விலைமதிப்புள்ள உயிரின் பரிசை போற்றுதல்
உயிர்—என்னே விலைமதிப்புள்ள ஓர் உடைமை! அது இல்லாவிடில் நாம் எதையுமே செய்யமுடியாது. அது இழக்கப்படும் பட்சத்தில், எந்த மனித வழிவகைகளாலும் அதை திருப்பிப் பெற முடியாது. நம்முடைய உயிர் ஆபத்திலிருக்கையில், அதை பாதுகாப்பதற்காக நியாயமாக சாத்தியமான அனைத்தையும் நாம் செய்கிறோம். ஏன், சிலர் இக்கட்டிலிருக்கையில் மீமானிட உதவியையும்கூட நாடுவார்கள்!
சமுத்திரத்தில் பலத்த புயல்காற்றில் சிக்குண்ட ஒரு கப்பலைப் பற்றிய பைபிள் பதிவு நமக்கு நினைவுக்கு வருகிறது. அது உடைந்துபோக இருந்தபோது, “கப்பற்காரர் பயந்து, அவனவன் தன்தன் தேவனை நோக்கி வேண்டுதல் செய்”தான். பின்னர் அவர்கள் அனைவரும் சேர்ந்து மெய்க் கடவுளை நோக்கிக் கூப்பிட்டார்கள்: “ஆ கர்த்தாவே, [யெகோவாவே, NW] . . . எங்களை அழித்துப்போடாதேயும்.” பைபிள் பதிவு மேலுமாகச் சொல்கிறது: “பாரத்தை லேசாக்கும்படிக் கப்பலில் இருந்த சரக்குகளைச் சமுத்திரத்தில் எறிந்துவிட்டார்கள்.”—யோனா 1:4-6, 14; அப்போஸ்தலர் 27:18, 19 ஒப்பிடவும்.
அந்த மாலுமிகள் தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியில் பிரியமாக பேணி காத்த பொருளுடைமைகளை தியாகம் செய்யவும்கூட தயாராக இருந்தார்கள். நாம் பொருளுடைமைகளை மறுபடியும் பெற்றுக்கொள்ளலாம்—ஆனால் உயிரைப் பெறமுடியாது. நாம் இயல்பான தூண்டுதலால் நம்முடைய உயிர்களை பிரியமாக பேணி காப்பதன் காரணமாக, நாம் ஆபத்திலிருந்து விலகிவிடுகிறோம். நாம் நம்முடைய உடல்களுக்கு உணவளித்து, உடுத்துவித்து அதைப் பேணி காக்கிறோம். நாம் வியாதியாயிருந்தால் மருத்துவ சிகிச்சையை நாடுகிறோம்.
இருப்பினும், உயிரளித்தவர் வெறுமென நம்முடைய தற்காப்பு இயல்புணர்ச்சிகளின்படி செய்வதைக் காட்டிலும் அதிகத்தை கேட்கிறார். எப்படியும் உயிர் விலைமதிக்கமுடியாத பரிசாகவும், அது முழு சர்வலோகத்திலும் மிக முக்கியமான நபரிடமிருந்து வருவதாயும் இருக்கிறது. பரிசளித்தவருக்கும் பரிசுக்காகவும் உண்மையான போற்றுதலின் காரணமாக உயிரை நாம் பேணி காக்க வேண்டாமா? மேலும் அது மற்றவர்களுடைய உயிர்களுக்கு அக்கறையைக் கொண்டிருப்பதை உட்படுத்தாதா?
அப்படியென்றால், இஸ்ரவேல் ஜனத்துக்கு யெகோவா கொடுத்த நியாயப்பிரமாணத்தில் மற்றவர்களுடைய உயிர்களையும் உடல்நலத்தையும் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட கற்பனைகள் அடங்கியிருந்தது நமக்கு ஆச்சரியமாயில்லை. (யாத்திராகமம் 21:29; உபாகமம் 22:8) கிறிஸ்தவர்கள் இன்று அதேவிதமாகவே பாதுகாப்பு உணர்வுள்ளவர்களாக இருக்க வேண்டும். உதாரணமாக, உங்கள் வீட்டில் சிறு பிள்ளைகள் இருக்கிறார்களென்றால், அப்பாவித்தனமாக விளையாடிக்கொண்டிருக்கும் அல்லது அவைகளை விழுங்கிவிடக்கூடிய பிள்ளைக்கு வெகுவாக தீங்கிழைக்கக்கூடிய மணிகள், பின்கள் அல்லது கூர்மையான பொருட்களை கவலையீனமாக அவர்களுக்கு எட்டும் தூரத்தில் வைத்துவிடுகிறீர்களா? ஆபத்தான வேதியல் பொருட்களும் மருந்துகளும் பிள்ளைகளுக்கு எட்டாத தூரத்தில் வைக்கப்பட்டிருக்கின்றனவா? தண்ணீர் தரையில் சிந்துமானால், விபத்து ஒன்றை தடுப்பதற்காக நீங்கள் விரைவாக அதை துடைத்துவிடுகிறீர்களா? பழுதடைந்த சாதனங்களை உடனடியாக பழுதுபார்த்துவிடுகிறீர்களா? உங்கள் வாகனம் ஒழுங்கான பராமரிப்பை பெற்றுக்கொள்கிறதா? நீங்கள் ஒரு பாதுகாப்பான ஓட்டுநரா? நீங்கள் உண்மையில் உயிரின் விலைமதிப்பை போற்றுகிறீர்களென்றால், இந்த மற்றும் இதுபோன்ற விஷயங்களில் நியாயமான முன்னெச்சரிக்கைகளை எடுக்க தூண்டப்படுவீர்கள்.
ஆனால் வருந்தத்தக்க விதமாக, சிலர் தங்களுடைய சொந்த உயிரையும்கூட சாதாரணமாக எடுத்துக்கொள்கின்றனர். உதாரணமாக, சிகரெட் புகைப்பது ஆரோக்கியத்துக்கு கேடுவிளைவிக்கும் என்பதை இன்று அறியாதவர் யார்? என்றபோதிலும், இலட்சக்கணக்கானோர் இப்பழக்கத்துக்கு அடிமையாக இருக்கின்றனர், விஷத்தன்மையுள்ள புகையை அவர்கள் உள்ளிழுக்கும் ஒவ்வொரு சமயமும் அவர்கள் உடல்நலம் சீரழிகிறது. மற்றவர்கள் போதை வஸ்துக்களையும், இன்னும் மற்றவர்கள் மதுபானத்தையும் துர்ப்பிரயோகம் செய்து தங்களுக்கு கேட்டை வருவித்துக்கொள்கிறார்கள். எய்ட்ஸ், அறியப்பட்ட எந்தச் சிகிச்சையும் கொண்டில்லாத சாவுக்கேதுவான நோயாகும். ஆனால் பாலுறவு ஒழுக்கக்கேட்டையும், ஒரு சில வகையான போதைப்பொருள் துர்ப்பிரயோகத்தையும் இரத்தமேற்றுதல்களையும் தவிர்த்திருந்தால் அநேகருக்கு இந்த நோய் வராமல் இருந்திருக்கக்கூடும். உயிருக்கு என்னே வருந்தத்தக்க போற்றுதல் குறைவு!—ரோமர் 1:26, 27; 2 கொரிந்தியர் 7:1.
மாற்றம் சாத்தியமாகும்!
தங்கள் மகத்தான சிருஷ்டிகராகிய யெகோவாவை போற்றுகிறவர்களுக்கு, உயிரை விலைமதிப்புள்ளதாக கருதுவதற்கு பலமான ஒரு காரணம் இருக்கிறது. உயிர் அவருடைய பரிசுத்தமான பரிசு. ஆகவே அவர்கள் அதை ஒரு தெய்வீக பரிசாக கையாளுவதற்கு தேவையான எந்த மாற்றங்களையும் செய்ய மனமுள்ளவர்களாக இருக்கிறார்கள். கானாவில் ஓர் ஆசிரியராக இருக்கும் குவாக்குவின் அனுபவத்தை சிந்தித்துப் பாருங்கள். பொறுப்பற்ற ஒரு குடிவெறியனாக அவர் தன்னுடைய வாழ்க்கையை வீணாக்கிக்கொண்டிருந்தார்.
குவாக்கு நினைவுபடுத்திச் சொல்கிறார்: “எனக்கு மரியாதை கொடுக்கும்படியாக என்னுடைய மனைவியை நான் கட்டாயப்படுத்த முயற்சி செய்தேன், இது குறிப்பாக நான் வெறித்திருந்தபோது அநேகமாக காரசாரமான தர்க்கங்களுக்கும் சண்டைகளுக்குமே வழிநடத்தியது. மதுபானத்தை அளவுக்கு அதிகமாக குடித்ததால் அடிக்கடி எனக்கு பணநெருக்கடி ஏற்பட்டது, நான் குடும்பத்துக்கு அடிக்கடி பணம் கொடுப்பதில் தவறினேன். புரிந்துகொள்ள முடிகிறவிதமாகவே, இது என்னுடைய மனைவியை மிகவும் எரிச்சலடையச் செய்தது. பணம் கையில் இல்லாத சமயங்களிலெல்லாம் (இது அடிக்கடி நிகழ்ந்தது), என்னுடைய பழக்கத்தை ஆதரிக்க எதையும் நான் செய்தேன். அரசாங்க தேர்வுக்கு மாணவர்களை பதிவு செய்வதற்காக வசூல் செய்த பணத்தை சொந்த உபயோகத்துக்கு எடுத்துக்கொள்ளும் அளவுக்கும்கூட ஒரு சமயம் சென்றுவிட்டேன். நான் தொடர்ந்து குடித்து கும்மாளம் போட்டுக்கொண்டும் என் குடிகார தோழர்களுக்கு மதுபானம் வாங்கிகொடுத்தும் வந்தேன். விரைவில் என்னுடைய கடந்த கால செயல்களுக்கு கணக்குகொடுக்க வேண்டிய சமயம் வந்தது. சரியான நேரத்தில் என்னுடைய தலைமை ஆசிரியர் மட்டும் தலையிட்டிராவிட்டால் நான் என்னுடைய வேலையை இழந்திருப்பேன்.
“என்னுடைய வாழ்க்கை குளறுபடியில் இருந்தது. எனக்கு சங்கடமாக இருந்தது, ஆனால் விரைவில் அதை மேற்கொண்டுவிட்டேன். பின்னர் என்னுடைய வாழ்க்கை ஒரு தோல்வி என்பதாக நினைத்த காரணத்தால் தற்கொலை சார்ந்த எண்ணங்களை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தேன். இருப்பினும், மதுபான பழக்கத்துக்கு அடிமையாக இருந்ததிலிருந்து என்னால் விடுபட்டு வரமுடியவில்லை. ஆனால் ஒரு நாள் ஒரு மதுகூடம் ஒன்றில் குடிவெறி அமளியில் ஈடுபட்டு நான் குத்தப்பட்ட போது, மதுபானத்துக்கான என்னுடைய விருப்பத்தின் காரணமாக ஒருநாள் என்னுடைய உயிரையே நான் இழக்கக்கூடும் என்ற சோர்வூட்டும் உணர்வுக்கு அது என்னைக் கொண்டுவந்தது.
“அந்தச் சமயத்தில், யெகோவாவின் சாட்சிகள் அவ்வப்போது எங்கள் வீட்டுக்கு வந்து, பைபிளில் எங்களை அக்கறைக்கொள்ள முயற்சி செய்து வந்தார்கள். நாங்கள் அவர்களை தொந்தரவாக நினைத்தபடியால் என்னுடைய மனைவியும் நானும் அவர்களை எப்பொழுதும் தட்டிக்கழித்துக்கொண்டே வந்தோம். ஆனால் ஒரு சமயம், அநுதாபத்தின் காரணமாக அவர்களுக்கு செவிசாய்க்க நான் தீர்மானித்தேன். ஒரு பைபிள் படிப்பு, கடவுளுடைய புதிய ஒழுங்கில் என்றுமாக வாழும் அதிசயமான எதிர்பார்ப்பை தெரிந்துகொள்ள செய்தது. யெகோவாவின் சாட்சிகளின் உதவியோடு நான் பைபிளை அதிகமதிகமாக படித்தபோது, உயிரளிப்பவராக யெகோவாவுக்கும் அவருடைய பரிசாகிய உயிருக்குமான என்னுடைய போற்றுதல் வளர்ந்தது, பைபிள் புத்திமதி நடைமுறை பயனுள்ளதாயிருப்பது என்னுடைய மனதில் அதிகமதிகமாக பதிய ஆரம்பித்தது. இது என்னுடைய வாழ்க்கையை சுத்தம்செய்ய மேலுமாக என்னை உற்சாகப்படுத்தியது. நான் தொடர்ந்து மதுவையும் என்னுடைய பழைய நண்பர்களையும் எதிர்க்க வேண்டியிருந்ததால் இது எளிதாக இருக்கவில்லை. ஜெபத்தைக் கேட்கிறவராகிய யெகோவா என் இருதயத்தின் உறுதியைப் பார்த்து எனக்குச் செவிகொடுத்தார்.a
“சாட்சிகளில் ஒருவராக இல்லாவிட்டாலும், என்னுடைய மனைவி இப்பொழுது என்னுடைய வாழ்க்கையிலும் எங்களுடைய விவாக உறவிலும் அவள் காணும் பெரிய மாற்றத்தின் காரணமாக என்னையும் என்னுடைய மதத்தையும் மிக உயர்வாக மதிக்கிறாள். என்னுடைய மனைவிக்கும் எனக்குமிடையே ஏற்படும் சண்டைகளில் எங்களுடைய அயலகத்தார் இனிமேலும் குறுக்கிட வேண்டிய அவசியமில்லை. இப்பொழுது நான் அனுபவித்து மகிழும் மனசமாதானத்தைப் பிரியமாக பேணி காத்துக்கொள்கிறேன். நிச்சயமாகவே, யெகோவா தேவனை நம்முடைய உயிரளிப்பவராக போற்றி, உயிரின் விலைமதிப்பு குறித்து அவருடைய நோக்குநிலையை ஏற்று, எவ்விதமாக வாழ்வது என்பதைப் பற்றியதில் அவருடைய போதனைகளுக்குக் கீழ்ப்பட்டிருப்பதே பிரயோஜனமான ஒரே வாழ்க்கை முறையாகும்.”
கடவுளுடைய நித்திய ஜீவனின் அளிப்பு
குவாக்குவைப் போன்றே, ஆயிரக்கணக்கானோர், “மெய்யான நீதியிலும், பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ள,” யெகோவாவின் சாட்சிகளால் உதவப்பட்டிருக்கிறார்கள். (எபேசியர் 4:24) அவர்கள் தங்களுடைய தற்போதைய வாழ்க்கையை மட்டுமல்லாமல் ஒரு பூமிக்குரிய பரதீஸில் நித்திய ஜீவனின் நம்பிக்கையையும்கூட மதித்துணர்ந்து வருகிறார்கள். கடவுள் உண்டுபண்ணும் அந்தப் பரதீஸில் பூமியின் குடிகளில் எவருமே, தொடர்ந்திருக்கும் பசியின் வேதனையை மறுபடியுமாக அனுபவிக்கமாட்டார், ஏனென்றால், “சேனைகளின் கர்த்தர் [யெகோவா, NW] சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துவார்; அது கொழுமையான பதார்த்தங்கள் . . . நிறைந்த விருந்தாயிருக்கும்.”—ஏசாயா 25:6.
தற்போது, உயிர், அதிசயமான ஒரு பரிசாக இருந்தபோதிலும், தற்காலிகமானதாகவே இருக்கிறது. அனைவரும் மரணத்தை எதிர்ப்படுகிறார்கள், மேலும் மரணம் என்னே அதிர்ச்சிதரும் ஓர் அடியாக இருக்கிறது! மிகக் குறைவாகச் சொன்னால், நீங்கள் நேசிக்கும் ஒருவர் உயிருள்ளோர் மத்தியிலிருந்து கல்லறையின் மெளனத்துக்குள் மறைந்துபோவதைக் கவனிப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. ஆனால் கிறிஸ்து ஆட்சிசெய்யும் கடவுளுடைய ராஜ்யத்தின் கீழ், யெகோவாவின் வாக்கு நிறைவேற்றமடையும்: “இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.”—வெளிப்படுத்துதல் 21:4.
உயிரின் பரிசு அந்தச் சமயத்தில் அதிசயமான அளவில் நீட்டிக்கப்படும். இந்தப் பூமியின் மீது இறுதியான உபத்திரவத்தைத் தப்பிப்பிழைப்பவர்கள் முழுமையான ஒரு வாழ்க்கைக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பை பெறுவர். அதற்குப் பின்னர், உயிரைத் திரும்ப பெறுதலாக இருக்கும், உயிர்த்தெழுதலின் மூலமாக, யெகோவா தேவன் மரணத்தில் நித்திரையாய் இருப்பவர்களுக்கு அவருடைய விலைமதிப்பற்ற பரிசை திரும்பத் தருவார். (யோவான் 5:24, 28, 29) இது மரித்த அன்பானவர்களும் பூர்வ கால கடவுள்-பயமுள்ள மனிதர்களும் திரும்ப வருவதை அர்த்தப்படுத்தும்!
நம்புவதற்கு இவையனைத்தும் இயல்புகடந்த அளவு நல்லதாக இருக்கின்றனவா? இல்லை, ஏனென்றால் “தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை.”—லூக்கா 1:37; யோபு 42:2 ஒப்பிடவும்.
மேலுமாக, இவையனைத்தும் நடந்தேறும் என்பதற்காக யெகோவா தேவன்தாமே ஓர் உத்தரவாதத்தை மனிதவர்க்கத்துக்கு அளித்திருக்கிறார். எவ்விதமாக? நம்மை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மீட்டுக்கொள்வதற்காக தம்முடைய இருதயத்துக்கு மிக அருமையானவராகிய, தம்முடைய அருமைக் குமாரன் இயேசு கிறிஸ்துவைப் பலிகொடுப்பதன் மூலம். ரோமர் 8:32 நமக்கு உறுதியளிப்பதாவது: “தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், [யெகோவா தேவன்] அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?” இது மனிதவர்க்கத்தை ஒழுக்க சீர்குலைவிலிருந்து சுத்திகரித்து, மேலும் எல்லாவிதமான அநீதி, குற்றச்செயல் மற்றும் வன்முறையையும் நீக்கிவிடுவதையும் உட்படுத்தும் என்பதாக பைபிள் நமக்குச் சொல்கிறது. (ஏசாயா 11:9) இனிமேலும் உயிர் ஒருபோதும் மலிவானதாக கருதப்படாது.
அபூரணமான நிலைமைகளின் கீழ், இப்போதும் கூட, வாழ்க்கை மகிழ்வுடன் அனுபவித்துக் களிப்பதாக இருக்கலாம். ஏங்க வைக்கும் உணவின் நறுமணம், உஷ்ணமான நாளில் மென்மையாக தென்றல் தொடும் உணர்ச்சி, கம்பீரமான மலையின் காட்சி, பகட்டான நிறங்களுள்ள சூரிய அஸ்தமனம், ஓடையின் அமைதியான நீரோட்டம், கிளர்ச்சியூட்டும் வண்ணப்பூக்கள், இன்னிசை ஒலி, அல்லது பறவைகளின் பாட்டு ஆகியவற்றில் யார்தான் மகிழ்ச்சி அடையாதிருப்பார்? ஒரு கணம் நில்லுங்கள். யோசித்துப் பாருங்கள், இப்பேர்ப்பட்ட காரியங்களை நித்தியத்துக்குமாக அனுபவிப்பது எப்படியிருக்கும்?
அப்படியென்றால், புத்தியில்லாத, சுய-கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறை அளிக்கக்கூடிய எந்தத் தற்காலிகமான இன்பத்துக்காகவும் என்றுமாக வாழும் விலையேறப்பெற்ற சிலாக்கியத்தைத் தூக்கியெறிவது அறிவுள்ளதாக இருக்குமா? (எபிரெயர் 11:25 ஒப்பிடவும்.) பைபிள் ஞானமாகவே, ‘இனி மனுஷருடைய இச்சைகளின்படி அல்ல, ஆனால் தேவனுடைய சித்தத்தைச் செய்வதற்கே பிழைத்திருக்கும்படி’ நமக்கு அறிவுரைகூறுகிறது. (1 பேதுரு 4:2) கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை படித்து, நீங்கள் கற்றுக்கொள்ளும் காரியங்களை கடைப்பிடிப்பதன் மூலம் அவ்விதமாகச் செய்யும்படி நாங்கள் உங்களை மனமார உற்சாகப்படுத்துகிறோம், ஆம், துரிதப்படுத்துகிறோம். (யோவான் 13:17) இவ்விதமாக உங்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுத்து பலனளிக்கக்கூடிய, நற்குணத்தாலும் இரக்கத்தாலும் நிரம்பி வழியும் யெகோவாவோடு நீங்கள் ஒரு நல்ல உறவுக்குள் வருவீர்கள்!
[அடிக்குறிப்புகள்]
a மதுபான பழக்கத்திலிருந்து மீண்டுவருதல் அடிக்கடி நிபுணர்களின் உதவியை தேவைப்படுத்தும் ஒரு கடினமான பணியாகும். இந்தப் பொருளின் பேரில் பயனுள்ள தகவலுக்கு எமது கூட்டுப்பத்திரிகை ஆங்கில விழித்தெழு! 1992, மே 22 பார்க்கவும்.
[பக்கம் 5-ன் படம்]
உங்கள் வாழ்க்கை-பாணி உயிரை மதித்துணருவதை பிரதிபலிக்கிறதா?
[பக்கம் 7-ன் படம்]
கடவுளுடைய புதிய உலகம் வாழ்க்கையின் இன்பங்களை நித்தியத்துக்குமாக அனுபவிக்க நம்மை அனுமதிக்கும்!