நினைவுகூர வேண்டிய நாள்
“என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்.”—யோவான் 16:33.
1, 2. சரித்திரத்தில் எந்த ஒரு நாள் மற்ற எல்லா நாட்களையும்விட மிகவும் முக்கியத்துவமுடையதாய் இருக்கிறது? ஏன்?
இன்று உலகம், சமாதானத்தைக் குறித்து சொல்ல அதிகத்தைக் கொண்டிருக்கிறது. இரண்டாம் உலகப் போரின் முடிவில், சமாதானம் ஐ.வெ (V–E) நாளோடும் ஜ.வெ. (V–J) நாளோடும் சம்பந்தப்படுத்தப்பட்டது.a ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்மஸ், மக்களை ‘பூமியின் மீது சமாதானம்’ குறித்து சிந்திக்கச் செய்கிறது. (லூக்கா 2:14) ஆனால் மனித சரித்திரம் முழுவதிலுமாக மற்ற எல்லாவற்றையும்விட மிகவும் முக்கியத்துவமுடையதாக இருக்கும் ஒரு நாள் இருக்கிறது. அதுவே மேலே சொல்லப்பட்ட வார்த்தைகளை இயேசு கிறிஸ்து பேசிய அந்த நாளாகும். அதுவே மனிதன் இங்கே வாழ்ந்து வந்திருக்கும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட நாட்களில், மனிதகுலத்தின் நித்திய நன்மைக்காக அதன் போக்கையே முற்றிலுமாக மாற்றிய அந்த ஒரே நாளாகும்.
2 அந்த மிக முக்கியமான நாள் யூத நாட்காட்டியில் நிசான் 14 ஆகும். நம்முடைய பொது சகாப்தத்தில் 33-ம் ஆண்டில் நிசான் 14, ஏப்ரல் 1-ம் தேதி சூரிய மறைவின் போது ஆரம்பமானது. மிகவும் முக்கியத்துவமுள்ள அந்தப் புதிய சகாப்தம்-படைத்த நாளின் சம்பவங்களை நாம் சிந்திப்போமாக.
நிசான் 14!
3. இந்த கடைசி மணிநேரங்களை இயேசு எவ்வாறு பயன்படுத்தினார்?
3 ஒளி மங்கும் போது, யெகோவா காலங்களையும் வேளைகளையும் தீர்மானிக்கிறார் என்பதை நினைப்பூட்டும் வகையில் அழகிய முழு நிலா ஒன்று ஒளி வீசுகிறது. (அப்போஸ்தலர் 1:7) யூதர்களின் வருடாந்தர பஸ்காவை கொண்டாடுவதற்காக இயேசுவும் அவருடைய 12 அப்போஸ்தலர்களும் கூடியிருக்கும் அந்த மேலறையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது? இயேசு ‘இவ்வுலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போவதற்காக’ ஆயத்தஞ் செய்கையில், ‘தம்முடையவர்களிடத்தில் முடிவுபரியந்தமும் அன்பு காண்பிக்கிறார்.’ (யோவான் 13:1) இதை அவர் எவ்விதமாகச் செய்கிறார்? வார்த்தையின் மூலமும் முன்மாதிரியின் மூலமும், இயேசு, உலகத்தை ஜெயிக்க சீஷர்களுக்கு உதவக்கூடிய பண்புகளை அவர்களுடைய மனதில் தொடர்ந்து பதிய வைக்கிறார்.
மனத்தாழ்மையையும் அன்பையும் தரித்துக்கொள்ளுங்கள்
4. (எ) இயேசு எவ்விதமாக அடிப்படையான ஒரு பண்பை தம்முடைய சீஷர்களுக்கு செயலின் மூலம் விளக்கிக்காட்டினார்? (பி) மனத்தாழ்மையின் முக்கியத்துவத்தை பேதுரு கற்றுக்கொண்டார் என்பது நமக்கு எப்படித் தெரியும்?
4 அப்போஸ்தலர்கள் இன்னும் ஓரளவு பேராசையான பொறாமையையும் பெருமையையும் தங்களிடமிருந்து களைய வேண்டியவர்களாக இருந்தனர். ஆகவே இயேசு ஒரு சீலையை அரையில் கட்டிக்கொண்டு அவர்களுடைய கால்களை கழுவ ஆரம்பிக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவமண்டலத்தின் போப், ரோமில் நடித்துக் காட்டுகின்ற ஒரு போலி மனத்தாழ்மையின் வெளிக்காட்டாக இது இல்லை. இல்லை நிச்சயமாகவே! மெய்யான மனத்தாழ்மை என்பது, ‘மற்றவர்களை தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணுகின்ற தாழ்மையான சிந்தையினால்’ தன்னையே கொடுப்பதாக இருக்கிறது. (பிலிப்பியர் 2:2-5) முதலில் பேதுரு குறிப்பை உணர்ந்துகொள்ளாமல், இயேசு தன்னுடைய காலை கழுவ அனுமதிக்க மறுக்கிறார். திருத்தப்படும் போது, அவர் தன் முழு சரீரத்தையும் இயேசு கழுவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார். (யோவான் 13:1-10) என்றபோதிலும் பேதுரு பாடத்தை கற்றுக்கொண்டிருக்க வேண்டும். பல வருடங்களுக்குப் பின்னர், மற்றவர்களுக்கு அவர் சரியாக புத்திமதி கொடுப்பதை நாம் காண்கிறோம். (1 பேதுரு 3:8, 9; 5:5) இன்று நாம் அனைவரும் மனத்தாழ்மையோடு கிறிஸ்துவுக்காக ஊழியஞ்செய்வது எவ்வளவு முக்கியமாக இருக்கிறது!—நீதிமொழிகள் 22:4; மத்தேயு 23:8-12-ஐயும் பார்க்கவும்.
5. இயேசுவின் எந்தக் கட்டளை மேலுமான ஒரு முக்கிய பண்பின் முக்கியத்துவத்தைக் காண்பித்தது?
5 பன்னிரண்டு பேரில் ஒருவர், இயேசுவின் புத்திமதியிலிருந்து நன்மையடையவில்லை. இது யூதாஸ்காரியோத்து. பஸ்கா போஜனம் நடந்துகொண்டிருக்கையில், இயேசு ஆவியில் கலக்கமடைந்து, காட்டிக்கொடுப்பவனாகிய யூதாஸை அடையாளங் காட்டி, அவனை வெளியே அனுப்பிவிடுகிறார். இதற்கு பின்தானே இயேசு தம்முடைய 11 உண்மையுள்ள சீஷர்களிடம் இவ்வாறு சொல்கிறார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்தது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” (யோவான் 13:34, 35) இயேசுவின் சொந்த உச்ச உயர்தரமான முன்மாதிரியால் காண்பிக்கப்பட்டபடி இது உண்மையிலேயே ஒரு புதிதான கட்டளையாகும்! அவருடைய பலிக்குரிய அந்த மரண மணிநேரம் நெருங்குகையில், இயேசு குறிப்பிடத்தக்க அன்பை வெளிக்காட்டுகிறார். அவர் அந்த ஒவ்வொரு மதிப்புள்ள நிமிடத்தையும் சீஷர்களுக்கு கற்பிக்கவும் அவர்களை உற்சாகப்படுத்தவும் பயன்படுத்துகிறார். பின்னால் அன்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறவராய் அவர் சொன்னதாவது: “நான் உங்களில் அன்பாயிருக்கிறது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது. ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.”—யோவான் 15:12, 13.
“வழியும் சத்தியமும் ஜீவனும்”
6. இயேசு தம்முடைய நெருங்கிய சீஷர்களுக்கு முன்பாக என்ன இலக்கை வைத்தார்?
6 இயேசு உண்மையுள்ள 11 பேரிடம் சொல்கிறார்: “உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்போகிறேன்.” (யோவான் 14:1, 2) இந்த ஸ்தலம் “பரலோக ராஜ்ய”த்தில் இருக்கும். (மத்தேயு 7:21) நெருங்கிய இந்த உத்தமமுள்ள சீஷர்களின் தொகுதி எவ்விதமாக தங்கள் இலக்கை அடையமுடியும் என்பதைப் பற்றி இயேசு சொல்கிறார். அவர் சொல்கிறார்: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.” (யோவான் 14:6) இது பூமியின் மீது நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளும் மனித குலத்துக்கும்கூட பொருந்துகிறது.—வெளிப்படுத்துதல் 7:9, 10; 21:1-4.
7-9. இயேசு ஏன் தம்மை “வழியும் சத்தியமும் ஜீவனு”மாக விவரித்தார்?
7 இயேசுவே “வழி”யாக இருக்கிறார். ஜெபத்தில் கடவுளை அணுகுவதற்கு ஒரே வழி இயேசு கிறிஸ்துவின் மூலமாகவே ஆகும். சீஷர்கள் இயேசுவின் நாமத்தில் பிதாவை கேட்கிறதெதுவோ அதை அவர் அவர்களுக்குக் கொடுப்பார் என்று இயேசுதாமே சீஷர்களுக்கு உறுதியளிக்கிறார். (யோவான் 15:16) உருவங்களிடம் அல்லது மதசம்பந்தமான “புனிதர்களிடம்” ஏறெடுக்கப்படும் ஜெபங்கள் அல்லது மரியே வாழ்க என்றும், திரும்பத்திரும்ப சொல்வதை உட்படுத்தும் மிகுதியான ஜெபங்கள்—இவைகளில் எதுவுமே பிதாவினால் கேட்கப்படுவதுமில்லை, ஏற்றுக்கொள்ளப்படுவதுமில்லை. (மத்தேயு 6:5-8) மேலுமாக இயேசுவைக் குறித்து நாம் அப்போஸ்தலர் 4:12-ல் இவ்விதமாக வாசிக்கிறோம்: “நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.”
8 இயேசுவே “சத்தியமாக” இருக்கிறார். அப்போஸ்தலனாகிய யோவான் அவரைக் குறித்து சொன்னார்: “அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.” (யோவான் 1:14) இயேசு எபிரெய வேதாகமத்திலுள்ள நூற்றுக்கணக்கான தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றுவதன் மூலம் அவற்றின் சத்தியமாக ஆனார். (2 கொரிந்தியர் 1:20; வெளிப்படுத்துதல் 19:10) தம்முடைய சீஷர்களிடமும் தமக்கு செவிசாய்த்த ஜனக்கூட்டத்தாரிடமும் பேசுவதில், மாய்மாலமான மதகுருமாரோடு விவாதிப்பதில், தம்முடைய உயிருள்ள முன்மாதிரியில் அவர் சத்தியத்தை தெரியப்படுத்தினார்.
9 இயேசு “ஜீவனா”யிருக்கிறார். கடவுளுடைய குமாரனாக இயேசு சொன்னார்: “குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும்.” (யோவான் 3:36) இயேசுவின் பலியின் மீது அப்பியாசிக்கப்படும் விசுவாசம் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிறது—அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களின் “சிறு மந்தைக்கு” பரலோகத்தில் சாவாமையுள்ள வாழ்க்கையும், “வேறே ஆடு”களான திரள் கூட்டத்தாருக்கு பரதீஸிய பூமியின் மீது நித்திய ஜீவனும் ஆகும்.—லூக்கா 12:32; 23:43; யோவான் 10:16.
துன்புறுத்தலை சகித்திருத்தல்
10. நாம் ஏன் ‘உலகத்தை ஜெயிக்க’ வேண்டும்? இந்த விஷயத்தின் பேரில் இயேசு என்ன ஊக்குவிப்பைக் கொடுத்தார்?
10 யெகோவாவின் புதிய ஒழுங்கில் வாழ நம்பியிருப்பவர்கள் பிசாசாகிய சாத்தானான, ‘பொல்லாங்கனுக்குள் கிடக்கிற உலகத்தோடு’ போராட வேண்டும். (1 யோவான் 5:19) யோவான் 15:17-19-லுள்ள இயேசுவின் வார்த்தைகள் எத்தனை உற்சாகமூட்டுவதாய் இருக்கிறது! அவர் அறிவிக்கிறார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்றே இவைகளை உங்களுக்குக் கற்பிக்கிறேன். உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்கு முன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்து கொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.” மெய் கிறிஸ்தவர்கள் இந்த வருடமாகிய 1992 வரையாகவும் பகைக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். கடவுளுடைய வல்லமையான கரத்தின் கீழ் மனத்தாழ்மையோடு பெலத்தைக் கண்டடைந்து உறுதியாக தொடர்ந்து நிலைத்திருப்பவர்களின் சிறந்த முன்மாதிரியில் நாம் எவ்வளவு களிகூருகிறோம்! (1 பேதுரு 5:6-10) பின்வரும் இருதயத்துக்கு அனலூட்டும் வார்த்தைகளைக் கொண்டு தம்முடைய கலந்தாலோசிப்பை முடிக்கும் இயேசுவில் விசுவாசத்தை அப்பியாசிப்பதன் மூலம், நாம் அனைவருமே சோதனைகளை சகித்துக் கொள்ள முடியும்: “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்.”—யோவான் 16:33.
புதிய உடன்படிக்கையை அறிமுகப்படுத்துதல்
11. ஒரு புதிய உடன்படிக்கை குறித்து எரேமியா என்ன தீர்க்கதரிசனம் உரைத்தார்?
11 அந்த மாலை நேரத்தின் போது, பஸ்கா கொண்டாட்டம் முடிவுக்கு வந்த பிற்பாடு, இயேசு ஒரு புதிய உடன்படிக்கையைக் குறித்து பேசுகிறார். எரேமியா தீர்க்கதரிசி பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே இதை முன்னுரைத்து இவ்விதமாகச் சொன்னார்: “இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் [யெகோவா, NW] சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கை பண்ணுவேன். . . . நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் . . . நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.” (எரேமியா 31:31-34) பொ.ச. 33, நிசான் 14-ம் தேதி, இந்தப் புதிய உடன்படிக்கையை செல்லத்தக்கதாக்கும் பலி கொடுக்கப்படவிருந்தது!
12. இயேசு எவ்விதமாக புதிய உடன்படிக்கையை நிறுவினார்? அது எதை சாதிக்கிறது?
12 இயேசு, உண்மையுள்ள 11 பேரிடம் தாம் இந்தப் பஸ்காவை அவர்களோடு புசிக்க மிகவும் ஆசையாயிருந்ததாக சொல்கிறார். பின்னர் அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி, அதைப்பிட்டு அவர்களுக்குக் கொடுத்து இவ்வாறு சொல்கிறார்: “இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்.” அதேவிதமாகவே சிவப்பு திராட்சரசம் கொண்ட ஒரு பாத்திரத்தை அவர்களிடமாக கடத்தி இவ்விதமாகச் சொல்கிறார்: “இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது.” (லூக்கா 22:15, 19, 20) இஸ்ரவேலின் நியாயப்பிரமாண உடன்படிக்கையை செல்லத்தக்கதாக்குவதில் தெளிக்கப்பட்ட மிருக இரத்தத்தைக் காட்டிலும் மிக அதிக மதிப்புள்ளதாயிருக்கும் இயேசுவின் “விலையேறப்பெற்ற இரத்தத்தினால்” புதிய உடன்படிக்கை செயல்படும்படிச் செய்யப்படுகிறது! (1 பேதுரு 1:19; எபிரெயர் 9:13, 14) புதிய உடன்படிக்கைக்குள் எடுத்துக்கொள்ளப்படுகிறவர்கள் முழுமையான பாவ மன்னிப்பை அனுபவித்துக் களிக்கிறார்கள். ஆகவே, ஆவிக்குரிய இஸ்ரவேலாக நித்திய சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ளும் 1,44,000 பேரை சேர்ந்தவர்களாக இருக்க அவர்கள் தகுதிப்பெறக்கூடும்.—கலாத்தியர் 6:16; எபிரெயர் 9:15-18; 13:20; வெளிப்படுத்துதல் 14:1.
“என்னை நினைவுகூரும்படி”
13. (எ) ஞாபகார்த்த சமயத்தின் போது நாம் எதைக் குறித்து சிந்திக்க வேண்டும்? (பி) சின்னங்களில் யார் மாத்திரமே பங்குகொள்ள வேண்டும்? ஏன்?
13 இயேசுவின் 1960-வது ஞாபகார்த்த நாள் 1992, ஏப்ரல் 17-ம் தேதியாக இருக்கும். அந்தத் தேதி நெருங்குகையில், இயேசுவின் பரிபூரண பலி சாதிக்கும் அனைத்தையும் பற்றி சிந்திப்பது நமக்கு நன்மையாக இருக்கும். இந்த ஏற்பாடு யெகோவாவின் ஞானத்தையும் மனிதகுலத்தினிடமாக அவருடைய ஆழமான அன்பையும் உயர்த்துகிறது. வேதனையான மரணம் வரையாகவும்கூட இயேசுவின் பழுதற்ற உத்தமம், யெகோவாவின் மனித சிருஷ்டிப்பு குறையுள்ளது, சோதனையின் கீழ் அது தோல்வியுறும் என்ற சாத்தானின் நிந்தனைக்கு எதிராக யெகோவாவை சரியென நிரூபிக்கிறது. (யோபு 1:8-11; நீதிமொழிகள் 27:11) தம்முடைய பலிக்குரிய இரத்தத்தின் மூலமாக இயேசு புதிய உடன்படிக்கையை மத்தியஸ்தம் செய்கிறார். இது ‘தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததி, ராஜரீகமான ஆசாரியக் கூட்டம், பரிசுத்த ஜாதி, அவருக்குச் சொந்தமான ஜனத்தை’ தெரிந்து கொள்வதற்கு யெகோவாவின் கருவியாக இருக்கிறது. பூமியில் இருக்கையில் இவர்கள் ‘தங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்த’ தங்கள் கடவுளாகிய யெகோவாவின் “புண்ணியங்களை அறிவிக்”கிறார்கள். (1 பேதுரு 2:9; யாத்திராகமம் 19:5, 6 ஒப்பிடவும்.) சரியாகவே அவர்கள் மாத்திரமே ஒவ்வொரு ஆண்டும் ஞாபகார்த்த சின்னங்களில் பங்குகொள்கிறார்கள்.
14. இலட்சக்கணக்கான பார்வையாளர்கள் எவ்விதமாக செழிப்பாக்கப்படுகிறார்கள்?
14 கடந்த ஆண்டு ஞாபகார்த்த தினத்தன்று, பூமி முழுவதிலும் 1,06,50,158 பேர் ஆஜராயிருந்தனர், ஆனால் இவர்களில் 8,850 பேர் மாத்திரமே—1 சதவீதத்தில் பத்தில் ஒன்றுக்கும் குறைவான நபர்கள் மாத்திரமே—சின்னங்களில் பங்குகொண்டார்கள். அப்படியென்றால் பார்வையாளர்களாக இருக்கும் லட்சக்கணக்கானோருக்கு இந்தக் கொண்டாட்டத்தின் பயன் என்ன? பெரும் பயன்! பங்குபெறாவிட்டாலும்கூட, யெகோவா தம்முடைய குமாரனுடைய பலியின் மூலமாக சாதிக்கும் எல்லா மகத்தான காரியங்களையும் கேட்கின்ற சமயத்தில், மிகப்பெரிய உலகளாவிய சகோதரத்துவத்தின் இந்தக் கூட்டுறவினால் ஆவிக்குரிய விதமாக செழிப்பாக்கப்படுகிறார்கள்.
15. அபிஷேகம் பண்ணப்பட்டவர்களைத் தவிர, மற்றவர்கள் எவ்விதமாக இயேசுவின் பலியிலிருந்து நன்மையடைகிறார்கள்?
15 மேலுமாக, நமக்கு 1 யோவான் 2:1, 2-ல் இவ்விதமாக அப்போஸ்தலன் தெரிவிக்கிறான்: “நீதிபரராயிருக்கிற இயேசு கிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்.” ஆம், இயேசுவின் பலி, புதிய உடன்படிக்கையினுள் எடுத்துக்கொள்ளப்படும் யோவான் வகுப்பாருக்கு அது முதலாவது நன்மையளிப்பதாக இருக்கையில், “சர்வலோகத்தின் பாவங்களின்” மன்னிப்புக்கும்கூட வகைச் செய்கிறது. இது இயேசுவினுடைய சிந்தப்பட்ட இரத்தத்தில் விசுவாசத்தை அப்பியாசிக்கும் மனிதகுல உலகின் மற்ற எல்லாருடைய பாவங்களுக்கும் “கிருபாதார பலி”யாக இருக்கிறது. இது பரதீஸிய பூமியின் மீது நித்திய ஜீவனின் சந்தோஷமான எதிர்பார்ப்பை அவர்களுக்குத் திறந்து வைக்கிறது.—மத்தேயு 20:28.
“என் பிதாவின் ராஜ்யத்திலே”
16. (எ) இயேசுவும் அவருடைய உடன் சுதந்தரவாளிகளும் இப்பொழுது எதில் பங்குகொள்வது போல தெரிகிறது? (பி) அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோரிடமும் திரள் கூட்டத்தாரிடமும் கேட்கப்படுவது என்ன?
16 தம்முடைய அப்போஸ்தலர்களைத் தொடர்ந்து ஊக்குவிப்பவராய், இயேசு தம்முடைய பிதாவின் ராஜ்யத்திலே தம்முடைய சீஷர்களோடு அடையாள அர்த்தமுள்ள வகையில் திராட்சப்பழ ரசத்தை நவமானதாய் பானம் பண்ணப்போகிற நாளைச் சுட்டிக்காட்டுகிறார். (மத்தேயு 26:29) அவர் அவர்களுக்குச் சொல்கிறார்: “மேலும் எனக்கு நேரிட்ட சோதனைகளில் என்னோடேகூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே. ஆகையால், என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினது போல, நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன். நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் போஜனபானம் பண்ணி, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாய்ச் சிங்காசனங்களின் மேல் உட்காருவீர்கள்.” (லூக்கா 22:28-30) இயேசு 1914-ல் பரலோகங்களில் ராஜ்ய அதிகாரத்தை ஏற்றுக்கொண்டபடியால், பல நூற்றாண்டுகளினூடாக கூட்டிச் சேர்க்கப்பட்டு வந்த இயேசுவின் உடன் சுதந்தரவாளிகளில் அதிகமான எண்ணிக்கையினர் அவரோடு “சிங்காசனங்கள் மேல் உட்கார” ஏற்கெனவே உயிர்த்தெழுப்பப்பட்டுவிட்டிருக்கிறார்கள் என்ற முடிவுக்கு நாம் வரலாம். (1 தெசலோனிக்கேயர் 4:15, 16) தேவதூதர்கள் “மகா உபத்திரவ”த்தின் “நான்கு காற்றுகளை” அவிழ்த்துவிடுவதற்குரிய நாள் வேகமாக நெருங்கிக்கொண்டு வருகிறது! இதற்குள், ஆவிக்குரிய இஸ்ரவேலின் 1,44,000 பேர் முத்தரிக்கப்படுவதும் லட்சக்கணக்கான திரள் கூட்டத்தார் கூட்டிச் சேர்க்கப்படுவதும் முடிந்துவிட்டிருக்கும். நித்திய ஜீவனின் பரிசைப் பெற்றுக்கொள்ள இவர்கள் அனைவரும் இயேசு செய்தது போல உத்தமத்தைக் காத்துக்கொள்ள வேண்டும்.—வெளிப்படுத்துதல் 2:10; 7:1-4, 9.
17 மற்றும் பெட்டி. (எ) அபிஷேகம் பண்ணப்பட்ட ஒருவர் தள்ளப்படுவாரேயானால், நியாயமாகவே அவரிடத்தை யார் நிரப்பக்கூடும்? (பி) 1938-ல் காவற்கோபுரம் கட்டுரைகள், கட்டிட வேலையின் மீதும் பின்னால் பூமியில் தேவராஜ்ய அமைப்பின் விரிவாக்கத்தின் மேலும் என்ன அக்கறையூட்டும் விளக்கத்தை அளித்தது?
17 அபிஷேகம் பண்ணப்பட்டவர்களில் சிலர் உத்தமத்தைக் காத்துக்கொள்ளத் தவறினால் அப்போது என்ன? இந்தப் பிந்திய மணிநேரத்தில், இப்படிப்பட்ட உண்மையற்றவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவானதாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவர்கள் இடத்தை நிரப்புகிறவர்கள், புதிதாக முழுக்காட்டப்பட்டவர்களின் மத்தியிலிருந்து இல்லாமல், அநேக வருடங்களாக உண்மையுள்ள ஊழியத்தின் மூலமாக இயேசுவோடு அவருடைய சோதனைகளில் நிலைத்திருந்தவர்கள் மத்தியிலிருந்தே எடுக்கப்படுவார்கள் என்பது நியாயமாகவே இருக்கிறது. 1920-களிலும் 1930-களிலும் காவற்கோபுரம் வாயிலாக வந்த ஆவிக்குரிய வெளிச்சத்தின் பிரகாசிக்கும் ஒளி, அபிஷேகம்பண்ணப்பட்டவர்களில் மீதியானோர் கூட்டிச் சேர்க்கப்படுவது அந்தக் காலப்பகுதியில் பூர்த்தியாகிவிட்டது என்பதை சுட்டிக்காட்டுகிறது. அப்போது முதற்கொண்டு, ‘தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுக்கிறவர்கள்’ ஒரு வித்தியாசமான சந்தோஷமுள்ள நம்பிக்கையைக் கொண்டிருக்கிறார்கள். கிறிஸ்துவின் மூலம், யெகோவாவின் ஆவி அவர்களை பரதீஸிய பூமியில் “ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு” வழிநடத்திச் செல்கிறது.—வெளிப்படுத்துதல் 7:10, 14, 17.
மிகவும் ஊக்கமான ஒரு ஜெபம்
18. யோவான் 17-ம் அதிகாரத்திலுள்ள இயேசுவின் ஜெபத்திலிருந்து என்ன வலிமையான பாடங்களை நாம் கற்றுக்கொள்கிறோம்?
18 இயேசு, யோவான் 17:1-26-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள ஊக்கமான ஒரு ஜெபத்தை ஏறெடுப்பதன் மூலம் தம்முடைய சீஷர்களோடு ஞாபகார்த்த கூட்டத்தை முடிக்கிறார். முதலாவதாக முடிவுபரியந்தம் அவர் உத்தமத்தைக் காத்துக்கொள்கையில் தம்முடைய தகப்பன் தம்மை மகிமைப்படுத்தும்படியாக அவர் ஜெபிக்கிறார். இவ்விதமாக யெகோவாவும்கூட மகிமைப்படுத்தப்படுவார், அவருடைய பெயர் பரிசுத்தப்படுத்தப்படும்—எல்லா நிந்தனைகளும் துடைத்தழிக்கப்படும். ஆம், ஏனென்றால், பரிபூரண மனிதனாகிய இயேசு, மிகக் கடுமையான சோதனையின் கீழும்கூட கடவுளுடைய மனித சிருஷ்டிகள் குற்றமற்றவர்களாக இருக்கக்கூடும் என்பதை நிச்சயமாகவே நிரூபிக்கிறவராய் இருக்கிறார். (உபாகமம் 32:4, 5; எபிரெயர் 4:15) மேலுமாக, இயேசுவின் பலிக்குரிய மரணம் ஆதாமின் சந்ததியாருக்கு மகத்தான ஒரு வாய்ப்பை திறந்து வைக்கிறது. இயேசு சொல்கிறார்: “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.” யெகோவா தேவனைப் பற்றியும், யெகோவா நியாயநிரூபணம் செய்யப்படுவதற்கும், மனிதகுலத்தின் இரட்சிப்புக்காகவும் தம்முடைய ஜீவனைக் கொடுத்த, தேவனுடைய ஆட்டுக்குட்டியான அவருடைய குமாரனைப் பற்றியும் திருத்தமான அறிவை பெற்றுக்கொள்வது எத்தனை இன்றியமையாதது! (யோவான் 1:29; 1 பேதுரு 2:22-25) உங்களுடைய எல்லாவற்றையும், யெகோவாவுக்காகவும் அவருடைய விலைமதிப்புள்ள சேவைக்காகவும் ஒப்புக்கொடுக்கும் அளவுக்கு அந்த மிக அதிக அன்புள்ள பலியை நீங்கள் போற்றுகிறீர்களா?
19. மீதியானோரும் திரள் கூட்டத்தாரும் எவ்விதமாக விலைமதிப்புள்ள ஐக்கியத்தை அனுபவிக்கக்கூடும்?
19 மேலுமாக, சீஷர்கள் தாங்கள் இவ்வுலகத்தின் பாகமாக இல்லாதிருப்பதை நிரூபித்து, அவருடைய வார்த்தையை சத்தியமாக பற்றிக்கொண்டு, தகப்பனோடும் குமாரனோடும் விலைமதிப்புள்ள ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்கையில், தம்முடைய பரிசுத்த பிதா அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்று இயேசு ஜெபிக்கிறார். அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோரும் திரள்கூட்டத்தாரும் ஒன்றாகச் சேர்ந்து உலகத்தினிடமாகவும் அதன் வன்முறைகளிலும் அதன் அக்கிரமங்களிலும் நடுநிலைமையைக் காத்துக்கொண்டு, அன்பின் கட்டுகளில் ஐக்கியமாகச் சேவிக்கும் போது இன்று வரையாகவும் இந்த ஜெபம் அதிசயமாக பதிலளிக்கப்பட்டில்லையா? தம்முடைய தகப்பனாகிய யெகோவாவிடமாக இயேசுவின் முடிவான வார்த்தைகள் எத்தனை விலைமதிப்புள்ளதாக இருக்கின்றன! “நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும்படிக்கும், நானும் அவர்களிலிருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன்” என்று இயேசு சொன்னார்.—யோவான் 17:14, 16, 26.
20. பொ.ச. 33, நிசான் 14, ஏன் நிச்சயமாக நினைவுகூரப்பட வேண்டிய நாளாக இருக்கிறது?
20 வெளியே கெத்செமனே தோட்டத்துக்குச் சென்று, இயேசு கூடுதலாக தம்முடைய சீஷர்களோடு சுருக்கமான, கட்டியெழுப்பும் கூட்டுறவைக் கொண்டிருக்கிறார். பின்னர் அவருடைய விரோதிகள் அவரைப் பிடித்துக் கொள்கிறார்கள்! இயேசுவுக்கு ஏற்பட்ட சரீரப்பிரகாரமான வேதனைகளையும், யெகோவாவின் மீது குவிக்கப்பட்ட நிந்தனைகளைக் குறித்து அவருடைய கடுந்துயரத்தையும், அவை அனைத்தினூடாக அவருடைய முன்மாதிரியான உத்தமத்தையும் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. இரவு முழுவதும் அந்நாளின் பெரும் பகுதி பகல் பொழுதிலுமாக இயேசு முடிவு வரையாக சகித்திருக்கிறார். தம்முடைய ராஜ்யம் இவ்வுலகத்தின் பாகமாக இல்லாதிருப்பதை தெளிவாக காண்பிக்கிறார். கடைசி மூச்சோடு அவர், “முடிந்தது” என்று உரத்த சத்தமாய்ச் சொல்கிறார். (யோவான் 18:36, 37; 19:30) உலகத்தின் மீது அவருடைய ஜெயம் முழுமையடைகிறது. பொ.ச. 33, நிசான் 14 நிச்சயமாகவே, நினைவுகூரவேண்டிய நாள் ஆகும்! (w92 3/1)
[அடிக்குறிப்புகள்]
a ஐரோப்பாவின் வெற்றி நாள் மற்றும் ஜப்பான் மீது கிடைத்த வெற்றி நாள்.
நீங்கள் எவ்விதமாக பதிலளிப்பீர்கள்?
◻மனத்தாழ்மையையும் அன்பையும் குறித்து இயேசு என்ன கற்பித்தார்?
◻இயேசு எவ்விதமாக “வழியும் சத்தியமும் ஜீவனும்” ஆனார்?
◻புதிய உடன்படிக்கையின் நோக்கம் என்ன?
◻அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோரும் திரள் கூட்டத்தாரும் என்ன ஐக்கியத்தையும் அன்பையும் பகிர்ந்துகொள்கிறார்கள்?
[பக்கம் 20-ன் பெட்டி]
பெரிய சாலொமோனின் ஞானம்
ஜூன் 1 மற்றும் ஜூன் 15, 1938, காவற்கோபுரம் பிரதிகளில் “அமைப்பு” என்ற தலைப்பைக் கொண்ட கட்டுரைகள் இன்று வரையாக யெகோவாவின் சாட்சிகள் பின்பற்றும் அடிப்படை தேவராஜ்ய ஏற்பாட்டை நிலைநாட்டின. 1919-ல் ஆரம்பமான கோட்பாடு சம்பந்தமான மற்றும் அமைப்பு சம்பந்தமான மறுசீரமைப்புகள் உச்சக்கட்டத்தை அடைந்தன. (ஏசாயா 60:17) அந்த 20 ஆண்டு காலத்தை சாலொமோன் எருசலேமில் ஆலயத்தையும் ராஜாவின் வீட்டையும் கட்டின அந்த 20 ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், காவற்கோபுரம் இவ்வாறு சொன்னது: “சாலொமோனின் இருபது ஆண்டு கால கட்டிட திட்டத்திற்குப் பிறகு . . . , தேச அளவிலான ஒரு கட்டிடத் திட்டத்தில் அவர் ஈடுபட்டார் என வேதவசனங்கள் காட்டுகின்றன. (1 இராஜா. 9:10, 17-23; 2 நாளா. 8:1-10) பின்னர் சேபாவின் ராஜஸ்திரீ ‘பூமியின் எல்லைகளிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள்.’ (மத். 12:42; 1 இராஜா. 10:1-10; 2 நாளா. 9:1-9, 12) இது இந்தக் கேள்வியை எழுப்புகிறது: பூமியின் மீது யெகோவாவின் மக்களுக்கு உடனடியான எதிர்காலம் என்ன? முழு நம்பிக்கையோடு நாம் காத்திருப்போம், நாம் காண்போம்.” அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. தேவராஜ்ய அமைப்பின் கீழ், மிகப்பெரிய உலகளாவிய ஆவிக்குரிய கட்டிட திட்டம், திரள் கூட்டத்தினரில் நாற்பது லட்சத்துக்கும் மேலானவர்களைக் கூட்டிச் சேர்த்திருக்கிறது. சேபாவின் ராஜஸ்திரீயைப் போல இவர்கள் பெரிய சாலொமோனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய ஞானத்தை—“உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யின் மூலமாக—கேட்க பூமியின் எல்லைகளிலிருந்து வந்திருக்கிறார்கள்.—மத்தேயு 24:45-47.