இயேசுவின் அன்புக்கு நீங்கள் பிரதிபலிப்பீர்களா?
“கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது.”—2 கொரிந்தியர் 5:14.
1. இயேசுவின் அன்பு எவ்விதமாக விவரிக்கப்படலாம்?
உண்மையாகவே, இயேசுவின் அன்பு எத்தனை அற்புதமானதாக இருக்கிறது! நித்திய ஜீவனை நாம் பெற்றுக்கொள்ள ஒரே வழியாக இருக்கும் மீட்பை அளிக்கையில் அவர் எவ்விதமாக விவரிக்க முடியாத வேதனையை சகித்தார் என்பதை நாம் சிந்திக்கையில், நிச்சயமாகவே நம்முடைய இருதயங்கள் அவரிடமாக போற்றுதலினால் தூண்டப்படுகின்றன! யெகோவா தேவனும் இயேசுவும்தானே முயற்சியில் முந்திக்கொண்டனர். நாம் இன்னும் பாவிகளாக இருக்கையிலேயே அவர்கள் நம்மீது அன்புகூர்ந்தார்கள். (ரோமர் 5:6-8; 1 யோவான் 4:9-11) “கிறிஸ்துவின் அன்பு அறிவை விஞ்சிவிடுகிறது” என்பதாக அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார். (எபேசியர் 3:19, NW) ஆம், இயேசுவின் அன்பு, கல்வி அளவிலான தலை அறிவைக் காட்டிலும் மிக மேலாக உயர்ந்து நிற்கிறது. மனிதர்களால் காணப்பட்ட அல்லது அனுபவிக்கப்பட்ட வேறு எதற்கும் அப்பால் அது செல்கிறது.
2. இயேசுவை எது நம்மிடம் அன்பு கூறுவதிலிருந்து தடுத்து வைக்க முடியாது?
2 ரோமிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு எழுதுகையில் பவுல் கேட்டார்: “கிறிஸ்துவின் அன்பை விட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாச மோசமோ, பட்டயமோ?” இப்படிப்பட்ட எந்தக் காரியங்களும் நம்மிடம் அன்புகூறுவதிலிருந்து இயேசுவை தடுத்து வைக்க முடியாது. பவுல் தொடர்ந்து, “மரணமானாலும், ஜீவனானாலும், தேவ தூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பை விட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்,” என்று சொல்கிறார்.—ரோமர் 8:36-39.
3. எது மட்டுமே இயேசுவையும் அவருடைய தகப்பனையும் நம்மை விட்டுவிடச் செய்யும்?
3 உங்களிடமாக யெகோவா தேவன் மற்றும் இயேசுவின் அன்பு அத்தனை சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. உங்களை நேசிப்பதிலிருந்து அவர்களைத் தடுத்து நிறுத்தக்கூடிய ஒரே ஒரு காரியம் அவர்கள் கேட்கும் காரியத்தை செய்ய மறுப்பதன் மூலம், நீங்கள் அவர்களுடைய அன்பை மனமாரத் தள்ளிவிடுவது மட்டுமே ஆகும். கடவுளுடைய ஒரு தீர்க்கதரிசி ஒரு சமயம் ஒரு யூதேய ராஜாவிடம் பின்வருமாறு விளக்கினார்: “நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டு விடுவார்.” (2 நாளாகமம் 15:2) நம்மில் யார், யெகோவா தேவனையும் அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்துவையும் போன்ற இப்படிப்பட்ட அருமையான இரக்கமுள்ள நண்பர்களிடமிருந்து விலகிச் செல்ல விரும்புவார்?
இயேசுவின் அன்புக்குத் தகுதியான பிரதிபலிப்பு
4, 5. (எ) நம்மிடமாக இயேசுவின் அன்பு எவ்விதமாக உடன்மானிடரோடு நம்முடைய உறவை பாதிக்க வேண்டும்? (பி) இயேசு நம்மிடம் அன்பு செலுத்தியதன் காரணமாக, வேறு யாரை நேசிக்க நாம் உந்துவிக்கப்பட வேண்டும்?
4 உங்களிடமாக இயேசுவின் வரையறையற்ற அன்பினால் நீங்கள் தனிப்பட்ட விதமாக எவ்விதமாக பாதிக்கப்படுகிறீர்கள்? நீங்கள் எவ்விதமாக பாதிக்கப்பட வேண்டும்? ஆம், அவருடைய அன்பின் வெளிக்காட்டு, எவ்விதமாக உடன்மானிடரோடு நம்முடைய உறவை பாதிக்க வேண்டும் என்று இயேசு காண்பித்தார். அப்போஸ்தலர்களுடைய கால்களைக் கழுவுவதன் மூலம் மனத்தாழ்மையோடு அவர்களுக்குச் சேவை செய்த பின்பு இயேசு சொன்னார்: “நான் உங்களுக்குச் செய்தது போல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.” மேலுமாக அவர் சொன்னார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள், நான் உங்களில் அன்பாயிருந்தது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.” (யோவான் 13:15, 34) அவருடைய சீஷர்கள் கற்றுக்கொண்டார்கள், அவர் செய்தது போல, செய்ய முயற்சி செய்ய அவர்கள் தூண்டப்பட்டார்கள். அப்போஸ்தலனாகிய யோவான், “அவர் தம்முடைய ஜீவனை நமக்காக கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக் கொடுக்க கடனாளிகளாயிருக்கிறோம்” என்று எழுதினார்.—1 யோவான் 3:16.
5 இருந்தபோதிலும், உடன் மானிடரிடமாக அன்பு செலுத்தவும் அவர்களுடைய அக்கறையை சேவிக்கவும் மட்டுமே இயேசுவின் முன்மாதிரியால் தூண்டப்படுகிறோமென்றால், நாம் இயேசுவின் வாழ்க்கை மற்றும் ஊழியத்தின் நோக்கத்தை தவறவிட்டு விடுவோம். இயேசுவின் அன்பு, கைமாறாக, அவர் மீதும் அன்பு செலுத்தவும் விசேஷமாக தமக்குத் தெரிந்த அனைத்தையும் அவருக்குக் கற்பித்திருக்கும் அவருடைய தகப்பனிடம் அன்பு செலுத்தும்படியும் நம்மைச் செய்விக்க வேண்டுமல்லவா? நீங்கள் கிறிஸ்துவின் அன்புக்குப் பிரதிபலித்து அவர் செய்தது போல அவருடைய தகப்பனை சேவிப்பீர்களா?—எபேசியர் 5:1, 2; 1 பேதுரு 1:8, 9.
6. அப்போஸ்தலனாகிய பவுல், எவ்விதமாக தன்னிடமாக இயேசுவின் அன்பினால் பாதிக்கப்பட்டார்?
6 பவுலாக பின்னால் மாறின சவுலைப் பற்றிய விஷயத்தை சிந்தித்துப் பாருங்கள். ஒரு சமயம் அவர், “சீஷரைப் பயமுறுத்திக் கொலை செய்து” இயேசுவை துன்புறுத்தினார். (அப்போஸ்தலர் 9:1-5; மத்தேயு 25:37-40) பவுல் உண்மையில் இயேசுவை அறிய வந்த போது பாவமன்னிப்பைப் பெற்றுக்கொண்டதற்காக அவர் அவ்வளவு நன்றியுள்ளவராக இருந்த காரணத்தால், இயேசுவுக்காக அவர் துன்பப்பட மனமுள்ளவராக இருந்தது மட்டுமல்லாமல் அவருக்காக மரிக்கவும் ஆயத்தமாயிருந்தார். “கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்” [கழுமரத்திலறையப்பட்டேன், NW] என்று அவர் எழுதினார். “இனி நான் அல்ல, . . . நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.”—கலாத்தியர் 2:20.
7. இயேசுவின் அன்பு என்ன செய்யும்படியாக நம்மை ஏவ வேண்டும்?
7 இயேசு நம்மிடமாக வைத்திருக்கும் அன்பு நம்முடைய வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட ஏவுகின்ற ஒரு சக்தியாக இருக்க வேண்டும்! “இனித்தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி” “கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது” என்பதாக பவுல் கொரிந்தியருக்கு எழுதினார். (2 கொரிந்தியர் 5:14, 15) ஆம், நமக்காக தம்முடைய ஜீவனைக் கொடுத்தமைக்காக இயேசுவிடமாக நம்முடைய நன்றியுணர்வு, அவர் நம்மைக் கேட்கும் எதையும் செய்ய நம்மைத் தூண்ட வேண்டும். இவ்விதமாகச் செய்வதால் மாத்திரமே நாம் உண்மையில் அவரை நேசிப்பதை நிரூபிக்க முடியும். “நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்” என்று இயேசு சொன்னார். “என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான்.”—யோவான் 14:15, 21; 1 யோவான் 2:3-5 ஒப்பிடவும்.
8 இயேசுவின் கற்பனைகளைக் கற்றுக்கொண்டபோது, பூர்வ கொரிந்துவிலிருந்த வேசிமார்க்கத்தாரும், விபசாரக்காரரும், ஆண் புணர்ச்சிக்காரரும், திருடரும், வெறியரும், கொள்ளைக்காரரும் அந்தப் பழக்க வழக்கங்களை விட்டுவிடுவதன் மூலம் இயேசுவின் அன்புக்கு பிரதிபலித்தார்கள். பவுல் அவர்களுக்கு, “கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் . . . கழுவப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்,” என்று எழுதினார். (1 கொரிந்தியர் 6:9-11) அதேவிதமாக இயேசுவின் அன்பு அநேகரை இன்று அவர்களுடைய வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்யும்படி ஏவியிருக்கிறது. “கிறிஸ்தவத்தின் மெய்யான வெற்றி, அவளுடைய கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டவர்களை நல்ல மனிதர்களாக ஆக்கியிருப்பதில் காணப்பட்டது,” என்று சரித்திராசிரியர் ஜான் லார்டு எழுதினார். “அவர்களுடைய குற்றமற்ற வாழ்க்கைக்கு, அவர்களுடைய குறை காண முடியாத ஒழுக்கத்துக்கு, அவர்கள் நல்ல குடிமக்களாயிருப்பதற்கு, அவர்களுடைய கிறிஸ்தவ நற்குணங்களுக்கு நமக்கு அத்தாட்சி இருக்கிறது.” இயேசுவின் போதனைகள் என்னே ஒரு வித்தியாசத்தை உண்டுபண்ணியிருக்கிறது!
9. இயேசுவுக்கு செவிகொடுப்பதில் என்ன உட்பட்டிருக்கிறது?
9 இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் பற்றி படிப்பதைவிட வேறெந்த படிப்பும் இன்று அதிக முக்கியத்துவமுள்ளதாய் இருக்காது. “இயேசுவை உற்று நோக்குங்கள்” என்று அப்போஸ்தலனாகிய பவுல் ஊக்குவித்தார். “உண்மையிலேயே அவரை நெருக்கமாக சிந்தித்துப் பாருங்கள்.” (எபிரெயர் 12:2, 3) இயேசு மறுரூபமான சமயத்தில் கடவுள்தாமே தம் குமாரனைக் குறித்து கட்டளையிட்டதாவது: “இவருக்குச் செவி கொடுங்கள்.” (மத்தேயு 17:5) ஆனால் இயேசுவுக்குச் செவிகொடுப்பது என்பது வெறுமனே அவர் சொல்வதைக் கேட்பதைக் காட்டிலும் அதிகத்தை உட்படுத்துகிறது. அவருடைய அறிவுரைகளுக்கு செவிசாய்ப்பதை ஆம், அவர் செய்த விதமாகவே செய்வதன் மூலம் அவரைப் பின்பற்றுவதை அர்த்தப்படுத்துகிறது. அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றுவதன் மூலம் நம்முடைய மாதிரியாக அவரை ஏற்றுக்கொள்வதன் மூலம் நாம் இயேசுவின் அன்புக்குப் பிரதிபலிக்கிறோம்.
இயேசு நாம் என்ன செய்யவேண்டும் என்று விரும்புகிறார்
10. இயேசு யாரைப் பயிற்றுவித்தார்? என்ன நோக்கத்துக்காக?
10 கடவுளிடமிருந்து இயேசு பெற்றுக்கொண்ட வேலை தம்முடைய தகப்பனின் ராஜ்யத்தைக் குறித்து பிரசங்கிப்பதாகும், அதே வேலையைச் செய்யவே இயேசு தம்மைப் பின்பற்றினவர்களைப் பயிற்றுவித்தார். “அவ்விடங்களுக்குப் போவோம் வாருங்கள்” என்று அவர் தம்முடைய முதலாவதான சீஷர்களுக்குச் சொன்னார். “அடுத்த ஊர்களிலும் பிரசங்கம் பண்ணவேண்டும், இதற்காகவே புறப்பட்டுவந்தேன்.” (மாற்கு 1:38; லூக்கா 4:43) பின்னர், 12 அப்போஸ்தலர்களுக்கும் முழுமையான பயிற்றுவிப்பைக் கொடுத்த பிற்பாடு, இயேசு அவர்களுக்கு கட்டளையிட்டார்: “போகையில், பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள்.” (மத்தேயு 10:7) சில மாதங்களுக்குப் பிறகு மற்ற 70 பேரை பயிற்றுவித்தப் பின்னர், “தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்,” என்ற கட்டளையோடு அவர்களை அனுப்பினார். (லூக்கா 10:9) இயேசு தம்மைப் பின்பற்றுகிறவர்கள் பிரசங்கிகளாகவும் போதகர்களாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினார் என்பது தெளிவாக இருக்கிறது.
11. (எ) என்ன விதத்தில் இயேசுவின் சீஷர்கள் அவர் செய்ததைக் காட்டிலும் பெரிய கிரியைகளைச் செய்வர்? (பி) இயேசு கொல்லப்பட்ட பின்பு அவருடைய சீஷர்களுக்கு என்ன சம்பவித்தது?
11 இயேசு தம்முடைய சீஷர்களை இந்த வேலைக்காக தொடர்ந்து பயிற்றுவித்து வந்தார். தம்முடைய மரணத்துக்கு முந்தின கடைசி மாலையின் போது அவர் இந்த வார்த்தைகளால் அவர்களை உற்சாகப்படுத்தினார்: “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.” (யோவான் 14:12) அவரைப் பின்பற்றுகிறவர்களுடைய கிரியைகள் அவருடையதைக் காட்டிலும் பெரியவையாக இருக்கும், ஏனென்றால் அவர்களுடைய ஊழியத்தில் அவர்கள் அதைவிட மிகப் பரந்த பிராந்தியத்தில், அதைவிட நீண்ட காலமாக, அதைவிட அதிகமான ஆட்களைச் சென்றெட்டுவார்கள். என்றபோதிலும் இயேசு கொல்லப்பட்ட பின்பு, அவருடைய சீஷர்கள் பயத்தினால் செயலிழந்து போனார்கள். அவர்கள் ஒளிந்து கொண்டு, செய்வதற்கு அவர் அவர்களைப் பயிற்றுவித்திருந்த அந்த வேலையைச் செய்யவில்லை. சிலர் மீன்பிடிக்கும் தொழிலுக்கும்கூட திரும்பி விட்டனர். என்றபோதிலும் மறக்கமுடியாத ஒரு வகையில், அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதாக தாம் விரும்புகிறாரோ அந்தக் காரியத்தை இந்த ஏழு பேருக்கும் அவரைப் பின்பற்றுகிற அனைவருக்கும் மனதில் பதிய வைத்தார்.
12. (எ)கலிலேயா கடலில் இயேசு என்ன அற்புதத்தை நடப்பித்தார்? (பி) இயேசு பேதுருவிடம் “இவைகளிலும் அதிகமாய்” தம்மை நேசிக்கிறாயா என்பதாக கேட்ட போது அவர் எதை அர்த்தப்படுத்தினார்?
12 இயேசு மாம்ச உருவெடுத்து கலிலேயா கடலில் தோன்றினார். ஏழு அப்போஸ்தலர்களும் ஒரு படவில் மீன் பிடிக்கச் சென்றிருந்தும் இரவு முழுவதும் ஒன்றும் பிடிக்கவில்லை. இயேசு கரையிலிருந்து கொண்டு, “நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும்” என்று உரக்க சொன்னார். வலை கிழிந்து போகும் அளவுக்கு அற்புதமாக திரளான மீன்கள் அகப்பட்டபோது, படவிலிருந்தவர்கள் கரையிலிருப்பது இயேசு என்று உணர்ந்து கொண்டு அவர் காத்துக்கொண்டிருந்த இடத்துக்கு விரைந்தார்கள். அவர்களுக்கு காலை உணவை பரிமாறின பின்பு, இயேசு ஒருவேளை மீன்களால் நிறைந்த வலையைப் பார்த்து பேதுருவிடம், “இவைகளிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?” என்றார். (யோவான் 21:1-15) நீ செய்வதற்காக நான் உன்னை தயார் செய்திருந்த பிரசங்க வேலையைக் காட்டிலும் மீன்பிடிக்கும் தொழிலில் அதிக பற்றுதலுள்ளவனாக நீ இருக்கிறாயா என்பதையே இயேசு சந்தேகமின்றி அர்த்தப்படுத்தினார்.
13. இயேசு எவ்விதமாக தம்முடைய அன்புக்குத் தம்மை பின்பற்றுகிறவர்கள் பிரதிபலிக்க வேண்டும் என்பதை வலிமையோடு மனதில் பதிய வைத்தார்?
13 அதற்கு பேதுரு, “ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர்,” என்று பதிலளித்தார். அதற்கு இயேசு, “என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக,” என்றார். இரண்டாவது முறை இயேசு கேட்டார்: “யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?” மறுபடியுமாக பேதுரு சந்தேகமின்றி பலமான நம்பிக்கையோடு, “ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர்,” என்றார். மூன்றாவது முறையாக இயேசு, “யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா?” என்று கேட்டார். இதற்குள் பேதுரு உண்மையில் துயரமடைந்தார். ஒரு சில நாட்களுக்கு முன்புதானே, இயேசுவை தனக்குத் தெரியாது என்று அவர் மூன்று தரம் மறுதலித்திருந்தார். ஆகவே இயேசு அவருடைய உண்மைத்தன்மையை சந்தேகிக்கிறாரா என்று அவர் சரியாகவே யோசித்திருக்கக்கூடும். ஆகவே, மூன்றாவது முறையாக பேதுரு ஒருவேளை மன்றாடுகின்ற தொனியில், “ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர். நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் அறிவீர்,” என்பதாக பதிலளித்தார். இயேசு வெறுமனே, “என் ஆடுகளை மேய்ப்பாயாக,” என்று பதிலளித்தார். (யோவான் 21:15-17) பேதுருவும் அவனுடைய கூட்டாளிகளும் என்ன செய்ய வேண்டும் என்று இயேசு விரும்புகிறார் என்பதில் ஏதாவது சந்தேகம் இருக்க முடியுமா? அவர்களும்—இன்று அவருடைய சீஷர்களாக இருப்பவர்களும்—அவரை நேசித்தால், சீஷராக்கும் வேலையில் கட்டாயமாகவே பங்கு கொள்ள வேண்டும் என்பதை எத்தனை வலிமையோடு அவர் மனதில் பதிய வைத்தார்!
14. மற்ற சந்தர்ப்பங்களில், இயேசு தம்முடைய சீஷர்கள் தம்முடைய அன்புக்கு எவ்விதமாக பிரதிபலிக்க வேண்டும் என்று காண்பித்தார்?
14 அந்தக் கடற்கரையோ சம்பாஷணைக்கு ஒரு சில நாட்களுக்குப் பின், இயேசு கலிலேயாவில் ஒரு மலையில் தோன்றி சுமார் 500 சீஷர்களடங்கிய மகிழ்ச்சியான ஒரு மாநாட்டில் அறிவுரைகளை கூறினார்: “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி . . . நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்.” (மத்தேயு 28:19, 20; 1 கொரிந்தியர் 15:6) அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள்! ஆண்கள், பெண்கள் மற்றும் பிள்ளைகள் ஆகிய அனைவருமே ஒரே வேலையை பெற்றுக்கொண்டார்கள். இன்னும் பின்னால், பரத்துக்கு ஏறிப் போவதற்கு சற்று முன்னால், இயேசு தம்முடைய சீஷர்களிடம், “பூமியின் கடைசிபரியந்தமும் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்,” என்றார். (அப்போஸ்தலர் 1:8) இந்த எல்லா புத்திமதிக்கும் பிற்பாடு பல வருடங்கள் கழித்து பேதுரு பின்வருமாறு சொன்னது ஆச்சரியமாயில்லை: “ஜனங்களுக்கு பிரசங்கிக்க . . . அவர் [இயேசு] எங்களுக்குக் கட்டளையிட்டார்.”—அப்போஸ்தலர் 10:42.
15. எதைக் குறித்து எந்த சந்தேகமும் இருக்க முடியாது?
15 இயேசுவின் அன்புக்கு நாம் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும் என்பதைப் பற்றியதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. அவர் தம்முடைய அப்போஸ்தலர்களிடம் சொன்ன வண்ணமாகவே: “என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள் . . . நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்.” (யோவான் 15:10-14) கேள்வி என்னவென்றால், சீஷராக்கும் வேலையில் பங்கு கொள்ளும்படியான அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிவதன் மூலம் இயேசுவின் அன்புக்கு நீங்கள் போற்றுதலை காண்பிப்பீர்களா? உண்மைதான், பல்வேறு காரணங்களுக்காக இது ஒருவேளை உங்களுக்கு சுலபமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இயேசுவுக்கும்கூட அது எளிதாக இருக்கவில்லை. அவருக்கு ஏற்பட்ட மாற்றங்களைச் சிந்தித்துப் பாருங்கள்.
இயேசுவின் முன்மாதிரியை பின்பற்றுங்கள்
16. இயேசு என்ன மகத்தான முன்மாதிரியை அளித்தார்?
16 கடவுளுடைய ஒரே பேறான குமாரன், எல்லா தூதர்களுக்கும் மேலாக பரலோக மகிமையில் ஒப்புயர்வற்ற ஒரு ஸ்தானத்தை அனுபவித்துக் களித்தார். அவர் நிச்சயமாகவே ஐசுவரியவானாக இருந்தார். அவர் மனமுவந்து தம்மைத் தாம் வெறுமையாக்கி, ஏழைக் குடும்பத்தில் ஓர் அங்கத்தினராக பிறந்து நோய்பட்டு மரித்துக்கொண்டிருக்கும் மனிதர் மத்தியில் வளர்ந்து வந்தார். பவுல் அப்போஸ்தலன் விளக்கிய வண்ணமாகவே இதை அவர் நமக்காகச் செய்தார்: “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே.” (2 கொரிந்தியர் 8:9; பிலிப்பியர் 2:5-8) என்னே ஒரு முன்மாதிரி! அன்பின் என்னே ஒரு வெளிக்காட்டு! வேறு எவருமே மற்றவர்களுக்காக இதைவிட அதிகத்தை விட்டுக் கொடுத்ததோ அல்லது துன்பம் சகித்ததோ இல்லை. வேறு எவருமே மற்றவர்கள் அதிகமான ஐசுவரியத்தை, ஆம் பரிபூரணத்தில் நித்திய ஜீவனை அனுபவித்துக் களிப்பதை சாத்தியமாக்கியது இல்லை!
17. நமக்கு முன்னால் என்ன போக்கு வைக்கப்பட்டிருக்கிறது? அதை பின்தொடருவதன் விளைவு என்னவாக இருக்கும்?
17 நாம் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி மற்றவர்களுக்கு அதேவிதமாக பிரயோஜனமுள்ளவர்களாயிருக்க முடியும். திரும்ப திரும்ப, இயேசு தம்மைப் பின்பற்றுகிறவர்களாகும்படி ஜனங்களை ஊக்கப்படுத்தினார். (மாற்கு 2:14; லூக்கா 9:59; 18:22) உண்மையில் பேதுரு எழுதினார்: “இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில் கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப் போனார்.” (1 பேதுரு 2:21) அவர் செய்தது போலவே அவருடைய தகப்பனை சேவிப்பதற்காக பாடுபடும் அளவுக்கு கிறிஸ்துவின் அன்புக்கு நீங்கள் பிரதிபலிப்பீர்களா? இப்படிப்பட்ட ஒரு போக்கு மற்றவர்களுக்கு எவ்வளவு பிரயோஜனமாக இருக்க முடியும்! ஆம், இயேசுவின் முன்மாதிரியை பின்பற்றுவதன் மூலம், அவர் தம்முடைய தகப்பனிடமிருந்து பெற்றுக்கொண்ட போதனைகளை முழுமையாக கடைபிடிப்பதன் மூலம், “உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக் கொள்ளுவாய்.”—1 தீமோத்தேயு 4:16.
18. (எ)ஜனங்களிடமாக தம்முடைய மனநிலையின் சம்பந்தமாக இயேசு என்ன முன்மாதிரியை வைத்தார்? (பி) இயேசுவின் ஆள்தன்மைக்கு மக்கள் எவ்வாறு பிரதிபலித்தனர்?
18 மக்களுக்கு முழு அளவு உதவி செய்ய, அவர்களைக் குறித்து இயேசு உணர்ந்தவிதமாகவே உணரவேண்டும். அவரைக் குறித்து ஒரு தீர்க்கதரிசினம் இவ்வாறு சொன்னது: “பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்குவார்.” (சங்கீதம் 72:13) இயேசு அவர் சம்பாஷித்தவர்களிடமாக “அன்புகூர்ந்த”தையும் அவர் உண்மையாகவே அவர்களுக்கு உதவி செய்ய விரும்பியதையும் அவரைப் பின்பற்றியவர்களால் கவனிக்க முடிந்தது. (மாற்கு 1:40-42; 10:21) “அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள் மேல் மனதுருகி”னார் என்று பைபிள் சொல்கிறது. (மத்தேயு 9:36) படுமோசமான பாவிகளும்கூட அவருடைய அன்பை உணர்ந்து கொண்டு அவரிடமாக கவர்ந்திழுக்கப்பட்டார்கள். அவருடைய குரலின் தொனி, நடத்தை, போதிக்கும் முறை ஆகியவற்றால் அவர்கள் செளகரியமாக உணர்ந்தார்கள். இதன் விளைவாக இழிவாக கருதப்பட்ட வரி வசூலிப்பவர்களும் வேசிகளும்கூட அவரைத் தேடிக்கொண்டு வந்தார்கள்.—மத்தேயு 9:9-13; லூக்கா 7:36-38; 19:1-10.
19. பவுல் எவ்விதமாக இயேசுவை பின்பற்றினார்? அதையே நாம் செய்யும் போது விளைவு என்னவாக இருக்கும்?
19 இயேசுவின் முதல் நூற்றாண்டு சீஷர்கள் அவருடைய அன்புள்ள முன்மாதிரியை பின்பற்றினார்கள். பவுல் தான் ஊழியஞ் செய்த சிலருக்கு இவ்விதமாக எழுதினார்: “உங்களிடத்தில் பட்சமாய் நடந்து கொண்டோம்; பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறது போல . . . தகப்பன் தன் பிள்ளைகளுக்குச் சொல்லுகிறது போல, நாங்கள் உங்களில் ஒவ்வொருவனுக்கும் புத்தியும் தேறுதலும் எச்சரிப்பும் சொன்னதை அறிந்திருக்கிறீர்கள்.” (1 தெசலோனிக்கேயர் 2:7-11) அன்புள்ள பெற்றோர் தங்கள் அருமையான பிள்ளைகளிடம் உணருவது போல, உங்கள் பிராந்தியத்திலுள்ளவர்களுக்கு அதேவிதமான உண்மையான அக்கறையை நீங்கள் உணருகிறீர்களா? இப்படிப்பட்ட அக்கறையை உங்கள் குரலின் தொனியில், உங்கள் முக பாவனையில், உங்கள் செயல்களில் வெளிக்காட்டுவது ராஜ்ய செய்தியை செம்மறியாடுகளைப் போன்றவர்களுக்கு கவர்ச்சியுள்ளதாக்கும்.
20, 21. இயேசுவின் அன்பின் முன்மாதிரியை பின்பற்றிய ஆட்களுடைய ஒரு சில நவீன-நாளைய எடுத்துக்காட்டுகள் யாவை?
20 ஒரு நாள் ஸ்பேனில், இரண்டு சாட்சிகள் முடவன் கோல் தாங்கிய ஒரு வயதான பெண்மணியை சந்தித்தனர். விறகு தீர்ந்து போய்விட்டதால் இவளுடைய வீடு கடுங்குளிராகிக் கொண்டிருந்தது. விறகு வெட்டுவதற்கு வேலை முடிந்து தன் மகன் வருவான் என்று அவள் காத்துக் கொண்டிருந்தாள். சாட்சிகள் விறகை வெட்டி கொடுத்து அவள் வாசிப்பதற்கு சில பத்திரிகைகளையும் விட்டுச் சென்றனர். மகன் திரும்பி வந்த போது தன் அம்மாவுக்கு சாட்சிகள் காண்பித்த அன்பான அக்கறையினால் வெகுவாக கவரப்பட்டதன் காரணமாக அவன் பிரசுரங்களை வாசித்தான், பைபிளைப் படிக்க ஆரம்பித்தான், முழுக்காட்டப்பட்டான், விரைவில் பயனியர் ஊழியத்தில் பிரவேசித்தான்.
21 ஆஸ்திரேலியாவில் ஒரு மனிதனும் அவன் மனைவியும், தங்களை சந்திக்க வந்திருந்த சாட்சிகளிடம் தங்கள் குடும்பத்துக்கு உணவளிக்க தங்களிடம் பணம் இல்லை என்று சொன்னார்கள். சாட்சி தம்பதி புறப்பட்டுச் சென்று பிள்ளைகளுக்கு இனிப்புகள் உட்பட மளிகைச் சாமான்கள் கொஞ்சம் வாங்கி வந்தார்கள். பெற்றோர், மனம் நெகிழ்ந்து போய் கண்ணீர் மல்க, தாங்கள் தற்கொலை செய்து கொள்ள எண்ணியிருந்ததாக தெரிவித்தார்கள். இருவரும் பைபிளைப் பிடிக்க ஆரம்பித்தார்கள், மனைவி அண்மையில் முழுக்காட்டப்பட்டாள். ஐக்கிய மாகாணங்களில் யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக தப்பெண்ணம் கொண்டிருந்த ஒரு பெண், ஒரு சாட்சியை சந்தித்தப் பின்பு இவ்விதமாக தெரிவித்தாள்: “நாங்கள் எதைக் குறித்து பேசினோம் என்பது உண்மையில் எனக்கு ஞாபகமில்லை, ஆனால் எனக்கு ஞாபகமிருப்பது, அவள் என்னிடம் எவ்வளவு தயவாக இருந்தாள், எத்தனை உபசரணையுள்ளவளாக, மனத்தாழ்மையுள்ளவளாக இருந்தாள் என்பதே. ஒரு நபராக நான் உண்மையில் அவளிடமாக கவர்ந்திழுக்கப்பட்டதை உணர்ந்தேன். அவளுடைய நட்பு இன்றுவரை என் மனதை விட்டு நீங்காதிருக்கிறது.”
22. இயேசுவின் வாழ்க்கையை ஆராய்ந்த பின்பு, அவரைப் பற்றிய நம்முடைய முடிவு என்ன?
22 இயேசு செய்த வேலையை, அவர் செய்த விதமாக செய்வதன் மூலம் நாம் இயேசுவின் அன்புக்கு பிரதிபலிக்கும் போது, நாம் என்னே மகத்தான ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழலாம்! அவருடைய பெரும்புகழ் வெளிப்படையாகவும் உணர்ச்சியில் ஆழ்த்திவிடக்கூடியதாயும் இருக்கிறது. ரோம தேசாதிபதியாகிய பொந்தியு பிலாத்துவின் வார்த்தைகளை எதிரொலிக்க நாம் உந்தப்படுகிறோம்: “இதோ, இந்த மனுஷன்!” ஆம், உண்மையிலேயே அவர் “இந்த மனுஷன்,” எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர்.—யோவான் 19:5. (w92 2/15)
நீங்கள் எவ்விதமாக பதிலளிப்பீர்கள்?
◻இயேசுவின் அன்பு எவ்வளவு பெரியது?
◻இயேசுவின் அன்பு, நம்மை யாரில் அன்புகூரும்படி செய்விக்க வேண்டும்? அவருடைய அன்பு என்ன செய்யும்படியாக நம்மை ஏவ வேண்டும்?
◻என்ன வேலையை நாம் செய்ய வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்?
◻இயேசு எவ்விதமாக ஐசுவரியவானாக இருந்தார்? அவர் எவ்விதமாக தரித்திரரானார்?
◻இயேசு ஜனங்களுக்கு ஊழியஞ்செய்த விதத்தில் நாம் எவ்விதமாக அவரை பின்பற்ற வேண்டும்?
8. இயேசுவின் அன்பு தவறிழைக்கும் அநேகருடைய வாழ்க்கையை எவ்விதமாக பாதித்திருக்கிறது?
[பக்கம் 15-ன் படம்]
அன்பு காண்பிப்பதில் இயேசு மாதிரியை வைக்கிறார்
[பக்கம் 17-ன் படம்]
இயேசு தம்முடைய சீஷர்கள் தம்மிடமுள்ள அன்பை எவ்வாறு வெளிக்காட்ட வேண்டும் என்பதை வலிமையோடு விளக்கினார்