வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திலிருந்து காட்சிகள்
கெரசா—யூதனும் கிரேக்கனும் சந்தித்த இடம்
ஆபிரகாமின் மெய்யான வித்தினிடையே “யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை,” என்று அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார். (கலாத்தியர் 3:26-29) ஆம், கடவுள் ஏற்றுக்கொள்வதைப் பொறுத்தவரை தேசிய பின்னணியோ கலாச்சாரமோ ஒரு பொருட்டல்ல.
ரோம மாகாணத்தைச் சுற்றி பரவலாக இருந்த கிறிஸ்தவர்களுக்கு அந்த வார்த்தைகள் பொருத்தமானதாக தோன்றும். கலாத்தியா போன்ற மாகாணங்களில் யூதர்கள், கிரேக்கர்கள், ரோமர்கள், உள்ளூர் ஜனங்கள் ஆகியோர் ஒன்றுகூடி வாழ்ந்துகொண்டிருந்தனர். ஆனால் கீலேயாத் போன்ற இஸ்ரவேலின் பகுதிகளைப் பற்றியென்ன?
அந்நிலப் பகுதி யோர்தானுக்கு கிழக்கே உப்புக் (சவக்) கடலுக்கும் கலிலேயாக் கடலுக்கும் இடையே இருக்கிறது. இச்செழிப்பான மேட்டு நிலத்தின் நடுவில், யாப்போக்கு ஆறு யோர்தானை நோக்கி இறங்குகிறது. மனதில் ஆழ்ந்து பதியத்தக்க கெரசாவின் சில இடிபாடுகளை மேலே இருக்கும் புகைப்படம் காண்பிக்கிறது. இப்போது ஜெராஷ் என்று இது அழைக்கப்படுகிறது. மேல் யாப்போக்கு அருகே அது அமைந்துள்ளது.
“ராஜாவின் பெருஞ்சாலை” என்றழைக்கப்பட்ட பண்டைய கால வடக்கு-தெற்கு வர்த்தக மார்க்கம் ஒன்று கீலேயாத்துக்கு குறுக்காகக் கடந்துசென்றது. ஆரானை விட்டு புறப்பட்டபோது யாக்கோபும் அவருடைய குடும்பத்தாரும் யாப்போக்கு என்ற இடத்துக்கு இந்தச் சாலை வழியாய் பயணம் செய்ததாக தெரிகிறது. அவர் ஒரு தேவதூதனோடு போராடினார். கெரசா கட்டப்படப் போகும் இடத்துக்கு அருகே ஏசாவை அவர் எதிர்ப்பட்டார். (ஆதியாகமம் 31:17-25, 45-47; 32:22-30; 33:1-17) அதற்கு பிற்பட்ட காலத்தில், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை நோக்கிச் செல்கையில் இஸ்ரவேலர்கள் தெற்கேயிருந்து புறப்பட்டு ராஜாவின் பெருஞ்சாலை வழியாய்ச் சென்றனர். வர்த்தக மார்க்க ஓரமாய் யாப்போக்கின் வடக்கு பக்கத்திலும் தெற்கு பக்கத்திலும் இரண்டரை கோத்திரங்கள் குடியேறினர்.—எண்ணாகமம் 20:17; உபாகமம் 2:26, 27.
இப்பகுதியில் கிரேக்கர்கள் உட்பட்டிருந்தனரா? அவ்வாறு உட்பட்டிருந்தால், எவ்வாறு? ஆம், மகா அலெக்சாந்தர் அப்பகுதியை வென்று கைப்பற்றியபோது. பாரம்பரியத்தின்படி, தன்னுடைய படையில் இருந்து ஓய்வுபெற்ற வீரர்களுக்காக அவர் கெரசாவை ஸ்தாபித்தார். படிப்படியாக கிரேக்க செல்வாக்கு நன்கு நிலைநாட்டப்பட்டது. யோர்தானுக்கும் கலிலேயாக் கடலுக்கும் கிழக்கே இருந்த குடியிருப்பு-பட்டணங்களில் பத்து பட்டணங்கள் தெக்கப்போலி என்றழைக்கப்பட்ட பட்டணங்களின் கூட்டமைவு ஒன்றை ஏற்படுத்தின. அந்தப் பெயரை நீங்கள் பைபிளில் கவனித்திருக்கலாம். “கலிலேயாவிலும், தெக்கப்போலியிலும், எருசலேமிலும், யூதேயாவிலும், யோர்தானுக்கு அப்புறத்திலும் இருந்து திரளான ஜனங்கள் வந்து, அவருக்குப் [இயேசுவுக்குப்] பின்சென்றார்கள்,” என்று பைபிள் அறிக்கை செய்கிறது. கெரசா தெக்கப்போலி பட்டணங்களில் ஒன்று.—மத்தேயு 4:25.
‘கிரேக்க ஜனங்களை பேரரசின் எல்லா பாகங்களுக்குள்ளும் அறிமுகப்படுத்துவது அலெக்சாந்தரின் திட்டத்தின் பாகமாயிருந்தது. [தெக்கப்போலி உட்பட] விசேஷமாக முக்கியமான இடங்களில் ஒன்றாக கீழ் சீரியா பெரும் கிரேக்க ஜனத்தொகையை ஏற்றுக்கொண்டது. யோர்தானுக்கு கிழக்கே இருக்கும் தேசத்தைப் போன்று இன்று வரை கிழக்கத்திய உலகின் எந்தப் பகுதியும் கவர்ச்சிமிக்க தன்மையுள்ள அத்தனை கிரேக்க இடிபாடுகளை காண்பிக்க முடிவதில்லை. கிரேக்க நிறுவனங்களையும், வழக்கங்களையும் முழுவதுமாக நிலைநாட்டியதை கிரேக்க பட்டணங்கள்—கிரேக்க தேவர்களுக்கும் தேவதைகளுக்கும் சிறந்த கோவில்கள், உடற்பயிற்சிப் பள்ளிகள், பொது குளியலறைகள், விளையாட்டு ஆண்டு கொண்டாட்டங்கள், அநேக இடங்களில் தத்துவஞானப் பள்ளிகளும் கல்விச் சாலைகளும்—ஆகியவற்றின் மூலம் மேலோட்டமாக வெளிப்படுத்திக் காட்டின.’—நார்மன் பென்ட்விக் என்பவரால் எழுதப்பட்ட ஹெலனிஸம்.
கெரசாவின் இடிபாடுகளை நீங்கள் சென்று பார்த்தால், அதைப் பற்றி மிகுதியான சான்றுகளை காண்பீர்கள். தெற்கு நுழைவாயிலுக்கு அருகே, வட்டமான பொதுவிடம் அல்லது பொது அங்காடி ஒன்று அங்கே இருக்கிறது. இது புகைப்படத்தில் தெரிகிறது. குளியலறைகள், கோவில்கள், திரை அரங்குகள், பொது கட்டிடங்கள், அவைகளில் அநேகம் தூண்கள் வரிசையாக அமைந்திருந்த ஓர நடைபாதைகளைக் கொண்ட தெருக்களால் இணைக்கப்பட்டிருப்பதைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். பட்டணத்துக்கு வெளியே, கெரசாவை மற்ற தெக்கப்போலி பட்டணங்களுக்கும் மத்திய தரைக் கடல் சார்ந்த துறைமுகங்களுக்கும் இணைத்த பண்டைய சாலை ஓரமாக மைல்கல்களை நீங்கள் காணலாம்.
பொ.ச.மு. 63-ல் ரோம் கெரசாவை எடுத்துக்கொண்டபோதும்கூட கிரேக்க பண்பாடு தொடர்ந்து இருந்தது. கெரசாவிலும் அந்தப் பகுதியிலும் வாழ்ந்துகொண்டிருந்த யூதர்களை இந்தப் பண்பாடு எவ்வாறு பாதித்திருக்கக்கூடும் என்பதை நீங்கள் கற்பனைச் செய்து பார்க்கலாம். ஹெலனிஸம் என்ற புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “தங்களைச் சுற்றியிருந்த ஜனங்களின் மதக் கருத்துக்களை யூதர்கள் தங்கள் மனதுக்குள் எடுத்துக்கொள்ள ஆரம்பித்தனர். அப்படிப்பட்ட கருத்துக்களின் செல்வாக்கின்கீழ் வேதாகமத்தை படிக்க ஆரம்பித்தனர். இது படிப்படியாக ஏற்பட்டது, ஆனால் நிச்சயமாக நடந்தது.”
இயேசு இப்பட்டணத்தில் ஒருவேளை பிரசங்கித்திருக்க மாட்டார். ஆனால் அவர் கலிலேயா கடலைச் சென்றடைந்த கெரசா மாகாணத்துக்குள் சென்றார். அந்த மாகாணத்தில் இருந்த ஒரு மனிதனிலிருந்து பிசாசுகளைத் துரத்தினார். அவை பன்றிகளுக்குள் போகும்படி அனுமதித்தார். (மாற்கு 5:1-17) அவருடைய ஆரம்பகால சீஷர்கள் தெக்கப்போலி பட்டணங்களில் இருந்த யூதர்களுக்கு பிரசங்கித்திருக்க வேண்டும். பொ.ச. 36-க்குப் பிறகு கெரசாவில் இருந்த கிரேக்கர்களோடு நற்செய்தி அளிக்கப்பட முடிந்தது. கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட ஒரு நபர் யூத மதத்தைக் கண்டிப்பாக கடைப்பிடித்தவராக இருந்தாலும், கிரேக்க பண்பாட்டை பின்பற்றிய யூதனாக இருந்தாலும், அல்லது ஒரு கிரேக்கனாக இருந்தாலும், ஆபிரகாமின் ஆவிக்குரிய வித்தின் பாகமாக மெய்க் கடவுளால் அவன் ஏற்றுக்கொள்ளப்பட முடியும்.
[பக்கம் 24-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
கலிலேயாக் கடல்
தியொன்
சிதோபாலீஸ் (பெத்செயான்)
கதரேனருடைய நாடு
பெல்லா
கெரசா (ஜாரஷ்)
யாப்போக்கு
பிலதெல்பியா (ராபா)
எருசலேம்
யோர்தான்
உப்புக் கடல்
ராஜாவின் சாலை
[பக்கம் 24-ன் படம்]
1992 யெகோவாவின் சாட்சிகளுடைய நாட்காட்டியில் மேலே இருக்கும் புகைப்படம் பெரிய அளவில் உள்ளது.
[படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
[பக்கம் 25-ன் படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.