கிளர்ச்சியூட்டும் மாநாடுகள் தெய்வீக போதனையை முன்னேற்றுவிக்கின்றன
இன்று, உலகம் ஒரு தகவல் வெடிப்பை அனுபவிக்கிறது. தொலைக்காட்சியிலும் வானொலியிலும், புத்தகங்களில் அல்லது கம்ப்யூட்டர்கள் மூலமாக, நடைமுறையில் சிந்தித்துப்பார்க்கக்கூடிய எந்தப் பொருளின்பேரிலும் ஏறக்குறைய அளவற்ற அறிவு வழங்கீடு இருக்கிறது. இருந்தாலும், மக்கள் நோய்வாய்ப்பட்டு இறக்கின்றனர். குற்றச்செயல், பசி, வறுமை ஆகியவை உலகெங்கும் இருக்கின்றன; மேலும் உணர்ச்சி சம்பந்தமான கோளாறுகள் முன்னொருபோதும் இருந்ததைவிட அதிகம்பேரைப் பலியாகக் கொள்கிறது. கிடைக்கக்கூடிய எல்லா அறிவும் காரியங்களைச் சரிசெய்ய தவறி இருக்கிறது. ஏன்? ஏனென்றால் மனிதவர்க்கம் கடவுளுடைய ஞானத்தைப் புறக்கணித்திருக்கிறது.
அப்படியானால், யெகோவாவின் சாட்சிகளுடைய சமீபத்திய மாநாடுகளுக்கு “தெய்வீக போதனை” என்ற பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டது எவ்வளவு பொருத்தமாக இருந்தது! கடவுளின் வார்த்தையாகிய பைபிளில் காணப்பட்ட போதனை மட்டுமே உண்மையான, உயிர்காக்கும் மதிப்புடையது என்பதை அங்கு ஆஜராகி இருந்தோருக்கு அந்த நிகழ்ச்சிநிரல் நினைவுபடுத்தியது.
முதல் மாநாடு, அ.ஐ.மா.-விலுள்ள நியூ யார்க்கின் யூனியன்டேலில் ஜூன் 3, வியாழக்கிழமை தொடங்கியது. அப்போதிலிருந்து, ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு நகரங்களில் ஒன்றன்பின் ஒன்றாக அந்த நிகழ்ச்சிநிரல் அளிக்கப்பட்டது; ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா கண்டங்களில் முடிவு பெற்றது.
முதல் நாள் பிற்பகல்
தெய்வீக போதனையின் ஓர் அம்சத்தை அழுத்திக் காண்பித்த ஒரு பொருளை ஒவ்வொரு நாளும் கொண்டிருந்தது. உதாரணமாக, முதல் நாளுக்குரிய நிகழ்ச்சிநிரல் “கடவுளிடமிருந்து வரும் போதனையை அறிந்துகொள்ளுதல்” என்ற பொருளின் அடிப்படையில் இருந்தது. (யோவான் 7:17) அந்த நாள் செல்லச்செல்ல இந்தக் கருத்து நன்கு விவரிக்கப்பட்டது.
ஒரு பாட்டுக்கும் ஜெபத்துக்கும் பின், “தெய்வீக போதனை நம்மை ஒன்றுசேர்க்கிறது” என்ற தலைப்பை உடைய பேச்சுடன் மாநாட்டு அக்கிராசனர் அந்த நிகழ்ச்சிநிரலைத் தொடங்கினார். யெகோவாவின் மக்கள் அவருடைய வழிகளைக் கற்றுக்கொள்வதன்மூலமும் அவருடைய பாதைகளில் நடப்பதன்மூலமும் ஒன்றுசேர்க்கப்பட்டிருக்கின்றனர் என்று அவர் காண்பித்தார். (மீகா 4:1-5) தெய்வீக போதனை அவர்களுடைய ஒற்றுமையைப் பலப்படுத்துகிறது. மாநாட்டுக்கு வந்திருந்தவர்கள் தங்களுடைய ஒற்றுமைப்படுத்தப்பட்ட கூட்டுறவில் மகிழும்படி உற்சாகப்படுத்தப்பட்டனர்.—சங்கீதம் 133:1-3.
பிற்பகலில் சற்று பிந்திய நேரத்தில், “யெகோவாவின் வழிகளைப்பற்றி நமக்குப் போதிக்கும் கூட்டங்கள்” என்ற தலைப்பை உடைய ஒரு தொடர்பேச்சில் ஒழுங்கான சபை கூட்டங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன. நாம் ஒன்றுகூடும்போது யெகோவாவைக் கனப்படுத்தி அவ்வாறு அவருடைய ஆசீர்வாதத்தைப் பெறுகிறோம் என்று முதல் பேச்சாளர் மாநாட்டுக்கு வந்திருந்தவர்களுக்கு ஞாபகப்படுத்தினார். கூட்டங்களில் பங்கெடுப்பதன் அவசியத்தை அடுத்த பேச்சாளர் அழுத்திக் காண்பித்தார். அவ்வாறு செய்வதன்மூலம், நாம் யெகோவாவை வெளிப்படையாக துதிக்கிறோம், நம் விசுவாசத்தை வெளிக்காட்டுகிறோம், மற்றவர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்துகிறோம். நாம் கூட்டங்களில் என்ன கற்றுக்கொள்கிறோமோ அவற்றை நடைமுறையில் அப்பியாசிப்பதன் அவசியத்தை அந்தத் தொடர்பேச்சின் மூன்றாம் பேச்சாளர் காண்பித்தார். நாம் “திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும்” இருக்கவேண்டும்.—யாக்கோபு 1:22.
அடுத்ததாக யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுவதைப் பற்றிய ஒரு சிறந்த கலந்தாலோசிப்பு இருந்தது. உள்ளப்பூர்வமான பாட்டு நம் வணக்கத்தின் முக்கிய பாகம். “தெய்வீக போதனை வெற்றிசிறக்கிறது” என்ற முக்கியப் பேச்சு இந்தப் பேச்சைத் தொடர்ந்தது. என்னே ஒரு மிகச் சிறந்த பொருள்! “யெகோவா, எவரும் பெறக்கூடிய மிகச் சிறந்த போதனையின் ஊற்றுமூலமாய் இருக்கிறார்,” என்று பேச்சாளர் சொன்னார். பின்னர், மனித மூளையின் அற்புதத்தைப் பற்றிய ஒரு சிறிய கலந்தாலோசிப்பிற்குப்பின், அவர் சொன்னார்: “பிரதானமாக நம்முடைய சிந்திக்கும் திறமைகளைத் தெய்வீக போதனையைப் பெறுவதற்கு நாம் பயன்படுத்தவேண்டும். அது மட்டுமே உண்மையான ஞானத்தில் விளைவடைகிறது.” எவ்வளவு உண்மை!
இரண்டாம் காலை
‘நம்முடைய இரட்சகராகிய கடவுளுடைய போதனையைத் தொடர்ந்து அலங்கரியுங்கள்’ என்பது மாநாட்டின் இரண்டாம் நாளின் பொருள். (தீத்து 2:9) “தெய்வீக போதனைக்கு எதிராக பேய்களின் போதகங்கள்” என்ற பேச்சில் இந்த நியமம் மேலோங்கி நின்றது. ஆம், பேய்கள் தங்கள் போதனைகளைக் கொண்டிருக்கின்றன. (1 தீமோத்தேயு 4:1) பேச்சாளர் விவரித்தபடி, பொய் போதனைகளையும் பிசாசின் தந்திரமான வழிகளையும் வெளிப்படுத்துவதன்மூலம், தெய்வீக போதனை சாத்தானின் “ஞானத்தின்”மீது வெற்றிசிறக்கிறது. இதன் காரணமாக, சுமார் 45,00,000 நேர்மை இருதயமுள்ள கிறிஸ்தவர்கள் இனிமேலும் சாத்தானின் இருளில் அடிமைகளாய் இல்லை.—யோவான் 8:32.
இருந்தாலும், நாம் தொடர்ந்து சாத்தானை எதிர்க்கவேண்டும். இது “நீங்கள் உலகத்தின் ஆவியை எதிர்த்துப் போராடுகிறீர்களா?” என்ற பேச்சில் அழுத்திக் கூறப்பட்டது. இந்த உலகின் ஆவி சாவுக்கேதுவானது. அது இழிவான ஒழுக்கத்தை, அதிகாரத்தை எதிர்த்து கலகம்செய்யும் நோக்கை, பொருள்சம்பந்தமான காரியங்களுக்கு ஒரு பேராசையை ஊக்குவிக்கிறது. ஒரு கிறிஸ்தவர் நிலையாகத் தன்னைத்தானே பரிசோதிக்கவேண்டும். தான் எதைப் பார்க்கிறார், கேட்கிறார், அல்லது வாசிக்கிறார் என்பவற்றைக் குறித்ததில் அவர் இன்னும் மேம்பட்ட தராதரங்களைக் கொண்டிருக்கிறாரா? உற்சாகமூட்டும் விதத்தில், பேச்சாளர் சொன்னார்: “சகோதரர்களே, சகோதரிகளே, இளைஞர்களே, நீங்கள் இதன் சம்பந்தமாக ஏற்கெனவே பிரயாசப்பட்டுக்கொண்டிருக்கிற உங்களுடைய ஊக்கமான முயற்சிக்காக நாங்கள் உங்களைப் போற்றுகிறோம்.”—1 யோவான் 2:15-17.
உலகத்தின் ஆவியை எதிர்ப்பதைக் கடினமாக்குகிற ஓர் அம்சம் இருக்கிறது. அது என்ன? நாம் எல்லாரும் அபூரணராக இருக்கிறோம். இயேசு நம்முடைய பாவங்களுக்காக மரித்தார் என்பது உண்மைதான்; ஆனால் பாவத்திற்கான மனச்சாய்வுக்கு எதிராக நாம் இன்னும் போராடவேண்டும். இது “விழுந்துபோன மாம்சத்தின்மீதானப் பாவப்பிடியை எதிர்த்துப்போராடுவது” என்ற பேச்சில் சிந்திக்கப்பட்டது. மற்ற காரியங்ளோடுகூட, நாம் புதிய ஆளுமையைத் தரித்து, நம் பாவமுள்ள மனச்சாய்வுகளுக்கு இடங்கொடுக்கும் எதையும் தவிர்த்தால் பாவத்துடன் கொண்டுள்ள நம் போராட்டத்தில் வெற்றி பெறலாம் என்று பேச்சாளர் சொன்னார்.
“ஆரோக்கியமான போதனையை உங்களுடைய வாழ்க்கை முறையாக்குங்கள்” என்பது அடுத்த பேச்சின் தலைப்பு. சிலர் தங்கள் உடல்சம்பந்தமான ஆரோக்கியத்தைக் குறித்து அளவுக்கதிக அக்கறையைக் கொண்டிருக்கின்றனர். என்றாலும், உண்மையில் ஆவிக்குரிய ஆரோக்கியம் மிக அதிக முக்கியமானது. இதைக் குறித்ததில் நம்முடைய பொறுப்புக்களை நாம் அசட்டையாக எண்ணாமல் இருப்பதற்கான அவசியத்தைப் பேச்சாளர் அழுத்திக்காட்டி, கிறிஸ்தவப் பெண்களுக்கு விசேஷித்த உற்சாகமூட்டும் குறிப்பைக் கொண்டிருந்தார். அவர் சொன்னார்: “ஊழியத்துக்கான தங்களுடைய வைராக்கியத்திலும் தனிப்பட்ட உத்தரவாதங்களைக் கவனிப்பதிலும் நன்கு சமநிலைப்படுத்தியிருக்கிற வயதான சகோதரிகள், வாலிப சகோதரிகள் ஆகிய இருசாராரையும் நாங்கள் அதிகமாகப் போற்றுகிறோம்.” ஆம், நாம் எல்லாரும்கூட நம்மை உலகின் ஆவியிலிருந்து பிரித்துவைக்கும் ஆரோக்கியமான போதனைக்காக யெகோவாவுக்கு நன்றி செலுத்துகிறோம்.
“தெய்வீக போதனை வாழ்க்கையின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது” என்ற பேச்சு காலை நிகழ்ச்சிநிரலை நிறைவு செய்தது. “சீக்கிரத்திலோ பின்னரோ பெரும்பாலும் எல்லாரும் ‘வாழ்க்கையின் நோக்கம் என்ன?’ என்று யோசிக்கின்றனர்,” என்று பேச்சாளர் சொன்னார். அந்தக் கேள்விக்கு பைபிள் மட்டுமே உண்மையான பதிலைக் கொடுக்கிறது என்று பலமான விவாதங்களால் அவர் நிரூபித்தார். பின்னர், கடவுளுடைய மகத்தான வாக்குறுதிகள் திறம்பட்ட விதத்தில் வாழ்க்கைக்கு ஒரு நோக்கத்தை அளிக்கின்றன என்று பேச்சாளர் காண்பித்தார். வந்திருந்தவர்களில் அநேகர், ‘என்னுடைய பிராந்தியத்திலுள்ள மக்கள் சரியாக இதையே கேட்கவேண்டும்’ என்று ஒருவேளை நினைத்திருக்கலாம். ஆளும் குழு ஒத்துக்கொண்டது. வாழ்க்கையின் நோக்கமென்ன? என்ற தலைப்பை உடைய புதிய சிற்றேடு அந்தப் பேச்சின் முடிவில் வெளியிடப்பட்டது. எல்லாரும் எவ்வளவு சந்தோஷப்பட்டார்கள்! மதிய இடைவேளை அந்தப் புதிய பிரசுரத்தைக் கண்ணோட்டமிட வாய்ப்பை அளித்தது.
இரண்டாம் பிற்பகல்
பிற்பகலில் முதல் பேச்சு, “உங்களுடைய எல்லா கவலைகளையும் யெகோவாவின்மேல் வைத்துவிடுங்கள்” என்ற ஓர் ஆறுதலான பொருளைக் கொண்டிருந்தது. அநேக காரியங்கள் கவலையை உண்டாக்கும்; இருந்தாலும், கடவுளுடைய வார்த்தை, நம்முடைய எல்லா கவலைகளையும் அவர்மேல் வைத்துவிடும்படி சொல்லுகிறது. (1 பேதுரு 5:6, 7) சில பிரச்னைகள் தொடர்கின்றன என்பது உண்மைதான்; இதைக் குறித்து பேச்சாளர் ஊக்குவித்தார்: ‘பொறுமையாக இருங்கள். யெகோவாவில் காத்திருங்கள். பைபிளைப் பின்பற்றுவதே எப்போதும் மிகச் சிறந்தது என்று உறுதியாக நம்புங்கள். நாம் நம்முடைய இருதயங்களை யெகோவாவில் ஊன்ற வைத்தால், எல்லா சிந்தைக்கும் மேலான ‘தேவசமாதானத்தை’ நாம் அனுபவிப்போம்.’—பிலிப்பியர் 4:6, 7.
தெய்வீக போதனை குடும்ப வாழ்க்கைக்குப் பொருந்துகிறது என்று அடுத்த நான்கு பேச்சுக்கள் காண்பித்தன. முதலாவதான “திருமணத்தை ஒரு நிலைத்திருக்கும் இணைப்பாக்குதல்” என்பது உலகில் அநேகரால் நோக்கப்படுகிறபடி திருமணம் என்பது யெகோவாவின் பார்வையில், விட்டுவிலகக்கூடிய ஓர் ஏற்பாடாக இல்லை என்று மாநாட்டுக்கு வந்திருந்தவர்களுக்கு ஞாபகப்படுத்தியது. என்றபோதிலும், திருமணத்தில் வெற்றி காண்பதற்கு, நாம் யெகோவாவின் வழிநடத்துதலைப் பின்பற்றவேண்டும். அவர் நம்மை உண்டாக்கினார். ஆகவே, அவருடைய ஏவப்பட்ட வார்த்தை கிடைக்கக்கூடிய மிகச் சிறந்த ஆலோசனையைக் கொண்டிருக்கிறது.
இந்தக் கொடிய காலங்களில் ஒரு குடும்பத்தைப் பராமரிப்பதிலிருக்கும் சவால்களை “உங்கள் குடும்ப இரட்சிப்புக்குக் கடினமாக உழையுங்கள்” என்ற பேச்சு கலந்தாலோசித்தது. (2 தீமோத்தேயு 3:1) பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குத் தங்களையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்தல், நல் நடத்தை, எப்படி வேலை செய்வது, எப்படி மற்றவர்களிடம் தாராளமாகவும் கரிசனையோடும் நடந்துகொள்வது என்பது பற்றி போதிக்கின்றனர். அதிக முக்கியமாக, தங்கள் பிள்ளைகள் யெகோவாவுக்கு பற்றுறுதியுள்ள ஊழியர்களாக இருக்க கற்றுக்கொடுக்கவேண்டும்.—நீதிமொழிகள் 22:6.
அதைத் தொடர்ந்து “பெற்றோரே, உங்கள் பிள்ளைகளுக்கு விசேஷித்தக் கவனம் தேவை” என்ற கலந்தாலோசிப்பில், பிள்ளைகளுடைய குறைகளைக் காண மறுக்காமல் இருப்பதோடு, அவர்களைப் பாராட்டுவதற்கான அவசியத்தைப்பற்றியும் மாநாட்டுக்கு வந்திருந்தவர்களுக்குப் பேச்சாளர் நினைவுபடுத்தினார். நேர்மையற்ற தன்மை, பொருளாசை, அல்லது தன்னல நாட்டங்களைக் குறித்து பெற்றோர் விசேஷமாக விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.
குறிப்பாக “இளைஞர்களே—நீங்கள் யாருடைய போதனைகளைக் கவனித்துக் கேட்பீர்கள்?” என்ற பேச்சிற்கு மாநாட்டுக்கு வந்திருந்த இளையவர்கள் கவனமாகச் செவிகொடுத்தனர். இன்று இளம் கிறிஸ்தவர்களுக்குக் காரியங்கள் கடினமாக இருக்கின்றன. உலகத்துடன் ஒத்துப்போவது எளிதாக இருக்கிறது, ஆனால் இது மரணத்திற்கு வழிநடத்துகிறது. தெய்வீக போதனையுடன் நிலைத்திருப்பதைத் தேர்ந்தெடுக்க ஓர் இளைஞனுக்குத் தைரியம் தேவைப்பட்டாலும், அது இப்போது பெரிய ஆசீர்வாதங்களையும் வருங்காலத்தில் நித்திய ஜீவனையும் கொண்டுவருகிறது.—1 தீமோத்தேயு 4:8.
இப்பொழுதே தங்கள் சிருஷ்டிகரை நினைக்கும் இளைஞர் என்ற மனநிறைவளிக்கும் நாடகத்துடன் இரண்டாம் நாள் நிறைவடைந்தது. நடத்துபவர், முகவுரையில், கடவுளுடைய அமைப்பிலுள்ள இளைஞரை “யெகோவா தேவனுக்கும் அவருடைய நியமிக்கப்பட்ட பரலோக அரசராகிய கிறிஸ்து இயேசுவுக்கும் உண்மைத்தவறாமல் பக்தியுடன்கூடிய சேவையில் ஈடுபடும் ஒரு தேவாட்சிக்குரிய படை” என்று அழைத்தார். மேலும் அவர் சொன்னார்: “நம்முடைய இளைஞர் உண்மையில் நன்மையான ஒன்றை நிறைவேற்றுகின்றனர்!” பெற்றோர் ஒருவர் தன் பிள்ளையை நன்கு பயிற்றுவித்தால், அவன் வளர்ந்து, தானாக யெகோவாவைச் சேவிக்கும்போது அந்தப் பிள்ளைக்கு நன்மை பயக்கும் என்பதை அந்த நாடகம் சித்தரித்துக் காட்டியது.
மூன்றாம் நாள் காலை
“தொடர்ந்து எல்லா தேசத்து மக்களுக்கும் போதியுங்கள்” என்பது மூன்றாம் நாளுக்குரிய பொருளாக இருந்தது. (மத்தேயு 28:19, 20) சந்தேகமின்றி மாநாட்டுக்கு வந்திருந்தவர்கள் பிரசங்க வேலையைக் குறித்து காலத்திற்கேற்ற ஆலோசனையை எதிர்பார்த்தனர்; அவர்கள் ஏமாற்றம் அடையவில்லை. “பிரசங்கிப்பதற்கும் போதிப்பதற்கும் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற கட்டளையை மகிழ்ச்சியோடு நிறைவேற்றுவது” என்ற தலைப்பை உடைய தொடர்பேச்சு, சாட்சிகொடுக்கும் வேலையில் தொடர்ந்து பங்குகொள்ளவேண்டும் என்ற அவர்களுடைய தீர்மானத்தைப் பலப்படுத்தியது. தொடக்கப் பேச்சு முதல் சந்திப்புகளையும், இரண்டாவது மறு சந்திப்புகளையும் மூன்றாவது பைபிள் படிப்புகளையும் பற்றி கலந்தாலோசித்தது. உலகெங்குமுள்ள மிஷனரிகள் வீடு திரும்பி, தங்கள் குடும்பங்களுடனும் நண்பர்களுடனும் மாநாட்டுக்கு ஆஜராகும்படி அழைக்கப்பட்டிருந்தனர். சில இடங்களில், மிஷனரிகள் நிகழ்ச்சிநிரலின் இந்தப் பகுதியில் கலந்துகொண்டனர். தங்களுடைய நியமிப்புகளில் அவர்கள் அடையும் வெற்றியில் சற்று உட்பார்வையைப் பெற்றது களிப்பூட்டுவதாய் இருந்தது. அடுத்து, “நற்செய்தியோடு எல்லாரையும் சென்றெட்டுவது” சந்தர்ப்ப சாட்சியின் பயனைச் சிந்தித்தது.
யெகோவாவின் சாட்சிகளுடைய பெரிய கூட்டங்களில் எப்போதும் ஒரு சிறப்பு அம்சமாக இருக்கும் முழுக்காட்டுதல் பேச்சுடன் காலை நிகழ்ச்சி நிறைவுபெற்றது. மாநாடுகள்தோறும், புதிதாக ஒப்புக்கொடுக்கப்பட்ட பெரிய தொகுதிகள், ஒன்றுகூடியிருக்கும் கூட்டங்களுக்கு முன் எழுந்துநின்று, அவர்களிடம் கேட்கப்படும் இரு கேள்விகளுக்கு உறுதியான நம்பிக்கையுடன் ஆம் என்று பதிலளித்தனர். அவர்கள் அதற்குப்பின் வெளிப்படையாக முழுக்காட்டுதல் பெற்றனர். தெய்வீக போதனையின் மகத்தான பலனுக்கு எவ்வளவு வல்லமையான அத்தாட்சி!
மூன்றாம் நாள் பிற்பகல்
பிற்பகல் நிகழ்ச்சிநிரல், ஓர் ஆழமான வேதப்பூர்வ கலந்தாலோசிப்புடன் தொடங்கியது. மத்தேயு 24-ம் அதிகாரம் மற்றும் லூக்கா 21-ம் அதிகாரத்தின் வார்த்தைகளை யெகோவாவின் சாட்சிகள் நன்கு அறிந்திருக்கின்றனர். இந்தப் பைபிள் அதிகாரங்களைப்பற்றி புதிதாக எதுவும் சொல்லப்பட முடியாது என்று சிலர் நினைத்தார்களா? அவர்கள் எவ்வளவு தவறாக நினைத்தனர்! “நீர் வந்திருப்பதற்கு அடையாளம் என்ன?” மற்றும் “இவை எப்பொழுது சம்பவிக்கும்? எங்களுக்குச் சொல்லவேண்டும்” என்ற பேச்சுக்கள், அந்த இரு அதிகாரங்களின் பாகங்களில் மாநாட்டுக்கு வந்திருந்தவர்களை ஈர்க்கக்கூடிய கலந்தாலோசிப்பினூடே கொண்டுசென்று, சில வசனங்களுக்கு புதுப்பிக்கப்பட்ட விளக்கங்களை அளித்தன. தாங்கள் அந்தக் குறிப்புகளைப் புரிந்துகொண்டிருந்தார்களா என்று பார்ப்பதற்கு, நிகழ்ச்சிக்குப்பின், மாநாட்டுக்கு வந்திருந்தவர்கள் தாங்கள் எடுத்த குறிப்புகளை ஒத்துப்பார்த்து, கிளர்ச்சிமிக்க விதத்தில் கலந்துபேசினர். சந்தேகமின்றி, இந்தத் தகவல் காவற்கோபுரத்தில் பிரசுரிக்கப்படும்போது அநேக கேள்விகள் பதிலளிக்கப்படும்.
“உங்கள் பைபிள் கேள்விகளுக்குத் தகவல் நிறைந்த பதில்கள்” என்ற பேச்சில் பைபிள் படிப்பு பொருள் தொடர்ந்தது. பின்னர் நிகழ்ச்சிநிரல் வேறொரு பொருளுக்குக் கவனத்தைத் திருப்பியது. 1993-ம் வருடம் உவாட்ச் டவர் பைபிள் ஸ்கூல் ஆஃப் கிலியடின் 50-ம் ஆண்டு நிறைவாக இருந்தது. “ஐம்பது வருட கிலியட் மிஷனரி பயிற்சியும் பணியும்” என்ற பேச்சு, அந்தக் காலப்பகுதியில் என்ன நிறைவேற்றப்பட்டது என்று மாநாட்டுக்கு வந்திருந்தவர்களுக்குக் காண்பித்தது. “உலகளாவிய பிராந்தியத்தில் சுவிசேஷ வேலையின் நிறைவேற்றங்கள்” என்ற பேச்சின்போது, மிஷனரிகள் யாராவது இருந்தால், அவர்கள் தங்களுடைய அனுபவங்களில் சிலவற்றை வந்திருப்போருடன் பகிர்ந்துகொள்ளும்படி அழைக்கப்பட்டனர். மிஷனரிகளின் அனுபவங்களைக் கேட்பது கிளர்ச்சியூட்டுவதாய் இருந்தது!
அதைத் தொடர்ந்துவந்த, “ஏன் யெகோவாவின் சாட்சிகள் தொடர்ந்து விழித்திருக்கிறார்கள்” என்ற பேச்சு மற்றொரு சரித்திரப் பாடம். பொ.ச. முதல் நூற்றாண்டிலிருந்து இன்றுவரையாக கிறிஸ்தவர்கள் விழிப்புள்ளவர்களாய் இருந்திருக்கிறார்கள் என்று அது காட்டியது. அது மற்றொரு எதிர்பாரா வியப்பிற்கு வழிநடத்தியது. “பூமி முழுவதிலும் சுறுசுறுப்பாயிருக்கும் ராஜ்ய பிரஸ்தாபிகள்” என்ற தலைப்பை உடைய அடுத்தப் பேச்சின் தொடக்கத்தில், பேச்சாளர் ஒரு பெரிய புத்தகத்தை உயர்த்தி (ஏற்கெனவே உள்ளூர் மொழியில் கிடைக்கக்கூடியதாய் இருந்தால்) இவ்வாறு சொன்னார்: “யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய ராஜ்யத்தின் பிரஸ்தாபிகள் (Jehovah’s Witnesses—Proclaimers of God’s Kingdom) என்ற தலைப்பைக் கொண்ட இந்தப் புதிய புத்தகத்தை இன்று வெளியிடுவதை இங்கு அறிவிப்பது சந்தோஷமாயிருக்கிறது.” யெகோவாவின் சாட்சிகளுடைய நவீன-நாளைய சரித்திரத்தைப் பற்றிய விவரமானப் பதிவை இந்தப் புத்தகம் கொண்டிருக்கிறது. சகிப்புத்தன்மை, உறுதியான தீர்மானம், வெற்றி ஆகியவற்றைப்பற்றி ஒரு கிளர்ச்சியூட்டும் கதையை இது சொல்லி, யெகோவாவின் ஆவி அவருடைய ஊழியர்கள்மேல் செயல்பட்டுக்கொண்டிருப்பதற்கு வல்லமையான சான்றளிப்பதாய் இருக்கிறது.
நான்காம் காலை
அதற்குள் அது மாநாட்டின் கடைசி நாளாக இருந்தது. “தெய்வீக போதனையின்மூலம் நமக்குப் பயன் விளைவித்துக்கொள்ளுதல்,” என்ற அந்த நாளின் பொருள் அந்த நிகழ்ச்சிநிரலுக்கு ஒரு முடிவான உச்சக்கட்டத்திற்குரிய நம்பிக்கை அளித்தது. (ஏசாயா 48:17) காலையில், மூன்று பலமிக்க பேச்சுக்களாலான ஒரு தொடர்பேச்சில் மாநாட்டுக்கு வந்திருந்தவர்களின் கவனம் ஊன்றவைக்கப்பட்டது. “தேவ ஆவியால் ஏவப்பட்ட எரேமியாவின் எச்சரிப்புச் செய்தி—கடந்தகாலத்திற்கும் தற்காலத்திற்கும்” என்ற தலைப்பை உடைய தொடர்பேச்சில் எரேமியா 23, 24, 25 அதிகாரங்களின் ஒவ்வொரு வசனமும் கலந்தாலோசிக்கப்பட்டது. இந்த அதிகாரங்களில் எவ்வளவு பலமான செய்தி இருக்கிறது! எரேமியாவின் காலத்திலுள்ள உண்மையற்ற இஸ்ரவேல், அவருடைய வெளிப்படையான, தெய்வீக ஏவுதலால் கொடுக்கப்பட்ட எச்சரிப்புகளைக் கேட்டு நடுங்கியிருக்கவேண்டும். அந்த எச்சரிப்புகள் நிறைவேறியபோது முழு உலகமும் இன்னும் அதிகமாக நடுங்கியது. இன்று காரியங்கள் வித்தியாசமாக இருக்கின்றனவா? இல்லவே இல்லை. யெகோவாவின் சாட்சிகள் கடவுளுடைய நியாயத்தீர்ப்பின் செய்திகளைத் தைரியமாகப் பிரசங்கிக்கின்றனர். முடிவில், இந்த முழு காரிய ஒழுங்குமுறையும் யெகோவாவின் நியாயத்தீர்ப்பு நடவடிக்கைகளை எதிர்ப்படவேண்டியிருக்கும். அது சாத்தானின் உலகிற்கு ஒட்டுமொத்தமான அழிவை அர்த்தப்படுத்தும்.
மோசம்போகாதிருங்கள் அல்லது கடவுளைப் பரியாசம் செய்யாதிருங்கள் என்ற இரண்டாம் நாடகத்துடன் ஞாயிற்றுக்கிழமை காலை நிறைவுபெற்றது. இழிவுபடுத்தும் வீடியோக்கள் மற்றும் இசையால் செல்வாக்குச் செலுத்தப்படுவது, உடன் கிறிஸ்தவர்களுக்குள் கருத்து வேறுபாடுகளை விதைக்கும் மனப்போக்கு ஆகியவற்றிலிருந்து தெய்வீக போதனை நம்மை எப்படிப் பாதுகாக்க முடியும் என்று அது சித்தரித்துக் காட்டியது. நாடகத்தின் முடிவில், ஒரு நாடக பாத்திரத்தின் சிந்தனையைத் தூண்டும் இந்த வார்த்தைகளை அக்கிராசனர் மேற்கோள் காட்டினார்: “உலகத்தின் செல்வாக்கிலிருந்து நாம் பாதுகாக்கப்பட்டவர்களாக இல்லை. நாம் எதிர்த்துத் தடுக்கவில்லையாகில், நம்முடைய சிந்தனையை இந்த உலகம் தந்திரமாகக் கெடுத்துவிடும். நாம் உண்மையாக நிலைத்திருக்கிறோமா இல்லையா என்பது நாம் எதை விதைத்துக்கொண்டிருக்கிறோமோ அதைப் பொருத்திருக்கிறது.” எவ்வளவு உண்மை!
கடைசி பிற்பகல்
“நம்முடைய கொடிய காலங்களுக்கு உதவியளிக்கும் போதனை” என்ற தலைப்பை உடைய பொதுப்பேச்சைக் கொடுப்பதற்கு பேச்சாளர் மேடைக்குச் சென்றபோது, மாநாடு அதன் நிறைவை விரைவாக நெருங்கிக்கொண்டு இருந்தது. தெளிவான தர்க்கரீதியான முறையில், அவர் இன்று நம்மைப் பாதிக்கும் அடிப்படை பிரச்னைகளை அடையாளங்கண்டு, ஒரு சிறந்த வாழ்க்கையை அனுபவிக்க தெய்வீக போதனை நமக்கு உதவக்கூடிய சில வழிகளைச் சுட்டிக் காண்பித்தார். நாம் இப்போது வேதப்பூர்வ போதனையைப் பின்பற்றிக்கொண்டிருந்தால், யெகோவாவின் புதிய உலகில் என்றென்றைக்குமாக அதைப் பின்பற்ற முடியும் என்று அவர் சொன்னார்.
வாராந்தர காவற்கோபுர பாட சுருக்கத்திற்குப்பின், கடைசி பேச்சிற்கான நேரம் வந்தது. பேச்சாளர், நான்கு நாள் நிகழ்ச்சிநிரலின் சிறப்புக் குறிப்புகளை விரைவாகச் சிந்தித்துவிட்டு, புதிய பிரசுரங்களைப்பற்றி மாநாட்டுக்கு வந்திருந்தவர்களுக்கு ஞாபகப்படுத்தினார். பைபிள்—உண்மையும் தீர்க்கதரிசனமும் அடங்கிய ஒரு புத்தகம் (The Bible—A Book of Fact and Prophecy) என்ற தொடரில் உள்ள இரண்டாம் வீடியோகாசட் சீக்கிரத்தில் வெளியிடப்படும் என்றும் அவர் அறிவித்தார். பைபிள்—மனிதகுலத்தின் மிகப் பழமையான நவீனகால புத்தகம் (The Bible Mankind’s Oldest Modern Book) என்ற தலைப்பை உடைய வீடியோகாசட் இப்போது ஆங்கிலத்தில் கிடைக்கிறது. பாஸ்னியா மற்றும் ஹெர்ஸகோவினா போன்ற கடுமையான நெருக்கடியுள்ள இடங்களிலிருந்து உருகவைக்கும் அறிக்கைகள் வாசிக்கப்பட்டன. முடிவாக, பேச்சாளர் பிரசங்கி 12:13-ன் வார்த்தைகளை வாசித்தார்: “காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.”
எவ்வளவு அருமையான நினைப்பூட்டுதல்! முழு மனிதவர்க்கமும் நம் மகத்தான போதகரான யெகோவாவைத் துதித்து அவருடைய தெய்வீக பேதனைக்கு செவி சாய்க்கும் நாளுக்காக நாம் வாழ்வோமாக.
[பக்கம் 24, 25-ன் படங்கள்]
மாஸ்கோ மற்றும் கீவில் நடைபெற்ற “தெய்வீக போதனை” மாநாடுகள் மிகுந்த சந்தோஷத்தில் விளைவடைந்தன
[பக்கம் 26, 27-ன் படங்கள்]
1. முழுக்காட்டப்படுவதன்மூலம், அநேகர் கடவுளுக்குத் தங்கள் ஒப்புக்கொடுத்தலை அடையாளப்படுத்தினர்
2. மாநாட்டுக்கு வந்திருந்த 100 வயதுசென்ற ஒருவர் ஒரு புதிய பிரசுரத்தைப் பெறுவதில் கிளர்ச்சி அடைந்தார்
3, 4. சிந்தனையைத் தூண்டும் நாடகங்கள் பெரிதும் போற்றப்பட்டன
5. மாநாடுகளில் பேட்டி காணப்பட்ட மிஷனரிகள் தெய்வீக போதனையின் பயன்களைச் சிறப்பித்துக் காட்டினர்