நீங்கள் ஏமாற்றமடைய மாட்டீர்கள்
பிலிப்பீன்ஸில் இருக்கும் ஒரு தம்பதி அங்கு செல்ல இரண்டு நாட்கள் எடுத்துக் கொண்டனர். அவர்கள் இரண்டு இளம் பிள்ளைகளைத் தூக்கிக் கொண்டு அட்டைகள்-நிறைந்த புதர்க்காடுகள், கடும்புயல் மழையினால் பொங்கி எழுந்து பெருக்கமடைந்திருந்த நதிகள் ஆகியவற்றின் வழியாக 70 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றனர். ஆனால் அதைத் தவற விடக்கூடாது என்று அவர்கள் உறுதியாய் இருந்தனர்.
சேர் என்ற இடத்தில் இருக்கும் இரண்டு பெண்கள் 500 கிலோமீட்டருக்கும் மேல் நடந்தனர். அங்கு இருப்பதற்காக 14 நாட்கள் பயணம் செய்தனர். சேர்-ல் 70-வயது வயதான மனிதர் ஒருவர் 260 கிலோமீட்டர் தூரம் தன் சைக்கிளை ஓட்டிச் சென்று அந்த இடத்தை அடைந்தார். தூரம் அல்லது வசதிக் குறைவு அவரை தடை செய்யவில்லை. அதை தவற விடக்கூடாது என்பது முக்கியமான காரியமாய் இருந்தது.
அவர்கள் எல்லாரும் எங்கே சென்று கொண்டிருந்தனர்? அவர்களுடைய தேசங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய மிகப் பெரிய கூட்டங்களில் ஒன்றுக்கு சென்று கொண்டிருந்தனர். பயணம் எவ்வளவு கடினமாக இருந்தாலும், அவர்களுடைய முயற்சிகள் பயனுள்ளவை என்பதை அனைவரும் உணர்ந்திருந்தனர்.
“ஒளி கொண்டுசெல்வோர்” 1992 மாநாட்டுக்கு ஆஜராக நீங்கள் திட்டங்கள் போட்டு விட்டீர்களா? இப்படிப்பட்ட விசுவாசமுள்ள ஜனங்களைப் போல் ஆஜராவதற்கு நீங்கள் ஒருவேளை பெரும் முயற்சி எடுக்க வேண்டி இருக்காது. ஆனால் அது உங்களுக்கு கடினமாயிருந்தாலும் கூட, அதைத் தவற விடாதீர்கள் என்று நாங்கள் உங்களை ஊக்கப்படுத்துகிறோம்.
மிகச் சிறந்த, அதிக நடைமுறையான நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் கிறிஸ்தவ ஐக்கியத்தை அனுபவிக்கிறவராக இருந்து, உண்மையான சமாதானத்தை எவ்வாறு கண்டடைவது, எதிர்காலம் எதைக் கொண்டிருக்கிறது, கடவுளுடைய சித்தத்தை மேம்பட்ட விதமாக செய்வது எப்படி என்பதை கற்றறிவதில் அக்கறையுடையவராக இருந்தால், நீங்கள் ஏமாற்றமடையமாட்டீர்கள் என்று எங்களால் உங்களுக்கு உறுதியாகச் சொல்லமுடியும். உங்கள் பிராந்தியத்திலுள்ள எந்த யெகோவாவின் சாட்சியும் நீங்கள் வாழும் இடத்திற்கு அருகே மாநாடு எங்கே மற்றும் எப்போது நடைபெறும் என்பதை உங்களுக்குச் சொல்ல முடியும். (w92 6/1)