கிராமங்கள்தோறும் பிரசங்கித்தல் ஸ் பெ ய் னி ல்
இயேசு கிறிஸ்து “எருசலேமுக்குப் பிரயாணமாய்ப் போகும்போது, பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் உபதேசம் பண்ணிக்கொண்டு போனார்.” (லூக்கா 13:22) ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு, இயேசுவும் அவருடைய சீஷர்களும் “பட்டணங்கள்தோறும்” மட்டுமல்லாமல் “கிராமங்கள்தோறு”ங்கூட பிரசங்கித்தார்கள். பட்டணங்களில் ஊழியஞ்செய்யும்படி கவனத்தை ஊன்றவைப்பது எளிதாக இருந்திருக்கலாமெனினும், நாட்டுப்புறங்களிலிருந்த பல கிராமங்களை அவர்கள் கவனியாமல் விட்டுச் செல்லவில்லை.a
ஸ்பெய்னிலிருக்கும் யெகோவாவின் சாட்சிகள் இயேசு எதிர்ப்பட்டதைப் போன்ற ஒரு சவாலை எதிர்ப்பட்டனர். 1970 ஆன அவ்வளவு பிந்திய காலத்தின்போது, ஊழியம் செய்யப்படாத கிராமப்புறஞ்சார்ந்த பிராந்தியத்தின் மிகப் பெரும் நிலப்பகுதிகள் அறுவடைக்கு ஆயத்தமாய் இருந்தன. (மத்தேயு 9:37, 38) வடக்கே மழையுள்ள மலைகளிலும், வறண்ட மத்திப சமவெளிகளிலும், கரையோரங்களிலுமுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கும் ராஜ்ய செய்தி ஒருபோதும் கொண்டு செல்லப்படவில்லை.
நற்செய்தியை இந்த நிலப்பகுதிகளுக்குக் கொண்டுசெல்வதற்கு எல்லா முயற்சியும் எடுக்க யெகோவாவின் ஸ்பானிய சாட்சிகள் தீர்மானித்தனர். ஆனால் இந்தப் பகுதிகளிலிருக்கும் ஜனங்கள் ராஜ்ய செய்தியைக் கேட்க ஏன் அவ்வளவு நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதாயிற்று? அவர்கள் எவ்வாறு பிரதிபலித்தனர்?
சட்டப்பூர்வ அங்கீகாரம் கிராமப்புற சாட்சி பகருதலுக்குத் தூண்டுதலளிக்கிறது
1939-ல் உள்நாட்டுப்போரின் முடிவு முதற்கொண்டு ஸ்பெய்னிலுள்ள யெகோவாவின் சாட்சிகளின் ஊழியம் தடையுத்தரவின்கீழ் இருந்தது. 1950-லிருந்து 1960-ன் பத்தாண்டுகளின்போது, ஆர்வமுள்ள சாட்சிகள், தங்கள் நடமாட்டத்தை அதிகமாய்க் கவனியாதப் பட்டணங்களில் எச்சரிக்கையோடு பிரசங்கம் செய்தனர். கடைசியாக 1970-ல் தங்கள் ஊழியம் சட்டப்பூர்வமாய் அங்கீகரிக்கப்பட்டபோது, ஏறக்குறைய 10,000 ராஜ்ய பிரஸ்தாபிகள் ஸ்பெய்னில் இருந்தனர். ஏறக்குறைய இவர்கள் எல்லாரும் நகரங்களிலும் பெரிய பட்டணங்களிலும் வாழ்ந்தனர், ஆனால் ஸ்பெய்னின் கிராமங்களும் ராஜ்ய செய்தியைக் கேட்க வேண்டியதாயிருந்தது. இந்தச் சவாலை யார் எதிர்ப்படுவர்?
1970-ன் பத்தாண்டுகளில் அந்தத் தீபகற்பத்தின் எல்லா பகுதிகளுக்கும் நற்செய்தியைக் கொண்டுசெல்லும்படியான ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 1973-லிருந்து 1979 வரையில் ஏறக்குறைய ஒவ்வொரு மாதமும், அந்த நாட்டின் வெவ்வேறு நிலப்பகுதிகளிலுள்ளத் தேவையைச் சுருக்கமாய்க் குறிப்பிடும் தனிப்பட்ட அறிவிப்புகள், யெகோவாவின் சாட்சிகளின் சபைகளுக்குரிய மாதாந்தர ஊழியப் பிரசுரமாகிய நம் ராஜ்ய ஊழியத்தில் தோன்றியது. மனமுள்ளோரும் இணக்கமுள்ளோருமான பல குடும்பங்கள் அந்த அழைப்புக்குப் பதில்கொடுத்து தேவை மிகுதியாயுள்ள இடத்தில் சேவிக்கக் தாங்களாக முன்வந்தனர்.
ரோசென்டோ மற்றும் அவருடைய மனைவி லூசியின் உதாரணம் மாதிரியாயுள்ளது. இவர்கள், வடமேற்கு ஸ்பெய்னிலுள்ள மீன்பிடிக்கும் ஒரு கிராமத்துக்கு விசேஷித்தப் பயனியர்களாக (முழுநேர ராஜ்ய பிரசங்கம் செய்வோராக) அனுப்பப்பட்டனர். பின்பு அவர்கள் பெற்றோரானபோதும் அதே பகுதியில் தொடர்ந்திருக்கும்படி தீர்மானித்தனர். “நாங்கள் மிகக் கடினமான சமயங்களினூடே வாழ்ந்தோமென நான் ஒப்புக்கொள்ள வேண்டும்,” என ரோசென்டோ ஒப்புக்கொள்கிறார். “உலகப்பிரகாரமான வேலையைக் கண்டடைவது கடினமாயிருந்தது, ஆனால் யெகோவாவின் உதவியின்பேரில் நாங்கள் நம்பியிருந்தோம்; ஒருபோதும் பசியாக விடப்படவில்லை அல்லது வசிப்பதற்கு இடமில்லாமல் இல்லை. அது நிச்சயமாகவே பயனுள்ளதாயிருந்தது.” ஆண்டுகள் செல்லச்செல்ல, ஸ்பெய்னின் இந்தப் பகுதியில் நான்கு சபைகளை அமைப்பதில் அவர்கள் உதவி செய்ய முடிந்தது.
‘தகுதியுடையவன் யாரென தேடிக்காணுங்கள்’
ஒவ்வொரு பட்டணத்திலும் அல்லது கிராமத்திலும் தகுதியுடையோரைத் ‘தேடும்படி’ இயேசு தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார். (மத்தேயு 10:11, NW) ஆல்காயிலிருந்து (அலிகான்டியிலிருந்து) வந்த ஒரு சகோதரரான அன்கெல் கண்டுபிடித்தபடி, ஸ்பெய்னின் நாட்டுப்புற பகுதிகளில் இந்தத் தேடுதலுக்குச் சுறுசுறுப்பான உழைப்பும் முன்முயற்சியும் தேவைப்படுகின்றன. மாசீயாஸ் கிராமத்தில் அவர் அப்போதுதான் சில வீடுகளைச் சந்தித்து முடித்திருந்தார். அப்போது ஒரு சேவல் கூவுவதன் சத்தத்தைக் கேட்டார். “ஒரு சேவல் இருந்தால், ஒரு வீடு எங்கேயாவது இருக்க வேண்டும்—நாம் கவனியாமல் விட்டுவிட்ட ஒரு வீடு,” என அவர் தனக்குள் எண்ணினார். சுற்றிலும் தேடினபின்பு, மலைச் சரிவாரத்தின் முகட்டுத்தொடரின்மீது செல்வதும், முடிவாகத் தனியே இருந்த ஒரு வீட்டுக்கு வழிநடத்துவதுமான ஒரு பாதையை அன்கெல் கண்டார்.
இந்தப் பண்ணைப் பகுதியில், உடன் பிறந்த சகோதரனும் சகோதரியுமான 60 வயதுக்கு மேற்பட்ட கோசேயும் டோலோரேஸும் வாழ்ந்தார்கள். அவர்கள் கவனமாய்ச் செவிகொடுத்துக் கேட்டு, பைபிள் படிப்பு நடத்துவதற்கான அளிப்பை உடனடியாக ஏற்றனர். எனினும், அவர்கள் வாசிக்கவோ எழுதவோ முடியாததாலும், எல்லாம் ஸ்பானிய மொழியிலிருந்து, அவர்களுக்குப் புரிந்த ஒரே மொழியாகிய, வாலென்சிய மொழிக்கு மொழிபெயர்க்க வேண்டியிருந்ததாலும், இந்த மனத்தாழ்மையான ஆட்களுடன் படிப்பது எளிதாயில்லை. மேலும், தங்கள் அயலாரிடமிருந்து மிகுதியான எதிர்ப்பையும் அவர்கள் எதிர்ப்பட்டனர். இந்த இடையூறுகள் இருந்தபோதிலும், மேலும் கூட்டங்களுக்கு வருவது மலைகள்மீது நீண்ட பயணத்தைக் குறித்தபோதிலும், கோசேயும் டோலோரேஸும் சத்தியத்தில் படிப்படியாய் முன்னேறினர், முடிவில், அவர்கள் முழுக்காட்டப்படுவதற்குத் தகுதிபெற்றனர், இவர்கள் இருவரும் யெகோவாவை உண்மையுடன் தொடர்ந்து சேவித்துக்கொண்டிருக்கின்றனர்.
வடமேற்கு ஸ்பெய்னில், மோயான்யாவுக்கு அருகில் தனித்திருந்த ஒரு வீட்டில், வாதத்தால் தாக்கப்பட்ட ஒரு பெண் சத்தியத்தை எவ்வாறு ஏற்றாளென்பதை, முன்னால் குறிப்பிட்ட, ரோசென்டோவும் லூசியும் நினைவுபடுத்துகின்றனர். அவளுடைய பெயர் மாரியா. முதன்முதல் சாட்சிகளுடன் அவள் பேசினபோது, அவளுக்கு வாசிக்கவோ எழுதவோ தெரியாது, மேலும் சிறுபிள்ளையாக இருக்கையில் இளம்பிள்ளை வாதத்தால் தாக்கப்பட்டதனால் பல ஆண்டுகளாகப் படுத்தப்படுக்கையில் கிடந்தாள். அவளுடைய வீடு மிக அருகிலிருந்த பாதையிலிருந்து ஏறக்குறைய இரண்டு கிலோ மீட்டருக்கு மேற்பட்ட தூரத்தில் இருந்தது. இருப்பினும், அவள் பைபிளைப் படிக்க ஆவலாக இருந்தாள், யெகோவாவைச் சேவிக்கும்படியான அவளுடைய தீர்மானம் சீக்கிரத்தில் தெளிவாகத் தெரிந்தது. மாரியா வாசிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டு கூட்டங்களுக்கு வரத் தொடங்கினாள், அந்தச் சபையின் மனப்பூர்வமான முயற்சிகளுக்கு நன்றி. சகோதரர்கள் அவளை அவளுடைய வீட்டிலிருந்து தளமிடப்படாத ஒரு சந்து வரையில் இருநூறு மீட்டர் தூரத்துக்குத் தூக்கிச் சுமந்து சென்று, அங்கே அவளைக் கவனமாய் ஒரு காருக்குள் இறக்குவார்கள். முதன்முதல் அவளுடைய குடும்பத்திலிருந்து எதிர்ப்பு இருந்தபோதிலும், அவள் முழுக்காட்டப்படும் நிலைக்கு முன்னேறினாள். அவளுடைய ஆவிக்குரிய முன்னேற்றம் அவளுக்குக் கொடுத்த நம்பிக்கையினால், அவள் இப்பொழுது தனிப்பட்ட முறையில் பொருத்தமாக அமைக்கப்பட்ட ஒரு காரை ஓட்ட கற்றுக்கொண்டாள், மேலும் அடிப்படையான கல்வி திட்டத்தைப் படித்து முடித்திருக்கிறாள். “மாரியாவைப்போன்ற ஆட்களுக்கு உதவி செய்யக்கூடியதாயிருப்பது எந்தத் தியாகத்தையும் தகுந்ததாக்குகிறது” என்று ரோசென்டோ விளக்குகிறார்.
பைபிள் வாசகர்கள் உடனடியாகச் செயல்படுகின்றனர்
முதல் தடவையாக 1970-ன் பத்தாண்டுகளில் ஸ்பெய்னிலுள்ள பொதுமக்களுக்கு பைபிள் கிடைக்கக்கூடியதாயிற்று. ஸ்பானியர்கள் பலர் ஒரு பிரதியை வாங்கிக்கொண்டனர், சிலர் வேதாகமங்களை வாசிக்கத் தொடங்கினர். மெதீனா தெல் காம்ப்போவில் (வல்லடோலிட்டில்) இருந்த பீலார், 1973-ல் யெகோவாவின் சாட்சிகள் அவளுடைய பட்டணத்துக்கு முதன்முதல் வந்தபோது ஏற்கெனவே பைபிளை வாசித்துக்கொண்டிருந்தாள். கத்தோலிக்க மதத்தினளாக இருந்ததனால், சாட்சிகளிடமிருந்து புத்தகங்களை ஏற்க பயந்தாள், ஆனால் பைபிளைப் புரிந்துகொள்ள அவள் நிச்சயமாகவே விரும்பினாள். இதனால், தன் பைபிள் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்படி வாராந்தர கலந்தாராய்ச்சிகளை வைத்துக்கொள்ள ஒப்புக்கொண்டாள்.
பீலாரைச் சந்தித்துவந்த அந்தப் பயனியர் சகோதரி, உவாட்ச் டவர் சொஸையிட்டி பிரசுரிக்கும் புத்தகங்களை நன்றாகப் பயன்படுத்தி, அவளுடைய பல கேள்விகளுக்குப் பதிலளிக்க முடிந்தது. தான் கற்றுக்கொண்டிருந்ததில் மனங்கவர்ந்தவளாகப் பீலார், பல வாரங்களுக்குப் பின்பு, நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் சத்தியம் என்ற புத்தகத்தைப் பயன்படுத்தி பைபிள் படிக்க ஒப்புக்கொண்டாள். இந்தச் சத்திய புத்தகத்தை அவள் படித்து முடிப்பதற்கு முன்பாக, முழு பைபிளையும் அவள் வாசித்து முடித்து சத்தியத்தைத் தான் கண்டடைந்ததாக உறுதியாய் நம்பினாள். மெதீனா தெல் காம்ப்போவில் அவள் முதல் சாட்சியானாள், அங்கே இப்பொழுது ஒரு சிறந்த ராஜ்ய மன்றமும் 63 பிரஸ்தாபிகளைக்கொண்ட ஒரு சபையும் உள்ளது.
“தங்கள் ஆவிக்குரிய தேவையைப்பற்றி உணர்வுள்ளவர்களாக” இருந்து, கடவுளுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்து பைபிளைத் தவறாமல் வாசித்துவரும் ஆட்களை ஸ்பானிய சாட்சிகள் இன்னும் காண்கின்றனர். (மத்தேயு 5:3, NW) ஸூமேயா (வட ஸ்பெய்ன்) கோயிலில் வினாவிடை மதப் போதனையைக் கற்பித்த முன்னாள் கத்தோலிக்களான பேப்பி, அருகிலிருந்த ஒரு கிராமத்தில் பிரசங்க ஊழியம் செய்துகொண்டிருந்தபோது அந்தப் பகுதியின் மதகுருவைச் சந்தித்தாள்.
“பேப்பி, நீ உன் நேரத்தை வீணாக்குகிறாய், இந்த ஈட்ஜியார் கிராமத்தில் இரண்டு ஆட்கள் மாத்திரமே—மணமாகிய தம்பதிகள்—ஆவிக்குரியப்பிரகாரம் மனப்பற்று உடையவர்கள். மற்ற யாவரும் வெறும் பழக்கத்தால் சர்ச்சுக்குப் போகின்றனர்” என்று அந்த மதகுரு அவளிடம் சொன்னார்.
“ஆவிக்குரிய மனப்பற்றுள்ள இரண்டு ஆட்கள் அங்கிருந்தால், அவர்கள் யெகோவாவின் சாட்சிகளாவார்கள்” என்று பேப்பி பதிலளித்தாள்.
அந்தக் கிராமம் முழுவதிலும் ஊழியம் செய்து முடிக்கப்படும் வரையில் பேப்பி, மற்ற சாட்சிகளுடன்கூட, வீடுவீடாகச் செய்யும் தன் பிரசங்க ஊழியத்தை தொடர்ந்து செய்தாள். எதிர்பார்த்தபடியே, ஓர் ஒதுக்கமான வீட்டில், அந்த மதகுரு குறிப்பிட்ட அதே தம்பதிகளைச் சகோதரர்கள் கண்டனர். அவர்கள் பைபிளை வாசித்துக்கொண்டிருந்தனர் ஆனால் அதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் ஆர்வத்தோடு பைபிள் படிப்பை ஏற்று, விரைவாய் முன்னேறி, ஏப்ரல் 1991-ல் முழுக்காட்டப்பட்டனர்.
நேர்மையான இருதயமுள்ள ஆட்கள் சிலர் உவர்ட்ச் டவர் சொஸையிட்டி பிரசுரித்த, பைபிளில் ஆதாரங்கொண்ட புத்தகங்களைத் தாங்களாகவே வாசிப்பதன்மூலம் சத்தியத்தைக் கற்றிருக்கின்றனர். உதாரணமாக, அல்மடேனிலிருந்து (சியூடட் ரியல்) வந்த சாட்சிகள் சிறிய பட்டணமாகிய சீரூலாஸில் (படஜோஸ்) பிரசங்க ஊழியம் செய்துகொண்டிருந்தபோது தங்கள் செய்திக்கு ஊக்கமாய்ச் செவிகொடுத்துக் கேட்ட ஓர் அம்மாளைக் கண்டார்கள். அவள் காட்டின அக்கறையைக் கருதி, வீட்டு பைபிள் படிப்பு ஒன்றை ஏற்கும்படி கேட்டனர். எனினும் அவள், வயதான ஒருவர் தனக்கு ஏற்கெனவே பைபிள் பாடங்கள் சொல்லிக்கொடுக்கிறாரெனக் கூறி, அதை ஏற்க மறுத்துவிட்டாள். அந்தப் பகுதியிலிருந்த மற்ற ஆட்கள் பலரும் அதே காரியத்தைக் குறிப்பிட்டனர். அதை அறியவேண்டுமென்ற தங்கள் அவா தூண்டப்பட்டு, சகோதரர்கள் அந்த வயதானவரைப்பற்றி விசாரித்தார்கள். அவருடைய விலாசத்தை அவர்கள் பெற்று அவரை சந்திக்கச் சென்றனர்.
அவர்களுக்கு ஆச்சரியமுண்டாக, மாட்ரிட்டில், ஃபேலீப்பா என்ற பெயருடைய இந்த மனிதர், நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தைப் பெற்றிருந்தார் எனக் கண்டனர். அதை முழுவதும் வாசித்தப் பின்பு, அந்த நற்செய்தியைத் தன் அயலாருடன் பகிர்ந்துகொள்வது தன் பொறுப்பெனப் புரிந்துகொண்டார். ஆகவே, அவர்களுக்கு பைபிள் பாடங்களைக் கொடுக்க அவர் இந்தப் புத்தகத்தைப் பயன்படுத்திக்கொண்டிருந்தார். அவரோடு படிக்க சகோதரர்கள் ஏற்பாடுகள் செய்தனர். அவர் பைபிள் படிப்பு நடத்தின ஓர் அம்மாளும் ஒரு படிப்பை ஏற்றாள். தான் 80 வயதானவராக இருந்து நல்ல சுகாரோக்கியத்தை அனுபவியாதிருந்தபோதிலும், ஃபேலீப்பா சத்தியத்தில் நல்ல முன்னேற்றம் செய்துகொண்டிருக்கிறார்.
தப்பெண்ணங்கள் வெல்லப்பட்டன
கிராமப்புற பிராந்தியங்கள் சில தனிப்பட்ட பிரச்னைகளை அளிக்கின்றன. அத்தகைய பகுதிகளில் மதப் பாரம்பரியங்களும் மூடநம்பிக்கைகளும் பொதுவாய் உறுதியான பிடியைக் கொண்டுள்ளன, மேலும் கிராமப்புறங்களில் வாழும் மக்கள் பலர் ஒரு “புதிய மதத்தைப்” பற்றி உள்ளியல்பாக அமைந்துள்ள சந்தேகத்தைக் கொண்டுள்ளனர். சில கிராமவாசிகள், தங்கள் மதத்தை மாற்றினால் தங்கள் அயலாரும் உறவினர்களும் என்ன நினைப்பார்கள் என்பதைப்பற்றி முக்கியமாய் மீறிய கூருணர்வுடையோராக இருக்கின்றனர். ஆனால் கடவுளுடைய வார்த்தையின் வல்லமை அத்தகைய பிரச்னைகளை வெற்றிகரமாய் மேற்கொண்டு ஓர் ஆளின் வாழ்க்கையை மாற்ற முடியும். வடமேற்கு ஸ்பெய்னில், காங்காஸ் டீ மோராஸோவின் மீன்பிடிக்கும் கிராமத்தில் இவ்வாறிருந்தது.
இந்தக் கிராமத்தானான ரோபெர்ட்டோ, தான் சுதந்திரமாக இருக்க ஆவல்கொண்டதனால் 14 வயதில் கப்பலோட்டியாக வேலைசெய்தான். வாணிகச் சரக்குக்கப்பலோட்டியாக அவனுடைய வாழ்க்கை, கடலில் செலவிடும் தனிமையுணர்வுமிகுந்த மணிநேரங்களைக் கடப்பதற்கு மீறி மதுபானம் குடிப்போரும் போதை மருந்துகளைப் பயன்படுத்துவோருமான மற்ற இளம் மாலுமிகளுடன் தோழமைக்குள் கொண்டுவந்தது. சீக்கிரத்தில், ரோபெர்ட்டோவும் மிதமீறிய குடிகாரனும் போதை துர்ப்பழக்கத்துக்கு அடிமையுமானான்.
காலப்போக்கில் ரோபெர்ட்டோ வீடு திரும்பினான், ஆனால் தன் துர்ப்பழக்கங்களை விட்டுவிடக் கூடாதவனாகவும் மனமற்றவனாகவும் இருந்தான். போதைப்பொருள் உட்கொள்ளும் தன் துர்ப்பழக்கத்திற்குப் பணம் சம்பாதிப்பதற்கு அவன் ஒரு திருடனாகி, வெவ்வேறுபட்ட ஆறு சந்தர்ப்பங்களில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டான். அவன் 18 வயதாயிருந்தபோது, திராட்சமதுவும் அமைதிப்படுத்தும் மருந்துகளும் கலந்த, பெரும்பாலும் உயிரைப் போக்கிவிடக்கூடிய கலவையைக் குடித்துவிட்டான். மருத்துவர்கள் அவனுடைய உயிரைக் காப்பாற்றினர், ஆனால் அவன் தன் புயங்களையும் கால்களையும் பயன்படுத்தும் சக்தியை இழந்தான். நாலங்கவாதத்தால் தாக்கப்பட்டவனாய் மருத்துவமனையை விட்டு வெளிவந்தான். சக்கரநாற்காலியிலேயே கட்டுப்பட்டிருந்துங்கூட போதைப் பழக்கத்தை நிறுத்தும்படி அவனைச் செய்யவில்லை. அவன் மதநம்பிக்கையிலிருந்து நீங்கியவனாக இருந்தான், வாழ்க்கையை வாழ்வதற்குத் தகுந்ததாக்குவதற்கு, போதைப்பொருட்களே அவனுக்கு இருந்த எல்லாமாகத் தோன்றிற்று—மூன்று ஆண்டுகளுக்கு அப்பால் யெகோவாவின் சாட்சிகள் அவனைச் சந்திக்கும் வரையில் அவ்வாறிருந்தது.
நிறைவேற்றப்பட்ட பைபிள் தீர்க்கதரிசனங்களைப்பற்றிக் கற்றது தன் மதப்பற்றற்றத் தன்மையை அடக்கி மேற்கொள்ள ரோபெர்ட்டோவுக்கு உதவிசெய்தது. இராஜ்ய மன்றத்தில் அவனுக்குக் கிடைத்த அன்பான வரவேற்பு, உண்மையான மதம் மெய்யாகவே ஆட்களின் வாழ்க்கையை மேலும் நோக்கமுள்ளதாக்குகிறது என்று அவனுக்கு நம்பிக்கையூட்டியது. ஒன்பது மாதங்களுக்குள், ரோபெர்ட்டோ தன் போதை துர்ப்பழக்கத்தை அடக்கி வென்றான் மற்றும் முழுக்காட்டப்பட்டான். தன் கடுமையான உடல் ஊனத்தின் மத்தியிலும், அவன் எட்டு ஆண்டுகளாகப் பயனியராய்ச் சேவித்துக்கொண்டிருக்கிறான். கடந்த இரண்டு ஆண்டுகளாக சபை மூப்பனாகவும் இருந்துவருகிறான். அவனுடைய முந்தின கூட்டாளிகளில் ஒருவனான ஃபிரான்தீஸ்கோ, ரோபெர்ட்டோ வாழ்க்கையில் செய்த மாற்றங்களால் அவ்வளவு அதிகம் மனமாழ்த்தப்பட்டு அவனும் ஒரு சாட்சியாகி இப்பொழுது உதவி ஊழியனாக இருக்கிறான். திருத்தப்பட முடியாத முறையில் துர்ப்பழக்கத்துக்கு அடிமையானவனென எண்ணப்பபட்டவனில் ஏற்பட்ட இந்தக் கவனிக்கத்தக்க மாற்றம், அந்த வட்டாரத்திலுள்ள மக்கள் நம் ஊழியத்தின் இயல்பை மேலும் நன்றாக மதித்துணர உதவிசெய்தது. ஒரு பெண், குடிபோதை துர்ப்பழக்கத்துக்கு அடிமையான தன் மகனை, சாட்சிகள் சுகப்படுத்தக்கூடுமாவென்று காண்பதற்கு, அவனை ராஜ்ய மன்றத்துக்குங்கூட கொண்டுவந்தாள்.
சத்தியத்துக்காக பைபிளை ஆராய்தல்
பொதுவாக, நாட்டுப்புறத்தில் வாழும் மக்கள் சத்தியத்துக்காக அத்தகைய மதித்துணர்வைக் கொண்டிருப்பது உலகப்பிரகாரமான ஞானிகளை அடிக்கடி வெட்கத்துக்குள்ளாக்குகிறது. (1 கொரிந்தியர் 1:26, 27) நாணமுற்ற நடுத்தர வயதான ஒரு பெண் ஆடேலீனா, மதித்துணர்வுள்ள இவர்களில் ஒருத்தியாக இருக்கிறாள். இவள் தன் கத்தோலிக்க விசுவாசத்தை மிகுந்த கருத்தார்ந்த முறையில் கருதிவந்தவள். ஒவ்வொரு காலையிலும் ஜெபிப்பதற்கு அவள் தவறாமல் முழங்காற்படியிட்டு, கர்த்தருடைய ஜெபத்தையும் மரியாள் வாழ்த்துவையும் பல தடவைகள் சொல்வாள். சில ஜெபங்களாவது கேட்கப்படுவதை நிச்சயப்படுத்திக்கொள்ள—வாரத்தின் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு “பரிசுத்தவானுக்குத்” தன் ஜெபங்களைச் செலுத்துவாள்.
ஆடேலீனா பைபிளைப் படிக்கத் தொடங்கினபோது, புதிதாகத் தான் கண்டடைந்த விசுவாசத்துக்கு அதே மத ஆர்வத்தைச் செலுத்தினாள். அவளும் அவளுடைய கணவரும் முதல் தடவையாக ராஜ்ய மன்றத்துக்குச் சென்றபோது, உட்பிரவேசிக்கப் போதிய தைரியத்தை அடைய அவர்களுக்குப் பத்து நிமிடங்கள் எடுத்தபோதிலும், அவளுடைய நாணி ஒதுங்கும் தன்மையுங்கூட அவளைத் தடுத்து நிறுத்தவில்லை. எனினும், ஒருமுறை உள்ளே சென்றபின், அவள் கூர்ந்த கவனத்துடன் செவிகொடுத்துக் கேட்டாள். ஒரு சந்தர்ப்பத்தில், கிறிஸ்துவின் ஆயிர ஆண்டு ஆட்சியைப்பற்றிக் கற்றாள். இந்தச் செய்தி அவள் மனதைக் கவர்ந்தது, அவள் வீடு திரும்பினபோது, தன் பைபிளில் அதைப்பற்றி மேலும் அதிகம் வாசிக்க விரும்பினாள். அது வெளிப்படுத்துதலின் புத்தகத்தில் ஏதோ ஓரிடத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததென அவர்கள் எண்ணினபோதிலும், அந்தத் தகவலை அதில் எங்கே கண்டடைவதென அவளுக்கோ அவள் கணவருக்கோ தெரியவில்லை. ஆகவே ஆடேலீனா அந்த இரவில் வெளிப்படுத்துதலை வாசிக்கத் தொடங்கி, விடியற்காலை மணிநேரங்களின்போது 20-வது அதிகாரத்துக்கு அவள் கடைசியாக வரும் வரையில் வாசித்துக்கொண்டேயிருந்தாள்.
மற்றொரு சந்தர்ப்பத்தில், ஜெபத்தில் கணவன் தன் மனைவியைப் பிரதிநிதித்துவம் செய்வது தகுந்ததென ஆடேலீனா கற்றறிந்தாள். அவளுடைய கணவர் ஜெபிப்பதற்கு மனமுள்ளவராக இருந்தபோதிலும், ஜெபத்தில் என்ன சொல்வதென்று அவருக்குத் தெரியவில்லை. அதே இரவில், போதனைகளுக்காக பைபிளில் தேட ஆடேலீனா தீர்மானித்தாள். மத்தேயு 6-ம் அதிகாரம் ஜெபத்தைப்பற்றிய பொருளின்பேரில் விவரமாய் ஆலோசிக்கிறதென்று தான் கண்டுபிடித்ததைத் தன் கணவருக்குச் சொல்ல, விடியற்காலை 2 மணிக்கு அவள் அவரை எழுப்பினாள். இயேசுவின் போதனைகளை வாசித்தப் பின்பு, அவளுடைய கணவர் கடைசியில் அவர்கள் இருவருக்காகவும் ஜெபம் செய்தார். இப்பொழுது இருவரும், ஆடேலீனாவும் அவளுடைய கணவரும் யெகோவாவின் சாட்சிகளாக இருக்கின்றனர்.
ஒரு நல்ல அறுவடை
யெகோவாவின் ஆர்வமுள்ள ஊழியர்கள் ஏறக்குறைய 25 ஆண்டுகள் கிராமப்புறங்களில் சாட்சிகொடுத்தப் பின்பு, ஸ்பெய்னின் எல்லா பாகங்களும் நற்செய்தியைக் கேட்டாகிவிட்டது. முதல் நூற்றாண்டில் சிறிய ஆசியாவில் உண்மையாயிருந்ததுபோலவே, ‘யெகோவாவின் வார்த்தை அந்த நாடு முழுவதுமாக எங்கும் கொண்டுசெல்லப்படுகிறது.’ (அப்போஸ்தலர் 13:49, NW) இதன் பலனாக, ஆயிரக்கணக்கான கிராம மக்கள் சாதகமாய்ச் செயல்பட்டிருக்கின்றனர்.
ஸ்பெய்னிலும் மற்ற இடங்களிலும், கிராமப் பகுதிகளில் முழுமையாய்ப் பிரசங்க ஊழியம் செய்வதற்கு பொறுமையும் தன்னலத்தியாகமும் நிச்சயமாகவே தேவைப்படுகிறது. ‘எல்லா வகையான ஆட்களும் இரட்சிக்கப்பட வேண்டுமென்பது’ கடவுளின் சித்தமாயிருப்பதால், மதித்துணருவோரைத் தேடிக் கண்டுபிடிக்க யெகோவாவின் சாட்சிகள் மகிழ்ச்சிகொள்கின்றனர். (1 தீமோத்தேயு 2:4) மேற்சொல்லிய அனுபவங்கள் மெய்ப்பித்துக் காட்டுகிறபடி, ஸ்பெய்னில் கிராமம் கிராமமாகப் பிரசங்கிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு யெகோவா நிறைவாய்ப் பலன் தந்திருக்கிறார்.
[அடிக்குறிப்புகள்]
a கலிலேயாவில் மொத்தம் 204 “பட்டணங்களும் கிராமங்களும்” இருந்தனவென ஜொஸிஃபஸ் கணக்கிட்டார், மேலும் அந்த நிலப்பகுதி “மிகப் பல கிராமங்களை” உடையதாக இருந்ததென விவரித்தார்.
[பக்கம் 23-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
பிரான்ஸ்
போர்த்துகல்
ஸ்பெய்ன்
பலீரிக் தீவுகள்
கேனரி தீவுகள்
[பக்கம் 24-ன் படத்திற்கான நன்றி]
விலாக, லேரடா
[பக்கம் 24-ன் படத்திற்கான நன்றி]
புயப்லா டி ஸனப்ரியா, ஜமோரா
[பக்கம் 25-ன் படத்திற்கான நன்றி]
கசரபொனிலா, மலகா
[பக்கம் 25-ன் படத்திற்கான நன்றி]
ஸினுயஸ், ஹுவெஸ்க்கா
[பக்கம் 26-ன் படத்திற்கான நன்றி]
லீகீஷியோ, விஸ்கையா