“கடவுளின் சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்”
கிறிஸ்தவர்கள் ஆயுதம் தரிப்பதா? அவர்கள் ஏன் அத்தகைய போருக்குரிய சாதனங்களை ஏற்கவேண்டும்? அவர்கள் சமாதானத்தை நேசிக்கிறவர்கள் அல்லவா? (2 தீமோத்தேயு 2:24) ஆம், சமாதானத்தை நேசிக்கிறவர்களே. இருப்பினும், உண்மையான கிறிஸ்தவர்கள் எல்லாரும் ஒரு போரில் ஈடுபட்டுள்ளனர்—கொல்வதற்கல்ல, வெற்றிப்பெறுவதற்கான ஒன்றில் அவர்கள் போராடுகின்றனர்.
சாத்தான் கலகஞ்செய்திராவிடில், இத்தகைய போராட்டம் ஒருபோதும் தேவைப்பட்டிராது. ஆனால் அவன் கலகஞ்செய்தான், மற்றும் அவன் ஆதாமையும் ஏவாளையும் தன் கலகத்தில் சேர்ந்துகொள்ளும்படி தவறாக வழிநடத்தினான். அதுமுதற்கொண்டு வளர்ந்து உருவாகியுள்ள இந்த உலக ஒழுங்குமுறை “பொல்லாங்க”னாகிய பிசாசான சாத்தானின் அதிகாரத்துக்குள் கிடக்கிறது. (1 யோவான் 5:19) உரிமையுள்ள ஈடற்ற பேரரசரான யெகோவாவுக்குத் தங்களைக் கீழ்ப்படுத்துவோர் இந்த உலகத்தின் மற்றும் அதன் அதிபதியின் செல்வாக்கைத் தவிர்க்க வேண்டும். அவர்கள் தங்கள் ஆவிக்குரிய உயிருக்காகப் போராட வேண்டும். இதற்காகவே, கிறிஸ்தவர்கள் பின்வருமாறு அறிவுரை கூறப்படுகின்றனர்: “நீங்கள் பிசாசின் தந்திரங்களுக்கு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி கடவுளின் சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.”—எபேசியர் 6:11, தி.மொ.
ஆயுத வர்க்கம்
நாம் சரியானபடி பாதுகாக்கப்பட வேண்டுமானால், நமக்கு “கடவுளின் சர்வாயுதவர்க்கம்” தேவை என்பதைக் கவனியுங்கள். அவ்வாறெனில், அப்போஸ்தலன் பவுல் விவரித்த இந்த ஆயுதவர்க்கத்தின் ஒவ்வொரு பாகத்தையும் நாம் கவனித்துப்பார்த்து, நாம் ஆவிக்குரிய போர் நடவடிக்கைக்கு முழுமையாய் ஆயுதந் தரித்திரிக்கிறோமாவெனத் தீர்மானிக்க நேர்மையுடன் நம்மை மதிப்பிட்டுப் பார்க்கலாம்.—எபேசியர் 6:14-17, தி.மொ.
“எனவே, சத்தியத்தால் உங்கள் அரையைக் கட்டிக்கொண்டு உறுதியாய் நில்லுங்கள்.” (எபேசியர் 6:14எ, NW) பைபிள் காலங்களில் போர்வீரர்கள் 15 சென்டிமீட்டர் வரை அகலமான தோல் அரைக்கச்சையை அணிந்தனர். இந்த அரைக்கச்சை இடுப்பைப் பாதுகாப்பதற்கு உதவியாயிருந்தது. ஒரு போர்வீரன் தன் அரைக்கச்சையை இறுகக் கட்டினபோது, அது அவன் போரிடுவதற்கு ஆயத்த நிலையில் இருந்ததைக் குறித்தது.
அவ்வாறிருக்க, தெய்வீகச் சத்தியத்தைப் போர்வீரனின் அரைக்கச்சைக்கு ஒப்பிட்டிருப்பது எவ்வளவு பொருத்தமாயுள்ளது! இது நாம் கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்தை, அதைக் கொண்டு அரைக் கட்டப்பட்டதுபோல், நமக்கு வெகு நெருங்க வைத்திருக்க வேண்டுமென விளக்கிக் காட்டுகிறது. கடவுளுடைய வார்த்தையிலுள்ள எண்ணத்தின் உட்பொருளின்பேரில் நாம் திரும்ப ஆழ்ந்து சிந்தனை செய்ய வேண்டும். இது பொய்களாலும் ஏமாற்றுதல்களினாலும் தவறாக வழிநடத்தப்படுவதிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். மேலும், யெகோவாவின் வாயின் வசனிப்புகள் நம்மை ஆவிக்குரியபிரகாரம் ஆதரித்து பலப்படுத்தி நம்முடைய உத்தமத்தை அழியாது காத்துக்கொள்ள உதவிசெய்யும்.
“நீதியின் மார்க்கவசத்தைத் தரித்துக்கொண்டவர்களாயும்.” (எபேசியர் 6:14பி, தி.மொ.) ஒரு போர்வீரனின் மார்க்கவசம் முக்கிய உடல் உறுப்பு ஒன்றை—இருதயத்தை—பாதுகாத்தது. அவ்வண்ணமே, கடவுள்-கொடுத்திருக்கும் நம்முடைய ஆவிக்குரிய ஆயுதவர்க்கத்தில், நீதி, நம்முடைய இருதயத்தைப் பாதுகாக்கிறது. வேதப்பூர்வமாய், இருதயம் நாம் உள்ளத்தில் எவ்வாறு இருக்கிறோமென்பதற்கு—நம்முடைய உணர்ச்சிகள், நினைவுகள், மற்றும் ஆசைகளுக்குப் பொருத்தமான அடையாளமாயுள்ளது. இருதயம் கேட்டுக்குச் சாயும் பாங்குள்ளதெனவும் பைபிள் சொல்வதால், யெகோவாவின் நீதிக்குரிய தராதரத்தை விடாமல் கடைப்பிடிப்பதற்குத் திட தீர்மானத்தை வளர்த்து வருவது இன்றியமையாதது. (எரேமியா 17:9) கடவுளுக்குக் கீழ்ப்படிதல் ஒரு பாசாங்குத்தன வெளிப் பகட்டாக இருக்கக் கூடாது; அது உள்ளத்திலிருந்து வரவேண்டும். நாம் நீதியை உறுதியாய் நேசிப்பதையும் சமமாக அக்கிரமத்தைக் கடுமையாய் வெறுப்பதையும் நம்மில் வளர்த்துவரும்படி இது தேவைப்படுத்துகிறது. (சங்கீதம் 45:7) இவ்வாறு நம்முடைய இருதயம் பாதுகாக்கப்படும்.
“சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் காலில் தொடுத்துக்கொண்டவர்களாயும்.” (எபேசியர் 6:15, தி.மொ.) உங்கள் பாதங்கள் இம்முறையில் பாதரட்சை தொடுத்துள்ளனவா? நற்செய்தியை அறிவிக்கும்படி அவை உங்களைத் தவறாமல் வெளி ஊழியத்துக்குக் கொண்டு செல்கின்றனவா? உங்கள் பிரசங்கிப்பு மற்றும் கற்பிப்பு நடவடிக்கைகளின் தன்மையை முன்னேற்றுவிக்கும்படி நீங்கள் மனமார முயற்சி செய்கிறீர்களா? உண்மைதான், சில பிராந்தியங்கள் மற்றவற்றோடு ஒப்பிட பலன்தராதவையாக இருக்கின்றன. ஆட்கள் அக்கறையற்றும், ஆர்வமில்லாமலும், எதிர்ப்பவராகவும் இருக்கலாம். நம்முடைய பிரசங்கிப்பு நம்மீது துன்புறுத்தலையும் கொண்டுவரலாம். ஆனால் விடாமுயற்சியுடன் தொடருவதால், கிறிஸ்தவர்கள் சகிப்புத்தன்மையை வளர்க்கலாம், இது சாத்தானின் தாக்குதல்களுக்கு எதிராகப் பாதுகாப்பை அளிக்கும் ஒரு பண்பாகும். துன்புறுத்தப்பட்டபோதிலும், பவுல் ஆர்வமுள்ள பிரசங்கியாக இருந்தார், ‘அவர் கிறிஸ்துவைப் பின்பற்றினதுபோல், நாமும் அவரைப் பின்பற்றுகிறவர்களாக’ வேண்டுமென நாம் ஊக்குவிக்கப்படுகிறோம்.—1 கொரிந்தியர் 11:1.
இராஜ்ய-பிரசங்க வேலையில் நம்மைச் சுறுசுறுப்பாய் வைத்துக்கொள்வது நற்செய்தியில் நம்முடைய நம்பிக்கையைப் பலப்படுத்துகிறது. மேலும், யெகோவாவின் சித்தத்தை நிறைவேற்றுவதில் அவருடைய ஆவி நம் மூலமாய் செயல்பட இது அனுமதிக்கிறது. உண்மையில், இத்தகைய நடவடிக்கை நம்மை தூதர்களோடு—யெகோவா தேவனோடுங்கூட—உடனுழைப்போராயிருக்கச் செய்கிறது. (1 கொரிந்தியர் 3:9; வெளிப்படுத்துதல் 14:6) ‘கர்த்தருடைய வேலையில் செய்வதற்கு நிறைய’ கொண்டிருப்பது நம்மை “உறுதிப்பட்டவர்களாயும் அசையாதவர்களாயும்” ஆகும்படி செய்விக்கிறது. (1 கொரிந்தியர் 15:58) எத்தகைய அதிசயமான பாதுகாப்பை இது அளிக்கிறது!
“விசுவாசத்தின் பெரிய கேடகத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.” (எபேசியர் 6:16, NW) பெரிய கேடகத்தைக் கொண்டு, பூர்வகாலங்களில் ஒரு போர்வீரன் ஈட்டிகளிலிருந்தும் அம்புகளிலிருந்தும் தன்னைப் பாதுகாத்துக்கொண்டான். ஒரு கேடகத்தைப் பயன்படுத்தத் தவறினால், அவன் ஆபத்தான முறையில் காயப்படக்கூடும் அல்லது கொல்லப்படவுங்கூடும். கிறிஸ்தவர்கள் அதைப் பார்க்கிலும் ஆபத்தான கொடிய போராயுதங்களை—“பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களை”—எதிர்ப்படுகிறார்கள். இவை, நம்முடைய விசுவாசத்தைப் பலன்குன்ற செய்து ஆவிக்குரிய பிரகாரம் நம்மைக் கொல்லும்படி சாத்தான் பயன்படுத்தும் எல்லா வகைமுறைகளும் அடங்கியவை. அவற்றில் துன்புறுத்தல், பொய்கள், ஏமாற்றும் இயல்புடைய உலகப்பிரகாரமான தத்துவ ஞானங்கள், பொருள் சார்ந்த கவர்ச்சிகள், மற்றும் ஒழுக்கக்கேடான நடத்தையில் ஈடுபடும்படியான சோதனை ஆகியவை உட்பட்டுள்ளன. இவை எல்லாவற்றிற்கும் எதிராக நம்மைப் பாதுகாப்பதற்கு, நமக்கு ஒரு பெரிய கேடகம் தேவை. நம்மில் எந்தப் பாகத்தையும் தாக்குதலுக்கு இடமளிக்கும் நிலையில் விட முடியாது.
ஆபிரகாமுக்கும் அவருடைய மனைவி, சாராளுக்கும் உறுதியான விசுவாசம் இருந்தது. பிள்ளைபெறும் வயதைக் கடந்துவிட்டிருந்தபோது, ஒரு வித்து அவர்களுக்குப் பிறக்கும் என்ற கடவுளுடைய வாக்கில் அவர்கள் விசுவாசம் வைத்தார்கள். பின்னால், ஆபிரகாம், தன் மிக நேசமான சாராள் மூலம் பெற்ற தன் ஒரேபேறான குமாரனான, ஈசாக்கைப் பலியாகச் செலுத்தும்படி கூறப்பட்டதற்குக் கீழ்ப்படிந்தபோது தனி கவனிப்புக்குரிய விசுவாசத்தைக் காட்டினார். யெகோவா ஆபிரகாமின் கையைத் தடுத்து ஈசாக்குக்குப் பதிலாக பலியிடுவதற்கு ஒரு பலியை அளித்தார். ஆனால் ஆபிரகாம் கீழ்ப்படிய ஆயத்தமாயிருந்தார். ஏன்? ஏனெனில், யெகோவா தன்னுடைய குமாரனை உயிர்த்தெழுப்பி அவனைப்பற்றிக் கொடுத்த வாக்குகளை நிறைவேற்ற முடியுமென அவருக்கு முழுமையான விசுவாசம் இருந்தது.—ரோமர் 4:16-21; எபிரெயர் 11:11, 12, 17-19.
மோசேக்கும் நமக்குத் தேவையாயுள்ள அவ்வகை விசுவாசம் இருந்தது. அவர் எகிப்தின் செல்வத்தை வேண்டாமெனத் தள்ளி, அதைப் பார்க்கிலும் கடவுளுடைய ஜனங்களுடன் ஒடுக்கப்படுதலை அனுபவிப்பதையே மேலானதாகத் தெரிந்துகொண்டார். ஏன்? ஏனெனில் யெகோவா இருக்கிறார் என்றும் இஸ்ரவேலருக்கு இரட்சிப்பைக் கொண்டுவருவாரென்றும் அவருக்கு விசுவாசம் இருந்தது. மோசேயின் விசுவாசம் அவ்வளவு உறுதியாயிருந்ததால் அவர் “காணமுடியாதவரைக் காண்கிறவன்போல் உறுதியாய்ப் பற்றிக்கொண்டு” தொடர்ந்தார்.—எபிரெயர் 11:6, 24-27.
யெகோவாவில் இதற்கொப்பான விசுவாசம் நமக்கு இருக்கிறதா? நாம் அவரைக் காணக்கூடியதுபோல் இருக்குமளவாக யெகோவாவுடன் நம்முடைய உறவு அவ்வளவு மிக நெருங்கியதாயுள்ளதா? கடவுளுடன் நம்முடைய உறவைக் காத்துக்கொள்ள எந்தத் தியாகத்தையும் செய்வதற்கு அல்லது எந்த இக்கட்டையும் சகிப்பதற்கு நாம் மனமுள்ளோராய் இருக்கிறோமா? யெகோவாவில் நமக்கு முழு விசுவாசம் இருக்கிறதா? (எபிரெயர் 11:1) அப்படியானால், சாத்தானின் அக்கினியாஸ்திரங்கள் நம்முடைய விசுவாசமாகிய கேடகத்தினூடே ஊடுருவி செல்ல மாட்டா.
“இரட்சணியமென்னும் தலைச்சீராவை . . . எடுத்துக்கொள்ளுங்கள்.” (எபேசியர் 6:17எ) ஒரு போர்வீரனின் தலைச்சீரா அவனுடைய தலையைப் பாதுகாத்தது இவ்வாறு மூளையை—நரம்பு மைய ஒத்துழைப்புக்கும் சிந்தனைக்குமுரிய உறுப்பைப்—பாதுகாத்தது. கிறிஸ்தவனின் இரட்சிப்புக்குரிய நம்பிக்கை தலைச்சீராவுக்கு ஒப்பிடப்பட்டுள்ளது, ஏனெனில் அது மனதைப் பாதுகாக்கிறது. ஒரு கிறிஸ்தவனின் மனம், திருத்தமான அறிவின்மூலம் புதிதாக்கப்பட்டிருக்கிறது, ஆனால் அது பலவீனனும் அபூரணனுமான ஓர் ஆளுக்கு உரியதாக இன்னும் உள்ளது. (ரோமர் 7:18; 12:2) விசுவாசத்தை-அழிக்கும், இந்த உலகத்தின் ஆவி உண்டுபண்ணும் அசுத்தமான சிந்தனையால் மனதை நிரப்ப நாம் அனுமதித்தால், இரட்சிப்பில் நம்முடைய நம்பிக்கை மங்கி முடிவில் ஒழிந்தும் போகலாம். மறுபட்சத்தில், கடவுளுடைய பலப்படுத்தும் வார்த்தைகளைக் கொண்டு தவறாமல் தொடர்ந்து நம்முடைய மனதை உணவூட்டி வந்தால், நம்முடைய நம்பிக்கை விளக்கமாகவும் தெளிவாகவும் நிலைத்திருக்கும். இரட்சணியமென்னும் உங்கள் தலைச்சீராவை இறுகப் பொருந்தியதாய் விடாது அணிந்துகொண்டிருக்கிறீர்களா?
“தேவவசனமாகிய ஆவியின் பட்டயம்.” (எபேசியர் 6:17பி) போரில் முந்தித் தாக்குதலே சிறந்த தற்காப்பு என்ற பழமொழி கிறிஸ்தவ போரில் பொருத்தமாயுள்ளது. நம்முடைய பாதங்கள் சமாதானத்துக்குரிய நற்செய்தியால் தொடுக்கப்பட்டு, நம்மை அவிசுவாசிகளுக்குள் கொண்டு செல்கையில், நாம் போராயுதம் இல்லாமல் விடப்பட்டில்லை. ஆவிக்குரிய பொய்களையும் தவறான கருத்துக்களையும் வெட்டி வீழ்த்தி, ஆவிக்குரிய சுயாதீனத்தைக் கண்டடையும்படி நேர்மையான இருதயமுள்ள ஆட்களுக்கு உதவிசெய்வதற்கு, பைபிள், வல்லமைவாய்ந்த பட்டயமாகச் செயல்படுகிறது.—யோவான் 8:31, 32.
இயேசு பிசாசான சாத்தானை எதிர்த்து வாதிட்டபோது, உண்மையில், இந்தப் போராயுதத்தின் வல்லமையைக் காட்டினார். வனாந்தரத்தில் சோதிக்கப்பட்டபோது, இயேசு, “எழுதியிருக்கிறதே,” என்று சொல்லி, கடவுளுடைய வார்த்தையைப் பலன்தரும் முறையில் பயன்படுத்தி, சாத்தானின் மூன்று தாக்குதல்களுக்கும் எதிராகத் தம்மைத் தற்காப்பு செய்தார். (மத்தேயு 4:1-11) இந்தப் பட்டயத்தைத் திறம்பட்ட முறையில் பயன்படுத்த நாம் கற்றுக்கொண்டால், சாந்தகுணமுள்ளவர்கள் சாத்தானின் வல்லமையின் கீழிருந்து வெளியேற நாம் உதவி செய்யலாம். பின்னும், பலவீனரின் விசுவாசத்தைக் கவிழ்க்க முயற்சி செய்யும் ஆட்களிடமிருந்து மந்தையைப் பாதுகாப்பதற்கு, சபை மூப்பர்கள் கடவுளுடைய வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர்.—அப்போஸ்தலர் 20:28-30.
ஒரு போர்வீரனுடைய பட்டயத்தைப் பயன்படுத்தும் திறமை எளிதாக உண்டாவதில்லை. அதைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்துவதற்கு பயிற்றுவிப்பும் நீடித்த, ஒப்புக்கொடுத்தப் பழக்கமும் தேவைப்படுகின்றன. இவ்வாறே ஆவிக்குரிய போரில் கடவுளுடைய வார்த்தையைத் திறமையுடன் பயன்படுத்துவோராக ஆவதற்கு மிகுந்த படிப்பும் ஊழியத்தில் தவறாத ஒழுங்கான பழக்கமும் தேவைப்படுகிறது. நிச்சயமாகவே, “சத்திய வார்த்தையைச் சரியான முறையில் கையாளு”வதற்குத் தகுதிபெற்ற ஆவிக்குரிய திறமைவாய்ந்த பட்டயவீரராக இருக்க, தேவைப்படும் முயற்சியை நாம் செய்வோமாக.—2 தீமோத்தேயு 2:15.
தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள், உறுதியாய் நில்லுங்கள்
கடவுளிடம் உத்தமத்தை விடாது காத்துவருவதற்கு நம்முடைய ஆவிக்குரிய ஆயுதவர்க்கத்தின் எல்லா பாகங்களும் இன்றியமையாதவை. ஆனால் இந்த ஆயுதவர்க்கத்தை நாம் எவ்வாறு தொடர்ந்து தரித்துக்கொண்டிருக்க முடியும்? பைபிளைத் தவறாமல் ஒழுங்காய்ப் படிப்பதும், கிறிஸ்தவ கூட்டங்களுக்கு முன்னதாகவே ஆயத்தஞ் செய்வதும், பின்பு கவனமாய்ச் செவிகொடுத்துக் கேட்டு அவற்றில் சுறுசுறுப்பாய்ப் பங்குகொள்வதும் நம்முடைய ஆவிக்குரிய ஆயுதவர்க்கத்தைத் தொடர்ந்து தரித்துக்கொண்டிருக்க நமக்கு உதவிசெய்யும். (2 தீமோத்தேயு 3:16; எபிரெயர் 10:24, 25) தவறாத ஆர்வமுள்ள வெளி ஊழியமும் அதோடு நல்ல கிறிஸ்தவ கூட்டுறவும் நம்முடைய தாக்குதலுக்கான மற்றும் தற்காப்புக்கான ஆவிக்குரிய ஆயுதவர்க்கத்தை நல்ல நிலையில் வைத்திருக்கவும் உதவிசெய்யும்.—நீதிமொழிகள் 13:20; ரோமர் 15:15, 16; 1 கொரிந்தியர் 15:33.
சரியான மனப்பான்மையை வளர்த்துவருவதும் முக்கியம். இந்த உலகத்தின் கவர்ச்சிகரங்கள் நம் கவனத்தைத் திருப்புவதற்கு இடங்கொடுக்க நாம் மறுத்துவிட வேண்டும். மாறாக, நாம் ‘தெளிவான கண்ணை’ உடையோராக இருப்பதில் முன்னேறுவோமாக. (மத்தேயு 6:19-24, NW) மேலும், இயேசு கிறிஸ்துவின் மாதிரியைப் பின்பற்றி, நாம் நீதியை நேசிக்கவும் அக்கிரமத்தை வெறுக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். (எபிரெயர் 1:9, NW) இவை யாவும், கடவுள்-கொடுத்திருக்கும் நம்முடைய ஆவிக்குரிய ஆயுதவர்க்கத்தைத் தொடர்ந்து தரித்துக்கொண்டிருக்க நமக்கு உதவிசெய்யும்.
ஆவிக்குரிய ஆயுதவர்க்கத்தின் ஒவ்வொரு பகுதியையும் குறிப்பிட்டுப் பேசினபின், பவுல் பின்வருமாறு சொல்லி முடிக்கிறார்: “எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.” (எபேசியர் 6:18)உண்மைப்பற்றுறுதியுள்ள போர்வீரர்கள் படைத் தளபதி அலுவலகத்துடன் தொடர்ந்து தொடர்பு வைத்து கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறார்கள். கிறிஸ்தவ போர்வீரர்களாக, நாம், நம்முடைய ஈடற்ற பேரரசர் யெகோவா தேவனுடன், ‘பல ஜாதியாருக்கு மகா அதிபதியான’ இயேசு கிறிஸ்துவின் மூலம் செய்யப்படலாம். யெகோவா தேவனுடன் தவறாமல் பேச்சுத்தொடர்பு கொண்டுவருவதால், போரில் நம்மைத் தளராமல் நீடித்திருக்கச் செய்ய ஒவ்வொரு நாளும் பலத்தைப் பெறுகிறோம்.
“நான் உலகத்தை ஜெயித்தேன்,” என்று இயேசு கூறினார். (யோவான் 16:33) நாமும் வெற்றிப்பெறும்படி யெகோவா விரும்புகிறார். அப்போஸ்தலன் பவுலின் மரணம் நெருங்கினபோது, அவர்: “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்,” என்று சொல்ல முடிந்தது (2 தீமோத்தேயு 4:7) நாமும் இந்தப் போராட்டத்தில் நம்முடைய பங்கைப்பற்றி இதைப்போன்று சொல்லக்கூடியோராய் இருப்போமாக நாம் இதை உண்மையில் விரும்பினால், கடவுள் கொடுத்திருக்கும் இந்தச் சர்வாயுதவர்க்கத்தைத் தொடர்ந்து தரித்திருப்பதன்மூலம் “பிசாசின் தந்திரங்களுக்கு எதிராக உறுதியாய் நிற்”போமாக,—எபேசியர் 6:11. NW.