சுயாதீனமுள்ள ஆனால் பொறுப்புவாய்ந்த ஒரு ஜனம்
“சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.”—யோவான் 8:32.
1, 2. (எ) மனித சரித்திரத்தில் சுயாதீனம் எவ்வாறு முதன்மைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது? (பி) யார் மாத்திரமே உண்மையில் சுயாதீனமுள்ளவராக இருக்கிறார்? விளக்கவும்.
சுயாதீனம். அது எத்தனை சக்திவாய்ந்த ஒரு வார்த்தை! சுயாதீனமாக இருக்க மனிதருக்கிருக்கும் விருப்பத்தின் காரணமாக, மனிதகுலம் எண்ணிலடங்காப் போர்களையும், புரட்சிகளையும், மதிப்பிட்டு அறிய முடியாத குழப்பங்களையும் சகித்துவந்திருக்கிறது. ஆம், தி என்ஸைக்ளோபீடியா அமெரிக்கானா சொல்கிறது: ‘நாகரீக முன்னேற்றத்தில், விடுதலை என்ற கொள்கையைவிட வேறெந்த கொள்கையும் அதிக முக்கியத்துவமான ஒரு பாகத்தை வகித்ததில்லை.’
2 என்றபோதிலும், எத்தனை பேர் உண்மையில் சுயாதீனமுள்ளவர்களாக இருக்கிறார்கள்? எத்தனை பேருக்கு சுயாதீனம் என்றால் என்ன என்பதுகூட தெரியும்? தி உவோர்ல்ட் புக் என்ஸைக்ளோபீடியா சொல்கிறது: “மக்கள் முழுமையான சுயாதீனத்தைக் கொண்டிருப்பதற்கு, அவர்கள் எவ்விதமாக சிந்திக்கிறார்கள், பேசுகிறார்கள் அல்லது செயல்படுகிறார்கள் என்பதன் பேரில் எந்தக் கட்டுப்பாடுகளும் இருக்கக்கூடாது. தங்களுக்கிருக்கும் தெரிவுகளை அவர்கள் அறிந்தவர்களாகவும் அந்தத் தெரிவுகளில் ஒன்றைத் தெரிந்து கொள்ள உரிமையுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.” இதை கருத்தில் கொள்கையில், உண்மையில் சுயாதீனமுள்ளவராக இருக்கும் எவரையாவது உங்களுக்குத் தெரியுமா? “தாங்கள் எவ்விதமாக சிந்திக்கிறார்கள், பேசுகிறார்கள் அல்லது செயல்படுகிறார்கள் என்பதன் பேரில் தங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை,” என்பதாக யாரால் சொல்ல முடியும்? உண்மையில், முழு பிரபஞ்சத்திலும் அந்த வருணனைக்குப் பொருத்தமாக ஒரே ஒரு நபர் மட்டுமே இருக்கிறார்—யெகோவா தேவன். அவருக்கு மாத்திரமே முழுமையான சுயாதீனம் இருக்கிறது. அவர் மாத்திரமே தாம் விரும்பக்கூடிய எந்தத் தெரிவையும் செய்து பின்னர் எல்லா எதிர்ப்பின் மத்தியிலும் அதை நிறைவேற்றி வைக்க முடிகிறவராயும் இருக்கிறார். அவர் “சர்வவல்லமையுள்ள”வர்.—வெளிப்படுத்துதல் 1:8; ஏசாயா 55:11.
3. என்ன நிபந்தனையின் பேரில் மனிதர்கள் பொதுவாக சுயாதீனத்தை அனுபவிக்கிறார்கள்?
3 தாழ்ந்த நிலையிலுள்ள மனிதர்களுக்கு சுயாதீனம் சம்பந்தப்பட்ட ஒன்றாக மாத்திரமே இருக்க முடியும். இது பொதுவாக ஏதோ ஓர் அதிகாரத்தினால் அருளப்பட்டு அல்லது உத்தரவாதமளிக்கப்பட்டு அந்த அதிகாரத்துக்கு நாம் கீழ்ப்பட்டிருப்பதோடு சம்பந்தப்பட்டதாயிருக்கிறது. ஆம், ஏறக்குறைய ஒவ்வொரு விஷயத்திலும், ஒரு நபர் அவருக்கு சுயாதீனம் அளித்தவரின் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே அவர் சுயாதீனமுள்ளவராக இருக்க முடியும். உதாரணமாக, “சுதந்திர உலகில்,” வாழும் ஆட்கள் இடம் பெயர்ந்து செல்லும் சுயாதீனம், பேச்சு சுயாதீனம் மற்றும் மத சுயாதீனம் போன்ற அநேக நன்மைகளை அனுபவிக்கிறார்கள். இந்தச் சுயாதீனங்களுக்கு உத்தரவாதமளிப்பது என்ன? தேசத்தின் சட்டம். ஒரு நபர் சட்டத்துக்குக் கீழ்ப்படிந்திருக்கும் வரையில் மாத்திரமே இவைகளை அனுபவிக்க முடியும். அவன் தன் சுயாதீனத்தை துர்ப்பிரயோகம் செய்து, சட்டத்தை மீறுவானேயானால், அவன் அதிகாரிகளுக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டியவனாகிறான், அவனுடைய சுயாதீனம் சிறைதண்டனையினால் மிக மோசமாக இழக்கப்படுகிறது.—ரோமர் 13:1-4.
தெய்வீக சுயாதீனம் —கணக்கு ஒப்புவித்தலோடு
4, 5. யெகோவாவின் வணக்கத்தார் என்ன சுயாதீனத்தை அனுபவிக்கிறார்கள், எதற்கு அவர்களை அவர் கணக்கு ஒப்புவிக்கும் பொறுப்புள்ளவராக்குகிறார்?
4 முதல் நூற்றாண்டில் இயேசு சுயாதீனத்தைப் பற்றி பேசினார். அவர் யூதர்களிடம் சொன்னார்: “நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள். சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.” (யோவான் 8:31, 32) அவர் பேச்சு சுயாதீனத்தையோ அல்லது மத சுயாதீனத்தையோ பற்றி பேசிக்கொண்டில்லை. நிச்சயமாகவே அவர், அநேக யூதர்கள் ஏங்கிக்கொண்டிருந்த ரோமாபுரியின் நுகத்திலிருந்து விடுதலையைப் பற்றி பேசிக்கொண்டில்லை. இல்லை, இது மிக அதிக மதிப்புள்ளதாக, மனித சட்டங்களினால் அல்லது ஏதோ ஒரு மனித அரசனின் விருப்பத்தினால் இல்லாமல் சர்வலோகத்தின் உன்னதமான கர்த்தராகிய ஆண்டவர் யெகோவாவினால் அளிக்கப்பட்ட சுயாதீனமாக இருந்தது. அது மூடநம்பிக்கைகளிலிருந்து விடுதலையாக, மத சம்பந்தமான அறியாமையிலிருந்து விடுதலையாக இன்னும் அதிகமாக இருந்தது. யெகோவா அருளும் சுயாதீனம் மெய்யான சுயாதீனமாகும். அது நித்திய காலமாக நிலைத்திருக்கும்.
5 அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னார்: “யெகோவாவே ஆவியானவர்; யெகோவாவுடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.” (2 கொரிந்தியர் 3:17, NW) உண்மையுள்ளவர்கள் கடைசியாக மிக நேர்த்தியான மற்றும் தலைச்சிறந்த வகையான சுயாதீனத்தை, “தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தை,” அனுபவிக்கும் வகையில், பல நூற்றாண்டுகளாக யெகோவா மனிதகுலத்தோடு செயல் தொடர்பு கொண்டு வந்திருக்கிறார். (ரோமர் 8:20) இதற்கிடையில், பைபிள் சத்தியத்தின் மூலமாக யெகோவா நமக்கு ஓரளவு சுயாதீனத்தை அருளிச் செய்கிறார், மேலும் அந்தச் சுயாதீனத்தை நாம் துர்ப்பிரயோகம் செய்தால் நம்மை கணக்கு ஒப்புவிக்கும் பொறுப்புள்ளவராக்குகிறார். அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார்: “அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.”—எபிரெயர் 4:13.
6-8. (எ) ஆதாமும் ஏவாளும் என்ன சுயாதீனங்களை அனுபவித்து மகிழ்ந்தனர், எந்த நிபந்தனையின் பேரில் சுயாதீனங்களை அவர்கள் காத்துக்கொள்ள முடியும்? (பி) ஆதாமும் ஏவாளும் தங்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் எதை இழந்துபோனார்கள்?
6 நம்முடைய முதல் பெற்றோராகிய ஆதாமும் ஏவாளும் உயிரோடிருந்த போது யெகோவாவுக்கு கணக்கு ஒப்புவித்தல் உயர்த்திக் காண்பிக்கப்பட்டது. யெகோவா அவர்களை விலையேறப்பெற்ற பரிசாகிய தெரிவு செய்யும் சுயாதீனத்தோடு படைத்தார். தெரிவு செய்யும் அந்தச் சுயாதீனத்தை அவர்கள் பொறுப்புடன் பயன்படுத்திய வரை, அவர்கள் பயத்திலிருந்து சுயாதீனம், நோயிலிருந்து சுயாதீனம், மரணத்திலிருந்து சுயாதீனம், சுத்தமான மனச்சாட்சியோடு தங்கள் பரலோகத் தந்தையை அணுகுவதற்கு சுயாதீனம் போன்ற மற்ற ஆசீர்வாதங்களை அவர்கள் அனுபவித்தனர். ஆனால் அவர்கள் தெரிவு செய்வதற்கு தங்களுக்கிருந்த சுயாதீனத்தை துர்ப்பிரயோகம் செய்தபோது அவை அனைத்தும் மாறிவிட்டன.
7 யெகோவா ஆதாம் ஏவாளை ஏதேன் தோட்டத்தில் வைத்து அவர்கள் அனுபவித்து மகிழ்வதற்காக தோட்டத்திலுள்ள எல்லா விருட்சங்களின் கனிகளையும்—ஒன்றைத் தவிர—அவர் அவர்களுக்குக் கொடுத்தார். அதை அவர் தமக்கென வைத்துக்கொண்டார்; அது “நன்மை தீமை அறியத்தக்க விருட்ச”மாக இருந்தது. (ஆதியாகமம் 2:16, 17) அந்த விருட்சத்தின் கனியை புசிப்பதிலிருந்து விலகியிருப்பதன் மூலம், நன்மை தீமை என்ன என்பது பற்றிய தராதரத்தை நிர்ணயிக்க யெகோவா மாத்திரமே சுயாதீனமுள்ளவராக இருப்பதை ஆதாமும் ஏவாளும் ஏற்றுக்கொள்கிறவர்களாக இருப்பார்கள். அவர்கள் பொறுப்புள்ளவர்களாக நடந்துகொண்டு விலக்கப்பட்ட கனியை புசிப்பதிலிருந்து விலகியிருப்பார்களேயானால், யெகோவா தொடர்ந்து அவர்களுடைய மற்ற சுயாதீனங்களை அவர்களுக்கு உறுதி செய்வார்.
8 விசனகரமாக, ஏவாள் அவள் தானே ‘நன்மை தீமையை அறிந்துகொள்ள,’ வேண்டும் என்ற சாத்தானுடைய தந்திரமான யோசனைக்கு செவிசாய்த்தாள். (ஆதியாகமம் 3:1-5) முதலில் அவளும் பின்னர் ஆதாமும் விலக்கப்பட்ட கனியை புசித்தார்கள். இதன் விளைவாக, யெகோவா தேவன் ஏதேன் தோட்டத்தில் அவர்களோடு பேச வந்த போது, அவர்கள் வெட்கப்பட்டு தங்களை ஒளித்துக்கொண்டார்கள். (ஆதியாகமம் 3:8, 9) இப்பொழுது அவர்கள் சுத்தமான மனச்சாட்சியிலிருந்து தோன்றிய, கடவுளை அணுகுவதற்குரிய சுயாதீன உணர்வை இழந்து போன பாவிகளானார்கள். இதன் காரணமாக அவர்கள் தங்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் நோயிலிருந்தும் மரணத்திலிருந்தும்கூட விடுதலையை இழந்து போனார்கள். பவுல் சொன்னார்: “ஒரே மனுஷனாலே [ஆதாம்] பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது போலவும் எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால் மரணம் எல்லாருக்கும் வந்தது.”—ரோமர் 5:12; ஆதியாகமம் 3:16, 19.
9. தங்களுக்கிருந்த அளவான சுயாதீனத்தை நன்றாக பயன்படுத்தியவர்களாக அறியப்பட்டிருப்பவர்கள் யார்?
9 இருப்பினும், மனித குலம் இன்னும் தெரிவு செய்யும் சுயாதீனத்தைக் கொண்டிருந்தது, காலப்போக்கில் ஒரு சில அபூரண மனிதர்கள் யெகோவாவை சேவிப்பதற்காக இதை பொறுப்புள்ள வகையில் பயன்படுத்தினார்கள். இவர்களில் சிலருடைய பெயர்கள் பண்டையக் காலத்திலிருந்து நமக்காக பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆபேல், ஏனோக்கு, நோவா, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு (இஸ்ரவேல் என்றும் அழைக்கப்பட்டார்) போன்ற மனிதர்கள் அவர்கள் இன்னும் அனுபவித்துக் களித்த அளவு சுயாதீனத்தை கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்காக பயன்படுத்திய தனிநபர்களின் முன்மாதிரிகளாகும். இதன் விளைவாக அவர்கள் நலமாயிருந்தனர்.—எபிரெயர் 11:4-21.
கடவுளுடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனத்தின் சுயாதீனம்
10. யெகோவா தம்முடைய விசேஷித்த ஜனத்தோடு செய்த உடன்படிக்கையின் நிபந்தனைகள் யாவை?
10 மோசேயின் நாட்களில் யெகோவா அப்போது லட்சக்கணக்கானோராயிருந்த இஸ்ரவேல் புத்திரரை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, அவர்களோடு ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்தினார், இதன் மூலமாக அவர்கள் அவருடைய விசேஷித்த ஜனமாக ஆனார்கள். இந்த உடன்படிக்கையின் கீழ், இஸ்ரவேலர்கள் ஓர் ஆசாரியத்துவத்தையும், அவர்களுடைய பாவங்களை மூடுவதற்கு அடையாளமாக மிருக பலிகளின் ஒரு முறைமையையும் கொண்டிருந்தனர். இவ்விதமாக அவர்கள் வணக்கத்தில் கடவுளை அணுகும் சுயாதீனமுள்ளவர்களாக இருந்தனர். அவர்கள், மூடநம்பிக்கையான பழக்க வழக்கங்களிலிருந்தும் பொய் வணக்கத்திலிருந்தும் தங்களை விலக்கி வைத்துக்கொள்ள சட்டதிட்டங்களடங்கிய ஒரு முறைமையையும்கூட கொண்டிருந்தனர். பின்னால், அவர்களுடைய சத்துருக்களுக்கு எதிராக தெய்வீக உதவியின் நிச்சயத்தோடு அவர்கள் ஒரு சுதந்தரமாக வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைப் பெற்றுக்கொள்வர். உடன்படிக்கையில் அவர்களுடைய பங்கு, இஸ்ரவேலர் யெகோவாவின் நியாயப்பிரமாணத்தை கைக்கொள்வதைக் கேட்பதாயிருந்தது. இஸ்ரவேலர் மனமுவந்து இந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டு சொன்னார்கள்: “கர்த்தர் [யெகோவா, NW] சொன்னவைகளையெல்லாம் செய்வோம்.”—யாத்திராகமம் 19:3-8; உபாகமம் 11:22-25.
11. இஸ்ரவேல் யெகோவாவுடன் உடன்படிக்கையில் தன்னுடைய பாகத்தை நிறைவேற்ற தவறிய போது என்ன விளைவடைந்தது?
11 இஸ்ரவேலர் 1,500-க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக, யெகோவாவோடு அந்த விசேஷித்த உறவில் இருந்தனர். ஆனால் அடிக்கடி அவர்கள் உடன்படிக்கையை கைக்கொள்ள தவறினார்கள். திரும்பத் திரும்ப அவர்கள் பொய் வணக்கத்தால் இழுக்கப்பட்டு விக்கிரகாராதனைக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் அடிமைகளானபடியால், கடவுள் அவர்களை அவர்களுடைய சத்துருக்களுக்கு சரீரப்பிரகாரமாய் அடிமைகளாகும்படி அனுமதித்தார். (நியாயாதிபதிகள் 2:11-19) உடன்படிக்கையை கைக்கொள்வதனால் வரும் விடுதலையளிக்கும் ஆசீர்வாதங்களை அனுபவித்துக் களிப்பதற்கு பதிலாக, அதை மீறினதற்காக அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள். (உபாகமம் 28:1, 2, 15) கடைசியாக, பொ.ச.மு. 607-ல், தேசம் பாபிலோனுக்கு சிறைப்பட்டு போக யெகோவா அனுமதித்தார்.—2 நாளாகமம் 36:15-21.
12. மோசேயின் நியாயப்பிரமாண உடன்படிக்கையின் சம்பந்தமாக எது கடைசியில் தெளிவானது?
12 இது கடினமான ஒரு பாடமாக இருந்தது. இதிலிருந்து நியாயப்பிரமாணத்தை கடைப்பிடிப்பதனுடைய முக்கியத்துவத்தை அவர்கள் கற்றுக்கொண்டிருக்க வேண்டும். இருப்பினும், 70 ஆண்டுகளுக்கு பின், இஸ்ரவேலர் தங்கள் சொந்த தேசத்துக்கு திரும்பியபோதும்கூட அவர்கள் நியாயப்பிரமாண உடன்படிக்கையை சரிவர கடைப்பிடிக்கத் தவறினார்கள். அவர்கள் திரும்பி வந்து கிட்டதட்ட நூறு ஆண்டுகளான பின்பு, யெகோவா இஸ்ரவேலின் ஆசாரியர்களிடம் பின்வருமாறு சொன்னார்: “நீங்களோ வழியைவிட்டு விலகி, அநேகரை வேதத்தைக் குறித்து இடறப்பண்ணினீர்கள்; லேவியின் உடன்படிக்கையைக் கெடுத்துப் போட்டீர்கள்.” (மல்கியா 2:8) ஆம், இஸ்ரவேலர் மத்தியில் மிகவும் உண்மையுள்ளவர்களாயிருந்தவர்களாலும்கூட பரிபூரண நியாயப்பிரமாணத்தின் தராதரத்தை எட்ட முடியவில்லை. ஓர் ஆசீர்வாதமாக இருப்பதற்கு பதிலாக அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகளில், அது “சாப”மாகிவிட்டது. (கலாத்தியர் 3:13) தெளிவாகவே, அபூரணமான, உண்மையுள்ள மனிதர்களை, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்துக்குள் கொண்டுவர மோசேயின் நியாயப்பிரமாண உடன்படிக்கையைக் காட்டிலும் அதிகமாக ஏதோ ஒன்று அவசியமாயிருந்தது.
கிறிஸ்தவ சுயாதீனத்தின் தன்மை
13. கடைசியாக சுயாதீனத்துக்கு என்ன மேம்பட்ட ஓர் ஆதாரம் அளிக்கப்பட்டது?
13 அதிகமான அந்த ஏதோ ஒன்று இயேசு கிறிஸ்துவின் மீட்பின் பலியாகும். ஏறக்குறைய பொ.ச. 50-ம் ஆண்டில், பவுல் கலாத்தியாவிலிருந்த அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களின் சபைக்கு எழுதினார். யெகோவா அவர்களை எவ்விதமாக நியாயப்பிரமாண உடன்படிக்கையின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தார் என்பதை விளக்கிவிட்டு பின்னர் இவ்விதமாகச் சொன்னார்: “நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல் கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள்.” (கலாத்தியர் 5:1) என்ன விதங்களில் இயேசு மனிதர்களை விடுதலையாக்கினார்?
14, 15. ஆச்சரியமான என்ன வழிகளில் இயேசு யூதர்களையும் யூதரல்லாதவர்களையும் விடுவித்தார்?
14 இயேசுவின் மரணத்துக்குப் பின்பு, அவரை மேசியாவாக ஏற்றுக்கொண்டு, அவருடைய சீஷர்களான யூதர்கள் பழைய நியாயப்பிரமாண உடன்படிக்கைக்கு பதிலாக செய்யப்பட்டிருந்த புதிய உடன்படிக்கையின் கீழ் வந்தார்கள். (எரேமியா 31:31-34; எபிரெயர் 8:7-13) இந்தப் புதிய உடன்படிக்கையின் கீழ், அவர்களும்—பின்னால் அவர்களைச் சேர்ந்துகொண்ட யூதரல்லாத விசுவாசிகளும்—கடவுளுடைய விசேஷித்த ஜனமாக இருந்த மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலுக்குப் பதிலாக ஏற்பட்டிருந்த புதிய ஆவிக்குரிய தேசத்தின் பாகமாக ஆனார்கள். (ரோமர் 9:25, 26; கலாத்தியர் 6:16) இப்படியாக, இயேசு பின்வருமாறு சொன்னபோது வாக்களித்த சுயாதீனத்தை அவர்கள் அனுபவித்துக் களித்தார்கள்: “சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.” மோசேயினுடைய நியாயப்பிரமாண சாபத்திலிருந்து அவர்களை விடுதலையாக்குவது தவிர, சத்தியம் யூத கிறிஸ்தவர்களுக்கு, மதத்தலைவர்கள் அவர்கள் மீது சுமத்தியிருந்த மிகவும் பாரமான எல்லா பாரம்பரியங்களிலிருந்தும் விடுதலையளித்தது. யூதரல்லாத கிறிஸ்தவர்களை அது அவர்களுடைய முன்னாள் வணக்கத்தின் விக்கிரகாராதனையிலிருந்தும் மூட நம்பிக்கைகளிலிருந்தும் விடுவித்தது. (மத்தேயு 15:3, 6; 23:4; அப்போஸ்தலர் 14:11-13; 17:6) இன்னும் அதிகமிருந்தது.
15 விடுதலையளிக்கும் சத்தியத்தைப் பற்றி பேசும் போது இயேசு இவ்விதமாகச் சொன்னார்: “பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (யோவான் 8:34) ஆதாமும் ஏவாளும் பாவஞ்செய்தது முதற்கொண்டு, எக்காலத்திலும் வாழ்ந்து வந்திருக்கும் ஒவ்வொரு தனிநபரும் பாவியாகவும் இப்படியாக பாவத்துக்கு அடிமையாகவும் இருந்திருக்கிறார்கள். இயேசுதாமே விதிவிலக்காக இருந்த ஒரே நபராக இருந்தார், இயேசுவின் பலி விசுவாசிகளை அந்த அடிமைத்தனத்திலிருந்து விடுவித்திருக்கிறது. உண்மைதான், அவர்கள் இன்னும் அபூரணராகவும் பாவமுள்ள இயல்பினராகவும் இருந்தார்கள். ஆனால் இப்பொழுது அவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பி, தங்கள் வேண்டுதல்கள் கேட்கப்படும் என்ற நம்பிக்கையோடு இயேசுவின் பலியின் அடிப்படையில் மன்னிப்புக்காக மன்றாட முடியும். (1 யோவான் 2:1, 2) இயேசுவின் மீட்பின் பலியின் அடிப்படையில், கடவுள் அவர்களை நீதிமான்களாக அறிவித்திருக்கிறார், அவர்கள் சுத்திகரிக்கப்பட்ட மனச்சாட்சியோடு அவரை அணுகமுடியும். (ரோமர் 8:33) மேலுமாக, முடிவில்லா வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்படும் எதிர்பார்ப்பை மீட்பு திறந்து வைத்த காரணத்தால், சத்தியம் மரண பயத்திலிருந்தும்கூட அவர்களை விடுவித்தது.—மத்தேயு 10:28; எபிரெயர் 2:15.
16. உலகம் அளிக்கக்கூடிய எந்தச் சுயாதீனத்தைக் காட்டிலும் கிறிஸ்தவ சுயாதீனம் எப்படி அதிகத்தை உள்ளடக்குவதாக இருந்தது?
16 ஆச்சரியமான வகையில், மனிதர் பேசுகிற விதமாய் பேசும் போது அவர்களுடைய நிலைமை என்னவாயிருப்பினும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கிறிஸ்தவ சுயாதீனம் திறந்து வைக்கப்பட்டது. ஏழைகள், கைதிகள், அடிமைகளும்கூட சுயாதீனமாக இருக்க முடியும். மறுபட்சத்தில், கிறிஸ்துவைப் பற்றிய செய்தியை நிராகரித்துவிட்ட தேசங்களிலுள்ள உயர்ந்தவர்கள் இன்னும் மூடநம்பிக்கைக்கும் பாவத்துக்கும் மரணத்தைப் பற்றிய பயத்துக்கும் அடிமைகளாக இருந்தனர். நாம் அனுபவித்துக் களிக்கும் இந்தச் சுயாதீனத்துக்காக நாம் யெகோவாவுக்கு நன்றி சொல்வதை ஒருபோதும் நிறுத்திவிடக்கூடாது. உலகம் அளிக்கக்கூடிய எதுவுமே அதற்கு ஈடாக இருக்க அதன் அருகில் வரமுடியாது.
சுயாதீனமுண்டு, ஆனால் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்
17. (எ) முதல் நூற்றாண்டிலிருந்த சிலர் எவ்விதமாக கிறிஸ்தவ சுயாதீனத்தை இழந்து போனார்கள்? (பி) சாத்தானுடைய உலகிலுள்ள வெளித்தோற்ற சுயாதீனத்தினால் நாம் ஏன் வஞ்சிக்கப்பட்டுவிடக்கூடாது?
17 முதல் நூற்றாண்டில், அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களில் பெரும்பாலானோர் தங்கள் சுயாதீனத்தில் களிகூர்ந்து, என்ன ஏற்பட்டாலும், பொருட்படுத்தாமல் தங்கள் உத்தமத்தைக் காத்துக் கொண்டனர். ஆனால் விசனகரமாக, ஒரு சிலர் அதனுடைய எல்லா ஆசீர்வாதங்களோடுகூட கிறிஸ்தவ சுயாதீனத்தை ருசித்துவிட்டு பின்னர் அதை புறக்கணித்து உலகத்துக்கு திரும்ப அடிமைகளாகிவிட்டனர். ஏன் அப்படி? அநேகருடைய விசுவாசம் சந்தேகமின்றி பலவீனப்பட்டது, அவர்கள் ‘விட்டு விலகிப்போனார்கள்.’ (எபிரெயர் 2:1) மற்றவர்கள், ‘நல்மனச்சாட்சியை தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தி,’ விட்டார்கள். (1 தீமோத்தேயு 1:19) ஒருவேளை அவர்கள் பொருளாசை அல்லது ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை முறைக்குள் விழுந்துவிட்டிருந்தார்கள். நம்முடைய விசுவாசத்தைக் காத்துக்கொண்டு, தனிப்பட்ட படிப்பு, கூட்டுறவு, ஜெபம் மற்றும் கிறிஸ்தவ நடவடிக்கையில் சுறுசுறுப்பாக இருந்து அதை கட்டி அமைப்பது எவ்வளவு முக்கியமாயிருக்கிறது! (2 பேதுரு 1:5-8) கிறிஸ்தவ சுயாதீனத்தை போற்றுவதை நாம் ஒருபோதும் நிறுத்திவிடாதிருப்போமாக! உண்மைதான், சிலர் சபைக்கு வெளியே அவர்கள் காணும் கண்டிப்பில்லா நிலையினால் கவர்ந்திழுக்கப்பட்டு, உலகிலுள்ளவர்கள் நம்மைவிட அதிக சுயாதீனமுள்ளவர்களாக இருப்பதாக நினைக்கலாம். ஆனால் உண்மையில் உலகில் சுயாதீனம் என்பது போல தெரிவது பொதுவாக வெறுமென பொறுப்பின்மையாக இருக்கிறது. நாம் கடவுளுக்கு அடிமைகளாக இல்லையென்றால், நாம் பாவத்துக்கு அடிமைகளாக இருக்கிறோம். அந்த அடிமைத்தனம் கசப்பான சம்பளத்தைக் கொடுக்கிறது.—ரோமர் 6:23; கலாத்தியர் 6:7, 8.
18-20. (எ) ஒரு சிலர் எவ்விதமாக “சிலுவைக்குப் பகைஞ”ரானார்கள்? (பி) சிலர் எவ்விதமாக ‘தங்கள் சுயாதீனத்தை துர்க்குணத்துக்கு மூடலாக கையாண்டார்கள்’?
18 மேலுமாக, பிலிப்பியருக்கு எழுதிய தன்னுடைய கடிதத்தில் பவுல் எழுதினார்: “அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன்.” (பிலிப்பியர் 3:18) ஆம், அவர்கள் ஒரு சமயம் கிறிஸ்தவர்களாக இருந்து, ஒருவேளை விசுவாச துரோகிகளாக மாறி விசுவாசத்துக்கு பகைஞராகிவிட்டனர். அவர்களுடைய போக்கைப் பின்பற்றாதிருப்பது எத்தனை இன்றியமையாதது! மேலுமாக பேதுரு எழுதினார்: “சுயாதீனமுள்ளவர்களாயிருந்தும் உங்கள் சுயாதீனத்தைத் துர்க்குணத்திற்கு மூடலாகக் கொண்டிராமல், தேவனுக்கு அடிமைகளாயிருங்கள்.” (1 பேதுரு 2:16) ஒருவர் எவ்விதமாக தன் சுயாதீனத்தை துர்க்குணத்திற்கு மூடலாக கையாள முடியும்? ஒருவேளை இரகசியமாக வினைமையான பாவங்களைச் செய்துகொண்டு அதே சமயத்தில் சபையோடு கூட்டுறவு கொள்வதன் மூலம்.
19 தியோத்திரேப்புவை ஞாபகப்படுத்திப் பாருங்கள். அவனைக் குறித்து யோவான் எழுதினார்: “[சபையில்] முதன்மையாயிருக்க விரும்புகிற தியோத்திரேப்பு எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. . . . அவன் இப்படிச் செய்து வருவதும் போதாமல், தான் சகோதரரை ஏற்றுக்கொள்ளாமலிருக்கிறதுமன்றி, ஏற்றுக்கொள்ள மனதாயிருக்கிறவர்களையும் தடை செய்து, சபைக்குப் புறம்பே தள்ளுகிறான்.” (3 யோவான் 9, 10) தியோத்திரேப்பு தன்னுடைய சொந்த தன்னல பேராசைக்கு மூடலாக தன் சுயாதீனத்தைப் பயன்படுத்தினான்.
20 சீஷனாகிய யூதா எழுதினார்: “நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்களாகிய சிலர் பக்கவழியாய் நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த ஆக்கினைக்குள்ளாவார்களென்று பூர்வத்திலே எழுதியிருக்கிறது.” (யூதா 4) சபையோடு கூட்டுறவுக்கொண்டிருக்கையில், இந்த மனிதர்கள் கேடான செல்வாக்காக இருந்தனர். (யூதா 8-10, 16) வெளிப்படுத்துதலில், பெர்கமு மற்றும் தியத்தீரா சபைகளில் பிரிவினைகளும், விக்கிரகாராதனையும், ஒழுக்கமற்ற நடத்தையும் இருந்ததாக நாம் வாசிக்கிறோம். (வெளிப்படுத்துதல் 2:14, 15, 20-23) கிறிஸ்தவ சுயாதீனம் என்னே தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது!
21. தங்கள் கிறிஸ்தவ சுயாதீனத்தை துர்ப்பிரயோகம் செய்பவர்களுக்கு என்ன காத்திருக்கிறது?
21 கிறிஸ்தவ சுயாதீனத்தை இவ்வகையில் துர்ப்பிரயோகம் செய்பவர்களுக்கு என்ன காத்துக்கொண்டிருக்கிறது? இஸ்ரவேலுக்கு என்ன நடந்தது என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். இஸ்ரவேல் கடவுளுடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனமாக இருந்தது, ஆனால் யெகோவா கடைசியில் அவளை நிராகரித்துவிட்டார். ஏன்? ஏனென்றால் இஸ்ரவேலர் கடவுளோடு தங்களுக்கிருந்த உறவை துர்க்குணத்துக்கு மூடலாக பயன்படுத்தினார்கள். அவர்கள் தாங்கள் ஆபிரகாமின் குமாரர் என்று பெருமையடித்துக்கொண்டு, ஆனால் ஆபிரகாமின் வித்தும் யெகோவாவின் தெரிந்துகொள்ளப்பட்ட மேசியாவுமாக இருந்த இயேசுவை நிராகரித்துவிட்டனர். (மத்தேயு 23:37-39; யோவான் 8:39-47; அப்போஸ்தலர் 2:36; கலாத்தியர் 3:16) “தேவனுடைய இஸ்ரவேல்,” முழுமையாக அதேப் போன்று உண்மையற்றதாக நிரூபிக்காது. (கலாத்தியர் 6:16) ஆவிக்குரிய அல்லது ஒழுக்கக் தூய்மைக் கேட்டை உண்டுபண்ணும் எந்தக் கிறிஸ்தவனும் கடைசியாக சிட்சையை அல்லது பாதகமான தீர்ப்பையும்கூட எதிர்ப்படுவான். நம்முடைய கிறிஸ்தவ சுயாதீனத்தை நாம் எவ்வாறு உபயோகிக்கிறோம் என்பதைக் குறித்து நாம் அனைவருமே கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.
22. கடவுளுக்கு அடிமையாயிருக்க தங்கள் கிறிஸ்தவ சுயாதீனத்தை பயன்படுத்துகிறவர்களுக்கு என்ன மகிழ்ச்சி கிடைக்கிறது?
22 கடவுளுக்கு அடிமையாயிருந்து உண்மையில் சுயாதீனமாயிருப்பது எவ்வளவு மேன்மையாக இருக்கும். உண்மையில் யெகோவா மாத்திரமே மதிப்புள்ளதாயிருக்கும் சுயாதீனத்தை அருளிச்செய்கிறார். நீதிமொழிகள் சொல்கிறது: “என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவு கொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.” (நீதிமொழிகள் 27:11) யெகோவா நியாயநிரூபணம் செய்யப்படுவதற்காக நாம் நம்முடைய கிறிஸ்தவ சுயாதீனத்தை உபயோகிப்போமாக. நாம் அவ்விதமாகச் செய்தால், நம்முடைய வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும், நாம் நம்முடைய பரலோகத் தகப்பனுக்கு மகிழ்ச்சியைக் கொண்டு வருவோம், கடைசியாக, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தை அனுபவித்துக் களிப்பவர்கள் மத்தியில் நாம் இருப்போம்.
உங்களால் விளக்க முடியுமா?
◻ யார் மாத்திரமே உண்மையில் சுயாதீனமுள்ளவராக இருக்கிறார்?
◻ என்ன சுயாதீனங்களை ஆதாமும் ஏவாளும் அனுபவித்துக்களித்தனர்? அவைகளை ஏன் அவர்கள் இழந்துவிட்டார்கள்?
◻ இஸ்ரவேலர் யெகோவாவோடு தங்கள் உடன்படிக்கையைக் கைக்கொண்ட போது என்ன சுயாதீனங்களை அனுபவித்து மகிழ்ந்தனர்?
◻ இயேசுவை ஏற்றுக்கொண்டவர்களுக்கு என்ன சுயாதீனங்கள் கிடைத்தன?
◻ முதல் நூற்றாண்டிலிருந்த சிலர் எவ்விதமாக தங்கள் கிறிஸ்தவ சுயாதீனத்தை இழந்துவிட்டார்கள் அல்லது துர்ப்பிரயோகம் செய்தார்கள்?
[பக்கம் 13-ன் படம்]
இயேசு அளித்த சுயாதீனம் மனிதன் கொடுக்கக்கூடிய எந்தச் சுயாதீனத்தைக் காட்டிலும் மிக மேம்பட்டதாக இருந்தது