நல்ல தைரியத்தோடிருங்கள்!
“நல்ல தைரியத்தோடிருந்து, ‘யெகோவா என் சகாயர்’ என்று சொல்வோமாக.”—எபிரெயர் 13:6, NW.
1. பொ.ச. முதல் நூற்றாண்டில் சத்தியத்தைக் கற்றுக்கொண்டவர்களால் என்ன துணிவு காட்டப்பட்டது?
நமது பொது சகாப்தத்தின் முதல் நூற்றாண்டு அது. நெடுங்காலமாக எதிர்பார்க்கப்பட்டிருந்த மேசியா வந்திருந்தார். அவர் தம்முடைய சீஷர்களுக்கு நன்றாகப் போதித்திருந்தார்; முக்கியமான பிரசங்க வேலையை ஆரம்பித்துவைத்தார். மக்கள் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைக் கேட்கும் காலமாக அது இருந்தது. எனவே, சத்தியத்தை கற்றுக்கொண்ட ஆண்களும் பெண்களும் துணிவோடு அந்த அற்புதமான செய்தியை அறிவித்தனர்.—மத்தேயு 28:19, 20.
2. இன்று யெகோவாவின் சாட்சிகளுக்குத் தைரியம் ஏன் தேவைப்படுகிறது?
2 இராஜ்யம் அந்தக் காலத்தில் ஸ்தாபிக்கப்படவில்லை. ஆனால் நியமிக்கப்பட்ட ராஜாவாகிய இயேசு கிறிஸ்து, ராஜ்ய வல்லமையில் தம்முடைய எதிர்கால காணக்கூடாத வந்திருத்தலைப் பற்றி தீர்க்கதரிசனம் சொல்லியிருந்தார். அது ஈடிணையற்ற யுத்தம், பஞ்சம், கொள்ளைநோய்கள், பூமியதிர்ச்சிகள், நற்செய்தியைப் பற்றிய உலகளாவிய பிரசங்க வேலை போன்ற காரியங்களால் அடையாளப்படுத்தப்படும். (மத்தேயு 24:3-14; லூக்கா 21:10, 11) யெகோவாவின் சாட்சிகளாக, இப்படிப்பட்ட நிலைமைகளையும் நாம் அனுபவிக்கும் துன்புறுத்தலையும் சமாளிப்பதற்கு நமக்குத் தைரியம் தேவைப்படுகிறது. எனவே, பொ.ச. முதல் நூற்றாண்டின் தைரியமிக்க ராஜ்ய பிரஸ்தாபிகளின் பைபிள் பதிவுகளை ஆராய்வது பயனுள்ளதாக இருக்கும்.
கிறிஸ்துவைப் பின்பற்ற தைரியம்
3. தைரியத்திற்கு மிகச் சிறந்த முன்மாதிரியைக் கொடுக்கிறவர் யார், அவரைப் பற்றி எபிரெயர் 12:1-3-ல் என்ன சொல்லப்பட்டது?
3 இயேசு கிறிஸ்து தைரியத்தின் மிகச் சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார். கிறிஸ்தவத்துக்கு முன்பிருந்த ‘திரளான மேகம்’ போன்ற தைரியமிக்க யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி சொல்லிவிட்டு, அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு சொல்வதன்மூலம் இயேசுவின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்தினார்: “ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம். அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்.”—எபிரெயர் 12:1-3.
4. சாத்தானால் சோதிக்கப்பட்டபோது இயேசு எப்படித் தைரியத்தைக் காண்பித்தார்?
4 முழுக்காட்டுதல் எடுத்து, வனாந்தரத்தில் 40 நாள்கள் தியானம், ஜெபம், உபவாசம் இருந்த பின்பு, இயேசு தைரியமாகச் சாத்தானை எதிர்த்தார். கல்லை அப்பமாக மாற்றும்படி பிசாசால் தூண்டப்பட்டபோது, இயேசு மறுத்துவிட்டார்; ஏனென்றால் தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக அற்புதங்களைச் செய்வது தவறாக இருந்தது. “மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே,” என்று இயேசு சொன்னார். சாத்தான் அவரை தேவாலயத்தின் முகட்டிலிருந்து குதிக்கும்படி சவால் விட்டான்; இயேசு மறுத்தார், ஏனென்றால் தற்கொலை செய்திருக்கக்கூடிய காரியத்திலிருந்து கடவுள் அவரை மீட்கும்படி தூண்டுவது பாவமாக இருக்கும். “உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே,” என்று கிறிஸ்து சொன்னார். ஒரு ‘வணக்கச் செயலுக்காக’ சாத்தான் உலகின் சகல ராஜ்யங்களையும் அவருக்குக் கொடுக்க முன்வந்தான்; ஆனால் இயேசு விசுவாச துரோகம் செய்து, மனிதர்கள் சோதனையின்கீழ் கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக இருக்க மாட்டார்கள் என்ற பிசாசின் சவாலை ஆதரிக்க மாட்டார். எனவே இயேசு அறிவித்தார்: “அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே.” அதனால், சோதனைக்காரன் “சோதனையெல்லாம் முடித்தபின்பு, சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான்.”—மத்தேயு 4:1-11; லூக்கா 4:13.
5. சோதனையைச் சகித்திருக்க எது நமக்கு உதவிசெய்யும்?
5 இயேசு, யெகோவாவுக்குக் கீழடங்கி நடந்து, சாத்தானை எதிர்த்தார். நாமும் அவ்வாறு, ‘கடவுளுக்குக் கீழடங்கியிருந்து, பிசாசுக்கு எதிர்த்து நிற்க வேண்டும், அப்போது அவன் நம்மைவிட்டு ஓடிப்போவான்.’ (யாக்கோபு 4:7) இயேசுவைப்போல, நாம் வசனங்களைப் பொருத்திப் பிரயோகித்தால் சோதனையைத் தைரியமாக எதிர்த்துச் சமாளிக்கலாம், பாவமுள்ள ஒன்றைச் செய்வதற்குத் தூண்டப்படும்போது அவற்றை மேற்கோள் காட்டிக் கொள்ளவும் செய்யலாம். நாம் திருடும்படி தூண்டப்படும்போது, “களவு செய்யாதிருப்பாயாக” என்ற கடவுளுடைய கட்டளையை நமக்குள் நாமே திரும்பச் சொல்லிக்கொண்டால், திருடுவதற்கு ஏதாவது வாய்ப்பு உண்டா? இரண்டு கிறிஸ்தவர்களில் ஒருவராவது “விபசாரம் செய்யாதிருப்பாயாக,” என்ற வார்த்தைகளைத் தைரியமாக மேற்கோள் காட்டினால், அவர்கள் இன ஒழுக்கக்கேட்டில் ஈடுபடும்படியான தூண்டுதலுக்குப் பெரும்பாலும் இடம் கொடுப்பார்களா?—ரோமர் 13:8-10; யாத்திராகமம் 20:14, 15.
6. இயேசு எப்படித் தைரியத்தோடு உலகத்தை ஜெயித்தவராக இருந்தார்?
6 இந்த உலகத்தினால் வெறுக்கப்பட்ட கிறிஸ்தவர்களாக நாம் அதன் ஆவியையும் பாவமுள்ள நடத்தையையும் தவிர்க்கலாம். இயேசு தம்மைப் பின்பற்றினவர்களிடம் சொன்னார்: “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்.” (யோவான் 16:33) அவர் உலகத்தைப்போல் ஆகாது இருந்ததன்மூலம் அதை ஜெயித்தார். ஜெயித்தவராக அவருடைய முன்மாதிரியும் அவருடைய உத்தமத்தைக் காத்துக்கொண்ட போக்கின் விளைவும் நாம் உலகத்திலிருந்து பிரிந்திருந்து அதனால் தூய்மைக் கெடாமல் இருப்பதினாலும் அவரைப் பின்பற்றுவதற்குரிய தைரியத்தினால் நம்மை நிரப்ப முடியும்.—யோவான் 17:16.
தொடர்ந்து பிரசங்கிக்கத் தைரியம்
7, 8. துன்புறுத்தலின் மத்தியிலும் நாம் தொடர்ந்து பிரசங்கிக்க நமக்கு எது உதவிசெய்யும்?
7 துன்புறுத்தலின் மத்தியிலும் தொடர்ந்து பிரசங்கிப்பதற்கான தைரியத்திற்கு இயேசுவும் அவரின் சீஷர்களும் கடவுள்மீது சார்ந்திருந்தனர். கிறிஸ்து துன்புறுத்தலின் மத்தியிலும் தம்முடைய ஊழியத்தைத் துணிவோடு நிறைவேற்றினார்; பொ.ச. 33 பெந்தெகொஸ்தேக்குப் பின், யூத மத தலைவர்கள் அவருடைய துன்புறுத்தப்பட்ட பின்பற்றுவோர்களைத் தடுத்து நிறுத்த முயற்சிசெய்த போதிலும் அவர்கள் நற்செய்தியைத் தொடர்ந்து பிரஸ்தாபப்படுத்தினார்கள். (அப்போஸ்தலர் 4:18-20; 5:29) அந்தச் சீஷர்கள் ஜெபித்தனர்: “கர்த்தாவே, அவர்கள் பயமுறுத்தல்களைத் தேவரீர் கவனித்து, . . . உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும்.” என்ன நடந்தது? “அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது, அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்,” என்று பதிவு சொல்கிறது.—அப்போஸ்தலர் 4:24-31.
8 இன்று பெரும்பாலான மக்கள் நற்செய்தியைக் கேட்க மனமில்லாதிருப்பதால், அவர்களுக்குத் தொடர்ந்து பிரசங்கிப்பதற்குத் துணிவு அடிக்கடி தேவைப்படுகிறது. பெரும்பாலும் துன்புறுத்தப்படும்போது, சாட்சிக் கொடுத்தலை முற்றிலும் செய்வதற்குக் கடவுள் கொடுக்கும் தைரியம் தேவைப்படும் நிலையில் யெகோவாவின் ஊழியர்கள் இருக்கிறார்கள். (அப்போஸ்தலர் 2:40; 20:24) எனவே தைரியமிக்க ராஜ்ய பிரஸ்தாபி பவுல், ஓர் இளம், குறைந்த அனுபவமுள்ள உடன் ஊழியரிடம் இவ்வாறு சொன்னார்: “தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார். ஆகையால் நம்முடைய கர்த்தரைப் பற்றிய சாட்சியைக் குறித்தாவது, அவர் நிமித்தம் கட்டப்பட்டிருக்கிற என்னைக் குறித்தாவது, நீ வெட்கப்படாமல், தேவ வல்லமைக்கேற்றபடி சுவிசேஷத்திற்காக என்னோடேகூடத் தீங்கநுபவி.” (2 தீமோத்தேயு 1:7, 8) நாம் தைரியத்திற்காக ஜெபித்தால், தொடர்ந்து பிரசங்கிக்க முடிந்தவர்களாக நாம் இருப்போம்; ராஜ்ய பிரஸ்தாபிகளாக இருக்கும் நம்முடைய சந்தோஷத்தைத் துன்புறுத்தலும்கூட திருடிச்செல்லாது.—மத்தேயு 5:10-12.
யெகோவாவின் பக்கமாக நிலைநிற்கை எடுப்பதற்குத் தைரியம்
9, 10. (அ) கிறிஸ்துவின் முழுக்காட்டப்பட்ட பின்பற்றுபவர்களாக ஆவதற்கு முதல் நூற்றாண்டு யூதர்களும் புறமதத்தினரும் என்ன செய்தார்கள்? (ஆ) ஒரு கிறிஸ்தவராக ஆவதற்கு ஏன் தைரியம் தேவைப்பட்டது?
9 கிறிஸ்துவின் முழுக்காட்டப்பட்ட பின்பற்றுபவர்களாக ஆவதற்கு முதல் நூற்றாண்டு யூதர்களும் புறமதத்தினர் பலரும் தைரியமாக வேதப்பூர்வமற்ற பாரம்பரியங்களைக் கைவிட்டனர். பொ.ச. 33 பெந்தெகொஸ்தேக்குச் சற்றுப் பின்பு, “சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று; ஆசாரியர்களில் அநேகரும் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள்.” (அப்போஸ்தலர் 6:7) அந்த யூதர்கள் மதப் பிணைப்புகளைத் தகர்த்தெறிந்துவிட்டு, இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்ள தைரியம் உடையவர்களாக இருந்தனர்.
10 பொ.ச. 36-ல் ஆரம்பித்து, பல புறமதத்தினர் விசுவாசிகள் ஆனார்கள். கொர்நேலியுவும் அவருடைய குடும்பத்தினரும், மற்ற புறமதத்தினரும் நற்செய்தியைக் கேட்டபோது, அவர்கள் அதை உடனே ஏற்றுக்கொண்டு, பரிசுத்த ஆவியைப் பெற்று, “இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே முழுக்காட்டப்பட்டனர்.” (அப்போஸ்தலர் 10:1-48, NW) பிலிப்பியில் ஒரு புறமதத்தானாகிய சிறைக்காவலனும் அவருடைய வீட்டாரும் மிக சீக்கிரத்தில் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டு, “அவனும் அவனுடையவர்கள் அனைவரும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள்.” (அப்போஸ்தலர் 16:25-34) அப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு தைரியம் தேவைப்பட்டது, ஏனென்றால் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்ட, பிரபலமற்ற சிறுபான்மையினராக இருந்தனர். அவர்கள் இன்றும் அப்படித்தான் இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தல் செய்யாதிருந்து, யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக முழுக்காட்டுதல் பெற்றிருக்கவில்லை என்றால், இப்படிப்பட்ட தைரியமான நடவடிக்கைகளை நீங்கள் எடுப்பதற்கு இதுவே தகுந்த சமயம் அல்லவா?
பிளவுற்ற குடும்பங்களில் தைரியம்
11. தைரியத்திற்கு என்ன முன்மாதிரியை ஐனிக்கேயாளும் தீமோத்தேயுவும் வைத்தார்கள்?
11 ஐனிக்கேயாளும் அவளுடைய மகன் தீமோத்தேயுவும், மதரீதியில் பிளவுற்ற ஒரு குடும்பத்தில் தைரியமான விசுவாசத்திற்கு நல்ல முன்மாதிரிகளை வைத்தனர். ஐனிக்கேயாள் புறமதத்தைச் சார்ந்த கணவனை உடையவளாக இருந்தாலும், அவளுடைய மகனுக்கு அவனுடைய சிசுப்பருவம் முதல் “பரிசுத்த வேத எழுத்துக்களை” அவள் கற்பித்தாள். (2 தீமோத்தேயு 3:14-17) ஒரு கிறிஸ்தவளாக ஆனபோது, ‘மாய்மாலமற்ற விசுவாசத்தை’ காண்பித்தாள். (2 தீமோத்தேயு 1:5) அவள் தன்னுடைய அவிசுவாசியான கணவனின் தலைமை ஸ்தானத்தை மதித்ததோடு, தீமோத்தேயுவுக்குக் கிறிஸ்தவப் போதனையைக் கற்றுக்கொடுக்க தைரியமுள்ளவளாக இருந்தாள். அவளுடைய நன்கு கற்பிக்கப்பட்ட மகன், பவுலோடு மிஷனரி பயணங்களைச் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட போது அவளுடைய விசுவாசமும் தைரியமும் நிச்சயமாகவே பலனளிக்கப்பட்டன. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தங்களைக் காணும் கிறிஸ்தவப் பெற்றோருக்கு இது எவ்வளவு உற்சாகமளிப்பதாக இருக்கும்!
12. தீமோத்தேயு எப்படிப்பட்ட நபராக ஆனார், அவரைப்போல இருப்பவர்களாக இன்று தங்களை நிரூபிப்பவர்கள் யார்?
12 தீமோத்தேயு மதரீதியில் பிளவுபட்ட குடும்பத்தில் வாழ்ந்தாலும், கிறிஸ்தவத்தை அவர் தைரியமாக ஏற்றுக்கொண்டு, ஓர் ஆவிக்குரிய மனிதராக ஆனார்; அவரைப் பற்றி பவுல் இவ்வாறு சொல்ல முடிந்தது: “அன்றியும், நானும் உங்கள் செய்திகளை அறிந்து மனத்தேறுதல் அடையும்படிக்குச் சீக்கிரமாய்த் தீமோத்தேயுவை உங்களிடத்தில் [பிலிப்பியர்கள்] அனுப்பலாமென்று கர்த்தராகிய இயேசுவுக்குள் நம்பியிருக்கிறேன். அதேனென்றால், உங்கள் காரியங்களை உண்மையாய் விசாரிக்கிறதற்கு என்னைப்போல மனதுள்ளவன் அவனையன்றி வேறொருவனும் என்னிடத்திலில்லை. . . . தகப்பனுக்குப் பிள்ளை ஊழியஞ்செய்வதுபோல, அவன் என்னுடனேகூட சுவிசேஷத்தினிமித்தம் ஊழியஞ்செய்தானென்று அதனுடைய உத்தமகுணத்தை அறிந்திருக்கிறீர்கள்.” (பிலிப்பியர் 2:19-22) மதரீதியில் பிளவுபட்ட வீடுகளிலிருக்கும் பல பையன்களும் பெண்பிள்ளைகளும் இன்று துணிவுடன் உண்மைக் கிறிஸ்தவத்தைத் தழுவியிருக்கின்றனர். தீமோத்தேயுவைப்போல அவர்கள் தங்களுக்குத் தாங்களே சான்று கொடுக்கின்றனர், மேலும் அவர்கள் யெகோவாவின் அமைப்பின் பாகமாக இருக்கிறார்கள் என்பதைப் பற்றி நாம் எவ்வளவு சந்தோஷப்படுகிறோம்!
‘நம் கழுத்துக்களைக் கொடுக்க’ தைரியம்
13. ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் எந்த வழியில் தைரியத்தைக் காட்டினர்?
13 ஆக்கில்லாவும் அவருடைய மனைவி பிரிஸ்கில்லாளும் (பிரிஸ்கா), உடன் விசுவாசிக்காகத் தைரியமாய் ‘தங்களுடைய கழுத்துக்களைக் கொடுப்பவர்களாக’ இருப்பதில் முன்மாதிரி வைத்தனர். அவர்கள் பவுலை தங்களுடைய வீட்டில் ஏற்றுக்கொண்டனர்; அவரோடு கூடாரம்பண்ணுகிற வேலையைச் செய்தனர்; கொரிந்துவில் புதிய சபையை உண்டாக்குவதற்கு அவருக்கு உதவிசெய்தனர். (அப்போஸ்தலர் 18:1-4) அவர்களுடைய 15 வருட சிநேகத்தில், அவர்கள் தங்களுடைய உயிர்களையும் மறைமுகமான வகையில் அவருக்காக இடருதலுக்குட்பட அனுமதித்தனர். அவர் ரோமில் இருந்த கிறிஸ்தவர்களிடம் பின்வருமாறு சொன்னபோது, அவர்கள் அங்கு இருந்தனர்: “கிறிஸ்து இயேசுவுக்குள் என் வேலையாட்களாகிய பிரிஸ்கில்லாளையும் ஆக்கில்லாவையும் வாழ்த்துங்கள். அவர்கள் என் பிராணனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள்; அவர்களைப்பற்றி நான்மாத்திரமல்ல, புறஜாதியாரில் உண்டான சபையாரெல்லாரும் நன்றியறிதலுள்ளவர்களாயிருக்கிறார்கள்.”—ரோமர் 16:3, 4.
14. பவுலுக்காக ஆக்கில்லாவும் பிரிஸ்காளும் தங்களுடைய கழுத்துக்களைக் கொடுத்ததன்மூலம், எந்தக் கட்டளைக்கு இசைவாக நடந்துகொண்டிருந்தனர்?
14 பவுலுக்காக ஆக்கில்லாவும் பிரிஸ்காளும் தங்களுடைய கழுத்துக்களைக் கொடுத்ததன்மூலம், அவர்கள் இயேசுவின் பின்வரும் வார்த்தைகளின்படி செய்தனர்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.” (யோவான் 13:34) இந்தக் கட்டளை “புதிதான” ஒன்று, ஏனென்றால் அது ஒரு நபர் தன் அயலானுக்கு அவரைப்போலவே அன்புகாட்டுவது என்ற மோசேயினுடைய நியாயப்பிரமாணத்தின் தேவையைவிட அதிகத்தை உட்படுத்துகிறது. (லேவியராகமம் 19:18) இது இயேசு செய்ததுபோல, மற்றொருவருக்காக தன் ஜீவனையும் கொடுக்கும் அளவிற்குப் போகும் சுய தியாகம் செய்யும் அன்பைத் தேவைப்படுத்தியது. பொ.ச. இரண்டாவது மற்றும் மூன்றாவது நூற்றாண்டுகளைச் சேர்ந்த எழுத்தாளர் டெர்டெல்யன் இவ்வாறு எழுதியபோது கிறிஸ்தவர்களைப் பற்றிய உலகப் பிரகாரமான மக்களின் வார்த்தைகளை மேற்கோள் காட்டினார்: “அவர்கள் சொல்கிறார்கள், ‘பாருங்கள் அவர்கள் ஒருவரையொருவர் எவ்வளவாய் நேசிக்கிறார்கள் . . . ஒருவருக்காக ஒருவர் சாகவும்கூட அவர்கள் எந்தளவுக்குத் தயாராக இருக்கிறார்கள்.’” (அப்பாலஜி, அதிகாரம் XXXIX, 7) உடன் விசுவாசிகளைக் காட்டிக்கொடுத்து எதிரிகளின் கரங்களில் அவர்களை மிருகத்தனமான கொடுமைக்கு அல்லது மரணத்துக்கு ஆளாகும்படி செய்வதைத் தவிர்ப்பதற்காக, விசேஷமாகத் துன்புறுத்தலின் மத்தியில், நாம் தைரியமாக நம்முடைய உயிர்களையும் பணயம்வைத்து சகோதர அன்பைக் காட்டுவதற்குக் கடமைப்பட்டிருப்போமாக.—1 யோவான் 3:16.
தைரியம் சந்தோஷத்தைக் கொண்டுவருகிறது
15, 16. அப்போஸ்தலர் 16-ம் அதிகாரத்தில் காட்டியிருக்கிறபடி, தைரியமும் சந்தோஷமும் எப்படிச் சம்பந்தப்படுத்தப்படலாம்?
15 சோதனைகளின்கீழ் தைரியமாய் இருப்பது சந்தோஷத்தைக் கொண்டுவரும் என்பதற்குப் பவுலும் சீலாவும் சான்றளிக்கின்றனர். பிலிப்பி நகரத்தில் இருந்த அதிகாரிகளின் கட்டளையின்படி அவர்கள் வெளிப்படையாகத் தடிகளால் அடிக்கப்பட்டு, சிறையின் துளைகளுள்ள மரச்சட்டங்களில் (prison stocks) போடப்பட்டனர். ஆனாலும், அவர்கள் பயத்தினால் சோர்ந்துபோய் கோழையாகவில்லை. அவர்களுடைய கஷ்டமான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், அவர்கள் கடவுள் கொடுத்த தைரியத்தையும், உண்மையுள்ள கிறிஸ்தவர்களுக்கு அது கொண்டுவரும் சந்தோஷத்தையும் இன்னும் உடையவர்களாக இருந்தனர்.
16 ஏறக்குறைய நடு ராத்திரியில், பவுலும் சீலாவும் ஜெபம்செய்து, கடவுளைப் பாடி போற்றிக் கொண்டிருந்தனர். திடீரென்று, ஒரு பூமியதிர்ச்சி சிறையைக் குலுக்கியது; அவர்களுடைய கட்டுகளெல்லாம் கழன்றுபோயின; கதவுகள் படாரென திறவுண்டன. திகிலடைந்த சிறைக்காவலனுக்கும் அவருடைய வீட்டாருக்கும் ஒரு துணிவான சாட்சிக்கொடுக்கப்பட்டது; இது யெகோவாவின் ஊழியர்களாக அவர்கள் முழுக்காட்டுதல் எடுப்பதற்கு வழிநடத்தியது. அவர் தாமே ‘தன் வீட்டார் அனைவரோடுங்கூடத் தேவனிடத்தில் விசுவாசமுள்ளவனாகி மனமகிழ்ச்சியாயிருந்தார்.’ (அப்போஸ்தலர் 16:16-34) இது பவுலுக்கும் சீலாவுக்கும் எப்பேர்ப்பட்ட சந்தோஷத்தைக் கொண்டுவந்திருக்க வேண்டும்! தைரியத்தின் இந்த முன்மாதிரியையும் மற்ற முன்மாதிரிகளையும் கலந்தாலோசித்தப் பின், யெகோவாவின் ஊழியர்களாக நாம் தைரியமாக நிலைத்திருக்க முடிவது எப்படி?
தொடர்ந்து நல்ல தைரியத்தோடு இருங்கள்
17. சங்கீதம் 27-ல் காட்டியுள்ளபடி, யெகோவாவுக்குக் காத்திருத்தல் தைரியத்தோடு எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது?
17 யெகோவாவுக்குக் காத்திருத்தல் நாம் தைரியமாக நிலைத்திருப்பதற்கு உதவிசெய்யும். தாவீது பாடினார்: “யெகோவாவுக்குக் காத்திரு; தைரியமாயிரு, உன் இருதயம் ஸ்திரப்படட்டும். ஆம், யெகோவாவுக்கே காத்திரு.” (சங்கீதம் 27:14, NW) தாவீது தன் வாழ்வின் “அடைக்கலம்” யெகோவா என்று நம்பியிருந்ததாக சங்கீதம் 27 காண்பிக்கிறது. (வசனம் 1) கடந்த காலங்களில் தாவீதின் பகைவர்களோடு கடவுள் எப்படி நடந்துகொண்டார் என்பதைப் பார்த்திருந்தது அவருக்குத் தைரியத்தைக் கொடுத்தது. (வசனம் 2, 3) யெகோவாவின் வணக்க மையத்திற்குப் போற்றுதலைக் காண்பிப்பது மற்றொரு அம்சமாக இருந்தது. (வசனம் 4) யெகோவாவின் உதவி, பாதுகாப்பு, மற்றும் மீட்பு ஆகியவற்றிலும் நம்பிக்கையோடிருந்தது தாவீதின் தைரியத்தைக் கூட்டியது. (வசனங்கள் 5-10) யெகோவாவினுடைய நீதியான வழியின் நியமங்களைக் குறித்த இடைவிடாத போதனையும் உதவியாக இருந்தது. (வசனம் 11) அவருடைய பகைவர்களிடமிருந்து விடுவிப்பார் என்ற நம்பகமான ஜெபமும், இதோடு விசுவாசமும் காத்திருத்தலும் இணைந்து தாவீது தைரியமாக இருப்பதற்கு உதவிசெய்தது. (வசனங்கள் 12-14) நம்முடைய தைரியத்தை இப்படிப்பட்ட வழிகளில் நாம் அதிகரிக்கலாம்; இதன்மூலம் நாம் உண்மையிலேயே ‘யெகோவாவுக்குக் காத்திருக்கிறோம்’ என்பதைக் காண்பிக்கிறோம்.
18. (அ) யெகோவாவை வணங்கும் உடன் வணக்கத்தாரோடு ஒழுங்காகக் கூட்டுறவுகொள்வது, தைரியமாக நிலைத்திருப்பதற்கு நமக்கு உதவிசெய்யும் என்று எது காண்பிக்கிறது? (ஆ) தைரியத்தை அதிகரிப்பதில் கிறிஸ்தவக் கூட்டங்கள் எந்தப் பாகத்தை வகிக்கின்றன?
18 யெகோவாவை வணங்கும் உடன் வணக்கத்தாரோடு ஒழுங்காகக் கூட்டுறவுகொள்வதும் நாம் தைரியமாக நிலைத்திருப்பதற்கு உதவிசெய்யும். பவுல் ராயனிடம் முறையிட்டுவிட்டு, ரோமுக்குப் பிரயாணப்பட்டுப் போய்க்கொண்டிருந்தபோது, உடன் விசுவாசிகள் அப்பியு சந்தையிலும் மூன்று சத்திரத்திலும் அவரைச் சந்தித்தனர். “அவர்களைப் பவுல் கண்டு, தேவனை ஸ்தோத்திரித்துத் தைரியமடைந்தான்,” என்று பதிவு சொல்கிறது. (அப்போஸ்தலர் 28:15) நாம் ஒழுங்காகக் கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு ஆஜராவதன்மூலம், பவுலின் புத்திமதியைப் பின்பற்றுகிறோம்: “அன்பு செய்யவும் நற்பணிகள் புரியவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்பக் கருத்தாயிருப்போமாக. சிலர் வழக்கமாக நம் கூட்டங்களுக்கு வருவதில்லை. அதைப்போல் நாமும் செய்யலாகாது. ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுவோமாக. இறுதிநாள் எவ்வளவுக்கு அருகிலிருப்பதாகக் காணப்படுகிறதோ அவ்வளவுக்கு உற்சாகமாக ஊக்கமூட்டுங்கள்.” (எபிரெயர் 10:24, 25, தமிழ்க் கத்தோலிக்க பைபிள்) ஒருவருக்கொருவர் உற்சாகமாக ஊக்கமூட்டுவது என்றால் என்ன? உற்சாகமாக ஊக்கமூட்டுவது என்பது, “தைரியத்தினால், ஆவியினால், அல்லது நம்பிக்கையினால் ஏவப்படுவதை” குறிக்கிறது. (வெப்ஸ்டரின் ஒன்பதாம் புதிய கல்லூரி அகராதி) மற்ற கிறிஸ்தவர்களைத் தைரியத்தோடிருக்க ஏவுவதற்கு அநேகத்தை நாம் செய்யலாம்; அதைப்போலவே அவர்களுடைய உற்சாகம் நம்மில் இந்தக் குணத்தை வளர்க்கும்.
19. நாம் தைரியமாக நிலைத்திருப்பதோடு வேதவசனங்களும் கிறிஸ்தவப் பிரசுரங்களும் எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கின்றன?
19 நாம் தைரியமாக நிலைத்திருப்பதற்குக் கடவுளுடைய வார்த்தையை ஒழுங்காகப் படிக்கவும் அதன் ஆலோசனைகளை நம் வாழ்க்கையில் பொருத்திப் பிரயோகிக்கவும் வேண்டும். (உபாகமம் 31:9-12; யோசுவா 1:8) நம்முடைய ஒழுங்கான படிப்பு வேதவசனங்களை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவப் பிரசுரங்களை உட்படுத்தவேண்டும். ஏனென்றால், இவ்வாறு கொடுக்கப்படும் சரியான ஆலோசனை, கடவுள் கொடுக்கும் தைரியத்தினால் விசுவாசத்தின் சோதனைகளை எதிர்ப்படுவதற்கு நமக்கு உதவும். பைபிள் பதிவுகளிலிருந்து, யெகோவாவின் ஊழியர்கள் பல்வேறுபட்ட சூழ்நிலைகளில் எவ்வாறு தைரியமாக இருந்திருக்கிறார்கள் என்பதை நாம் கலந்து ஆராய்ந்தோம். இப்போது, அப்படிப்பட்ட தகவல் எப்படி நமக்கு உதவிசெய்யும் என்பதை நாம் ஒருவேளை அறியாமல் இருக்கலாம். ஆனால் கடவுளுடைய வார்த்தைக்கு வல்லமை இருக்கிறது. நாம் அதிலிருந்து எதைக் கற்றுக்கொள்கிறோமோ அது எப்போதும் நமக்குப் பிரயோஜனமானதாய் இருக்கும். (எபிரெயர் 4:12) உதாரணமாக, நம் ஊழியத்தை மனிதனுக்குரிய பயம் பாதிக்க ஆரம்பித்தால், நாம் ஏனோக்கு எப்படிக் கடவுளுடைய செய்தியை தேவபக்தியற்றவர்களுக்குக் கொடுக்க தைரியம் உடையவராய் இருந்தார் என்பதை ஞாபகத்திற்கு கொண்டுவரலாம்.—யூதா 14, 15.
20. நாம் யெகோவாவின் ஊழியர்களாகத் தைரியமாக நிலைத்திருப்பதற்கு ஜெபம் அவசியம் என்று ஏன் சொல்லப்படலாம்?
20 யெகோவாவின் ஊழியர்களாகத் தைரியத்தோடு நிலைத்திருப்பதற்கு, நாம் ஜெபத்தில் உறுதியாய்த் தரித்திருக்கவேண்டும். (ரோமர் 12:12) இயேசு தம்முடைய சோதனைகளைத் தைரியமாகச் சகித்தார்; ஏனென்றால் அவர் ‘தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டார்.’ (எபிரெயர் 5:7) உலகப்பிரகாரமான கோழைகள் உயிர்த்தெழுதல் இல்லாத “இரண்டாம் மரணத்தை” அடையும்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளனர்; நாம் ஜெபத்தில் கடவுளோடு நெருங்கி இருப்பதன்மூலம் அவர்களைப்போல் இல்லாதிருப்போம். (வெளிப்படுத்துதல் 21:8) கடவுளுடைய புதிய உலகத்தில் தெய்வீக பாதுகாப்பும் ஜீவனும் அவருடைய தைரியமான ஊழியர்களுக்காக இருக்கின்றன.
21. உண்மைமாறாத யெகோவாவின் சாட்சிகள் ஏன் தைரியமாக இருக்கலாம்?
21 யெகோவாவின் உண்மைமாறாத சாட்சிகளாக, நாம் பேய்த்தன மற்றும் மனித எதிரிகளுக்குப் பயப்படவேண்டிய அவசியம் இல்லை; ஏனென்றால் நமக்குக் கடவுளின் ஆறுதலும், உலகத்தை ஜெயித்தவராக இயேசுவின் தைரியமான முன்மாதிரியும் இருக்கின்றன. யெகோவாவின் மக்களோடு ஆவிக்குரிய கட்டியெழுப்பும் கூட்டுறவு இதைப்போலவே நாம் தைரியமாய் இருப்பதற்கு உதவிசெய்கிறது. வேதவசனங்களின் மற்றும் கிறிஸ்தவப் பிரசுரங்களின் வழிநடத்துதலினாலும் ஆலோசனையினாலும்கூட நம் தைரியம் கட்டியெழுப்பப்படுகிறது. மேலும் கடவுளின் கடந்த கால ஊழியர்களின் பைபிள் பதிவுகள் அவருடைய வழிகளில் தைரியமாக நடப்பதற்கு உதவிசெய்கின்றன. எனவே, இந்தக் கடினமான நாள்களில், பரிசுத்த சேவையிலே துணிவுடன் முந்திக்கொண்டு செல்வோமாக. ஆம், யெகோவாவின் மக்கள் அனைவரும் நல்ல தைரியத்தோடு இருப்பார்களாக!
நீங்கள் எப்படிப் பதிலளிப்பீர்கள்?
◻ இயேசுவின் முன்மாதிரி நம்மை எப்படித் தைரியத்தால் நிரப்பும்?
◻ இயேசுவும் அவருடைய சீஷர்களும் தொடர்ந்து பிரசங்கிப்பதற்கு எது தைரியத்தைக் கொடுத்தது?
◻ யெகோவாவின் பக்கமாக நிலைநிற்கை எடுப்பதற்கு யூதர்களுக்கும் புறமதத்தினருக்கும் தைரியம் ஏன் தேவைப்பட்டது?
◻ தைரியத்திற்கு என்ன முன்மாதிரிகளை ஐனிக்கேயாளும், தீமோத்தேயுவும் வைத்தனர்?
◻ துன்புறுத்தலின் மத்தியிலும் தைரியம் சந்தோஷத்தைக் கொடுக்கிறது என்பதற்கு என்ன சான்று இருக்கிறது?
[பக்கம் 18-ன் படம்]
இயேசுவைப்போல, நாம் வசனங்களை மேற்கோள்காட்டி, பொருத்திப் பிரயோகித்தால் சோதனையைத் தைரியமாக எதிர்த்துச் சமாளிக்கலாம்