கிறிஸ்தவக் குடும்பம் காரியங்களை ஒன்றாகச்சேர்ந்து செய்கிறது
“சகோதரரே, நீங்களெல்லாரும் . . . ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று, . . . உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.” —1 கொரிந்தியர் 1:10.
1. அநேக குடும்பங்களில் ஒற்றுமையைக் குறித்ததில் என்ன நிலைமை இருக்கிறது?
உங்களுடைய குடும்பம் ஒற்றுமையான ஒன்றா? அல்லது ஒவ்வொருவரும் அவன் அல்லது அவளுடைய தன்னிச்சையான போக்கில் செல்வதாகத் தோன்றுகிறதா? நீங்கள் ஒன்றாகச்சேர்ந்து காரியங்களைச் செய்கிறீர்களா? அல்லது நீங்கள் அனைவரும் வெகு அரிதாகவே ஒரே இடத்தில் ஒரே சமயத்தில் இருக்கிறீர்களா? “குடும்பம்” என்ற வார்த்தைதானே ஓர் ஒன்றுபட்ட வீட்டாரைக் குறிக்கிறது.a இருந்தாலும், எல்லா குடும்பங்களும் ஒன்றுபட்டவையாக இல்லை. பிரிட்டிஷ் விரிவுரையாளர் ஒருவர், பின்வருமாறு சொல்லும்வரையாகச் சென்றார்: “நல்ல சமுதாயத்தின் அடிப்படையாக இருப்பதற்கு மாறாக, குடும்பம் . . . நம்முடைய எல்லா அதிருப்திகளுக்கும் காரணமாக இருக்கிறது.” உங்களுடைய குடும்பத்தைக் குறித்ததில் இது உண்மையாக இருக்கிறதா? அவ்வாறிருந்தால், அது அப்படி இருக்க வேண்டுமா?
2. எந்தப் பைபிள் பாத்திரங்கள் ஒரு நல்ல குடும்பத்திலிருந்து வருவதற்கு அத்தாட்சி பகருகின்றனர்?
2 ஒரு குடும்பத்தின் ஒற்றுமை அல்லது ஒற்றுமையின்மை, பொதுவாக அது பெற்றோர் இருவரால் அல்லது ஒருவரால் தலைமை ஏற்று நடத்தப்படுவதைச் சார்ந்ததாய் இருக்கிறது. பைபிள் காலங்களில், ஒன்றாகச்சேர்ந்து வணங்கிய ஒன்றுபட்ட குடும்பங்கள் யெகோவாவின் ஆசீர்வாதத்தை அனுபவித்தன. இது பண்டைய இஸ்ரவேலில் உண்மையாக இருந்தது; அங்கு யெப்தாவின் மகள், சிம்சோன், சாமுவேல் ஆகியோர் ஒவ்வொருவரும் வெவ்வேறு வழிகளில் தாங்கள் ஒரு தேவபக்தியுள்ள குடும்பத்திலிருந்து வந்ததற்கு அத்தாட்சியைக் கொடுத்தனர். (நியாயாதிபதிகள் 11:30-40; 13:2-25; 1 சாமுவேல் 1:21-23; 2:18-21) ஆரம்ப கிறிஸ்தவர்களின் காலங்களில், பவுலின் சில மிஷனரி பயணங்களில் பவுலுடைய உண்மை கூட்டாளியான தீமோத்தேயு, அவருடைய பாட்டியாகிய லோவிசாள் மற்றும் அவருடைய தாயாகிய ஐனிக்கேயாள் ஆகியோரால் எபிரெய வேத எழுத்துக்களின் அறிவுடன் வளர்க்கப்பட்டார். அவர் என்னே ஒரு மேம்பட்ட சீஷனாகவும் மிஷனரியாகவும் ஆனார்!—அப்போஸ்தலர் 16:1, 2; 2 தீமோத்தேயு 1:5; 3:14, 15; இதையும் பார்க்கவும்: அப்போஸ்தலர் 21:8, 9.
ஏன் காரியங்களை ஒன்றாகச்சேர்ந்து செய்ய வேண்டும்?
3, 4. (அ) ஓர் ஒன்றுபட்ட குடும்பத்தில் என்ன குணாதிசயங்கள் தெளிவாகத் தெரியவேண்டும்? (ஆ) ஒரு வீடு எப்படி வெறும் ஒரு குடியிருப்பிடத்தைவிட அதிகத்தைக் குறிக்கும்?
3 குடும்பங்கள் காரியங்களை ஒன்றாகச்சேர்ந்து செய்வது ஏன் பிரயோஜனமுள்ளதாய் இருக்கிறது? ஏனென்றால் அது ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளுதலையும் மரியாதையையும் வளர்க்கிறது. ஒருவரிலிருந்து ஒருவர் தூரத்தை ஏற்படுத்துவதற்கு மாறாக, நாம் நெருக்கமாக இருந்து ஆதரவளிப்போம். குடும்ப உறவுகள் (Family Relations) என்ற பத்திரிகையிலுள்ள சமீபத்திய கட்டுரை ஒன்று குறிப்பிட்டது: “‘உறுதியான குடும்பங்களின்’ தனிப்பட்ட பண்புகளை விளக்கக்கூடிய ஒரு தெளிவான காட்சி வெளித்தோன்றியிருக்கிறது. அப்படிப்பட்ட குணாதிசயங்கள், ஒருவரிடமொருவர் பொறுப்புடையவராகவும், ஒருவருக்கொருவர் போற்றுதலுடையவராயும் இருப்பதையும், நெருங்கிய உணர்ச்சியையும், நல்ல பேச்சுத்தொடர்பையும், பிரச்னைக்குத் தீர்வுகாணும் திறமையையும், ஒரு பலமான ஆவிக்குரிய நோக்கையும் உட்படுத்துகின்றன.”
4 இந்தக் குணங்கள் ஒரு குடும்பத்தில் இருக்குமானால், எரிபொருள் நிரப்புவதற்காகச் செல்லும் ஒரு பெட்ரோல் நிலையத்தைப் போல் வீடு இனிமேலும் இருக்காது. வெறும் ஒரு குடியிருப்பிடத்தைவிட அது அதிகத்தைக் குறிக்கிறது. குடும்ப அங்கத்தினர்களைக் கவர்ந்திழுக்கும் ஓர் அழைப்பிடமாக அது இருக்கிறது. கனிவு மற்றும் பாசம், பரிவு, புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றின் ஒரு புகலிடமாக அது இருக்கிறது. (நீதிமொழிகள் 4:3, 4) குடும்ப ஒற்றுமை காணப்படும் ஒரு கூடாக இருக்குமேயொழிய, பூசலும் பிரிவும் இருக்கும் ஒரு தேள் வளையாக அது இருக்காது. ஆனால் இது எப்படி அடையப்படுகிறது?
குடும்பப் படிப்பை ஒன்றாகச்சேர்ந்து செய்தல்
5. உண்மையான வணக்கத்தைக் கற்றுக்கொள்வதற்காக நாம் எதைப் பயன்படுத்துகிறோம்?
5 யெகோவாவை உண்மையாக வணங்குதல், நம்முடைய நியாயவாதத் திறமை, அல்லது ‘நியாயத்தன்மை’யைப் பயன்படுத்துவதன்மூலம் கற்றுக்கொள்ளப்படுகிறது. (ரோமர் 12:1, NW) நாவன்மைமிக்க பிரசங்கங்கள் மற்றும் திறம்பட்ட டிவி ஊழியங்களால் எழுப்பப்பட்டவற்றைப்போன்ற அப்போதைய உணர்ச்சி எழுச்சிகளால் நம்முடைய நடத்தை ஆட்கொள்ளப்படக் கூடாது. மாறாக, பைபிளையும் ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையால்’ கொடுக்கப்பட்ட பைபிள் பிரசுரங்களையும் நாம் ஒழுங்காகப் படிப்பதாலும் தியானிப்பதாலும் தூண்டப்படுகிறோம். (மத்தேயு 24:45) எழும்பக்கூடிய எந்தச் சூழ்நிலையிலும் அல்லது சோதனையிலும் கிறிஸ்துவின் மனநிலையைப் பெறுவதன் விளைவே நம்முடைய கிறிஸ்தவச் செயல்களாகும். அந்த விஷயத்தில் யெகோவா நம்முடைய பெரிய போதிப்பாளராய் இருக்கிறார்.—சங்கீதம் 25:9; ஏசாயா 54:13; 1 கொரிந்தியர் 2:16.
6. குடும்பப் படிப்பைப்பற்றி என்ன உலகளாவிய உதாரணத்தை நாம் கொண்டிருக்கிறோம்?
6 ஒவ்வொரு கிறிஸ்தவ குடும்பத்தின் ஆவிக்குரிய தன்மைக்கும் குடும்ப பைபிள் படிப்பு ஓர் அத்தியாவசிய பங்கை வகிக்கிறது. நீங்கள் உங்களுடைய குடும்பப் படிப்பை எப்போது வைத்திருக்கிறீர்கள்? அது திட்டமிடப்படாமல் அல்லது கடைசிநேரத் தீர்மானிப்பிற்கு விடப்பட்டிருக்கிறதென்றால், அது ஒருவேளை நடத்தப்படுகிறதென்றாலும் அடிக்கடி செய்யப்படாமலேயே இருக்கிறது. குடும்பப் படிப்பை ஒன்றாகச்சேர்ந்து செய்வது ஒரு திட்டமிட்டு அமைக்கப்பட்ட ஒழுங்கான அட்டவணையைத் தேவைப்படுத்துகிறது. அப்போது எந்த நாள், எந்த மணிநேரத்தில் ஓர் ஆவிக்குரிய குடும்ப ஒன்றுகூடுதலை அனுபவிப்பதற்கு அவர்கள் எதிர்பார்க்கப்படுகிறார்கள் என்று எல்லாரும் அறிந்திருக்கிறார்கள். உலகளாவிய பெத்தேல் குடும்பத்தின் 12,000-ற்கும் மேற்பட்ட அங்கத்தினர்கள் தங்களுடைய குடும்பப் படிப்பு திங்கள்கிழமை மாலையில் இருக்கிறது என்று அறிந்திருக்கின்றனர். பசிபிக் தீவுகள் மற்றும் நியூஜீலாந்து, பின்னர் தொடர்ந்து ஆஸ்திரேலியா, ஜப்பான், தைவான், ஹாங்காங், அதைக் கடந்து ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, முடிவாக அமெரிக்காக்கள் ஆகிய இடங்களில், அந்த நாளின் முடிவில் எல்லாரும் அதே படிப்பில் பங்குகொள்கின்றனர் என்பதை நினைத்துப்பார்ப்பது, இந்தப் பெத்தேல் விருப்பார்வ ஊழியர்களுக்கு எவ்வளவு மனக்கிளர்ச்சி உண்டுபண்ணுவதாய் இருக்கிறது. ஆயிரக்கணக்கான கிலோமீட்டராலும் பல மொழிகளாலும் பிரிக்கப்பட்டிருந்தாலும், இந்தக் குடும்பப் படிப்பு, பெத்தேல் குடும்ப அங்கத்தினரிடையே ஓர் ஒற்றுமை உணர்ச்சியைத் தூண்டுகிறது. ஒரு சிறிய அளவில், உங்களுடைய குடும்ப படிப்பின்மூலமாக நீங்கள் இதே உணர்வை வளர்க்கலாம்.—1 பேதுரு 2:17; 5:9.
7. பேதுருவின்படி, சத்திய வார்த்தையை நாம் எவ்வாறு கருதவேண்டும்?
7 அப்போஸ்தலன் பேதுரு நமக்கு ஆலோசனை கூறுகிறார்: “கர்த்தர் தயையுள்ளவரென்பதை நீங்கள் ருசிபார்த்ததுண்டானால், . . . நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.” (1 பேதுரு 2:1, 3) அந்த வார்த்தைகளைக் கொண்டு பேதுரு என்னே ஓர் அழகான கருத்தை வெளிக்கொண்டு வருகிறார்! அவர் எப்பிபாத்தீஸேட் என்ற கிரேக்க வினைச்சொல்லை பயன்படுத்தினார்; கிரேக்க புதிய ஏற்பாட்டிற்கான மொழி உதவி (Linguistic Key to the Greek New Testament) என்பதன்படி, அது “ஏங்குதல், ஆசைப்படுதல், மிகவும் விரும்புதல்,” என அர்த்தங்கொள்ளும் ஒரு வார்த்தையிலிருந்து வருகிறது. அது மிகுந்த ஆசையைக் குறிக்கிறது. ஒரு குட்டி விலங்கு ஆவலுடன் தன் தாயின் முலைக்காம்பை எப்படித் தேடுகிறது என்றும் ஒரு மனித குழந்தை தன் தாயின் மார்பில் உண்ணும்போது எவ்வளவு திருப்தியாக உணருகிறது என்பதையும் கவனித்திருக்கிறீர்களா? சத்திய வார்த்தைக்காக அதே ஆசையை நாம் கொண்டிருக்கவேண்டும். கிரேக்க அறிஞர் உவில்லியம் பார்க்லே குறிப்பிட்டார்: “ஓர் உண்மையான கிறிஸ்தவனுக்கு, கடவுளுடைய வார்த்தையைப் படிப்பது ஒரு வேலையல்ல, ஆனால் ஒரு சந்தோஷமாக இருக்கிறது; ஏனென்றால், தன்னுடைய இருதயம் ஏங்கிக்காத்திருக்கும் ஊட்டச்சத்தை அதனுள் கண்டடையும் என்று அவன் அறிந்திருக்கிறான்.”
8. குடும்பப் படிப்பை நடத்துவதில் குடும்பத் தலைவன் என்ன சவாலை எதிர்ப்படுகிறார்?
8 குடும்பப் படிப்பு, குடும்பத் தலைவன்மேல் ஒரு பெரிய உத்தரவாதத்தை வைக்கிறது. அந்தப் படிப்பு எல்லாருக்கும் இன்பகரமானதாயும் எல்லாரும் பங்கெடுக்கக்கூடியதாகவும் இருக்கும்படியாக அவன் நிச்சயப்படுத்திக்கொள்ளவேண்டும். அந்தப் படிப்பு பெரியவர்களுக்கு மட்டுமே என்று குழந்தைகள் உணரக்கூடாது. அங்குச் சிந்திக்கப்படும் பொருளின் அளவைவிட படிப்பின் தரம் மிக முக்கியமானது. பைபிள் உயிருள்ளதாகச் செய்யுங்கள். பொருத்தமான இடங்களில், கலந்தாலோசிக்கப்பட்ட சம்பவங்கள் நடைபெற்ற பாலஸ்தீனா பகுதிகளையும் அம்சங்களையும் பிள்ளைகள் மனதில் கற்பனைசெய்து பார்ப்பதற்கு உதவி செய்யுங்கள். எல்லாரும் தனிப்பட்ட ஆராய்ச்சி செய்யவும் அதைக் குடும்பத்துடன் பகிர்ந்துகொள்ளவும் உற்சாகப்படுத்தப்பட வேண்டும். இந்த வழியில் பிள்ளைகளும் ‘யெகோவாவுடன் வளர்கின்றனர்.’—1 சாமுவேல் 2:20, 21.
ஊழியத்தை ஒன்றாகச்சேர்ந்து செய்தல்
9. பிரசங்கவேலை எவ்வாறு ஒரு மகிழ்ச்சிகரமான குடும்ப அனுபவமாக இருக்க முடியும்?
9 இயேசு சொன்னார்: “சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் முந்திப் பிரசங்கிக்கப்படவேண்டும்.” (மாற்கு 13:10) அந்த வார்த்தைகள் மனச்சாட்சியின்படி செயல்படுகிற ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும்—சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி, கடவுளுடைய ராஜ்ய ஆட்சியைப்பற்றிய நற்செய்தியை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளும்படி—ஒரு நியமிப்பைக் கொடுக்கிறது. இதை ஒன்றாகச்சேர்ந்து ஒரு குடும்பமாகச் செய்வது உற்சாகமூட்டும் ஒரு சந்தோஷமான அனுபவமாக இருக்க முடியும். நற்செய்தியைத் தங்களுடைய பிள்ளைகள் அளிக்கும்விதத்தில், தாய்தகப்பன்மார் பெருமையடைகின்றனர். பொதுப்படையான பிரசங்க வேலையில் ஒவ்வொரு புதன்கிழமை பள்ளி நேரத்திற்குப் பின்னும் ஒவ்வொரு சனிக்கிழமை காலையும் தங்களுடைய பிள்ளைகளுடன் சேர்ந்து செல்வதை அவர்கள் எப்போதும் பழக்கமாகக் கொண்டிருந்ததாக 15-லிருந்து 21 வயதுகளுக்கிடையில் மூன்று மகன்களைக் கொண்டிருந்த ஒரு தம்பதி சொல்கின்றனர். அந்தத் தகப்பன் சொன்னார்: “ஒவ்வொரு முறையும் நாங்கள் அவர்களுக்கு எதையாவது கற்றுக்கொடுத்தோம். அது ஒரு மகிழ்ச்சியான உற்சாகமூட்டும் அனுபவமாக இருக்கும்படி நாங்கள் நிச்சயப்படுத்திக்கொண்டோம்.”
10. ஊழியத்தில் பெற்றோர் எவ்வாறு தங்கள் பிள்ளைகளுக்கு உதவியளிக்கலாம்?
10 ஒன்றாகச்சேர்ந்து ஒரு குடும்பமாக வேலைசெய்வது அதிக பலன்தருவதாய் இருக்கலாம். சிலநேரங்களில், ஒரு பிள்ளையின் எளிய, ஆனால் உண்மையான அளிப்பிற்கு மக்கள் அதிக உடன்பாடான முறையில் பிரதிபலிக்கின்றனர். பின்னர், தேவைப்பட்டால் உதவும்படி அம்மா அல்லது அப்பா இருக்கிறார்கள். தங்களுடைய பிள்ளைகள் படிப்படியான பயிற்சியையும், இவ்வாறு ‘வெட்கப்படாத ஊழியக்காரர்களாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவர்களாயும்’ ஆவதை பெற்றோர் நிச்சயப்படுத்திக்கொள்ளலாம். இந்த முறையில் ஒன்றாகச்சேர்ந்து பிரசங்கிப்பது, பெற்றோர், ஊழியத்தில் தங்களுடைய பிள்ளையின் மனநிலையை, திறமையை, மற்றும் நல்ல நடத்தைகளையும் கவனிப்பதற்கு இடங்கொடுக்கிறது. ஓர் ஒழுங்கான வழக்கத்தைக் கொண்டிருப்பதன்மூலம், அவர்கள் பிள்ளையின் முன்னேற்றத்தைக் கண்டு, அவன் அல்லது அவளுடைய விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்கு நிலையான பயிற்சியையும் உற்சாகத்தையும் கொடுக்கின்றனர். அதேநேரத்தில், ஊழியத்தில் தங்களுடைய பெற்றோர் நல்ல மாதிரிகளாக இருப்பதைப் பிள்ளைகள் காண்கிறார்கள். இந்தக் கொடிய கடுமையான காலங்களில், ஓர் ஒன்றுபட்ட, அக்கறையுள்ள குடும்பமாக வேலைசெய்வது, அதிக குற்றச்செயல்கள் நிரம்பிய சுற்றுவட்டாரத்தில் ஓரளவு பாதுகாப்பையுங்கூட அளிக்கக்கூடும்.—2 தீமோத்தேயு 2:15; பிலிப்பியர் 3:16.
11. ஒரு பிள்ளையின் சத்தியத்திற்கான வைராக்கியத்தை எது எளிதில் குறைத்துவிடலாம்?
11 பெரியவர்களில் இரட்டை தராதரங்கள் இருப்பதைப் பிள்ளைகள் எளிதாகக் கண்டுபிடித்துவிடுகின்றனர். சத்தியத்திற்கும் வீட்டுக்கு வீடு ஊழியத்திற்கும் பெற்றோர் உண்மையான அன்பைக் காண்பிக்காவிட்டால், பிள்ளைகள் வைராக்கியமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது அரிதாகவே இருக்கிறது. இவ்வாறாக, உடல்நலமுடைய பெற்றோர் ஒருவருக்கு, பிள்ளைகளுடன் கொண்டிருக்கும் வாராந்தர பைபிள் படிப்பு மட்டுமே வெளி ஊழியமாக இருக்குமானால், அவர்கள் வளர்ந்து வரும்போது அவர் விரும்பத்தகாத விளைவுகளை அனுபவிப்பார்.—நீதிமொழிகள் 22:6; எபேசியர் 6:4.
12. எவ்வாறு சில குடும்பங்கள் யெகோவாவிடமிருந்து ஒரு விசேஷித்த ஆசீர்வாதத்தைப் பெற முடியும்?
12 ‘ஏகமனதுடன் சீர்பொருந்தியிருப்பதன்’ ஒரு நன்மை என்னவென்றால், ஓர் அங்கத்தினராவது சபையில் ஒரு முழுநேர ஊழியராகச் சேவிக்கும்படி ஒருவேளை அந்தக் குடும்பம் ஒத்துழைக்கக்கூடும். உலகமெங்கும் அநேக குடும்பங்கள் இதைச் செய்கின்றன; தங்களுடைய பயனியர் அங்கத்தினரின் அனுபவங்கள் மற்றும் அதிக திறம்பட்டத்தன்மையால் எல்லாரும் ஆசீர்வாதத்தைப் பெறுகின்றனர்.—2 கொரிந்தியர் 13:11; பிலிப்பியர் 2:1-4.
பிரச்னைகளைக் கையாளுவதில் ஒன்றுசேர்ந்திருத்தல்
13, 14. (அ) ஒரு குடும்பத்தின் ஒத்திசைவை என்ன நிலைமைகள் பாதிக்கலாம்? (ஆ) எவ்வாறு அநேக குடும்பப் பிரச்னைகள் தவிர்க்கப்படலாம்?
13 “நெருக்கடி” மற்றும் “ஆபத்து” இருக்கும் இந்தக் கடினமான காலங்களில் நாம் அனைவரும் அழுத்தத்தை அனுபவிக்கிறோம். (2 தீமோத்தேயு 3:1, ரிவைஸ்ட் ஸ்டான்டர்ட் வெர்ஷன்; ஃபிலிப்ஸ்) வேலையில், பள்ளியில், சுற்றுவட்டாரத்தில், வீட்டில்தானேயுங்கூட பிரச்னைகள் இருக்கின்றன. சிலர் உடல்நலக் குறைவை அல்லது நீடித்து நிலைத்திருக்கும் உணர்ச்சி சம்பந்தப்பட்ட பிரச்னைகளையும் அனுபவிக்கிறார்கள்; அவை சிலநேரங்களில் குடும்பத்தில் மன இறுக்கங்களுக்கும் மனத்தாங்கல்களுக்கும் வழிநடத்துகின்றன. அப்படிப்பட்ட நிலைமைகள் எப்படிக் கையாளப்படலாம்? ஒவ்வொருவரும் மனதிற்குள்ளே வைத்துக்கொண்டு பேசாமல் இருப்பதன் மூலமாகவா? ஒரே வீட்டைப் பகிர்ந்துகொண்டாலுங்கூட தன்னைத் தனிமைப்படுத்தி வைத்துக்கொள்வதன் மூலமாகவா? இல்லை. மாறாக, நம்முடைய கவலைகளைத் தெரியப்படுத்தி, உதவிக்காகக் கேட்கவேண்டும். இதற்கு ஓர் அன்பான குடும்பச் சூழலைவிட வேறு எந்த நல்ல இடம் இருக்க முடியும்?—1 கொரிந்தியர் 16:14; 1 பேதுரு 4:8.
14 எந்த மருத்துவரும் அறிந்திருக்கிறபடி, வருமுன் காப்பது நல்லது. குடும்பப் பிரச்னைகளைக் குறித்ததிலும் அதுவே உண்மையாக இருக்கிறது. பிரச்னைகள் கடுமையாகாமல் இருப்பதைத் திறந்து, மனம்விட்டுப் பேசும் கலந்தாலோசிப்புகள் அடிக்கடி தடுக்கின்றன. கடுமையான பிரச்னைகள் எழும்பினாலுங்கூட, அவற்றில் உட்பட்டிருக்கும் பைபிள் நியமங்களைக் குடும்பம் ஒன்றாகச்சேர்ந்து சிந்தித்தால் அவை கையாளப்பட முடியும். கொலோசெயர் 3:12-14-லுள்ள பவுலின் பின்வரும் வார்த்தைகளைப் பொருத்திப்பிரயோகிப்பதன்மூலம் பெரும்பாலும், ஒரு பூசல் ஒரு சுமூகமான உறவாக மாற்றப்படலாம்: “உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு; ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், . . . ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். . . . பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.”
பொழுதுபோக்கில் ஒன்றாகச்சேர்ந்திருத்தல்
15, 16. (அ) கிறிஸ்தவக் குடும்பங்களை என்ன குணாதிசயங்கள் வித்தியாசப்படுத்திக் காட்டவேண்டும்? (ஆ) சில மதங்கள் என்ன வகையான மக்களை உண்டுபண்ணுகின்றன, ஏன்?
15 யெகோவா ஒரு மகிழ்ச்சியான கடவுள்; மேலும் சத்தியம் என்பது ஒரு மகிழ்ச்சியான செய்தி—மனிதவர்க்கத்திற்கு நம்பிக்கைக்கான ஒன்று. மேலுமாக, ஆவியின் கனிகளில் ஒன்று சந்தோஷம். ஏதாவது ஒரு போட்டி விளையாட்டில் வெற்றி பெறும் விளையாட்டுவீரனின் சற்றுநேர பேருவகையிலிருந்து இந்தச் சந்தோஷம் மிகவும் வித்தியாசப்பட்டது. யெகோவாவுடன் ஒரு நெருங்கிய உறவை வளர்ப்பதன் விளைவாக இருதயத்தில் நிரம்பி வழியும், ஆழ்ந்து நிலைத்திருக்கும் ஒரு திருப்தி உணர்வாக அது இருக்கிறது. அது ஆவிக்குரிய மதிப்புகளையும் கட்டியெழுப்பும் உறவுகளையும் சார்ந்திருக்கும் சந்தோஷமாகும்.—கலாத்தியர் 5:22; 1 தீமோத்தேயு 1:11.
16 ஆகையால், யெகோவாவின் கிறிஸ்தவ சாட்சிகளாக, வாட்டங்கொண்டவர்களாக அல்லது நகைச்சுவையற்றவர்களாக இருப்பதற்கு நமக்கு எந்தக் காரணமும் இல்லை. சில மதங்கள் அத்தகைய மக்களைப் பிறப்பிக்கின்றன; ஏனென்றால் அவர்களுடைய விசுவாசம் எதிர்மறையான காரணக்கூறுகளை அழுத்திக் காண்பிக்கிறது. அவர்களுடைய போதகங்கள் சோர்வூட்டும், சந்தோஷமற்றவிதமான வணக்கத்தில் விளைவடைகின்றன; அவை பைபிளைச் சார்ந்ததாகவும் இல்லை, சமநிலையானவையாகவும் இல்லை. கடவுளுடைய சேவையில் அவை மகிழ்ச்சியான குடும்பங்களை உண்டுபண்ணுவதில்லை. பொழுதுபோக்கு மற்றும் ஓய்விற்கான தேவையை இயேசு கண்டார். உதாரணமாக, ஒரு சந்தர்ப்பத்தில், அவர் தம்முடைய சீஷர்களை “வனாந்தரமான ஓரிடத்தில் தனித்துச் சற்றே இளைப்பாறும்படி” செல்வதற்கு அழைத்தார்.—மாற்கு 6:30-32; சங்கீதம் 126:1-3; எரேமியா 30:18, 19.
17, 18. என்ன பொருத்தமான வழிகளில் கிறிஸ்தவக் குடும்பங்கள் ஓய்வை அனுபவிக்கவேண்டும்?
17 அதேவிதமாகவே, குடும்பங்கள் பொழுதுபோக்குகளை அனுபவிப்பதற்கு நேரம் தேவை. பெற்றோர் ஒருவர் தன்னுடைய பிள்ளைகளைக்குறித்துச் சொன்னார்: “நாங்கள் அனுபவித்துக் களிக்கக்கூடிய பல காரியங்களைச் சேர்ந்து செய்கிறோம்—கடற்கரைக்குச் செல்லுதல், பூங்காவில் பந்து விளையாடுதல், மலைகளில் ஒரு பிக்னிக்கை ஏற்பாடுசெய்தல். அவ்வப்போது, ஒன்றாகச்சேர்ந்து ஊழியம் செய்யும் ஒரு ‘பயனியர் நாளை’ கொண்டிருக்கிறோம்; பின்னர் ஒரு விசேஷித்த சாப்பாடுடன் அதைக் கொண்டாடுகிறோம்; ஒருவருக்கொருவர் பரிசுகளைக்கூட கொடுப்போம்.”
18 மிருகக்காட்சிச் சாலை, பொழுதுபோக்கு விளையாட்டுப் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், இன்னும் மற்ற கவர்ச்சியூட்டும் இடங்களுக்குக் குடும்பப் பயணங்கள் ஆகியவை, பெற்றோர் சிந்திப்பதற்கான மற்ற ஆலோசனைகள். காடுகளினூடே நடத்தல், பறவைகளைக் கவனித்தல், மற்றும் தோட்டமிடுதல் ஆகிய காரியங்கள் சந்தோஷமாகப் பகிர்ந்துகொள்ளக்கூடியவை. ஓர் இசைக் கருவியை இசைக்க அல்லது ஒரு நடைமுறையான விருப்பவேலையில் ஈடுபடுவதற்கும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை உற்சாகப்படுத்தலாம். நிச்சயமாகவே, சமநிலையான பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் விளையாடுவதற்கு நேரத்தை வைத்துக்கொள்வர். குடும்பங்கள் ஒன்றாகச்சேர்ந்து விளையாடினால், அவை ஒன்றாகச்சேர்ந்து நிலைத்திருக்கும் சாத்தியம் அதிகமாக இருக்கிறது!
19. என்ன நவீன போக்கு ஒரு குடும்பத்திற்கு கேடு விளைவிக்கலாம்?
19 பொழுதுபோக்கைக்குறித்ததில், இளைஞர் தங்கள் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து தங்களுடைய சொந்த மனச்சாய்வைப் பின்பற்ற வேண்டும் என்பதே நவீன போக்காக இருக்கிறது. ஓர் இளம் மனிதன் ஒரு விருப்பவேலையை அல்லது தனக்கு இஷ்டமான ஒரு பொழுதுபோக்கைக் கொண்டிருப்பதில் எந்தக் கேடும் இல்லையென்றாலும், அப்படிப்பட்ட அக்கறைகள் குடும்பத்தின் மீதிபேருடன் ஒரு நிரந்தரமான பிரிவை உண்டாக்க அனுமதிப்பது ஞானமானதாக இருக்காது. மாறாக, பவுல் குறிப்பிட்ட நியமத்தை நாம் பொருத்திப்பிரயோகிக்க விரும்புகிறோம்: “அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக.”—பிலிப்பியர் 2:4.
20. அசெம்பிளிகளும் மாநாடுகளும் எப்படி சந்தோஷமான சமயங்களாக இருக்க முடியும்?
20 மாநாடுகளிலும் அசெம்பிளிகளிலும் குடும்பங்கள் ஒன்றாகச்சேர்ந்து உட்கார்ந்திருப்பதைக் காண்பது நம்மெல்லாருக்கும் எவ்வளவு சந்தோஷமாய் இருக்கிறது! அந்த வழியில் வயதில் மூத்த பிள்ளைகள் இளையவர்களுக்கு அடிக்கடி உதவலாம். வளரிளமை பருவத்திலிருக்கும் சிலர் பின்வரிசைகளுக்குச் சென்று மாநாட்டு நிகழ்ச்சிக்குப் போதிய கவனம் செலுத்தாமலிருக்கும் மனப்போக்கையும் அப்படிப்பட்ட ஏற்பாடு தடுக்கிறது. எந்த வழியில் செல்ல வேண்டும், வழியில் எந்த இடங்களை பார்க்க வேண்டும், எங்கு தங்கவேண்டும் என்பவற்றைக் குடும்பத்துடன் ஆலோசித்தால் அசெம்பிளிகளுக்குப் போய் வரும் பிரயாணமும் சந்தோஷகரமானதாக இருக்கும். இயேசுவின் நாட்களில் குடும்பங்கள் ஒன்றாகச்சேர்ந்து எருசலேம் வரைக்கும் பயணம் செய்கையில் என்னே ஒரு கிளர்ச்சியூட்டும் சமயமாக இருந்திருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்!—லூக்கா 2:41, 42.
ஒன்றாகச்சேர்ந்திருத்தலின் ஆசீர்வாதங்கள்
21. (அ) திருமணத்தில் வெற்றிக்கு நாம் எவ்வாறு முயற்சி செய்யலாம்? (ஆ) ஒரு நிலையான திருமணத்திற்கு நான்கு நல்ல ஆலோசனைகள் யாவை?
21 வெற்றிகரமான திருமணங்களும் ஒன்றுபட்ட குடும்பங்களும் ஒருபோதும் எளிதாக அடையப்படவில்லை; அவை எதிர்பாராதவிதத்தில் அமைவதுமில்லை. சிலர் ‘எந்த முயற்சி எடுப்பதையும் நிறுத்திவிட்டு’ மணவிலக்கில் திருமணத்தை முடித்துவிட்டு, மறுபடியும் எல்லாவற்றையும் திரும்பத் துவங்குவதை எளிதாகக் காண்பதாகத் தோன்றுகிறது. இருப்பினும், பெரும்பாலும் அதே பிரச்னைகள் இரண்டாம் அல்லது மூன்றாம் திருமணத்திலும் எழும்புகின்றன. மிக நல்ல பதில் கிறிஸ்தவ பதிலாக இருக்கிறது: அன்பு மற்றும் மரியாதையைப் பற்றிய பைபிள் நியமங்களைப் பொருத்திப் பிரயோகிப்பதன்மூலம் வெற்றி பெற முயலுங்கள். ஒன்றுபட்ட குடும்பங்கள், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, தன்னலமற்றத்தன்மை ஆகியவற்றின் ஆவியைச் சார்ந்திருக்கின்றன. திருமணங்கள் நிலைத்திருப்பதற்கு ஒரு திருமண ஆலோசகர் ஓர் எளிய வாய்பாடை எடுத்துரைக்கிறார். அவர் எழுதினார்: “ஏறக்குறைய எல்லா நல்ல திருமணங்களிலும் காணப்படும் நான்கு முக்கிய கூறுகள் என்னவென்றால், செவிகொடுத்துக் கேட்பதற்கான மனமுவந்த தன்மை, மன்னிப்புக் கேட்பதற்கான திறமை, நிலையான உணர்ச்சிப்பூர்வ ஆதரவை அளிப்பதற்கான ஆற்றல், அன்புணர்வுடன் தொடுவதற்கான ஆசை ஆகியவை.” இந்தக் காரணங்கள் உண்மையிலேயே ஒரு திருமணம் நிலைத்திருக்க உதவுகின்றன, ஏனென்றால் அவை உறுதியான பைபிள் நியமங்களை அடிப்படையாகவும் கொண்டிருக்கின்றன.—1 கொரிந்தியர் 13:1-8; எபேசியர் 5:33; யாக்கோபு 1:19.
22. ஓர் ஒன்றுபட்ட குடும்பத்தைக் கொண்டிருப்பதன் சில நன்மைகள் யாவை?
22 நாம் பைபிள் ஆலோசனையைப் பின்பற்றினால், ஓர் ஒன்றுபட்ட குடும்பத்திற்கு உறுதியான அடிப்படையைக் கொண்டிருப்போம்; ஒன்றுபட்ட குடும்பங்கள் ஓர் ஒன்றுபட்ட, ஆவிக்குரிய பலம்வாய்ந்த சபைக்கு அஸ்திவாரமாக இருக்கின்றன. இவ்வாறு, நாம் ஒன்றுபட்டவர்களாக அதிகப்படியான துதியை யெகோவாவுக்குச் செலுத்துகையில் அவரிடமிருந்து அபரிமிதமான ஆசீர்வாதங்களைப் பெறுவோம்.
[அடிக்குறிப்புகள்]
a “குடும்பம், ல[த்தீன்] ஃபாமீலீயா என்பதிலிருந்து வருகிறது, ஆரம்[பத்தில்] ஒரு பெரிய வீட்டின் வேலையாட்கள் மற்றும் அடிமைகள், பின்னர் வீட்டு எஜமான், வீட்டுத் தலைவி, பிள்ளைகள்—மற்ற அலுவலர்கள்—சேர்ந்த அந்த வீட்டைத்தானே குறித்தது.”—மூலங்கள்—எரிக் பார்ட்ரிட்ஜ் என்பவரின் நவீன ஆங்கிலத்தின் ஒரு சிறிய அடிச்சொல்வரலாற்று அகராதி (A Short Etymological Dictionary of Modern English).
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ குடும்பங்கள் ஒன்றாகச்சேர்ந்து காரியங்களைச் செய்வது ஏன் பயனுள்ளதாய் இருக்கிறது?
◻ ஓர் ஒழுங்கான குடும்பப் படிப்பு ஏன் தேவையாக இருக்கிறது?
◻ பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து வெளி ஊழியத்தில் ஈடுபடுவது ஏன் நல்லது?
◻ குடும்ப வட்டாரத்தில் பிரச்னைகளைக் கலந்தாலோசிப்பது ஏன் உதவுகிறது?
◻ ஏன் கிறிஸ்தவக் குடும்பங்கள் வாட்டங்கொண்டதாகவும் சந்தோஷமற்றதாகவும் இருக்கக் கூடாது?
[பக்கம் 17-ன் படம்]
உங்கள் குடும்பம் ஒரு நாளில் ஒரு முறையாவது ஒன்றாகச்சேர்ந்து உணவை அனுபவிக்கிறதா?
[பக்கம் 18-ன் படம்]
குடும்பப் பயணங்கள் ஓய்வெடுக்க உதவுவதாயும் மகிழ்ச்சிகரமானதாயும் இருக்க வேண்டும்