ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
யெகோவா உண்மையுள்ள ஓர் இளைஞனுக்கு பலனளிக்கிறார்
உண்மையுள்ள இளைஞர்கள் யெகோவாவின் பார்வையில் மிகவும் விலையேறப் பெற்றவர்கள். உண்மையுள்ள ஓர் இளம் மனிதனின் பின்வரும் அனுபவம், யெகோவாவை சேவிக்கையில் தங்கள் உத்தமத்தைக் காத்துக்கொள்ள மற்ற இளைஞர்களை உற்சாகப்படுத்த வேண்டும்.
ஆர்ஜென்டீனாவில், ஒரு 11-வயது பையனும் அவன் தம்பியும் தங்கள் பாட்டிமாவோடு நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் என்ற புத்தகத்தைப் படித்தார்கள். உடனடியாக பையன்களின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து ராஜ்ய மன்றத்தில் கூட்டங்களுக்கு அவர்கள் செல்வதை தடை செய்தார்கள். கொஞ்ச காலமாக, கூட்டங்களுக்கு செல்வதற்காக, பையன்கள் குளியலறை ஜன்னல் வழியாக வெளியேறி உள்முற்றத்தில் குதித்து, அங்கிருந்து மதில் வழியாக பக்கத்து வீட்டு முற்றத்துக்குச் சென்று ராஜ்ய மன்றத்துக்கு சென்றுகொண்டிருந்தார்கள். பின்னர் அவர்கள் யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்குச் சென்று கொண்டிருப்பதை யாரோ ஒருவர் அவர்களுடைய அம்மாவிடம் சொல்லிவிட்டார். அம்மா அவர்களை அடிப்பதாக மிரட்டினார்கள், இதனால் இளையப் பையன் பயந்துபோய் படிப்பதை நிறுத்திவிட்டான். ஆனால் மூத்தவன் உறுதியாக இருந்தான். பெற்றோருக்குத் தெரியாமலே அவன் ஐந்து வருடங்கள் கூட்டங்களுக்கு போய்கொண்டிருந்தான்.
அவனுக்கு 16 வயதாக இருக்கையில், உயர்நிலைப் பள்ளியில் அவனுடைய சொந்த ஊரில் இல்லாத ஒரு பயிற்சியை எடுக்க அவன் விரும்பினான். வீட்டுக்கு வெளியே இருப்பது சத்தியத்தை தொடருவதற்கு அவனுக்கு அதிகமான சுதந்திரத்தை அளிக்கும். அவனுடைய பெற்றோர் அவனை அனுப்ப ஒப்புக்கொண்டனர். மூன்று மாதங்களுக்கு எல்லாமே சுமுகமாக இருந்தது. பின்னர் பள்ளி முதல்வர் அவனுடைய பெற்றோருக்கு, அவர்களுடைய மகன் கொடியை வணங்குவதோ அல்லது தேசீய கீதத்தை பாடுவதோ இல்லை என்பதை எச்சரிக்கையாக தெரியப்படுத்தினார். முதல்வர், அவனுடைய பெற்றோர், காரியதரிசி, ஒரு வக்கீல், பத்து பேராசிரியர்கள் ஆகியவர்களுக்கு முன்பாக, அந்த இளம் மனிதன் மனசாட்சிப்படி தான் ஏன் இந்தச் செயல்களைச் செய்ய முடியாது என்பதைக் குறித்து மிகச் சிறந்த ஒரு சாட்சியை கொடுக்கக்கூடியவனாக இருந்தான். (யாத்திராகமம் 20:4, 5) பெற்றோர் ஆத்திரமடைந்தனர். இதற்கு காரணம் பாட்டிமா என்று நினைத்து அவனுடைய அம்மா பாட்டிமாவை சுட்டுவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு ஒரு சுழல்துப்பாக்கியை வாங்கினாள். ஆனால் அவர்களைத் தனியாக அவளால் ஒருபோதும் பார்க்க முடியவில்லை.
பின்னால், குடும்ப நண்பரின் ஆலோசனைப்படியும், பள்ளி முதல்வரின் ஒப்புதலோடும் பெற்றோர் அவனை மனநோயாளிகளுக்கான ஒரு மருத்துவமனையில் சேர்க்க தீர்மானித்தார்கள். மனோதத்துவ சிகிச்சையானது அவனுடைய விசுவாசத்தைக் கைவிடும்படி செய்விக்கும் என்று அவர்கள் நினைத்தனர். மருத்துவமனை பணியாட்கள் அந்தப் பையனை ஒரு காரில் 100 கிலோமீட்டருக்கு அப்பால் அழைத்துச் சென்று அவன் சுயநினைவை இழக்கும்வரை இன்சுலினையும் மற்ற மருந்துகளையும் அதிகமான அளவில் அவனுக்குச் செலுத்தினார்கள். நினைவு திரும்பிய போது, அவன் முழுவதுமாக குழம்பிப் போயிருந்தான். எவரையும் அவனுக்குத் தெரியவில்லை, ஓரளவு நினைவிழப்பு அவனுக்கு ஏற்பட்டது. கவனமான பல சோதனைகளுக்குப் பின்பு மருத்துவர்களால் எந்த மனகோளாறையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் மருத்துவமனை தொடர்ந்து சிகிச்சையளித்து வந்தது. சுயநினைவிலிருக்கையில், இந்தப் பையன் தன்னை கைவிட்டுவிடாதிருக்கும்படியாக தொடர்ந்து யெகோவாவிடம் ஜெபித்து, சகித்திருப்பதற்கு பெலத்துக்காக அவரிடம் மன்றாடினான். யெகோவா அவனை நிச்சயமாகவே பாதுகாத்தார், கடைசியாக அவன் மருத்துவமனையிலிருந்து அனுப்பப்பட்டான்.
ஒரு சமயம் பள்ளி முதல்வர் அவன் முன்னதாக கூறியவற்றை தவறென ஏற்க தயாராக இருக்கிறானா என்பதாக இளம் மனிதனைக் கேட்டார். அவன் இல்லை என்று சொன்ன போது, முதல்வர் அவன் முன்னிலும் அதிக வெறிபிடித்தவனாக இருந்த காரணத்தால் மருத்துவ மனைக்குத் திரும்ப அனுப்பி வைக்குமாறு பெற்றோரிடம் சொன்னார். பெற்றோர் அவனை உணவு வசதியுடைய ஓர் இல்லத்துக்கு அழைத்துச் சென்று அவ்வில்லத் தலைவியிடம் அவன் யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்குச் செல்லாதவாறு பார்த்துக்கொள்ளுமாறு உறுதியாகச் சொன்னார்கள். பெற்றோர் புறப்பட்டுச் சென்ற பிற்பாடு அந்தப் பையனுக்கு ஏற்பட்ட ஆச்சரியம் தான் என்னே! உணவு வசதியுடைய இல்லத்தின் சொந்தக்காரர்கள் யெகோவாவின் சாட்சிகளாக இருந்தனர்! கடைசியாக, மருத்துவர்கள் தங்களிடம் பொய் சொல்லியிருப்பது பெற்றோருக்கு உறுதியாக தெரியவந்த போது, பெற்றோர் மனோதத்துவ சிகிச்சையை விட்டுவிட்டார்கள். இதற்கிடையில் ஆர்ஜென்டீனாவின் உச்ச நீதிமன்றம், கொடி வணக்கம் செய்யாமலிருப்பதற்காக யெகோவாவின் சாட்சிகளுடைய பிள்ளைகளை பள்ளியிலிருந்து வெளியேற்ற முடியாது என்று தீர்ப்பு வழங்கியது.
இந்தச் சோதனைகள் இந்த உண்மையுள்ள இளைஞனுக்கு பிரயோஜனமாயிருந்ததா? ஆம். அவன் சொல்கிறான்: “மருத்துவர்கள், பேராசிரியர்கள், பள்ளி மாணவர்கள், பெற்றோர், உறவினர், உண்மையில் முழு நகரத்துக்குமே விரிவான ஒரு சாட்சியை என்னால் கொடுக்க முடிந்திருக்கிறது. என்னுடைய பெற்றோர் ஓரளவு சாதுவாகிவிட்டிருக்கின்றனர். சாட்சிகளைப் பற்றி மேம்பட்ட ஓர் அபிப்பிராயத்தைக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது என்னுடைய இளமைப் பருவத்தை பின்னோக்கிப் பார்க்கும் போது, தமக்கு உத்தமமுள்ளவர்களாய் நிலைத்திருக்கும் எவரையும் கவனித்துக் கொள்வதில் நம்முடைய கடவுள் எவ்வளவு அதிசயமானவராகவும் கனிவுள்ளவராகவும் இருக்கிறார் என்பதை காணமுடிகிறது. சங்கீதம் 27:10-ல் சங்கீதக்காரன் சொன்னவண்ணமாகவே இருக்கிறது: ‘என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் [யெகோவா, NW] என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.’”
இந்த இளம் மனிதனுக்கு இப்பொழுது 23 வயதாகிறது, அவன் திருமணம் செய்து கொண்டு, யெகோவாவின் ஊழியத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறான். உண்மையாகவே யெகோவாவின் தாங்கும் வல்லமைக்கு எல்லையே இல்லை.—சங்கீதம் 55:22. (w92 3/1)