ஏன் பொய் சொல்வது அவ்வளவு எளிதாக இருக்கிறது?
ஒருவரும் தன்னிடம் பொய் சொல்லப்படுவதை விரும்புகிறதில்லை. இருப்பினும், உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் பல காரணங்களுக்காக ஒருவருக்கொருவர் பொய் சொல்லுகின்றனர். ஜேம்ஸ் பாட்டர்ஸன் மற்றும் பீட்டர் கிம் என்பவர்களின் அமெரிக்கா உண்மை சொன்ன நாள் [The Day America Told the Truth] என்ற புத்தகத்தில் வெளிவந்த ஒரு சுற்றாய்வு, 91 சதவீதம் அமெரிக்கர்கள் வழக்கமாக பொய் சொன்னார்கள் என்பதை வெளிப்படுத்தியது. அந்த நூலாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்: “எங்களில் பெரும்பான்மையோர், ஒரு வாரம் பொய் பேசாமல் வாழ்வதைக் கடினமாகக் காண்கிறோம். ஐந்தில் ஒருவரால் ஒரு நாள்கூட அவ்வாறு வாழமுடியாது—அதுவும் மனமார்ந்த, முன்திட்டமிடப்பட்ட பொய்களைக்குறித்து நாங்கள் பேசுகிறோம்.”
நவீன நாளைய வாழ்க்கையின், கிட்டத்தட்ட எல்லா அம்சங்களிலும் பொய் சொல்வது ஒரு சாதாரண பழக்கமாக இருக்கிறது. அரசியல் தலைவர்கள் மக்களிடமும் ஒருவருக்கொருவரும் பொய் சொல்லுகின்றனர். உண்மையில் அவர்கள் ஆழ்ந்து உட்பட்டிருந்த அவதூறான சூழ்ச்சி திட்டங்களில் அவர்களுக்கு எந்தத் தொடர்பும் இருக்கவில்லை என மறுத்துக்கூறிக்கொண்டு அடிக்கடி தொலைக்காட்சியில் காட்சியளிக்கின்றனர். பொய் சொல்லுவது—பொது மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கஞ்சார்ந்த தெரிவு [Lying—Moral Choice in Public and Private Life] என்ற தன்னுடைய புத்தகத்தில் ஸிசெல்லா பாக் குறிப்பிடுகிறார்: “சட்டம் மற்றும் இதழியல் துறையிலும், அரசாங்கம் மற்றும் மனித சமுதாய வளர்ச்சிபற்றிய ஆய்வுத்துறையிலும், தாங்களே பொய்களைச் சொல்லிக்கொண்டு சட்டங்களையும் உருவாக்க நாடுபவர்களால் மன்னிக்கத்தக்கதாக உணரப்படும்போது ஏமாற்றுதல் ஏற்கத்தக்கதாகிவிடுகிறது.”
ஐக்கிய மாகாணங்களின் அரசியல் சம்பந்தமான பொய்சொல்லுதலைக்குறித்து, மே/ஜூன் 1989-ன் காமன் காஸ் மாகஸின் குறிப்பிட்டது: “அரசாங்க ஏமாற்றுதல் மற்றும் பொது மக்களின் அவநம்பிக்கை என்பதன் அடிப்படையில், உவாட்டர்கேட்டும் வியட்நாமும் நிச்சயமாகவே இரான்-கான்ட்ராவை எதிர்த்துப் போட்டியிட்டன. ஆகவே ரீகன் ஆட்சிபுரிந்த நாட்களை அத்தகைய திருப்பமாக்கியது எது? அநேகர் பொய் சொன்னார்கள், ஆனால் வெகு சிலரே அதற்காக உறுத்தப்பட்டார்கள்.” ஆக நல்ல காரணங்களுக்காகவே, பொது மக்கள் தங்களுடைய அரசியல் தலைவர்களை நம்புவதில்லை.
சர்வதேச உறவுகளில் அத்தகைய தலைவர்கள் ஒருவரையொருவர் நம்புவதைக் கடினமானதாகக் காண்கின்றனர். கிரேக்க தத்துவ அறிஞராகிய பிளாட்டோ குறிப்பிட்டார்: “நாட்டை ஆளுபவர்கள் . . . நாட்டின் நலனிற்காக பொய் சொல்வதற்கு அனுமதிக்கப்படலாம்.” சர்வதேச உறவுகளில், தானியேல் 11:27-ல் பைபிள் சொல்லுகிறபிரகாரமாகவே இருக்கிறது: “ஒரே பந்தியிலிருந்து பொய்பேசுவார்கள்.”
வியாபார உலகில், உற்பத்தி பொருட்கள் மற்றும் சேவைகளைப்பற்றி பொய் சொல்வது ஒரு பொதுவான பழக்கம். வாங்குபவர்கள், தெளிவற்றவிதத்தில் அச்சிடப்பட்டிருப்பவற்றையும் வாசிப்பதை நிச்சயப்படுத்திக்கொண்டு எச்சரிக்கையுடன் ஒப்பந்த உடன்பாடுகளுக்குள் உடன்பட வேண்டும். தவறான விளம்பரங்கள், பயனளிப்பவை அல்லது தீங்கற்றவை என்பதாகச் சுட்டிக்காட்டப்படும் தீங்கு விளைவிக்கும் வியாபாரப் பொருள்கள் மற்றும் ஏமாற்றத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக சில நாடுகள், ஒழுங்குபடுத்தும் நிறுவனங்களை அரசாங்கத்தில் கொண்டிருக்கின்றன. இந்த முயற்சிகள் இருந்தபோதிலும், பொய் சொல்லும் வியாபாரிகளால் மக்கள் தொடர்ந்து நிதிசம்பந்தமாகப் பாதிக்கப்படுகின்றனர்.
சில மக்களுக்கு, பொய் சொல்லுவது அவ்வளவு எளிதாக இருப்பதால் அது வழக்கமாகிவிடுகிறது. இன்னும் மற்றவர்கள் பொதுவாக உண்மையுள்ளவர்களாய் இருக்கின்றனர், ஆனால் இக்கட்டான நிலைமைகளில் அவர்கள் பொய் சொல்லுவார்கள். வெகு சிலரே எந்தச் சூழ்நிலையின்கீழும் பொய் சொல்ல மறுக்கின்றனர்.
ஒரு பொய் “1. ஒரு தவறான கூற்று அல்லது செய்கை, குறிப்பாக ஏமாற்றும் நோக்குடன் செய்யப்பட்ட ஒன்று . . . 2. ஒரு தவறான அபிப்பிராயத்தைக் கொடுக்கிற அல்லது கொடுப்பதற்காக நோக்கங்கொண்டுள்ள ஏதாவது ஒன்று,” என்பதாக விளக்கப்படுகிறது. பொய் சொல்லுபவர் உண்மையல்ல என்று அறிந்திருக்கும் ஏதாவது ஒன்றை மற்றவர்கள் நம்பும்படி செய்வதே அதன் உள்நோக்கமாக இருக்கிறது. பொய்கள் அல்லது பாதி உண்மைகள் மூலமாக, உண்மையைத் தெரிந்துகொள்வதற்கு உரிமை உடையவர்களை அவன் ஏமாற்ற முயற்சி செய்கிறான்.
பொய் சொல்லுவதற்கான காரணங்கள்
மக்கள் பல காரணங்களுக்காகப் பொய் சொல்லுகின்றனர். இந்தப் போட்டிநிறைந்த உலகில் வெற்றி பெறுவதற்காகத் தங்களுடைய திறமைகளைக்குறித்து பொய் சொல்ல கடமைப்பட்டிருப்பதாக சிலர் நினைக்கின்றனர். மற்றவர்கள் தங்கள் தவறுகளை அல்லது குற்ற உணர்ச்சிகளை பொய்களால் மூடிவிட முயற்சிசெய்கின்றனர். இன்னும் சிலர் தாங்கள் செய்யாத வேலையைச் செய்ததைப்போன்ற அபிப்பிராயத்தைக் கொடுப்பதற்காக அறிக்கைகளைப் பொய்யானதாக்குகின்றனர். இன்னொருவருடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த, தர்மசங்கடமான நிலையைத் தவிர்க்க, முந்தின பொய்களை நியாயப்படுத்த அல்லது மக்களை அவர்களுடைய பணத்தில் ஏமாற்ற பொய் சொல்லுபவர்களும் இருக்கின்றனர்.
பொய் மற்றொருவரை பாதுகாக்கிறது என்பதே ஒரு பொதுவான நியாயநிரூபணமாக இருக்கிறது. இது ஒருவருக்கும் கேடு விளைவிப்பதில்லை என்று அவர்கள் நினைப்பதால் இதைத் தீங்கில்லாப்பொய் என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் உண்மையிலேயே, தீங்கில்லாப்பொய்கள் என்பதாகச் சொல்லப்படும் இவை எந்தக் கெட்ட விளைவுகளையும் விட்டுச்செல்வதில்லையா?
விளைவுகளைச் சிந்தியுங்கள்
தீங்கில்லாப்பொய்கள் பொய் சொல்லுவதைப் பழக்கமாக்கிக்கொள்வதற்கு வழிநடத்தும் ஒரு மாதிரியை அமைக்கக்கூடும்; இது அதிக வினைமையான காரியங்களையும் உட்படுத்தக்கூடும். ஸிசெல்லா பாக் குறிப்புரை எழுதுகிறார்: “‘தீங்கில்லாதது’ என்பதாக வாதாடப்படும் எல்லா பொய்களையும் அவ்வளவு எளிதாக விட்டுவிடமுடியாது. முதலாவதாக, பொய்களின் தீங்கற்றத்தன்மை பேர்போனவகையில் விவாதத்திற்குரியது. தீங்கற்றது அல்லது பயனுள்ளதுங்கூட என்பதாக அந்தப் பொய்யன் கண்டுணருவது ஏமாற்றப்பட்டவரின் பார்வையில் அவ்வாறு இல்லாமல் இருக்கலாம்.”
பொய்கள், அவை எவ்வளவு களங்கமற்றதாகத் தோன்றினாலும், நல்ல மனித உறவுகளுக்கு அழிவுக்கேதுவானவையாக இருக்கின்றன. அந்தப் பொய்யனின் நம்பத்தக்கத்தன்மை நொறுக்கப்படுகிறது, நம்பிக்கையில் ஒரு நிரந்தரமான முறிவும் ஏற்படக்கூடும். பிரபல கட்டுரையாசிரியர் ரால்ஃப் வால்டோ எமர்ஸன் எழுதினார்: “ஒவ்வொரு உண்மை மீறுதலும் அந்தப் பொய்யனுக்கு ஒருவிதமான தற்கொலை மட்டுமல்ல, ஆனால் மனித சமுதாயத்தின் ஆரோக்கியத்தில் ஒரு குத்தாக இருக்கிறது.”
இன்னொரு நபரைப்பற்றி ஒரு தவறான கூற்றைக் கூறுவது ஒரு பொய்யனுக்கு எளிதாக இருக்கிறது. அவன் ஒரு நிரூபணமும் அளிக்காவிட்டாலும், அவனுடைய பொய் சந்தேகத்தை உருவாக்குகிறது; மேலும் அநேகர் அவனுடைய கூற்றை ஆராயாமலே நம்புகின்றனர். இவ்வாறாக, களங்கமற்ற ஒருவரின் நற்பெயர் சேதப்படுத்தப்படுகிறது; தன்னுடைய களங்கமற்றத்தன்மையை நிரூபிக்கவேண்டிய பாரத்தை அவர் சுமக்கிறார். ஆகவே, களங்கமற்றவரைவிட பொய்யனை மக்கள் நம்பும்போது அது கவலைக்குரியதாய் இருக்கிறது; அது பொய்யனோடுள்ள களங்கமற்றவரின் உறவை அழித்துவிடுகிறது.
ஒரு பொய்யன் பொய் சொல்லும் பழக்கத்தை எளிதாக வளர்த்துக்கொள்ள முடியும். ஒரு பொய் பொதுவாக மற்றொன்றுக்கு வழிநடத்துகிறது. தாமஸ் ஜெஃபர்ஸன் என்ற ஆரம்பகால அமெரிக்க அரசியல் வல்லுநர் குறிப்பிட்டார்: “அவ்வளவு கீழ்த்தரமான, அவ்வளவு ஏளனத்துக்குரிய, அவ்வளவு வெறுக்கத்தக்க எந்த ஒரு துர்க்குணமும் இல்லை; ஒருமுறை ஒரு பொய்யைச் சொல்லும்படி தன்னை அனுமதிக்கும் ஒருவன், இரண்டாவது மற்றும் மூன்றாவதுமுறையும் அதைச் செய்வதை அதிக எளிதாகக் காண்கிறான், காலப்போக்கில் அது பழக்கமாக ஆகும்வரையாகச் சென்றுவிடுகிறது.” அது ஒழுக்க வீழ்ச்சிக்கான பாதையாக இருக்கிறது.
பொய் சொல்லுவது எளிதாக இருப்பதற்கான காரணம்
முதல் மனுஷியிடம், அவள் தன்னுடைய சிருஷ்டிகருக்குக் கீழ்ப்படியாவிட்டால் மரணமடைய மாட்டாள் என்பதாக ஒரு கலகக்கார தூதன் அவளிடம் சொன்னபோது பொய் சொல்லுதல் துவங்கியது. அது எல்லாருக்கும் அபூரணம், நோய் மற்றும் மரணத்தைக் கொண்டுவந்து, முழு மனித இனத்திற்கும் கணக்கிடமுடியாத தீங்கில் விளைவடைந்தது.—ஆதியாகமம் 3:1-4; ரோமர் 5:12.
கீழ்ப்படியாத ஆதாம் மற்றும் ஏவாளுடைய காலத்திலிருந்தே, பொய்க்குப் பிதாவாகிய வஞ்சகனுடைய செல்வாக்கு மனிதவர்க்க உலகில் பொய் சொல்லுவதைத் தூண்டும் ஒரு சூழ்நிலையை உண்டாக்கி இருக்கிறது. (யோவான் 8:44) உண்மை என்பது வெறும் சம்பந்தப்பட்டதாகவே இருக்கும்படியான ஒரு சீர்க்கெட்ட உலகமாக இது இருக்கிறது. பொய் சொல்லும் பிரச்னை “வியாபாரம், அரசாங்கம், கல்வி, பொழுதுபோக்கு மற்றும் உடன் குடிமக்களுக்கும் அயலகத்தாருக்குமிடையேயான எளிய அன்றாடக உறவுகளைப் பாதிக்கிறது. . . . முழுமையான உண்மைகள் என்பதாக எதுவும் இல்லை என்ற ஒரே பெரிய பொய்யாகிய சார்புடைமை கோட்பாட்டை நாம் ஏற்றிருக்கிறோம்,” என்று செப்டம்பர் 1986-ன் தி சாட்டர்டே ஈவ்னிங் போஸ்ட் குறிப்பிட்டது.
தாங்கள் ஏமாற்றுபவர்களிடம் ஒற்றுணர்வைக் கொண்டிராத பழக்கமான பொய்யர்களின் நோக்குநிலை அவ்வாறாகவே இருக்கிறது. பொய் சொல்லுதல் அவர்களுக்கு எளிதாக வந்துவிடுகிறது. அது அவர்களுடைய வாழ்க்கை முறை. ஆனால் பழக்கமான பொய்யர்களாக இல்லாத மற்றவர்கள் பயத்தின் காரணமாக தயக்கமின்றி பொய் சொல்லுவர்—குறைகள் வெளிப்படுத்தப்படும் என்ற பயம், தண்டனைக்கான பயம் போன்றவை. அது அபூரண மாம்சத்தின் ஒரு பலவீனமாக இருக்கிறது. இந்த மனப்போக்கு உண்மை பேசுவதற்கான ஒரு தீர்மானத்தைக் கொண்டு எவ்வாறு மாற்றீடு செய்யப்பட முடியும்?
ஏன் உண்மையாக இருக்கவேண்டும்?
உண்மையே நம்முடைய பெரிய சிருஷ்டிகர் எல்லாருக்காகவும் ஏற்படுத்திய தராதரமாகும். அவருடைய எழுதப்பட்ட வார்த்தையாகிய பைபிள், “எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன்,” என்று எபிரெயர் 6:18-ல் குறிப்பிடுகிறது. பூமியில் கடவுளுடைய தனிப்பட்ட பிரதிநிதியாக இருந்த அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவாலும் இதே தராதரமே ஆதரிக்கப்பட்டது. அவரைக் கொல்ல வகைதேடிய யூத மத தலைவர்களிடம் இயேசு சொன்னார்: “தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள். . . . அவரை அறியேன் என்று சொல்வேனாகில் உங்களைப்போல நானும் பொய்யனாயிருப்பேன்.” (யோவான் 8:40, 55) “அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை,” என்பதில் அவர் நமக்கு ஒரு மாதிரியை வைத்தார்.—1 பேதுரு 2:21, 22.
யெகோவா என்னும் பெயரையுடைய நம்முடைய சிருஷ்டிகர், பொய்யை வெறுக்கிறார்; நீதிமொழிகள் 6:16-19 தெளிவாக குறிப்பிடுகிறபடி: “ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள். அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்தும் கை, துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங்கால், அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே.”
இந்த உண்மையான கடவுள், அவருடைய அங்கீகாரத்தைப் பெறுவதற்கு நாம் அவருடைய தராதரங்களின்படி வாழவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அவருடைய ஆவியால் ஏவப்பட்ட வார்த்தை நமக்குக் கட்டளையிடுகிறது: “ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்து”போடுங்கள். (கொலோசெயர் 3:9) பொய் சொல்லும் பழக்கத்தை விட்டுவிட மறுக்கும் மக்கள் அவரால் ஏற்கத்தக்கவர்கள் அல்ல; அவர்கள் அவருடைய பரிசாகிய ஜீவனைப் பெறமாட்டார்கள். உண்மையில், சங்கீதம் 5:6 வெளிப்படையாக, கடவுள் ‘பொய் பேசுகிறவர்களை அழிப்பார்’ என்று கூறுகிறது. “பொய்யர் அனைவரும்” நித்திய அழிவாகிய “இரண்டாம் மரணமாகிய” பங்கையே அடைவர் என்பதாக வெளிப்படுத்துதல் 21:8 மேலுமாக கூறுகிறது. எனவே, பொய் சொல்லுதல் பற்றிய கடவுளுடைய நோக்கை ஏற்றுக்கொள்வது, உண்மையைப் பேசுவதற்கு நமக்கு பலமான காரணத்தைக் கொடுக்கிறது.
ஆனால், உண்மை ஒரு குழப்பமான நிலையை அல்லது சங்கடமான உணர்ச்சிகளை உருவாக்கக்கூடிய ஒரு சூழ்நிலையில் என்ன செய்யப்படவேண்டும்? பொய் சொல்லுதல் ஒருபோதும் தீர்வாக இல்லை, ஆனால் ஒன்றும் பேசாமலிருத்தல் சிலவேளைகளில் தீர்வாக இருக்கலாம். உங்களுடைய நம்பத்தக்கதன்மையைக் கெடுக்கவேகூடிய மற்றும் தெய்வீக அங்கீகாரத்தைப் பெறாமல் இருப்பதற்கு ஆளாக்கக்கூடிய பொய்களை ஏன் பேச வேண்டும்?
பயத்தாலும் மனித பலவீனத்தாலும், ஒருவர் ஒரு பொய்யில் அடைக்கலம் புகும்படியாக சோதிக்கப்படலாம். அதுவே எதிர்க்காமல் செல்வதற்கான எளிய வழியாக அல்லது தவறான தயையாக இருக்கும். அப்போஸ்தலன் பேதுரு தனக்கு இயேசு கிறிஸ்துவைத் தெரியும் என்பதை மூன்று முறை மறுதலித்தபோது, அத்தகைய ஒரு சோதனைக்கே இணங்கிவிட்டார். அதற்குப் பின்னர், பொய் சொன்னதற்காக தன் இருதயத்தில் குத்துண்டவராக உணர்ந்தார். (லூக்கா 22:54-62) அவருடைய உண்மையான மனந்திரும்புதல், கடவுள் அவரை மன்னிக்கும்படியாகத் தூண்டியது; பின்னர் அவர் பல ஊழிய சிலாக்கியங்களால் ஆசீர்வதிக்கப்பட்டதிலிருந்து இது தெரிகிறது. பொய் சொல்லுவதை நிறுத்துவதற்கான ஓர் உறுதியான தீர்மானத்துடன்கூடிய மனந்திரும்புதல்தானே, கடவுள் வெறுப்பவற்றிற்கு தெய்வீக மன்னிப்பைக் கொண்டுவருகின்ற வழியாகும்.
ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு மன்னிப்பைத் தேடுவதைக்காட்டிலும், உங்களுடைய சிருஷ்டிகருடன் ஒரு நல்ல உறவைக் காத்துக்கொண்டு, மற்றவர்களிடம் உண்மை பேசுவதன்மூலம் உங்களுடைய நம்பத்தக்கத்தன்மையைக் காத்துக்கொள்ளுங்கள். சங்கீதம் 15:1, 2 சொல்வதை நினைவில் வையுங்கள்: “கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம்பண்ணுவான்? உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே.”