கோவாஹீரோ இந்தியர்கள் உகந்த முறையில் பிரதிபலிக்கின்றனர்
தரையைத் தொடும் நீண்ட கருப்பு அங்கியை உடுத்திக்கொண்டு ஒரு பெரிய மரத்தின் நிழலில் உட்கார்ந்திருந்த அந்த வயதான அம்மாள் முற்றிலும் வேறுபட்ட நாகரிக வகையிலிருந்து வந்ததாகத் தோன்றினாள். மேலும் எங்கள் செவிகளுக்குப் பழக்கப்படாத மொழியிலும் அவள் பேசினாள். “மறுபடியும் வாருங்கள்,” என அவள் ஆர்வத்துடன் சொன்னாள். அவளைச் சுற்றி உட்கார்ந்திருந்த தன் குலத்தவரான மற்றும் 50 ஆட்களைச் சுட்டிக்காட்டி, “நீங்கள் திரும்ப வரும்படி நாங்கள் எல்லாரும் விரும்புகிறோம். ஒவ்வொரு வாரமும் வாருங்கள்!” என அவள் மேலும் சொன்னாள்.
இந்த ஜனங்கள் யார்? அவர்கள் எங்களை ஒருபோதும் சந்தித்திராதபோதிலும், நாங்கள் திரும்ப வரும்படி அவர்கள் ஏன் அவ்வளவு ஆவலாயிருந்தார்கள்? வடகிழக்கு கொலம்பியாவிலுள்ள லா குவாஹீரா தீபகற்பத்திலும் அருகிலுள்ள வடகிழக்கு வெனிஸூவலாவிலும் குடியிருக்கும் இந்த கோவாஹீரோ இந்தியர்களுக்குள் நாங்கள் செலவிட்ட ஒரு நாளைப்பற்றி உங்களுக்குச் சொல்ல எங்களை அனுமதியுங்கள்.
முதல் ஏற்பட்ட எண்ணப்பதிவுகள்
வெனிஸூவலாவின் தலைநகர், காரகஸிலிருந்து புறப்பட்டு, எங்கள் முதல் நிறுத்தம் மாரக்கைபோ ஆகும். நாங்கள் நகரத்துக்குள் செல்கையில், பகட்டான நிறங்களில், நீண்ட அங்கிகள் அணிந்து பாதையின் ஓரத்தில் நடந்துசெல்லும் மூன்று இளம் பெண்களைக் கவனித்தோம். அவர்களுடைய முகச் சாயல்கள் பொதுவான வெனிஸூவலனின் சாயலிலிருந்து வேறுபட்டிருந்தன—உயர்ந்த கன்ன எலும்புகள், பழுப்புநிற தோல், கருமையான நேர்முடி. அவர்களுடைய எளிதான, நற்பாங்குள்ள நடையைக் கவனித்தது, கோவாஹீரோ இந்தியரை நாங்கள் முதல் முறையாகப் பார்த்ததுதானே அவர்களைப்பற்றி அறிந்துகொள்ளும் எங்கள் ஆவலைத் தூண்டியது.
லா குவாஹீரா தீபகற்பத்துக்குச் சென்ற எங்கள் பயண நாளின் காலைப்பொழுது தெளிவாகவும் அமைதியாகவும் விடிந்தது. காலை சூரியன் அதிக வெப்பமடைவதற்கு முன், எங்களில் 50 பேர் ஒரு பஸ்ஸில் ஏறினோம், இங்கே வெனிஸூவலாவில் நெடுந்தொலைவிலுள்ள பகுதிகளில் பைபிளின் செய்தியைக் கொண்டுசெல்லும் விசேஷித்த, தேசமுழுவதிலும் செய்யப்பட்ட ஏற்பாட்டில் பங்குகொள்வதன்பேரில் கிளர்ச்சியுற்றோம். கொலம்பியாவோடு சேர்ந்த எல்லையிலுள்ள பராக்வாச்சான் பட்டணத்தை நோக்கிச் சென்றோம்.
மாரக்கைபோ பட்டணத்தைப் பின்னால் விட்டு, நாங்கள் பல சிறிய பட்டணங்கள் மற்றும் கிராமங்களினூடே கடந்து சென்றோம், அவை ஒவ்வொன்றும் ஒரு சந்தையுடனும், நெய்யப்பட்ட செருப்புகளையும் மன்டாஸ் எனப்பட்ட நீண்ட, பகட்டு நிறமுள்ள அங்கிகளையும் விற்கும் சில சாவடிகளுடனும் இருந்தன. ஒவ்வொரு கிராமமும், ஒழுங்காக அமைந்த, ஒரு மத்திய அங்காடியையும் நீல வர்ணங்களில் ஒரு சர்ச்சையும் கொண்டிருந்து, அந்த முழு காட்சிக்கும் ஓர் இன்பமான தோற்றத்தை அளித்தது. எல்லா ஆட்களும் இந்திய முகச் சாயல்களைக் கொண்டிருந்தனர். அவர்கள் எங்களுக்கு அவ்வளவு வேறுபட்டு தோன்றினபோதிலும், அவர்கள் தொடக்க முதலேயுள்ள வெனிஸூவலர்களில் சிலர் என நாங்கள் எங்களை நினைப்பூட்டிக்கொள்ள வேண்டியிருந்தது.
வீடுகளைத் தேடிச் சென்றது
கடைசியாக நாங்கள் சேரவேண்டிய இடத்தை அடைந்தோம். எங்கள் பஸ், பாதையில் ஒருபுறமாகச் சென்று கிளைகள் மிக விரிவாய்ப் பரந்தகன்ற ஒரு மரத்தின் நிழலில் ஒரு தாழ்ந்த மதிலருகில் நின்றது. அந்த மதிலுக்கு அடுத்தப் பக்கம் அந்தக் கிராம பள்ளிக்கூடம் இருந்தது—ஞாயிற்றுக் கிழமையாக இருந்ததால் மூடியிருந்தது.
இரண்டு தொகுதிகளாகப் பிரிந்து, வீடுகளுக்காகத் தேடிக்கொண்டு எதிர்புறங்களில் சென்றோம். பிற்பகல் மூன்று மணிக்கு அந்தப் பள்ளி வெளி முற்றத்தில், கோவாஹீரோ மொழியில் கொடுக்கப்படவிருக்கும் பைபிள் பேச்சுக்கு எல்லாரையும் நாங்கள் அழைக்க வேண்டும். சுதேச கோவாஹீரோ இந்திய பெண்ணான ஈவ்லின்டா, எங்கள் துணையாக இருந்தாள். இது எங்களை மேலும் ஏற்கத்தக்கதாக்கும் என்று நம்பினோம், ஏனெனில் நாங்கள் ஸ்பானிய மொழி பேசக்கூடுமெனினும், கோவாஹீரோ மொழியைப்பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது.
கிராமத்தைவிட்டு வெளியேறினபின், வீடுகளுக்கிடையே நாங்கள் மிகுதியாய் நடக்க வேண்டியிருந்தது. இருபுறங்களிலும் அடர்த்தியான புதர்க்காடுகளைக் கொண்ட நீண்ட நேர் பெருஞ்சாலையில் நாங்கள் நடந்துகொண்டிருக்கையில், ஏறக்குறைய பத்து வயதான ஒரு சிறிய பையன் எங்களோடு சேர்ந்து நடக்கத் தொடங்கி எங்களைப் பற்றி அறிய விரும்பிய பார்வையுடன் எங்களை உற்று நோக்கிக்கொண்டிருந்தான். ஈவ்லின்டா மென்சிரிப்புடன் அவனை நோக்கி, அவ்விடத்துக்கு நாங்கள் வந்ததன் நோக்கத்தை கோவாஹீரோ மொழியில் அவனுக்கு விளக்கிக் கூறினாள். அவனுடைய பெயர் ஓமார், பேச்சுக்கு வரும்படி நாங்கள் அவனை அழைத்தப்பின் அவன் மகிழ்ச்சியுடன் குதித்தோடிவிட்டான்.
பெருஞ்சாலையிலிருந்து பிரிந்து, சமீப மழைகளால் இன்னும் ஈரம் தோய்ந்திருந்த ஒரு மண் நடைபாதை வழியாய்ச் சென்றோம். இவை கொலம்பியாவுக்கும் வெனிஸூவலாவுக்கும் இடையில், சட்டவிரோதமாய்ச் சரக்குகள் கடத்துவோரின் நடைபாதைகளென எங்களுக்குத் தெரியவந்தது. ஆகாயம், வளமை ததும்பிய தாவரவர்க்கத்தின் நறுமணத்தால் நிரம்பியிருந்தது. ஈரத்தைக்கொண்ட வெப்பம் சிறிது துன்பந்தருவதாக இருந்தபோதிலும், அது எங்கள் ஆர்வத்தைத் தணிக்கவில்லை. எவ்வாறாயினும், அடர்த்தியான வெப்பமண்டல பசுமை செடிகொடிகாடுகளினூடே சென்ற அந்தப் பாதை, காடுவெட்டித் திருத்தப்பட்ட ஒரு பெரும் வெளியிடத்துக்குள்—கோவாஹீரோ வீடுசூழ்பண்ணைக்குள்—கொண்டுசென்று நிறுத்தியபோது எல்லா சங்கடங்களும் மறக்கப்பட்டுப்போயின.
கோவாஹீரோவுடன் நேருக்குநேர்
அழகிய வெள்ளை, கருப்பு, மற்றும் பழுப்புநிறத் தோல்களுடைய ஏறக்குறைய ஒரு டஜன் வெள்ளாடுகள், நிழலில் படுத்து, திருப்தியுடன் அசைபோட்டுக்கொண்டிருந்தன. இரண்டு மரங்களுக்கிடையில் நீட்டிக் கட்டப்பட்டிருந்து ஒரு தூங்கு மஞ்சத்தில், ஒரு பெண் படுத்து, தன் குழந்தைக்குப் பாலூட்டிக்கொண்டிருந்தாள். இரண்டு சிறு பிள்ளைகள் அருகில் விளையாடிக்கொண்டிருந்தன. களிமண்ணையும் பிரம்பையும் கொண்டு கட்டி புல் கூரை அமைக்கப்பட்ட ஒரு வீட்டைச் சுற்றியிருந்த குச்சு மற்றும் கம்பியாலாகிய வேலிக்கு வெளியில் அந்தப் பெண் இருந்தாள். சில திறந்த கொட்டகைகள் அந்தப் பகுதியில் இருந்தன. ஒன்று சமையலறையாகத் தோன்றினது, அங்கே பெரும் கடாரம்போன்ற பானைகள் சிலவற்றிற்கு மத்தியில், தரையில் கட்டைகள் எரிந்துகொண்டிருந்தன. அருகில் காய்வதற்காக வெள்ளாட்டுத் தோல்கள் தொங்கிக்கொண்டிருந்தன.
வாசலில் நின்றுகொண்டிருந்த மனிதன், நாங்கள் அணுகிவருவதைக் கண்டபோது, முன்னால் ஓடிவந்து, அந்தத் தொங்கு மஞ்சத்திலிருந்த பெண்ணுக்கு அருகில் எங்களுக்கு இரண்டு முக்காலிகளைப் போட்டான். ஈவ்லின்டா அந்த ஆளுக்கும் அந்தப் பெண்ணுக்கும் அவர்களுடைய மொழியில் வணக்கம் தெரிவித்து, படவிளக்கம் கொடுத்துள்ள பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்! என்ற சிறு புத்தகத்தைப் பயன்படுத்தி எதிர்காலத்துக்கான வேதப்பூர்வ நம்பிக்கையை விளக்கினாள். சர்வதேச நெருக்கடிகள் அல்லது ஜனநெருக்கமுள்ள, குறைந்த வருவாயையுடைய சூழ்வட்டாரங்களில் வழிப்பறிகள் அதிகரிப்பது இங்கே பொருத்தமான பேச்சுப் பொருள்களாக இராதென அந்தப் பகுதியில் நிலவியிருந்த சமாதானமான நிலைமைகள் எங்களுக்கு வெளிப்படுத்தின. கோவாஹீரோ இந்தியர்கள் ஓரளவு ஒதுங்கியிருக்கும் இயல்புடையோராதலால், தொடக்கத்திலேயே அன்பும் அவர்கள்பேரில் உண்மையான தனிப்பட்ட அக்கறையும் காட்டுவது முக்கியமென இந்தத் தொகுதியிலிருந்த ஒரு சாட்சி விளக்கியிருந்தாள். “அந்தக் குடும்பத்தின் சுகநலன்களைப் பற்றி, அறுவடையைப்பற்றி, சமீபத்தில் மழை பெய்ததா, போன்றவற்றை நாங்கள் அடிக்கடி கேட்போம். இது கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றி அவர்களுக்குச் சொல்லவும், எல்லா துன்பங்களையும், அவர்கள் முக்கியமாய்ப் பயப்படுகிற பிசாசான சாத்தானையும் யெகோவா சீக்கிரத்தில் நீக்கிப்போடுவாரென்று அவர்களுக்குக் காட்டவும் நமக்கு வழியைத் திறக்கிறது,” என அவள் கூறினாள்.
ஈவ்லின்டா பேசிக்கொண்டிருக்கையில், அவளுக்குச் செவிகொடுத்துக்கொண்டிருந்தவர்கள் ஒப்புதலைத் தெரிவித்தனர், சீக்கிரத்தில் மற்றொரு பெண்ணும் பல பிள்ளைகளும் வந்து சேர்ந்துகொண்டனர். கோவாஹீரோ சட்டம் ஒரு மனிதன் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிமாரைக் கொண்டிருக்க அனுமதிக்கிறதென நாங்கள் முன்னால் அறிந்திருந்தோம். இங்கே அவ்வாறு இருக்கக்கூடுமா? இது மாரக்கைபோவில் வாழும் கவர்ச்சிகரமான 21 வயது கோவாஹீரோவான யென்னியை நினைக்கும்படி எங்களைச் செய்வித்தது. செல்வந்தனான ஒரு கோவாஹீரோ ஆள் அவளை மணக்க நல்ல வரதட்சிணை கொடுக்க முன்வந்தான். ஆனால் யெகோவாவின் சாட்சிகளாயிராத அவளுடைய பெற்றோர், தங்களுக்குள் முரண்பட்டனர். அவளுடைய தாய் அந்தத் திருமண இணைவை ஏற்படுத்த ஒப்புக்கொண்டபோதிலும் யென்னியின் தகப்பன் முடியாதென சொல்லிவிட்டார். அவளை மணக்கும்படி கேட்டவர் ஏற்கெனவே யென்னியின் சகோதரியை மணந்திருந்தார்!
ஈவ்லின்டா பேசி முடித்தபோது, அந்த ஆள் ஒரு புரொஷூரை வாங்கினார். அவனுக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்த பெண்ணும் ஒன்று வேண்டுமெனக் கேட்டாள், அதைக் கொடுப்பதில் மகிழ்ச்சியடைந்தோம். அதற்குள் எங்கள் நண்பர்கள் மீதிபேரெல்லாம் எங்களைவிட்டுக் கடந்து சென்றுவிட்டனர். ஆகையால், பழக்கப்படாத இந்த நாட்டுப்புறத்தில் தொலைந்தலைவதை விரும்பாமல், நாங்கள், அந்தப் பிற்பகல் பேச்சுக்கு வரும்படி அந்தக் குடும்பத்துக்கு அழைப்புக் கொடுத்துவிட்டுச் சென்றோம்.
அந்தத் தொகுதியிலிருந்த ஒரு சாட்சி தனக்கு ஏற்பட்டதைப்பற்றிக் கூறினார். தொங்கும் மஞ்சத்திலிருந்த ஓர் ஆள், தன் மனைவி ஏதோ சிற்றுண்டிபானங்கள்—இரண்டு கண்ணாடிக் குவளைகளில் அரைத்த மக்காச்சோளத்தால் செய்யப்பட்ட சீச்சா—கொண்டுவருகையில் கவனமாய்ச் செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தான். மரியாதையுடன், நம் சகோதரன் அதை ஏற்று குடித்தார். பின்னால், அவருடைய கோவாஹீரோ துணை மாகாலீ, அந்தப் பானம் செய்யப்படும் முறையை விளக்கினாள். பொதுவாய் அந்த மக்காச்சோளம் பற்களால் அரைக்கப்பட்டது! அவர் முகம் வெளுத்ததைப் பார்க்கையில் திடீரென வெடித்துக் குலுங்கச் சிரிப்பதை அவள் அடக்க முடியவில்லை.
மற்றெரு மதிப்புவாய்ந்த இந்தியர், நம்முடைய சகோதரர்கள் பைபிளின் செய்தியைத் தன் வீட்டுக்குக் கொண்டுவர எடுத்த முயற்சியால் உள்ளம் கனிவிக்கப்பட்டதை காணக்கூடிய முறையில் வெளிப்படுத்தி, தன் தொங்கு மஞ்சத்திலிருந்து குதித்திறங்கினார். ஒரு ஷர்ட்டை எடுத்துப் போட்டுக்கொண்டு, அவர்தாமே அவர்களோடு சென்று கவனியாமற் விடப்பட்ட மறைந்து கிடந்த ஒரு தனிக் குடியிருப்புத் தொகுதியினிடம் அவர்களை வழிநடத்தினார்.
எங்கள் நண்பர்கள் சிலர் குடும்பத்தின் முதியோரோடு உரையாடிக்கொண்டிருந்த மற்றொரு குடியிருப்பிடத்தை நாங்கள் கடந்துசெல்கையில், வயிறு பருத்து உடையணியாமல், ஒரு மரத்தின் நிழலின்கீழ் சிறு பிள்ளைகளின் ஒரு கூட்டம் அமைதியாய் நின்றுகொண்டிருப்பதைக் கண்டோம். இது, சத்துக் குறைவான உணவும் வயிற்றுப் பூச்சிகளும் ஒன்றுசேர்ந்து உண்டாகும் நிலைமையென எங்களுக்குத் தெரியவந்தது. இந்த ஆட்கள் பலருக்கு ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீரும் இல்லை மின்சாரமும் இல்லை. இது, நிச்சயமாகவே, குளிர்காப்புப் பெட்டிகளோ மின்சார விசிறிகளோ, விளக்குகளோ இல்லையெனக் குறிக்கிறது.
எதிர்பாராத ஆட்கள் கூட்டம்
அந்தக் காலை வெகு விரைவாய்ச் சென்றுவிட்டது. நாங்கள் பகலுணவு சாப்பிட எங்கள் பஸ்ஸுக்குத் திரும்பிச் செல்கையில், நாங்கள் வரவேற்பு கொடுத்த எத்தனை பேர் அந்தப் பிற்பகல் பைபிள் பேச்சுக்கு வருவார்களென சிந்தித்துக்கொண்டிருந்தோம்.
பிற்பகல் 2:45 ஆனபோது, பஸ்ஸில் வந்த நாங்கள் மாத்திரமே, அவ்விடத்து மொழியில் 45-நிமிட பேச்சைத் தயாரித்திருந்த, எங்கள் கோவாஹீரோ சகோதரனின் பேச்சைக் கேட்கும் கூட்டமாக இருப்போமோவென நாங்கள் எண்ணினோம். அவ்வாறில்லை! முதல் குடும்பம் தயக்கத்துடன் அந்தப் பள்ளி முற்றத்துக்குள் வந்தது. அவர்கள் ஆவலோடு வரவேற்கப்படுகிறார்களென உணரும்படி எல்லாரும் செய்ததில் அவர்கள் ஆச்சரியமடைந்திருக்க வேண்டும். அடுத்த சில நிமிடங்களில், இன்னும் பலர் வந்துசேர்ந்தனர், சந்தேகமில்லாமல் சிலர் வெகுதூரம் நடந்து வந்திருந்தனர். டஜன் வெள்ளாடுகளுடன் திறந்த இடைவெளியில் வாழ்ந்த அந்தக் குடும்பமும் அங்கிருந்தது! தொங்கு மஞ்சத்திலிருந்த அந்தப் பெண் தன் கச்சிதமான கருப்பு மன்டாவில் எவ்வளவு வேறுபட்டுத் தோன்றினாள்! வழியில் நாங்கள் பேசின, சிறுவன் ஓமருங்கூட வந்திருந்தான், தானே தனியாக வந்திருந்ததுபோல் தோன்றினது. மற்றவர்கள் வந்து சேர்ந்தபோது, இருக்கையாகச் சேவித்த, பள்ளி முற்றத்திலிருந்து அந்த ஒரே நீண்ட காரைக்கட்டான படி நிரம்பிவிட்டது. அப்போது எங்கள் சிநேகப்பான்மையான பஸ் ஓட்டுநர், பேச்சின்போது ஆட்கள் உட்காருவதற்காக பஸ்ஸிலிருந்து இருக்கைகளை வெளியில் இழுத்துப்போடத் தொடங்கினார்.
எட்வார்டோ பைபிள் பேச்சைக் கொடுத்தபோது மொத்தம் 55 கோவாஹீரோ இந்தியர்கள் உட்கார்ந்து செவிகொடுத்துக் கேட்டனர். எனினும், அவர்கள் முற்றிலும் அமைதியாக உட்கார்ந்திருக்கவில்லை. பேச்சாளர் சொன்ன ஒரு குறிப்போடு அவர்கள் ஒத்திருந்தால், ‘உம்’ எனவும் கனத்த உட்குரலிலும் தங்கள் சம்மதத்தைத் தெரிவித்தனர். அக்கிரமத்துக்கு முடிவு வரவிருப்பதைப்பற்றி அவர் பேசினபோது, தொடக்கத்தில் குறிப்பிட்ட அந்த முதிர்வயதான அம்மாள் தானும் சேர்ந்துகொண்டாள். எல்லாரும் கேட்குமளவாக, சத்தமாய் அவள், “ஆம், மிகுதியான அக்கிரமம் உள்ளது, உண்மையில், பொல்லாத ஆட்கள் சிலர், இப்போது இங்கேதானே உட்கார்ந்திருக்கின்றனர். ஆகவே அவர்கள் செவிகொடுத்துக் கேட்கிறார்களென நான் நம்புகிறேன்!” என்று சொன்னாள். சகோதரர் எட்வார்டூ சாதுரியமாய் அந்தக் குறிப்பை ஒப்புக்கொண்டு தன் பேச்சைத் தொடர்ந்து கொடுத்தார்.
பேச்சு முடிந்தபோது, எங்கள் தொகுதியில் ஒருவர் ஒரு நிழற்படம் எடுத்தார். கோவாஹீரோ ஆட்கள் அதை விரும்பினர், மேலும் அடுத்தப் படத்துக்குத் தங்கள் வாழ்க்கையை மகிழ்வுடன் அனுபவித்தல் புரொஷூரைத் தாங்கள் தூக்கிக் காட்ட வேண்டுமாவெனக் கேட்டனர். பின்பு சிலர் படிப்படியாகச் சென்றுவிட்டனர், ஆனால் ஏறக்குறைய பாதிபேர் நாங்கள் பஸ்ஸில் ஏறுவதைக் கவனித்துக்கொண்டு நின்றனர். திரும்பி வருவோமென எங்களை வாக்குக் கொடுக்கும்படி செய்தனர், பின்பு பஸ் கண்ணுக்கு மறையும்வரை நின்று கையசைத்துக்கொண்டிருந்தனர்.
நாங்கள் விட்டுச் செல்கையில், கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றிய நற்செய்தியை இந்த ஜனங்களுக்குக் கொண்டு சென்றது ஒரு சிலாக்கியமாயிருந்ததென நிச்சயமாகவே உணர்ந்தோம். பலருடைய காரியத்தில் முதல் தடவையாக அவர்கள் அதைக் கேட்டனர். மாரக்கைபோவிலிருந்த சாட்சிகள் தங்கள் அடுத்த சந்திப்பைப்பற்றி ஏற்கெனவே பேசினர். இந்தச் சரிதைக்கு ஒரு தொடர்ச்சி இருக்குமா?
வெற்றிகரமான ஒரு தொடர்ச்சி
இரண்டு வாரங்களுக்குப் பின் சகோதரர் திரும்பிச்சென்றனர். பேரளவான பைபிள் புத்தகங்கள் அளிக்கப்பட்டன, அக்கறைகாட்டினோரிடம் மறுசந்திப்புகள் செய்யப்பட்டன, வீட்டு பைபிள் படிப்புகள் தொடங்கப்பட்டன மேலும், திறந்தவெளியில் நடத்தின இரண்டாவது பொதுக் கூட்டத்துக்கு 79 இந்தியர்கள் வந்தனர். அந்தச் சந்தர்ப்பத்தில் சகோதரர், வட்டார மாநாடு ஒன்று இருப்பதால் இரண்டு வாரத்துக்குப் பதிலாக மூன்று வாரங்களுக்குப் பின் தாங்கள் திரும்பி வருவார்களென விளக்கிக் கூறினார்கள். இந்தியர்கள் திடுக்குற்றனர். “அதற்கு முன்பாக நாங்கள் மரித்துவிடுவோம்!” என அவர்களில் ஒருவன் சொன்னான். வட்டார மாநாடு என்றால் என்னவென அவர்கள் கேட்டார்கள். அது அவ்வளவு நன்றாகத் தொனித்ததால் தாங்களும் அங்கே இருக்க வேண்டுமென அவர்கள் தீர்மானித்தார்கள்! ஏற்பாடுகள் செய்யப்பட்டன, மாரக்கைபோவில் அந்த மாநாட்டுக்கு அவர்களில் 34 பேர்கள் ஆஜராக முடிந்தது, அங்கே கோவாஹீரோ மொழி பேசும் சகோதரர்கள் அந்த ஸ்பானிய நிகழ்ச்சிநிரலை புரிந்துகொள்ளும்படி அவர்களுக்கு உதவி செய்தனர்.
“எல்லா மனுஷரும் இரட்சிப்பைப் பெறவும் சத்தியத்தை அறிகிற முற்றறிவை அடையவும் வேண்டுமென்பது,” யெகோவாவின் சித்தம், (1 தீமோத்தேயு 2:3, 4, தி.மொ.) சத்தியத்தை நாடும் லா குவாஹீரா தீபகற்பத்திலுள்ள இந்தியர்களுக்குள் இத்தகைய உகந்த பிரதிபலிப்பைக் காண்பது எவ்வளவு மகிழ்ச்சியுள்ளது!
[பக்கம் 26-ன் பெட்டி]
பைபிள் சத்தியத்தால் வாழ்க்கைகள் வளமூட்டப்பட்டன
ஐரிஸூம் மார்க்ரீட்டாவும், ஆன கோவாஹீரோ பருவவயதினர் இருவர், பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்! புரொஷூரைக் காண்பதில் இன்பமடைந்தனர். ஆனால் அவர்களுக்கு ஒரு பிரச்னை இருந்தது. அவர்களுக்கு வாசிக்கத் தெரியாது. அவர்களைச் சந்தித்த சாட்சிகள் வாசிக்கவும் எழுதவும் கற்றுக்கொள்ளுங்கள் (Learn to Read and Write) என்ற சிறு புத்தகத்தைக்கொண்டு அவர்களுக்கு உதவிசெய்ய முன்வந்தனர். சீக்கிரத்தில், அந்தப் பெண்கள் எழுதவும் யெகோவா என்ற பெயரைத் திருத்தமாய் உச்சரிக்கவும் கூடியவர்களானதில் கிளர்ச்சியுற்றனர்.
அவர்கள் படிப்படியாய் முன்னேற்றமடைகையில், பைபிளில் அளித்துள்ள அந்த அதிசயமான நம்பிக்கைகளின்பேரில் அவர்கள் வியப்படைந்தனர். மனிதவர்க்கம் முழுவதும் சுயாதீனத்தை அனுபவித்து மகிழும் என்ற வாக்கு முக்கியமாய் அவர்கள் உள்ளத்தைத் தொட்டது. “பருவவயதினரான எங்களுக்கு இங்கே வாழ்க்கை பொதுவாய், துயர்மிகுந்தது, வெகு இளம் வயதிலேயே எங்களுக்கு மணம் செய்து அனுப்பிவிடுகின்றனர், மேலும் கற்பழிப்பு இடைவிடாத ஆபத்தாயுள்ளது.” என அவர்கள் விளக்கினர்.
மாரக்கைபோவில் வட்டார மாநாடு ஒன்றுக்கு ஆஜரானது ஐரிஸூக்கும் மார்கரீட்டாவுக்கும் ஒரு சிறந்த சமயமாயிருந்தது. அவர்கள் முகம் அவர்கள் இருதயங்களில் உணர்ந்த மகிழ்ச்சியைப் பிரதிபலித்தன, முக்கியமாய் பாட்டுகள் பாடும்போது அவ்வாறிருந்தன. சாட்சி அவர்களுடன் பைபிள் படிப்பதற்காக வருகையில் அவர்கள் எப்பொழுதும் ஆவலோடு கதவண்டை காத்துக்கொண்டிருந்தனர், மேலும் அவர்களுடைய கிராமத்தில் வைக்கப்படும் பொதுப்பேச்சு ஒன்றையும் அவர்கள் ஒருபோதும் தவறினதில்லை. யெகோவா தேவனையும் அவருடைய நோக்கத்தையும் பற்றிய அறிவால் தங்களுடைய வாழ்க்கை உண்மையாகவே வளமூட்டப்பட்டதென இந்த இளம் பெண்கள் உணருகின்றனர்.