பயனியர்கள் தங்களையே அளித்து ஆசீர்வாதங்களைப் பெறுகின்றனர்
“பயனியர் சேவை, ஒரு வெற்றிகரமான உலகப்பிரகார வாழ்க்கைத் தொழிலைவிட பெருமதிப்புடையது. யெகோவாவையும் அவருடைய சத்தியத்தையும் அறியும்படி மக்களுக்கு உதவுவதைவிட அதிக திருப்திகரமானது எதுவும் இல்லை.” பயனியர் சேவையை—முழுநேர ராஜ்ய பிரசங்கிப்பை—தன் வாழ்க்கைத் தொழிலாகத் தேர்ந்தெடுத்த ஒரு கிறிஸ்தவ பெண் அவ்வாறு சொன்னாள். வேறு எத்தனை வாழ்க்கைத் தொழில்கள் அப்படிப்பட்ட மகிழ்ச்சியைத் தரமுடியும்?
பயனியர் சேவை ஓர் உயர்ந்த இலக்காகவும் ஓர் அருமையான சிலாக்கியமாகவும் இருக்கிறது. ஒரு தனி நபர் அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை எவ்வாறு தேர்ந்தெடுக்க முடியும்? பயனியர் சேவை அளிக்கும் ஆசீர்வாதங்களை அறுவடை செய்யுமளவிற்கு நீண்டகாலம் அதில் நிலைத்திருக்க என்ன தேவைப்படுகிறது?
இரண்டு காரியங்கள் இன்றியமையாதவை. முதலாவதாக, சரியான சூழ்நிலைகள். தெளிவாகவே பயனியர் சேவையைச் சாத்தியமற்றதாக்கும் சூழ்நிலைகளில் பலர் வாழ்கின்றனர். இரண்டாவதாக, சரியான ஆவிக்குரிய தகுதிகளும் மனநிலையும். நிச்சயமாக, ஒருவருடைய தற்போதைய சூழ்நிலைகள் அவர் பயனியர் சேவை செய்ய அனுமதித்தாலும் சரி, அனுமதிக்காவிட்டாலும் சரி, எல்லாரும் முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவ குணங்களை வளர்க்கும்படி உழைக்கலாம்.
ஏன் சிலர் பயனியர் சேவை செய்கின்றனர்
வெற்றிகரமான பயனியர் சேவைக்கான தகுதிகள் யாவை? பிரசங்கிக்கும் திறமைகள் இன்றியமையாதவை. முன்பின் அறியாதவர்களிடம் நற்செய்தியை அளிப்பது, அக்கறை உள்ளவர்களிடம் மறுசந்திப்புச் செய்வது, வீட்டு பைபிள் படிப்புகள் நடத்துவது எப்படி என்று பயனியர்கள் அறிந்திருப்பது அவசியம். இந்தத் திறமைகளில் குறைவுபடுவது ஒரு பயனியரைச் சோர்வடையச் செய்யலாம். இருந்தாலும், மற்ற காரியங்களும் முக்கியமாக இருக்கின்றன.
உதாரணமாக, நம்முடைய வணக்கத்துடன் சம்பந்தப்பட்ட எல்லாமே நாம் யெகோவாவோடும் அவருடைய அமைப்போடும் கொண்டுள்ள உறவுடன் தொடர்புடையதாய் இருக்கிறது. இது பயனியர் சேவை செய்வதை உட்படுத்துகிறது. ராடோ என்ற இளம் பயனியர் விவரித்தார்: “ஓர் இளம் மனிதருக்கு, யெகோவாவை நினைவுகூருவதையும் சத்தியத்தின் வழியில் நடப்பதையும்விட சிறந்தது எதுவுமில்லை.” ஆம், இளைஞர் யெகோவாவுக்கான தங்களுடைய அன்பையும் அவரோடு உள்ள நெருக்கத்தையும் வெளிக்காட்டுவதற்கு பயனியர் சேவை செய்வது ஒரு சிறந்த வழி.—பிரசங்கி 12:1.
அறிவும் புரிந்துகொள்ளுதலும்கூட தவிர்க்க முடியாதவை. (பிலிப்பியர் 1:9-11) மெய்யாக, இவையே ஆவிக்குரிய இயந்திரத்தை ஓடிக்கொண்டிருக்கச் செய்யும் எரிபொருளாக இருக்கின்றன. நம்முடைய ஆர்வத்தையும் மன உறுதியையும் இழந்து ஆவிக்குரிய விதத்தில் சோர்வடைவதைத் தவிர்ப்பதற்கு ஒழுங்கான தனிப்பட்ட படிப்பு அவசியம். நிச்சயமாக, நாம் எடுத்துக்கொள்ளும் அறிவு, அறிவுத்திறனை மட்டும் பாதிக்காமல் இருதயத்தையும் நல்ல விதத்தில் பாதிக்கவேண்டும். (நீதிமொழிகள் 2:1) ஆகவே, நாம் பெற்றுக்கொள்ளும் அறிவு இருதயத்தை தொடும்படியாகத் தனிப்பட்ட படிப்புடன்கூட, ஜெபத்திற்கும் தியானத்திற்கும் நேரம் தேவைப்படுகிறது. பின்னர், நம்முடைய சூழ்நிலைகள் அனுமதித்தால், நாம் பயனியர் சேவை செய்ய விரும்புவோம்.—ஒப்பிடவும் எஸ்றா 7:10.
பயனியர் சேவையை மேற்கொள்வது சுயதியாக ஆவியையும் தேவைப்படுத்துகிறது. ரான் என்ற இளம் மனிதன் பயனியர் சேவை செய்வதற்கான எல்லா திட்டங்களையும் செய்திருந்தார். அதைத் தொடரும்படியான சரியான சூழ்நிலைகளுக்காக அவர் வெறுமனே காத்துக்கொண்டிருந்தார். குறிப்பாக, அவர் தன்னைப் பயனியர் சேவை செய்யவும், அதே நேரத்தில் வாழ்க்கையின் சில சொகுசான காரியங்களை அனுபவிக்கவும் அனுமதிக்கும் ஒரு வேலையை விரும்பினார். ஒரு முதிர்ச்சியுள்ள சகோதரியிடம் அவர் இதைச் சொன்னபோது, அவர்களுடைய பதில் அவரைத் தூக்கிவாரிப்போட்டது. அவர்கள் சொன்னார்கள்: “யெகோவா வாக்குறுதிகளை அல்ல, செயல்களை ஆசீர்வதிக்கிறார்.” அந்த இளைஞர் பயனியர் சேவை செய்வதற்கு சமயத்தை அனுமதிக்கும், குறைந்த சம்பளத்தை உடைய வேலை ஒன்றைக் கண்டுபிடித்தார். மத்தேயு 6:25-34-ஐப் பொருத்துவது குறைந்த வருமானத்துடன் சமாளிக்க ஒருவருக்கு உதவும்.
நல்ல ஆலோசனைகளைப் பின்பற்றுவதற்கு மனத்தாழ்மையுடன் மனமுவந்து செயல்படுவது நாம் பயனியர் சேவையில் நுழைவதற்கு நன்கு உதவக்கூடும். ஒரு கிறிஸ்தவ வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்து பயனியர் சேவை செய்வதற்கான ஆசையை ஹானா வளர்த்தாள். ஆனால் தன் குடும்பத்தைப் பராமரிக்கையில் அவள் பயனியர் சேவை செய்யவில்லை; பின்னர் அவள் ஒரு வியாபார தொழிலில் ஈடுபட்டாள். விழிப்புணர்வுள்ள மூப்பர்களின் நல்ல ஆலோசனைக்கு அவள் செவிசாய்த்து, தன்னுடைய கவர்ச்சிகரமான உலகப்பிரகாரமான தொழிலை விட்டுவிட்டு, பயனியர் சேவையை மேற்கொண்டாள். இப்போது, மற்றவர்களை ஒப்புக்கொடுத்தலுக்கு வழிநடத்துவதிலும், செயலற்றவர்களுக்கு உதவுவதிலும் ஹானா மிகுந்த சந்தோஷத்தை அனுபவிக்கிறாள்.
ஒருவருடைய வாழ்க்கையில் சத்தியம் என்ன செய்திருக்கிறது என்பதற்கான நன்றியுணர்வும் பயனியர் சேவை செய்வதற்கான ஒரு தூண்டுதலாக இருக்கலாம். தன்னுடைய திருமணம் முறிந்துகொண்டிருந்த ஆழ்ந்த மனச்சோர்வடைந்த ஒரு பெண்ணின் காரியத்தைக் கவனியுங்கள். அவள் கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்தைக் கற்று அதை நடைமுறையில் அப்பியாசித்தபோது இந்த நிலை திடீரென்று மாறியது. சத்தியம் அவளுக்கு செய்திருந்ததைக் குறித்து கிளர்ச்சி அடைந்தவளாய், பயனியராக இருந்து மற்றவர்களுக்கு உதவுவதே போற்றுதல் காண்பிப்பதற்கு மிகச் சிறந்த வழி என்று அவள் தீர்மானித்தாள். அவள் இதைச் செய்து, இப்போது அநேக பைபிள் படிப்புகள் மற்றும் ஒரு மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையின் ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறாள்.
மற்றவர்கள் உதவலாம்
பயனியர்கள் பெரும்பாலும் மற்ற பயனியர்களை உருவாக்குகிறார்கள். இரு பயனியர்கள் தன் பெற்றோருடன் பைபிளைப் படித்தபோது, முன்னர் குறிப்பிடப்பட்ட ராடோவுக்கு ஆறு வயது. இன்னும் மிக இளமையாக இருந்தபோதே, அவன் வெளி ஊழியத்தில் ஒழுங்காக இந்த முழுநேர பிரசங்கிப்பாளர்களுடன் சென்றான். ராடோ 17 வயதில், தானே ஓர் ஒழுங்கான பயனியரானான். மற்றொரு இளைஞன் ஆர்நோ ஒரு கிறிஸ்தவ வீட்டில் வளர்க்கப்பட்டான்; ஆனால் ஆவிக்குரிய விதத்தில் பலவீனம் அடைந்தான். பின்னர், அவன் தன்னுடைய ஆவிக்குரிய பலத்தை திரும்ப நிலைநாட்ட முற்பட்டான்; இப்போது அவன் சொல்கிறான்: “நான் ஏராளமான உற்சாகத்தைப் பயனியர்களிடமிருந்து பெற்றேன். நான் குறிப்பாக பள்ளி விடுமுறைகளின் போது அவர்களுடன் கூட்டுறவு கொண்டேன்; சில நேரங்களில் வெளி ஊழியத்தில் ஒரு மாதத்திற்கு 60 மணிநேரங்கள் வரையாக அறிக்கை செய்தேன். அதற்குப்பின், ஒழுங்கான பயனியர் சேவைக்கான [மாதத்திற்கு 90 மணிநேரங்களைத் தேவைப்படுத்தும்] படியெடுத்தது அவ்வளவு பெரிதாக இருக்கவில்லை.” உலகத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டாம் என்ற 1 கொரிந்தியர் 7:29-31-ன் ஆலோசனையின்பேரில் தியானிப்பது நிஜமாகவே அப்படிப்பட்ட இளைஞருக்கு உதவியிருக்கிறது.
ஆவிக்குரிய அக்கறைகள் முதலிடத்தைக் கொண்டிருந்து, பெற்றோர் தங்கள் பிள்ளைகளை முழுநேர ஊழியத்திற்கு உற்சாகப்படுத்தும் ஒரு வீட்டில் பயனியர் ஆவி மிக எளிதாக வேரூன்ற முடியும். அப்படிப்பட்ட ஒரு வீட்டில் வளர்ந்த ஃபிலோ குறிப்பிடுகிறான்: “ஓர் உலகப்பிரகாரமான எதிர்காலத்திற்காக உழைப்பதற்காக என்னுடைய கல்வியைத் தொடர அநேகர் ஆலோசனை கூறினர். ஆனால் நான் அதைவிட ஞானமான தெரிவைச் செய்ய என் பெற்றோர் உதவினர். நான் உண்மையிலே எதிர்காலத்திற்காகக் கட்டவேண்டுமென்றால், என்னுடைய முதல் முன்னுரிமை யெகோவாவுடன் ஓர் உறவை வளர்த்துக்கொள்வதாக இருக்கவேண்டும் என்று அவர்கள் கூறினர்.”
டாமார் என்ற இளம் பெண்ணும் தான் பயனியர் சேவை செய்வதற்கு தன் பெற்றோரின் முன்மாதிரியையும் முயற்சிகளையும் காரணம் காட்டுகிறாள். அவள் சொல்கிறாள்: “நான் வாழ்க்கையைக் குறித்து ஓர் ஆவிக்குரிய நோக்குநிலையை எப்போது வளர்த்துக்கொண்டேன் என்று உண்மையில் என்னால் சொல்ல முடியாது, ஆனால் அப்படிப்பட்ட நோக்குநிலையோடு நான் பிறக்கவில்லை என்று எனக்குத் தெரியும். ஒழுங்காக வெளி ஊழியத்தில் பங்கெடுப்பதும் கூட்டங்களுக்கு வருவதுமான என் பெற்றோரின் பழக்கமும் அதோடு சத்தியத்திற்கான அவர்களுடைய ஆழமான அன்பும், என்னுடைய ஆவிக்குரிய மனநிலையை வளர்க்கப் பெரிதும் உதவியது.”
உங்களுடைய தீர்மானத்தில் நிலைத்திருத்தல்
ஒருவர் பயனியர் சேவையில் நுழைந்தபின், அதில் விடாமல் தொடர்ந்திருப்பது, அவர் அல்லது அவள் அந்த ஞானமான தீர்மானத்தின் முழு நன்மையையும் அறுக்க உதவும். அதற்கு அதிக நடைமுறையான ஆலோசனை கொடுக்க முடியும். உதாரணமாக, பயனியர்கள் தங்கள் நேரத்தை எவ்வாறு அட்டவணைப்படுத்தி கூடிய அளவிற்கு பயனுள்ளதாக்கலாமெனக் கற்றுக்கொள்வது நல்லது. இருந்தாலும், யெகோவாவோடும் அவருடைய அமைப்போடும் ஒரு தனிப்பட்டவரின் உறவுதானே மிக முக்கியமான அம்சமாகத் தொடர்ந்து இருக்கிறது.
இதோடு தொடர்புடையது ஒரு ஜெப சிந்தையாகும். “நான் சத்தியத்திற்கு வந்தபோது, பயனியர் சேவை செய்யவேண்டும் என்று மிகவும் விரும்பினேன்,” என்று கார் சொல்கிறார். என்றாலும், விவசாயப் பல்கலைக்கழகத்தில் அவர் தன் படிப்பை முதலில் முடிக்கவேண்டும் என்று அவருடைய தகப்பன் சொல்லிவிட்டார். அதற்குப்பின் கார் பயனியர் சேவை செய்யத் தொடங்கினார். காலாகாலத்தில் அவர் திருமணம் செய்தார், அவருடைய மனைவி பயனியர் வேலையில் அவரைச் சேர்ந்துகொண்டாள். அவள் கர்ப்பமானபோது, பயனியர் வேலையை விட்டுவிடும் சாத்தியத்தை எதிர்ப்பட்டார். “நான் அடிக்கடி யெகோவாவிடம் ஜெபித்து, பயனியர் சேவையைத் தொடர்வதற்கான என்னுடைய இருதயத்தின் ஆசையை அவரிடம் சமர்ப்பித்தேன்,” என்று கார் சொல்கிறார். முடிவில், தன்னுடைய குடும்பத்தைக் கவனித்துக்கொண்டே பயனியர் சேவையையும் செய்வதைக் கூடியதாக்கிய ஒரு வகையான வேலையைக் கார் கண்டுபிடித்தார்.
பொருள்சம்பந்தமானத் தேவைகளைக் குறித்து போதுமென்ற மனதுடன் இருப்பது பயனியர் ஊழியத்தில் தொடர்ந்திருக்க ஒரு நபருக்கு அடிக்கடி உதவி செய்யும் மற்றொரு அம்சமாகும். அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: “நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.” (எபிரெயர் 13:5) தற்போதைய காரியங்களில் போதுமென்ற மனமுள்ளவர்களாய் இருந்தது, ஹாரி மற்றும் இரேனா பயனியர் சேவையைத் தொடர உதவியது. குருடாக இருக்கும் இரேனா எட்டு வருடம் பயனியராக இருந்திருக்கிறாள். “எங்களுடைய பொருளாதார நிலையை ஒரு பிரச்னையாக நாங்கள் ஒருபோதும் கருதவில்லை,” என்று அவள் சொல்கிறாள். “தேவையற்ற பொருளாதார சுமைகளை ஒருபோதும் எடுத்துக்கொள்ளாதிருப்பதைக் குறித்து மட்டும் நாங்கள் கவனமாக இருந்தோம். எப்போதும் செலவைக் கணக்கிட்டுப் பார்த்தோம். எங்கள் வாழ்க்கை எப்போதும் மிக இன்பகரமானதாக இருந்தாலும் எளியதாக இருந்திருக்கிறது; அது ஆசீர்வாதங்களால் செழுமையானதாக இருந்திருக்கிறது.”
அநேக சந்தோஷங்களும் ஆசீர்வாதங்களும்
ஒன்பது வருட பயனியர் சேவையைப் பின்னோக்கிப் பார்த்து, டாமார் சொல்கிறாள்: “உண்மையில் யெகோவா உங்கள் கையைப் பிடித்திருந்ததுபோல அவரிடம் அவ்வளவு நெருக்கமாக வருகிறீர்கள்.” (சங்கீதம் 73:23) சில சோதனைகளும் மனதில் வருகின்றன. “என்னுடைய சொந்த அபூரணங்களும் மற்றவர்களுடையதும் சேர்ந்து என்னை எப்போதும் தொந்தரவு செய்தன,” என்று டாமார் மேலும் சொன்னாள். “மேலுமாக, பொருள்சம்பந்தமாக அதிக பயனளிக்கும் வாழ்க்கையைத் தெரிந்துகொண்ட சகோதர சகோதரிகளைப் பார்த்து, நான் மழையிலும் குளிரிலும் சிரமப்பட்டு நடந்துகொண்டிருக்கையில் அவர்களுடைய தெரிவு ஏற்கத்தகுந்ததாகத் தோன்றியது. ஆனால் என் இருதயத்தின் ஆழத்தில், நான் ஒருபோதும் இடம்மாற்ற விரும்பமாட்டேன். பயனியர் சேவையைத் தவிர வேறு எது அப்பேர்ப்பட்ட சந்தோஷம், அப்பேர்ப்பட்ட திருப்தி, அப்பேர்ப்பட்ட ஆசீர்வாதங்களைக் கொண்டுவர முடியும்?” அப்படிப்பட்ட சந்தோஷங்களையும் ஆசீர்வாதங்களையும் நீங்கள் உயர்வாக மதிப்பீர்களா?
பயனியர்கள் அதிக நேரத்தைக் கிறிஸ்தவ ஊழியத்தில் செலவிடுவதால், பல தனி நபர்களை பைபிள் சத்தியத்தைப்பற்றிய அறிவைப் பெறும்படி உதவக்கூடிய நிலையில் அவர்கள் இருக்கின்றனர். முன்னர் குறிப்பிடப்பட்ட ஹாரி மற்றும் இரேனா சொல்கின்றனர்: “யெகோவாவின் அமைப்பில் அநேக சிலாக்கியங்கள் இருக்கின்றன, ஆனால் அக்கறை காட்டும் புதியவர் ஒருவரை யெகோவாவின் ஊழியராகும் அளவிற்கு முன்னேற உதவி செய்வதே எல்லாவற்றிலும் மிக மகத்தானது.”
பின்வருமாறு சொன்னபோது மற்றொரு பயனியர் காரியங்களை நன்றாக எடுத்துச்சொன்னார்: “நீதிமொழிகள் 10:22-ன் வார்த்தைகள் என்னுடைய காரியத்தில் உண்மையாக நிரூபித்திருக்கிறது: ‘கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.’ நான் யெகோவாவைச் சேவித்த வருடங்களில் திரும்பவும் திரும்பவும் இந்த வசனம் எனக்கு நிறைவேறியிருக்கிறது.”
பெற்றோரே, உங்கள் பிள்ளைகளில் பயனியர் சேவை செய்வதற்கான ஆசையை புகட்டுகிறீர்களா? பயனியர்களே, இந்த ஆசையை மற்றவர்களில் தூண்டுவிக்க நீங்கள் முயலுகிறீர்களா? மூப்பர்களே, உங்கள் சபையிலுள்ள பயனியர்களை ஆதரித்து, மற்றவர்களில் ஒரு பயனியர் ஆவியை வளர்க்க உதவுகிறீர்களா? பயனியர் சேவையில் ஈடுபடுகையில் அப்படிப்பட்ட செழுமையான ஆசீர்வாதங்களைப் பெற யெகோவாவின் மக்களில் அதிகமதிகமானோர் தகுதிபெறும்படி தூண்டப்படுவார்களாக.