உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w93 2/1 பக். 15-21
  • ஒரு நோக்கமுடைய கல்வி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஒரு நோக்கமுடைய கல்வி
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பயனுள்ள ஊழியர்களாக இருப்பதற்கு திறமைகள் தேவை
  • தகுதியான பள்ளிபடிப்பின் அனுகூலங்கள்
  • போதுமான கல்வி
  • கல்வியைக் குறித்து ஒரு சமநிலையான நோக்கு
  • செலவைக் கணக்கிடுதல்
  • ஐக்கியப்பட்ட, கல்வியறிவுள்ள ஒரு ஜனம்
  • கல்வி கற்பதை பைபிள் ஆட்சேபிக்கிறதா?
    விழித்தெழு!—1998
  • கல்வி—யெகோவாவைத் துதிக்க அதைப் பயன்படுத்துங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • கல்வியை அதனிடத்தில் வைப்பது
    விழித்தெழு!—1994
  • என் பிள்ளை பள்ளிக்குப் போக வேண்டுமா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
w93 2/1 பக். 15-21

ஒரு நோக்கமுடைய கல்வி

“நீதிமானுக்கு உபதேசம்பண்ணு, அவன் அறிவில் விருத்தியடைவான்.” —நீதிமொழிகள் 9:9, NW.

1. அறிவின் சம்பந்தமாக யெகோவா தம்முடைய ஊழியர்களிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன?

யெகோவா “அறிவின் தேவன்.” (1 சாமுவேல் 2:3, NW) அவர் தம்முடைய ஊழியர்களுக்கு கல்வியை அளிக்கிறார். இஸ்ரவேலைக் குறித்து அதே காலத்தில் வாழும் மக்கள் இவ்வாறு சொல்வார்கள் என்று மோசே முன்னுரைத்தார்: “இந்தப் பெரிய ஜாதியே ஞானமும் விவேகமுமுள்ள ஜனங்கள்.” (உபாகமம் 4:6) அதேபோன்று மெய்க் கிறிஸ்தவர்கள் அறிவுள்ளவர்களாக இருக்கவேண்டும். அவர்கள் கடவுளுடைய வார்த்தையின் மிகச்சிறந்த மாணாக்கராக இருப்பது அவசியமாகும். இப்படிப்பட்ட ஒரு படிப்பின் நோக்கத்தை காண்பிப்பவராய் அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார்: “நாங்கள் . . . உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம் பண்ணுகிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும், சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும் . . . உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்.”—கொலோசெயர் 1:9-11.

2. (எ) கடவுளைப் பற்றிய திருத்தமான அறிவை பெற்றுக்கொள்வதற்கு என்ன அவசியமாயிருக்கிறது? (பி) யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு இந்த விஷயத்தை எவ்வாறு கையாண்டிருக்கிறது?

2 கடவுளையும் அவருடைய நோக்கங்களையும் பற்றிய திருத்தமான அறிவைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தோடு படிப்பது, குறைந்தபட்ச அளவாவது கல்வியறிவுடையவர்களாக இருப்பதை தேவைப்படுத்துகிறது. ஆனால் கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்தைக் கற்றுக்கொண்டிருக்கும் அநேக ஆட்கள் சரியான உலகப்பிரகாரமான கல்வியை பெற்றுக்கொள்ள சிறிதளவே அல்லது எந்த வாய்ப்புமே இல்லாத தேசங்களில் வாழ்ந்துவருகிறார்கள். அவர்கள் பிரதிகூலமான நிலையில் இருந்தார்கள். இந்தப் பிரச்னையை மேற்கொள்ள, யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு, தேவையிருக்கும் இடங்களில் எழுத்தறிவு வகுப்புகள் சபைகளில் ஒழுங்குசெய்யப்பட வேண்டும் என்று அநேக வருடங்களாக இப்பொழுது அறிவுறுத்தி வந்துள்ளது. முப்பது வருடங்களுக்கு முன்பு, பிரேஸில் நாட்டு செய்தித்தாள் Diario de Mogi “எழுத்தறிவு இல்லாமைக்கு எதிராக யெகோவாவின் சாட்சிகள் போர்தொடுக்கிறார்கள்,” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை பிரசுரித்தது. அது சொன்னதாவது: “தகுதியுள்ள ஒரு போதகர் . . . பொறுமையாக மற்றவர்களுக்குப் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொடுக்கிறார். . . . மாணாக்கர்கள், சூழ்நிலைமைகள் அவர்களை வற்புறுத்தும் காரணத்தால் கடவுளுடைய ஊழியர்களாக பேச்சுக்களைக் கொடுக்கும்பொருட்டு அவர்கள் மொழி அறிவை வளர்த்துக்கொள்வது அவசியமாகும்.” உலகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கான ஆட்கள் இவ்விதமாக கடவுளுடைய வார்த்தையின் நல்ல மாணாக்கர்களாக ஆவதற்கு உதவப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் உயர்வான ஒரு நோக்கத்தை மனதில்கொண்டவர்களாய் இந்த அடிப்படை கல்வியை ஏற்றுக்கொண்டனர்.

பயனுள்ள ஊழியர்களாக இருப்பதற்கு திறமைகள் தேவை

3, 4. (எ) மெய்க் கிறிஸ்தவர்கள் ஏன் கல்வியில் அக்கறையுள்ளவர்களாக இருக்கிறார்கள்? (பி) இஸ்ரவேலில் நிலைமை எவ்வாறு இருந்தது, நம்முடைய கிறிஸ்தவ சபைகளுக்குள்ளே என்ன அடிப்படைக் கல்வி இன்றியமையாததாக இருக்கிறது?

3 மெய்க் கிறிஸ்தவர்கள் கல்விகற்றவர்களாயிருப்பதை அனுபவிப்பதால் அல்ல, ஆனால் யெகோவாவின் அதிக பயனுள்ள ஊழியர்களாக ஆகும்பொருட்டு கல்வியில் அக்கறையுள்ளவர்களாக இருக்கிறார்கள். கிறிஸ்து எல்லா கிறிஸ்தவர்களுக்கும், “சகல ஜாதிகளையும் சீஷராக்கி, . . . நான் . . . கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணு”ம் வேலையை கொடுத்தார். (மத்தேயு 28:19, 20) மற்றவர்களுக்கு உபதேசம்பண்ண, அவர்கள்தாமே முதலாவது கற்றுக்கொள்ள வேண்டும், இது நல்ல படிப்பு முறைகளைத் தேவைப்படுத்துகிறது. அவர்கள் வேதாகமத்தைக் கவனமாக ஆராயும் திறமையுள்ளவர்களாக இருப்பது அவசியமாகும். (அப்போஸ்தலர் 17:11) தங்கள் வேலையை நிறைவேற்றுவதற்கு, அவர்கள் சரளமாக வாசிக்க முடிகிறவர்களாக இருப்பதும்கூட அவசியமாகும்.—பாருங்கள்: ஆபகூக் 2:2; 1 தீமோத்தேயு 4:13.

4 முந்தையக் கட்டுரையில் நாம் பார்த்தவண்ணமே, மொத்தத்தில் பூர்வ இஸ்ரவேலில் சிறுவர்களும்கூட எவ்விதமாக வாசிப்பது மற்றும் எழுதுவது என்பதை அறிந்தவர்களாக இருந்தனர் என்று நம்புவதற்கு நல்ல காரணம் இருக்கிறது. (நியாயாதிபதிகள் 8:14; ஏசாயா 10:19) கிறிஸ்தவ ஊழியர்கள் இன்று வீட்டுக்கு வீடு சாட்சிகொடுக்கையில் நேர்த்தியாக குறிப்பெடுப்பது அவசியமாகும். அவர்கள் கடிதங்கள் எழுதுகிறார்கள், கூட்டங்களில் குறிப்பெடுக்கிறார்கள், தங்கள் படிப்பு தகவலில் விளக்க குறிப்பெழுதுகிறார்கள். இவை அனைத்துக்கும் தெளிவான கையெழுத்து தேவையாக இருக்கிறது. கிறிஸ்தவ சபைக்குள்ளே பதிவுகளை வைப்பது, குறைந்தபட்ச கணித அறிவை தேவைப்படுத்துவதாக உள்ளது.

தகுதியான பள்ளிபடிப்பின் அனுகூலங்கள்

5. (எ) “ஸ்கூல்” (பள்ளி) என்ற வார்த்தையின் ஆரம்பம் என்ன? (பி) என்ன வாய்ப்பை இளைஞர் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்?

5 “ஸ்கூல்” (பள்ளி) என்ற வார்த்தை ஆரம்பத்தில் “ஓய்வுநேரம்” அல்லது கல்வி கற்றல் போன்ற ஏதோ ஒரு முக்கியமான நடவடிக்கைக்காக ஓய்வான நேரத்தின் உபயோகம் என்று பொருள்பட்ட skho·leʹ என்ற கிரேக்க சொல்லிலிருந்து வருவது அக்கறையூட்டுவதாய் உள்ளது. பின்னால் அது இப்படிப்பட்ட கல்வி கற்றுக்கொடுக்கப்பட்ட இடத்தைக் குறிப்பதாக ஆனது. ஒரு காலத்தில், சலுகைப்பெற்ற வகுப்பினரே—கிரீஸ் இன்னும் மற்ற அநேக தேசங்களில்—கல்வி கற்க ஓய்வுநேரத்தை உடையவர்களாக இருந்தார்கள் என்பதை இது சுட்டிக்காண்பிக்கிறது. தொழிலாள வர்க்கம் பொதுவாக அறியாமையிலேயே இருந்தது. இன்று, பெரும்பாலான தேசங்களில் பிள்ளைகளும் இளைஞரும் கற்றுக்கொள்ள அவகாசம் கொடுக்கப்படுகின்றனர். இளம் சாட்சிகள் நிச்சயமாகவே தகவலறிந்தவர்களாகவும் யெகோவாவின் திறமையான ஊழியர்களாகவும் ஆகும்பொருட்டு வாய்ப்பான நேரத்தை வாங்கிக்கொள்ள வேண்டும்.—எபேசியர் 5:15, 16.

6, 7. (எ) தகுதியான பள்ளிபடிப்பின் சில அனுகூலங்கள் யாவை? (பி) ஓர் அந்நிய மொழியைக் கற்றுக்கொள்வது என்ன வகைகளில் பிரயோஜனமாக இருக்கும்? (சி) பள்ளிபடிப்பை முடித்த பிறகு இன்று அநேக இளைஞர் மத்தியிலிருக்கும் நிலைமை என்ன?

6 வரலாறு, புவியியல், அறிவியல் ஆகியவற்றைப் பற்றிய அடிப்படை அறிவு சமநிலையுள்ள ஊழியர்களாக ஆவதற்கு இளம் சாட்சிகளுக்கு உதவிசெய்யும். அவர்களுடைய பள்ளிபடிப்பு அநேக பாடங்களை மட்டுமல்லாமல் கல்விகற்கும் முறையையும்கூட அவர்களுக்குக் கற்பிக்கும். மெய்க் கிறிஸ்தவர்கள் பள்ளியை விட்டுவெளியேறுகையில் கற்றுக்கொள்வதையும் படிப்பதையும் நிறுத்திவிடுவதில்லை. இருப்பினும் அவர்கள் தங்களுடைய படிப்பிலிருந்து பெற்றுக்கொள்ளும் காரியங்கள், எவ்வாறு படிப்பது என்பதை அறிந்திருப்பதன் பேரில் வெகுவாக சார்ந்திருக்கும். உலகப்பிரகாரமான படிப்பும் சபை படிப்பும் அவர்களுடைய சிந்தனா திறமைகளை வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு உதவிசெய்யக்கூடும். (நீதிமொழிகள் 5:1, 2) அவர்கள் வாசிக்கையில் எது முக்கியம், எது குறித்துக்கொள்ள மற்றும் மனப்பாடம் செய்ய தகுதியுள்ளது என்பதை நல்லவிதமாக பகுத்துணர முடிகிறவர்களாக இருப்பார்கள்.

7 உதாரணமாக ஓர் அந்நிய மொழியைக் கற்றுக்கொள்வது, இளைஞரின் மனதின் திறமையை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல் யெகோவாவின் அமைப்புக்கு அவர்களை அதிக பிரயோஜனமுள்ளவர்களாகவும்கூட ஆக்குகிறது. ஒருசில உவாட்ச் டவர் சங்கத்தின் கிளை அலுவலகங்களில், அநேக இளம் சகோதரர்கள் ஆங்கிலத்தை சரளமாக பேசவும் அல்லது வாசிக்கவும் முடிவது பயனுள்ளதாக இருப்பதைக் கண்டிருக்கிறார்கள். மேலுமாக, எல்லா கிறிஸ்தவர்களும் தங்கள் தாய் மொழியில் தெளிவாகப் பேச முடிகிறவர்களாக இருக்க முயற்சி செய்யவேண்டும். ராஜ்யத்தின் நற்செய்தி தெளிவாக, இலக்கண சுத்தத்தோடு வெளிப்படுத்தப்பட தகுதியுள்ளதாக இருக்கிறது. உலகில் இன்று அநேக இளைஞர் பள்ளியில் படித்து முடித்த பிறகு இன்னும் சரியாக எழுதுவதிலும் பேசுவதிலும் மற்றும் மிக எளிய கணக்கிலும்கூட பிரச்னையுள்ளவர்களாக இருப்பதை உண்மைகள் காண்பிக்கின்றன; அவர்கள் வரலாறு மற்றும் புவியியலிலும் தெளிவற்ற அறிவையே உடையவர்களாக இருக்கின்றனர்.

போதுமான கல்வி

8. உலகப்பிரகாரமான கல்வி மற்றும் ஒரு மனிதன் தன்னைத்தானே கவனித்துக்கொள்ள முடிகிறவராக இருக்கும் விஷயத்தில் என்ன வேதவசனங்கள் பொருத்தமாக இருக்கின்றன?

8 ஆகவே உலகப்பிரகாரமான கல்வியினிடமாக கிறிஸ்தவனின் நோக்குநிலையை சிந்திப்பதற்கு இதுவே பொருத்தமான சமயமாகத் தோன்றுகிறது. இந்த விஷயத்தில் என்ன பைபிள் நியமங்கள் பொருந்துகின்றன? முதலாவது, பெரும்பாலான தேசங்களில் “இராயனுக்கு” சரியான கீழ்ப்படிதல், கிறிஸ்தவ பெற்றோர் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதைத் தேவைப்படுத்துகிறது. (மாற்கு 12:17; தீத்து 3:1) இளம் சாட்சிகளைப் பொருத்தவரையில், அவர்கள் தங்கள் பள்ளிவேலைகளில் கொலோசெயர் 3:24-ஐ மனதில் கொள்ளவேண்டும். அது சொல்வதாவது: “எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.” இரண்டாவது நியமமானது, கிறிஸ்தவர்கள், அவர்கள் முழு-நேர பயனியர் ஊழியர்களாக இருந்தாலும்கூட தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ள முடிகிறவர்களாக இருக்கவேண்டும். (2 தெசலோனிக்கேயர் 3:10-12) விவாகமானவராக இருந்தால், ஒரு மனிதன் தன் மனைவியையும் பிறக்கக்கூடிய எந்தக் குழந்தைகளையும் சரியாக கவனித்துக்கொள்ளமுடிகிறவனாகவும் இருந்து, தேவையிலிருப்பவர்களுக்குக் கொடுக்கவும் உள்ளூர் மற்றும் உலகளாவிய பிரசங்க வேலையை ஆதரிக்கவும் கொடுப்பதற்கு கொஞ்சம் கூடுதலாக உடையவனாகவும் இருக்கவேண்டும்.—எபேசியர் 4:28; 1 தீமோத்தேயு 5:8.

9, 10. (எ) அநேக தேசங்களில் போக்கு என்னவாக இருப்பது தெரிகிறது? (பி) ஒரு பயனியர் ஊழியர் போதிய ஊதியமாக எதைக் கருதுவார்?

9 இந்தப் பைபிள் நியமங்களை மதிக்கவும் தன்னுடைய கிறிஸ்தவ பொறுப்புகளை நிறைவேற்றவும் ஓர் இளம் கிறிஸ்தவனுக்கு எந்தளவு கல்வி தேவையாக இருக்கிறது? இது தேசத்துக்கு தேசம் வித்தியாசப்படுகிறது. இருப்பினும், மொத்தத்தில், அநேக தேசங்களில் போதுமான ஊதியம்பெறுவதற்கு தேவையான படிப்பின் அளவு ஒருசில ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட இப்பொழுது அதிகமாக இருக்கும் ஒரு பொதுப்போக்கு இருப்பது தெரிகிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலுள்ள உவாட்ச் டவர் கிளை அலுவலகங்களிலிருந்து பெறப்பட்ட அறிக்கைகள், வெறுமென சட்டம் தேவைப்படுத்துகிற குறைந்தபட்ச பள்ளிப்படிப்பை முடித்தபின்பு அல்லது சில தேசங்களில் உயர்நிலை அல்லது நடுநிலைக் கல்வியை முடித்தபின்னும்கூட போதுமான ஊதியம் தரும் வேலைகளைக் கண்டடைவது கடினமாக இருப்பதைக் காண்பிக்கிறது.

10 “போதுமான ஊதியம்” என்பதன் பொருள் என்ன? அது உயர்ந்த ஊதியம்தரும் வேலைகளைக் குறிக்காது. வெப்ஸ்டர்ஸ் அகராதி இந்தச் சூழமைவில் “போதுமான” என்பதற்கு “போதிய, தேவையை நிறைவுசெய்யத்தக்க,” என்பதாக விளக்கமளிக்கிறது. உதாரணமாக நற்செய்தியின் பயனியர் ஊழியர்களாக ஆக விரும்புகிறவர்களுக்கு எது “போதியதாக” கருதப்படலாம்? இப்படிப்பட்டவர்கள் பொதுவாக தங்கள் சகோதரர்களுக்கு அல்லது தங்கள் குடும்பத்தாருக்கு “பாரமாயிராதபடிக்கு” ஒரு பகுதிநேர வேலை தேவையாயிருக்கிறது. (1 தெசலோனிக்கேயர் 2:9) அவர்கள் சம்பாதிப்பது மதிப்பாக வாழவும் அதேசமயத்தில் தங்கள் கிறிஸ்தவ ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு போதுமான நேரத்துக்கும் சக்திக்கும் இடமளிக்குமானால் அவர்களுடைய ஊதியம் “போதியதாக,” அல்லது “தேவையை நிறைவுசெய்யத்தக்கதாக,” இருப்பதாகச் சொல்லப்படலாம்.

11. ஒருசில இளைஞர் ஏன் பயனியர் சேவையிலிருந்து விலகிவிட்டனர், என்ன கேள்வி எழுப்பப்படுகிறது?

11 இன்று அநேகமாக நிலைமை என்னவாக இருக்கிறது? ஒரு சில தேசங்களில் அநேக நல்லெண்ணமுடைய இளைஞர் பயனியர்களாக ஆகும்பொருட்டு தேவையான குறைந்தபட்ச பள்ளிபடிப்பை முடித்த பின்னர் பள்ளியிலிருந்து வெளியேறியிருப்பது அறிவிக்கப்பட்டிருகிறது. அவர்களுக்கு எந்த ஒரு தொழிலோ அல்லது கல்வி தகுதிகளோ இருக்கவில்லை. அவர்களுக்கு அவர்களுடைய பெற்றோர் பணஉதவி செய்யவில்லையென்றால் அவர்கள் ஒரு பகுதிநேர வேலையை கண்டுபிடிக்க வேண்டும். ஒரு சிலர் வாழ்வதற்குப் போதுமான பணத்தைக்கொண்டிருப்பதற்காக நீண்ட மணிநேரங்கள் வேலைசெய்வதைத் தேவைப்படுத்தும் வேலைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதாக இருந்திருக்கிறது. சரீரப்பிரகாரமாக களைப்படைந்தவர்களாக அவர்கள் பயனியர் ஊழியத்திலிருந்து விலகிவிட்டனர். இப்படிப்பட்டவர்கள் தங்களைக் கவனித்துக்கொண்டு அதே சமயத்தில் பயனியர் சேவைக்கு மீண்டும் வருவதற்கு என்ன செய்யலாம்?

கல்வியைக் குறித்து ஒரு சமநிலையான நோக்கு

12. (எ) கல்வி பற்றியதில் மட்டுமீறிய என்ன இரண்டு கருத்துக்களை ஒரு கிறிஸ்தவன் தவிர்ப்பான்? (பி) யெகோவாவின் ஒப்புக்கொடுத்த ஊழியர்களுக்கும் அவர்களுடைய பிள்ளைகளுக்கும் கல்வி என்ன நோக்கத்தை சேவிக்க வேண்டும்?

12 கல்வியைக் குறித்து ஒரு சமநிலையான நோக்கு உதவக்கூடும். உலகிலுள்ள அநேக இளைஞருக்கு, கல்வி, அந்தஸ்தின் அடையாளமாக, சமுதாய புகழ் ஏணியில் ஏறுவதற்கு அவர்களுக்கு உதவிசெய்யும் ஒன்றாக, செழுமையான, பொருள்பற்றுள்ள வாழ்க்கைப்-பாணிக்கு திறவுகோலாக இருக்கிறது. மற்றவர்களுக்கு பள்ளிபடிப்பு கூடியவரை சீக்கிரமாக முடிக்கப்படவேண்டிய ஒரு வேலையாக இருக்கிறது. இந்தக் கருத்துக்களில் எதுவுமே கிறிஸ்தவர்களுக்கு தகுதியானதில்லை. அப்படியென்றால் எது “சமநிலையான நோக்கு” என்று கருதப்படலாம்? கிறிஸ்தவர்கள் விரும்பத்தக்க ஒரு விளைவை முயன்று அடைவதற்கு பயன்படும் ஒரு முறையாக கல்வியைக் கருதவேண்டும். இந்தக் கடைசி நாட்களில், யெகோவாவுக்கு முடிந்த அளவும் திறம்பட்ட வகையிலும் சேவைசெய்வதே அவர்களுடைய நோக்கமாகும். அவர்கள் வாழும் தேசத்தில், குறைந்தபட்ச அல்லது உயர்நிலைக் கல்வியும்கூட பயனியர்களாக தங்களை கவனித்துக்கொள்ள பற்றாத ஊதியத்தையே அளிக்கும் வேலைகளைமாத்திரமே கண்டடைய அவர்களை அனுமதிக்குமானால், அப்போது துணைக்கல்வி அல்லது பயிற்சி பெறுதல் கருதப்படலாம். இது குறிப்பாக முழுநேர ஊழியத்தை இலக்காகக்கொண்டே செய்யப்படும்.

13. (எ) பிலிப்பைன்ஸில் ஒரு சகோதரியால் தன் குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுகின்ற அதே சமயத்தில் எவ்வாறு தன் பயனியர் சேவையை தொடர்ந்து செய்ய முடிந்திருக்கிறது? (பி) என்ன எச்சரிப்பு காலத்திற்கேற்றதாக இருக்கிறது?

13 ஒருசிலர் முழுநேர ஊழியத்தில் ஈடுபடவோ அல்லது அதைத் திரும்பவும் தொடங்கவோ உதவிசெய்யும் வேலை வாய்ப்புகளைத் திறந்துவைத்திருக்கும் பயிற்சிகளை எடுத்திருக்கிறார்கள். பிலிப்பைன்ஸில் ஒரு சகோதரி குடும்பத்தின் உணவு ஆதரவுக்கு வருவாயுடைவராக இருந்தாள், ஆனால் அவள் பயனியர் செய்ய விரும்பினாள். கிளை அலுவலகம் அறிக்கை செய்கிறது: “இதை அவளால் செய்ய முடிந்திருக்கிறது, ஏனென்றால் சான்றிடப்பட்ட பொதுக் கணக்கராக தகுதிபெற அவள் கூடுதலான கல்வியை பெற்றிருக்கிறாள்.” அதே கிளை அறிக்கை இவ்விதமாகச் சொன்னது: “படித்துக்கொண்டே அதே சமயத்தில் பயனியர் செய்வதற்கு தங்கள் அட்டவணைகளை ஒழுங்குசெய்ய முடிந்திருக்கும் அநேகர் எங்களிடம் இருக்கிறார்கள். அதிக கல்வியார்வமுள்ளவர்களாக இருப்பதால் பொதுவாக அவர்கள் மேம்பட்ட பிரஸ்தாபிகளாக ஆகிறார்கள், உலகப்பிரகாரமான நாட்டங்களில் அளவுக்கு அதிகமாக பேராசையுள்ளவர்களாக இல்லாத பட்சத்தில் அவர்கள் அப்படி இருக்கிறார்கள்.” கடைசி குறிப்பு சிந்திப்பதற்கு நமக்கு காரணத்தைக் கொடுக்கிறது. தேவை இருப்பதாகத் தோன்றும் இடங்களில் கூடுதலான படிப்பின் நோக்கம் மறக்கப்பட்டுவிடவோ அல்லது பொருளாதார இலக்காக மாறிவிடவோ கூடாது.

14, 15. (எ) கல்வி சம்பந்தப்பட்டதில் ஏன் எந்தக் கண்டிப்பான சட்டங்களையும் உண்டுபண்ணக்கூடாது? (பி) பொறுப்புள்ள சில சகோதரர்கள் என்ன உலகப்பிரகாரமான கல்வியைப் பெற்றனர், ஆனால் இதை எது ஈடுசெய்துவிட்டிருக்கிறது?

14 வெகுசில தேசங்களில், உயர்நிலைப் பள்ளிகள் பட்டம்பெறும் சமயத்திற்குள் ஓர் இளம் கிறிஸ்தவனை ஏதோ ஒரு தொழிலுக்கு அல்லது வேலைக்கு தயார்செய்யக்கூடிய வாழ்க்கைத் தொழிற்கல்வியை அளிக்கின்றன. இது இவ்வாறாக இல்லாவிட்டாலும், ஒருசில நாடுகளில், அடிப்படைப் பள்ளிப் படிப்பை மாத்திரமே கொண்ட ஊக்கமுள்ள இளைஞர் பயனியர் செய்வதற்கு போதுமான அளவு சம்பாதிக்க தங்களுக்கு உதவும் பகுதிநேர வேலையை உண்மையிலேயே கண்டடைகிறார்கள். ஆகவே கூடுதலான கல்விக்கு சாதகமாகவோ அல்லது எதிராகவோ எந்தக் கண்டிப்பான சட்டங்களையும் உண்டுபண்ணக்கூடாது.

15 பிரயாண கண்காணிகளாக, சங்கத்தின் தலைமைக்காரியாலயத்தில், அல்லது கிளை அலுவலகங்கள் ஒன்றில் பொறுப்புள்ள ஸ்தானங்களில் இப்பொழுது சேவை செய்துவரும் அநேகர், அடிப்படைக் கல்வியை மட்டுமே பெற்றவர்களாக இருக்கின்றனர். அவர்கள் உண்மையுள்ள பயனியர்களாக, கற்றுக்கொள்வதை ஒருபோதும் நிறுத்திவிடாமல், பயிற்சி பெற்று, அதிகமான பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் தாங்கள் செய்த தெரிவுகள் குறித்து ஒருபோதும் வருந்துவதில்லை. மறுபட்சத்தில், அவர்களுடன் இருந்த சிலர் பல்கலைக்கழக கல்வியை பெற்றுக்கொள்ள தீர்மானித்து விசுவாசத்தை-அழிக்கும் தத்துவங்கள் மற்றும் “இவ்வுலகத்தின் ஞானத்”துக்கு வயப்பட்டு ஆவிக்குரிய வகையில் முன்னேறாமல் இருந்துவிட்டார்கள்.—1 கொரிந்தியர் 1:19-21; 3:19, 20; கொலோசெயர் 2:8.

செலவைக் கணக்கிடுதல்

16. (எ) கூடுதலான கல்வி விரும்பத்தக்கதா என்பதை தீர்மானிப்பது யார், எது மனதில் பிரதானமாக வைக்கப்படவேண்டும்? (பி) எது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்?

16 ஓர் இளம் கிறிஸ்தவன் கூடுதலான கல்வியை அல்லது பயிற்சியை பெறவேண்டுமா என்பதை யார் தீர்மானிப்பது? பைபிளிலுள்ள தலைமைத்துவ நியமம் இங்கே வருகிறது. (1 கொரிந்தியர் 11:3; எபேசியர் 6:1) இதன் அடிப்படையில் ஒரு தொழில் அல்லது வேலையை தெரிவுசெய்யும் விஷயத்திலும் அதன் காரணமாக தேவைப்படும் கல்வியின் அளவை குறித்ததிலும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வழிநடத்த நிச்சயமாகவே விரும்புவர். அநேக தேசங்களில் கல்வி மற்றும் வேலை பற்றிய தெரிவுகள் உயர்நிலைக் கல்வியின் ஆரம்பத்தின்போதே செய்யப்படவேண்டும். அதுதானே கிறிஸ்தவ பெற்றோரும் இளைஞரும் ராஜ்ய அக்கறைகளை பிரதானமாக மனதில்கொண்டு ஞானமான தெரிவைச் செய்வதற்கு யெகோவாவின் வழிநடத்தலை நாடவேண்டிய ஒரு சமயமாக இருக்கிறது. இளைஞர் வித்தியாசமான மனச்சாய்வுகளையும் திறமைகளையும் உடையவர்களாக இருக்கிறார்கள். ஞானமுள்ள பெற்றோர் இவற்றை கவனத்தில் எடுத்துக்கொள்வர். உடலுழைப்பு வேலையாக இருந்தாலும் அல்லது உடலுழைப்பற்ற வேலையாக இருந்தாலும் எல்லா நாணயமான வேலையும் கனமுள்ளதே. உலகம் அலுவலக வேலையை உயர்த்தி ஒருவருடைய கையால் கடினமாக உழைப்பதை குறைவாக மதிப்பிட்டாலும், பைபிள் அவ்விதமாகச் செய்வதில்லை. (அப்போஸ்தலர் 18:3) ஆகவே இன்று பெற்றோரும் இளம் கிறிஸ்தவர்களும் அனுகூலங்களையும் பிரதிகூலங்களையும் கவனமாகவும் ஜெபசிந்தையுடனும் சீர்தூக்கிப் பார்த்து, உயர்நிலைப்பள்ளி படிப்புக்குப் பின் தொடர்ந்து படிப்பதற்கு சாதகமாகவோ அல்லது எதிராகவோ தீர்மானம் செய்வார்களேயானால் சபையிலுள்ள மற்றவர்கள் அவர்களை குறைசொல்லக்கூடாது.

17 கிறிஸ்தவ பெற்றோர் உயர்நிலைப்பள்ளிக்குப் பிறகு கூடுதலான கல்வியை அளிக்க பொறுப்புடன் தீர்மானம் செய்வார்களேயானால் அது அவர்களுடைய உரிமையாக இருக்கிறது. இந்தப் படிப்பு காலப்பகுதி தெரிந்துகொள்ளப்பட்ட தொழில் அல்லது வேலையைப் பொருத்து வித்தியாசப்படும். நிதி சம்பந்தப்பட்ட காரணங்களுக்காகவும், கூடியவரை சீக்கிரமாகவே தங்கள் பிள்ளைகள் முழுநேர சேவையில் ஈடுபடும்பொருட்டும் அநேக கிறிஸ்தவ பெற்றோர் வாழ்க்கைத் தொழிற்கல்வி அல்லது தொழில்நுட்பப் பள்ளிகளில் அவர்களுக்கு குறுகிய-கால படிப்பு திட்டங்களை தெரிந்துகொண்டிருக்கிறார்கள். ஒரு சிலருடைய விஷயத்தில் இளைஞர் ஏதோ ஒரு தொழிலில் பழக்குவிக்க வேண்டியிருக்கிறது, ஆனால் இலக்கு எப்போதும் முழு வாழ்க்கையிலும் யெகோவாவுக்குச் சேவைசெய்வதாகவே இருக்கிறது.

18. கூடுதல் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் எது மனதில் வைக்கப்பட வேண்டும்?

18 கூடுதல் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், கல்வியில் மேதையாக பிரகாசிக்க வேண்டும் என்பதோ அல்லது உயர்ந்த அந்தஸ்துள்ள உலகப்பிரகாரமான ஒரு வேலைக்கு முயற்சிசெய்வதோ நோக்கமாக நிச்சயமாகவே இருக்கக்கூடாது. படிப்புப் பிரிவுகள் கவனத்தோடு தெரிந்துகொள்ளப்பட வேண்டும். உயர்கல்வியின் ஆபத்துக்களைக் குறித்து இந்தப் பத்திரிகை வலியுறுத்திவந்திருக்கிறது, நியாயமாகவே அவ்விதமாகச் செய்திருக்கிறது, ஏனென்றால் பெரும்பாலான உயர்கல்வி பைபிளின் “ஆரோக்கியமான உபதேச”த்தை எதிர்ப்பதாயிருக்கிறது. (தீத்து 2:1; 1 தீமோத்தேயு 6:20, 21) மேலுமாக, 1960-கள் முதற்கொண்டு, உயர்கல்வியளிக்கும் அநேக பள்ளிகள் சட்டமீறுதல் மற்றும் ஒழுக்கங்கெட்ட நடத்தையின் விரைவான வளர்ச்சிக்கு உகந்த இடங்களாக மாறியிருக்கின்றன. “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” இத்தகைய சூழ்நிலைமைக்குள் பிரவேசிப்பதிலிருந்து விலகியிருக்கும்படியாக பலமாக சொல்லிவந்திருக்கிறது. (மத்தேயு 24:12, 45) இருப்பினும், இந்நாட்களில் இளைஞர் அதே ஆபத்துக்களை உயர்நிலைப் பள்ளிகளிலும் தொழிநுட்பக் கல்லூரிகளிலும், வேலை செய்யுமிடத்திலும்கூட எதிர்ப்படுகிறார்கள் என்பது ஒப்புக்கொள்ளப்பட வேண்டும்.—1 யோவான் 5:19.a

19. (எ) துணைக்கல்வி கற்பது என்று தீர்மானிப்பவர்கள் என்ன முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்? (பி) ஒருசிலர் எவ்விதமாக தங்கள் கல்வியை நல்லவிதமாக பயன்படுத்தியிருக்கிறார்கள்?

19 துணைக்கல்வி கற்பது என்று தீர்மானிக்கப்பட்டால், ஓர் இளம் சாட்சி முடிந்தவரை, வீட்டில் தங்கி கொண்டு, இவ்விதமாகச் செய்வது உகந்ததாக இருக்கும். அப்பொழுது வழக்கமான கிறிஸ்தவ படிப்புப் பழக்கங்கள், கூட்டங்களுக்கு ஆஜராதல், மற்றும் பிரசங்க வேலை ஆகியவற்றைக் காத்துக்கொள்ள முடியும். ஆரம்பத்தில் பைபிள் நியமங்களின் அடிப்படையில் சரியான நிலைநிற்கையும்கூட எடுக்கப்படவேண்டும். தானியேலும் அவருடைய மூன்று எபிரெய தோழர்களும் பாபிலோனில் உயர்கல்வியை மேற்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டபோது அவர்கள் நாடுகடத்தப்பட்ட சிறைக்கைதிகளாக இருந்தனர் என்பதும் ஆனால் அவர்கள் மாறாது தங்கள் உத்தமத்தைக் காத்துக்கொண்டனர் என்பதும் மனதில் வைக்கப்படவேண்டும். (தானியேல், அதிகாரம் 1) ஆவிக்குரிய அக்கறைகளை முதலிடத்தில் வைத்து, அநேக தேசங்களிலுள்ள இளம் சாட்சிகள் அவர்களுடைய முக்கிய வாழ்க்கைத்தொழிலாகிய பயனியர்சேவையில் போதிய அளவு தங்களுக்கு ஆதரவளிக்க பகுதிநேர வேலைக்கு—கணக்கர்கள், வணிகர்கள், ஆசிரியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், எளிய மொழியில் விளக்குபவர்கள், அல்லது மற்ற வேலைகள் போன்றவை—தங்களை ஆயத்தம்செய்த படிப்புப்பிரிவுகளை மேற்கொண்டிருக்கின்றனர். (மத்தேயு 6:33) இந்த இளைஞரில் அநேகர் பின்னர் பிரயாண கண்காணிகளாக அல்லது பெத்தேல் தொண்டர்களாக ஆகியிருக்கின்றனர்.

ஐக்கியப்பட்ட, கல்வியறிவுள்ள ஒரு ஜனம்

20. யெகோவாவின் மக்கள் மத்தியில் என்ன உலகப்பிரகாரமான வேறுபாட்டுக்கு இடமில்லை?

20 யெகோவாவின் மக்கள் மத்தியில், ஒரு நபரின் வேலை, உடலுழைப்புக்குரியதாக, உடலுழைப்பற்றதாக, விவசாயமாக, அல்லது பணிகளாக இருந்தாலும் சரி, அனைவருமே பைபிளின் நல்ல மாணாக்கர்களாகவும் திறமையுள்ள போதகர்களாகவும் இருக்கவேண்டும். வாசிப்பதில், படிப்பதில், போதிப்பதில் முயன்று பெறப்படும் திறமைகள் உடலுழைப்பு வேலையாட்கள் மற்றும் அலுவலக வேலையாட்கள் இடையே உலகம் உண்டாக்கும் வித்தியாசத்தை மறைந்துபோகச் செய்யும். இதுவே பெத்தேல் வீடுகளிலும் உவாட்ச் டவர் சங்கத்தின் கட்டுமான இடங்களிலும் தொண்டர்கள் மத்தியில் குறிப்பாக காணப்படும் ஐக்கியத்துக்கும் பரஸ்பர மரியாதைக்கும் காரணமாக உள்ளது. இங்கே ஆவிக்குரிய தன்மைகளே எல்லாவகையிலும் முக்கியமானதாகவும் அனைவரிடமும் கேட்கப்படுவதாகவும் இருக்கிறது. இங்கே, அனுபவமுள்ள அலுவலக பணியாளர்கள் தனித்திறம் வாய்ந்த வேலையாட்களோடு சந்தோஷமாக, ஒருவருக்கொருவர் போற்றுதலுள்ள அன்பைக் காண்பித்து வேலை செய்கிறார்கள்.—யோவான் 13:34, 35; பிலிப்பியர் 2:1-4.

21. இளம் கிறிஸ்தவர்களின் இலக்கு என்னவாக இருக்கவேண்டும்?

21 பெற்றோர்களே, உங்களுடைய பிள்ளைகளை புதிய உலக சமுதாயத்தின் பயனுள்ள அங்கத்தினர்களாக ஆகும் இலக்கை நோக்கி வழிநடத்துங்கள்! இளம் கிறிஸ்தவர்களே, யெகோவாவை சேவிப்பதில் உங்களுக்கிருக்கும் சிலாக்கியங்களை அதிக முழுமையாகப் பற்றிக்கொள்ள ஆயத்தம்செய்யும் ஒரு வழிமுறையாக உங்கள் கல்விக்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்! போதிக்கப்பட்டவர்களாக, நீங்கள் அனைவருமே இப்பொழுதும் நித்தியத்திற்கும் கடவுளுடைய வாக்குப்பண்ணப்பட்ட “புதிய பூமியி”லும் தேவாட்சிக்குட்பட்ட சமுதாயத்தின் நன்கு-ஆயத்தமான உறுப்பினர்களாக நிரூபிப்பீர்களாக.—2 பேதுரு 3:13; ஏசாயா 50:4; 54:13; 1 கொரிந்தியர் 2:13.

[அடிக்குறிப்புகள்]

a ஆங்கில காவற்கோபுரம் 1975 செப்டம்பர் 1, பக்கங்கள் 542-4-ஐயும் பார்க்கவும்.

உங்கள் ஞாபகசக்தியை சோதித்துப்பாருங்கள்

◻ மெய்க் கிறிஸ்தவர்கள் ஏன் கல்வியில் அக்கறையுள்ளவர்களாக இருக்கிறார்கள்?

◻ கல்வி பற்றிய என்ன மட்டுமீறிய கருத்துக்களை மெய்க் கிறிஸ்தவர்கள் தவிர்ப்பார்கள்?

◻ கூடுதலான கல்வியின் என்ன ஆபத்துக்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும், என்ன முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்?

◻ யெகோவாவின் மக்கள் மத்தியில் என்ன உலகப்பிரகாரமான வேறுபாட்டுக்கு இடமில்லை?

17. ஒருசில சாட்சி பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு என்ன தெரிவைச் செய்கிறார்கள்?

[பக்கம் 16-ன் படம்]

ஊக்கமாக படிப்பதன் மூலம், இளம் கிறிஸ்தவர்கள் புதிய உலக சமுதாயத்தின் பயனுள்ள அங்கத்தினர்களாக ஆக முடியும்

[பக்கம் 19-ன் படம்]

கூடுதலான கல்வி, தெரிந்துகொள்ளப்பட்டால், யெகோவாவை மேம்பட்டவிதமாக சேவிக்கும் ஆசையால் உந்துவிக்கப்பட வேண்டும்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்