கடவுள் கொடுத்த சுயாதீனத்தின் நோக்கத்தை தவறவிட்டு விடாதீர்கள்
“யெகோவாவுடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.”—2 கொரிந்தியர் 3:17, NW.
1. ஏசாயா 65:13, 14 ஏன் யெகோவாவின் சாட்சிகளுக்குப் பொருந்துகிறது?
யெகோவா சுயாதீனத்தின் கடவுளாக இருக்கிறார். கடவுள் கொடுத்த சுயாதீனம் என்னே ஓர் ஆசீர்வாதமாக இருக்கிறது! அவருடைய ஒப்புக்கொடுத்த ஊழியர்களுக்கு இப்படிப்பட்ட சுயாதீனம் இருப்பதன் காரணமாக, அரசராகிய ஆண்டவர் யெகோவாவின் இந்த வார்த்தைகள் அவர்களுக்குப் பொருத்தமாக உள்ளது: “இதோ, என் ஊழியக்காரர் புசிப்பார்கள், நீங்களோ பசியாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் குடிப்பார்கள், நீங்களோ தாகமாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் சந்தோஷப்படுவார்கள், நீங்களோ வெட்கப்படுவீர்கள். இதோ, என் ஊழியக்காரர் மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள், நீங்களோ மனநோவினாலே அலறி, ஆவியின் முறிவினாலே புலம்புவீர்கள்.”—ஏசாயா 65:13, 14.
2. யெகோவாவின் மக்களுடைய ஆவிக்குரிய செழுமைக்குக் காரணமென்ன?
2 கடவுளுடைய மக்கள் அவருடைய ஆவி அல்லது கிரியை நடப்பிக்கும் சக்தியினால் வழிநடத்தப்படுவதன் காரணமாக இந்த ஆவிக்குரிய செழுமையை அனுபவித்துக் களிக்கிறார்கள். அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னார்: “கர்த்தரே [யெகோவாவே, NW] ஆவியானவர். கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.” (2 கொரிந்தியர் 3:17) கடவுள் கொடுத்த சுயாதீனத்தின் நோக்கமென்ன? அதை முழுமையாக பயன்படுத்திக் கொள்வதற்கு நம்மிடம் தேவைப்படுவது என்ன?
கடவுளுக்கிருக்கும் சுயாதீனம்
3. கடவுளுக்கு எத்தகைய சுயாதீனம் இருக்கிறது? ஏன்?
3 யெகோவாவுக்கு மாத்திரமே முழுமையான சுயாதீனம் இருக்கிறது. அவர் சர்வ வல்லமையுள்ள கடவுளாகவும் சர்வலோக அரசராகவும் இருப்பதன் காரணமாக அவருடைய எந்தச் சிருஷ்டியும் அவருடைய சுயாதீனத்தை கட்டுப்படுத்திட முடியாது. உண்மையுள்ள மனிதனாகிய யோபு சொன்னவிதமாகவே, “அவரை மறிப்பவன் யார்? நீர் என்ன செய்கிறீர் என்று அவரைக் கேட்பவன் யார்?” (யோபு 9:12) அதேவிதமாகவே பாபிலோனிய அரசன் நேபுகாத்நேச்சாரும்கூட பின்வருமாறு ஒப்புக்கொள்ள வற்புறுத்தப்பட்டான்: “அவருடைய கையைத் தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை.”—தானியேல் 4:35.
4. யெகோவா தம்முடைய சுயாதீனத்தை வரம்புக்குள் வைத்திருப்பது எவ்வாறு?
4 என்றபோதிலும், யெகோவாவின் சொந்த நீதியுள்ள நியமங்கள் அந்த முழுமையான சுயாதீனத்தை வரம்புக்குள் வைக்கிறது. ஆபிரகாம் சோதோமில் குடியிருப்பவர்களைப் பற்றி கவலையை வெளியிட்டு பின்வருமாறு கேட்டபோது இது விளக்கப்பட்டது: “சர்வலோக நியாயாதிபதி நீதி செய்யாதிருப்பாரோ.” கடவுள் நீதியைச் செய்வதற்கு தமக்கிருக்கும் உத்தரவாதத்தை உணருவதை அவருடைய பதில் காண்பிக்கிறது. நீதிமான்களில் எவரேனும் அங்கு தங்கியிருந்திருப்பார்களேயானால் அவர் சோதோமை அழித்திருக்க மாட்டார். (ஆதியாகமம் 18:22-33) கடவுளுடைய அன்பும் ஞானமும் கோபிக்க அவரை தாமதிக்கச் செய்வதாலும் அவர் தன்னடக்கத்தை அப்பியாசிப்பதாலும் அவரும்கூட தம்முடைய சுயாதீனத்தை வரம்புக்குள் வைத்துக்கொள்கிறார்.—ஏசாயா 42:14.
மனித சுயாதீனத்தின் வரம்புகள்
5. மனித சுயாதீனத்தை கட்டுப்படுத்தும் ஒரு சில காரணக்கூறுகள் யாவை?
5 யெகோவா முழுமையான சுயாதீனத்தை உடையவராக இருந்தாலும், மற்ற அனைவருமே தங்கள் சுபாவம், திறமைகள் மற்றும் வசிக்கும் இடம், அதோடு பாவமுள்ள மனிதர்களின் தற்போதைய கட்டுப்படுத்தப்பட்ட வாழ்நாள் போன்ற காரணக்கூறுகளால் நிர்ணயிக்கப்படும் வரம்புக்குள் செயல்படுகிறார்கள். யெகோவா மனிதனுக்கு நிர்ணயித்திருந்த வட்டத்துக்குள்ளே செயல்படும்படியாக பரிபூரணமான ஒரு சுயாதீனத்தோடு கடவுள் மனிதனைப் படைத்தார். மனித சுயாதீனம் முழுமையாக இல்லாமல் கட்டுப்படுத்தப்பட்டதாக இருப்பதற்கு மற்ற பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
6. கடவுளுக்கு பதில் சொல்லும் பொறுப்பு, நம்முடைய சுயாதீனத்தோடு என்ன சம்பந்தமுடையதாக இருக்கிறது?
6 முதலாவதாக, மனித சுயாதீனம் கட்டுப்படுத்தப்பட்டதாக இருப்பதற்கு காரணம் கடவுள் மனிதனை அவருடைய நோக்கத்தை சேவிப்பதற்காக படைத்தார். யெகோவா ‘மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறார், ஏனென்றால் அவரே சகலத்தையும் சிருஷ்டித்தார், அவருடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயின, சிருஷ்டிக்கப்பட்டன.’ (வெளிப்படுத்துதல் 4:11) ஆகவே சரியாகவே மனிதர்களைக் கட்டுப்படுத்துகின்ற சட்டங்களை ஏற்படுத்தியிருக்கும் சிருஷ்டிகருக்கு மனிதன் பதில் சொல்லும் பொறுப்புள்ளவனாக இருக்கிறான். பூர்வ இஸ்ரவேலில் மோசேயின் நியாயப்பிரமாணத்தின் கீழ், கடவுளுடைய நாமத்தை துர்ப்பிரயோகம் செய்தாலும் அல்லது ஓய்வுநாள் சட்டத்தை மீறினாலும் தனிநபர்கள் மரணத்துக்குட்படுத்தப்பட வேண்டும் என்று அவர் சொல்லியிருந்தார். (யாத்திராகமம் 20:7; 31:14, 15; லேவியராகமம் 24:13-16; எண்ணாகமம் 15:32-36) கிறிஸ்தவர்களாக நாம் நியாயப்பிரமாணத்தின் கீழ் இல்லாவிட்டாலும், நம்முடைய சுயாதீனம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது, ஏனென்றால் நாம் நம்முடைய நியாயாதிபதியும், நியாயப்பிரமாணிகரும், ராஜாவுமாகிய யெகோவாவுக்கு பதில் சொல்லும் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறோம்.—ஏசாயா 33:22; ரோமர் 14:12.
7, 8. (எ) பெளதீக சட்டங்கள் எவ்விதமாக மனித சுயாதீனத்தைக் கட்டுப்படுத்துகின்றன? (பி) கடவுளின் வேறு எந்தச் சட்டங்கள் மனிதர்களாக நம்முடைய சுயாதீனத்தைக் கட்டுப்படுத்துகின்றன?
7 இரண்டாவதாக, கடவுளுடைய பெளதீக சட்டங்களின் காரணமாக மனித சுயாதீனம் கட்டுப்படுத்தப்பட்டதாயிருக்கிறது. உதாரணமாக, ஈர்ப்பு சக்தி விதி இருப்பதால், ஒரு மனிதன் தனக்கு தீங்கிழைத்துக் கொள்ளாமல் அல்லது தன் உயிரை மாய்த்துக்கொள்ளாமல் உயரமான ஒரு கட்டிடத்திலிருந்து கீழே குதிக்க முடியாது. தெளிவாகவே, கடவுளுடைய பெளதீக சட்டங்கள் சுயாதீனமாக மனிதன் ஒரு சில காரியங்களைச் செய்வதைக் கட்டுப்படுத்துகின்றன.
8 மூன்றாவதாக, கடவுளுடைய ஒழுக்கச் சட்டங்களின் காரணமாக மனித சுயாதீனம் கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கிறது. பவுல் கலாத்தியர் 6:7, 8-ல் சொன்ன காரியம் எவ்விதமாக உண்மையாக இருக்கிறது என்பதை பெரும்பாலும் நீங்கள் கவனித்திருக்கலாம்: “மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்திய ஜீவனை அறுப்பான்.” மறுக்க முடியாத வகையில், யெகோவா தேவனின் ஒழுக்கச் சட்டங்களும்கூட நம்முடைய சுயாதீனத்தைக் கட்டுப்படுத்துகின்றன, ஆனால் ஜீவனை அடைய நாம் அவைகளுக்குக் கீழ்ப்படிவது தேவையாக இருக்கிறது.
9. மனித சமுதாயத்தின் ஒரு பாகமாக நாமிருப்பது எவ்விதமாக நம்முடைய சுயாதீனத்தைக் கட்டுப்படுத்துகிறது?
9 நான்காவது, மனிதனின் சுயாதீனம் கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கிறது, ஏனென்றால் அவன் மனித சமுதாயத்தின் ஒரு பாகமாக இருக்கிறான். ஆகவே, அநியாயமாக மற்றவர்களுடைய சுயாதீனத்தோடு குறுக்கிடாத அளவில் மாத்திரமே அவன் அதைக் கொண்டிருக்க வேண்டும். கிறிஸ்தவர்கள் அரசாங்க “மேலான அதிகாரங்களுக்குக்” கீழ்ப்பட்டிருக்க வேண்டும், கடவுளுடைய சட்டங்களை நாம் மீற வேண்டும் என்பதாக அவை வற்புறுத்தாத வரை அவைகளுக்கு கீழ்ப்படிந்திருக்க வேண்டும். (ரோமர் 13:1; அப்போஸ்தலர் 5:29) உதாரணமாக, வரி செலுத்துவது, ஒரு வாகனத்தை நாம் ஓட்டுகின்ற வேகம் போன்றவற்றின் சம்பந்தமான சட்டங்களுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். “இராயனின்” இப்படிப்பட்ட சட்டங்களுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும் என்ற உண்மை, நமக்கு கடவுள் கொடுத்த சுயாதீனம் முழுமையான சுயாதீனம் அல்ல என்பதை மேலுமாக காட்டுகிறது.—மாற்கு 12:17; ரோமர் 13:7.
ஏன் சம்பந்தப்பட்ட சுயாதீனம்?
10, 11. யெகோவா ஏன் மனிதர்களுக்கு சம்பந்தப்பட்ட சுயாதீனத்தைக் கொடுத்தார்?
10 கடவுள் ஏன் மனிதர்களுக்குச் சம்பந்தப்பட்ட சுயாதீனத்தைக் கொடுத்தார்? ஒரு காரணம், தங்களுடைய நேர்த்தியான வார்த்தைகள் மற்றும் நடத்தையின் மூலமாக அவருக்கு கனத்தையும் துதியையும் கொண்டுவரக்கூடிய புத்திக்கூர்மையுள்ள சிருஷ்டிகளை சிருஷ்டிகர் பூமியில் கொண்டிருக்கும்படியாக ஆகும். மனிதர்கள் இதைச் செய்யமுடியும், ஆனால் மிருகங்களால் முடியாது. இயல்புணர்ச்சியால் வழிநடத்தப்படுவதால் மிருகங்கள் ஒழுக்க நடத்தையைப் பற்றி எதையும் அறியாதவையாக இருக்கின்றன. ஏதோ ஒரு காரியத்தைச் செய்யாதபடி ஒரு நாயை நீங்கள் பழக்குவிக்க முடியும், ஆனால், திருடுவது தவறு என்பதை அதற்கு உங்களால் கற்பிக்க முடியாது. செயல்திட்டம்வரையப்பட்டது போன்ற செயல்களைக் கொண்ட ஒரு மிருகம், கடவுளுக்கு துதியையும் கனத்தையும் கொண்டுவரும் தீர்மானங்களைச் செய்யமுடியாது, ஆனால் மனிதன் அன்பினாலும் போற்றுதலினாலும் தூண்டப்பட்டு தன்னை உண்டுபண்ணினவரை சேவிப்பதை தாராளமாக தெரிந்துகொள்ளலாம்.
11 கடவுள் இந்தச் சுயாதீனத்தை மனிதர்களுக்கு அவர்களுடைய நன்மைக்காகவும் மகிழ்ச்சிக்காகவும்கூட தருகிறார். ஆக்கத்திறனும் புதியன புனையும் திறனும் படைத்தவர்களாக, நற்செயலாற்ற விருப்பமுள்ளவர்களாகவும் பிறருடன் கூடிஉழைப்பவர்களாகவும் இருப்பதன் மூலம் அவர்கள் தங்களுடைய சம்பந்தப்பட்ட சுயாதீனத்தை அப்பியாசிக்கலாம். மனிதர்கள் வாழ்க்கைத் தொழில் மற்றும் குடியிருப்பிடம் போன்ற காரியங்களிலும்கூட தெரிவு செய்யும் சுயாதீனமுள்ளவர்களாக இருக்கின்றனர். இன்று, அந்தத் தெரிவு செய்யும் சுயாதீனத்தை அநேகமாக பொருளாதார மற்றும் அரசியல் காரணக்கூறுகள் கட்டுப்படுத்துகின்றன, ஆனால் மனிதகுலம் ஆரம்பத்தில் அவ்விதமாக சிருஷ்டிக்கப்பட்டது இதற்கு காரணமாக இல்லாமல் மனிதனுடைய பேராசையே இதற்கு காரணமாகும்.
12. மனிதகுலத்தில் பெரும்பான்மையானோர் ஏன் அடிமைத்தனத்தில் இருக்கிறார்கள்?
12 யெகோவா மனிதர்களுக்கு பெரிதான சுயாதீனத்தைக் கொடுத்த போதிலும், இன்று பெரும்பான்மையான மக்கள் ஏமாற்றத்தை உண்டுபண்ணும் அடிமைத்தனத்தில் இருக்கிறார்கள். என்ன நேரிட்டுவிட்டது? முதல் மனித தம்பதியான, ஆதாம் ஏவாள் கடவுள் கொடுத்த சுயாதீனத்தின் நோக்கத்தை தவறவிட்டு விட்டார்கள். தங்கள் சுயாதீனத்தில் தேவன் குறித்த எல்லைகளுக்கு அப்பால் சென்று அரசராகிய ஆண்டவராக யெகோவா அவர்கள் மீது செலுத்திய கடவுளுடைய நியாயமான ஆட்சியை எதிர்த்தனர். (ஆதியாகமம் 3:1-7; எரேமியா 10:10; 50:31) கடவுளை கனப்படுத்த தங்கள் சுயாதீனத்தை பயன்படுத்துவதில் திருப்தியற்றவர்களாய், எது சரி, எது தவறு என்பதை தாங்களாகவே தீர்மானிப்பதற்காக அவர்கள் சுயநலத்துக்காக அதை பயன்படுத்தி இவ்விதமாக யெகோவாவுக்கு விரோதமான கலகத்தில் சாத்தானைச் சேர்ந்துகொண்டார்கள். என்றாலும் அதிகமான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்வதற்குப் பதிலாக, பாவமுள்ள ஆதாமும் ஏவாளும் சோதனையான கட்டுப்பாடுகளுக்கும் அடிமைத்தனத்துக்கும் ஆளாக்கப்பட்டு குறைந்துகொண்டே போகும் சுயாதீனத்தையும் கடைசியாக மரணத்தையும் அனுபவித்தார்கள். அவர்களுடைய சந்ததி இந்தச் சுயாதீன இழப்பை சுதந்தரித்துக்கொண்டது. “எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களா”னோம். “பாவத்தின் சம்பளம் மரணம்.”—ரோமர் 3:23; 5:12; 6:23.
13. மனிதர்களை சாத்தானால் ஏன் அடிமைப்படுத்த முடிந்திருக்கிறது?
13 ஏதேனில் ஏற்பட்ட கலகத்தின் காரணமாக, ஆதாமும் அவனுடைய சந்ததியும் பிசாசாகிய சாத்தானுக்கும்கூட அடிமையானார்கள். ஏன், “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது”! (1 யோவான் 5:19) தன்னுடைய மேம்பட்ட வல்லமை மற்றும் திறமையின் காரணமாகவே சாத்தானால் வஞ்சிக்கவும் கடவுளிடமிருந்து நட்பை முறித்துக்கொண்ட எல்லா மனிதகுலத்தையும் அடிமைகளாக ஆக்கவும் முடிந்திருக்கிறது. மேலுமாக, தன்னலமுள்ள மனிதர்கள் தங்களுக்கே கேடுண்டாக உடன் மனிதர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறார்கள். (பிரசங்கி 8:9) ஆகவே மனிதகுலம் பொதுவில் இப்பொழுது பாவத்துக்கும் மரணத்துக்கும், சாத்தானுக்கும் அவனுடைய பேய்களுக்கும், உலகின் அரசியல், பொருளாதார மற்றும் மத அமைப்புகளுக்கும் அடிமைப்பட்டிருக்கிறது.
மெய்யான சுயாதீனம் சாத்தியமாக்கப்பட்டிருக்கிறது
14. மெய்யான சுயாதீனத்துக்கான மனிதகுலத்தின் நம்பிக்கை எதோடு தொடர்புடையதாய் இருக்கிறது?
14 பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் பிசாசிடமிருந்தும் அவனுடைய உலகத்திலிருந்தும் சுயாதீனத்தை பெற்றுக்கொள்வது, கடவுள் தம்முடைய சொந்த சர்வலோக அரசுரிமையின் நியாயமானத் தன்மையின் சம்பந்தமாக பிரச்னையை தீர்ப்பதற்கான அவருடைய தீர்மானத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது. இந்தப் பிரச்னையை சாத்தான் எழுப்பிய காரணத்தால், யெகோவா அவன் இருக்கும்படியாக அனுமதித்திருக்கிறார். பார்வோனை ஒரு காலம் வரையாக இருக்க அனுமதித்தது போலவே இது இருக்கிறது. யெகோவா அவருடைய வல்லமையை முழுமையாக விளங்கப்பண்ணுவதற்காகவும் அவருடைய பெயர் பூமி முழுவதிலும் அறிவிக்கப்படுவதற்காகவும் இது இருந்தது. (யாத்திராகமம் 9:15, 16) கடவுள் சீக்கிரத்தில் சர்வலோகத்தின் அரசராக தம்மை நியாயநிரூபணஞ் செய்து சாத்தான், ஆதாம் மற்றும் ஏவாளின் கலகத்தின் மூலமாக அவருடைய பரிசுத்த நாமத்தின் மீது கொண்டுவரப்பட்ட நிந்தையை அகற்றுவதன் மூலம் அதை பரிசுத்தப்படுத்துவார். இவ்விதமாக, யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்கள் பாவம் மற்றும் மரணத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, கடவுள் கொடுத்த சுயாதீனப் புதிய உலகிற்குள் கொண்டுவரப்படுவார்கள்.—ரோமர் 8:19-23.
15. மனிதகுலத்துக்கு சுயாதீனத்தை மீட்டுத்தருவதில் இயேசு என்ன பங்கை வகித்தார்?
15 மனிதகுலத்துக்கு சுயாதீனத்தை மீட்டுத்தர, கடவுள் தம்முடைய குமாரனை பூமிக்கு ஒரு மனிதனாக அனுப்பினார். தம்முடைய பரிபூரண மனித ஜீவனை மனமுவந்து அளிப்பதன் மூலம், கடவுளுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து மனிதகுலத்தை விடுதலையாக்க ஆதாரமாக இருக்கும் மீட்பின் பலியை அளித்தார். (மத்தேயு 20:28) அவர் சுயாதீன செய்தி ஒன்றையும்கூட அறிவித்தார். அவருடைய ஊழியத்தின் ஆரம்பத்தில், பின்வரும் வார்த்தைகளை அவர் தமக்கே பொருத்தினார்: “கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம் பண்ணினார்; இருதயம் நொருங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும், . . . என்னை அனுப்பினார்.”—ஏசாயா 61:1, 3; லூக்கா 4:16-21.
16. மெய்யான சுயாதீனத்தைப் பெற முதல் நூற்றாண்டு யூதர்கள் என்ன படிகளை எடுக்க வேண்டியவர்களாக இருந்தனர்?
16 அந்தச் சுயாதீனத்தை மக்கள் எவ்விதமாக பெற முடியும்? இயேசு சொன்னார்: “நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.” இவ்விதமாக, இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் ஆவிக்குரிய சுயாதீனத்தை அனுபவித்துக் களிப்பவர்களாக ஆகியிருக்கிறார்கள். (யோவான் 8:31, 32, 36) மேலுமாக, இயேசு ரோம அதிபதி பொந்தியு பிலாத்துவிடம் சொன்னார்: “சத்தியத்தைக் குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான்.” (யோவான் 18:37) இயேசு பிரசங்கித்தும் முன்மாதிரியாக இருந்தும் காண்பித்த சத்தியத்தை ஏற்றுக்கொண்ட யூதர்கள் தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பி, தங்கள் தவறான பாதையை திருத்திக்கொண்டு, யெகோவாவுக்குத் தங்களை அளித்து, இயேசு செய்தது போலவே முழுக்காட்டப்பட்டார்கள். (மத்தேயு 3:13-17; அப்போஸ்தலர் 3:19) இவ்விதமாக அவர்கள் கடவுள் கொடுத்த சம்பந்தப்பட்ட சுயாதீனத்தை அனுபவிக்கிறவர்களானார்கள்.
17. யெகோவா தம்முடைய ஊழியர்களுக்கு ஏன் சுயாதீனத்தைக் கொடுக்கிறார்?
17 யெகோவா தம்முடைய உண்மையுள்ள ஊழியர்களுக்கு முக்கியமாக தம்முடைய சொந்த அரசுரிமை நியாயநிரூபணஞ் செய்யப்படுவதற்காக சுயாதீனத்தை கொடுக்கிறார், ஆனால் அவர்களுடைய செளகரியத்திற்காகவும் அல்லது நன்மைக்காகவும்கூட அவ்விதமாகச் செய்கிறார். அவர், ஆசாரியர்களின் ஒரு ராஜ்யமாக, அவருடைய சாட்சிகளாக அவர்கள் தம்மை மகிமைப்படுத்தும்படியே இஸ்ரவேலரை எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தார். (யாத்திராகமம் 19:5, 6; ஏசாயா 43:10-12) அதேவிதமாகவே, முக்கியமாக தம்முடைய ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்காகவும் மெய் வணக்கத்தை மீண்டும் கொண்டுவருவதற்காகவுமே யெகோவா பாபிலோனில் நாடுகடத்தப்பட்டிருந்த தம்முடைய மக்களை வெளியே கொண்டுவந்தார். (எஸ்றா 1:2-4) நாடுகடத்தப்பட்டிருந்தவர்கள் தங்களுடைய சொந்த பொருளாதார செளகரியங்களில் மாத்திரமே அக்கறையுள்ளவர்களாக இருந்த போது, கடவுளுக்கு முன்பாக அவர்களுக்கிருந்த உத்தரவாதங்களைக் குறித்து அவர்களை எச்சரிப்பதற்காக யெகோவா தம்முடைய தீர்க்கதரிசிகளாகிய ஆகாய் மற்றும் சகரியாவை அனுப்பினார். இவ்விதமாக தங்களுக்கு கடவுள் கொடுத்த சுயாதீனத்தை சரியான மனக்காட்சியில் வைத்தது கடவுளுடைய மகிமைக்காகவும், அவருடைய மக்களின் செளகரியத்துக்காகவும் நலனுக்காகவும் ஆலயம் கட்டி முடிக்கப்படுவதில் விளைவடைந்தது.
கடவுள் கொடுத்த சுயாதீனத்தின் நோக்கத்தை தவறவிடாதிருத்தல்
18. யெகோவாவின் நவீன நாளைய ஊழியர்கள் தங்களுக்கு கடவுள் கொடுத்த சுயாதீனத்தின் நோக்கத்தை தவறவிடாமல் இருந்திருக்கிறார்கள் என்று ஏன் சொல்லப்படலாம்?
18 கடவுளுடைய நவீன நாளைய ஊழியர்களைப் பற்றி என்ன? ஓர் அமைப்பாக, அவர்கள் கடவுள் கொடுத்த சுயாதீனத்தின் நோக்கத்தை தவறவிடாமல் இருந்திருக்கிறார்கள். 1870-களில் அவர்கள் பாபிலோனிய பிழைகளிலிருந்து விடுவிக்கப்படவும் கூடுதலான கிறிஸ்தவ சுயாதீனத்தை அனுபவிக்கவும் ஆரம்பித்தார்கள். இது நீதிமொழிகள் 4:18-க்கு இணக்கமாக இருந்தது. அது சொல்கிறது: “நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும்.” என்றபோதிலும், கடவுளுடைய பூர்வீக மக்கள் ஒரு காலத்துக்கு பாபிலோனிய சிறையிருப்புக்குள் கொண்டு செல்லப்பட்டது போல, 1918-ல் யெகோவாவின் ஊழியர்கள் ஓரளவு மகா பாபிலோனின் சிறையிருப்புக்குள் கொண்டுவரப்பட்டார்கள். (வெளிப்படுத்துதல் 17:1, 2, 5) அடையாள அர்த்தமுள்ள “இரண்டு சாட்சிகள்” ஆவிக்குரியவிதமாக மரித்தவர்களாக கிடந்த போது, அந்தப் பொய் மத உலக பேரரசின் உறுப்பினர்கள் களிகூர்ந்தார்கள். ஆனால் கடவுளுடைய தகுதியற்ற தயவின் மூலமாக, 1919-ல் அபிஷேகம் பண்ணப்பட்ட அவருடைய ஊழியர்கள் புத்துயிர் பெற்று ஆவிக்குரியபிரகாரமாக விடுதலைப்பெற்றவர்களானார்கள். (வெளிப்படுத்துதல் 11:3, 7-11) தங்களுக்குக் கடவுள் கொடுத்த சுயாதீனத்தை பயன்படுத்திய போது அவர்கள் மகா உன்னதமானவரின் வைராக்கியமுள்ள சாட்சிகளானார்கள். ஆகவே, அவர்கள் 1931-ல் யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டது எத்தனை பொருத்தமாக இருந்தது! (ஏசாயா 43:10-12) குறிப்பாக 1935 முதற்கொண்டு, பூமியின் மீது நித்திய ஜீவனைப் பெற எதிர்பார்த்திருக்கும் “திரள் கூட்டத்தார்” அபிஷேகம் பண்ணப்பட்ட சாட்சிகளை சேர்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களும்கூட தங்களுக்கு கடவுள் கொடுத்த சுயாதீனத்தின் நோக்கத்தை தவறவிடாதிருக்கிறார்கள்.—வெளிப்படுத்துதல் 7:9-17.
19, 20. (எ) யெகோவாவின் மக்கள் கடவுள் கொடுத்த சுயாதீனத்தை நல்லவிதமாக பயன்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க வழி என்ன? (பி) யெகோவாவின் சாட்சிகள் வேறு என்ன குறிப்பிடத்தக்க விதத்தில் கடவுள் தங்களுக்குக் கொடுத்திருக்கும் சுயாதீனத்தை நல்லவிதமாக பயன்படுத்துகிறார்கள்?
19 யெகோவாவின் மக்கள் கடவுள் கொடுத்த சுயாதீனத்தை இரண்டு விசேஷமாக குறிப்பிடத்தக்க வழிகளில் நல்லவிதமாக பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு காரியமானது, அவர்கள் நேர்மையான ஒரு போக்கை தொடருவதற்காக அதை பயன்படுத்துகிறார்கள். (1 பேதுரு 2:16) அவர்கள் என்னே ஒரு நற்பெயரை உடையவர்களாக இருக்கின்றனர்! உதாரணமாக, சுவிட்ஸர்லாந்திலுள்ள சூரிச்சில் ஒரு மனிதன் ஒரு சமயம் ராஜ்ய மன்றத்திற்குள் நுழைந்து, தான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராவதற்கு விரும்புவதாக தெரிவித்தார். ஏன் என்று கேட்கப்பட்டபோது, அவருடைய சகோதரி ஒழுக்கக்கேட்டுக்காக சபை நீக்கம் செய்யப்பட்டிருந்த ஒரு சாட்சியாக இருந்தாள் என்று அவர் தெரிவித்தார். அவர் சொன்னார்: ‘நான் சேர்ந்துகொள்ள விரும்பும் அமைப்பு இதுவே—மோசமான நடத்தையை சகித்துக்கொள்ளாத ஒன்று.’ நல்ல காரணத்தோடுதானே, புதிய கத்தோலிக்க என்ஸைக்ளோபீடியா, “உலகிலேயே மிகச் சிறந்த நடத்தையுள்ள ஒரு தொகுதி” என்ற நற்பெயரை யெகோவாவின் சாட்சிகள் பெற்றிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது.
20 யெகோவாவின் சாட்சிகள் இயேசு செய்தது போலவே ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கிக்கும்படியான தங்கள் பொறுப்பை நிறைவேற்றுவதன் மூலமும்கூட கடவுள் கொடுத்த தங்களுடைய சுயாதீனத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள். (மத்தேயு 4:17) வாய் மூலமாகவும் அச்சடிக்கப்பட்ட பக்கங்களின் மூலமாகவும் முறைப்படியாகவும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதும் அவர்கள் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள். அவ்விதமாகச் செய்கையில், தங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்திக் கொண்டு தங்கள் நம்பிக்கையை தெளிவடையச் செய்வதன் மூலம் தங்களுக்கு அதிக நன்மைசெய்து கொள்கிறார்கள். மேலுமாக, அவர்களுடைய வேலை அவர்களையும் அவர்களுக்கு செவிசாய்க்கிறவர்களையும் இரட்சிப்பதற்கு உதவிசெய்கிறது. (1 தீமோத்தேயு 4:16) இந்த வேலையைக் குறித்து, ஊக்கமுள்ள சமய இயக்கங்கள் புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “தங்கள் மதத்துக்காக சாட்சிகளைப் போன்று அத்தனை கடினமாக உழைப்பவர்களை வேறு எந்தத் தொகுதியிலுள்ள உறுப்பினர்களிலும் காண்பது அரிது.”
21. யெகோவா தம்முடைய மக்களின் ஊழியத்தை ஆசீர்வதித்து வருகிறார் என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?
21 நமக்குக் கடவுள் கொடுத்த சுயாதீனத்தின் நோக்கத்தை நாம் நிறைவேற்றுகையில் யெகோவா நம்மை எப்படி ஆசீர்வதித்துவருகிறார்! கடந்த ஆண்டு வெளி ஊழிய அறிக்கையிலிருந்து இதைக் காணமுடிகிறது—நாற்பது லட்சத்துக்கும் மேலான உச்ச எண்ணிக்கையான ராஜ்ய பிரஸ்தாபிகளும் இயேசுவின் மரண ஞாபகார்த்த ஆசரிப்புக்கு வந்திருந்த ஒரு கோடிக்கும் மேலானவர்களும். ஒரு சுற்றாய்வில், ஐயர்லாந்து தொடர்ந்து 29 மாதங்கள் பிரஸ்தாபிகளில் உச்ச நிலைகளைக் கொண்டிருந்தது; மெக்ஸிக்கோ 80 மாதங்களில் 78 மாதங்கள் உச்ச நிலைகளையும்; ஜப்பான் ஒரே வரிசையாக 153 உச்சநிலைகளையும் கொண்டிருந்தது!
உங்களுக்கு கடவுள் கொடுத்த சுயாதீனத்தை நல்லவிதமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்
22. நம்மைநாமே கேட்டுக்கொள்ளக்கூடிய சிந்தனையைத் தூண்டும் ஒரு சில கேள்விகளின் சாராம்சம் என்ன?
22 யெகோவாவின் ஒப்புக்கொடுத்த சாட்சிகளில் ஒருவராக நீங்கள் இருந்தால், கடவுள் உங்களுக்குக் கொடுத்திருக்கும் சுயாதீனத்தை நல்லவிதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்களா? நாம் ஒவ்வொருவரும் நம்மைநாமே இவ்விதமாக கேட்டுக்கொள்ளலாம்: ‘தவறான நடத்தையின் மூலமாக எவரையேனும் இடறலடையச் செய்வதை தவிர்ப்பதற்கு எனக்கு கடவுள் கொடுத்த சுயாதீனத்தை பயன்படுத்த நான் கவனமாக இருக்கிறேனா? கடவுளுடைய சட்டத்தை முதலில் வைத்தபோதிலும் இராயனுடைய சட்டங்களுக்கு நான் மனச்சாட்சிப்படி கீழ்ப்படிகிறேனா? நான் சபை மூப்பர்களோடு முழுமையாக ஒத்துழைக்கிறேனா? நற்செய்தியை பிரசங்கிப்பதில் எனக்கு கடவுள் கொடுத்த சுயாதீனத்தை நான் முழுமையாக பயன்படுத்துகிறேனா? எப்பொழுதும் நான் ‘கர்த்தருடைய கிரியையிலே செய்வதற்கு அதிகத்தைக்’ கொண்டிருக்கிறேனா? என்னுடைய ஊழியத்தை விரிவாக்குவதன் மூலம், சபையில் கூடுதலான உத்தரவாதங்களை முயன்று அடைவதன் மூலம், அல்லது முழு நேர சேவைக்காக கடவுள் கொடுத்த சுயாதீனத்தை நான் மேலான விதத்தில் உபயோகிக்க முடியும் போது, உலகப்பிரகாரமான ஒரு வாழ்க்கைப் பணியை ஆர்வத்தோடு நாடிக்கொண்டிருக்கிறேனா?’—1 கொரிந்தியர் 15:58.
23. கடவுள் கொடுத்த சுயாதீனத்தின் நோக்கத்தை நாம் தவறவிடாதபடிக்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
23 நாம் அனைவருமே “கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்”பார்ப்போமாக. (சங்கீதம் 34:8) அவருடைய ராஜ்யத்தை வைராக்கியமாக அறிவிப்பதன் மூலம் நாம் அவரில் நம்பிக்கை வைத்து, அவருடைய சட்டங்களுக்கு இசைவாக நடந்து, அவருடைய பரிசுத்த நாமத்தை மகிமைப்படுத்துவோமாக. ‘பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்’ என்பதை நினைவில் வையுங்கள். (2 கொரிந்தியர் 9:6) ஆகவே, நாம் யெகோவாவுக்கு முழுஇருதய சேவையைச் செய்து நமக்கு கடவுள் கொடுத்த சுயாதீனத்தின் நோக்கத்தை நாம் தவறவிடவில்லை என்பதை காண்பிப்போமாக. (w92 3/15)
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻கடவுள் என்ன விதமான சுயாதீனத்தை உடையவராக இருக்கிறார்?
◻மனித சுயாதீனம் என்ன வரம்புகளை உடையதாக இருக்கிறது?
◻மெய்யான சுயாதீனம் எவ்விதமாக சாத்தியமாக்கப்பட்டது?
◻கடவுள் கொடுத்த சுயாதீனத்தின் நோக்கத்தை தவறவிடுவதை தவிர்ப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
[பக்கம் 9-ன் படம்]
ஈர்ப்பு சக்தி விதி போன்ற காரணக்கூறுகளால் மனித சுயாதீனம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது