அறுவடைக்காலத்தில் நான் பிரதிபலித்தேன்
வின்னிஃபிரெட் ரெமி சொன்னபடி
“அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்.” மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாயிருந்த ஜனத்திடமாக நம்முடைய கர்த்தராகிய இயேசுவுக்கு ஏற்பட்ட ஆழமான உணர்ச்சிகளே இந்த வார்த்தைகளைத் தூண்டின. இதே உணர்ச்சிகளை நானும் அனுபவித்திருக்கிறேன், கடந்த 40 ஆண்டுகளாக, நான் எப்போதும் அறுவடையில் வேலைசெய்வதற்கான எஜமானரின் அழைப்புக்குச் சாதகமாகவே பிரதிபலித்திருக்கிறேன்.—மத்தேயு 9:36, 37.
நான் மேற்கு ஆப்பிரிக்காவில் ஏழு பிள்ளைகளையுடைய—அனைவருமே பெண் பிள்ளைகள்—ஒரு குடும்பத்தில் பிறந்தேன். எங்களுடைய பெற்றோர் கனிவுள்ளவர்களாக, ஆனால் கண்டிப்புள்ளவர்களாக இருந்தனர்; அவர்கள் மிகவும் மதப்பற்றுள்ளவர்களாக இருந்தனர். வாரந்தோறும் சர்ச்சுக்கும் ஞாயிறு பள்ளிக்கும் செல்வது தவிர்க்கப்பட முடியாததாக இருந்தது. நான் ஆவிக்குரிய காரியங்களை நேசித்தபடியால் எனக்கு இது ஒரு பிரச்னையாக இருக்கவில்லை. உண்மையில், 12 வயதில் ஞாயிறு பள்ளி வகுப்புகளை நடத்த நான் நியமிக்கப்பட்டேன்.
திருமணமும் துணிவான செயலும்
நான் 1941-ல் 23 வயதில், அரசு அலுவலத்தில் கணக்கு எழுத்தாளராக இருந்த லிக்ஃபீல்டு ரெமியை திருமணம் செய்துகொண்டேன். பொருளாதாரத்தில் நாங்கள் வசதியுள்ளவர்களாக இருந்தோம், ஆனால் துணிவான செயலுக்கான விருப்பமும் பொருளாதார செல்வத்தைச் சேர்க்க வேண்டும் என்ற ஆர்வமும் 1944-ல் லைபீரியாவுக்கு எங்களைக் கொண்டு சென்றது. என்னுடைய கணவர் 1950-ல் யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு மிஷனரியான ஹாயில் இர்வினைச் சந்தித்தப்போது அது அவருடைய வாழ்க்கையிலும், கடைசியில் என்னுடைய வாழ்க்கையிலும் ஒரு திரும்புக் கட்டமாக அமைந்துவிட்டது. மூன்றே வாரங்கள் படித்தப்பிறகு, என்னுடைய கணவன் பிரசங்க வேலையில் பங்குகொள்ள ஆரம்பித்தார்.
என்னுடைய கணவர் சர்ச்சுக்குப் போவதை நிறுத்திவிட்டபோது நான் நிலைகுலைந்துபோனேன். லெந்து நாட்களில் உபவாசம்கூட இருக்கும் உறுதியுள்ள ஒரு புராட்டஸ்டன்டாக இருந்தவர் ஆயிற்றே. கையில் பையோடு முதல் முறையாக அவர் பிரசங்கிக்கச் சென்றபோது நான் மிகவும் கோபமடைந்தேன். “உங்களுக்கு என்ன வந்துவிட்டது?” என்று நான் கேட்டேன். “உங்களைப் போன்ற ஒரு முக்கியமான மனிதர் இந்த மூட்டாள்த்தனமான ஆட்களோடு சென்று பிரசங்கிப்பதா!” நான் வசைமாறிப் பொழிந்தபோது அவர் சாந்தமாகவும் அமைதியாகவும் இருந்தார்.
அடுத்த நாள், சகோதரர் இர்வின் லிக்ஃபீல்டுடன் படிப்பதற்காக எங்களுடைய வீட்டுக்கு வந்தார். எப்போதும் போல் நான் படிப்பில் கலந்துகொள்ளாமல் விலகியே இருந்தேன். ஒருவேளை இதன் காரணமாகத்தான் சகோதரர் இர்வின் எனக்கு எழுதப்படிக்கத் தெரியாதா என்பதாக என்னிடம் கேட்டிருக்க வேண்டும். என்ன? எனக்கு எழுதப்படிக்கத் தெரியாதா? என்னே அவமதிப்பு! நான் எவ்வளவு படித்தவள் என்பதை அவரிடம் காண்பிப்பேன்! இந்தப் பொய் மதத்தை நான் வெளிப்படுத்துவேன்!
சத்தியத்தை ஏற்றுக்கொள்ளுதல்
இதற்குப் பின் விரைவிலேயே, பகல் நேர அறையின் மேசையில் “கடவுள் சத்தியபரராக இருக்கட்டும்” என்ற புத்தகத்தை கவனித்தேன். ‘என்னே பொருத்தமற்ற ஒரு தலைப்பு,’ என்று நான் யோசித்தேன். ‘கடவுள் எப்போதும் சத்தியபரராக இருக்கிறார், இல்லையா?’ புத்தத்தைப் புரட்டிப் பார்த்தபோது, குற்றஞ்சாட்ட மற்றொரு காரணத்தை நான் வேகமாக கண்டுபிடித்துவிட்டேன். மனிதன் ஓர் ஆத்துமாவை உடையவனாக இல்லை, அவனே ஆத்துமாவாக இருக்கிறான் என்று அது சொன்னது! நாய்களும் பூனைகளும்கூட ஆத்துமாக்களாக இருக்கின்றன! இது எனக்கு உண்மையில் எரிச்சலூட்டுவதாக இருந்தது. ‘என்னே ஒரு முட்டாள்த்தனமான போதனை!’ என்று நான் நினைத்தேன்.
என் கணவர் வீடு திரும்பியபோது கோபத்தோடு அவரை நேருக்கு நேர் சந்தித்தேன். “இந்த மோசக்காரர்கள் மனிதனுக்கு ஓர் ஆத்துமா இல்லை என்று சொல்கிறார்கள். அவர்கள் கள்ளத்தீர்க்கதரிசிகள்!” என்னுடைய கணவர் சண்டை போடவில்லை; மாறாக, அவர் அமைதியாக பதிலளித்தார்: “வின்னீ, எல்லாமே பைபிளில் இருக்கிறது.” பின்னர், சகோதரர் இர்வின் பொறுமையாக என்னுடைய சொந்த பைபிளிலிருந்தே நாம் ஆத்துமாக்களாக இருக்கிறோம், நம்முடைய ஆத்துமா சாகும் தன்மையுள்ளது என்பதை எனக்குக் காண்பித்தபோது எனக்கு ஆச்சரியமாயிருந்தது. (எசேக்கியேல் 18:4) குறிப்பாக என்னை மிகவும் கவர்ந்த வசனம் ஆதியாகமம் 2:7 ஆகும். அது சொல்கிறது: “மனுஷன் [ஆதாம்] ஜீவாத்துமாவானான்.”
நான் எவ்வளவு தவறாக இருந்திருக்கிறேன்! பாதிரிமாரால் நான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தேன், திரும்பவும் ஒருபோதும் சர்ச்சுக்குச் செல்லவில்லை. மாறாக, யெகோவாவின் சாட்சிகளுடைய கிறிஸ்தவக் கூட்டங்களுக்குச் செல்ல ஆரம்பித்தேன். அவர்கள் மத்தியில் இருந்த அன்பைக் காண்பது எவ்வளவு மனகிளர்ச்சியை ஏற்படுத்தியது! இதுவே உண்மை மதமாக இருக்க வேண்டும்.
பால்மாஸ் முனையில் அறுவடை செய்தல்
மூன்று மாதங்களுக்குப் பின்னர், என்னுடைய கணவருக்கு அவருடைய கம்பெனியிலிருந்து பெரிய தொகை பணத்தை களவாட ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது—ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. அவரோடு வேலைபார்த்தவர்கள், “ரெமி, நீ ஏழையாக சாகப்போகிறாய்,” என்று பழித்துப் பேசினார்கள்.
என்றபோதிலும், அவருடைய நேர்மையின் காரணமாக, அவர் உயர் பதவி அளிக்கப்பட்டு பால்மாஸ் முனையில் புதிய அலுவலகம் ஒன்றை திறப்பதற்கு அனுப்பி வைக்கப்பட்டார். நாங்கள் வைராக்கியத்தோடு பிரசங்கித்தோம், இரண்டே மாதங்களுக்குப் பிறகு, பைபிளின் செய்தியில் மிகவும் ஆர்வமாயிருந்த ஒரு சிறிய தொகுதியைக் கொண்டிருந்தோம். பின்னால், லிக்ஃபீல்டு தன்னுடைய புதிய அலுவலகத்துக்குப் பொருட்களை வாங்க தலைநகரான மன்ரோவியாவுக்கு பயணப்பட்டபோது அவர் முழுக்காட்டப்பட்டார். பால்மாஸ் முனையில் சத்தியத்தில் அக்கறைக்காண்பித்துக் கொண்டிருந்தவர்களை கவனித்துக்கொள்ளவும்கூட அவர் சங்கத்திடம் உதவியை வேண்டினார்.
சங்கம் சகோதரர் சகோதரி ஃபாஸ்டை பால்மாஸ் முனைக்கு அனுப்பிவைப்பதன் மூலம் உதவினார்கள். சகோதரி ஃபாஸ்ட் எனக்கு விலைமதிக்க முடியாத உதவியாக இருந்தார்கள், 1951 டிசம்பரில் முழுக்காட்டப்படுவதன் மூலம் யெகோவாவுக்கு என்னுடைய ஒப்புக்கொடுத்தலை நான் அடையாளப்படுத்தினேன். எப்போதுமிருந்ததைவிட நான் அதிகமாக ‘நித்திய ஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ள’ அதிக தீர்மானமாயிருந்தேன். (யோவான் 4:35, 36) 1952 ஏப்ரலில், நான் ஒரு பயனியராக முழு-நேர ஊழியத்தை எடுத்துக்கொண்டேன்.
என்னுடைய முயற்சிகளை யெகோவா உடனடியாக ஆசீர்வதித்தார்; ஒரே ஆண்டில் ஐந்து பேர் ஒப்புக்கொடுக்கவும் முழுக்காட்டப்படவும் நான் உதவிசெய்தேன். அவர்களில் ஒருவர் லைபீரியாவின் அந்நாளைய ஜனாதிபதியான W. V. S. டப்மேனின் உறவினரான லூஸியா மக்கின்டோஷ். அவள் முழுக்காட்டப்பட்டு முழுநேர ஊழியத்தில் பிரவேசித்து 1984-ல் அவளுடைய மரணம் வரையாக அவள் தொடர்ந்து கடவுளுக்கு உண்மையுள்ளவளாக இருந்தாள். பல சந்தர்ப்பங்களில் அவள் ஜனாதிபதிக்குச் சாட்சிகொடுத்திருக்கிறாள்.
கீழ் பியுகானனுக்கு
மாவட்ட கண்காணியின் சந்திப்பின்போது 1957-ல், என்னுடைய கணவரும் நானும் விசேஷித்த பயனியர்களாகும்படி அழைக்கப்பட்டோம். ஜெபசிந்தையோடு கலந்துபேசிய பிறகு, நாங்கள் நியமிப்பை ஏற்றுக்கொண்டோம். லிக்ஃபீல்டுக்கு பால்மாஸ் முனையில் அவருடைய உலகப்பிரகாரமான வேலையை முடித்துக்கொடுத்துவிட்டு வருவதற்கு ஒரு சில மாதங்கள் தேவைப்பட்டன. ஆகவே நான் புதிய பிராந்தியத்தில் வேலையை ஆரம்பிப்பதற்கு கீழ் பியுகானனிற்குப் புறப்பட்டேன்.
அங்கே வந்துசேர்ந்தபோது, மக்ளியன் குடும்பத்தார் எனக்கு தங்க இடமளித்தார்கள். அடுத்த நாள், வழக்கப்படி, பெலே குலத்தின் துணைத் தலைவரிடம் அழைத்துசெல்லப்பட்டேன். தலைவரும் அவருடைய குடும்பத்தாரும் என்னை அனலோடு வரவேற்றார்கள், அவருடைய வீட்டிலிருந்த ஒரு சிறிய தொகுதியிடம் நான் சாட்சிகொடுத்தேன். துணைத்தலைவரும் அவருடைய மனைவியும் உட்பட அந்நாளில் நான் பேசியவர்களில் ஆறு பேர் கடைசியில் சாட்சிகளானார்கள்.
விரைவில் நான் 20-க்கும் அதிகமானவர்கள் ஆஜராயிருந்த ஒரு காவற்கோபுரம் படிப்பை நடத்திக்கொண்டிருந்தேன். நான் வெகுவாக யெகோவாவின்மீது சார்ந்திருக்க வேண்டியிருந்தது, அவருடைய ஆடுகளைக் கவனித்துக்கொள்ள தேவையான பெலத்தையும் திறமையையும் அவர் எனக்குக் கொடுத்தார். நான் சோர்வாக அல்லது தகுதியற்றவளாக உணர்ந்த சமயத்தில், யெகோவாவின் வேலைகளை நிறைவேற்றுவதில் தைரியமாக இருந்த, பூர்வ காலத்தில் உண்மையுள்ளவர்களாயிருந்தவர்களை, விசேஷமாக தெபொராள் மற்றும் உல்தாள் போன்ற பெண்களை நான் நினைத்துக்கொள்வேன்.—நியாயாதிபதிகள் 4:4-7, 14-16; 2 இராஜாக்கள் 22:14-20.
மார்ச் 1958-ல், கீழ் பியுகானனில் வந்து மூன்றே மாதங்களில், வட்டார கண்காணி ஜான் ஷாருக் அவர்களின் சந்திப்பை எனக்குத் தெரியப்படுத்திய ஒரு கடிதத்தை நான் பெற்றுக்கொண்டேன். பெரிய கூட்டத்துக்குப் போதுமானதாக இருக்க ஒரு வீட்டின் கீழ் அறையை வாடகைக்கு எடுத்தேன். பின்னர் சகோதரர் ஷாருக்கைச் சந்திக்க மேல் பியுகானன் வரையாக பிரயாணம் செய்தேன், ஆனால் அவர் வரவில்லை. இருட்டும் வரை அங்கு காத்திருந்துவிட்டு கீழ் பியுகானனுக்கு நான் களைப்பாகத் திரும்பினேன்.
சுமார் நள்ளிரவாக இருந்தபோது, கதவை தட்டும் சத்தம் எனக்குக் கேட்டது. திறந்தபோது, வட்டார கண்காணியை மட்டுமல்லாமல் என்னுடைய கணவரையும் நான் பார்த்தேன். அவருடைய திடீர் வருகையோடு சகோதரர் ஷாருக்கின் வருகையும் தற்செயலாக அழகாக ஒரே சமயமாக அமைந்துவிட்டிருந்தது. அவர்கள் என்னை எவ்வாறு கண்டுபிடித்தார்கள்? அவர்கள் ஒரு வேட்டைக்காரனைச் சந்தித்திருக்கிறார்கள், யெகோவாவைப் பற்றி மக்களுக்குப் பிரசங்கம் செய்துகொண்டிருந்த ஒரு பெண்மணியை அவனுக்குத் தெரியுமா என்று கேட்டிருக்கிறார்கள். “ஆம்,” என்று அவன் பதிலளித்து, பின்னர் என்னுடைய வீட்டுக்கு வழிகாட்டியிருக்கிறான். மூன்றே மாதங்களில் கீழ் பியுகானனில் என்னுடைய வெளிச்சம் இத்தனை பிரகாசமாக ஒளி வீசிக் கொண்டிருந்ததற்காக நான் எவ்வளவு மகிழ்ச்சியாக உணர்ந்தேன்!—மத்தேயு 5:14-16.
சகோதரர் ஷாருக்கின் சந்திப்பின்போது நாங்கள் 40 என்ற உச்ச ஆஜர் எண்ணிக்கையை அனுபவித்தோம். காலப்போக்கில் தழைத்தோங்கும் ஒரு சபை ஸ்தாபிக்கப்பட்டது, நாங்கள் எங்களுடைய அழகிய ராஜ்ய மன்றத்தையும் கட்ட முடிந்தது. என்றபோதிலும், வாழ்க்கை எப்போதும் பிரச்னைகள் இல்லாமல் இல்லை. உதாரணமாக, 1963-ல் கோலாஹனில் மதத் துன்புறுத்தல் ஆரம்பமானது, என்னுடைய கணவர் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சைபெறும் அளவுக்கு மிக மோசமாக அடிக்கப்பட்டார்.
அவர் மருத்துவமனையைவிட்டு வெளியேறிய பின், அதே வருடத்தில், கபர்னாவில் நாங்கள் ஒரு மாநாட்டைக் கொண்டிருந்தோம். கடைசி நாளில், இராணுவவீரர்கள் ஆஜராயிருந்த அனைவரையும் சுற்றி நின்றுகொண்டு கொடியை வணங்கும்படியாக எங்களுக்கு உத்தரவிட்டார்கள். நாங்கள் மறுத்தபோது, போர்வீரர்கள் கையை உயர்த்தி நேராக சூரியனைப் பார்க்கும்படியாக எங்களைக் கட்டாயப்படுத்தினார்கள். அவர்கள் எங்களில் சிலரை அவர்களுடைய கைத்துப்பாக்கியின் தடித்த முனையினால் அடித்தார்கள். கடவுளுக்கு என்னுடைய உத்தமத்தன்மையைக் காத்துக்கொள்வதற்கு உதவியாக நான் “அவர்களுக்குப் பயப்படாதேயுங்கள்!” என்ற ராஜ்ய பாடலை எனக்குநானே பாடிக்கொண்டேன். அதற்குப் பின் இராணுவவீரர்கள் எங்களை ஓர் அழுக்கடைந்த சிறைச்சாலைக்குள் எறிந்தார்கள். மூன்று நாட்களுக்குப் பிறகு அயல்நாட்டவர் விடுவிக்கப்பட்டார்கள், லிக்ஃபீல்டும் நானும் சயரா லியோனுக்கு நாடு கடத்தப்பட்டோம். உள்ளூர் சாட்சிகள் அடுத்த நாள் விடுவிக்கப்பட்டார்கள்.
கூடுதலான சிலாக்கியங்களும் வெகுமதிகளும்
சயரா லியோனுக்கு தெற்கே போ சபையோடு வேலை செய்ய நாங்கள் நியமிக்கப்பட்டோம். நஜாலாவுக்கு மாற்றலாகி செல்லும்வரை அங்கே எட்டு ஆண்டுகள் நாங்கள் சேவித்தோம். நஜாலாவில் என்னுடைய கணவர் உதவி வட்டார கண்காணியாக சேவிக்க நியமிக்கப்பட்டார். இந்த ஊழியத்தில் அவர் ஈடுபட்ட போது அவரோடு செல்லும் சிலாக்கியம் எனக்குக் கிடைத்தது. பின்னர் 1970-களின் மத்தியில் நாங்கள் மறுபடியுமாக கிழக்கு ஃபீரிடெளன் சபைக்கு நியமிக்கப்பட்டோம்.
நான் பைபிள் படிப்பு நடத்திய அநேகர் மெய் வணக்கத்தைத் தழுவிக்கொள்வதைப் பார்க்கும் வெகுமதியை நான் அனுபவித்திருக்கிறேன். எனக்கு “சிபாரிசு கடிதங்களாக,” 60-க்கும் மேற்பட்ட ஆவிக்குரிய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் இருக்கிறார்கள். (2 கொரிந்தியர் 3:1, NW) ஒரு சிலர் அலாதூரா பிரிவின் தீர்க்கதரிசினியாக இருந்த விக்டோரியா டைக்கைப் போன்று தீவிரமான மாற்றங்களைச் செய்யவேண்டியவர்களாக இருந்திருக்கிறார்கள். 1 யோவான் 5:21-ஐ சிந்தித்தப் பிறகு, கடைசியாக மூடநம்பிக்கைக்குரிய மற்றும் போலி வழிபாட்டுப் பொருட்களை அவள் அப்புறப்படுத்திவிட்டாள். அவள் தன் ஒப்புக்கொடுத்தலை முழுக்காட்டுதலின் மூலம் அடையாளப்படுத்தி கடைசியாக ஒரு விசேஷித்த பயனியராக ஆனாள், அவளுடைய உறவினர்களில் அநேகர் சத்தியத்தை ஏற்றுக்கொள்ள அவள் உதவிசெய்திருக்கிறாள்.
ஏப்ரல் 1985-ல், எங்களுடைய 44-வது திருமண ஆண்டுநிறைவுக்கு ஒரு சில மாதங்களுக்கு முன் நான் என் கணவரை இழந்தேன். ஆனால் நான் தனியாக விடப்பட்டில்லை. நான் தொடர்ந்து என்னுடைய சகாயரான யெகோவாவை ஒரு முழு-நேர ஊழியக்காரியாக சேவித்து வருகிறேன். அவரை அறிந்துகொள்ள நான் உதவிசெய்திருப்பவர்களிடமாக விசேஷமான ஒரு பந்தத்தை உணருகிறேன். அவர்கள் விசேஷமான கருத்தில் குடும்பமாக இருக்கின்றனர். நான் அவர்களை நேசிக்கிறேன், அவர்கள் என்னை நேசிக்கிறார்கள். நான் வியாதியாயிருக்கையில், என்னை கவனித்துக்கொள்ள அவர்கள் விரைந்துவருகிறார்கள், நானும் நிச்சயமாகவே அவர்களுக்கு உதவிசெய்கிறேன்.
மறுபடியுமாக நான் அனைத்தையும் செய்யவேண்டியிருந்தால், என்னுடைய அரிவாளைச் சந்தோஷத்தோடே எடுத்துக்கொண்டு யெகோவாவின் உடன் வேலையாளாக அறுவடையில் சேர்ந்துகொள்வேன் என்பதைப் பற்றியதில் எந்தச் சந்தேகமுமில்லை.
[பக்கம் 23-ன் படம்]
வின்னிஃபிரெட் ரெமி இன்று