கிறிஸ்தவக் குடும்பம் ஆவிக்குரிய காரியங்களை முதலிடத்தில் வைக்கிறது
‘நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கமுள்ளவர்களும், சகோதரசிநேகமுள்ளவர்களும், மனஉருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவர்களுமாயிருங்கள்.’—1 பேதுரு 3:8.
1. நம் எல்லாருக்கும் என்ன தெரிவு இருக்கிறது, நம்முடைய தெரிவு எப்படி நம்முடைய எதிர்காலத்தைப் பாதிக்கலாம்?
மனிதவர்க்கத்தின் மிகப் பழமையான அமைப்பில்—குடும்பத்தில்—மேற்காணும் வசனம் எவ்வளவு நன்றாகப் பொருந்துகிறது! இந்த அம்சங்களில் பெற்றோர் தலைமை வகிப்பது எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது! அவர்களுடைய உடன்பாடான குணங்களும் எதிர்மறையானவையும் பொதுவாக குழந்தைகளில் எடுத்துக்காட்டப்படும். இருப்பினும், தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பு, குடும்பத்திலுள்ள ஒவ்வொரு அங்கத்தினரிடமும் இருக்கிறது. கிறிஸ்தவர்களாக, நாம் ஆவிக்குரிய ஆட்களாக அல்லது மாம்சத்திற்குரிய ஆட்களாக இருப்பதற்கு தெரிவு செய்யலாம். நாம் கடவுளை மகிழ்விப்பதற்கு அல்லது மனவருத்தப்படச் செய்வதற்குத் தெரிவு செய்யலாம். அந்தத் தெரிவு ஓர் ஆசீர்வாதத்தில், நித்திய ஜீவனிலும் சமாதானத்திலும்—அல்லது ஒரு சாபத்தில், நித்திய மரணத்தில்—விளைவடையலாம்.—ஆதியாகமம் 4:1, 2; ரோமர் 8:5-8; கலாத்தியர் 5:19-23.
2. (அ) குடும்பத்திற்கான தன்னுடைய அக்கறையை பேதுரு எவ்வாறு காண்பித்தார்? (ஆ) ஆவிக்குரிய தன்மை என்றால் என்ன? (அடிக்குறிப்பைப் பார்க்கவும்.)
2 ஒன்று பேதுரு, 3-ம் அதிகாரம், 8-ம் வசனத்திலுள்ள அப்போஸ்தலனின் வார்த்தைகள், மனைவிகளுக்கும் கணவர்களுக்கும் கொடுக்கப்பட்ட சில நல்ல ஆலோசனையை உடனடியாகப் பின்தொடர்கிறது. கிறிஸ்தவக் குடும்பங்களின் நலனில் பேதுரு உண்மையிலேயே அக்கறை உள்ளவராய் இருந்தார். ஓர் ஒன்றுபட்ட, ஆதரவுள்ள குடும்பத்துக்குப் பலமான ஆவிக்குரிய தன்மையே முக்கியமானதாக இருக்கிறது என்பதை அவர் அறிந்திருந்தார்.a இவ்வாறாக, கணவர்களுக்கான தன்னுடைய ஆலோசனை அசட்டை செய்யப்பட்டால், கணவனுக்கும் யெகோவாவுக்கும் இடையில் ஓர் ஆவிக்குரிய தடையில் அது விளைவடையும் என்று அவர் 7-ம் வசனத்தில் குறிப்பிட்டார். அவன் தன்னுடைய மனைவியின் தேவைகளைப் புறக்கணித்தால் அல்லது தயவற்றத் தன்மையால் அவளை நெருக்கினால், அந்தக் கணவனின் ஜெபங்கள் தடைசெய்யப்படக்கூடும்.
கிறிஸ்து—ஆவிக்குரிய தன்மையின் ஒரு பரிபூரண முன்மாதிரி
3. கணவன்மாருக்கான கிறிஸ்துவின் மாதிரியை பவுல் எவ்வாறு சிறப்பித்துக் காண்பித்தார்?
3 ஒரு குடும்பத்தின் ஆவிக்குரிய தன்மை நல்ல முன்மாதிரியைச் சார்ந்திருக்கிறது. கணவன், கிறிஸ்தவத்தை நடைமுறையில் அப்பியாசிக்கும் ஒருவராக இருக்கும்போது, ஆவிக்குரிய தன்மைகளைக் காண்பிப்பதில் அவர் முன்மாதிரி வகிக்கிறார். விசுவாசத்திலிருக்கும் கணவனைக் கொண்டில்லாதபோது, பொதுவாகத் தாய் அந்த உத்தரவாதத்தை எடுத்துக்கொள்ள முயலுகிறாள். எவ்விதத்திலும், இயேசு கிறிஸ்து பின்பற்றுவதற்குப் பரிபூரண மாதிரியை அளிக்கிறார். அவருடைய நடத்தை, அவருடைய வார்த்தைகள், அவருடைய சிந்தனை ஆகியவை எப்போதும் கட்டியெழுப்புவதாகவும் புத்துணர்ச்சி அளிப்பதாகவும் இருந்தன. திரும்பவும் திரும்பவும், கிறிஸ்துவின் அன்பான மாதிரிக்கு அப்போஸ்தலன் பவுல் வாசிப்பவரின் கவனத்தைத் திருப்புகிறார். உதாரணமாக, அவர் குறிப்பிடுகிறார்: “கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார். புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, . . . தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.”—எபேசியர் 5:23, 25, 27, 29; மத்தேயு 11:28-30; கொலோசெயர் 3:19.
4. இயேசு ஆவிக்குரிய தன்மைக்கு என்ன மாதிரி வைத்தார்?
4 ஆவிக்குரிய தன்மைக்கும் அன்பு, தயவு, பரிவு ஆகியவை வெளிக்காட்டப்பட்ட தலைமைத்துவத்துக்கும் மிகச் சிறந்த மாதிரியாக இயேசு இருந்தார். அவர் சுய-தியாகம் செய்பவராக இருந்தார், கட்டுப்பாடற்ற சுய விருப்ப நுகர்வுடையவராக அல்ல. அவர் எப்போதும் தம்முடைய தகப்பனை மகிமைப்படுத்தி, அவருடைய தலைமைத்துவத்தை மதித்தார். அவர் தம்முடைய பிதாவிடமிருந்து பெற்ற வழிநடத்துதலைப் பின்பற்றினார்; ஆகவே அவரால் இவ்வாறு சொல்ல முடிந்தது: “நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.” “நான் என் சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன்.”—யோவான் 5:30; 8:28; 1 கொரிந்தியர் 11:3.
5. தம்மைப் பின்பற்றியவர்களின் தேவைகளைக் கவனிப்பதில், கணவன்மாருக்கு இயேசு என்ன முன்மாதிரி வைத்தார்?
5 இது கணவன்மாருக்கு எதை அர்த்தப்படுத்துகிறது? எப்போதும் தம்முடைய பிதாவிற்குக் கீழ்ப்படுத்திய கிறிஸ்துவின் மாதிரியையே அவர்கள் எல்லாக் காரியங்களிலும் பின்பற்ற வேண்டும் என்பதை அர்த்தப்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, பூமியிலுள்ள எல்லா உயிர் வகைகளுக்கும் யெகோவா உணவளித்ததுபோல, இயேசு தம்மைப் பின்பற்றியவர்களுக்கு உணவளித்தார். அவர்களுடைய அடிப்படையான பொருள்சம்பந்தப்பட்ட தேவைகளை அவர் புறக்கணிக்கவில்லை. அவர் 5,000 புருஷரையும் 4,000 பேரையும் போஷித்த அற்புதங்கள் அவருடைய அக்கறை மற்றும் பொறுப்புணர்ச்சிக்கு அத்தாட்சியாக உள்ளன. (மாற்கு 6:35-44; 8:1-9) அதேவிதமாகவே இன்று, பொறுப்புணர்ச்சியுள்ள குடும்பத் தலைவர்கள் தங்களுடைய வீட்டாரின் சரீரத் தேவைகளுக்குக் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் அவர்களுடைய பொறுப்பு அங்கே முடிந்துவிடுகிறதா?—1 தீமோத்தேயு 5:8.
6. (அ) என்ன முக்கியமான குடும்பத் தேவைகள் கவனிக்கப்பட வேண்டும்? (ஆ) கணவன்மாரும் தகப்பன்மாரும் எப்படிப் புரிந்துகொள்ளுதலைக் காட்டலாம்?
6 இயேசு சுட்டிக்காண்பித்தபடி, குடும்பங்களுக்கு மற்ற, அதிக முக்கியமான தேவைகளும் இருக்கின்றன. அவர்களுக்கு ஆவிக்குரிய மற்றும் உணர்ச்சிப்பூர்வமான தேவைகள் இருக்கின்றன. (உபாகமம் 8:3; மத்தேயு 4:4) குடும்பத்திலும் சபையிலும் நாம் ஒருவரோடொருவர் செயல்தொடர்பு கொள்ளுகிறோம். கட்டியெழுப்பக்கூடியவர்களாய் இருக்கும்படி நம்மைத் தூண்டுவதற்கு நமக்கு நல்ல வழிநடத்துதல் தேவைப்படுகிறது. இதைக்குறித்ததில், கணவன்மாரும் தகப்பன்மாரும் பெரும்பாகம் வகிக்கின்றனர்—அதிலும் அவர்கள் மூப்பர்கள் அல்லது உதவி ஊழியர்களாக இருந்தால் இன்னுமதிக பங்கை வகிக்கின்றனர். தங்களுடைய பிள்ளைகளுக்கு உதவி செய்கையில் ஒற்றைப் பெற்றோருக்கு அதேவிதமான குணங்கள் தேவைப்படுகின்றன. குடும்ப அங்கத்தினரால் எவை சொல்லப்படுகின்றனவோ, அவற்றை மட்டுமல்லாமல், சொல்லப்படாமல் விடப்பட்டவற்றையும் பெற்றோர் புரிந்துகொள்ளவேண்டும். அது பகுத்துணர்வு, நேரம், மற்றும் பொறுமையைத் தேவைப்படுத்துகிறது. கணவன்மார் கரிசனையுள்ளவர்களாகவும் தங்கள் மனைவிகளுடன் விவேகத்துடன் வாழவேண்டும் என்றும் பேதுரு சொல்லியிருப்பதற்கு அது ஒரு காரணமாக இருக்கிறது.—1 தீமோத்தேயு 3:4, 5, 12; 1 பேதுரு 3:7.
தவிர்க்கவேண்டிய ஆபத்துக்கள்
7, 8. (அ) ஒரு குடும்பம் ஆவிக்குரிய கப்பற்சேதத்தைத் தவிர்க்க வேண்டுமானால் என்ன தேவைப்படுகிறது? (ஆ) கிறிஸ்தவ போக்கில் ஒரு நல்ல துவக்கம் மட்டுமல்லாமல் வேறு என்ன தேவைப்படுகிறது? (மத்தேயு 24:13)
7 குடும்பத்தின் ஆவிக்குரிய தன்மைக்குக் கவனம் செலுத்துவது ஏன் அவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது? உதாரணமாக, ஆழமற்ற பகுதிகளைக் கொண்டிருக்கும் ஆபத்தான தண்ணீர்களில் கப்பலை ஓட்டிச் செல்கையில், கப்பலின் மாலுமி ஏன் தன்னுடைய கடல் பரப்பு விவர விளக்கப்படங்களுக்கு நெருங்கிய கவனம் செலுத்துவது முக்கியமாக இருக்கிறது? ஆகஸ்ட் 1992-ல், சுற்றுப்பயணக் கப்பல் குயின் எலிசபெத் 2 (QE2), கடற்பயணத் தவறுகள் பொதுவாக நிகழ்வதாகச் சொல்லப்பட்ட மறைந்திருக்கும் மணற்திட்டுகள் மற்றும் பாறைகளினூடே செலுத்தப்பட்டது. ஓர் உள்ளூர்வாசி குறிப்புத்தெரிவித்தார்: “அந்தப் பகுதியின் காரணமாக அநேகரின் வாழ்க்கைத் தொழில்கள் பறிபோயிருக்கின்றன.” அந்த QE2 நீருக்கு அடியிலுள்ள ஒரு பாறைமுகடில் மோதியது. அது ஒரு பெருஞ்செலவு பிடிக்கும் தவறாகிவிட்டது. கப்பலின் உடற்பகுதியில் மூன்றிலொருபாகம் சேதமடைந்தது; அந்தக் கப்பல் பழுதுபார்க்கப்படுவதற்காக பல வாரங்களுக்கு பணியினின்று விலக்கி வைக்கப்பட வேண்டியிருந்தது.
8 அதேவிதமாக, குடும்ப “மாலுமி” கடவுளுடைய வார்த்தையாகிய விளக்கப்படத்தைக் கவனமாக நோக்காவிட்டால், அவனுடைய குடும்பம் எளிதாக ஆவிக்குரிய கேட்டை அனுபவிக்கலாம். ஒரு மூப்பர் அல்லது உதவி ஊழியருக்கு, சபையில் சிலாக்கியங்களை இழப்பதிலும், ஒருவேளை மற்ற குடும்ப அங்கத்தினருக்கு கடுமையான சேதத்திலும் விளைவடையக்கூடும். ஆகவே, ஒவ்வொரு கிறிஸ்தவனும், முந்தைய நல்ல படிப்புப் பழக்கங்களிலும் வைராக்கியத்திலும் மட்டும் நம்பிக்கொண்டு, ஆவிக்குரிய திருப்தி உணர்வால் மேற்கொள்ளப்படாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். நம்முடைய கிறிஸ்தவ போக்கில், வெறுமனே நல்லபடியாகத் துவங்கியிருப்பது மட்டும் போதாது; அந்தப் பயணம் வெற்றிகரமாக முடிக்கப்பட வேண்டும்.—1 கொரிந்தியர் 9:24-27; 1 தீமோத்தேயு 1:19.
9. (அ) தனிப்பட்ட படிப்பு எவ்வளவு முக்கியமானது? (ஆ) என்ன பொருத்தமான கேள்விகளை நம்மை நாமே கேட்டுக்கொள்ளலாம்?
9 ஆவிக்குரிய ஆழங்குறைவான தண்ணீர்கள், பாறைகள், மணற்திட்டுகள் ஆகியவற்றைத் தவிர்ப்பதற்கு நாம் கடவுளுடைய வார்த்தையை ஒழுங்காகப் படிப்பதன்மூலம் நம்முடைய “விளக்கப்படங்கள்” குறித்துக் காலத்திற்கேற்ற விளக்கங்களை அறிந்திருக்கவேண்டும். நம்மைச் சத்தியத்திற்குள் கொண்டுவந்த அடிப்படை படிப்பில் மட்டும் நாம் சார்ந்திருக்க முடியாது. நம்முடைய ஆவிக்குரிய பலம், படிப்பு மற்றும் சேவையும் அடங்கிய ஓர் ஒழுங்கான, சமநிலையான திட்டத்தைச் சார்ந்து இருக்கிறது. உதாரணமாக, இந்தப் பிரதியைத்தானே கையில் வைத்துக்கொண்டு, நாம் சபையின் காவற்கோபுர படிப்பிற்கு ஆஜராகி இருக்கிறோமென்றால், நம்மை நாமே கேட்டுக்கொள்ளலாம், ‘நான் அல்லது நாங்கள் ஒரு குடும்பமாக, வேதவசனங்களை எடுத்துப்பார்த்து, அதன் பொருத்தத்தின்பேரில் தியானித்து, இந்தக் கட்டுரையை உண்மையிலேயே படித்திருக்கிறோமா? அல்லது நாம் வெறுமனே பதில்களை அடிக்கோடிட்டிருக்கிறோமா? கூட்டத்திற்குச் செல்லும் முன்னர் அந்தக் கட்டுரையை வாசிக்காமல்கூட ஒருவேளை இருந்திருக்கிறோமா?’ இந்தக் கேள்விகளுக்கான நேர்மையான பதில்கள், நாம் யோசித்துப்பார்த்து—தேவைப்பட்டால்—முன்னேற்றத்தைச் செய்யும்படியாக ஓர் ஆசையைத் தூண்டிவிடுபவையாக இருக்கக்கூடும்.—எபிரெயர் 5:12-14.
10. சுய நுண்ணாய்வு ஏன் முக்கியமானது?
10 ஏன் சுய நுண்ணாய்வு முக்கியமானது? ஏனென்றால், நாம் சாத்தானின் ஆவியால் ஆதிக்கம் செலுத்தப்படுகிற ஓர் உலகில் வாழ்கிறோம்; பல சூழ்ச்சிமிக்க வழிகளில் கடவுளிடமும் அவருடைய வாக்குறுதிகளிலும் நாம் கொண்டிருக்கும் விசுவாசத்தைக் கெடுக்க முயற்சி செய்யும் ஓர் உலகமாக இருக்கிறது. நம்முடைய ஆவிக்குரிய தேவைகளுக்குக் கவனம் செலுத்த நேரம் இல்லாத அளவிற்கு நம்மை சுறுசுறுப்பாக வைக்க விரும்பும் ஓர் உலகமாக அது இருக்கிறது. ஆகையால், நம்மை நாமே கேட்டுக்கொள்ளலாம், ‘என்னுடைய குடும்பம் ஆவிக்குரிய விதத்தில் பலமானதாக இருக்கிறதா? ஒரு பெற்றோராக நான் எவ்வளவு பலமாக இருக்கவேண்டுமோ அவ்வளவு பலமாக இருக்கிறேனா? நீதி மற்றும் உண்மைத்தன்மையின் அடிப்படையில் தீர்மானங்களை எடுக்க உதவக்கூடிய, மனதை உந்துவிக்கும் ஆவிக்குரிய சக்தியை நாங்கள் ஒரு குடும்பமாக வளர்த்துக்கொண்டிருக்கிறோமா?’—எபேசியர் 4:23, 24.
11. ஏன் கிறிஸ்தவக் கூட்டங்கள் ஆவிக்குரியவிதத்தில் பிரயோஜனமுள்ளவையாக இருக்கின்றன? ஓர் உதாரணத்தைக் கொடுங்கள்.
11 நாம் செல்லும் ஒவ்வொரு கூட்டத்தாலும் நம்முடைய ஆவிக்குரிய தன்மை பலப்படுத்தப்பட வேண்டும். ராஜ்ய மன்றத்தில் அல்லது சபை புத்தகப் படிப்பில் இருக்கும் அந்த விலைமதிப்புள்ள மணிநேரங்கள், நாம் சாத்தானின் எதிர்க்கும் உலகில் பிழைத்திருப்பதற்காக முயன்று செலவிடும் நீண்ட மணிநேரங்களுக்குப்பின் நமக்குப் புத்துணர்ச்சி அளிக்க உதவுகின்றன. உதாரணமாக, எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் என்ற புத்தகத்தைப் படிப்பது எவ்வளவு புத்துணர்ச்சி அளிப்பதாய் இருந்திருக்கிறது! இயேசு, அவருடைய வாழ்க்கை, மற்றும் அவருடைய ஊழியத்தைப்பற்றி ஒரு தெளிவான புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்ள இது உதவியிருக்கிறது. மேற்கோள் காட்டப்பட்ட வேதவசனங்களை வாசித்து, தனிப்பட்ட ஆராய்ச்சி செய்து, இவ்வாறு இயேசு வைத்த முன்மாதிரியிலிருந்து அதிகத்தைக் கற்றுக்கொண்டோம்.—எபிரெயர் 12:1-3; 1 பேதுரு 2:21.
12. வெளி ஊழியம் எப்படி நம்முடைய ஆவிக்குரிய தன்மையைப் பரிசோதிக்கிறது?
12 நம்முடைய ஆவிக்குரிய தன்மைக்கான ஒரு நல்ல பரீட்சை, நம்முடைய கிறிஸ்தவ ஊழியமாகும். பெரும்பாலும் ஓர் அசட்டை மனப்பான்மையுள்ள அல்லது எதிர்க்கும் பொது மக்களின் மத்தியில் முறைப்படியான அல்லது சந்தர்ப்ப சாட்சிகொடுத்தலில் நாம் தொடர்ந்திருப்பதற்கு, கடவுள்மீதான அன்பு மற்றும் அயலான்மீதான அன்பு என்ற சரியான தூண்டுவிப்பை நாம் கொண்டிருக்க வேண்டும். நிச்சயமாகவே, ஒருவரும் நிராகரிக்கப்படுவதை விரும்புவதில்லை, அது நம்முடைய வெளி ஊழியத்தில் சம்பவிக்கலாம். ஆனால், நிராகரிக்கப்படுவது நற்செய்தியே, தனிநபர்களாக நாம் அல்ல என்பதை நினைவில் வைக்கவேண்டும். இயேசு சொன்னார்: “உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது. . . . அவர்கள் என்னை அனுப்பினவரை அறியாதபடியினால் என் நாமத்தினிமித்தமே இவைகளையெல்லாம் உங்களுக்குச் செய்வார்கள்.”—யோவான் 15:18-21.
செயல்கள் வார்த்தைகளைவிட சத்தமாகப் பேசுகின்றன
13. ஒரு குடும்பத்தின் ஆவிக்குரிய தன்மையை எப்படி ஒருவர் அரித்துவிட முடியும்?
13 ஒரு குடும்பத்தில் ஒருவரைத் தவிர மற்றெல்லாரும் வீட்டின் துப்புரவையும் நேர்த்தியையும் மதித்தார்கள் என்றால் என்ன நடக்கும்? ஒரு மழை நாளில், மறதியுள்ள ஒருவரைத்தவிர மற்றவர்கள் எல்லாரும் வீட்டிற்குள் சகதியைக் கொண்டுவராதபடி கவனமாக இருக்கிறார்கள். எவ்விடத்திலும் சகதியின் அடிச்சுவடுகள், மற்றவர்களுக்குக் கூடுதலான வேலையை உண்டுபண்ணிய அந்த ஒருவரின் அசட்டை மனப்பான்மைக்குச் சான்றளிக்கிறது. ஆவிக்குரிய தன்மைக்கும் இதுவே பொருந்துகிறது. வெறும் ஒரு தன்னலமான அல்லது அசட்டை மனப்பான்மையுள்ள நபர் அந்தக் குடும்பத்தின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தலாம். வீட்டிலுள்ள அனைவரும் கிறிஸ்துவின் மனநிலையைப் பிரதிபலிக்க முயற்சி செய்ய வேண்டும், வெறும் பெற்றோர் மட்டுமல்ல. நித்திய ஜீவனை எதிர்நோக்காகக் கொண்டு எல்லாரும் ஒன்றுசேர்ந்து உழைக்கையில் எவ்வளவு புத்துணர்ச்சி அளிப்பதாய் இருக்கிறது! அந்தக் குடும்பத்தின் மனநிலை ஆவிக்குரியதாக இருக்கிறது (சுய-நீதி அல்ல). அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தில் ஆவிக்குரிய அசட்டை மனப்பான்மைக்கான தடங்கள் அரிதாகவே இருக்கின்றன.—பிரசங்கி 7:16; 1 பேதுரு 4:1, 2.
14. என்ன பொருள்சம்பந்தமான சோதனைகளை சாத்தான் நம் வழியில் வைக்கிறான்?
14 தினசரி அடிப்படையில் நம்முடைய வாழ்க்கை நிலைத்திருப்பதைப் பூர்த்திசெய்வதற்கு நம் அனைவருக்கும் அடிப்படையான பொருளாதாரத் தேவைகள் இருக்கின்றன. (மத்தேயு 6:11, 30-32) ஆனால், அடிக்கடி நம்முடைய தேவைகள் நம்முடைய விருப்பங்களால் மறைக்கப்படுகின்றன. உதாரணமாக, சாத்தானின் உலகம் எல்லா வகையான இயந்திர நுணுக்கப் பகுதியையும் கருவியையும் அளிக்கிறது. எல்லாவற்றிலும் எப்போதும் நவீனமானதையே நாம் கொண்டிருக்க விழைந்தால், நாம் ஒருபோதும் திருப்தி அடையமாட்டோம்; ஏனென்றால், நவீனமானது சீக்கிரத்தில் பழமையானதாகிவிடும், ஒரு புதிய வெளியீடு தோன்றுகிறது. ஒருபோதும் நிறுத்தப்படாத ஓர் இராட்டினத்தை வியாபார உலகம் உருவமைத்திருக்கிறது. அதிகரிக்கும் அதிகப்படியான விருப்பங்களைத் திருப்தி செய்வதற்கு அதிகரிக்கும் அதிகப்படியான பணத்தை நாடும்படி அது கவர்ந்திழுக்கிறது. இது “மதிகேடும் சேதமுமான பலவித இச்சை”களுக்கு அல்லது “முட்டாள்தனமான ஆபத்துள்ள குறிக்கோள்”களுக்கு வழிநடத்தலாம். இது ஆவிக்குரிய செயல்களுக்கு குறைந்துகொண்டே போகும் நேரத்தை உடைய சமநிலையற்ற வாழ்க்கையில் விளைவடையலாம்.—1 தீமோத்தேயு 6:9, 10; தி ஜெருசலேம் பைபிள்.
15. குடும்பத் தலைவனின் முன்மாதிரி என்ன வழியில் முக்கியமானது?
15 மறுபடியும் இங்கே, ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் குடும்பத் தலைவனின் முன்மாதிரி மிக முக்கியமானது. உலகப்பிரகாரமான மற்றும் ஆவிக்குரிய பொறுப்புகளிடமாக அவனுடைய சமநிலையான மனநிலை குடும்பத்தின் மற்ற அங்கத்தினர்களைத் தூண்டுவிக்க வேண்டும். தகப்பன் வாயளவில் மிகச் சிறந்த போதனையைக் கொடுத்துவிட்டு, ஆனால் தன் சொந்த வார்த்தைகளின்படி வாழ்ந்துகாட்ட தவறினால் அது நிச்சயமாக கேடு விளைவிப்பதாய் இருக்கும். நான் சொல்வதைச் செய், ஆனால் நான் செய்வதைச் செய்யாதே என்ற அணுகுமுறையைக் கொண்ட வாழ்க்கையைப் பிள்ளைகள் எளிதில் புரிந்துகொள்வார்கள். அதேவிதமாக, மற்றவர்களுக்கு வீட்டுக்கு வீடு ஊழியத்தில் உற்சாகமளிக்கும் ஒரு மூப்பர் அல்லது ஓர் உதவி ஊழியர், அந்த வேலையில் தன்னுடைய குடும்பத்துடன் அரிதாகவே கலந்துகொள்கிறார் என்றால், சீக்கிரத்தில் குடும்பத்திலும் சபையிலும் நம்பிக்கைக்குரிய தன்மையை இழந்துவிடுவார்.—1 கொரிந்தியர் 15:58; ஒப்பிடவும் மத்தேயு 23:3.
16. நம்மை நாமே என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ளலாம்?
16 எனவே நாம் பயன்தரத்தக்க விதத்தில் நம்முடைய வாழ்க்கையைப் பரிசோதிப்போம். ஆவிக்குரிய முன்னேற்றம் அடைவதைப் புறக்கணித்துக்கொண்டு உலகப்பிரகாரமான வெற்றி அடைவதில் நம் கவனத்தை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறோமா? நாம் உலகில் மேல்நோக்கியும் சபையில் கீழ்நோக்கியும் போய்க்கொண்டிருக்கிறோமா? பவுலின் ஆலோசனையை நினைவில் கொள்ளுங்கள்: “கண்காணிப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை.” (1 தீமோத்தேயு 3:1) வேலையில் ஒரு பதவி உயர்வைவிட சபையில் ஒரு பொறுப்புணர்ச்சி நம்முடைய ஆவிக்குரிய தன்மையைப்பற்றி அதிகத்தைச் சொல்கிறது. நம்மை வேலைக்கு அமர்த்தியிருப்பவர்கள், நாம் அவர்களுக்கு ஒப்புக்கொடுத்தவர்கள், யெகோவாவுக்கு அல்ல என்பதைப் போன்று நம்மைக் கட்டுப்படுத்த அனுமதியாத அளவில் ஒரு கவனமான சமநிலை வைக்கப்பட வேண்டும்.—மத்தேயு 6:24.
அர்த்தமுள்ள பேச்சுத்தொடர்பு ஆவிக்குரிய தன்மையை வளர்க்கிறது
17. ஒரு குடும்பத்தில் உண்மையான அன்பை வளர்ப்பதற்கு உதவுவது எது?
17 இன்று இலட்சக்கணக்கான வீடுகள் உண்மையில் தங்கும் விடுதிகளாக மாறிவிட்டிருக்கின்றன. எப்படி? குடும்ப அங்கத்தினர்கள் உறங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் மட்டும் வந்துவிட்டு, பின்னர் சீக்கிரமாக வெளியே சென்றுவிடுகின்றனர். அரிதாகவே அவர்கள் ஒரு மேசையைச் சுற்றி உட்கார்ந்து ஒன்றாகச்சேர்ந்து ஓர் உணவை அனுபவிக்கின்றனர். ஒரு குடும்பம் என்ற உணர்வு அங்கு இல்லை. அதன் விளைவு? அங்குப் பேச்சுத்தொடர்பு குறைவுபடுகிறது, குறிப்பிடத்தக்க சம்பாஷணை இல்லை. மற்ற அங்கத்தினர்களிடம் அக்கறையில் குறைவுபடுவதில், ஒருவேளை உண்மையான அக்கறையார்வ குறைவில் அது விளைவடையலாம். நாம் ஒருவரையொருவர் நேசிக்கும்போது, நாம் சம்பாஷிப்பதற்கும் செவிகொடுத்துக் கேட்பதற்கும் நேரத்தை ஏற்படுத்துகிறோம். நாம் உற்சாகப்படுத்துகிறோம், நாம் உதவிசெய்கிறோம். ஆவிக்குரிய தன்மையின் இந்த அம்சம் துணைவர்களுக்கிடையிலும் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலும் குறிப்பிடத்தக்க பேச்சுத்தொடர்பை உட்படுத்துகிறது.b நம்முடைய சந்தோஷங்களை, அனுபவங்களை, பிரச்னைகளைப் பகிர்ந்துகொள்ளும்படி ஒருவரையொருவர் மனந்திறந்து பேசச் செய்வதற்கு நேரமும் சாதுரியமும் தேவைப்படுகிறது.—1 கொரிந்தியர் 13:4-8; யாக்கோபு 1:19.
18. (அ) பேச்சுத்தொடர்புக்குப் பெரும்பாலும் ஒரு பெரிய தடையாக இருப்பது எது? (ஆ) அர்த்தமுள்ள உறவுகள் எதனால் கட்டியமைக்கப்படுகின்றன?
18 நல்ல பேச்சுத்தொடர்புக்கு நேரமும் முயற்சியும் தேவை. அது ஒருவரோடொருவர் பேசுவதற்கும் செவிகொடுத்துக் கேட்பதற்கும் நேரத்தை ஒதுக்கி வைப்பதை அர்த்தப்படுத்துகிறது. இதற்கு மிகப் பெரிய தடைகளில் ஒன்று, அநேக வீடுகளில் மதிப்பிற்குரிய ஸ்தானத்தைக் கொண்டிருக்கும் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் கருவி—டிவி. இது ஒரு சவாலை அளிக்கிறது—டிவி உங்களைக் கட்டுப்படுத்துகிறதா அல்லது நீங்கள் அதைக் கட்டுப்படுத்துகிறீர்களா? டிவி-யைக் கட்டுப்படுத்துவதற்கு ஓர் உறுதியான தீர்மானம் தேவை—அதை நிறுத்துவதற்கான மனவலிமையும் உட்பட. ஆனால் அவ்வாறு செய்வது குடும்ப அங்கத்தினராகவும் ஆவிக்குரிய சகோதர சகோதரிகளாகவும் ஒருவரையொருவர் புரிந்துசெயல்படுவதற்கு வழியைத் திறக்கும். அர்த்தமுள்ள உறவுகளுக்கு நல்ல பேச்சுத்தொடர்பு, ஒருவரையொருவர் புரிந்துகொள்ளுதல், நம்முடைய தேவைகளையும் சந்தோஷங்களையும், நமக்குச் செய்யப்பட்டிருக்கும் எல்லா தயவான செயல்களையும் நாம் எவ்வாறு போற்றுகிறோம் என்று ஒருவரோடொருவர் சொல்லுதல் ஆகியவை தேவைப்படுகின்றன. வேறு வார்த்தைகளில் சொன்னால், நாம் மற்றவர்களை ஏனோதானோவென்று கருதாமல் அவர்களை மதிக்கிறோம் என்று குறிப்பிடத்தக்க சம்பாஷணை காண்பிக்கிறது.—நீதிமொழிகள் 31:28, 29.
19, 20. நம்முடைய குடும்பத்திலுள்ள எல்லார்மீதும் அக்கறையுள்ளவர்களாய் இருந்தால், நாம் என்ன செய்வோம்?
19 ஆகவே, குடும்பச் சூழமைப்பில் ஒருவருக்கொருவர் அக்கறையுள்ளவர்களாய் இருந்தால்—அது விசுவாசத்திலில்லாத குடும்ப அங்கத்தினர்களில் அக்கறையாயிருப்பதையும் உட்படுத்தும்—நம்முடைய ஆவிக்குரிய தன்மையைக் கட்டியெழுப்புவதற்கும் காத்துக்கொள்வதற்கும் நாம் அதிகத்தைச் செய்துகொண்டிருப்போம். ஒரு குடும்பச் சூழமைவில், நாம் பேதுருவின் ஆலோசனையைப் பின்பற்றுவோம்: “மேலும், நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கமுள்ளவர்களும், சகோதரசிநேகமுள்ளவர்களும், மனஉருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவர்களுமாயிருந்து, தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்.”—1 பேதுரு 3:8, 9.
20 நம்முடைய ஆவிக்குரிய தன்மையைக் காத்துக்கொள்ள நாம் முயன்றால் யெகோவாவின் ஆசீர்வாதத்தை நாம் இப்போது கொண்டிருக்கலாம்; எதிர்காலத்தில் ஒரு பரதீஸான பூமியில் நித்திய ஜீவனைப் பெறும்போது அவருடைய ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு இது வழிநடத்தும். ஆவிக்குரியவிதத்தில் ஒருவருக்கொருவர் உதவுவதற்காக ஒரு குடும்பமாக நாம் செய்யக்கூடிய மற்றக் காரியங்கள் இருக்கின்றன. ஒரு குடும்பமாக ஒன்றாகச்சேர்ந்து காரியங்களைச் செய்வதன் பயன்களை அடுத்தக் கட்டுரை கலந்தாலோசிக்கும்.—லூக்கா 23:43; வெளிப்படுத்துதல் 21:1-4.
[அடிக்குறிப்புகள்]
a ஆவிக்குரிய தன்மை என்பது “மதச் சம்பந்தமான மதிப்புகளுக்கு உணர்ச்சி அல்லது பற்று: ஆவிக்குரியவிதமாக இருக்கும் தன்மை அல்லது நிலை.” (வெப்ஸ்டர்ஸ் நைன்த் நியூ காலஜியேட் டிக்ஷனரி) ஓர் ஆவிக்குரிய ஆள், ஒரு மாம்சப்பிரகாரமான, மிருகத்தனமான ஆளுக்கு எதிர்மாறானவராய் இருக்கிறார்.—1 கொரிந்தியர் 2:13-16; கலாத்தியர் 5:16, 25; யாக்கோபு 3:14, 15; யூதா 19.
b குடும்பப் பேச்சுத்தொடர்பைப்பற்றி மேலுமான ஆலோசனைகளுக்கு, செப்டம்பர் 1, 1991, பக்கங்கள் 20-2 தி உவாட்ச்டவர் பார்க்கவும்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ ஆவிக்குரிய தன்மை என்றால் என்ன?
◻ ஒரு குடும்பத் தலைவன் எப்படி கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்ற முடியும்?
◻ நம்முடைய ஆவிக்குரிய தன்மைக்கு வரும் அச்சுறுத்தல்களை நாம் எவ்வாறு தவிர்க்கலாம்?
◻ ஒரு குடும்பத்தின் ஆவிக்குரிய தன்மையை எது அரித்துவிடலாம்?
◻ அர்த்தமுள்ள பேச்சுத்தொடர்பு ஏன் முக்கியமானது?
[பக்கம் 12-ன் படம்]
சபை புத்தகப் படிப்புக்கு ஆஜராயிருப்பது ஆவிக்குரியவிதத்தில் குடும்பத்தைப் பலப்படுத்துகிறது