பைபிள் சரித்திரம் எவ்வளவு துல்லியமானது?
“நான் பொய் சொல்லாமல் . . . உண்மையைச் சொல்லுகிறேன்,” என்பதாக ஒரு பைபிள் எழுத்தாளர் தன்னுடைய இளம் நண்பனிடம் குறிப்பிட்டார். (1 தீமோத்தேயு 2:7) பவுலின் கடிதங்களிலுள்ள அவ்விதமான கூற்றுகள் பைபிள் திறனாய்வாளர்களுக்கு ஒரு சவாலை அளிக்கின்றன.a பவுலின் கடிதங்கள் எழுதப்பட்டு 1,900-ற்கும் மேற்பட்ட ஆண்டுகள் கடந்துவிட்டிருக்கின்றன. அவ்வளவு காலத்திற்குப் பின்னரும், ஒருவரும் முன்வந்து அவருடைய கடிதங்களில் ஒரு குறிப்பையாவது தவறென வெற்றிகரமாக நிரூபிக்கவில்லை.
பைபிள் எழுத்தாளராகிய லூக்காவும் துல்லியத்துக்குக் கவனம் செலுத்தினார். இயேசுவின் வாழ்க்கை மற்றும் ஊழியத்தைப்பற்றிய ஓர் அறிக்கையை அவர் பதிவு செய்தார்; அப்போஸ்தலருடைய நடபடிகள் என்றழைக்கப்பட்ட அவருடைய பதிவு அதைத் தொடர்ந்தது. “ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நான்” என்று லூக்கா எழுதினார்.—லூக்கா 1:3.
துல்லியத்திற்கான அத்தாட்சிகள்
ஒரு சரித்திராசிரியராக லூக்காவின் துல்லியத்தை 19-ம் நூற்றாண்டின் ஆரம்பகால பைபிள் திறனாய்வாளர்கள் சவாலிட்டனர். மேலுமாக, அப்போஸ்தலரில் உள்ள சரித்திரம் பொ.ச. இரண்டாம் நூற்றாண்டின் மத்தியில் உருவாக்கப்பட்டது என்பதாக வாதாடினர். பிரிட்டிஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளரான ஸர் உவில்லியம் மிஷல் ராம்ஸே என்பவர் இதை நம்பிய ஒருவராவார். ஆனால் லூக்காவால் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களையும் இடங்களையும் துருவி ஆராய்ந்தபின் அவர் ஒப்புக்கொண்டார்: “பல்வேறு விவரங்களில் அந்தப் பதிவு மகத்தான உண்மையைக் காண்பித்தது என்று நான் படிப்படியாக நம்பவைக்கப்பட்டேன்.”
ராம்ஸே மேற்கூறியவற்றை எழுதுகையில், லூக்காவின் துல்லியத்தைப்பற்றிய ஒரு விவாதம் தீர்க்கப்படாததாக இருந்தது. அது நெருங்கிய தொடர்புடைய பட்டணங்களாகிய இக்கோனியா, லீஸ்திரா மற்றும் தெர்பையைப் பற்றியதாக இருந்தது. லீஸ்திரா மற்றும் தெர்பையை “லிக்கவோனியா நாட்டிலுள்ள பட்டணங்கள்” என்று விவரிப்பதன்மூலம் இக்கோனியாவை அவற்றிலிருந்து தனித்திருப்பதாக லூக்கா குறிப்பிட்டார். (அப்போஸ்தலர் 14:6) இருந்தாலும், இதோடுள்ள வரைபடம் காண்பிக்கிறபடி, லீஸ்திரா, தெர்பையைவிட இக்கோனியாவிற்கு அருகில் உள்ளது. சில பண்டைய சரித்திராசிரியர்கள் இக்கோனியாவை லிக்கவோனியாவின் ஒரு பாகமாக விளக்கினர்; எனவே, அவ்வாறு செய்யாததற்காக திறனாய்வாளர்கள் லூக்காவிடம் சவால்விட்டனர்.
பின்னர், 1910-ல், ராம்ஸே இக்கோனியாவின் அழிபாடுகளில் ஒரு நினைவுச்சின்னத்தைக் கண்டுபிடித்தார்; அது அந்தப் பட்டணத்தின் மொழி லிக்கவோனியா மொழி அல்ல, ஆனால் பிரிகியா மொழி என்று காண்பித்தது. தொல்பொருளியலும் புதிய ஏற்பாடும் (Archaeology and the New Testament) என்ற தன்னுடைய புத்தகத்தில், “இக்கோனியாவிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் இருந்த இன்னும் அநேக கல்வெட்டுகள், அந்தப் பட்டணம் பிரிகியா இனமரபைச் சார்ந்தது என்ற உண்மையை நிரூபிக்கின்றன,” என்று டாக்டர் மெரெல் எங்கர் கூறுகிறார். உண்மையில், பவுலின் நாளிலிருந்த இக்கோனியாவில் பிரிகியா கலாச்சாரம் இருந்தது; மக்கள் “லிக்கவோனியா பாஷையிலே” பேசிய “லிக்கவோனியாநாட்டிலுள்ள பட்டணங்க”ளிலிருந்து அது தனிப்பட்டதாக இருந்தது.—அப்போஸ்தலர் 14:6, 11.
தெசலோனிக்கே பட்டணத்து அதிகாரிகளுக்கு “ஆளுநர்கள்” என்ற வார்த்தையை லூக்கா பயன்படுத்தியதைக்குறித்தும் பைபிள் திறனாய்வாளர்கள் வாதிட்டனர். (அப்போஸ்தலர் 17:6, NW, அடிக்குறிப்பு) இந்தச் சொற்றொடர் கிரேக்க இலக்கியத்தில் அறியப்படாததாய் இருந்தது. பின்னர் அந்தப் பண்டைய நகரத்தில் நகர அதிகாரிகளின் பெயர்களைக் கொண்டிருந்த ஒரு மேல்வளைவு காணப்பட்டது; அவர்களை “ஆளுநர்கள்”—சரியாக லூக்கா பயன்படுத்திய அதே வார்த்தை—என்பதாக விவரித்தது. “அந்தப் பதம் பயன்படுத்தப்பட்டதன் மூலம் லூக்காவின் துல்லியம் நியாயநிரூபணம் செய்யப்பட்டிருக்கிறது,” என்று W. E. வைன் தன்னுடைய எக்ஸ்பாஸிட்டரி டிக்ஷனரி ஆப் ஓல்ட் அன்ட் நியூ டெஸ்டமென்ட் வர்ட்ஸ் என்பதில் விவரிக்கிறார்.
லூக்காவின் கடற்பயணம்
அப்போஸ்தலர் 27-ம் அதிகாரத்தில் விளக்கப்பட்ட கப்பற்சேதத்தின் விவரங்களைக் கடற்பயண நிபுணர்கள் பரிசோதித்தனர். லூக்காவின்படி, தானும் பவுலும் பயணம் செய்த அந்தப் பெரிய கப்பல், கிலவுதா என்ற ஒரு சிறிய தீவின் அருகில் ஒரு வடகீழ்த்திசை கடுங்காற்றில் சிக்கிக்கொண்டதால், ஆப்பிரிக்காவின் வட கடற்கரையின் ஆபத்தான சொரிமணலிற்கு ஓட்டிச்செல்லப்படுவார்களோ என்று அந்தக் கப்பலோட்டிகள் பயந்தனர். (அப்போஸ்தலர் 27:14, 17, NW, அடிக்குறிப்பு) திறம்பட்டவிதத்தில் கப்பலைச் செலுத்தியதன் மூலமாக, அவர்கள் கப்பலை ஆப்பிரிக்காவிலிருந்து தள்ளி ஒரு மேற்கத்திய வழிக்குக் கொண்டுச்செல்ல முடிந்தது. அந்தக் கடுங்காற்று தணியாமல் தொடர்ந்தது; சுமார் 870 கிலோமீட்டர் தூர பயணத்திற்குப்பின் முடிவில் அந்தக் கப்பல் மெலித்தா தீவின் கரையோரங்கள் அருகே வந்தது. ஒரு கடுங்காற்றில் பயணம் செய்யும் பெரிய கப்பல் அவ்வளவு தூரம் செலுத்தப்படுவதற்கு 13-ற்கு மேற்பட்ட நாட்கள் எடுக்கும் என்பதாகக் கடற்பயண நிபுணர்கள் கணக்கிடுகின்றனர். கப்பற்சேதம் 14-ம் நாள் ஏற்பட்டது என்று குறிப்பிட்டுள்ள லூக்காவின் பதிவிற்கு அவர்களுடைய கணிப்பு ஒத்ததாக இருக்கிறது. (அப்போஸ்தலர் 27:27, 33, 39, 41) லூக்காவின் கடற்பயணத்தைப்பற்றிய எல்லா விவரங்களையும் துருவி ஆராய்ந்த பிறகு, “அவற்றில் தானும் ஈடுபட்டிருந்த ஒருவரால் எழுதப்பட்ட உண்மை சம்பவங்களின் ஒரு விரிவுரை அது . . . நேரடியாகப் பார்த்திராவிட்டால், கப்பலோட்டியாக இல்லாத எந்த ஒரு மனிதனும் ஒரு கடற்பயணத்தைப்பற்றி அதன் எல்லா பாகங்களிலும் முரண்படாமல் ஒத்திருக்கும் ஒரு விரிவுரையை எழுதியிருக்க முடியாது,” என்ற முடிவுக்கு வந்தார், பந்தயப்படகு ஓட்டுநர், ஜேம்ஸ் ஸ்மித்.
அத்தகைய கண்டுபிடிப்புகளின் காரணமாக, கிறிஸ்தவ கிரேக்க வேத எழுத்துக்களைத் துல்லியமான சரித்திரம் என்பதாகப் பாதுகாக்க சில இறையியலர்கள் மனமுள்ளவர்களாய் இருக்கின்றனர். ஆனால் எபிரெய வேத எழுத்துக்களிலுள்ள ஆரம்ப சரித்திரத்தைப் பற்றியதென்ன? அநேக குருமார் நவீன தத்துவங்களுக்கு அடிபணிந்து அது கட்டுக்கதைகளைக் கொண்டிருப்பதாக அறிவிக்கின்றனர். எனினும், பைபிளின் ஆரம்ப சரித்திரத்தைப்பற்றிய பல விவரங்களும் திறனாய்வாளர்களைக் குழம்பச்செய்யும் வகையில் மெய்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, ஒருகாலத்தில் மறக்கப்பட்ட அசீரிய பேரரசின் கண்டுபிடிப்பைக் கவனியுங்கள்.
[அடிக்குறிப்புகள்]
a இவற்றையும் பாருங்கள்: ரோமர் 9:1; 2 கொரிந்தியர் 11:31; கலாத்தியர் 1:20.
[பக்கம் 3-ன் வரைப்படம்]
பிரிகியா
லிக்கவோனியா
சைப்ரஸ்
இக்கோனியா
லீஸ்திரா
தெர்பை
மத்திய தரைக்கடல்