காதிக் பைபிள்—குறிப்பிடத்தக்க ஒரு சாதனை
காதியர் ஜெர்மானிய பழங்குடி மக்களின் கூட்டுக்குழுவினராக இருந்தனர், ஒருவேளை ஸ்கான்டிநேவியாவை பிறப்பிடமாகக் கொண்டிருக்கலாம். நம்முடைய பொது சகாப்தத்தின் ஆரம்ப நூற்றாண்டுகளில், தெற்கே கருங்கடல் வரையாகவும் டன்யூப் ஆறுவரையாகவும் ரோம சாம்ராஜ்யத்தின் எல்லைகள் வரையாகவும் இடம்பெயர்ந்து சென்றனர்.
எந்தவொரு ஜெர்மானிய மொழியிலும் உண்டுபண்ணப்பட்ட இலக்கிய படைப்பிலேயே முதலாவதானது காதிக் பைபிளாகும். இன்று இந்த மொழிபெயர்ப்பு சிறுதுண்டுகளின் வடிவில் மட்டுமே இருக்கிறது. என்றபோதிலும், பரிசுத்த வேதாகமங்களில் ஒப்பற்றதும் மதிப்புவாய்ந்ததுமான மொழிபெயர்ப்பாக தொடர்ந்து இருந்துவருகிறது. ஏன்?
உல்ஃபலாஸ்—மிஷனரியும் பைபிள் மொழிபெயர்ப்பாளரும்
இந்த பைபிளை மொழிபெயர்த்தவர் உல்ஃபலாஸ் ஆவார், மற்றபடி உவுல்ஃபலா என்ற அவருடைய காதிய பெயரால் அவர் அழைக்கப்பட்டிருந்தார். சரித்திராசிரியராகிய ஃபிலஸ்டார்ஜியஸ் கூறியபடி, இப்பொழுது கிழக்குத் துருக்கியின் பாகமாயிருக்கிற கப்படோஷியாவுக்கு காதிய திடீர்த்தாக்குதல் ஒன்றில் சிறைக்கைதிகளாகக் கொண்டுசெல்லப்பட்டவர்களின் சந்ததியினராக உல்ஃபலாஸ் இருந்தார். ஏறக்குறைய பொ.ச. 311-ல் பிறந்தார். சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நிகமீடியாவைச் சேர்ந்த யூஸீபியஸால் சமயப்பணியில் அமர்த்தப்பட்டார். மேலும் காதியர்கள் மத்தியில் ஒரு மிஷனரியாக சேவிப்பதற்குப் பயிற்சியளிக்கப்பட்டார்.
“தம்மால் மதம் மாற்றப்பட்டு வந்தவர்களுக்கு போதிப்பதற்கும் பெருகச்செய்வதற்கும் பைபிளிலுள்ள இராஜாக்களின் புத்தகங்களைத் தவிர மற்றெல்லாவற்றையும் கிரேக்கிலிருந்து காதிக் மொழிக்கு பொறுமையுடன் மொழிபெயர்த்தார்” என்று சரித்திராசிரியராகிய உவில் டூரன்ட் சொல்கிறார். (விசுவாச சகாப்தம் [The Age of Faith]) இன்று, நெகேமியா புத்தகத்தின் சிறுதுண்டைத் தவிர, காதிக் பைபிள் கையெழுத்துப் பிரதிகளின் எஞ்சிய பகுதிகள் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமங்களின் பகுதிகள் மட்டுமே.
காதிக் எழுத்துக்கள்கொண்ட ஒரு மொழியல்ல. ஆகவே, உல்ஃபலாஸ் தனிச்சிறப்புவாய்ந்த அறிவுக்கூர்மையைத் தேவைப்படுத்திய மொழிபெயர்க்கும் சவால் ஒன்றை எதிர்ப்பட்டார். முக்கியமாக கிரேக்க மற்றும் லத்தீன் எழுத்துக்களின் அடிப்படையிலான 27 அடையாளங்கள்கொண்ட காதிக் மொழிக்குரிய எழுத்துக்களைக் கண்டுபிடித்ததாக பூர்வீக குருத்துவ சரித்திராசிரியர்கள் அவரை கெளரவிக்கின்றனர். மேலுமாக, “அவர் ஜெர்மானிய கிறிஸ்தவ கலைச் சொற்தொகுதியை கண்டுபிடித்தார் எனவும் அவற்றில் சில இன்னும் புழக்கத்தில் இருக்கின்றன எனவும்” தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா குறிப்பிடுகிறது.
காதிக் பைபிளின் ஆரம்பகால சரித்திரம்
உல்ஃபலாஸ் தம்முடைய மொழிபெயர்ப்பை பொ.ச. 381-க்கு முன்பாக முடித்துவிட்டு, இரண்டோ மூன்றோ ஆண்டுகளுக்குப் பிற்பாடு மரித்துவிட்டார். அவருடைய படைப்பின் பிரபல்யத்தைக்குறித்து தி என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானா சான்றுபகருகிறது. “அந்த மொழிபெயர்ப்பு ஸ்பெய்னுக்கும் இத்தாலிக்கும் இடம்பெயர்ந்து வந்திருந்த காதியர்களால் பொதுவாக பயன்படுத்தப்பட்டது” என்று அது சொல்கிறது. தப்பிப்பிழைத்த எண்ணற்ற சிறுதுண்டுகளை வைத்துத் தீர்மானிக்கையில், உண்மையில், இந்தக் காதிக் பைபிள் பிரதிகள் பல தயாரிக்கப்பட்டன என்பதாக தெரிகிறது. பெரும்பாலும், பல்வேறு கையெழுத்துப் பிரதிகள், காதியர்கள் தங்களுடைய ராஜ்யத்தை நிறுவியிருந்த பகுதியாகிய ரவன்னா மற்றும் வெரோனா நகரங்களிலுள்ள இடைநிலைக்கால எழுதுகூடங்களில் தயாரிக்கப்பட்டன. இந்த எழுதுகூடங்கள் துறவிமாடங்களிலுள்ள அறைகளாகும், இங்குக் கையெழுத்துப் பிரதிகள் எழுதப்பட்டு நகலெடுக்கப்பட்டன.
பைஸான்டைன் பேரரசராகிய ஜஸ்டினியன் I இத்தாலியை மீண்டும் கைப்பற்றிய பிறகு, ஏறக்குறைய பொ.ச. 555-ல் ஒரு தேசமாக காதியர்கள் முடிவுக்கு வந்தனர். அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு, “இத்தாலியிலுள்ள காதிக் மொழியும் காதிக் பாரம்பரியங்களும் ஏறக்குறைய ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டன. காதிக் மொழியிலுள்ள கையெழுத்துப் பிரதிகள் இனிமேலும் எந்தவித அக்கறைக்குரியதாக இல்லாமற்போயின. . . . பேரளவில் அவை பிரித்தெடுக்கப்பட்டு, எழுத்துக்களை நீக்குவதற்கு சுரண்டப்பட்டன. பின்பு புதிய பொருளடக்கத்தை எழுதுவதற்காக அந்த விலையுயர்ந்த வரைதோல் (parchment) மீண்டும் பயன்படுத்தப்பட்டது,” என்று டோனஸ் க்ளேபர்க் சொல்கிறார்.
தப்பிப்பிழைத்திருக்கிற கையெழுத்துப் பிரதிகள்
இந்தக் கையெழுத்துப் பிரதிகள் சிலவற்றில் எழுத்துக்களை அழித்ததானது செவ்வனே செய்யப்படவில்லை. இது, அந்த மூல எழுத்துக்கள் மங்கலாகத் தெரியும்படி விட்டுச்சென்றது. இவை, அழித்தெழுதத்தக்க வரைவு மூலப்பொருட்கள் (palimpsests) என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை கண்டுபிடிக்கப்பட்டு அவற்றின் பொருள் அறியப்பட்டிருக்கின்றன. குறிப்பிடத்தக்க விதமாகவே, மத்தேயு, யோவான், லூக்கா, மாற்கு என்ற வரிசையிலமைந்த நான்கு சுவிசேஷங்களடங்கிய புகழ்வாய்ந்த கோடெக்ஸ் ஆர்ஜென்டேயோஸ் சிறிதும் அழியாமல் பாதுகாக்கப்பட்டது.
இந்த மிகச் சிறந்த கோடெக்ஸ், பொ.ச. ஆறாவது நூற்றாண்டின் ஆரம்பத்தில் ரவன்னா எழுதுகூடத்தில் முதன்முதலாக எழுதப்பட்டதாக எண்ணப்படுகிறது. இது கோடெக்ஸ் ஆர்ஜென்டேயோஸ் என்றழைக்கப்படுகிறது, அதன் அர்த்தம் “வெள்ளி நூல்” என்பதாகும். ஏனென்றால் அது வெள்ளி மையினால் எழுதப்பட்டது. வரைதோலினுடைய பக்கங்கள் ஊதாநிறத்தால் சாயமிடப்பட்டிருக்கின்றன. இது, ஒருவேளை அரச குடும்பத்தைச் சேர்ந்தவருக்காக ஒப்புவிக்கப்பட்டிருக்கலாம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. ஒவ்வொரு சுவிசேஷத்தின் முதல் மூன்று வரிகளையும் வித்தியாசமான பகுதிகளின் ஆரம்பங்களையும் பொன்னிற எழுத்துக்கள் அழகுபடுத்துகின்றன. சுவிசேஷ எழுத்தாளர்களின் பெயர்கள், கையெழுத்துப் படிவத்தினுடைய ஒவ்வொரு பத்தியின் அடிப்பகுதியில் வைக்கப்பட்ட இணையான நான்கு “வில்வளைவுகளின்” மேற்பகுதியில் பொன்னிறத்தில் காணப்படுகின்றன. இவை சுவிசேஷங்களில் உள்ள இணையான பகுதிகளுக்கான மேற்கோள்களைக் கொடுக்கின்றன.
காதிக் பைபிள் வாசகத்தைக் கண்டுபிடித்தல்
காதிக் தேசம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, விலையேறப்பெற்ற கோடெக்ஸ் ஆர்ஜென்டேயோஸ் மறைந்துபோனது. ஜெர்மனியில் கொலோனுக்கு அருகிலுள்ள வெர்டன் துறவிமாடத்தில் இருப்பதாக 16-ம் நூற்றாண்டின் மத்திபத்தில் பொதுமக்களால் அறியப்பட்டது வரையாக, அது மீண்டுமாக காணப்படவில்லை.
1569-ம் ஆண்டில், கர்த்தருடைய ஜெபம் காதிக் மொழிபெயர்ப்பில் பிரசுரிக்கப்பட்டதானது, அது எடுக்கப்பட்டிருந்த பைபிளுக்குக் கவனத்தை ஈர்த்தது. 1597-ல் முதல் தடவையாக கோடெக்ஸ் ஆர்ஜென்டேயோஸ் என்ற இந்தப் பெயர் அச்சில் தோன்றியது. வெர்டனிலிருந்து ப்ராக்கிலுள்ள பேரரசரின் கலைக்கூடத்திற்கு இந்தக் கையெழுத்துப் பிரதி வரலாயிற்று. என்றபோதிலும், 1648-ல் முப்பது ஆண்டுகால போரின் முடிவில், வெற்றிபெற்ற ஸ்வீடன் நாட்டினர் மற்ற பொக்கிஷங்களோடு இதையும் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். 1669 முதற்கொண்டு, இந்தக் கோடெக்ஸ் ஸ்வீடனிலுள்ள உப்பசாலா பல்கலைக்கழக நூலகத்தில் நிரந்தரமான ஓர் இடத்தைப் பிடித்திருக்கிறது.
இந்தக் கோடெக்ஸ் ஆர்ஜென்டேயோஸ் ஆரம்பத்தில் 336 இதழ்களாகத் தொகுக்கப்பட்டது. அவற்றில் 187 உப்பசாலாவில் இருக்கின்றன. மற்றொரு இதழ்—மாற்கு சுவிசேஷத்தின் கடைசியானது—ஜெர்மனியிலுள்ள ஷ்பையரில் 1970-ல் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தக் கோடெக்ஸ் மீண்டுமாக தோன்றிய சமயத்திலிருந்து, வழக்கற்றுப்போன காதிக் மொழியின் அர்த்தத்தை விடுவிப்பதற்காக அந்தக் கையெழுத்துப் படிவத்தை அறிஞர்கள் ஆராய்ச்சிசெய்ய ஆரம்பித்தார்கள். ஜெர்மன் அறிஞர் உவில்ஹெம் ஸ்ரெய்ட்பெர்க் என்பவர் கிடைக்கக்கூடிய அனைத்து கையெழுத்துப் பிரதிகளையும் இந்த வாசகத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருவதற்கான முந்திய முயற்சிகளையும் பயன்படுத்தி, கிரேக்கும் அதன் எதிர் பக்கங்களில் காதிக் வாசகங்களும்கொண்ட “டி கோட்டிஷி பீபல்” (காதிக் பைபிள்) என்ற பைபிளைத் தொகுத்து 1908-ல் பிரசுரித்தார்.
இன்றைக்கு, இந்தக் காதிக் பைபிள் அறிஞர்களுக்கு முக்கியமாய் அக்கறைக்குரியதாக இருக்கிறது. என்றபோதிலும், பைபிள் மொழிபெயர்ப்பின் ஆரம்ப நாட்களில் இது தயாரிக்கப்பட்டு காக்கப்பட்டதானது உல்ஃபலாஸினுடைய ஆசையையும் அப்போதைய நவீன மொழியில் கடவுளுடைய வார்த்தையை மொழிபெயர்ப்பதற்கான அவருடைய தீர்மானத்தையும் ஆதரிக்கிறது. இந்த வழிமுறையின் மூலமாக மாத்திரமே காதிக் மக்கள் கிறிஸ்தவ சத்தியத்தைப் புரிந்துகொள்வதை எதிர்பார்க்க முடியும் என்பதை அவர் சரியாகவே உணர்ந்தார்.