பைபிள் திறனாய்வாளர்களைக் குழப்பமடையச் செய்த ஒரு மறைந்த பேரரசு
“முன்னர், அசீரிய பேரரசின் சரித்திரம், உலக வரலாற்றுப் பதிவேடுகளில் மிகவும் புதைந்து கிடந்த அத்தியாயங்களில் ஒன்றாக இருந்தது.” “பண்டைய நினிவேயைப்பற்றி அறியப்பட்டவை எல்லாம், பைபிளில் உள்ளடக்கப்பட்ட சிதறியிருக்கும் மறைகுறிப்புகளும் அதைச் சுட்டிக்காட்டும் தீர்க்கதரிசனங்களும், மேலும் டையடோரஸ் ஸிக்கலஸ் . . . இன்னும் மற்றவர்களின் தற்செயலான துணுக்குக் குறிப்புகளும் மட்டுமே.” —ஸைக்ளோப்பீடியா ஆப் பைபிள் லிட்டரெச்சர், வாலியூம்ஸ் 1 அன்ட் 3, 1862.
கிரேக்க சரித்திராசிரியரான டையடோரஸ் ஸிக்கலஸ் 2,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். நினிவே ஒரு நாற்கோணமான நகரம் என்று அவர் உரிமைபாராட்டினார்; நான்கு பக்கங்களும் சேர்த்து 480 ஸ்டேடியா அளவு நீளத்தைக் கொண்டிருந்தது. அது 96 கிலோமீட்டர் (60 மைல்) சுற்றளவாகும்! நினிவே “மூன்றுநாள் பிரயாண விஸ்தாரமான” நகரம் என்று விவரித்து, பைபிள் அதேவிதமான ஒரு கருத்தைத் தெரிவிக்கிறது.—யோனா 3:3.
பண்டைய உலகின் ஓர் அறியப்படாத நகரம் அவ்வளவு பெரிதாக இருந்திருக்க முடியும் என்று 19-ம் நூற்றாண்டின் பைபிள் திறனாய்வாளர்கள் நம்ப மறுத்தனர். அப்படியே நினிவே என்றாவது இருந்திருந்தாலும், அது பாபிலோனுக்கு முற்பட்ட ஒரு பழைய நாகரிகத்தின் பாகமாக இருந்திருக்கவேண்டும் என்றும் அவர்கள் சொன்னார்கள்.
நோவாவின் கொள்ளுப்பேரனான நிம்ரோத், பாபேல் பகுதியில், அல்லது பாபிலோனில் முதல் அரசியல் அமைப்பை ஸ்தாபித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ள ஆதியாகமம் 10-ம் அதிகாரத்திற்கு எதிர்மாறான கருத்தாக இது இருந்தது. பைபிள் தொடர்கிறது, “அந்தத் தேசத்திலிருந்து அவன் அசூருக்குப்போய் நினிவேயையும், ரெகொபோத் பட்டணத்தையும், காலாகையும், நினிவேக்கும் காலாகுக்கும் நடுவாக ரெசேனையும் கட்டினான்; நினிவே பெரிய பட்டணம்.” (ஆதியாகமம் 10:8-12, திருத்திய மொழிபெயர்ப்பு) இந்த வசனம் நான்கு புதிய அசீரிய நகரங்களையும் சேர்த்து ஒரு “பெரிய பட்டணம்” என்று விளக்குவதைக் கவனியுங்கள்.
பால் ஏமீல் பாட்டா என்ற பிரெஞ்சு தொல்பொருள் ஆராய்ச்சியாளர், 1843-ல், ஓர் அசீரிய நகரத்தின் பாகமாக நிரூபிக்கப்பட்ட ஓர் அரண்மனையின் அழிபாடுகளைக் கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பைப்பற்றிய செய்தி பொது மக்களைச் சென்றெட்டியதும், அது பெரிய கிளர்ச்சியை உண்டுபண்ணியது. “அந்த அரண்மனை, ஏசாயா 20:1-ல் குறிப்பிடப்பட்டுள்ள அசீரியா ராஜாவாகிய சர்கோனுக்குச் சொந்தமானது என்று நிரூபிக்கப்பட்டதும், பொது மக்களின் ஆர்வம் உயர்ந்தது; மற்றபடி அவர் அறியப்படாமல் இருந்தபடியால், அவர் வாழ்ந்திருந்தார் என்பது அதுவரை சந்தேகிக்கப்பட்டது,” என்று ஆலன் மிலெர்ட் தன்னுடைய புத்தகமாகிய பைபிள் காலங்களிலிருந்து பொக்கிஷங்கள் (Treasures From Bible Times) என்பதில் விளக்குகிறார்.
இதற்கிடையில், கார்ஸபாடிற்கு சுமார் 42 கிலோமீட்டர் தென்மேற்கில் நிம்ரட் என்ற இடத்தில் மற்றொரு தொல்பொருள் ஆராய்ச்சியாளரான ஆஸ்டென் ஹென்றி லேயார்ட் என்பவர் அழிபாடுகளைத் தோண்டத் துவங்கினார். அந்த அழிபாடுகள்—ஆதியாகமம் 10:11-ல் குறிப்பிடப்பட்ட நான்கு அசீரிய நகரங்களில் ஒன்றாக—காலாகாக நிரூபிக்கப்பட்டது. பின்னர் 1849-ல், காலாகிற்கும் கார்ஸபாடிற்கும் இடையில் கூயென்ஜிக் என்ற ஓர் இடத்தில் ஒரு பெரிய அரண்மனையின் அழிபாடுகளை லேயார்ட் தோண்டி எடுத்தார். அந்த அரண்மனை நினிவேயின் பாகமாக நிரூபித்தது. கார்ஸபாடிற்கும் காலாகுக்கும் இடையில், காரெம்லெஸ் என்ற ஒரு மேடு உட்பட மற்ற குடியேற்றங்களின் அழிபாடுகளும் கிடக்கின்றன. “நிம்ரட் [காலாக்], கூயென்ஜிக் [நினிவே], கார்ஸபாட், மற்றும் காரெம்லெஸ் ஆகிய இடங்களிலுள்ள நான்கு பெரிய மேடுகளையும் ஒரு சதுரத்தின் நான்கு மூலைகளாகக் கொண்டால், அதன் நான்கு பக்கங்களும் அந்தப் புவியியலாளரின் 480 ஸ்டேடியா அல்லது 60 மைலுடன் [96 கிலோமீட்டர்] ஓரளவிற்குத் துல்லியமாகப் பொருந்தும்; அது [யோனா] தீர்க்கதரிசியால் சொல்லப்பட்ட மூன்று நாள் பயணத்தை உண்டுபண்ணுகிறது.”
அப்படியென்றால், இந்த எல்லா குடியேற்றங்களையும் ஒரு “பெரிய பட்டண”மாக உட்படுத்தி, அவற்றை ஆதியாகமம் 10:11-ல் பட்டியலிடப்பட்ட நகரத்தின் பெயரால், அதாவது நினிவே என்று அழைத்திருப்பதாகத் தோன்றுகிறது. இப்போதும் அதுவேதான் செய்யப்படுகிறது. உதாரணமாக, பூர்வ லண்டன் நகரத்துக்கும் அதன் சுற்றுப்புறங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது; அவை சேர்ந்து சில சமயங்களில் “பெரிய லண்டன்” என்று அழைக்கப்படுவதை உண்டுபண்ணுகின்றன.
ஓர் ஆணவமுடைய அசீரியா ராஜா
நினிவேயிலிருந்த அரண்மனை ஏறக்குறைய மூன்று கிலோமீட்டர் சுவர்களைக் கொண்டிருந்து, 70-ற்கும் மேற்பட்ட அறைகளை உடையதாய் இருந்தது. இராணுவ வெற்றிகளையும் மற்ற சாதனைகளையும் நினைவுகூரும் சிற்பங்களின் எரிந்த மீதங்கள் அந்தச் சுவர்களில் இருந்தன. பெரும்பான்மையானவை மிகவும் சேதமடைந்திருந்தன. எனினும், அவர் அங்குத் தங்கிய சமயத்தின் முடிவில், லேயார்ட் ஒரு குறிப்பிடத்தக்க விதத்தில் பாதுகாத்து வைக்கப்பட்ட ஓர் அறையைக் கண்டுபிடித்தார். அதன் சுவர்களில், நன்கு அரணமைக்கப்பட்ட ஒரு நகரம் கைப்பற்றப்படுவதையும், நகரத்திற்கு வெளியே ஒரு சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும், தாக்கும் ராஜாவுக்குமுன் சிறைப்பட்டவர்கள் அணிவகுப்பதையும் காண்பிக்கும் ஒரு காட்சி இருந்தது. அந்த ராஜாவுக்கு மேல் பொறிக்கப்பட்டிருக்கும் கல்வெட்டு சாசனத்தை அசீரிய எழுத்துக்களின் நிபுணர்கள் பின்வருமாறு மொழிபெயர்க்கின்றனர்: “சனகெரிப், உலகத்தின் ராஜா, அசீரியாவின் ராஜா, ஒரு நிமேடு -சிங்காசனத்தில் உட்கார்ந்துகொண்டு, லாகீசிலிருந்து (லாகீசு) (எடுக்கப்பட்ட) கொள்ளைப்பொருள்களை முறைப்படி பார்வையிட்டார்.”
இன்று இந்தக் காட்சியையும் கல்வெட்டு சாசனத்தையும் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் பார்க்கலாம். இது பைபிளில் 2 இராஜாக்கள் 18:13, 14-ல் பதிவு செய்யப்பட்ட சரித்திரப்பூர்வ சம்பவத்துடன் ஒத்திருக்கிறது: “யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் பதினாலாம் வருஷத்திலே அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யூதாவிலிருக்கிற அரணான சகல பட்டணங்களுக்கும் விரோதமாய் வந்து அவைகளைப் பிடித்தான். அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா லாகீசிலுள்ள அசீரியா ராஜாவுக்கு ஆள் அனுப்பி: நான் குற்றஞ்செய்தேன்; என்னைவிட்டுத் திரும்பிப்போம்; நீர் என்மேல் சுமத்துவதைச் சுமப்பேன் என்று சொன்னான்; அப்படியே அசீரியா ராஜா யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின்மேல் முந்நூறு தாலந்து வெள்ளியையும் முப்பது தாலந்து பொன்னையும் சுமத்தினான்.”
சனகெரிப் யூதாவைப் படையெடுத்தது மற்றும் எசேக்கியாவால் கட்டப்பட்ட கப்பம் ஆகியவற்றைப்பற்றி கூடுதலான விவரங்கள் நினிவேயின் அழிபாடுகளில் இருந்த மற்ற சாசனங்களில் காணப்பட்டன. “பதிவிலுள்ள வரலாற்று அத்தாட்சிகளில் குறிப்பிடத்தக்கவற்றில் ஒன்று, எசேக்கியாவிடமிருந்து எடுக்கப்பட்ட தங்கப் பொக்கிஷத்தின் அளவாகும்; முப்பது தாலந்துகள் என்பது இரண்டு முற்றிலும் தனிப்பட்ட பதிவுகளில் ஒத்திருக்கிறது,” என்று லேயார்ட் எழுதினார். அசீரிய எழுத்துக்களைப் புரிந்துகொள்வதற்கு உதவிய ஸர் ஹென்றி ராலின்ஸன், இந்தச் சாசனங்கள் “[சனகெரிப்பின்] வரலாற்றுப்பூர்வ ஆளடையாளத்தை வாதத்திற்கு அப்பாற்பட்டதாக்கிவிட்டது,” என்று அறிவித்தார். மேலுமாக, நினிவேயும் பாபிலோனும் (Nineveh and Babylon) என்ற தன்னுடைய புத்தகத்தில் லேயார்ட் கேட்கிறார்: “இந்தக் கண்டுபிடிப்புகளுக்கு முன், நினிவே என்பதாகக் குறித்து வைக்கப்பட்டிருந்த இடமாகிய மண் மற்றும் குப்பைக்கூளக் குவியலுக்கு அடியில், எசேக்கியாவுக்கும் சனகெரிப்புக்கும் இடையில் நடந்த போர்களின் சரித்திரம், அவை நிகழ்ந்த காலத்திலேயே சனகெரிப்பாலேயே எழுதப்பட்டிருப்பதும், அவை பைபிள் பதிவைச் சிறிய விவரங்கள் வரையாக உண்மையென உறுதிப்படுத்துவதும், நிகழக்கூடிய காரியம் அல்லது சாத்தியம் என்று யாராவது நம்பி இருப்பார்களா?”
சந்தேகமின்றி, சனகெரிப்பின் பதிவில் உள்ள சில விவரங்கள் பைபிளுடன் ஒத்திருப்பதில்லை. உதாரணமாக, தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆலன் மிலார்ட் குறிப்பிடுகிறார்: “மிகவும் முனைப்பான உண்மை [சனகெரிப்புடைய பதிவின்] முடிவில் வருகிறது. எசேக்கியா தன் தூதுவனையும், எல்லா கப்பத்தையும், சனகெரிப்பிடம் ‘பின்னர், நினிவேக்கு’ அனுப்பினார். அசீரியப் படை அவற்றை வழக்கமான முறையில் வெற்றிகரமாக, வீட்டிற்கு எடுத்துச்செல்லவில்லை.” அசீரியா ராஜா நினிவேக்குத் திரும்பும் முன்னதாகவே கப்பம் கட்டப்பட்டதாக பைபிள் குறிப்பிடுகிறது. (2 இராஜாக்கள் 18:15-17) ஏன் இந்த வித்தியாசம்? யூதேய அரணாகிய லாகீசை முற்றிகையிட்டபோது பெருமை பாராட்டியதைப்போல, யூத தலைநகராகிய எருசலேமை முற்றிகையிட்டதைப்பற்றி ஏன் சனகெரிப்பால் பெருமை பாராட்ட முடியவில்லை? மூன்று பைபிள் எழுத்தாளர்கள் பதிலளிக்கின்றனர். அவர்களில் ஒருவர், ஒரு கண்கண்ட சாட்சி, எழுதினார்: “அப்பொழுது கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம் பேரைச் சங்கரித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ, அவர்களெல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள். அப்பொழுது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் பிரயாணப்பட்டுத் திரும்பிப்போய், நினிவேயில் இருந்துவிட்டான்.”—ஏசாயா 37:36, 37; 2 இராஜாக்கள் 19:35; 2 நாளாகமம் 32:21.
பைபிள் காலங்களிலிருந்து பொக்கிஷங்கள் என்ற தன்னுடைய புத்தகத்தில், மில்லார்ட் முடிவாகக் கூறுகிறார்: “இந்த அறிக்கையைச் சந்தேகிப்பதற்கு எந்த நல்ல காரணமும் இல்லை . . . புரிந்துகொள்ளக்கூடிய விதமாகவே, தனக்குப் பின் வருபவர்கள் படிப்பதற்காக அத்தகைய ஒரு பேரழிவை சனகெரிப் பதிவு செய்து வைக்கமாட்டான், ஏனென்றால் அது அவனுக்கு இகழ்ச்சியைக் கொடுக்கும்.” அதற்குப்பதிலாக, தன்னுடைய யூதேய தாக்குதல் வெற்றிகரமான ஒன்று என்றும், தொடர்ந்து எசேக்கியா நினிவேக்கு கப்பத்தை அனுப்பி தனக்குக் கீழ்ப்பட்டிருந்ததாகவும் சனகெரிப் ஓர் எண்ணத்தை உண்டாக்க முயன்றான்.
அசீரியாவின் மூலங்கள் ஊர்ஜிதப்படுத்தப்படுகின்றன
பத்தாயிரக்கணக்கான களிமண் பலகைகளைக் கொண்டிருந்த நூலகங்களும் நினிவேயில் கண்டுபிடிக்கப்பட்டன. ஆதியாகமம் 10:11 குறிப்பிடுவதுபோலவே, அசீரிய பேரரசு அதன் வேர்களை, தெற்கில், பாபிலோனில் கொண்டிருந்தது என்பதை இந்த ஆவணங்களும் நிரூபிக்கின்றன. இந்தத் தகவல்களைப் பின்தொடர்ந்து, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தென்தொலைவில் தங்கள் முயற்சிகளுக்குக் கவனம் செலுத்தத் துவங்கினர். என்ஸைக்ளோப்பீடியா பிப்ளிக்கா விவரிக்கிறது: “அசீரியர்கள் விட்டுச்சென்ற எல்லா மீதங்களும் அவர்களுடைய பாபிலோனிய மூலத்தைக் காட்டிக்கொடுக்கின்றன. அவர்களுடைய மொழியும் எழுதும் முறையும், அவர்களுடைய இலக்கியங்கள், அவர்களுடைய மதம், மற்றும் அவர்களுடைய அறிவியல் யாவும் அவர்களுடைய தெற்கத்திய அயலாரிடமிருந்து, ஆனால் சிறிய மாற்றியமைத்தலுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது.”
மேற்கூறியவற்றைப்போன்ற கண்டுபிடிப்புகள், திறனாய்வாளர்கள் தங்கள் கருத்துக்களை மட்டுப்படுத்தும்படி வற்புறுத்துகின்றன. நிச்சயமாக, பைபிளைப்பற்றிய ஓர் உண்மையான பரிசோதனை, அது கவனமான, நேர்மையான எழுத்தாளர்களால் எழுதப்பட்டது என்பதை வெளிப்படுத்திக் காட்டுகிறது. ஐக்கிய மாகாணங்களின் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சால்மன் P. சேஸ், பைபிளைப் பரிசோதித்தப்பின் சொன்னார்: “அது ஒரு நீண்ட, முக்கியமான, ஆழ்ந்த படிப்பு: உலகப்பிரகாரமான காரியங்களில் நான் எப்போதும் செய்வதைப்போலவே, இந்த மத விஷயத்திலும் நான் அதே அத்தாட்சியின் நியமங்களைப் பயன்படுத்தி, பைபிள் ஓர் இயற்கைக்கு அப்பாற்பட்ட புத்தகம், அது கடவுளிடமிருந்து வந்திருக்கிறது என்ற தீர்மானத்திற்கு வந்துவிட்டேன்.”—புத்தகங்களின் புத்தகம்: ஒரு முன்னுரை (The Book of Books: An Introduction).
நிச்சயமாகவே, பைபிள் துல்லியமான சரித்திரத்தைவிட மிக அதிகமானது. அது கடவுளால் ஏவப்பட்ட வார்த்தை, மனிதவர்க்கத்தின் நன்மைக்கான ஒரு பரிசு. (2 தீமோத்தேயு 3:16) பைபிள் புவியியலைச் சோதித்து ஆராய்வதன்மூலம் இதற்கான நிரூபணத்தைக் காணலாம். இது அடுத்த வெளியீட்டில் கலந்தாலோசிக்கப்படும்.
[பக்கம் 4-ன் படத்திற்கான நன்றி]
Courtesy of the Trustees of The British Museum
[பக்கம் 6, 7-ன் படங்கள்]
மேலே: சுவர் பொறிப்பிலிருந்து எடுக்கப்பட்ட மூன்று விவரங்கள்
கீழே: லாகீசின் முற்றுகையைக் காண்பிக்கும் அசீரிய சுவர் பொறிப்பிலுள்ள சித்திரம்
[படத்திற்கான நன்றி]
(Courtesy of The British Museum)
(From The Bible in the British Museum, published by British Museum Press)