புக்கென்வால்டுக்கு பிறகு நான் சத்தியத்தைக் கண்டடைந்தேன்
ஃபிரான்சில் உள்ள க்ரெநோபிள் என்ற இடத்தில் 1930-களில் நான் வளர்ந்து வந்தேன். என்னுடைய ஜெர்மன் மொழி ஆசிரியர் ஃபிரான்சு நாட்டைச் சேர்ந்தவர். அவர் நாசி கட்சி வெறியராக இருந்தார். என்றாவது ஒரு நாள் ஜெர்மன் மொழி “பயனுள்ளதாக ஆகும்” என்று அவர் பள்ளியில் எப்போதும் அழுத்தமாகக் கூறுவார். என்றபோதிலும், முதல் உலக யுத்தத்தின் போது படைவீரர்களாக இருந்து ஓய்வு பெற்றிருந்த எங்களுடைய ஆசிரியர்களில் பெரும்பான்மையர் ஜெர்மனியில் நாசிசம் வளர்ந்து வருவதைக் குறித்து கவலையுள்ளவர்களாய் இருந்தனர். போர் நெருங்கி வருவது அதிகமதிகமாக தெளிவாக ஆன போது நானும் அதைக் குறித்து கவலைப்பட்டேன்.
இரண்டாம் உலக யுத்தத்தின் ஆரம்பத்தில், 1940-ல், சோம் நதியில் நடந்த கடும் சண்டையில் என்னுடைய அன்பான மாமாவை நான் இழந்தேன். நான் அதிக மனக்கசப்பு அடைந்தேன். ஆனால் ஃபிரெஞ்சு படையில் சேர்ந்து கொள்வதற்கு போதிய வயதை நான் எட்டவில்லை. மூன்று வருடங்களுக்குப் பிறகு, ஃபிரான்சு ஜெர்மானியர்களின் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருந்த போது, ஃபிரெஞ்சு இரகசிய அமைப்புக்கு உருவரைப்படங்களை வரைபவனாக என்னுடைய திறமைகளை உபயோகிக்கும் வாய்ப்பு எனக்கு கொடுக்கப்பட்டது. பொய்க் கையொப்பமிடுவதில் நான் கைதேர்ந்தவனாக இருந்தேன். போலி ஜெர்மன் ரப்பர் ஸ்டாம்ப்புகளை செய்வதிலும் நான் ஈடுபட்டிருந்தேன். விரோதிகளின் படைகள் இவ்விதமாக ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதற்கு எதிராக சண்டையிடுவதில் நான் அவ்வளவு திருப்தியடைந்ததினால், என்னுடைய கூட்டாளிகளின் கம்யூனிஸ கருத்துக்கள் எனக்கு அந்தச் சமயம் குறைவான முக்கியத்துவமுடையதாக மட்டுமே இருந்தன.
கைது செய்யப்பட்டேன்
முதலாவது உலகப்போர் நிறுத்தம் கொண்டாடப்பட்டு வந்த நாளை நினைவுகூருவதற்கு நவம்பர் 11, 1943-ல் உள்ளூர் இரகசிய அமைப்பு ஊர்வலம் செல்லும்படி அழைப்பு விடுத்தது. வாகனங்களை உபயோகித்து ஃபிரெஞ்சு காவலர்கள் போர் நினைவுச் சின்னத்துக்கு வழிநடத்தக்கூடிய பாலத்துக்கு செல்ல முடியாமல் வழி அடைத்து விட்டனர். வீட்டுக்குத் திரும்பிச் செல்லும்படி அவர்கள் எங்களை உற்சாகப்படுத்தினர். அதற்கு பதிலாக பட்டணத்துக்குள் இருக்கும் மற்றொரு போர் நினைவுச் சின்னத்துக்கு அணிவகுத்துச் செல்ல எங்களுடைய ஊர்வலம் தீர்மானித்தது. ஆனால் நாங்கள் ஒரு காரியத்தை மறந்து விட்டோம். அந்த நினைவுச் சின்னம் ஜெர்மன் காவற்படை அலுவலகங்களிலிருந்து கொஞ்ச தூரம் தான் தள்ளி இருந்தது.
ஆயுதந்தரித்திருந்த படைவீரர்கள் எங்களுடைய தொகுதியை சுற்றி விரைவில் சூழ்ந்து கொண்டனர். ஒரு சுவருக்கு எதிராக எங்களை வரிசையாக நிறுத்தினார்கள். படைவீரர்கள் எங்களை நகர்த்தின போது, அநேக கைத்துப்பாக்கிகள் நிலத்தில் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். அவைகள் யாருக்கு சொந்தம் என்பதை ஒத்துக் கொள்வதற்கு எவருக்குமே விருப்பமில்லை. ஆகையால், பெண்கள், 16 வயது இளைஞர்கள், 16 வயதுக்கும் குறைந்த இளைஞர்கள் ஆகியோரை மட்டும் படைவீரர்கள் விடுதலை செய்தனர். ஆக, 18 வயதாயிருக்கையில் 450 மற்ற சிறைக்கைதிகளோடு நான் சிறையில் அடைக்கப்பட்டேன். சில நாட்களுக்குப் பிறகு, வடக்கு ஃபிரான்சில் உள்ள காம்ப்பின் என்ற இடத்துக்கு அருகே இருந்த இடைவழித் தங்கல் கூடாரத்துக்கு நாங்கள் மாற்றப்பட்டோம்.
ஜெர்மனிக்குப் போகிற வழியில்
ஜனவரி 17, 1944-ல் ஜெர்மன் படைவீரர்களோடு நான் முதல் முறையாக தொடர்பு கொண்டேன். ஆனால் அது கடைசி சந்திப்பாக இல்லை. ஜெர்மன் படைவீரர்களின் தலைக்கவசத்தின் இடது பக்கத்தில் ஸ்வஸ்திக்காவும், வலது பக்கத்தில் SS (Schutzstaffel)என்ற எழுத்துக்களும் பொறிக்கப்பட்டிருந்தன. நூற்றுக்கணக்கான சிறைக் கைதிகளை அவர்கள் ஒன்று கூட்டினர். காம்ப்பின் நிலையத்துக்கு நாங்கள் நடந்து செல்ல வேண்டியிருந்தது. இரயில் பெட்டிகளுக்குள் நாங்கள் சொல்லர்த்தமாகவே உதைத்துத் தள்ளப்பட்டோம். என்னுடைய பெட்டியில் மட்டும் 125 சிறைக் கைதிகள் இருந்தனர். மூன்று நாட்களும் இரண்டு இரவுகளும் உண்பதற்கோ அல்லது குடிப்பதற்கோ எங்களிடம் எதுவும் இல்லை. சில மணிநேரங்களுக்குள் பலவீனமாக இருந்தவர்கள் ஏற்கெனவே தளர்ந்து விழுந்து விட்டார்கள். அவர்கள் மிதிக்கப்பட்டனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு, வேமர் என்ற இடத்துக்கு அருகே இருந்த புக்கென்வால்டுக்கு நாங்கள் வந்து சேர்ந்தோம். ஜெர்மன் நாட்டுக்குள் நெடுந்தொலைவு வந்து விட்டோம்.
எனக்குத் தொற்றுநோய்த் தடைமருந்து கொடுத்து, என்னுடைய தலைமுடியை சவரம் செய்தார்கள். அதற்குப் பிறகு, எனக்கு 41,101 என்ற பதிவு எண்-ஐ கொடுத்து, “கம்யூனிஸ பயங்கரவாதி” என்ற பிரிவில் என்னை சேர்த்தார்கள். தொற்று நோய்த் தடை செய்வதற்கு தனிப்படுத்தி வைக்கப்பட்டிருந்த காலத்தின் போது, மிக்கல் ரீக் என்ற டாமினிக்கன் பாதிரியை நான் சந்தித்தேன். போருக்குப் பிறகு பாரிஸ்-ல் உள்ள நாட்டர் டாம் கதீட்ரலில் அவர் கொடுத்த பேச்சுக்கள் காரணமாக அவர் பிரபலமாக ஆகியிருந்தார். என் வயதுள்ள மற்ற இளம் ஆண்களோடு சேர்ந்து கொண்டு, கடவுள் ஏன் இப்படிப்பட்ட பயங்கரமான காரியங்களை அனுமதித்தார் என்று நான் அவரைக் கேட்டேன். “பரலோகத்துக்குச் செல்வதற்கு தகுதி பெற நீங்கள் அதிக துன்பங்களை அனுபவிக்க வேண்டும்” என்று அவர் பதிலளித்தார்.
அனுதின வாழ்க்கை
காலை 4:30 மணிக்கு 61 குடியிருப்புகளில் உள்ள அனைவரும் எழும்ப வேண்டும். இடுப்பு வரை உள்ள ஆடையை கழற்றி விட்டு நாங்கள் வெளியே வருவோம். குளிர் அதிகமாக இருந்ததால் தண்ணீர் பனிக்கட்டி போல் உறைந்து விட்டிருக்கும். ஆகையால் கழுவிக் கொள்வதற்கு உறைந்த நீரை உடைக்க வேண்டும். உடல்நலம் நன்றாக இருந்தாலும் சரி அல்லது மோசமாக இருந்தாலும் சரி எல்லாரும் அதற்கு உடன்பட வேண்டும். அடுத்து ரொட்டி விநியோகிக்கப்படும். ஒரு நாளுக்கு 200-300 கிராம் சுவையற்ற ரொட்டியும், சிறிய துண்டு செயற்கை வெண்ணையும், ஜாம் போன்று தோற்றமளித்த ஏதோவொன்றையும் கொடுப்பார்கள். காலை 5:30 மணிக்கு வருகைப் பதிவு செய்வதற்காக அனைவரையும் ஒன்று சேர்ப்பார்கள். அந்த இரவின் போது மரித்துப் போனவர்களை எங்களுடைய முதுகுகளில் தூக்கிச் சென்றது எப்படிப்பட்ட ஒரு பயங்கரமான அனுபவமாய் இருந்தது! செத்த உடல்கள் எரிந்த போது உண்டான புகையின் கடுங்கார்ப்பான நாற்றம் எங்களுடைய கூட்டாளிகளை எங்களுக்கு நினைப்பூட்டியது. திடீர் உணர்ச்சி மாற்றம், மனக்கசப்பு, பெரும் வெறுப்பு போன்ற உணர்ச்சிகளால் நாங்கள் மேற்கொள்ளப்பட்டோம். ஏனென்றால் அதே விதத்தில் அதே முடிவுக்கு நாங்களும் எளிதாக வரலாம் என்பதை அறிந்திருந்தோம்.
கட்டுமானப் பணிக்குரிய படைப்பிரிவு II (BAU II Kommando)-ல் என்னுடைய வேலை மறைகுழிகளை தோண்டும் வேலையாக இருந்தது. அந்த வேலைக்கு எந்த நோக்கமும் இல்லை. ஏழு-அடி ஆழமான மறைகுழி தோண்டினவுடனேயே அதை மறுபடியும் நாங்கள் நிரப்பி மூடி விட வேண்டும். காலை 6 மணிக்கு வேலை ஆரம்பமாகும். நண்பகலில் அரை மணிநேரம் இடைவேளை இருக்கும். அதற்குப் பிறகு மாலை 7 மணி வரை நாங்கள் வேலை செய்வோம். மாலை வருகைப் பதிவு அடிக்கடி முடிவே-இல்லாதது போல் தோன்றும். ரஷிய போர்முனையில் பெரும் ஜெர்மன் இழப்புக்கள் இருந்த போதெல்லாம், அது நள்ளிரவு வரை நீடித்திருக்கும்.
ஒரு வித்தியாசமான தொகுதி
முகாமிலிருந்து தப்பிச் செல்ல எவரேனும் முயற்சி செய்தால், அவர்கள் எளிதில் கண்டுபிடிக்கப்படுவார்கள். ஏனென்றால் ஒரு சீராயிராத முடி அலங்காரத்தை நாங்கள் அனைவரும் கொண்டிருந்தோம். நடுவில் அல்லது பக்கங்களில் எங்களுடைய முடியின் சிறு பகுதி சவரம் செய்யப்பட்டோ அல்லது குட்டையாக கத்திரிக்கப்பட்டோ இருக்கும். சில சிறைக் கைதிகளுக்கு முடி சாதாரணமாக வெட்டப்பட்டிருந்தது. அவர்கள் யார்? எங்களுடைய குடியிருப்பின் தலைவர் யார் அவர்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற எங்கள் ஆவலை திருப்தி செய்தார். “அவர்கள் பைபிள் மாணாக்கர்கள் (Bibelforscher)” என்று அவர் சொன்னார். “ஆனால் ஒரு கான்சன்ட்ரேஷன் முகாமில் பைபிள் மாணாக்கர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?” என்று நான் ஆச்சரியப்பட்டேன். “அவர்கள் யெகோவாவை வணங்குவதால் இங்கு இருக்கிறார்கள்” என்று அறிந்தேன். யெகோவா! அப்போது தான் நான் முதல் முறையாக கடவுளின் பெயரை கேட்டேன்.
இறுதியில் நான் பைபிள் மாணாக்கர்களைப் பற்றி கொஞ்சம் அதிகமாக தெரிந்து கொண்டேன். அவர்களில் அநேகர் ஜெர்மானியர்களாக இருந்தனர். ஹிட்லருக்கு கீழ்ப்படிய மறுத்ததால் அவர்களில் சிலர் மத்திப 1930-களிலிருந்து கான்சன்ட்ரேஷன் முகாம்களில் இருக்கின்றனர். அவர்கள் விடுதலை பெற்று சென்றிருக்கலாம். ஆனால் அவர்கள் இணங்கிப் போக மறுத்து விட்டனர். SS காவலர்கள் அவர்களை தங்களுடைய தனிப்பட்ட முடி ஒப்பனையாளர்களாக உபயோகித்துக் கொண்டனர். நிர்வாக ஸ்தானங்களில் வேலை போன்ற நம்பகமான ஆட்கள் தேவைப்படும் விசேஷ வேலைகள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன. அவர்களுடைய அமைதி, பகை அல்லது எதிர்க்கும் ஆவி, பழிக்குப் பழி வாங்குதல் ஆகியவை அவர்களிடம் முழுமையாக இல்லாமல் இருந்தது எங்களுடைய ஆர்வத்தை அதிகமாக தூண்டியது. என்னால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. அந்தச் சமயத்தில் அவர்களோடு சம்பாஷிக்க ஜெர்மன் மொழி எனக்குப் போதுமான அளவு தெரியாமல் இருந்தது.
மரண இரயில்
நட்பு நாடுகள் முன்னேறி வருகையில், நாட்டின் உள்பகுதிக்குள் இருந்த முகாம்களுக்கு சிறைக் கைதிகள் அனுப்பப்பட்டனர். ஆனால் அவைகளில் மக்கள் கும்பல் அதிகமாக ஆகிக்கொண்டேயிருந்தது. ஏப்ரல் 6, 1945 அன்று காலை SS காவலர்கள் எங்களில் 5,000 பேரை கூட்டிக் கொண்டு வேமர் என்ற இடத்துக்குச் செல்லும் சாலையில் 9 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல எங்களை வற்புறுத்தினர். நடைவேகத்தோடு தொடர்ந்து உடன் செல்ல முடியாதவர்களை எவ்வித உணர்ச்சியுமின்றி மனமாரத் துணிந்தே கழுத்தில் சுட்டனர். நாங்கள் இறுதியில் வேமர் நிலையத்தை அடைந்த போது, சரக்கேற்றிக் கொண்டு செல்லும் திறந்த வண்டிகளுக்குள் ஏறிக் கொண்டோம். இரயில் வண்டியும் புறப்பட்டது. 20 நாட்கள் அது இங்குமங்கும் குறிக்கோளின்றி ஓர் இரயில் நிலையத்திலிருந்து மற்றொரு இரயில் நிலையத்துக்கு சென்றது. இறுதியில் ஜெர்மனியைக் கடந்து செக்கோஸ்லோவேக்கியாவை அடைந்தது.
ஒரு நாள் காலை, எங்களுடைய இரயிலின் ஒரு பகுதி ஒதுங்கி நிற்பதற்காக பக்கத் தண்டவாளப் பாதைக்கு மாற்றப்பட்டது. துப்பாக்கிகள் பொருத்தி வைக்கப்பட்டிருந்த வண்டியிலிருந்து துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு படைவீரர்கள் தயாராக ஆனார்கள். பிறகு ஒரு சரக்கு வண்டியின் கதவுகளைத் திறந்து உள்ளே இருந்த எல்லா ரஷ்ய சிறைக் கைதிகளையும் கொன்று குவித்தனர். காரணம்? பன்னிரண்டு சிறைக்கைதிகள் அவர்களுடைய காவலர்களை கொலை செய்து விட்டு இரவில் தப்பிச் சென்றிருக்கின்றனர். இரத்தம் கசிந்து துளித் துளியாக வண்டியின் தரை வழியாக தண்டவாளத்தில் விழுகிறதை இன்றும் கூட என் மனக்கண்களால் என்னால் காண முடிகிறது.
இறுதியில், எங்கள் இரயில் டக்காவ் என்ற இடத்தை வந்தடைந்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு அமெரிக்க படையினரால் நாங்கள் விடுவிக்கப்பட்டோம். 20-நாள் பயணம் முழுவதும் பச்சை உருளைக்கிழங்குகளும் கொஞ்சம் தண்ணீரும் மட்டும் தான் எங்கள் உணவாக இருந்தது. பயணத்தை ஆரம்பித்த போது 5,000 பேர் இருந்தோம். ஆனால் 800 பேர் மட்டுமே தப்பிப்பிழைத்தோம். இன்னும் அநேகர் பல நாட்களுக்குப் பிறகு மரித்துப் போயினர். என்னைப் பொறுத்த வரையில், பயணத்தின் நெடுந்தொலைவு வரை ஒரு பிணத்தின் மீது நான் உட்கார்ந்திருந்தேன்.
ஒரு புதிய படி
என்னுடைய விடுதலைக்குப் பிறகு, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியை தீவிரமாக ஆதரிப்பதை தவிர வேறு எதுவும் அதிக இயல்பானதாக தோன்றவில்லை. ஏனென்றால் அதன் அங்கத்தினர்களில் அநேகரோடு நான் அதிக நெருக்கமாக கூட்டுறவு கொண்டிருந்தேன்—புக்கென்வால்டில் இருந்த முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் உட்பட. க்ரெநோபிள் என்ற இடத்தில் உதவி சிறை காரியதரிசியாக நான் ஆனேன். பாரிஸில் செயலாட்சித் தலைவர்களுக்கான பயிற்சி பெற்றுக் கொள்ளும்படி நான் உற்சாகப்படுத்தப்பட்டேன்.
என்றபோதிலும், நான் விரைவில் ஏமாற்றமடைந்தேன். நவம்பர் 11, 1945-ல் பாரிஸில் படையணி ஊர்வலம் ஒன்றில் பங்கு கொள்ளும்படி நாங்கள் அழைக்கப்பட்டோம். எங்களுடைய தொகுதிக்கு பொறுப்பாக இருந்த தோழன் எங்களுடைய தங்கும் வசதிகளுக்காக ஒரு குறிப்பிட்ட பணத்தொகையைப் பெற்றுக் கொண்டான். ஆனால் எங்கள் சார்பாக அதை உபயோகிக்க விருப்பமில்லாதவனாய் இருந்தான். நம்மை ஒற்றுமைப்படுத்தும் நியமங்களான நேர்மை, நட்பு ஆகியவற்றை நாங்கள் அவனுக்கு நினைப்பூட்டினோம். எனக்குத் தெரிந்த அநேக முக்கியத்துவம் வாய்ந்த மனிதர்கள் உலக பிரச்னைகளுக்கு தீர்வைக் கொண்டில்லை என்பதையும் நான் உணர்ந்து கொண்டேன். மேலும், அவர்கள் நாத்திகர்களாக இருந்தனர். ஆனால் நான் கடவுளில் நம்பிக்கை கொண்டிருந்தேன்.
பிறகு நான் லியோன்ஸ் என்ற இடத்துக்குச் சென்றேன். அங்கே நான் உருவரைப் படங்களை வரையும் வேலையைத் தொடர்ந்து செய்தேன். 1954-ல் இரண்டு யெகோவாவின் சாட்சிகள் என்னை சந்தித்தனர். விழித்தெழு! பத்திரிகைக்கு நான் சந்தா எடுத்துக் கொண்டேன். இரண்டு நாட்களுக்குப் பிறகு, முதல் முறை என் கதவைத் தட்டிய பெண்களில் ஒரு பெண்ணும் அவரோடு சேர்ந்து மற்றொருவரும் என்னை சந்திக்க வந்தனர். நாங்கள் இருவரும் ஆவிக்குரிய காரியங்களில் அக்கறையுள்ளவர்களாய் இருந்தோம் என்பதை நானும் என் மனைவியும் திடீரென உணர்ந்தோம்.
அதைத் தொடர்ந்து வந்த கலந்தாலோசிப்புகளின் போது, தங்களுடைய விசுவாசத்தின் பேரில் அவ்வளவு உண்மையாயிருந்த புக்கென்வால்ட் பைபிள் மாணாக்கர்களைப் பற்றி எனக்கு ஞாபகம் வந்தது. இந்தப் பைபிள் மாணாக்கர்களும் யெகோவாவின் சாட்சிகளும் ஒரே ஜனங்கள் என்பதை அப்போது தான் நான் உணர்ந்தேன். ஒரு பைபிள் படிப்புக்கு நன்றி. நானும் என் மனைவியும் யெகோவாவின் பக்கமாக எங்களுடைய நிலைநிற்கையை எடுத்துக் கொண்டோம். ஏப்ரல் 1955-ல் முழுக்காட்டப்பட்டோம்.
இவையனைத்தும் நேற்று நடந்தது போல் என்னுடைய நினைவாற்றல்கள் மங்காமல் புத்தம் புதியதாய் இருக்கின்றன. என்னுடைய கடந்த கால கடுமையான அனுபவங்களைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. அவைகள் என்னை பலப்படுத்தியிருக்கின்றன. இந்த உலக அரசாங்கங்கள் அளிப்பதற்கு வெகு குறைவானதையே கொண்டிருக்கின்றன என்பதைக் காண எனக்கு உதவியிருக்கின்றன. தனிப்பட்ட அனுபவங்கள் மற்றவர்களுக்கு ஓரளவு மட்டுமே உதவி செய்யக்கூடும் என்றாலும், இவ்வுலகத்தின் போலித்தனத்தை முற்றிலும் ஊடுருவிப் பார்த்து, அதன் விளைவாக இயேசு கற்பித்த மெய்க் கிறிஸ்தவத்தில் நல்ல, நேர்மையான மதிப்பீடுகளை நாட இன்றுள்ள இளைஞர்களுக்கு என்னுடைய அனுபவங்கள் உதவி செய்யக்கூடுமென்றால் நான் சந்தோஷப்படுவேன்.
துன்பமும், அநீதியும் இன்று அனுதின வாழ்க்கையின் பாகமாக இருக்கின்றன. கான்சன்ட்ரேஷன் முகாம்களில் இருந்த பைபிள் மாணாக்கர்களைப் போன்று, மேம்பட்ட உலகம் ஒன்று வருமென்று நானும் கூட ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். வன்முறை, கருத்தியல் கோட்பாட்டு வெறி ஆகியவற்றுக்கு பதிலாக சகோதர அன்பும், நீதியும் அங்கு மேலோங்கியிருக்கும். இதற்கிடையில், நான் ஒரு கிறிஸ்தவ சபையில் மூப்பராக என் மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகளோடு கடவுளையும் கிறிஸ்துவையும் என்னால் முடிந்த அளவு சிறந்த விதத்தில் சேவிக்க முயற்சி செய்கிறேன். (சங்கீதம் 112:7, 8)—ரீனா சாக்லா சொன்னபடி.
[பக்கம் 28-ன் படங்கள்]
மேலே: முகாமில் வருகைப் பதிவு
இடது பக்கம்: புக்கென்வால்டுக்கு செல்லும் நுழைவாயில் எழுத்துப் பொறிப்பு இவ்வாறு வாசிக்கிறது: “ஒவ்வொருவனுக்கும் அவனவனுடைய தகுதியின்படி”
[பக்கம் 29-ன் படங்கள்]
மேலே: புக்கென்வால்ட் சுடுகாடு
இடது பக்கம்: ஒவ்வொரு அடுக்குக்கும் பதினாறு சிறைக் கைதிகள்