நைஜீரியாவின் உச்ச நீதிமன்றம் மத சுதந்திரத்தை ஆதரிக்கிறது
ஒரு குடியானவனின் அறுவடையை அந்தக் கிராமத்திலுள்ளவர்கள் கொள்ளையடித்தனர். மற்றவர்கள் ஒரு செங்கல் அடுக்குபவரின் வீட்டைத் தாக்கி அவருடைய கருவிகளைக் கைப்பற்றினர். இன்னும் மற்றவர்கள் வாங்கி விற்பதிலிருந்து ஒரு பெண்ணைத் தடை செய்தார்கள். ஏன் இந்தத் துர்ப்பிரயோகம்? ஏனென்றால், தாக்கப்பட்டவர்கள் எல்லாரும் வயது நிலை சங்கங்களில் கலந்து கொள்ளாத யெகோவாவின் சாட்சிகளாவர். ‘எதில்?’ என்று நீங்கள் வியக்கக்கூடும்.
ஒரு வயது நிலை சங்கம் என்பது சுமார் ஒரே நேரத்தில் ஒரே கிராமத்தில் பிறந்த மக்களால், பொதுவாக ஆண்களால் ஆனது. வயது நிலை தொகுதிகள் கிழக்கு நைஜீரியாவில் சாதாரணமானவை. அவர்கள் ஒரு சமூக திட்டத்தை அமைத்து ஆதரிக்கக்கூடும்; ஆனால் அந்த அங்கத்தினர்கள் வயது வந்துவிட்டனர் என்பதைக் காண்பிப்பதற்காக விக்கிரகாராதனையில் ஈடுபட்டு, ஆவியுலகத் தொடர்புக்குரிய சடங்குகளையும் செய்கின்றனர். உண்மை கிறிஸ்தவர்களுக்கு பைபிள் அத்தகைய பழக்கவழக்கங்களைக் கண்டனம் செய்வதால், அத்தகைய தொகுதிகளுடன் யெகோவாவின் சாட்சிகளுக்கு எந்தவித பங்குமில்லை.—1 கொரிந்தியர் 10:20, 21; 1 யோவான் 5:21.
நைஜீரியாவில் ஆபா என்ற நகரில் சாமுயெல் அகாக்பியூயா என்பவர் ஒரு தையல்காரராக வேலை செய்தார். ஓர் உடல்நல மையத்தைக் கட்டுவதற்காக 1978-ன் ஆரம்பத்தில் அவர் ஒரு “வரி”யைச் செலுத்தவேண்டும் என்பதாக ஆலாயீயிலுள்ள யூம்யூன்காலூ வயது நிலை சங்கத்தின் அங்கத்தினர் கேட்டனர். ஓர் உண்மையான கிறிஸ்தவராக, சாமுயெல் மற்ற மக்களுக்கு உதவிசெய்வதற்காக அளவுக்கு மீறின முயற்சிகள் எடுப்பார்; ஆனால் அவர் மனச்சாட்சியின்படி அந்த வயது நிலை தொகுதியுடன் உட்பட மறுத்தார். அந்த வருடம், ஏப்ரல் 22 அன்று, அந்தத் தொகுதியிலுள்ள ஆறு அங்கத்தினர் அவருடைய கடையினுள் புகுந்து அவருடைய தையல் இயந்திரத்தைக் கைப்பற்றினர்; அவர் அந்தப் பணத்தைச் செலுத்தும்வரையாக அவர்கள் அதை வைத்திருப்பார்கள் என்று சொன்னார்கள். அவர்களுடைய சங்கத்தின் அங்கத்தினராக இல்லாததன் காரணமாக அவர் எந்தப் பணமும் செலுத்த கடமைப்பட்டில்லை என்பதாக சாமுயெல் மறுப்புத் தெரிவித்தார். தன்னுடைய தையல் இயந்திரத்தைத் திரும்ப பெற முடியாதபோது, சாமுயெல் இந்த விஷயத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச்சென்றார்.
நீதிமன்றத்திலிருந்து நீதிமன்றத்திற்கு
முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில், சாமுயெல் அவருடைய வயதின் காரணமாக தானாகவே தங்களுடைய அங்கத்தினரில் ஒருவராகி, அவர்கள் தங்கள்மேல் சுமத்தும் எந்த வரிகளையும் செலுத்த பொறுப்புள்ளவர் ஆகிறார் என்பதாக அந்த வயது நிலை தொகுதி வாதாடியது. மேலும், ஓர் அங்கத்தினர் ஒரு வரியைச் செலுத்தாவிட்டால் அவர் அதை செலுத்தும்வரையாக அவருடைய சொத்து கைப்பற்றப்படும் என்பது பொது வழக்கமாய் இருந்தது.
நீதிமன்றம் ஒத்துக்கொள்ளவில்லை. ஒரு வயது நிலை தொகுதியின் அங்கத்தினராக வேண்டும் என்பதாக சாமுயெலைக் கட்டாயப்படுத்த முடியாது என்பதாக பிப்ரவரி 28, 1980-ல் அது தீர்ப்பளித்தது. முதன்மை குற்றவியல் நீதிபதி குறிப்பிட்டார்: “ஒரு குடிமகன், கூட்டுறவுக்காக ஒரு சுயதெரிவைச் செய்வதைப் பறித்துவிடும் எந்தப் பழக்கமும் நைஜீரியாவின் கூட்டாட்சி குடியரசின் அரசமைப்புச் சட்டத்தின் 37-ம் பிரிவுக்கு மாறானதாக இருப்பதால், சட்டத்தின் கட்டாய நிறைவேற்றத்தைப் பெறமுடியாது.”
அந்த வயது நிலை தொகுதி, இந்தத் தீர்ப்பைக்குறித்து உயர் நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்து வெற்றிபெற்றது. இது வெறுமனே தன்னுடைய சொந்த சமூகத்தின் வளர்ச்சிக்காக உதவுவதற்கான ஒரு வழியாக இருக்கிறது என்று குறிப்பிட்டு, சாமுயெலை அந்த வரியைச் செலுத்தும்படியாக அங்குள்ள நீதிபதி கட்டளையிட்டார்.
பின்பு சாமுயெல் தான் அநீதி என்று கண்டதற்காக மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு நீதிமன்றம் சாமுயெலுக்குச் சாதகமாகத் தீர்மானித்து உயர் நீதிமன்ற தீர்ப்பைத் திருப்பியது. தோல்வியை ஏற்க மனதில்லாமல், அந்த வயது நிலை தொகுதி இந்த வழக்கை நைஜீரியாவின் உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றது.
இதற்கிடையில், தொகுதி அங்கத்தினர் சாமுயெலின் கிராமத்தில் சுறுசுறுப்பாக இருந்திருக்கின்றனர். சாட்சிகள் எல்லா சமூக திட்டங்களுக்கும் விரோதமாக இருக்கிறார்கள் என்பதாக வாதாடி, அந்தப் பகுதியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளின் வேலைகளுக்கு தடை விதிக்கும்படியாக அந்தக் கிராம தலைவரைச் சம்மதிக்க வைத்தனர். யெகோவாவின் சாட்சிகளுடன் தொடர்புகொள்ளும் எவரும் தண்டம்விதிக்கப்படுவார்கள் என்பதாக நகரில் பறையறைவிப்பவன் அறிவித்தான். பக்கத்து நகரங்களிலுள்ள சாட்சிகள் இடைப்பட்டு கிராமத்துப் பெரியவர்களிடம் காரியத்தைத் தெளிவுபடுத்தினர். கடவுளுடைய மக்கள் எந்தவிதத்திலும் சமூக வளர்ச்சிக்கு எதிராக இல்லை என்று விளக்கினர். உண்மையில், வயது நிலை தொகுதிகளால் ஆதரிக்கப்படாத சமூக திட்டங்களுக்கு தான் நன்கொடை அளித்ததை நிரூபிப்பதற்கான ரசீதுகளை சாமுயெல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். பின்பு சாட்சிகளை சமுதாயத்திலிருந்து ஒதுக்கிவைப்பதற்கான தீர்மானத்தை அந்தக் கிராமத்துப் பெரியவர்கள் மாற்றியமைத்தனர்.
மத சுதந்திரம் வெற்றி அடைகிறது
நைஜீரிய உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள், அக்டோபர் 21, 1991 அன்று, சாமுயெலுக்கு ஆதரவாக ஒருமனதாகத் தீர்ப்பளித்தனர். நீதிபதி பால் நவோக்கேடீ என்பவரால் முதலாவது கொடுக்கப்பட்ட தீர்ப்பை விவரிப்பவராய், நீதிபதி ஆபூபாகார் வாலீ குறிப்பிட்டார்: “எதிர்வாதி [சாமுயெல்] அந்த வரியை [சுமத்தப்பட்ட வரி] செலுத்துவதற்கு எதிராக இல்லை; ஆனால் ஒரு சங்கம், குழாம் அல்லது வயது நிலையின் அங்கத்தினராக இருப்பதற்கே எதிராக இருக்கிறார், ஏனென்றால் அவர் யெகோவாவின் சாட்சி[களின்] ஓர் அங்கத்தினராக இருப்பதால் இது அவருடைய மத நம்பிக்கைக்கு விரோதமாக இருக்கிறது.”
அந்த நீதிபதி தொடர்ந்தார்: “1963-ன் அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 24(1) எல்லா நைஜீரிய குடிமக்களுக்கும் மனச்சாட்சி, கருத்து மற்றும் மத சுயாதீனத்தை உறுதியளித்தது. வயது நிலையில் சேராமல் இருப்பதைத் தடைசெய்யும் அவருடைய மத, கருத்துச்சார்ந்த மற்றும் மனச்சாட்சிக்கேற்ற கொள்கையைக் கொண்டிருக்க எதிர்வாதி உரிமை உடையவராய் இருக்கிறார். மற்றபடி இதற்கு மாறாக அழுத்தந்தரும் எந்தப் பழக்கமும் அரசமைப்புச்சட்டத்திற்கு மாறானதாய் இருப்பதால் அந்த அளவிற்குச் சட்டப்படி செல்லுபடியாகாததாக இருக்கிறது.”
சுருங்கச்சொன்னால், அங்கத்தினராதல் ஒரு சமூக பழக்கமாக இருந்தாலுங்கூட, ஒருவரையும் ஒரு வயது நிலை தொகுதியைச் சேருவதற்கு சட்டப்பூர்வமாக கட்டாயப்படுத்த முடியாது என்பதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. செலுத்தப்படும் தொகை சமூக வளர்ச்சிக்காக இருந்தாலுங்கூட, ஒருவர் அங்கத்தினராக இல்லாத ஒரு சங்கத்தின் வழியாய் அந்தத் தொகை செலுத்தப்படுவதற்கு ஒருவரை சட்டப்பூர்வமாகக் கட்டாயப்படுத்த முடியாது என்பதாகவும் அது தீர்ப்பளித்தது. ஆக, இவ்வளவு சிறியதாகத் தோன்றும் ஒரு விவரம், எல்லா நைஜீரியர்களின் மத சுதந்திரத்தையும் நிலைநிறுத்த உதவியிருக்கிறது.