பது இந்தப் புத்தகத்தைக் கொண்டு பைபிள் படிப்புகள் நடத்துவதையும் கடவுளைப் பற்றிய அறிவைக் கிரகிக்க மக்களுக்கு உதவுவதையும் சுலபமாயிருக்கச் செய்ய வேண்டும்.
“மக்களே, களிகூர்ந்து, என்றும் சந்தோஷமாக இருங்கள்”
ஏசாயா 65:18-ன் (NW) வார்த்தைகள், மாநாட்டின் மூன்றாம் நாளிற்கான பொருளாகத் திகழ்ந்தன. நான் படைப்பனவற்றில், மக்களே களிகூர்ந்து, என்றும் சந்தோஷமாக இருங்கள். இதோ, எருசலேமைக் களிகூருதலுக்காகவும் அதன் மக்களை மகிழ்ச்சிக்காகவும் நான் படைக்கிறேன்.இந்தப் பொல்லாத ஒழுங்குமுறை, முடிவை நோக்கி அடியெடுத்து வைத்த ஆண்டு, 1914 என்பதாக பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம் சுட்டிக்காட்டியது. எனவேதான், “இந்த ஒழுங்கின் முடிவின்போது சந்தோஷமாய் துதிப்போர்” என்ற தலைப்பைக் கொண்ட தொடர் பேச்சு, அவையோரின் மனமொன்றிய கவனத்தை ஈர்த்தது. எவ்வாறு அநேக கோடிக்கணக்கானோர், பேராசையாலும் உலகின் வன்முறை ஆவியாலும் அடித்துச்செல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதை பேச்சாளர்கள் சுட்டிக்காட்டினார்கள். சாத்தான் அதிபதியாக இருக்கும் உலகின் பாகமாக இருப்பதால், ஏற்ற சமயத்தில் நியாயத்தீர்ப்புக்குள்ளாவார்கள். எனவே, தெரிவுசெய்வதற்கான சமயம் இதுவே. நாம் எந்தப் பக்கம் இருக்க விரும்புகிறோம்? யெகோவாவை வணங்குவதற்கும் அவருடைய உன்னத அரசதிகாரத்தை மேன்மைப்படுத்துவதற்கும் நாம் விரும்புவோமா அல்லது சாத்தானுக்கு பிடித்தமான காரியங்களை செய்வதன் மூலம், அவனை நம்முடைய அதிபதியாக இருக்க அனுமதிக்கப் போகிறோமா? ஐயத்திற்கிடமின்றி, நாம் அனைவரும் யெகோவாவின் பக்கமாக நிலைநிற்கை எடுக்கவேண்டும்.
“நித்திய ராஜாவை துதியுங்கள்!” என்ற மாநாட்டின் பொதுப் பேச்சு, வந்திருந்த அனைவரின் சிந்தனைக்கு திடமான உணவை அளித்தது. நித்தியத்தைப் பற்றிய கருத்து, பலவீனமான மானிடர் புரிந்துகொள்வதற்கு அப்பாற்பட்டதாகக் தோன்றியபோதிலும், அதை யெகோவா முழுமையாகப் புரிந்துகொள்கிறார். “யெகோவா சதாகாலங்களுக்கும், நித்தியத்துக்கும் ராஜாவாயிருக்கிறார்” என்று சங்கீதக்காரன் பாடினார். (சங்கீதம் 10:16, NW) இந்த நித்தியத்தின் ராஜா, மனிதவர்க்கம் நித்திய வாழ்க்கையை அனுபவிப்பதற்கான வழியைத் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் செய்துள்ளார். (யோவான் 17:3) “ஆம், பாவமுள்ள மனிதர்களாகிய நாம், தெய்வீக கல்வி மூலமும் இயேசுவின் கிரய பலியில் விசுவாசிப்பதன் மூலமும் நித்திய ஜீவனை அடையக்கூடும்,” என்று பேச்சாளர் கூறினார்.
மாநாடு முடிவடைந்து கொண்டிருக்கையில், “நாளுக்கு நாள் யெகோவாவை சந்தோஷமாக துதிப்பது” என்ற தலைப்பைக் கொண்ட இறுதிப் பேச்சு, அந்தக் கூட்டத்திலிருந்தோரை கட்டியெழுப்பியது. சீஷராக்கும் வேலை உலகம் முழுவதிலும் முன்னேற்றமடைந்ததன் அறிக்கைகளைக் கேட்பது இருதயத்திற்கு அனலூட்டுவதாய் இருந்தது. மாநாட்டிற்கு வந்திருந்தோர் “நாடோறும் உம்மை ஸ்தோத்திரித்து, எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய நாமத்தைத் துதிப்பேன்” என்று சொல்வதற்கு தூண்டப்பட்டார்கள்.—சங்கீதம் 145:2.
சொல்லவும் வாய்கூசும் மனிதாபிமானமற்ற செயல்கள் உலகின் சந்தோஷத்தை எடுத்துவிடுகின்றன. இருந்தபோதிலும், யெகோவாவின் பேரில் முழு விசுவாசமுள்ள தனி நபர்கள் தெய்வீக சந்தோஷத்தை கொண்டிருக்க முடியும். எனவேதான், ஓர் உலகளாவிய சகோதரத்துவமாக யெகோவாவின் சாட்சிகள் பின்வரும் சங்கீதம் 35:27, 28-ன் வார்த்தைகளை திரும்பத் திரும்ப சொல்கிறார்கள்: “என் நீதிவிளங்க விரும்புகிறவர்கள் கெம்பீரித்து மகிழ்ந்து, தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிற கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்போதும் சொல்லக்கடவர்கள். என் நாவு உமது நீதியையும், நாள்முழுதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும்.”
[பக்கம் 7-ன் படங்கள்]
“யெகோவாவின் சாட்சிகளும் கல்வியும்” என்ற சிற்றேட்டிலிருந்து குடும்பங்கள் நன்மையடையும்
[பக்கம் 8, 9-ன் படங்கள்]
“நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு” என்ற இந்தப் புதிய புத்தகம், பைபிள் சத்தியங்களைக் கட்டியெழுப்பும் விதத்தில் அளிக்கிறது
[பக்கம் 9-ன் படம்]
யெகோவாவுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்ததன் அடையாளமாகப் பலர் முழுக்காட்டப்பட்டனர்
[பக்கம் 9-ன் படம்]
மாநாட்டிற்கு வந்தவர்கள், “முதிர்வயதிலுள்ள தகுதியுள்ளவர்களைக் கனம்பண்ணுதல்” என்ற நாடகத்தால் வெகுவாகத் தூண்டப்பட்டனர்