வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
சில மொழிபெயர்ப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஒற்றைக் கொம்புடைய விலங்குகள் (Unicorns) உயிர் வாழ்ந்ததை பைபிள் ஆதரிக்கிறதா?
கிங் ஜேம்ஸ், டூவே, மற்றும் சில மொழிபெயர்ப்புகள் ஒற்றைக் கொம்புடைய புராணக்கதை விலங்குகளைப் பற்றி குறிப்பிடுகின்றன. ஆனால் எபிரெய மொழியை திருத்தமாக மொழிபெயர்க்கும் நவீன மொழிபெயர்ப்புகள் அப்படி குறிப்பிடுவதில்லை.—சங்கீதம் 22:21; 29:6; 92:10; (21:22; 28:6; 91:11, டூவே).
குதிரையின் உடலும் தலையும், மானின் கால்களும், சிங்கத்தின் வாலும் கொண்ட ஒரு விலங்கைப் பற்றி பல நூற்றாண்டுகளாக அநேக புராணக்கதைகள் உருவாகியிருக்கின்றன. இந்தப் புராணக்கதை விலங்கின் அதிக தனிச்சிறப்பு வாய்ந்த அம்சம் என்னவெனில், அதனுடைய நெற்றியின் மீது இருக்கும் ஒற்றைக் கொம்பு.a
“நச்சுத் தன்மையை முறிப்பதற்கான மருந்து, ஒற்றைக் கொம்புடைய விலங்குகளின் கொம்புகளில் இருந்தது என்று ஜனங்கள் ஒரு காலத்தில் நம்பினர். இப்படிப்பட்ட கொம்புகளிலிருந்து செய்யப்பட்ட மருந்து பொடிகள் இடைநிலைக் காலத்தின் போது அதிக உயர்வான விலைகளுக்கு விற்கப்பட்டன. காண்டாமிருகத்தைப் பற்றி கேட்டு தெரிந்துகொண்ட ஐரோப்பிய பதிவுகளிலிருந்து ஒற்றைக் கொம்புடைய விலங்கின் உருவம் உருவாக்கப்பட்டது என்று பெரும்பாலான இலக்கிய மேதைகள் நம்புகின்றனர்.” (தி உவோர்ல்ட் புக் என்ஸைக்ளோபீடியா) சில அசீரிய, பாபிலோனிய நினைவு மண்டபங்கள் ஒற்றைக்-கொம்புடைய விலங்குகளை காண்பித்தன. கலைமான்கள், மலை ஆடுகள், பசுக்கள், காளைகள் ஆகியவை ஒரு கோணத்திலிருந்து உருப்படுத்திக் காட்டப்பட்டிருக்கின்றன என்று இவைகள் இப்போது அடையாளம் கண்டு கொள்ளப்பட்டிருக்கின்றன. இரண்டு கொம்புகளையும் காண்பிக்காத ஒரு தோற்றமாக அவைகள் இருந்தன.
ரீம் என்ற எபிரெய பதத்தால் வேதாகமம் ஒரு மிருகத்தைக் குறிப்பிட்டுக் காட்டுவதால், இது பைபிள் மாணாக்கர்களுக்கு அக்கறைக்குரிய விஷயம். (எண்ணாகமம் 23:22; 24:8; உபாகமம் 33:17; யோபு 39:9, 10; சங்கீதம் 22:21; 29:6; 92:10; ஏசாயா 34:7) எந்த மிருகம் அங்கே குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதைக் குறித்து மொழிபெயர்ப்பாளர்கள் நீண்ட காலம் நிச்சயமற்றவர்களாய் இருந்தனர். கிரேக்க செப்டுவஜின்ட், ரீம் என்பதை ‘ஒற்றைக் கொம்புடைய மிருகம்’ என்ற அர்த்தத்தில் மொழிபெயர்த்தது. லத்தீன் வல்கேட் “காண்டாமிருகம்” என்று அதை மொழிபெயர்க்கிறது. மற்ற மொழிபெயர்ப்புகள் ‘காட்டு எருது,’ ‘மூர்க்க மிருகங்கள்’ அல்லது ‘எருமை’ போன்றவற்றை உபயோகிக்கின்றன. ரீம் என்ற எபிரெய மொழி சொல்லை ராபர்ட் யங் என்பவர் வெறுமென அப்படியே ஆங்கிலத்தில் எழுத்துப் பெயர்ப்பு செய்கிறார். வாசிப்பவரை அறியா நிலையில் விட்டு விடுகிறார்.
நவீன நாளைய இலக்கிய மேதைகள் ரீம் என்ற சொல்லைப் பற்றிய குழப்பத்தை நீக்கி விட்டிருக்கின்றனர். Bos primigenius என்ற விஞ்ஞானப்பூர்வ அடையாளத்தோடு “காட்டு காளையை” அது அர்த்தப்படுத்துகிறது என்று லட்விக் கோலர், வால்ட்டர் பாம்கார்ட்னர் என்ற சொற்களஞ்சிய ஆசிரியர்கள் காண்பிக்கின்றனர். இது “பெரிய கொம்புடைய குளம்பு விலங்கு குடும்பத்தின் உட்பிரிவு.” தி நியு என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா விளக்குகிறது:
“பழைய ஏற்பாட்டில் கவிதை வடிவில் எழுதப்பட்டுள்ள சில பகுதிகளில், ரீம் என்றழைக்கப்படும் பலமான, உயரிய கொம்புடைய ஒரு மிருகத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. இச்சொல் ‘ஒற்றைக் கொம்புடைய விலங்கு’ (Unicorn) அல்லது ‘காண்டாமிருகம்’ என்று அநேக மொழிபெயர்ப்புகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் அநேக நவீன மொழிபெயர்ப்புகள் ‘காட்டு எருது’ என்று உபயோகிக்க விரும்புகின்றன. எபிரெய மொழியில் ரீம் என்ற சொல்லுக்கு அது தான் சரியான அர்த்தம்.”
நவீன ஆங்கிலத்தில் “எருது” என்பது இனப்பெருக்க ஆற்றல் அழிக்கப்பட்ட ஆண் மாடு என்று பொருள்படுவதால், ரீம் என்ற சொல்லுக்கு “காட்டு காளை” என்று புதிய உலக மொழிபெயர்ப்பு முரண்பாடின்றி திருத்தமாக மொழிபெயர்க்கிறது. 17-ஆம் நூற்றாண்டுக்குள்ளாக காட்டு காளைகள் மறைந்து போயின. ஆனால் அது ஒற்றைக் கொம்புடைய புராணக்கதை விலங்கிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக இருந்தது என்று விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்தனர். பண்டைய கால காளையின் உடல் உயரம் ஏறக்குறைய 1.8 மீட்டராகவும், நீளம் 3 மீட்டராகவும் இருந்தது. அது 900 கிலோகிராம் எடை உடையதாய் இருந்திருக்கலாம். அதனுடைய இரண்டு கொம்புகளில் ஒவ்வொரு கொம்பும் 75 சென்டிமீட்டர் நீளமானதாய் இருந்திருக்கக்கூடும்.
இது நிச்சயமாகவே பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள ரீம் அல்லது காட்டு காளைக்கு ஒத்ததாய் இருக்கிறது. அது அதனுடைய பலத்துக்கும், மூர்க்கத்தனமிக்க சுபாவத்துக்கும், (யோபு 39:10,11) விரைந்து செல்லக்கூடிய தன்மைக்கும் பெயர்பெற்றதாயிருந்தது. (எண்ணாகமம் 23:22; 24:8) அதற்கு இரண்டு கொம்புகள் இருந்தன. புராணக்கதை விலங்கைப் போல் ஒற்றைக் கொம்புடையதாய் அது இல்லை. யோசேப்பின் இரண்டு குமாரர்களிலிருந்து தோன்றும் இரண்டு வல்லமையான கோத்திரங்களைக் குறித்து எடுத்துக்காட்டு மூலம் விளக்கிய போது, மோசே அதனுடைய இரண்டு கொம்புகளைப் பற்றி குறிப்பிட்டார்.—உபாகமம் 33:17.
ஆகையால் புராணக்கதையில் புகழ் பெற்றிருந்த ஒற்றைக் கொம்புடைய விலங்குகளின் கருத்தை பைபிள் ஆதரிப்பதில்லை. பெருத்த உடலுடைய பயமூட்டும் காட்டு காளையைப் பற்றி திருத்தமான, ஓரளவு மட்டுப்படுத்தப்பட்ட விளக்கத்தை பைபிள் கொடுக்கிறது. அவை பைபிள் காலங்களில் உயிர் வாழ்ந்தன, அவை மறைந்து வெகு காலம் ஆகவில்லை.
[அடிக்குறிப்புகள்]
a ‘காண்டாமிருகத்தின் கொம்புகள் அல்லது திமிங்கிலத்தின் தந்தங்கள், (ஒற்றைக் கொம்புள்ள மீன் அல்லது ஒற்றைக் கொம்புள்ள திமிங்கலம் என்றும் கூட அழைக்கப்படுகின்றன) ஒற்றைக் கொம்புள்ள விலங்குகளின் கொம்புகள் என்று இடைநிலைக் காலத்து நூல்களில் கருதப்பட்டன’ என்று பேராசிரியர் பால் ஹாப்ட் விளக்குகிறார்.
[பக்கம் 31-ன் படத்திற்கான நன்றி]
Treasury of Fantastic and Mythological Creatures: 1,087 Renderings from Historic Sources, by Richard Huber/Dover Publications, Inc.