பைபிள் காலங்களில் கல்வி
“அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு[ம்] உபதேசி[க்கவேண்டும்].”—உபாகமம் 11:20.
1. யெகோவா தம்முடைய ஊழியர்களின் கல்வியில் அக்கறையுள்ளவராக இருக்கிறார் என்பதை எது காட்டுகிறது?
யெகோவா மிகப்பெரிய கல்விபுகட்டுபவராக இருக்கிறார். அவர் ஒருபோதும் தம்முடைய ஊழியர்களை அறியாமையில் விட்டதில்லை. அவர் எப்போதும் அவர்களுடன் அறிவை பகிர்ந்துகொள்ள மனமுள்ளவராக இருந்திருக்கிறார். அவர் அவர்களுக்குத் தம்முடைய சித்தத்தையும் தம்முடைய வழிகளையும் போதிக்கிறார். எண்ணற்ற பல ஆயிர வருடங்களாக அவருடைய ஒரே பேறான குமாரன் அவர் அருகாமையில் இருந்துகொண்டு, கடவுளுடைய “கைத்தேர்ந்த வேலையாளாக” எப்போதும் கற்றுக்கொண்டே இருந்தார். (நீதிமொழிகள் 8:30, NW) பூமியிலிருந்தபோது இயேசு, “என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன்,” என்றார். (யோவான் 8:28) கடவுளை ஓர் ஈடற்ற கல்விபுகட்டுபவராக குறிப்பிட்டு எலிகூ இவ்விதமாகக் கேட்டார்: “அவரைப்போல போதிக்கிறவர் யார்?” (யோபு 36:22) ஏசாயா தீர்க்கதரிசி யெகோவாவைப் பற்றி தம்முடைய ஜனங்களின் ‘மகத்தான போதகர்,’ என்பதாக பேசிவிட்டு இவ்விதமாக தீர்க்கதரிசனமுரைத்தார்: “உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் [யெகோவாவால், NW] போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்.” (ஏசாயா 30:20; 54:13) யெகோவா தம்முடைய புத்திக்கூர்மையுள்ள சிருஷ்டிகள் அறிவொளியூட்டப்பட்டவர்களாகவும் நன்கு கல்வி கற்றவர்களாகவும் இருக்கவேண்டும் என்று விரும்புகிறார் என்பதில் சந்தேகமில்லை.
கோத்திரப்பிதாக்களின் கல்வி
2, 3. (எ) உண்மையுள்ள கோத்திரப்பிதாக்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வியை எவ்வாறு கருதினார்கள், மேலும் யெகோவா என்ன கட்டளையை ஆபிரகாமுக்குக் கொடுத்தார்? (பி) ஆபிரகாமின் பிள்ளைகளுக்கு போதிக்கும்படியான கட்டளைக்குப் பின்னால் என்ன மகத்தான நோக்கமிருந்தது?
2 கோத்திரப்பிதாக்களின் காலங்களில் குடும்பத்தலைவனின் அடிப்படையான பிரத்தியேக சிலாக்கியங்களில் ஒன்று அவருடைய பிள்ளைகளுக்கும் அவருடைய வீட்டாருக்கும் போதிப்பதாக இருந்தது. கடவுளுடைய ஊழியர்களுக்கு தங்கள் பிள்ளைகளின் கல்வி மதசம்பந்தமான ஒரு கடமையாக இருந்தது. யெகோவா தம்முடைய ஊழியக்காரனாகிய ஆபிரகாமைக் குறித்து இவ்வாறு சொன்னார்: “கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன்.”—ஆதியாகமம் 18:19.
3 இந்தத் தெய்வீக கூற்று, யெகோவா கல்வியை அதிக முக்கியத்துவமுள்ள ஒன்றாகக் கருதினார் என்பதை காண்பிக்கிறது. எதிர்கால சந்ததி யெகோவாவின் வழியை காத்துநடக்கும் நிலையில் இருக்கும் பொருட்டு கடவுள் ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு தங்கள் வீட்டாரை அவருடைய நீதி மற்றும் நியாயத்தின் வழியில் போதிக்கவேண்டும் என்று தேவைப்படுத்தினார். அதற்கு ஏற்ப, யெகோவா ஆபிரகாமின் வித்தைப் பற்றியும் “பூமியிலுள்ள சகல ஜாதிகளும்” ஆசீர்வதிக்கப்படுவதைப் பற்றியும் அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார்.—ஆதியாகமம் 18:18; 22:17, 18.
இஸ்ரவேலில் கல்விமுறை
4, 5. (எ) மற்ற இஸ்ரவேலின் கல்விமுறையை தேசங்களினுடையதிலிருந்து வித்தியாசப்படுத்திக் காண்பித்தது எது? (பி) வேறு என்ன முக்கியமான வித்தியாசத்தை என்ஸைக்ளோபீடியா ஜூடேயிக்கா குறிப்பிடுகிறது, சந்தேகமின்றி இந்த வித்தியாசத்துக்குக் காரணமென்னவாக இருந்தது?
4 என்ஸைக்ளோபீடியா ஜூடேயிக்கா சொல்கிறது: “பூர்வ இஸ்ரவேலில் கல்வி கற்கப்பட்ட முறையை புரிந்துகொள்வதற்கு பைபிளே முக்கிய ஆதாரமாக இருக்கிறது.” யெகோவா, இஸ்ரவேலுக்கு முதல் மனித போதகராக மோசேயை பயன்படுத்தினார். (உபாகமம் 1:3, 5; 4:5) மோசே யெகோவா அவருக்குக் கொடுத்த வார்த்தைகளை கடத்தினார். (யாத்திராகமம் 24:3) ஆகவே உண்மையில் கடவுளே இஸ்ரவேலரின் முக்கிய கல்விபுகட்டுபவராக இருந்தார். அதுதானே இஸ்ரவேலரின் கல்விமுறையை மற்ற தேசங்களினுடையதிலிருந்து வித்தியாசப்படுத்திக் காண்பித்தது.
5 அதே பார்வை குறிப்பு நூல் அறிவிக்கிறது: “மெசபொத்தோமியாவிலும் எகிப்திலும் உயர்கல்வி அல்லது புத்தக அறிவு முறைப்படியாக அமைந்ததாகவும் வேதபாரகரின் வகுப்புக்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்பட்டதாகவும் இருந்தது, இஸ்ரவேலரின் விஷயத்தில் இவ்வாறு இருக்கவில்லை. எபிரெயர் எளிமையான அகரவரிசை எழுத்து முறையை பயன்படுத்தியதே வித்தியாசத்துக்குக் காரணம் என்பதில் சந்தேகமில்லை. . . . கல்வியின் வரலாற்றில் அகரவரிசை எழுத்து முறையின் முக்கியத்துவத்தை புறக்கணித்துவிடக்கூடாது. இது எகிப்து, மெசபொத்தோமியா மற்றும் இரண்டாவது ஆயிரமாண்டின் கானான் ஆகியவற்றின் பாரம்பரிய வேதபாரக கலாச்சாரத்திலிருந்து ஒரு திடீர் மாற்றத்தைக் கொண்டுவந்தது. கல்வியறிவுடையவர்களாக இருப்பது, இனிமேலும் எளிதில் அறியமுடியாத ஆப்பு வடிவ எழுத்துக்கள் மற்றும் புனித எழுத்து முறையை நன்குணர்ந்த தேர்ச்சிபெற்ற வேதபாரகர் மற்றும் ஆசாரிய வகுப்பின் அடையாளமாகவும் பிரத்தியேகமான சிறப்புப்பண்பாகவும் இருக்கவில்லை.”
6. இஸ்ரவேலர் அவர்களுடைய சரித்திரத்தின் ஆரம்பத்திலிருந்தே கல்வியறிவுடையவர்களாக இருந்தனர் என்பதற்கு என்ன பைபிள்பூர்வமான அத்தாட்சி இருக்கிறது?
6 இஸ்ரவேலர் கல்வியறிவுடைய மக்களாக இருந்தனர் என்பதற்கு பைபிள் ஆதாரமளிக்கிறது. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் அவர்கள் பிரவேசிப்பதற்கு முன்பேகூட அவர்கள் யெகோவாவின் கட்டளைகளைத் தங்கள் வீட்டு நிலைகளிலும் வாசல்களிலும் எழுதிவைக்கும்படியாகச் சொல்லப்பட்டார்கள். (உபாகமம் 6:1, 9; 11:21; 27:1-3) இந்தக் கட்டளை சந்தேகமின்றி அடையாள அர்த்தமுள்ளதாக இருக்கையில், எழுத படிக்கத் தெரியாதவனாக இருந்த ஒரு சராசரி இஸ்ரவேலனுக்கு அது நிச்சயமாகவே அர்த்தமற்றதாக இருந்திருக்கும். மோசே மற்றும் யோசுவா போன்ற தலைவர்கள் அல்லாமல், மற்றவர்கள் இஸ்ரவேலில் முடியாட்சி ஏற்படுவதற்கு வெகு முன்பிருந்தே எழுத்தறிவுள்ளவர்களாக இருந்தார்கள் என்பதை யோசுவா 18:9 மற்றும் நியாயாதிபதிகள் 8:14 போன்ற வேதவசனங்கள் காண்பிக்கின்றன.—யாத்திராகமம் 34:27; யோசுவா 24:26.
போதனா முறைகள்
7. (எ) வேதவசனங்களின்படி, இஸ்ரவேலருக்கு அவர்களுடைய அடிப்படைக் கல்வியை கொடுத்தது யார்? (பி) ஒரு பிரெஞ்சு பைபிள் கல்விமான் என்ன தகவலை அளிக்கிறார்?
7 இஸ்ரவேலில் பிள்ளைகள் மிகச் சிறிய வயது முதற்கொண்டே தாயாலும் தந்தையாலும் போதிக்கப்பட்டனர். (உபாகமம் 11:18, 19; நீதிமொழிகள் 1:8; 31:26) பிரெஞ்சு பைபிள் அகராதி-யில், பைபிள் கல்விமான் E. மான்சியூ எழுதினார்: “பேச ஆரம்பித்தவுடனே, பிள்ளை நியாயப்பிரமாணத்திலிருந்து ஒரு சில பகுதிகளைக் கற்றுக்கொண்டது. அவனுடைய தாய் ஒரு வசனத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லுவாள்; அதை அவன் தெரிந்துகொண்ட பின், அவள் அவனுக்கு மற்றொரு வசனத்தைக் கொடுப்பாள். பின்னர், மனப்பாடமாக அவர்கள் ஏற்கெனவே கற்றிருந்த வசனங்கள் எழுதப்பட்டு பிள்ளைகளின் கைகளில் கொடுக்கப்படும். இவ்விதமாக வாசிப்பு அவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அவர்கள் வயதில் வளர்ந்த பின்னர் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை வாசித்து தியானிப்பதன் மூலம் அவர்கள் தொடர்ந்து மதசம்பந்தமான போதனையைப் பெற்றுக்கொண்டிருப்பார்கள்.”
8. (எ) இஸ்ரவேலில் பயன்படுத்தப்பட்ட அடிப்படை போதனா முறை என்னவாக இருந்தது, ஆனால் என்ன முக்கியமான சிறப்புப் பண்போடு? (பி) என்ன மனப்பாட ஏதுக்கள் பயன்படுத்தப்பட்டன?
8 பயன்படுத்தப்பட்ட அடிப்படை போதனா முறை காரியங்களை மனப்பாடம் செய்வதாக இருந்தது என்பதை இது காண்பிக்கிறது. யெகோவாவின் நியாயப்பிரமாணங்களையும் அவருடைய மக்களோடு அவருடைய செயல்தொடர்புகளையும் பற்றி கற்றுக்கொண்ட காரியங்கள் இருதயத்திற்குள் ஊடுருவிச் செல்ல வேண்டும். (உபாகமம் 6:6, 7) அவை தியானிக்கப்பட வேண்டும். (சங்கீதம் 77:11, 12) மனப்பாடம் செய்வதற்கு இளைஞருக்கும் முதியோருக்கும் மனப்பாட ஏதுக்கள் பயன்படுத்தப்பட்டன. இவற்றில் முதலெழுத்தை அல்லது கடையெழுத்தைக் கூட்டுதலால் சொல்லுண்டாக்கும் பாட்டு வகை, அடுத்தடுத்துவரும் வசனங்கள் சங்கீதத்தில் வித்தியாசமான ஓர் எழுத்தில் துவங்குவது (நீதிமொழிகள் 31:10-31 வரை இருப்பது போல) அகரவரிசையில்; மோனை (ஒரே எழுத்து அல்லது ஒலியில் ஆரம்பமாகும் வார்த்தைகள்); நீதிமொழிகள் 30-ன் பிற்பகுதியில் பயன்படுத்தப்பட்டிருப்பது போல எண்களின் உபயோகம் போன்றவை அடங்கும். மிகப் பண்டைய எபிரெய எழுத்தின் உதாரணமாக இருக்கும் கீஸர் நாட்காட்டியை ஒரு பள்ளி பையனின் மனப்பாட பயிற்சியாக ஒரு சில கல்விமான்கள் கருதுவது அக்கறையூட்டுவதாக உள்ளது.
பாடத்திட்டம்
9. (எ) இஸ்ரவேல பிள்ளைகளின் படிப்பு திட்டத்தில் முக்கியமான பாகமாக இருந்தது என்ன? (பி) வருடாந்தர பண்டிகைகளின் சம்பந்தமாக செய்யப்பட்ட போதனைகளைக் குறித்து ஒரு பைபிள் என்ஸைக்ளோபீடியா என்ன சொல்கிறது?
9 இஸ்ரவேலில் கல்வி எழுத படிக்க கற்றுக்கொள்வதோடு நின்றுவிடவில்லை. கற்றுக்கொடுக்கப்பட்ட ஒரு முக்கிய பாடம் வரலாறு ஆகும். யெகோவாவின் மக்களின் சார்பாக அவருடைய அதிசயமான கிரியைகளைக் கற்பது பாடத்திட்டத்தின் இன்றியமையாத பாகமாக இருந்தது. இந்த வரலாற்று உண்மைகள் தலைமுறை தலைமுறைதோறும் போதிக்கப்பட வேண்டும். (உபாகமம் 4:9, 10; சங்கீதம் 78:1-7) வருடாந்தர பண்டிகைகளின் கொண்டாட்டம், தன் பிள்ளைகளுக்குப் போதிக்க குடும்பத் தலைவருக்கு நேர்த்தியான வாய்ப்பை அளித்தது. (யாத்திராகமம் 13:14; லேவியராகமம் 23:37-43) இதன் சம்பந்தமாக தி இன்டர்நேஷனல் ஸ்டான்டர்டு பைபிள் என்ஸைக்ளோபீடியா குறிப்பிடுகிறது: “வீட்டில் தந்தை கொடுத்த போதனை மற்றும் பண்டிகைகளின் உட்கருத்து பற்றிய விளக்கம் மூலமாக, எபிரெய பிள்ளைகள் கடந்த காலத்தில் கடவுள் தம்மை எவ்வாறு விளங்கப்பண்ணியிருக்கிறார், தற்போது அவர்கள் எவ்வாறு வாழவேண்டும் மற்றும் அவருடைய மக்களின் எதிர்காலம் பற்றி கடவுளுடைய வாக்குத்தத்தங்கள் யாவை என்பதைப் பற்றி போதிக்கப்பட்டனர்.”
10. என்ன நடைமுறையான பயிற்சி கொடுக்கப்பட்டது: பெண்பிள்ளைகளுக்கு? ஆண் பிள்ளைகளுக்கு?
10 பெற்றோர் அளித்த கல்வி நடைமுறை பயிற்சியையும் உட்படுத்தியது. பெண்பிள்ளைகள் திறமையாக வீட்டுவேலைகள் செய்ய போதிக்கப்பட்டனர். இவை மிகப்பலவாகவும் பல்வகைப்பட்டதாகவும் இருந்ததை நீதிமொழிகள் கடைசி அதிகாரம் காண்பிக்கிறது; அவற்றில் நூற்றல், நெய்தல், சமைத்தல், வியாபாரம் செய்தல் மற்றும் பொதுவான வீட்டு நிர்வாகம் ஆகியவை உட்பட்டிருந்தன. ஆண்பிள்ளைகளுக்குப் பொதுவாக பிழைப்புக்காக தந்தை செய்யும் வேலை, வேளாண்மை அல்லது ஏதோ ஒரு தொழில் அல்லது கைத்தொழில் கற்றுக்கொடுக்கப்பட்டது. பிற்காலங்களில் யூத ரபீக்கள் இவ்விதமாகச் சொல்வது வழக்கமாயிருந்தது: “பிரயோஜனமான ஒரு தொழிலை தன் மகனுக்கு கற்பிக்காதவன் அவனை ஒரு திருடனாக வளர்க்கிறான்.”
11. இஸ்ரவேலில் கல்வியின் அடிப்படை நோக்கத்தை எது காண்பிக்கிறது, இன்று இளைஞருக்கு இதில் என்ன பாடம் இருக்கிறது?
11 இஸ்ரவேலில் பயன்படுத்தப்பட்ட போதனா முறைகளிலிருந்த ஆவிக்குரிய ஆழம், நீதிமொழிகள் புத்தகம் முழுவதிலும் வெளிப்படையாக காணப்படுகிறது. அதன் நோக்கம் “அனுபமில்லாதவர்களுக்கு” ஞானம், சிட்சை, புரிந்துகொள்ளுதல், உட்பார்வை, நிதானம், புத்தி, அறிவு மற்றும் சிந்திக்கும் திறமை போன்ற மேன்மையான காரியங்களை—இவை அனைத்தையும் “கர்த்தருக்குப் (யெகோவாவுக்குப், NW) பயப்படும் பயத்தில்”—கற்பிப்பதே என்பதை அது காட்டுகிறது. (நீதிமொழிகள் 1:1-7; 2:1-14) இன்று கடவுளுடைய ஊழியர்களில் ஒருவரை, அவனுடைய அல்லது அவளுடைய கல்வியை முன்னேற்றுவிக்க உந்துவிக்க வேண்டிய உள்நோக்கங்களை இது வலியுறுத்துகிறது.
ஆசாரியர்கள், லேவியர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள்
12. பெற்றோரைத் தவிர, இஸ்ரவேலில் மக்களுக்குப் போதிப்பதில் யார் பங்குகொண்டார், “நியாயப்பிரமாணம்” என்பதாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எபிரெய வார்த்தையின் அடிப்படை பொருள் என்ன?
12 அடிப்படை கல்வி பெற்றோரால் அளிக்கப்பட்டபோதிலும், யெகோவா தம்முடைய மக்களுக்கு ஆசாரியர்கள், ஆசாரியரல்லாத லேவியர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் மூலமாக கூடுதலாக கற்பித்தார். லேவி கோத்திரத்துக்கு அளித்த இறுதியான ஆசீர்வாதத்தில் மோசே சொன்னதாவது: “அவர்கள் யாக்கோபுக்கு உம்முடைய நியாயங்களையும் இஸ்ரவேலுக்கு உம்முடைய பிரமாணத்தையும் போதி”க்கக்கடவர்கள். (உபாகமம் 33:8, 10) எபிரெயுவில் “நியாயப்பிரமாணம்” (toh·rahʹ) என்ற வார்த்தை வினைவடிவில் “காண்பிக்க,” “கற்பிக்க,” “போதிக்க,” என்று பொருள்படும் வேர்ச்சொல்லிலிருந்து பெறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். என்ஸைக்ளோபீடியா ஜூடேயிக்கா சொல்வதாவது: “ஆகவே (toh·rahʹ) என்ற வார்த்தையின் பொருள் ‘கற்பித்தல்,’ ‘கோட்பாடு,’ அல்லது ‘போதனை’ ஆகும்.”
13 இதுவும்கூட இஸ்ரவேலரை மற்ற தேசங்களிலிருந்தும் நவீன-நாளைய தேசங்களிலிருந்தும்கூட தனியே பிரித்துவைத்தது. இன்று அரசியல் தேசங்கள் சட்டங்களின் ஒரு தொகுப்பைக் கொண்டிருக்கின்றன. பொது மக்களுக்கு இதில் மிகச் சிறிதளவே தெரிந்திருக்கிறது. மக்கள் சட்டத்தோடு தொந்தரவுக்குள்ளாகும்போது தங்களைத் தற்காத்துக்கொள்ள இவர்கள் வழக்கறிஞர்களுக்கு அதிகமான பணத்தைக் கட்டணமாக செலுத்தவேண்டியிருந்த சட்ட பள்ளிகள் நிபுணர்களுக்கே. இருப்பினும், இஸ்ரவேலில் நியாயப்பிரமாணம், அவர்கள் அவரை எவ்வாறு வணங்க வேண்டுமென்று விரும்புகிறார் என்பதையும், அவருடைய சித்தத்திற்கிசைவாக வாழ்வதையும் அவருடைய மக்களுக்குத் தெரியப்படுத்தும் வழிமுறையாக இருந்தது. மற்ற சட்டத் தொகுப்புக்களைப் போல் இல்லாமல், இது கடவுளிடமும் அயலாரிடமும் அன்பை உட்படுத்தியது. (லேவியராகமம் 19:18; உபாகமம் 6:5) நியாயப்பிரமாணம் பொதுமுறையான சட்டத்தொகுப்பாக இல்லவே இல்லை. அது வாழ்க்கை முறையில் கற்றுக்கொள்ளப்பட வேண்டிய கோட்பாடு, கற்பித்தல், மற்றும் போதித்தலை அளித்தது.
14. யெகோவா லேவி கோத்திர ஆசாரியத்துவத்தை நிராகரித்ததற்கு ஒரு காரணம் என்னவாக இருந்தது? (மல்கியா 2:7, 8)
14 உண்மையுள்ளவர்களாக இருந்தபோது, ஆசாரியர்களும் லேவியர்களும் மக்களுக்குப் போதிக்கும் தங்கள் உத்தரவாதத்தை நிறைவேற்றினர். ஆனால் அடிக்கடி ஆசாரியர்கள் தேசத்துக்குக் கற்பிக்கவேண்டிய தங்கள் கடமையை புறக்கணித்தனர். கடவுளுடைய நியாயப்பிரமாணத்தில் இந்தக் கல்வி குறைவுபட்டபோது, ஆசாரியர்களுக்கும் மக்களுக்கும் மோசமான விளைவுகளை அது கொண்டுவந்தது. பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டில் யெகோவா முன்னுரைத்ததாவது: “என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்; நீ அறிவை வெறுத்தாய், ஆகையால் நீ என் ஆசாரியனாயிராதபடிக்கு நானும் உன்னை வெறுத்துவிடுவேன்; நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன்.”—ஓசியா 4:6.
15. (எ) ஆசாரியர்களோடுகூட, யெகோவா இஸ்ரவேலில் யாரை போதகர்களாக எழுப்பினார், கல்வி புகட்டுபவர்களாக அவர்கள் பங்கைக் குறித்து ஒரு பைபிள் கல்விமான் என்ன எழுதினார்? (பி) இஸ்ரவேலும் யூதாவும் யெகோவாவைப் பற்றிய அறிவையும் அவருடைய வழிகளையும் நிராகரித்த காரணத்தால் கடைசியாக அவற்றிற்கு என்ன சம்பவித்தது?
15 ஆசாரியர்களைப் போலவே தீர்க்கதரிசிகளையும் யெகோவா கல்விபுகட்டுபவர்களாக எழுப்பினார். நாம் வாசிக்கிறோம்: “நீங்கள் உங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பி, நான் உங்கள் பிதாக்களுக்குக் கட்டளையிட்டதும், என் ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளைக்கொண்டு உங்களுக்குச் சொல்லியனுப்பினதுமான நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் என் கற்பனைகளையும் என் கட்டளைகளையும் கைக்கொள்ளுங்கள் என்று கர்த்தர் தீர்க்கதரிசிகள் ஞானதிருஷ்டிக்காரர் எல்லாரையுங்கொண்டு இஸ்ரவேலுக்கும் யூதாவுக்கும் திடச்சாட்சியாய் எச்சரித்துக்கொண்டிருந்”தார். (2 இராஜாக்கள் 17:13) கல்விபுகட்டுபவர்களாக தீர்க்கதரிசிகளின் பங்கைக் குறித்து பிரெஞ்சு பைபிள் கல்விமான் ரோலண்ட் டி வாக்ஸ் எழுதினார்: “தீர்க்கதரிசிகளுக்கும்கூட மக்களுக்குப் போதிக்கும் விசேஷித்த கடமை இருந்தது. எதிர்காலத்தை முன்னறிவிப்பது போலவே இது குறைந்தபட்சம் அவர்களுடைய வேலையின் ஒரு பாகமாக இருந்தது. தீர்க்கதரிசன ஏவுதல் அவர்களுடைய பிரசங்கிப்புக்கு கடவுளுடைய வார்த்தையின் அதிகாரத்தைக் கொடுத்தது. முடியாட்சியின் கீழ், தீர்க்கதரிசிகள் மக்களின் சமய மற்றும் ஒழுக்க ஆசான்களாக இருந்தார்கள் என்பது நிச்சயமாகும். மேலும் இவர்கள் எல்லா சமயங்களிலும் அதிகமாக செவிசாய்க்கப்படாதவர்களாக இருந்தாலும் அவர்களுடைய எல்லா ஆசான்களிலும் மிகச் சிறந்தவர்களாக இருந்தனர் என்பதை நாம் சேர்த்துக்கொள்ளலாம்.” ஆசாரியர்களும் லேவியரும் சரியான கல்வியை அளிக்க தவறியதும் யெகோவாவின் தீர்க்கதரிசிகளுக்கு அவர்கள் செவிசாய்க்கத் தவறியதோடு சேர்ந்ததன் மூலமாக இஸ்ரவேலர் யெகோவாவின் வழிகளைப் புறக்கணித்தார்கள். பொ.ச.மு. 740-ல் சமாரியா, அசீரியர்களால் கைப்பற்றப்பட்டது, எருசலேமும் அதன் ஆலயமும் பொ.ச.மு. 607-ல் பாபிலோனியரால் அழிக்கப்பட்டது.
சிறையிருப்பின் போதும் அதற்குப் பின்பும் கல்வி
16, 17. (எ) தானியேல் மற்றும் அவருடைய மூன்று தோழர்கள் மீது என்ன கல்வி திட்டம் கட்டாயப்படுத்தப்பட்டது? (பி) இந்தப் பாபிலோனிய கல்வியைப் பயிலவும் அதே சமயத்தில் யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாக நிலைத்திருக்கவும் அவர்களுக்கு உதவியது என்ன?
16 எருசலேமின் அழிவுக்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு, யோயாக்கீன் ராஜாவும், பிரபுக்களும், பராக்கிரமசாலிகளின் ஒரு தொகுதியும் நேபுகாத்நேச்சாரர் ராஜாவால் பாபிலோனுக்கு சிறைபிடித்துக்கொண்டு போகப்பட்டார்கள். (2 இராஜாக்கள் 24:15) அவர்களில் தானியேலும் மற்ற மூன்று இளம் பராக்கிரமசாலிகளும் இருந்தனர். (தானியேல் 1:3, 6) நேபுகாத்நேச்சார் இந்த நால்வரையும் “கல்தேயரின் எழுத்தையும் பாஷையையும்” கற்றுக்கொள்ள ஒரு விசேஷித்த மூன்று-ஆண்டு கால பயிற்சியை பெற்றுக்கொள்ள கட்டளையிட்டான். மேலுமாக “ராஜா, தான் உண்ணும் போஜனத்திலேயும் தான் குடிக்கும் திராட்சரசத்திலேயும் தினம் ஒரு பங்கை அவர்களுக்கு நியமி”த்தான். (தானியேல் 1:4, 5) பல்வேறு காரணங்களுக்காக இது ஆபத்தை உண்டாக்கக்கூடியதாக இருந்தது. பாடதிட்டம் வெறுமென மூன்று-ஆண்டு மொழி பயிற்சியாக இருக்கவில்லை. இந்தப் பகுதியில் “கல்தேயர்” என்ற பதம், “ஒரு ஜனமாக பாபிலோனியரை அல்ல, ஆனால் படித்து தேர்ந்த வகுப்பினரை,” குறிப்பிடுவதாக சிலர் நினைக்கின்றனர். (The Soncino Books of the Bible) தானியேல் புத்தகத்தின் பேரில் தன்னுடைய விளக்கவுரையில் C. F. கீல் சொல்வதாவது: “தானியேலும் அவன் தோழர்களும் பாபிலோன் பள்ளிகளில் கற்பிக்கப்பட்ட, கல்தேய ஆசாரியர்கள் மற்றும் படித்துத்தேர்ந்த மனிதர்களின் ஞானத்தில் போதிக்கப்படவிருந்தனர்.” ராஜரீக உணவு பங்கும்கூட மோசேயின் நியாயப்பிரமாணம் விதித்திருந்த உணவு சம்பந்தப்பட்ட கட்டுப்பாடுகளை மீறுகின்ற நிலையில் அவர்களை வைத்தது. அவர்கள் எவ்விதமாக சமாளித்தார்கள்?
17 நான்கு இளம் யூத பராக்கிரமசாலிகளின் சார்பாக பேசுகிறவராக தானியேல் தங்களுடைய மனச்சாட்சியை மீறி சாப்பிடவோ குடிக்கவோ முடியாது என்பதை ஆரம்பத்திலேயே தெளிவாக்கிவிட்டார். (தானியேல் 1:8, 11-13) யெகோவா இந்த உறுதியான நிலைநிற்கையை ஆசீர்வதித்து, பொறுப்பிலிருந்த பாபிலோனிய அதிகாரியின் இருதயத்தை மென்மையாக்கினார். (தானியேல் 1:9, 14-16) அவர்களுடைய படிப்பை பொருத்தவரையில், எல்லா நான்கு இளம் எபிரெயர்களின் வாழ்க்கையிலும் அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் பாபிலோனிய கலாச்சாரத்தில் அவர்களுடைய கட்டாய மூன்று-ஆண்டு பாடத்திட்டம், யெகோவாவிடமும் அவருடைய தூய்மையான வணக்கத்திடமும் அவர்கள் கொண்டிருந்த ஆழ்ந்த பற்றுதலிலிருந்து விலகிச் சென்றுவிடும்படி அவர்களைச் செய்விக்கவில்லை என்பதை சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கிறது. (தானியேல், அதிகாரங்கள் 3 மற்றும் 6) வற்புறுத்தலினால் மூன்று-ஆண்டு காலமாக பாபிலோனிய உயர் கல்வியில் மூழ்கியிருந்த இவர்களுக்கு சிறிதும் தீங்கு ஏற்படாமல் அதிலிருந்து மீண்டுவர யெகோவா அவர்களுக்கு உதவிசெய்தார். “இந்த நாலு வாலிபருக்கும் தேவன் சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்தார்; தானியேலைச் சகல தரிசனங்களையும் சொப்பனங்களையும் அறியத்தக்க அறிவுள்ளவனாக்கினார். ஞானத்துக்கும் புத்திக்கும் அடுத்த எந்த விஷயத்தில் ராஜா அவர்களைக் கேட்டு விசாரித்தானோ, அதிலே தன் ராஜ்யம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் அவர்களைப் பத்து மடங்கு சமர்த்தராகக் கண்டான்.”—தானியேல் 1:17, 20.
18. பாபிலோனிய சிறையிருப்புக்குப் பின்பு யூதாவில் என்ன கல்வி திட்டம் நிறைவேற்றப்பட்டது?
18 பாபிலோனிய சிறையிருப்புக்குப் பின்பு, மாபெரும் ஒரு கல்வி வேலையை எஸ்றா நிறைவேற்றினார். இவர், “கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்த” ஓர் ஆசாரியனாக இருந்தார். (எஸ்றா 7:10) இதில் இவருக்கு “நியாயப்பிரமாணத்தை ஜனங்களுக்கு விளங்கப்பண்ணின” உண்மையுள்ள லேவியர்கள் உதவியாக இருந்தார்கள். (நெகேமியா 8:7) எஸ்றா ஒரு பைபிள் கல்விமானாகவும் ‘கைத்தேர்ந்த நகல் எடுப்பவராக’ அல்லது வேதபாரகராகவும் இருந்தார். (எஸ்றா 7:6) அவருடைய நாளில்தானே வேதபாரகர் ஒரு வகுப்பாக முதன்மை நிலைக்கு வந்தனர்.
யூத சட்ட பள்ளிகள்
19. இயேசு பூமிக்கு வருவதற்குள், இஸ்ரவேலில் கல்விபுகட்டும் என்ன வகுப்பு தோன்றியிருந்தது, என்ன முக்கியமான காரணத்துக்காக அவரும் அவருடைய சீஷர்களும் யூத உயர்கல்வியை கல்லாதிருந்தனர்?
19 இயேசு பூமியில் தோன்றுவதற்குள் வேதபாரகர் கடவுளுடைய வார்த்தையின் மெய்யான போதகங்களைக் காட்டிலும் பாரம்பரியத்தில் அதிக பற்றுதலுள்ளவர்களாயிருந்த போதகர்களின் ஓர் உயர்ந்தோர் வகுப்பாக ஆகியிருந்தனர். அவர்கள் “என்னுடைய சிறப்புக்குரிய (ஒப்பற்ற) ஒருவர்” என்று பொருள்படும் கெளரவப் பட்டப்பெயராகிய “ரபீ” என்பதாக அழைக்கப்பட விரும்பினார்கள். (மத்தேயு 23:6, 7, அடிக்குறிப்பு) கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில், வேதபாரகர் பரிசேயர்களோடு—இவர்களில் சிலர் தாங்களே நியாயப்பிரமாண போதகர்களாக இருந்தனர்—அநேகமாக சம்பந்தப்படுத்திப் பேசப்பட்டிருக்கிறார்கள். (அப்போஸ்தலர் 5:34) தங்களுடைய பாரம்பரியத்தினாலே கடவுளுடைய வார்த்தையை அவமாக்கிப்போட்டு, “மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாக போதித்த” காரணத்துக்காக இரு தொகுதியினரையும் இயேசு குற்றஞ்சாட்டினார். (மத்தேயு 15:1, 6, 9) இயேசுவும் அவருடைய சீஷர்களில் பெரும்பாலானவர்களும் யூத சட்ட பள்ளிகளில் கல்வி கல்லாதிருந்தது ஆச்சரியமாயில்லை.—யோவான் 7:14, 15; அப்போஸ்தலர் 4:13; 22:3.
20. பைபிள் காலங்களில் கல்வி பற்றிய இந்த விமர்சனம் நமக்கு என்ன காண்பித்திருக்கிறது, யெகோவாவின் ஊழியர்களுக்கு கல்வி தேவை என்பதை எது காட்டுகிறது?
20 பைபிள் காலங்களில் கல்வி பற்றிய இந்தப் பொது ஆய்வு யெகோவாவே அவருடைய ஜனத்தின் மகத்தான போதகர் என்பதைக் காண்பித்திருக்கிறது. மோசேயின் மூலமாக, கடவுள் இஸ்ரவேலில் திறம்பட்ட ஒரு கல்விமுறையை ஒழுங்குபடுத்தினார். ஆனால் நீண்ட காலத்துக்குப் பின்பு, யூத உயர்கல்வி முறை ஒன்று தோன்றி கடவுளுடைய வார்த்தைக்கு முரணான காரியங்களைக் கற்பித்தது. இயேசு இப்படிப்பட்ட யூத பள்ளிகளுக்கு சென்றிராதபோதிலும் அவர் ஒப்பற்ற ஒரு போதகராக இருந்தார். (மத்தேயு 7:28, 29; 23:8; யோவான் 13:13) இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு வரையாகவும்கூட கற்பிக்கும்படியாக தம்முடைய சீஷர்களுக்கு அவர் கட்டளை கொடுக்கவுஞ் செய்தார். (மத்தேயு 28:19, 20) இதைச் செய்வதற்கு, அவர்கள் நல்ல போதகர்களாக இருக்க வேண்டும், இது கல்வியை தேவைப்படுத்தும். ஆகவே மெய்க் கிறிஸ்தவர்கள் இன்று கல்வியை எவ்வாறு கருதவேண்டும்? இந்தக் கேள்வி பின்வரும் கட்டுரையில் ஆராயப்படும்.
ஒரு ஞாபகசக்தி சோதனை
◻ யெகோவா தம்முடைய ஊழியர்களின் கல்வியில் அக்கறையுடையவராய் இருக்கிறார் என்று நாம் ஏன் நிச்சயமாயிருக்கலாம்?
◻ இஸ்ரவேலரின் கல்விமுறை என்ன விதங்களில் மற்ற தேசங்களினுடையதிலிருந்து வித்தியாசப்பட்டதாய் இருந்தது?
◻ இஸ்ரவேல பிள்ளைகள் என்ன கல்வியைப் பெற்றுக்கொண்டார்கள்?
◻ இஸ்ரவேலில் என்ன போதனா முறைகள் பயன்படுத்தப்பட்டன?
◻ இயேசுவும் அவருடைய சீஷர்களும் ஏன் யூத உயர்கல்வி பள்ளிகளுக்குச் செல்லவில்லை?
13. இஸ்ரவேலில் நியாயப்பிரமாணம் மற்ற தேசங்களுடைய சட்டமுறைகளிலிருந்து ஏன் வித்தியாசமாயிருந்தது?
[பக்கம் 14-ன் படம்]
பாபிலோனில் கட்டாயக் கல்வி தானியேலையும் அவருடைய தோழர்களையும் யெகோவாவிடமிருந்து விலகிச்செல்லும்படி செய்விக்கவில்லை