நன்மை எப்போதாவது தீமையை வெல்லுமா?
ஏறக்குறைய இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், களங்கமற்ற மனிதனாகிய இயேசு கிறிஸ்து தம்முடைய ஜீவனுக்கான விசாரணையில் உட்பட்டிருந்தார். அவர் உண்மையைப் பேசியதால் கெட்ட மனிதர் அவரை அழித்துவிட சதித்திட்டமிட்டுக்கொண்டிருந்தனர். அவர் தேச துரோகம் செய்ததாகப் பொய்யாகக் குற்றஞ்சாட்டப்பட்டார், மேலும் அந்தக் கூட்டம் அவருக்கு மரணதண்டனை விதிக்கும்படியாக உரத்த கூச்சலிட்டனர். தன்னுடைய அரசியல் அந்தஸ்தை ஒரு தாழ்மையான தச்சனின் உயிரைவிட மிக உயர்வாக மதித்த ஒரு ரோம அதிபதி, இயேசுவை ஒரு கொடுமையான மரணத்திற்குத் தீர்த்தார். எல்லா வெளிப்படையான தோற்றங்களுக்கும், தீமை வெற்றிசிறந்ததாகத் தோன்றியது.
இருப்பினும், அவர் கொல்லப்படுவதற்கு முந்தின இரவு, இயேசு தம்முடைய சீஷர்களிடம் கூறினார்: “நான் உலகத்தை ஜெயித்தேன்.” (யோவான் 16:33) அவர் எதை அர்த்தப்படுத்தினார்? உலகத்தின் தீமை அவரைக் கசந்துகொள்ளவோ அதேவிதமாக பழிவாங்கவோ செய்துவிடவில்லை என்பதும் அதன் அர்த்தமாக இருந்தது. உலகம் அவரை ஒரு கெட்ட அச்சிற்குள் திணித்து உட்புகுத்தியிருக்கவில்லை. (ரோமர் 12:2-ஐ ஒப்பிடவும், பிலிப்ஸ்.) மரிக்கும்போதுங்கூட, தம்மைக் கொலைசெய்தவர்களின் சார்பாக அவர் ஜெபித்தார்: “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே.”—லூக்கா 23:34.
தீமையை வெல்ல முடியும் என்பதை—தம்முடைய இறுதி மூச்சுவரையாக—இயேசு காண்பித்தார். தீமைக்கு எதிராக தங்கள் சொந்த போராட்டத்தைப் போராடும்படி அவர் தம்மைப் பின்பற்றியவர்களை உந்துவித்தார். அவர்கள் எவ்வாறு அதைச் செய்யமுடியும்? இயேசு செய்ததைப்போலவே, “ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்” மற்றும் “தீமையை நன்மையினாலே வெல்லு” என்ற வேதப்பூர்வ அறிவுரைக்கு இசைந்து செல்வதன்மூலம் செய்யலாம். (ரோமர் 12:17, 21) ஆனால் அத்தகைய ஒரு வழி உண்மையிலேயே உதவுகிறதா?
டாக்காவ்வில் தீமைக்கு எதிராகப் போராடுதல்
டாக்காவ்வில் சிறையிலடைக்கப்பட்டிருந்த எல்ஸா என்ற ஒரு ஜெர்மானிய பெண், 14 வயதான ஒரு ரஷ்ய பெண்ணுக்கு ஒரு விலையுர்ந்த பரிசை, விசுவாசம் மற்றும் நம்பிக்கையாகிய பரிசைக் கொடுத்தவள்.
டாக்காவ் என்பது, ஆயிரக்கணக்கானோர் மரணமடைந்ததும், இந்த ரஷ்ய பெண் உட்பட நூற்றுக்கணக்கானோர் கொடூரமான மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுமான ஒரு பேர்போன சித்திரவதை முகாமாக இருந்தது. டாக்காவ், தீமையின் உருவாகத் தோன்றியது. இருந்தாலும், அவ்வளவு தரிசாகத் தோன்றிய மண்ணில்கூட, நன்மை தளிர்த்தது, பன்மடங்காகவும் பெருகியது.
தன்னுடைய தாயை SS பாதுகாப்புப்படையினர் முரட்டுத்தனமாக கற்பழிப்பதைப் பார்க்கும்படியாக வற்புறுத்தவும்பட்ட இந்த இளம் பருவவயது பெண்ணுக்காக எல்ஸா மிகவும் வருத்தப்பட்டாள். தன்னுடைய சொந்த உயிர் ஆபத்திலிருந்தபோதிலும், அந்தப் பெண்ணிடம் நன்மை, தீமை மற்றும் ஓர் உயிர்த்தெழுதல்பற்றிய வேதப்பூர்வ நம்பிக்கையைக்குறித்துப் பேசுவதற்கு எல்ஸா வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருந்தாள். வெறுப்பதற்கு மாறாக அன்பு செய்யவேண்டும் என்று அவளுடைய இளம் சிநேகிதிக்குக் கற்றுக்கொடுத்தாள். அந்த ரஷ்ய பெண் டாக்காவ்வின் பயங்கரங்களைத் தப்பிப்பிழைத்தாள், எல்ஸாவுக்கு நன்றி.
கிறிஸ்துவின் தன்னலமற்ற உதாரணத்தைப் பின்பற்ற விரும்பியதால், எல்ஸா அப்படிப்பட்ட காரியத்தைச் செய்தாள். யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக, அவள் தீமைக்குத் தீமையைச் சரிக்கட்டாமல் இருக்க கற்றுக்கொண்டிருந்தாள்; அவளுடைய விசுவாசம் அதேவிதமாக மற்றவர்களும் செய்யும்படி உதவுவதற்குத் தூண்டியது. அவள் டாக்காவ்வில் துன்பப்பட்டபோதிலும், ஒரு தீமையான ஆட்சியின்மீது ஓர் ஒழுக்கரீதியிலான வெற்றியை அடைந்தாள். அவள் ஒருத்தி மட்டும் அல்ல.
கிறிஸ்தவத்தின் ஒரு வரலாறு [A History of Christianity] என்ற தன்னுடைய புத்தகத்தில் பால் ஜான்ஸன், “[யெகோவாவின் சாட்சிகள்] அந்த நாசி அரசாங்கம் முற்றிலும் பொல்லாததென வெளிப்படையாய்க் கண்டனம் தெரிவித்து அதோடு எவ்விதமும் ஒத்துழைக்க மறுத்துவிட்டனர். . . . தொண்ணூற்றேழு சதவிகிதத்தினர் ஒரு வகையிலோ மற்றொரு வகையிலோ துன்புறுத்தலை அனுபவித்தனர்,” என்று குறிப்பிட்டார். அது ஒரு நம்பிக்கையற்ற போராட்டமா? ஆஷ்விட்ஸில் மதிப்பீடுகளும் வன்முறையும் [Values and Violence in Auschwitz] என்ற புத்தகத்தில், போலாந்து நாட்டைச் சேர்ந்த சமூகவியல் நிபுணரான அன்னா பாவெல்ஷின்ஸ்கா சாட்சிகளைப்பற்றி பின்வருமாறு கூறினார்: “கைதிகளாலான இந்தச் சிறிய தொகுதி ஒரு பலமான கருத்துச்சார்ந்த சக்தியாக இருந்தது, அவர்கள் நாசிசத்திற்கு எதிரான போரில் வெற்றிபெற்றனர்.”
இருப்பினும், நம்மில் அநேகருக்கு, வெளியிலுள்ள தீய செல்வாக்குகளைக்காட்டிலும் நம் உள்ளிருக்கும் தீய மனச்சாய்வுகளுக்கு எதிராகவே முக்கியமான போராட்டம் போராடப்படுகிறது. இது நமக்குள்ளிருக்கும் ஒரு போராட்டமாகும்.
நம் உள்ளிருக்கும் தீமையை வெல்லுதல்
அப்போஸ்தலன் பவுல் இந்தப் போராட்டத்தைப் பின்வருமாறு விவரித்தார்: “நான் செய்ய வேண்டும் என்று விரும்புகிற நன்மையை உண்மையில் செய்வதில்லை; நான் செய்ய வேண்டாம் என்று விரும்புகிற தீமையையே நான் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறேன்.” (ரோமர் 7:19, தி நியூ டெஸ்டமன்ட், உவில்லியம் பார்க்லேயுடையது) பவுல் நன்கு அறிந்திருந்தபடி, நன்மை செய்வது எப்போதும் இயற்கையாக வருவதில்லை.
எயூகேனியோa என்பவர், தன்னுடைய சொந்த தீய மனச்சாய்வுகளுக்கு எதிராக இரு நீண்ட வருடங்கள் போராடிய ஓர் இளம் ஸ்பெய்ன் நாட்டு மனிதர். “நான் என்னுடன் மிகவும் கண்டிப்பாக நடந்துகொள்ளவேண்டியதாக இருந்தது,” என்பதாக அவர் விவரிக்கிறார். “சிறு வயது முதற்கொண்டே, நான் ஓர் ஒழுக்கயீனமான மனச்சாய்வைக் கொண்டிருந்தேன். ஒரு பருவவயதினனாக, நான் ஓரினப்புணர்ச்சி வெறியாட்டங்களில் மனப்பூர்வமாகப் பங்கெடுத்தேன்; வெளிப்படையாகச் சொன்னால், நான் அத்தகைய வாழ்க்கை முறையை அனுபவித்துக் களித்தேன்.” கடைசியில் அவரை மாறும்படி செய்தது எது?
“நான் கடவுளைப் பிரியப்படுத்த விரும்பினேன்; நான் வாழ்ந்து கொண்டிருந்த விதத்தை அவர் அங்கீகரிக்கவில்லை என்பதை பைபிளிலிருந்து கற்றுக்கொண்டேன்,” என்று எயூகேனியோ சொன்னார். “ஆகவே கடவுளுடைய வழிகாட்டுதல்களுக்கு இசைந்து செல்லும்படியாக நான் ஒரு வேறுவகையான மனிதனாகவேண்டும் என்று தீர்மானித்தேன். தினந்தோறும், என் மனதிற்குள் இன்னும் பெருக்கெடுத்துவரும் எதிர்மறையான, இழிவான சிந்தனைகளுக்கு எதிராக நான் போராட வேண்டியதாய் இருந்தது. நான் இந்தப் போராட்டத்தில் வெற்றிபெற தீர்மானமாய் இருந்தேன்; கடவுளுடைய உதவிக்காக இடைவிடாமல் ஜெபித்தேன். இப்பொழுதும் நான் என்னுடன் கண்டிப்பாக நடந்து கொண்டாலும், இரண்டு வருடங்களுக்குப்பின் அவற்றை அடக்கிக் கீழ்ப்படுத்தினேன். ஆனால் அந்தப் போராட்டம் பயனுடையதாய் இருந்தது. நான் இப்பொழுது சுயமரியாதையையும், ஒரு நல்ல திருமணத்தையும், எல்லாவற்றிற்கும் மேலாக, கடவுளோடு ஒரு நல்ல உறவையும் கொண்டிருக்கிறேன். தீய எண்ணங்கள், அவை கனிகொடுக்கும் முன்பே அகற்றப்படலாம்—உண்மையிலே நீங்கள் முயற்சி செய்தால்—என்பதை என்னுடைய சொந்த அனுபவத்தின் மூலமாக நான் அறிந்திருக்கிறேன்.”
ஒவ்வொரு முறை ஒரு தீய எண்ணம் விலக்கித்தள்ளப்படும்போதும், ஒவ்வொரு முறை நாம் தீமைக்குத் தீமை செய்ய மறுக்கும்போதும், நன்மை தீமையை வெல்லுகிறது. இருந்தாலும், அத்தகைய வெற்றிகள் முக்கியமானதாக இருந்தாலும், தீமையின் இரண்டு முக்கிய ஊற்றுமூலங்களை ஒழிப்பதில்லை. நாம் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், நம்முடைய சுதந்தரிக்கப்பட்ட பலவீனங்களையும், மனிதவர்க்கத்தின்மீது சாத்தான் இன்னும் செலுத்திவருகிற தீய செல்வாக்கையும் நாம் முற்றிலுமாக மேற்கொள்ள முடியாது. ஆகவே இந்த நிலைமை என்றாவது மாறுமா?
பிசாசை ஒன்றுக்குமில்லாத நிலைக்குக் கொண்டுவருதல்
இயேசு மரணம்வரையாக உண்மையாக இருந்தது, சாத்தானுக்கு ஒரு பெருந்தோல்வியாக இருந்தது. இயேசுவின் உத்தமத்தன்மையை முறிக்கும் முயற்சியில் சாத்தான் தோல்வி அடைந்தான்; இந்தத் தோல்வி சாத்தானின் முடிவிற்கான ஆரம்பத்தைக் குறித்தது. பைபிள் விவரிக்கிறபடி, “பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கு” இயேசு மரணத்தை ருசிபார்த்தார். (எபிரெயர் 2:14) அவருடைய உயிர்த்தெழுதலுக்குப்பின் இயேசு தம்முடைய சீஷர்களிடம் சொன்னார்: “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.” (மத்தேயு 28:18) இந்த அதிகாரம் சாத்தானுடைய வேலைகளை ஒன்றுமில்லாமல் ஆக்கும்படிக்கு பயன்படுத்தப்படும்.
இயேசு சாத்தானை பரலோகத்திலிருந்து வெளியேற்றும் நாளை வெளிப்படுத்துதல் புத்தகம் விவரிக்கிறது. இந்தப் பிரதானதீங்கிழைப்பவன், தன்னுடைய பேய்த்தூதர்களுடன் பூமியின் எல்லைக்குள் கட்டுப்படுத்தப்பட வேண்டியவனாக இருந்தான். அதன் விளைவாக, தீமை மிகுந்திருக்குமென பைபிள் இவ்வாறு எச்சரிக்கிறது: “பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும்.”—வெளிப்படுத்துதல் 12:7-9, 12.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் ஏற்கெனவே நிகழ்ந்துவிட்டது—முதல் உலக யுத்தத்தின் சமயத்தில்—என்பதாக பைபிள் தீர்க்கதரிசனம் குறிப்பிடுகிறது.b நம்முடைய காலங்களில் நாம் காணும் தீமையின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை அது விளக்குகிறது. ஆனால் விரைவில் சாத்தான் எவர்மீதும் செல்வாக்கு செலுத்தமுடியாதபடிக்கு முழுமையாகக் கட்டுப்படுத்தப்படுவான்.—வெளிப்படுத்துதல் 20:1-3-ஐ பார்க்கவும்.
இவை யாவும் மனிதவர்க்கத்துக்கு எதைக் குறிக்கும்?
“அவர்கள் தீமை செய்யமாட்டார்கள்”
கடவுளுடைய ராஜ்யத்தின் அரசராக, ஓர் ஆவிக்குரிய மறுகல்வி திட்டத்தை ஏற்பாடு செய்வதற்காக, இயேசு தன்னுடைய ‘பூமியின்மீதான அதிகாரத்தை’ விரைவில் பயன்படுத்துவார். “பூச்சக்கரத்துக் குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.” (ஏசாயா 26:9) அதன் பயன்கள் யாவருக்கும் தெளிவாக இருக்கும். பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது: “தீங்கு செய்வாருமில்லை; [“அவர்கள் தீமை செய்யமாட்டார்கள்,” கிரீனின் இன்டர்லீனியர் ஹீப்ரூ/கிரீக் இங்லீஷ் பைபிள்] கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.”—ஏசாயா 11:9.
இப்போதும்கூட, நம்முடைய அநேக தீய மனச்சாய்வுகள் மேற்கொள்ளப்படலாம். பேய்த்தன செல்வாக்கு இனிமேலும் இல்லாமல் இருக்கும்போது, “பொல்லாப்பைவிட்டு நீங்கி, நன்மை செய்து”கொண்டிருப்பது மிக மிக எளிதாக இருக்கும்.—1 பேதுரு 3:11.
நன்மை தீமையை வெல்லும் என்று நாம் நம்பிக்கை கொள்வதற்கு எல்லா காரணங்களும் இருக்கின்றன ஏனென்றால் கடவுள் நல்லவராக இருக்கிறார்; மேலும் இயேசு தம்முடைய சொந்த உதாரணத்தில் நிரூபித்தபடி, அவருடைய துணையுடன் நன்மை செய்ய விரும்புவோர் தீமையை மேற்கொள்ள முடியும். (சங்கீதம் 119:68) இப்போது தீமைக்கு எதிராக போராட மனமுள்ளவர்கள், தீமையை என்றென்றைக்குமாக வேரோடு அழிப்பதற்கு உறுதியாயுள்ள ஓர் அரசாங்கமாகிய கடவுளுடைய ராஜ்யத்தால் ஆளப்படும் ஒரு சுத்திகரிக்கப்பட்ட பூமியில் வாழ்வதை எதிர்நோக்கி இருக்கலாம். சங்கீதக்காரன் பலனை விவரிக்கிறார்: “கிருபையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும், நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும். சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும், நீதி வானத்திலிருந்து தாழப் பார்க்கும்.”—சங்கீதம் 85:10, 11.
[அடிக்குறிப்புகள்]
a அவருடைய நிஜ பெயர் அல்ல.
b மேலுமான விவரங்களுக்கு, உவாட்ச்டவர் பைபிள் அன்ட் டிராக்ட் சொஸையிட்டியால் பிரசுரிக்கப்பட்ட நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தில் பக்கங்கள் 20-2-ஐ பார்க்கவும்.