அவர் தெய்வீக வழிநடத்துதலை ஏற்றுக்கொண்டார்
பரிபூரணமான ஒரு குழந்தை உங்கள் பொறுப்பில் விடப்பட்டு அதை சரிவர வளர்க்கும்படி நீங்கள் எதிர்பார்க்கப்படுவதாக வைத்துக்கொள்வோம். அது என்னே கடினமான ஒரு பொறுப்பு! அபூரணமான எந்த ஒரு மனிதனும் எவ்விதமாக அதை செய்யமுடியும்? தெய்வீக வழிநடத்துதலை ஏற்று அதை அன்றாட வாழ்க்கையில் பின்பற்றுவதன் மூலமாக மட்டுமே முடியும்.
இதே காரியத்தைத் தான் இயேசுவின் வளர்ப்பு தகப்பனாகிய யோசேப்பு செய்தார். யோசேப்பைப் பற்றிய விரிவான விவரங்கள் கொண்ட போலியான கட்டுக்கதைகளுக்கு எதிர்மாறாக, இயேசுவின் ஆரம்ப கால வாழ்க்கையில் அவருடைய தாழ்மையான பங்கைப் பற்றி பைபிள் மிகக் குறைவாகவே சொல்கிறது. யோசேப்பும் அவருடைய மனைவி மரியாளும் இயேசுவையும், மற்ற நான்கு மகன்களையும் மகள்களையும்கூட வளர்த்தனர் என்பது நமக்குத் தெரியும்.—மாற்கு 6:3.
யோசேப்பு சாலொமோனின் வம்சாவழியின் மூலமாக இஸ்ரவேலின் அரசனாகிய தாவீதின் சந்ததியாராக இருந்தார். அவர் யாக்கோபுவின் மகனாகவும் ஏலியின் மருமகனாகவும் இருந்தார். (மத்தேயு 1:16; லூக்கா 3:23) கலிலேயாவிலுள்ள நாசரேத்தூரில் ஒரு தச்சனாக, யோசேப்பு ஏழ்மை நிலையில் இருந்தார். (மத்தேயு 13:55; லூக்கா 2:4, 24; லேவியராகமம் 12:8-ஐ ஒப்பிடவும்.) ஆனால் அவர் ஆவிக்குரியவிதமாக செல்வந்தராக இருந்தார். (நீதிமொழிகள் 10:22) நிச்சயமாகவே அவர் தெய்வீக வழிநடத்துதலை ஏற்றுக்கொண்டதே இதற்கு காரணமாகும்.
யோசேப்பு கடவுளில் விசுவாசம் உடையவராய் இருந்து சரியானதைச் செய்ய விரும்பிய சாந்தமும் மனத்தாழ்மையுள்ள ஒரு யூதராக இருந்தார் என்பதில் சந்தேகமில்லை. வேதாகமத்தில் பதிவாகியுள்ள அவருடைய வாழ்க்கையில் நடந்த ஒருசில சம்பவங்கள், அவர் எப்பொழுதும் யெகோவாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்திருந்தார் என்பதைக் காட்டுகின்றன. இவை நியாயப்பிரமாணத்தில் இருந்தாலும் சரி அல்லது தேவதூதர்கள் மூலமாக நேரடியாக யோசேப்பு பெற்றுக்கொண்டவையாக இருந்தாலும் சரி இது இவ்விதமாக இருந்தது.
பிரச்சினைகளையுடையவராய் இருந்த ஒரு நீதிமான்
பெரிய ஒரு பிரச்சினையை எதிர்ப்படுகையில் தேவ பயமுள்ள ஒரு நபர் என்ன செய்யவேண்டும்? ஏன், அவர் ‘யெகோவாவின்மேல் தன் பாரத்தை வைத்துவிட்டு’ தெய்வீக வழிநடத்துதலைப் பின்பற்றவேண்டும்! (சங்கீதம் 55:22, NW) இதைத்தான் யோசேப்பு செய்தார். அவர் மரியாளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த போதே, “அவர்கள் கூடிவருமுன்னே, அவள் பரிசுத்தஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.” யோசேப்பு ‘நீதிமானாயிருந்து அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தார்.’ காரியங்களை யோசேப்பு சிந்தித்து முடித்தப் பின்பு, யெகோவாவின் தூதன் ஒரு சொப்பனத்தில் அவருக்குத் தோன்றி பின்வருமாறு சொன்னார்: “தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்.” யோசேப்பு நித்திரையிலிருந்து எழுந்தபோது, “கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு; அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.” (மத்தேயு 1:18-25) யோசேப்பு தெய்வீக வழிநடத்துதலை ஏற்றுக்கொண்டார்.
மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களில் குடிமதிப்பெழுதவேண்டும் என்று அகுஸ்துராயன் கட்டளையிட்டான். யோசேப்பும் மரியாளும் கீழ்ப்படிதலோடு யூதேயாவிலிருந்த பெத்லகேமுக்குப் போனார்கள். அங்கே மரியாள் இயேசுவைப் பெற்றெடுத்து, வேறு எங்கும் இடமில்லாமல் போனதால் அவரை ஒரு முன்னணையிலே கிடத்தினாள். விசேஷமான இந்தப் பிறப்பைப்பற்றிய தேவதூதர்களின் அறிவிப்பை அன்றிரவு கேட்ட மேய்ப்பர்கள் குழந்தையைப் பார்க்க வந்தார்கள். சுமார் 40 நாட்களுக்குப் பின்னர், நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி யோசேப்பும் மரியாளும் எருசலேமிலிருந்த ஆலயத்துக்கு இயேசுவை அளிப்பதற்கு காணிக்கைகளோடு வந்தார்கள். இயேசு செய்யப்போகும் பெரிய காரியங்களைப் பற்றிய சிமியோனின் தீர்க்கதரிசன வார்த்தைகளைக் கேட்டபோது அவர்கள் இருவரும் ஆச்சரியப்பட்டார்கள்.—லூக்கா 2:1-33; லேவியராகமம் 12:2-4, 6-8-ஐ ஒப்பிடவும்.
ஆலயத்தில் இயேசுவை அளித்தப்பிற்பாடு உடனடியாக யோசேப்பும் மரியாளும் நாசரேத்துக்குச் சென்றதாக லூக்கா 2:39 குறிப்பிடுவதாக தோன்றினாலும், இந்த வசனம் சுருக்கமான பதிவின் ஒரு பாகமாக இருக்கிறது. ஆலயத்தில் இயேசுவை அளித்தப் பிற்பாடு கிழக்கிலிருந்து வானசாஸ்திரிகள் (மேஜய்) மரியாளையும் இயேசுவையும் பெத்லகேமில் ஒரு வீட்டில் சந்தித்தபோது அது கொஞ்ச காலத்துக்குப் பின்பு என்பதாக தோன்றுகிறது. இந்தச் சந்திப்பினால் இயேசுவுக்கு மரணம் நேரிடுவது தெய்வீக குறுக்கீட்டினால் தடைசெய்யப்பட்டது. மேஜய் திரும்பிச்சென்றப்பின் யெகோவாவின் தூதன் யோசேப்புக்கு ஒரு சொப்பனத்தில் தோன்றி பின்வருமாறு சொன்னார்: “ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்.” எப்போதும் போல், யோசேப்பு தெய்வீக வழிநடத்துதலுக்குக் கவனம்செலுத்தி தன்னுடைய குடும்பத்தை எகிப்துக்குக் கொண்டு போனார்.—மத்தேயு 2:1-14.
ஏரோது மரித்தபோது, எகிப்திலே ஒரு தேவதூதன் யோசேப்புக்கு ஒரு சொப்பனத்தில் தோன்றி பின்வருமாறு சொன்னார்: “நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்துக்குப் போ.” ஏரோதின் மகன் அர்கெலாயு அவனுடைய தகப்பனின் ஸ்தானத்தில் ஆட்சிசெய்வதைக் கேள்விப்பட்டபோது, யோசேப்பு யூதேயாவுக்குத் திரும்பிவர பயப்பட்டார். சொப்பனத்தில் கொடுக்கப்பட்ட தெய்வீக எச்சரிப்புக்குச் செவிசாய்த்து, அவர் கலிலேயாவின் பிராந்தியத்துக்குள் சென்று நாசரேத்தூரில் வந்து வாசம்பண்ணினார்.—மத்தேயு 2:15-23.
ஆவிக்குரிய ஒரு மனிதன்
தன்னுடைய குடும்பத்தார் தெய்வீக சட்டத்துக்குக் கீழ்ப்படிந்திருப்பதையும் அவர்கள் ஆவிக்குரிய விதமாக போஷிக்கப்பட்டிருப்பதையும் யோசேப்பு பார்த்துக்கொண்டார். ஒவ்வொரு வருடமும் அவர் எருசலேமில் பஸ்கா பண்டிகைக்குத் தன்னுடைய முழு குடும்பத்தையும் தன்னோடு அழைத்துச்சென்றார். இந்தச் சமயங்கள் ஒன்றில், யோசேப்பும் மரியாளும் நாசரேத்துக்குத் திரும்பிவந்துகொண்டிருக்கையில், எருசலேமிலிருந்து ஒரு நாள் பிரயாணத்தை முடித்தபின்னர் 12 வயது இயேசு அங்கு இல்லாதிருப்பதைக் கண்டுபிடித்தனர். எருசலேமுக்குத் திரும்பி போய், அவர்கள் ஊக்கமாக தேடியபோது, கடைசியில் அவர் ஆலயத்தில் அங்கே போதகர்களுக்குச் செவிகொடுத்துக் கொண்டும் அவர்களை கேள்விகள் கேட்டுக்கொண்டுமிருப்பதைக் கண்டார்கள்.—லூக்கா 2:41-50.
ஒருசில காரியங்களில் தன்னுடைய மனைவி முதல்படியை எடுக்க யோசேப்பு அனுமதித்திருக்கிறார் என்பதாக தெரிகிறது. உதாரணமாக, எருசலேமுக்குத் திரும்பிவந்து, அங்கே ஆலயத்தில் இயேசுவைக் கண்டபோது, மரியாள்தானே அந்தக் காரியத்தைக் குறித்து தன்னுடைய இளம் மகனிடம் பேசினாள். (லூக்கா 2:48, 49) “தச்சனுடைய குமாரனாக” வளர்ந்துவந்த போது, இயேசு ஆவிக்குரிய போதனையைப் பெற்றுக்கொண்டார். யோசேப்பு அவருக்குத் தச்சுவேலையையும்கூட கற்றுக்கொடுத்திருக்கிறார், ஏனென்றால் இயேசு “தச்சன், மரியாளின் குமாரன்” என்றழைக்கப்பட்டார். (மத்தேயு 13:55, NW; மாற்கு 6:3) தேவ பயமுள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குப் போதிப்பதற்கு, விசேஷமாக ஆவிக்குரிய பயிற்றுவிப்பை அவர்களுக்குக் கொடுப்பதற்கு இது போன்ற சந்தர்ப்பங்களை முழுவதுமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.—எபேசியர் 6:4; 2 தீமோத்தேயு 1:5; 3:14-16.
யோசேப்பின் எதிர்பார்ப்புகள்
யோசேப்பின் மரணத்தைப்பற்றி வேதவசனங்கள் எந்தத் தகவலையும் கொடுப்பதில்லை. ஆனால் மாற்கு 6:3 இயேசுவை யோசேப்பினுடைய குமாரன் என்றில்லாமல் “மரியாளுடைய குமாரன்” என்று அழைப்பது குறிப்பிடத்தக்கதாகும். யோசேப்பு அப்போது மரித்துவிட்டிருக்க வேண்டும் என்பதை இது குறிப்பிட்டுக் காட்டுகிறது. மேலுமாக, யோசேப்பு பொ.ச. 33 வரையாக உயிரோடு இருந்திருந்தால், கழுமரத்தில் அறையப்பட்ட இயேசு மரியாளை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை அப்போஸ்தலனாகிய யோவானிடம் ஒப்படைத்திருக்கமாட்டார்.—யோவான் 19:26, 27.
அப்படியென்றால், மனுஷ குமாரனின் குரலைக் கேட்டு உயிர்த்தெழும்பி வரப்போகிறவர்கள் மத்தியில் யோசேப்பு ஒருவராக இருப்பார். (யோவான் 5:28, 29) நித்திய ஜீவனுக்கான யெகோவாவின் ஏற்பாட்டை கற்றறிந்து, யோசேப்பு யெகோவாவின் ஏற்பாட்டை சந்தேகமின்றி பயன்படுத்திக்கொண்டு, 1,900 ஆண்டுகளுக்கும் அதிக முன்பாகவே அவர் தெய்வீக வழிநடத்துதலுக்குக் கவனம் செலுத்தியதுபோலவே பெரிய பரலோக அரசராகிய இயேசு கிறிஸ்துவின் கீழ்ப்படிதலுள்ள ஒரு குடிமகனாக இருப்பார்.
[பக்கம் 31-ன் படம்]
யோசேப்பு இயேசுவுக்கு ஆவிக்குரிய போதனையை அளித்து தச்சுவேலையையும்கூட கற்றுக்கொடுத்தார்